Saturday 30 May 2020




தொகுப்பு:நினைவுகளில் தொங்கும் நீர்
கதையாளர்: ஓட்டமாவடி அறபாத்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்(இந்தியா)
ஊஞ்சல்.
ஓட்டமாவடி அறபாத் கிழக்கிலங்கையின் முக்கியமான இலக்கியவாதிகளில் ஒருவர். ஆரம்பத்தில் 'எரிநெரிப்பிலிருந்து' என்ற கவிதைத் தொகுதியின் மூலம் கவிஞராக உருவெடுத்து, பின்னர் கவிதைக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர கதைசொல்லியாக மாறியவர். மாகாண தேசிய ரீதியில் பலதரப்பட்ட விருதுகளால் கௌரவிக்கப்பட்டவர்.
அவரின் 'நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்' எனும் நினைவுகளின் திரட்டை வாசிக்க கிடைத்தது. தனது குஞ்சும பருவத்திலிருந்து பிரவாகித்த அனுபவங்கள் வாயிலான நினைவுகளின் ஒட்டுமொத்த நினைவுத்திரட்சையை காகிதங்களில் படியவைத்துள்ளார். இவ்நினைவு குறிப்பேட்டில் சாலப் பொருத்தமான முதும் கதையாளர் எஸ் எல்எம் ஹனிபா அவர்கள் பின்னட்டை குறிப்பை கொடுத்திருப்பது இப்புத்தகத்திற்கு மேலும் ஒரு சிறப்பைக் கொடுக்கின்றது.
இலங்கை தமிழ் வாசகர்களுக்கு தாரளமான படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன, அவற்றில் சில படைப்புகள் வாசகங்களை ஏமாற வைக்கின்றன. எழுதியவைகள் எல்லாவற்றையும் அச்சகத்திற்கு ஏற்றும் ஒரு சர்வசாதாரண நிலை காணப்படுகின்றது. எழுத்தாளர்களின் அபரிமிதமான கற்பனை வளர்ச்சியாக நடைமுறை சாத்தியமற்ற கருத்துக்களை கதைக்களமாகவும், வரலாற்றை திரிவுபடுத்தும் புனைவுகளையும், சமத்துவம் என்றும் வளர்ச்சி என்ற பெயரிலும் காமத்தையும் சராமாறியாக நுழைத்து விடுகிறார்கள்.
வாழ்க்கையை சித்தரிக்கும், வாழ்க்கையை அதன் அசலோடு ஒப்புவிக்கும் எழுத்துக்கள் விரல் விட்டு எண்ணுபவையாகவே இருக்கின்றது.
அந்த விரல் விட்டு எண்ணுவதில் தான் நான் இத்தொகுப்பை காண்கின்றேன்.
மனிதனின் வாழ்க்கை எத்தனை நிலைகளை கடந்து வருகின்றது, காடு எவ்வளவோ ரகசியங்களை தன்னுள் பதுக்கி வைத்திருப்பது போல், வாழ்வு முழுவதும் அவலங்களையும் அபத்தங்களையும் துரோகம் ஏமாற்றம் துயரம் மகிழ்ச்சியையும் கொண்டிருக்கின்றது.
நினைவாளனின் வாழ்வின் துளிர்த்து வளர்ந்து காய்ந்து போன நினைவுச் சருகுகளுக்கு மறுபடியும் நீரூற்றும் போது, அதன் ஈரத்திலேயே நான் மீண்டும் மீண்டும் துளிர்த்து நின்றேன்.
சமூக அரசியல் சார்ந்த பத்தி முறை எழுத்துக்களாக ஒவ்வொரு சம்பவங்களையும் சுருக்கமாகவும், வாசகர்கள் எளிமையாக புரிந்து கொள்ளக் கூடியதாகவும், நினைவாளன் சம்பவங்களின்போது உணர்ந்து கொண்ட அதே உணர்வுகளை வாசகர்கள் மனதில் பிரதிபலிக்கக் செய்வதாகவும் இருக்கின்றது. தனக்குரிய வட்டார பேச்சு நடையில் அவர் பேசியிருப்பது அவருக்கு உரிய தனித் தன்மையைக் காட்டுகிறது.
காலத்தால் மருகிப்போன சொற்களை பலவற்றை சமூகத்திற்குள் மீள் செய்து இருக்கின்றார்.
"வாப்புப்பா, வராந்தா, அடுப்படி, உலை, குப்பிலாம்பு, சிம்மினி, அச்சிலம்,துலா, கையிப்பு, லாந்தர், லாம்பெண்ண ...."
நினைவாளன் தன் வாழ்வியல் அனுபவங்களை அடுக்கும் போது பல சிசுக்களை பிரசவித்து இருக்கின்றார், இறந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திலிருந்து கடந்த காலத்திற்கு மாறிமாறி பயணிக்கிறார். தான் சார்ந்த, தன்னைச் சூழ இருந்த இயற்கை, சுற்றுச் சூழல், சமூக கலாச்சார பின்னணி, மற்றும் அரசியல், மதம் சார்ந்த விடயங்களை அச்சுப்பிசகாமல், எந்த பிடிகளும் இல்லாமல் சமூகத்தின் மத்தியில் ஒப்புவித்து இருக்கின்றார்.
கிழக்கிலங்கையின் குறிப்பாக ஓட்டமாவடி பிரதேசத்தில் சமூக வாழ்வியல் அரசியல் ஆகியவற்றின் மூன்று தசாப்தகால ஆவணப் பதிவாக இத்தொகுப்பு இருக்கின்றது.
ஒவ்வொரு சம்பவங்களும் காட்சி விவரிப்புகளும் வெவ்வேறு விதமான உணர்வுகளில் ஏற்ற, இறக்கங்களை உண்டு பண்ணுகின்றது.
இங்கு சந்ததியினர் காணாத புயலையும் போரையும் நம் கண்முன்னே நிறுத்துகிறார்.
அந்த காட்டையும் சுற்றுச்சூழலையும்,
"பரந்து கிடக்கும் வயல் வெளி. வயலையும் குளத்தையும் பிரிக்குமாற் போல் இராட்சத பாம்பாய் படர்ந்து நீளும் குளக்கட்டு, வயலை தாண்டி விழுந்தால் மாந்துறை ஆறு."
"இரவில் பூமியில் அதன் மலர்கள் உதிர்ந்து கிடக்கும், ஆற்றுநீர் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும்."
சம்பவங்களில் அடிக்கடி தொட்டுப் போகின்றார்.
அவரைச் சுற்றியிருந்த காடுகளுக்கிடையிலான பிணைப்பினூடாக, அதை ஒரு ஆசானாகவும் ஏற்றுக்கொள்கிறார்.
"காடுகள் வாழ்க்கையின் குறிக்கோள்களை கற்றுத்தந்தது. காடுகளின் அரவணைப்பில் பல இரவுகள், பகல்கள் தூங்கியிருப்போம்."
அத்துடன் நினைவாளன், நினைவு குறிப்பேட்டில் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னுள்ள வாழ்வியலை அதன் பாணியிலேயே பதிவிடுகிறார்.
"கிடுகு வெயப்பட்ட முகடு, முற்றத்தில் பெரிய மாமரம், சற்று தொலைவில் கிணறு, கிணற்றில் சூழவும் கமுகு மரங்கள், தண்ணீரள்ளத்துலா, கிடுகுவேலி நாலாபக்கமும் நுழைவாயில், வட்டரும் ரொட்டியும் நிறைந்த புளியமரத்தடி தேனீர் கடை"
இந்தச் சந்ததி விரட்டி விட்ட கத்னா ஊர்வலம், விருத்த சேதன அழைப்பு, ஒய்த்தா மாமா, விராத்துக் கத்தம்.
கண்கள் கண்டிராத விசித்திரமாக தும்பு மிட்டாய், கலர் விசிறி, அன்னமினா பழம், இலுப்பைப்பூ கொளுக்கட்டை, உழுவை மீன் திராய்ச் சுண்டல், பொன்னாங்கண்ணி கீரை சுண்டல், கோல்டன் மீன் பாலாணம், முருங்கையுடன் சுங்கான் கருவாட்டுக் கறி...
இவைகளை கண்களால் பார்த்து உதடுகள் வாசிக்கும் போது மனம் ருசிக்கின்றது.
நினைவாளன் தனது நினைவுகளின் ஊடாக வாழ்வின் ஒவ்வொரு நிலையாக கடந்து வருகின்றனர். ஒரு நிலையை கடந்ததும் நினைவுகள் முழுவதும் துரோகம், ஏமாற்றம், துயரம், பிரிவுகள், கொலைகள் என்று ஒரு விதமான மானுடத்தின் மீதான விரக்தியை உண்டு பண்ணுகிறது, இடையில் வரும் அந்த வயோதிபத் தாயின் குரல்
"ஒங்கலுக்கு தேத்தண்ணி தாரத்துக்கு ஒரு சுரங்கச்சீனியும் இல்லையே தங்கம்கள்"
பாதர் ரோபோட் கிங்ஸ்லி போன்றோர்களும் மீண்டும் மானிடத்தின் மீதும் உறவுகள் மீதும் நம்பிக்கையை வளர்க்கிறார்கள்.
முஸ்லிம் சமூகம் எவ்வாறு புலிகள்-இந்திய படைகள்-இலங்கை இராணுவம் இப்படி மும்முனையால் எப்படி நெருக்கப்பட்டது என்பதை கண்ணுற்று, அனுபவித்த கீற்றுகளின் கதறலாக முன்வைக்கிறார்.
அதிலும் மிகவும் விரக்தி அடைந்த நிலையில் ஒரு துரோகத்தை எதிர் கொண்டவராக 'ஓட்டமாவடி வீட்டுக் கதவுகளை புலிக்கொடி போர்த்திய சந்துக்குகள் தட்டி நின்றபோதும், அவர்களது எதிர்களின் மீது கொண்ட பயத்தை போக்க முஸ்லிம் சமூகத்தின் மீது மிலைச்சத்தனத்தை காட்டியதுடன், இயக்கத்திலிருந்த புஹாரி போன்றவர்கள் இயக்கத்திற்காக ஓடோடி ஆட்கள் சேர்ந்தவர்களையும் சுட்டு புதைத்து மாமிச பசியைத் தீர்த்துக் கொண்டார்கள் என்றும்,
பிரபாகரனுக்கு எதிராக தனது குற்றச்சாட்டையும், கண்டனத்தையும் அவரின் படைப்புக்கள் மூலம் அப்பொழுதுகளிலேயே நேரடியாக முன்வைக்கின்றார்.
இந்த முப்பது வருட கால போராட்டம் எதைத்தான் சாதித்தது, ஒரு முதலமைச்சரையும், ஒரு அரை அமைச்சரையும் தவிர என்று யதார்த்தை சொல்லி இருக்கின்றார்.
அவரின் வாழ்க்கையின் படிநிலை ஊடாக கிழக்கிலங்கையிலிருந்து தலைநகரை நோக்கி நகர்கிறது, அப்போதிருந்த பிரயாணத்தின் இடர்பாடுகளையும், அதனோடு சேர்ந்த பத்திரிகை அனுபவங்களையும் விபரிக்கின்றார்.
நினைவேட்டின் ஆரம்பம் இயற்கையையும் வாழ்வியலையும் முன்னிறுத்தி, நமக்கு ஒரு அழகிய கற்பனை கிராமிய வாழ்க்கையை உண்டு பண்ணுகிறது, அதன் அடுத்த பகுதி இரத்தமும் சதையுமாக திளைக்க வைக்கிறது, இறுதி சில அத்தியாயங்கள் சோர்வடைந்து போவதைப் போல இருக்கிறது,
இதற்குக் காரணம் வாசித்த எனது மனநிலையை தான் குற்றம் சாட்டுவேன். எப்போதும் நமது மனம் கற்பனையையும், இரத்த வாடையை நிறைந்த சம்பவங்களை உச்சாக்கொட்டி கேட்க வைப்பதால், இறுதி சம்பவங்கள் மனதில் ஒரு சோர்வு சூழ்நிலையை தோற்றுவிக்கின்றது.
ஓட்டமாவடி அரபாத் நினைவு ஊற்று இத்துடன் முடியவில்லை என்றுதான் நினைக்கின்றேன், அவர் வாழ்வியலின் அனுபவங்களில் சில துளிகளைத்தான் பதிந்திருக்கிறார். ஒருவரின் வாழ்க்கையை சில பக்கங்களில் அடக்கிவிட முடியாது.
'நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்' ஒரு முகக் கண்ணாடி, அவரின் நினைவுகளின் ஊடாக நமது வாழ்க்கையின் கடந்தகாலத்தில் பயணிக்கச் செய்கிறது.

Thanks hanees Mohamed

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...