Wednesday, 4 April 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

தொடர்- 11
தமிழ் முஸ்லிம் உறவுகள் மனத்தூய்மையுடன் பூத்துக்குலுங்கிய காலமது.கருகருவென்ற கும்மிருட்டிலும்,அடர்ந்த வனாந்தரங்களிலும் விட்டேத்தியாக சுற்றித்திரியவும், அவர்களுடன் கூடவே நடைபோடவும் மனம் பயங்கொள்ளாத காலம்.எனது பதின்மூன்றாவது வயதில் அப்படியொரு பொற்காலம் வாய்த்தது.

ஒரு மாலைப்பொழுதில் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த என்னிடம் சாச்சா வந்து 'தம்பி காலையிலை திருவிழாவுக்குப் போவம் ரெடியாயிரு" என்றார்.

எனக்கு தலைகால் புரியாத குதிப்பு.மறுநாள் காலை வரை நெஞ்சு பொறுக்கவில்லை.எப்போது தூங்கினேன் என்பது நினைவிலில்லை. அதிகாலை சேவல் கூவுவதற்கு முன்.. பொலபொலவென்று விடிவதற்கு முன்... எனது உம்மாவும் கண்விழித்து அப்பம் சுடுவதற்கு முன் கண் திறந்தேன்.

திண்ணையின் நடுவில் தனியே குந்திக்கொண்டு இருண்ட வானத்தையே வெறித்திருந்தது நினைவில் ஆடுகிறது.

சாச்சாவுடன் திருவிழா நடைபெறும் வனத்திற்குச் சென்ற போது பரவசம் தொற்றிக்கொண்டது.

ஆதிவாசிகளின் திருவிழா என்பது நடுக்காட்டில்தான்.வாகநேரிக்குளம் ஆரம்பிக்கும் தளத்திற்கு முன் சரிவில் சரசரவென்று இறங்கினோம். பனைமரங்கள் அடர்ந்த முதற்காடு வரவேற்க, சூரியன் நன்றாக பூமியில் விழுந்தது.கால்கள் நகர நகரப் பெருங்காடு வாவென்று வரவேற்றது.

காட்டின் அடர்த்தியில் கிளர்ச்சி கொண்ட முதல் அனுபவம் இதற்கு முந்திய வருடத்தில் கிட்டியது.இயக்கத்தில் இருந்த சின்னவன் அண்ணாச்சி தலைவர்ர படம் போடப்போறம் வாரியளா என்றவுடன் காடேகியது நினைவில் உள்ளது.

ஒற்றையடிப்பாதையில் கும்மிருட்டில் தீப்பந்தத்தை கையிலேந்தி அண்ணாச்சி வழி நடத்திச்சென்றார். இருள் நதிக்குள் மூர்ச்சையாகி விடுவோனோ என்ற பதைபதைப்பு. என்னுடன் நிறைய நண்பர்கள்.இன்று போல் கிரிக்கெட்டும்.புலமைப்பரீட்சை சிறையும் இல்லாத விடுதலைக் காலம்.

தமிழ்,முஸ்லிம் என்ற வேறுபாடற்ற பயணம்.யாருடனும் பேசாமல் வரும்படி அண்ணர் வனத்தின் தலைவாசலில் வைத்து அறிவுரை கூறினார் ஒரு மைல் தூரம் ஆவலுடன் நடந்தோம்.தலைவரின் உரையை கேட்கும் பரவசம். இன்னதென்று விபரிக்கவியலா இன்ப அதிர்ச்சியுடன் நடந்தோம்.அவர் பிற்காலத்தில் எம்மையெல்லாம் அதிர்ச்சியடையவைப்பார் என்பதை அறியாத பருவம்.

அடர்ந்த காட்டின் மையப்பகுதியில் ஒளி வெள்ளம் பரவியிருந்தது. இது எப்படி சாத்தியம் என்ற ஆவலும் திகைப்பும். வாண்டுகளான எங்களுக்குப் புரியவே இல்லை. துவக்குப் பிடித்திருக்கும் அண்ணாக்களை வித்தைக்காரர்களாகவும் சாகசங்கள் நிகழ்த்தும் அற்புதமானவர்களாகவும் மனம் பதியத்தொடங்கிற்று. 

இருளைக்கிழித்து அரை மைல் தூரம் ஒளிக்கடல் பொங்கிப்பூரித்தது. சின்ன டி.வியை தூக்கிக்கொண்டு வந்து சின்னவர்தான் மேசையில் வைத்தார். 'டெக்கும்" அதனுடன் இருந்தது. படக்கொப்பியை போட்டு விட்டு வெற்றிச்சிரிப்புடன் எமை நோக்கித் திரும்பினார்.தலைவர் பேச்சக்கேளுங்க தம்பிமாரு,கேட்டுப்புட்டு நீங்களும் போராட வரனும்,இப்ப இல்ல பிறகு கூப்பிடுவம் அப்ப வந்தாச் சரி என்றார்.

அக்காலத்தில் ஒரு சில வீடுகளில்தான் டி.வி இருக்கும்.ஒவ்வொரு புதன்கிழமையும் செட்டியார் தெரு லலிதா நகைமாளிகையின் கிருபையால் தமிழ்படம் போடுவார்கள். கருப்பு வெள்ளைப்படங்கள். டி.வி உள்ளவர்கள் அதை முற்றத்தில் தூக்கி வைத்து வாசலில் வந்து குவியும் கூட்டத்திற்கு இலவச சேவை செய்வார்கள். சிலர் அதை பொத்திப்பொத்தி குமர் பிள்ளையைப்போல் வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பார்கள். முஸ்தபா போடியாரின் மகள் மர்யம் மாமியின் வீட்டுமுற்றத்தில் மணலில் குந்திக்கொண்டு டிவியில் படம் பார்த்த அனுபவத்திற்குப்பின் இப்போது அண்ணரின் கடாட்சத்தால் டிவியில் வீர காவியம் பார்த்தோம்.

இன்று டி.வி இல்லாத வீடு சவம் இல்லாத மயானம் போல ஆகிவிட்டது.ஹோம் தியேட்டர்களும் சட்டலைடுக்களும் கேபிள் டிவிகளும் வண்ண மயம்.முதன் முதலில் வாழைச்சேனை வெளிங்டன் தியேட்டர் அகன்ற திரையில் ஆயிரம் ஜென்மங்கள் பார்த்தது நினைவில் வந்து தொலைக்கிறது. எங்களுக்கு நடுக்காட்டில் அந்த டிவியும்,தலைவரின் வீர உரையும் பரவசம்தான்.

எனக்கும் அந்த துவக்கில் மனம் தொற்றிக்கொண்டது. சொக்லட்,பிஸ்கட்டுக்கு ஆசைப்படுவது போல் அதனையும் பக்கத்தில் வைத்திருக்க பிரியப்பட்டது மனம். 

இடையில் தேனீர் ஊற்றித் தந்தார்கள்.நிறைய அண்ணாக்கள் கையில் துவக்குடன் இருந்து பக்திப் பரவசத்துடன் தலைவரின் உரையை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

யாரும் பேசவில்லை. அன்று அடர்ந்த வனத்தில் அமர்ந்தபடி பிரபாகரனின் மாவீரர் தின உரையைத்ததான் கேட்டிருக்கின்றேன் என்பதை பிற்காலத்தில் நினைத்து அதிசயப்பட்டதுண்டு.   

அதைவிட ஆச்சரியம் அவர்களுடன் அங்கேயே உறங்கி,விடியற்காலையில் சின்ன அண்ணாச்சி வீதிக்கு அழைத்துக்கொண்டு விட்டார் என்பது எவ்வளவு அற்புதமான காலம் அது.யாருக்கும் எந்தச்சேதாரமும் இல்லாமல் உறவுகள் துளிர்த்த காலம்.

இரவில் கடித்து இரத்தம் குடித்த நுளம்புகளையும்,வழியில் கால்களை கீறிக்கிழித்த தொட்டாச்சிணுங்கி முற்களையும் தவிர எங்கள் இரத்தங்கள் மதிப்பாகவும் பெறுமதியாகவும் ஏன் கௌரவமாகவும் இருந்தது .இரண்டாயிரம் ரூபாயை பையில் போட்டுக்கொண்டு தொழிலுக்குச் சென்றால் கழுத்தில்லாமல் கிடக்கும் 'குடு' காலமல்ல அது. எந்தக்காட்டிலும் உயிர்ப்பயமின்றி விசுவாசமாக உறங்கி எழும் அற்புத காலங்கள் அவை. 

அண்ணாச்சியின் இயக்கத்துக்கு வரனும் என்ற வேண்டுகோளுடன் வாகனேரிக்குளக்கட்டும் உமர் மாமாவும் நினைவில் ஊஞ்சலாடுவதை தவிர்க்க முடியவில்லை. 

ஊஞ்சல் இன்னும் ஆடும் 
.........
எங்கள் தேசம் 218