Tuesday, 2 October 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


 தொடர்- 24

ஒவ்வொரு காலையும் இந்திய இராணுவம் வீதியில் ரோந்து செல்வது வழக்கம். 1987.12.03 இல் காலையில் புறப்பட்ட இராணுவம் ஓட்டமாவடிப் பாலத்திற்குள் நுழைந்தது.அங்கே ஜாவான்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் கிளைமோர் பாலத்திற்கப்பால் இருந்த வேப்ப மரத்தில் காத்திருந்தது.புகையிரதமும்,ஏனைய வாகனங்களும் போக்கு வரத்துச்செய்ய ஒரேயொரு பாலம்தான் அப்போது.2010 இல்தான் புதிய பாலம் திறக்கப்பட்டது. இப்போது புகையிரதத்திற்கு தனிப்பாலம்.

பாலத்திற்குள் பட்டாளம் நுழைந்ததும் எதிரே இருந்த வேப்ப மரத்திலிருந்து சீறி வந்த கிளைமோரில் துடிதுடிக்க அவ்விடத்திலேயே 15 இராணுவத்தினர் மாண்டனர். பலருக்கு காயம். ஊரே திகிலில் உறைந்து போய்விட்டது. கடைகள் அவசரமாக சாத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கொண்டனர்.

சி.இ.பி அமைந்துள்ள மாவடிச்சேனை சந்தியிலிருந்து இந்திய இரானுவத்தின் துப்பாக்கிகள் சகட்டுமேனிக்கு சுட்டுக்கொண்டு வந்தது.கண்ணில் அகப்படுவர்களை கண்மூடித்தனமாக சுட்டபடி வந்தனர்.இப்போது வாழைச்சேனை பொலிஸ் நிலையம் அமைந்துள்ள இடத்தில்தான் இந்திய இராணுவத்தின் பிரதான முகாம்.

முதல் பலி (உலக்க பாவா)  என்றழைக்கப்படும்.நூர் அலிஷா பிச்சை முகைதீன்,உசனார் அப்துல் லதீப்,ஆகிய இருவரையும் ரெயில்வே வீதியில் வைத்து இந்திய இராணுவம் சுட்டுக்கொன்றது. பாவாவும் அவர் குடும்பமும் ரெயில்வேக்கு பக்கத்தில்தான் வாழ்ந்தனர். ஏழைகள் வாழ்ந்த இடம். சத்தம் வந்தவுடன் என்னவென்று பார்ப்பதற்கு தலையை நீட்டியிருக்கிறார். தலையில் சுட்டிருக்கின்றார்கள். பாலம் வரை சுட்டபடி வந்ததில் கடைகளும் வீடுகளும் சேதாரம் ஆகின. 

எங்களுரில் பாவாமார்கள் குறிப்பிட்ட பகுதிகளில்தான் வாழ்ந்து வந்தனர். மாவடிச்சேனை,பிறைந்துறைச்சேனை,போன்ற இடங்களில் செறிவாக வாழ்ந்து வந்தனர். குறிப்பிட்ட தொழில் என்று அவர்களுக்கு கிடையாது. மக்கள் இவர்களுக்கு நிறைய தர்மங்களைகொடுத்து வந்தார்கள். வெள்ளிக்கிழமை பள்ளிகளில் கண்களுக்கு சுர்மா இடல், அத்தர் திரவியத்தை பஞ்சிலே நனைத்து காதுகளின் இடுக்கில் திணித்து விடல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருப்பர் பஞ்சிலே நனைத்த அத்தர் என் காதில் இரண்டு தினங்களுக்கு மணக்கும் சுர்மாவும் கண் வளையங்களின் கீழ் அசர் தொழுகை முதல் ஜொலிக்கும். 

சைக்கிள் கம்பியின் முனையை கூராக்கி சுர்மா டப்பாவுக்குள் தேய்த்து கண்களின் கீழும் இமைகளின் மேற்பரப்பிலும் ஒரு கோடு போடுவர் சில சமயம் கோடு போடும் போது இலேசாக கண்களுக்குள்ளும் சுர்மா தூள் சிதறி விழும் கண்கள் எறிந்து பின்னர் குளிர்ச்சியாக இருக்கும். சுர்மா இடுவது கண்ணுக்கு குளிர்ச்சி .

சில பாவாக்கள் கையில் ஈட்டி போன்ற வேலுடன் ஊருக்குள் வீடுவீடாக வருவார்கள் கையில் செம்பு தஸ்பீஹ் மாலை கழுத்தில் உருத்திராட்ச மாலையை நிகர்த்த மாலைகள் ஜடா முடி. பச்சைத்தலைப்பாகை,என அவர்களின் ஆடை அலங்காரங்கள் ஆர்ப்பாட்டமாக இருக்கும்.

பாவா வருகிறார் என்றால் ரபானும் கூடவே வரும்.தட்டி தட்டி இனிமையான குரலில் வாசலில் நின்று பாட்டுப்படிப்பார்கள்.நாகூர் ஹனீபாவின் பாடல்கள்,ஞானப்பேழையிலிருந்து சூபித்துவப்பாடல்கள் தூள் பரக்கும்.

தவிர நோன்பு காலங்களில் அதிகாலை இரண்டரை மணிக்கெல்லாம் பாவாமார்கள் எழுந்து ஊருக்குள் நுழைந்துவிடுவார்கள்.அலாரம்,மின்சாரம் இல்லாத காலத்தில் லாந்தரை ஏந்திக்கொண்டு தெருத்தெருவாய் சஹருக்கு மக்களை எழுப்புவார்கள்.கூட்டமாக வந்து ஒவ்வொரு தெருவிலும் ரபானை ஓங்கி அடித்து சஹருக்கு எழும்புங்கோ என சத்தம் வைப்பார்கள்.அந்தச்சத்தத்தில்தான் மக்கள் சஹருக்கு எழும்புதுண்டு.

ரமழானில் இருபத்தியேழில் வீட்டுக்குவீடு பாவாக்கள் ஆஜராகி விடுவர்.லாம்பென்ன காசிக்கு வந்து விடுவார்கள்.சஹருக்கு எழுப்பிய அன்பளிப்பாக பணமும் அரிசியும் வழங்கி மக்கள் மகிழ்விப்பர். லாம்பென்ன காசி என்பது அர்த்த சாமத்தில் லாந்தருடன் அவர்கள் வருகை தருவது வழக்கம். அதற்கு மண்னெய் ஊற்ற வேண்டுமே அதற்குத்தான் முழு ஊரையும் வடித்தெடுப்பார்கள். மிஞ்சிப்போனால் ஒரு மாதத்திற்கும் ஒரு இரண்டு போத்தல் என்ணெய் தீர்ந்து போகலாம். 

பாவாமார்கள் காதிரிய்யா தரீக்காவை பின்பற்றுபவர்கள்.முகைதீன் அப்துல் காதர் (ரஹ்) அவர்களின் சீடர்கள் என தங்களை சொல்லிக்கொள்பவர்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை முன்மாதிரிக்கும் அவர்களின் வாழ்வு முறைக்கும் துளியளவும் சம்பந்தம்  இருக்காது. 

முகைதீன் அப்துல் காதருக்கு நேர்ச்சை கேட்டு ஜெயிலானிக்கு போகவென வசூல் நடக்கும்.

இந்தக்காலங்களில் சிலர் பாவாமார்களை சீண்டிப்பார்ப்பதுண்டு. ‘ஜெயிலானிக்கு நேர்ந்து வச்சிருக்கிறன்’ பாவா என்றவுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் சொன்னவரின் வீட்டுக்குள் பாவா செல்வார்.அங்கே பெரிய பாறாங்கல்லை வெள்ளைத்துணியில் சுற்றி இதை கொண்டு ஜெயிலானிக்கு கொண்டு போய் குடுங்க பாவா என்பார்கள் பாவாவும் சந்தோசமாக குணிந்து தூக்குவார்.கல்லை இனங்கண்டவுடன் இயலாமல் தூசணம் பறக்கும். வெள்ளிக்கிழமைகளில் வெள்ளையுடுத்தி பளிச்சென அவர்கள் தென்படுவார்கள்.

பாவாமார்களின் வெட்டுக்குத்து சீனடி நிகழ்வுகள் அக்காலத்தில்    பிரபல்யமாக இருந்தது.இரவு நேரங்களில் முற்றவெளியில் இது நடக்கும்.பல விதமான வித்தைகளை செய்து களிப்பூட்டுவர். ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என பெருந்திரள் குழுமியிருக்கும்.வாண்டுகளான நாங்கள் பெரியவர்களுக்கிடையில் ஆட்டுக்குட்டிகள் போல் நுழைந்து முன் வரிசையில் நிற்போம். பாவாக்கள் கையில் ரபானுடன் கூட்டத்தின் நடுவே ஆடிப்பாடி நடனமிடுவர். எல்லோரும் பச்சைத்தலைப்பாகை கட்டியிருப்பர்.

 மல்லுக்கு நிற்கும் முரட்டுக்காளைகள் போல் பாடல்கள் உச்சஸ்தாயில் ஒலிக்கும். கைகளில் கூராயுத்தால் குத்தியபடி வலம் வருவார் சிலர் சிறு கம்பிகளால் கண்களில் குத்திக்கொண்டும் சிலர் நாக்கை இழுத்து அறுத்தபடியும் வித்தைகள் காட்டுவர். எப்படி வெட்டினாலும் இரத்தம் வராது.

 அப்படி வந்தால் வித்தையில் பிழை இல்லை.தொடக்குக்காரிகள் நிற்கிறாங்க என்ற கூச்சல் எழும். பெண்கள் ஆளையால் முகத்தைப்பார்த்தபடி நின்றிருப்பார்கள் பாவாமாருக்கு வித்தை வசியமாகாது. கூட்டம் அவதிப்படும். அவசரமாக வசூல் நடக்கும்.அன்றைய தினம் பாவாமார்களின் காட்டில் மழை பெய்வதை பார்த்தபடி வீடுகளுக்கு திரும்புவோம்.

பாவாமார்களை கண்டு பயப்படுவதற்கு இந்த குத்து வெட்டும் ஒரு காரணமாயிருந்தது. இரத்தம் சிந்தாமல் வலியெடுக்காமல் அவர்கள் ஆயுதத்தால் வெட்டுவதை சொல்லியே உம்மா பயம் காட்டுவா.போதாக்குறைக்கு வாசலில் வந்து நிற்கும் பாவா   “ஹேல்" என்று ஒரு சத்தம் வைத்து ரபானை உலுக்கி ஓங்கி அடிப்பார். இதயம் சாய்வுத்தம்பி மோதினார் அறுத்துப்போடும் கோழிபோல் கிடந்து துடிக்கும்.

அக்கரைப்பற்று நண்பர் அப்துல் ஹமீது மௌலவி மேடையில் ஏறி இந்த பாவாக்களின் வித்தைகளை புட்டு புட்டாக அவிழ்த்து விட்ட போது அட நம்மள ஏமாத்திட்டாங்கய்யா என்று மனம் வெட்கிப்போனது. 

காலவோட்டத்தில் பாவாமார்களின் சந்ததிகள் கல்வி கற்று பதவிகளில் அமர்ந்து கொள்ள சிலர் வியாபாரம், கைத்தொழில் என்று வளர்ந்து வர பாவாமார்களின் பராம்பரியங்கள் மங்கிப்போயின. சஹருக்கு எழுப்புவதற்கு பாவாவின் ரபானுக்கு முதல் செல்போனின் அலாறம் அலறுகிறது.விடியவிடிய தூங்காமல் இருக்கும் எப்.எம்களில் ரீங்காரமிடும் விசேட சஹர் நிகழ்ச்சிகள் மக்களை அடித்து எழுப்பி விடும்.

தராவீஹ் தொழுகைக்கு பள்ளிக்குப்போகும் இளைஞர்களின் வீடு திரும்புதல் பெரும்பாலும் சஹர் நேரத்தில்தான் நடக்கும் . கொழும்பில் புதுக்கடைபோல் கிராமங்களிலும் ரமழான் கடைகள் நோன்பு காலத்தில் களைகட்டும். சும்மா கிடக்கும் வீதியில் கிரிக்கெட்டும் பந்துமாக இளைஞர்கள் இபாதத்துக்களில் ஈடுபட்டு தூங்குபவர்களின் கண்ணியமான தூக்கத்தை கலைத்தபடி இருப்பர். சஹர் வரைக்கும் தெருவில் நின்றபடி வீட்டுக்குள் இருக்கும் யுவதிகளுக்கு இரவு வணக்கமாக செல் போனில் விளக்கம் நடக்கும்.

 நோன்பு காலங்கள் பெரும்பாலும் தலை நகரிலும் கிராமத்திலும் இப்படித்தான் கழியும். பாவாமார்கள் இக்காலத்தில் ரபானை தூக்கிக்கொண்டு  லாந்தருடன் வந்தால் ஓட ஓட விரட்டும் கூட்டம் முளைத்து விட்டது.

எங்கள் தேசம் 229                                                                          ஊஞ்சல் இன்னும் ஆடும்.....