Saturday, 21 November 2015

எரியும் சமவெளி !

மாஞ்சோலைக்கிராமம் :


கல்குடா தொகுதியில் முஸ்லிம்கள் இரண்டு நூறு்றாண்டு காலம் வாழ்ந்து வரும் பூர்வீக மண் மாஞ்சோலை, மீராவோடை, பதுரியா நகர் கிராமங்களாகும். இந்தக்கிராமத்து மக்களின் ஜீவனோபாய தொழில் விவசாயம், மீன் பிடி, தோட்டப்பயிர்ச்செய்கை,மட்பாண்டத்தொழில் மற்றும் கூலித்தொழில் உள்ளிட்ட கைவினைத்தொழில்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

1917ம்ஆண்டிக்கு முன்னரே அரச அங்கீகாரத்துடன் இம்மக்கள் தங்கள் காணிகளில் நிரந்தரமாக குடியமர்த்தப்பட்டதற்கான ஆதார பூர்வமான சான்றுகள் இம்மக்களிடம் ஆவணமாக இன்றும் உள்ளன.

தமது பராம்பரிய மண்ணில் வாழ முடியாத அச்சுறுத்தலை விடுதலையின் பெயரால் ஆயுதமேந்திய தமிழ் ஆயுதக்குழுக்கள் இம்மக்களுக்கும்  ஏற்படுத்தினர். மாஞ்சோலைக்கிராமம் என்பது கிழக்கே கருவாக்கேணி தமிழ் கிராமம்,தென்பகுதியில் மீராவோடை தமிழ் கிராமம்,மேற்கில் மீராவோடைவிளிம்பு நிலை மக்களான சலவைத்தொளிலாளர்கள் சூழ அமைந்துள்ள ஓர் அழகிய முஸ்லிம் கிராமமாகும்.இக்கிராமம் முன்பு ஓடைக்கரை, மாவடிவளவு போன்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டு வந்தது. எல்லையில் தமிழ்மக்களுடன் அன்னியோன்னியமாக வாழ்ந்து வந்த இக்கிராமத்தை, அரசியல்வாதிகளின் சுய நலன்களும் ஆயுதக்குழுக்களின் இனசம்ஹார நடவடிக்கைகளும் நிரந்தர எதிரிகளாக பார்க்கும் அளவிற்கு மாற்றியுள்ளன.

சுந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் சகோதர தமிழ் மக்களை ஏறிட்டு பார்க்க வைத்த தீய சக்திகளின் கனவு நிறைவேறியுள்ளதாகவே அண்மைக்கால கசப்பான நிகழ்வுகள் நமக்கு படம் பிடித்துக்காட்டுகின்றன. 90ம்ஆண்டிக்கு முன் மாஞ்சோலைக்கிராமத்தின் எல்லையில் 500 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். 90களுக்குப்பின் ஏற்பட்ட ஈழப்போராட்டத்தின் வடுக்கள் இம்மக்களையும் வெகுவாக பாதித்தன.

இவர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டும் இடம் பெயர்ந்து உறவினர்கள் மற்றும் தனியார், அரச காணிகளில் தற்காலிகமாக கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வந்தனர். 90 இல் எல்லைப்பகுதியில் பாதுகாப்பரண்களை அமைத்த இலங்கை இராணுவம் இம்மக்களின் வாழ்வியல் ஆதாரமான குடியிருப்புக்களையும் தோட்டங்களையும் பாதுகாப்பை காரணம் காட்டி இடித்து தரைமட்டமாக்கியது.

இம்மக்கள் வாழ்ந்தற்கான எவ்வித தடயங்களுமின்றி மாஞ்சோலை எல்லைக்கிராமம் அழிக்கப்பட்டது. மரத்தாhல் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையானது. கொடிய யுத்தத்தில் நமது மக்களும் தம் இருப்பிடங்களையும் ,பொருளாதார வளங்களையும்; உயிர்களையும் இழந்ததுடன் இரு பக்கமும் அடிபடும் மத்தளம் போலாகி ஓர் அகதி வாழ்வுக்கு நிர்ப்பந்தமாக தள்ளப்பட்டனர். இதற்கு அரசும் விடுதலைக்காக போராடும் ஆயுதக்குழுக்களும் முஸ்லிம் கட்சிகளும், அமைச்சர்களும் பதில் சொல்லியாக வேண்டும். முஸ்லிம்கள் போராட்டத்திற்கு எதுவும் செய்யாமல் சொகுசாக இருந்து கொண்டு வெண்ணை திரண்டு வருகையில் தாழியை உடைக்கிறார்கள் என குற்றம் சாட்டும் தமிழ் பேரினவாதம் முஸ்லிம்களும் தமிழர் போராட்டத்திற்காக பலகோடி இழப்புக்களை சந்தித்து மாண்டுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் சுயகௌரவத்துடன் அரசியல் தீர்வு பெற்று வாழ எல்லா வகையிலும் மிகப்பொருத்தமான ஒரு பாதிக்கப்பட்ட சமூகம் என்பதை உணர்த்தவே இதை குறிப்பிடுகின்றேன்.

78ம்ஆண்டில் கிழக்கில் வீசிய சூறாவளிப்புயலுக்கு முன் இப்பிரதேசம் மரமுந்திரிதோப்பாகவும் தென்னந்தோப்பாகவும் இருந்தற்கான சான்றுகள் உள்ளன. முன்பு அடிக்கடி வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படும் இப்பிரதேசத்தில் வீடு கட்டுவதற்கு நிலத்தை அகழ்ந்த போது  வெளிவந்த மனித மண்டையோடும் கட்டடத்தின் சில சிதிலங்களும் எல்லையில் மாஞ்சோலை பெரிய பள்ளியும் மையவாடியும் இருந்ததற்கான சான்றுகளாகும் என வயதில் மூத்தவர்கள் சாட்சி சொல்கின்றனர்.

 அக்காலம் எல்லையில் ஓடைக்கரை இருந்தது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் பொழுதெல்லாம் பள்ளிவாயலும் மையவாடியும்  பெரிதும் பாதிக்கப்பட்டன. ஊரார் பள்ளிவாயலை ஊரின் மத்திக்கு மாற்றியதுடன் மையவாடியையும் மாற்றினர் என்பதே வரலாற்று உண்மையாகும். இவ்வுண்மைகளை குழிதோண்டி மறைத்து விட்டு இம்மண்ணை தமிழர்களின் பூமி என சொந்தங்கொண்டாடுவது ஆதாரமற்ற வாதமாகும்.

95 இல் இம்மக்களின் கணிசமானோர் தமது சொந்த இடங்களில் குடியேறிய போதும் தொடர்ந்தும் வாழ முடியாத நெருக்குவாரங்கள் ஏற்டவே மறுபடியும் அகதிகளாக்கப்பட்டனர்,

கிழக்கு மாகாணம் தமிழ் விடுதலைப்புலிகளிடமிருந்து அரசாங்கத்தின் கட்டுபாட்டில் முழுமையாக வந்ததையிட்டு இம்மக்களும் மகிழ்ச்சியுடன் தமது பூர்வீக மண்ணில் வாழ்வைத்தொடங்கும் பொருட்டு தமது காணிகளில் தற்காலிக குடிசைகளை அமைத்து குடியேறினர்,

எனினும் மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதையாக முஸ்லிம் மக்களின் நிலை மாறிவிட்டது. சட்டிக்குள்ளிலிருந்து அடுப்பில் விழுந்த மாதிரி கிழக்குத்தான் விடுதலை பெற்றதே தவிர அதில் வாழும் முஸ்லிம்கள் அல்ல என்பதை கிழக்கு விடுவிப்புக்குப் பின் நிகழ்ந்த  அண்மைய நிகழ்வுகள் நிலைமையின் விபரீதத்தை சுட்டுகின்றன.

நடுக்கடலில் நின்றாலும் நாய் நக்கித்தான் குடிக்கும் என்பதை ஜனநாயக நீரோட்டத்திற்குள் வந்து விட்டதாக உலகிற்கு முரசறிவிக்கும் தமிழ் ஆயுதக்குழுக்கள் மீளக்குடியேறிய மாஞ்சோலைக்கிராமத்து எல்லைப்புரத்து மக்களின் குடிசைகளை இரவோடு இரவாக கடந்த 2007  மழைக்காலத்தில் தீ வைத்து துவம்சம் செய்தனர். மட்டுமன்றி இது தமிழர் தாயக மண்ணென்ற கட்டுக்கதையையும் பரப்பி முஸ்லிம்கள் தமிழர்களின் காணிகளில் அத்துமீறுகின்றார்கள் என்ற பொய்ப்பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர். 2007 தீவைப்பு சம்பவத்தில் 60க்கும் மேற்பட்ட குடிசைகள் முற்றாக எரிந்து சாம்பராயின. பாதுகாப்புக்காரணங்களுக்காகவும் தமிழ் ஆயுதக்குழுக்களின் உயிர் அச்சுறுத்தலுக்காகவும் மாஞ்சோலை எல்லைக்கிராமத்து மக்கள் இரவில் உறவினர் வீடுகளில் தங்கும் சமயம் பார்த்து தமிழ்ப்பேரினவாதம் தனது வஞ்சத்தை தீர்த்துக்கொண்டது.

 அத்துடன் அது நிறுத்திக்கொள்ளவில்லை.இரவில் யாருமற்ற கிராமத்திற்கு வந்து பயிர்களை துவம்சம் செய்து தென்னங்கன்று உள்ளிட்ட பெரும்பயிர்களைபிடுங்கியும் முஸ்லிம்களை தம் வாழ்விடங்களில் இருந்து விரட்டியக்க பலத்த நெருக்குவாரங்களை உண்டாக்கியது. கிண்ணையடியிலிந்து வடிகால்கள் ஊடாக மாஞ்சோலைக்கிராத்திற்கு மழைநீரை திருப்பி விட்டு அக்கிராமத்தை சென்ற வருடம் முற்றாக நீரில் மூழ்கடித்து மக்களை வரலாற்றில் முதல் தடவையாக பாடசாலைகளில் அகதிகாக அனுப்பி தன் குரூரத்தை தீர்த்துக்கொண்டது.

 இம்மக்களின் வாழ்வியல் இருப்பிடப்போராட்டத்திற்கு முன்னின்னு உழைத்த சமூக முன்னோடிகளை முஸ்லிம் தீவிரவாதிகளாக சித்தரித்து பிரச்சாரம் செய்து வழக்கொன்றையும் தாக்கல் செய்தனர். வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கானது முஸ்லிம்கள் தமிழ்மக்களின் மண்ணில் அத்துமீறிக்குடியேறியுள்ளதை தடை விதிப்பதற்கான வழக்காக பதிவு செய்யப்பட்டது. உண்மையில் தமிழ் மக்களின் குடியேற்றத்திற்கு பல இலட்சக்கணக்காண ஏக்கர் நிலங்கள் தரிசாக இருக்கும் போது முஸ்லிம்களின் எல்லைகளில் வந்து வேண்டுமென்றே தணகும் இந்த ஆக்கிரமிப்பை சொரணையுள்ள  யாராயினும் கைகட்டி வாய் பொத்தி நிற்க முடியாது.(சில முஸ்லிம் அமைச்சர்கள் போல)
இத்தொடரில்தான்  இம்மக்களின் மீது ஜனநாயக நீரோட்டத்திற்குள் நுழைந்த ஆயுததாரிகள் நிராயுதபாணியான அப்பாவிகளின் குடிசைகளில் தங்கள் வீரத்தை தீயாகக் காட்டியுள்ளனர்.

முஸ்லிம்களின் எல்லைக்குள் தமிழ்மக்களுக்கான குடிசையினை அமைத்து இது தமிழ்மக்களின் காணி என முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போட எத்தனித்துள்ளனர், வரலாறு அறியாத கற்றுக்குட்டிகளின் அவசர நிலையால் துளிர்விட்டு தளைத்து வந்த தமிpழ் முஸ்லிம் உறவில் விரிசல்கள் ஏற்பட்டு விடுமோ என்;ற அச்சம் நியாயமான மனித நேயமுள்ளவர்களை கலவரப்படுத்துகின்றது.

கடந்த 02.08.08ம்திகதி இரவு 9.30 மணியளவில் இப்பிரதேச மக்கள் அச்சம் காரணமாக உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்த தருணம் பார்த்து சுமார் இருபது குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. உடுதுணி உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான சொத்துக்களும் தீயில் எரிந்து சாம்பராகியுள்ளன. மீண்டும் இம்மக்கள் தம் சொந்த மண்ணில் அகதிளாக்கப்பட்டு சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

முன்பு தமிழ் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல் இருக்கிறது பாதுகாப்பு தாருங்கள் என பொலிசாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதெல்லாம் உதாசீனம் செய்தவர்கள் தீ வைப்பு சம்பவத்திற்குப்பின் நீதிமன்றத்தின் கட்டளையை ஏற்று எல்லையில் பாதுகாப்புக்கு அரண் அமைத்து நிற்பது வேடிக்கையிலும் வேடிக்கை. முஸ்லிம்கள் கிள்ளுக்கீரையாக பயன்படுத்தும் சில அரசியல் சக்திகளும் ஆபத்தில் கைநழுவிப்போகும் செயலால் மக்கள் விசனமுற்றுள்ளனர்.
 கிழக்கு மீட்புக்குப்பின் முஸ்லிம்கள் மீது இழைக்கப்பட்ட பாரிய அத்துமீறலாகவும், இன உயிர் அச்சுறுத்தலாகவும் இவ்வாறான சம்பவங்கள் அமைந்து விடுகின்றன. கிழக்கு மீட்பு என்பது அப்பாவி முஸ்லிம்களை தமிழ்பேரினவாதத்திற்கு தாரை வார்த்த ஒரு கொண்டாட்டமாகவே ஆகிவிட்டது,

 மேற்படி தீவைப்பு சம்பவத்திற்கு பின் சம்பவத்தை விசாரித்த வாழைச்சேனை மாவட்ட நீதி மன்ற நீதிபதி இரு தரப்பினரையும் அழைத்து ஒரு இனக்கக்குழுவொன்றை நியமித்திருப்பதாக தெரிய வருகிறது. இரு தரப்பாரும் தங்கள் எல்லைகளை ஆதாரபூர்வமாக நிரூபிக்கும்படி நீதி மன்றம் கோரலாம்.

எனினும் முஸ்லிம்களின் எல்லைகள் குறித்த வரைபடங்களும் மோசடி செய்யப்பட்டு பிரதேச செயலகங்களில் இருந்த பழைய வரைபடங்களுக்கு பதிலாக புதிய பிரதேச எல்லை நிர்ணய வரைபடங்கள் தமிழ் பேரினவாதிகளால் சொருகப்பட்டிருப்பதும் அண்மைய விசாரணைகளின் போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் எல்லைகளை வெறும் சதுப்பு நிலங்களாகவும் குடியேற்றமற்ற வயல்வெளிகளாகவும் வரைபடம் வரைந்தவர்கள், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளை தமிழ் பிரதேச நிருவாக அலகுடன் இணைத்து விட்டபுத்திசாலித்தனத்தை நமது சமூகம் கண்டும் காணாமல் ஒதுங்கிப்போனால் நமக்கு சிறு நீர் கழிப்பதற்கும் ஒரு கையளவு மண்ணும் இருக்காது என்பதே நிஜம்.

2008-08-13ம்திகதி  எங்கள் தேசம் பத்திரிகையில் எழுதிய கட்டுரை தகவலுக்காக  எனது வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்கின்றேன்

மான்புறும் மாற்றுத்திறனாளிகள்

ஊனமுற்றவர்கள் என் பதத்தை விட  “மாற்றுத் திறனாளிகள்“  என் சொல் மிகப்பொருத்தமானது. சில சமயங்களில் அவர்களின் “செயல்திறன்“ பிரமிக்க வைக்கிறது.சாதாரண மனிதர்கள் செய்வதைப் போலவே விரைவாகவும் பிழையின்றியும் அவர்கள் கருமங்கள் ஆற்றும் போது நம்மை ஆச்சர்யப்படுத்த வைக்கிறது.

நம்மை சுற்றிலும் தினந்தோறும் பல மாற்றுத் திறனாளிகளை கடந்துதான் போகிறோம். அவர்களை கிண்டலாகவும் கேலியாகவும் பார்த்த சமூகத்தில் இன்று மாற்றம் ஏறபட்டுள்ளது. ஆனாலும் திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் மாற்றுத் திறனாளிகளின் குறைபாட்டை கேலி ஆக்குகின்றன. மாற்றுத் திறனாளிகளாக பிறந்தது சாபம் என்ற எண்ணம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது குடும்பத்தாரின் கடமை மட்டுமல்ல.சமூகம் மற்றும் அரசாங்கத்தின் கடமையும் கூட. 

"மாற்றுத்திறனாளி" என்பவர் உடலிலோ அல்லது மனதிலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக அவரால் சில செயல்களை செய்யமுடியாமல் போய்விடுகிறது இதனால்  நாம் மாற்றுத்திறனாளி என அழைக்கிறோம். அது பின்வரும் வழிகளில் வகைப்படுத்தப்படுகிறது:
·         மரபனுவினால் பிறப்பிலேயே ஏற்படும் மாற்றங்கள்
·         தாயின் கருவில் இருக்கும் பொழுது அல்லது பிறந்த பின்னர் ஏற்படும் நோய்கள் நோயினாலோ அல்லது விபத்தினாலோ ஏற்படுத்திக்கொண்டது

தெரியாத காரணங்களால் குறைபாடுகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்
உடல் ஊனம்,புலன் குறைபாடு, பார்வைக் குறைபாடு, கேள்விக் குறைபாடு,நுகர்ச்சி மற்றும் சுவைசார் குறைபாடு,மனவளர்ச்சிக் குறைபாடு, உளப்பிறழ்வுக் குறைபாடு

மனவளர்ச்சிக் குறையை பலரும் மன நோய் எனத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் மனவளர்ச்சிக் குறைபாடு வேறு; மன நோய் வேறு. அடையத்தவறிய மனதின் நிலையே மனவளர்ச்சிக் குறை என்பது உளவியலாளர்களின் கருத்தாகும் உளப்பிறழ்ச்சி அல்லது உள நோய் அல்லது மன நோய் என்பது தனிப்பட்ட மனிதரில் உண்டாவதும் வழமையான பண்பாட்டு வளர்ச்சியில் எதிர்பார்க்கப்படாத துன்பத்தை அல்லது இயலாமையை உண்டாக்கும் உளவியல் அல்லது நடத்தைக் கோலம் ஆகும். உளப் பிறழ்ச்சியை அடையாளம் காணலும் அது தொடர்பான புரிதலும் காலத்துக்குக் காலமும் பண்பாட்டுக்குப் பண்பாடும் மாற்றமடைந்து வந்திருக்கிறது.

உடலளவில் பலவீனமாக இருந்தாலும் மனதளவில் தைரியமாக இருப்பவர்கள் தான் மாற்றுத் திறனாளிகள். அனைத்து துறைகளிலும் இவர்கள் திறமையை வெளிக்காட்டுகின்றனர். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடைக்கின்றன. உடல் குறைபாடு என்ற ஒரே காரணத்தை வைத்து அவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்க இந்த சமூகம் மறுக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் டிச. 3ம்திகதி சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

 உலக மக்கள் சனத்தொகையில் 15 சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகள். இதில் 80 சதவீதம் பேர் ஏழை நாடுகளில் உள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாகவும் உள்ளனர். வளரும் நாடுகளில் உள்ள மாற்றுத் திறனாளியாக உள்ள குழந்தைகளில் 90 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்வதில்லை என "யுனெஸ்கோ' அமைப்பு தெரிவிக்கிறது

சங்கங்களுக்கு பெயரிடும் போது விழிப்புலனற்றோர் ஊனமுற்றோர் என்ற எதிர்மறை செற்பதங்களை பிரயோகிக்காது சார்பான சொற்களையே பயன்படுத்த வேண்டும். விசேடதேவைக்குட்பட்டோர் என்றோ மாற்றுத்திறனாளிகள் என்றோ மாற்றுவலுவுடையோர் என்றோ இவ்அமைப்புகளுக்குப்  பெயரிடுவது பொருத்தமானது. இதனை அரச நிர்வாகமும் ஏனைய அமைப்புகளும் கவனத்திற்கொள்ளல் வேண்டும்.
பொது கட்டடங்களையும் வீதிகளையும் அமைக்கும் 

போது மாற்றுத்திறனாளிகள் எவரது உதவியுமின்றி நடமாடத்தக்க வகையில் அமைக்கப்படுதல் வேண்டும். பொதுகட்டடங்களுக்கு அனுமதி வழங்குவோர் இதனை கருத்தில் கொள்ளுதல் அவசியம். வீதிகளில் விழிப்புலனற்றோர் கடக்கும் சந்தர்ப்பத்தில் ஒலி சமிக்கைகள் மூலம் அவர்களுக்கு உதவும் வழிமுறை. வீதி சட்டத்தில் உள்ளக்கப்படவேண்டும்;.

   
இவற்றை எல்லாம் அரசும் சமூகமும் கவனிக்காதவிடத்து அதற்காக குரல் எழுப்புவதற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ரீதியாக ஒன்றுபட்டு அரசியலில் ஈடுபடுதல் வேண்டும். உள்ளுராட்சி அமைப்புகளிலும் பாராளுமன்றத் தேர்தல்களிலும் இவர்கள் பங்குபற்ற வேண்டும். 

இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் இனிவரும் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளையும் வேட்பாளர்களாக நிறுத்துதல் வேண்டும். அரசியல் ஆளுகையில் இவர்களது குரல் அவர்களுக்காக ஒலிக்க வேண்டுமாயின் இது அவசியம். இது தொடர்பாக இவ் அமைப்பினர் கட்சிகளுக்கு அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்.

மாற்று திறனாளிகள் தமது அமைப்பின் ஏற்பாட்டில் தற்போதைய தகவல் யுகத்தில் இணையத்தளங்களை உருவாக்கி தமது தேவைகளை சர்வதேசமயப்படுத்தமுடியும். குரல் வழியான சமிக்கைகளை விளங்கும் கணணியை பயிலுதல் இன்றியமையாதது. 

இன்று சர்வதேசத்தில் பயன்படுத்தப்படுவதுபோல் இவர்களுக்கு தேவையான நவீன தொழில்நுட்ப கருவிகளை பெறுவதற்கு முக்கியமாக அரச சார்பற்ற தொண்டார்வு நிறுவனங்கள் உதவ முன்வரவேண்டும். உதாரணமாக நவீன ஒலிப்பதிவு கருவிகளை வழங்கி விழிப்புலனற்றோருக்கு உதவ முடியும்.

மாற்றுத் திறனாளிகளின் பங்களிப்பை ஏற்காமல் நம்நாட்டை வளர்ந்த நாடாக மாற்றிவிடலாம் என நினைப்பது கனவாகவே முடியும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சமூகத்தின் இரங்கல் பார்வையை பெற்றுக்கொண்டு மாற்றுத் திறனாளிகள் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு.

நாட்டின் முன்னேற்றத்தில் அவர்களின் நியாயமான பங்கேற்பை ஏற்க வேண்டும். தனியார் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு சலுகை அளிக்காவிட்டாலும் மாற்றுத் திறனாளிகள் என்பதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையையும் பறிக்கக் கூடாது.இதுவே வளர்ச்சியடைந்த நாடுகளின் முன்னற்றத்திற்கு ஆரோக்கியமான செயற்பாடாகும்.


கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் 2014ம்ஆண்டு வெளியிடப்பட்ட நங்கூரம் சஞ்சிகைக்கு தொகுத்து எழுதப்பட்டது.