Thursday 22 December 2011

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

எங்கள் தேசம் பத்திரிகையில் தொடராக வெளிவரும் நினைவுக்குறிப்புகள் 
 
தொடர்  4
சுன்னத்து வீடுகளில் காவலிருப்பவர்கள் தூங்கக்ககூடாது. மீறித்தூங்கிவிட்டால் விழித்திருப்பவர்கள் அவர்களுக்குச் செய்யும் சில்மிசங்கள் நகைப்புக் கிடமானவை. சுன்னத்து மாப்பிள்ளைக்கு கட்டுவதைப்போல் வெள்ளைத்துணியால் தூங்குகின்ற பெரியவர்களுக்கும் கட்டி விட்டு ஒருவர் வீச மற்றவர் கால்களை பிடித்துக்கொண்டிருப்பர்.

முகத்தில் சுண்ணாம்பால் குத்தி வேடிக்கை பார்ப்பதுமுண்டு. கூடியிருந்து பெண்கள் சிரிப்பார்கள். கண்விழித்ததும் அசடு வழிய சிலர் ஓடுவதுமுண்டு.சிலர் சண்டையிட்டுக்கொண்டு போவதுமுண்டு. சில நேரங்களில் வேடிக்கைகள் வினையிலும் பகையிலும் முடிவதுமுண்டு.

சுன்னத்து வைத்திருப்பவர்களுக்கு தாகத்திற்கு தண்ணீர் தரமாட்டார்கள். உதட்டை நனைத்துக்கொள்ள கொஞ்சம் தண்ணீர் கிடைக்கும். சாப்பாடும் அப்படித்தான்.காயம் ஆறாது என்ற ஜதீகம். சிறு நீர் முட்டிக்கொண்டு வரும் எழுந்து செல்வதற்கு தடை .ஓரிரு நாட்கள் மண்சட்டி வைத்து பாயில் போகச்சொல்வார்கள். அப்படியொரு பத்தியம்.சுன்னத்து மாப்பிள்ளை பெயரால்  வந்திருப்பவர்களுக்கு விருந்தோ விருந்து.

ஒவ்வொரு நாளும் ஒய்த்தா மாமா வந்து காயத்தைப்பார்த்து மருந்து தூவிப்போவார்.வருகை தரும் நாட்களில் அவரின் கணக்கில் கணதி ஏறிவிடும்.ஏழாவது நாள் தண்ணீர் ஊற்றி பெண்டேஜை கழற்றி குளிக்க வைப்பார்கள். அத்துடன் கலகலப்பு முடிந்துவிடும்.

 பின்னர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒய்த்தா மாமா மட்டும் அதை பார்த்து மருந்து தூளை கொட்டி விட்டுப்போவார். விரல் நுணியால் சாரத்தை கிள்ளிப்பிடித்தபடி முற்றத்தில் நடை பழகுவோம். நிலைமை சீரானதும் மறுபடியும் பள்ளிவாயலுக்கு அழைத்துப்போய் பாதிஹாவுடன் சடங்குகள் இனிதே நிறைவுறும்.

எல்லாம் சரியாக ஒரு மாதம். சுன்னத்து செய்யாதவர்கள் பள்ளிவாயலுக்கு தொழுவதற்கு கூட அனுமதி மறுக்கப்படும் சந்தர்ப்பங்களும் உண்டு.ஆசாரம் பார்க்கும் சில பெரிசுகள் இவர்களை பள்ளிவாயலுக்குள் நுழைய அனுமதிக்கமாட்டார்கள். எனது இரண்டு ஆண் மக்களுக்கும்  முறையே முப்பதாவது நாள்,நாற்பதாவது நாளில் டாக்டரிடம் கொண்டு போய் சுன்னத்தை செய்து விட்டு வந்துவிட்டேன்.அயலாருக்கு தெரிய வந்தது இரண்டாவது நாள்.


சுன்னத்து வைத்தவர்களையும், முப்பதும் ஓதி முடித்தவர்களையும் மௌலவி விராத்துக் கத்தம் (பராஅத்) கத்தம் ஓத அனுப்புவார். மதரசாவிலிருந்து தேர்ந்தெடுத்த ஒரு நான்கைந்து பேர் ஜோடியாக அனுப்புவது வழக்கம். நானும் நண்பர் இஸ்ஸதீனும்  ஜோடி சேர்க்கப்ட்டோம். வயிற்றுப்பாடு எங்களுக்கு. வசூல் மௌலவிக்கு.இது ஊர் வழமை.

இஸ்ஸதீனும் நானும் வீடுவீடாக சென்று கத்தம் ஓதுரயா என்போம். அரிசிமா ரொட்டி,கொட்டப்பாணி,இறைச்சிக்கறி. சாப்பிடும் வயது. சாப்பிட்டோம். ஒரே நாளில் சில வீடுகள்.மாலை மௌலவியிடம் சில்லறைகளை கொடுத்து விட்டுப்போய் விடுவோம்.



இஸ்ஸதீன்தான் என் பால்ய காலத்தில் நெருக்கமான தோழனாக இருந்தான்.
இப்படித்தான் யாசீன் பாவாட தோட்டத்திற்குள் விளையாடிக் கொண்டிருந்தோம். இப்போது பெரிய மாடி வீடுகளும் கடைத்தெருவும் கொண்ட பஜார்.   ‘மட ‘வச்சிரிக்கிரா என்றான்.

பச்சத்தண்ணி மௌலானா என்ற ஒருவர் யாசீன் பாவாட தோட்டத்தின் கடைக்கோடியில் இருந்தார். அவரிடம் பேய்களை விரட்டும் சக்தி இருப்பதாக நம்பிய பருவம். தூரத்திலிருந்தெல்லாம் தமிழ் ஆக்களும்  குறிச்சுப்பார்க்க வருவார்கள்.

 அச்சிலம் (தாயத்து) போட நூல் கட்ட,வீடு காவல் பண்ண,கழிப்புக்கழிக்க, தண்ணி ஓத என்று ஒரே கூட்டமாக இருக்கும். அவர் வீட்டு முற்றத்தில் ஒரு வேப்பமரமிருந்தது. அதன் கீழ் பலியிடுவதற்கு வந்த கோழிகள் கால்கள் கட்டப்பட்டு துடித்துக்கிடக்கும். பகல் காலங்களிலும் என் வயதொத்தவர்கள் அந்த வழியே செல்வதில்லை.


கணுக்கால் புதையும் அளவிற்கு மணல் வீதி.அவர் வீட்டிலிருந்து ஒரு ஐம்பதடி தூரத்தில் கொட்டில் போட்டு தொழில் செய்து வந்தார். அவர் முகட்டிலிருந்து சதா சாம்பிராணிப்புகை கிளம்பிக்கொண்டிருக்கும்.அவர் பேயை விரட்டினாரா நாயை விரட்டினாரா?  அயலவர்கள் பிற்காலத்தில் ஊரை விட்டும் விரட்டியது, அவர் விரண்டோடியது அனைத்தையும் நாமறிவோம்.

இஸ்ஸதீனும் நானும் பசியை விரட்டினோம். ‘மட‘யில் இருக்கும் இளநீரும் வாழைப்பழமும் எங்களை குளிர்வித்தன. எங்களை விதி விரட்டியது. வறுமை விரட்டியது.

இளமையில் வறுமை எத்துனை கொடுமை என்பதை அனுபவித்தீர்களா? கண்கள் நிறையக்கனவும், வயிறு நிறைய காற்றும் சுமந்து திரிந்த பால்ய காலங்கள் கொடுமையிலும் கொடுமை.

அதிகாலை ஐந்து மணிக்கு மட்டக்களப்பிலிருந்து வரும் உதய தேவி வாழைச்சேனை ஸ்ரேஷனில் தரித்துப்போகும். உம்மா பனிப்புகார் விட்டுப்பிரியா முற்றத்திலிருந்தபடி என்னை வழியனுப்பி வைப்பா.நான் கிறவல் வீதயில் மறையும் வரை அவவின் விழிகள் என் முதுகில் மொய்த்தபடி பின் தொடரும்.
என் தலையின் மேல் ஆவி பறக்கும் அப்பப்பெட்டி.குடும்பத்தின் வறுமையை விரட்ட ரெயில்வே ஸ்ரேஷனில் இளமைக்காலம் கழிந்தது.காலையில் ஏழு மணிக்குள் விற்றுத்தீர்த்து விட்டு வீடு வந்து குளித்து உடை மாற்றி பாடசாலைக்குச்செல்ல வேண்டும் மாலை மறுபடியும் வறுத்த கடலை,வடையுடன் மறுபடியும் ரெயில்வே ஸ்ரேஷன்.என் சக நண்பர்களும் இதே வறுமையுடன் தண்டவாளங்களில் போராடித்திரிந்தார்கள்.

பொலனறுவையிலிருந்து வாழைச்சேனையில் தரித்து நின்ற ரெயிலில் சனக்கூட்டம் அதிகமிருந்தது. பெட்டிகளுக்குள் நாங்கள் ஏறிக்கொண்டு ஒவ்வொரு முகங்களாக ஏக்கத்துடன் பார்த்துப்பார்த்து கூவிக்கொண்டு போனோம். ஐயா வடை,   .....    அம்மா வடை…

வாங்கமாட்டார்களா என்ற ஏக்கம். வியாபார நெருக்கடியில் ரெயில் கூவியதும்,நான் புறப்படப்போகிறேன் இறங்கிவிடுங்கள் பசங்களே என்று அலாரம் அடித்ததும் புலப்படவில்லை. கல்குடா தாண்டும்போதுதான் விபரீதம் புரிந்தது.அடுத்தது பாரதிபுரம்.பின்வழியால் இறங்கி ஸ்ரேஷன் பென்ஜில் அமர்ந்திருந்தேன்.


டிக்கட் இல்லாமல் பயணம் செய்தால் ஐம்பது சதம் அபராதம். அப்போது அது பெரிய தொகை.மாஸ்டரிடம் அகப்பட்டுக்கொண்டேன்.அவர் பிடித்துப்போய் அவர் அறையில் அடைத்துவைத்தார்.விசாரணைகள் ஆரம்பமாகின.

காலையில் ஏழு மணிக்கு இறங்கிய என்னை 10 மணி வரை விசாரித்து விட்டு என்ன நினைத்தாரே இனி மே டிக்கற் இல்லாம வரப்படாது. எச்சரித்து அறை டிக்கற் அவரே தந்து வாழைச்சேனைக்கு ஏற்றி விட்டார்.அவரின் மனிதாபிமானம் என்னை இன்றும் மெய்சிலிர்க்க வைக்கின்றது. நிறைய வடை வாங்கி விட்டு பணத்தையும் தந்தனுப்பினார்.

தண்டவாளத்தில் ஆரம்பித்த வாழ்க்கை.பல்லாயிரம் வாழ்பனுவங்களை கற்றுத்தந்தது. அதை விபரிக்கவில்லை. என்னுடைய ‘ரெயில்வே ஸ்ரேஷன்’ கதை பேசப்படுவதற்கு அதில் நடமாடும்  உயிர்ப்பசையுள்ள மாந்தர்களும் கதையில் மின்னும் உயிர்ப்புமே காரணம் என்பேன். இளமையில் அந்த அனுபவங்கள் எனக்கு கிடைக்கவில்லை எனில் அந்தக்கதையும் காத்திரமாக வந்திருக்காது.

இப்படித்தான் வறுமை என்னை பிடரி நரம்பிலிருந்து கொண்டு விரட்டியது.பதினெட்டு பத்தொன்பது வயது வரை தேசம் தேசமாக விரட்டியது.

அனுராதபுரம்,கண்டி,கள்எளிய,கொழும்பு,என அலைந்து திரிந்தேன். வாழ்க்கை விரட்டத்தொடங்கினால் ஒரு கட்டத்தில் விசர் நாயைப்போல் விரட்டிக்கொண்டே இருக்கும்.நின்று நிதானிக்க அவகாசமிருக்காது. ஓடியே ஆக வேண்டும். அந்த ஓட்டத்தில்தான் உயிர் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும்.


இந்திய இரானுவத்திற்கும்,தமிழ் துணைப்படைகளுக்கும்,ஏன் புலிகளுக்கும் தப்பி ஓடியது நினைவை விட்டும் அகல மறுக்கின்றது.காடுகள், வயல்கள் கடந்து களனிகளில் மூழ்கி எழுந்தோடிய பல கதைகள் பின்வரும் அத்தியாயங்களில் பகிரப்படலாம். 
ஊஞ்சல் இன்னும் ஆடும்......

எங்கள் தேசம் இதழ் : 211
 

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...