Tuesday 16 December 2014

சிறுகதை

மனைவி 


நாங்கள் வெளியே போகத்தயாராகிக்கொண்டிருந்தோம். பிள்ளைகள் இரண்டும் ஆளுக்கொரு திணுசில் உடுத்திக்கொண்டு கட்டவிழும் தருணத்திற்கென திமிறிக்கொண்டிருந்தார்கள். கண்ணாடியும் அவளும் அத்வைதமாகி அவள் அதுவாகி அதுவும் அவளாகி மருகி நிற்கும் காட்சி நிலைப்படியில் நின்ற என் விழிகளில் விழுந்தது.

 கொசுவ மடிப்புகள்  இடையில் எடுப்பாக விழவில்லை என்பதற்காக சாரியை உருவி கைகளால் அபிநயம் பிடித்து மறுகாவும் கொசுவிக்கொண்டிருந்தாள். மூடப்படாத மார்புகள் ரவிக்கையின் இறுக்கத்தில் வெளியே குதித்துவிடுவேன் என எகிறி வந்து பாவ்லா காட்டியது. இடை மடிப்பின் அழகும் லைலாவின் பின்னழகும் சேர்ந்து கண்ணாடி வழியே என்னை போதையூட்டின.

ஞாயிற்றுக்கிழமைகளில் பீச்சுக்கு அழைத்துச்செல்லவேண்டும் என்ற குழந்தைகளின் அடம்பிடித்தலுக்குப்பணிந்துதான் இந்த ஏற்பாடெல்லாம் செய்து கொண்டிருந்தோம். 

திறந்திருந்த சாளரத்தின் வழியே குபு குபுவென காற்று வழிந்தது மூன்றாவது மாடியில் குடியிருக்கும் எங்களுக்கு இது கடவுளின்  மேலதிக அநுக்கிரகம். 

எங்களது பக்கத்து அனெக்ஸில் திடீரென குரல்கள் முளைத்திருந்ததை இந்தப் “புறப்படுதல்” அமர்க்களத்திலும்   அவதானித்தேன். நறுவிசாக ஒரு பெண்ணின் குரல், அதற்கு முற்றிலும் எதிர்க்கோணத்தில் கரடு முரடான ஒரு ஆணின் குரல். 

நான் கதவை திறந்து விட்டேன். குழந்தைகள் ஹாய் என்று கத்தியபடி படியிறங்கிப்போனார்கள். எனக்கெதிரே ஒருவன் நின்று கொண்டிருந்தான். முழங்காலிடை நீண்டிருந்த அவன் ஆடை  அழுக்கேறியிருந்தது. கண்கள் கரு நீலமாகவும் உதடுகள் தடித்தும் தலைவிரிகோலத்தில் அவன் அனெக்ஸ் முன்றலில் நின்று கொண்டிருந்தான். என்னைக்கண்டதும் ஸலாம் கூறி கையை நீட்டினான். நானும் கைகளை நீட்டி குலுக்கிக்கொண்டேன் .
 அவன் தேகத்தில் ஊறிய வியர்வை முகத்தில் அடித்து வயிற்றைக்குமட்டியது. அனெக்ஸ் முற்றம் நிறைய தாறுமாறாக பொருட்கள் இறைந்து கிடந்தன. 
ஆங்கிலத்தில் சுமாரான அறிவிருந்தது. அவன் பெயர் அப்துல்லாஹ்  என்றான் சூடான்காரன்  உள்நாட்டு யுத்தத்தால் இடம் பெயர்ந்து சவூதிக்கு வந்தவனை  இலங்கையன் ஒருவன் ஏஜென்சியில் வேலைக்கு சேர்த்துவிட்டதாக சொன்னான்.

 எங்களது உரையாடல் கேட்டு உள்ளறைக்குள்ளிலிருந்து ஒரு முகம் திடீரென வெளிப்பட்டு அதே வேகத்தில் உள்ளே மறைந்தது. அழகான கவர்ச்சியான முகம். மின்னலைப்போல் வந்த மாத்திரத்திலேயே தன் அழகையும் ஒளிர்வையும் வாசலில் உமிழ்ந்து விட்டுச்சென்றது. சூடான்காரனின் மனைவிதான். அக்கணத்தில் பார்த்த அவள் முகத்தில் துயரத்தின் நிழல் படிந்திருந்தது. 

“லைலா கண்ணாடியை விழுங்காம வா! பிள்ளங்க கீழ பெய்த்தாங்க” உள்ளே பார்த்து குரல் வைத்தேன். சற்று நாழிகைக்குப்பின் அவள் உதடுகளை சுழித்து பழிப்புக்காட்டியபடி வந்தாள்.

 என்னிடம் சாவியை திணித்து உள்ளங்கையில் நிமிண்டிவிட்டு படியிறங்கிப்போனாள். அவள் விட்டுச்சென்ற வாசம் வீடு கொள்ளாமல் வெறியுடன் வெளியேறி என் நாசியில் நிறைந்து கிறங்கடித்தது. 

உள்ளே ஒரு தரம் ஜன்னல் கதவுகளை சரிபார்த்து தாழ்ப்பாளிட்டேன்.வெளிக்கதவை மூடிக்கொண்டு கிளம்பும் தருணம் அனிச்சையாக முன் அனெக்சின் உள்ளறை ஜன்னல் திறந்திருப்பதை கவனித்தேன்.

நிலவு தோகைவிரித்து  மஞ்சத்தில் கிறங்கிக்கிடப்பதைப்போல் அவன் மனைவி கட்டிலில் சரிந்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.  பர்தா திரை விலகிக்கிடந்தது. அவள் முகம் இன்னும் மிகத்துலாம்பரமாக பிரகாசித்தது.

 முழங்கால் வரை ஏறிய துணியை விலத்த மனமின்றி அவள் சயனத்திலிருந்தாள் மயிர்கள் அற்ற உறுதியான வெள்ளைப்பாதங்கள். உருண்டு திரண்டு  தந்தம்போல் அசைவற்றுக்கிடந்தன.

அழகிய அவள் முகம் நித்திய கவலையில் துய்த்திருந்தது.அந்த அழகில் இனம் புரியாத ஏக்கம் துருத்திக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.  சூடானியன் உள்ளே அலுவலாக இருக்கின்றான் போல், சாமான்களை ஒழுங்குபடுத்தும் சப்தம்  கேட்டது 

2

வெளியே மழை கொட்டிக்கொண்டிருந்தது.பாதி நனைந்தபடி அலுவலக வேனில் வந்து இறங்கினேன். எங்களது அனெக்ஸ் கதவு விரிந்து கிடந்தது. சப்தம் காட்டாமல் அறைக்குள் சென்றேன். 

சமையலறைக்குள் லைலாவின் சிரிப்பொலி கேட்டது. பிள்ளைகளுடன் விளையாடுவாள் அதற்காக இப்படி கதவைத்திறந்து கொண்டா. கோபத்துடன் அடுத்த அறைக்குள் சென்றேன். பிள்ளைகள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார்கள்.

லைலா என்றேன் காட்டமாக. “இதோ வாரன்“ என்றவளின் குரலுடன் புதிய குரல் ஒன்றும் இணைந்து வந்தது. 

“அவங்க வந்துட்டாங்க போல அப்ப நான் நாளைக்கு வாரன்  “

 கலவரத்துடன் அந்தக்குரலுக்குரியவள் திடுதிப்பென வேகமாக மறைந்து சென்றாள்.

முகமெல்லாம் பூச்சொரிய லைலா என்னெதிரே நின்றாள். அவள் முகத்தை சுண்டியபடி    “அய்ட்டம் “ யாரென்றேன்.  

“சும்மா பகிடி பண்ணாதீங்க பாவம் அந்தப்புள்ள,அவதான் அந்த சூடான்ட வொய்ப், 18 வயசுதான். அழகு இருந்து என்ன செய்ய அதுவே அவளுக்கு ஆபத்தாகி விட்டது “.

 லைலா அவன் மனைவியின்  புராணம் பாடத்தொடங்கி விட்டாள். “ரிங்கோவில ஏதோ ஒரு ஊரு சொல்லிச்சி, வாப்பா இல்லியாம் நாலு குமருகளாம் இவ மூத்தவ, வெளிநாடு போகப்போனவள அங்கு வேல செஞ்ச இவன் பார்த்தானாம், மத்த குமருகளுக்கு வீடு கட்டித்தாரன் இவள இவனுக்கு கட்டித்தரச்சொல்லி கேட்டிருக்கான் “

“ உம்மாக்காரி சரியென்டுட்டாள். இவள் எவ்வளவோ கெஞ்சி அழுது பார்த்திருக்காள் தங்கச்சிமார நெனச்சிப்பாருண்டு உம்மா இவள அவனுக்கு கட்டி வச்சிட்டாளாம் “. 

“அவனும் பெருந்தொகை பணம் கொடுத்து தங்க்ச்சிமார கரையேத்த உதவி செஞ்சானாம். “

“இவள எங்கயும் வெளியில கூட்டிப்போகமாட்டானாம் அப்படி போரண்டாலும் முகத் மூடனுமாம் யாரடோயும் பேசப்படாதாம் பொம்புளயளோடயும் பேச வுடமாட்டானாம் “. 

“ எல்லாம் அறைக்குள்ளதானாம். அவன்ட ஒபிசிஸில வேல பார்க்கற ஒரு பையன் இருக்கானாம் அவனுக்கிட்ட மட்டும்தான் கறி வாங்கி அனுப்புவானாம். அதுவும் ஜன்னலத்துறந்து சாமான வாங்கிட்டு  அனுப்பிடனுமாம். “

 “அந்தப்புள்ள சொல்ரதப்பார்த்தா பாவமா இரிக்கி இப்பயும் அவனுக்கு தெரியாமத்தான் வந்துட்டு போவுது. இவன் வெளியூர் போய்ட்டனாம் “. 

லைலாவின் முகம் இருண்டு வருவதை கவனித்த நான் அவளை அநாயசமாக அணைத்தபடி 

“ இப்பயாச்சும் ஐயாவோட அரும விளங்கினாச்சரி “  என்றேன். 

அவள் என் அணைப்பிலிருந்து விடுபட்டு, க்கூம் என மறுகியபடி  சமையலைறைக்குள் நுழைந்தாள்.

3

இப்படித்தான் ஒரு நாள் பாத் றூமில் ஒரு பிராவும் உள்ளாடையும் ஈரம் சொட்டச்சொட்ட தொங்கியது. அலுவலகத்திலிருந்து வந்த நான் முகம் கழுவப்போன சமயத்தில் இதைக்கவனித்தேன். லைலா இப்படியெல்லாம் போட மாட்டாளே. லைலா இது வெல்லாம் என்ன என்றேன் .

“ ச்சு இது என்ட   இல்ல பக்கத்துல சூடான்காரன்ட அவட“ . என்றவளின் முகத்தில் செம்மை படர்ந்தது. “

  “அவன் இதயெல்லாம் போட வுடமாட்டானாம் போட்டாலும் கழுவி அவன் கண்ணுல படுகுறமாதிரி போடப்போடாதாம். அதான் இஞ்ச வந்து கழுவினா நீங்க வாரதப்பார்த்ததும் ஓடியிருப்பா “.


சூடான் நாட்டுக்காரன் எங்களண்டை வந்து இரண்டு மாதம் இருக்காது. அகஸ்மாத்தமாக சந்திக்கும் வாய்ப்புகள் வாய்த்தன. ஒரு ஸலாத்துடன் உறவை துண்டித்துவிடுவேன். இந்த இடைவெளிக்குள் அவன் மனைவியின்  அழுகை சத்தம் அடிக்கடி என்னை சங்கடப்படுத்தியது.

 இரவில் பகலில், சில நேரம் மாலை நேரங்களில் அவளின் விசும்பல்கள் என்னை கலவரப்படுத்தின. ஏனென்று அவனை கேட்கவும் அச்சம். ஏனெனில் அவன் ஒரு முரடனாய் இருந்தான் எதற்கு வம்பு என்று காதுகளை மூடிக்கொண்டு இருக்க பழகிவிட்டேன்.

என் மனைவியிடம் பேசுவதை எப்படியோ அறிந்து கொண்ட சூடானியன் அவளை உள்ளே வைத்து மூடி விட்டு சாவியை தன்னுடன் எடுத்துச்சென்றான்.

அவனது பாஷை கூட இவளுக்கு சரியாக தெரியாது. கணவன் மனைவியருக்கிடையில் இருக்கும் ஊடல் சிணுங்கள், நையாண்டிப்பேச்சுகள், படுக்கயறை இரகசியங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும்  அவள் சுவர்களிடம் மட்டும்தான் பேசலாம் .காமக்கிளர்வில் குறும்பு பேசுவதற்கென அவளுக்கு துணையாக இருப்பது இரண்டு குருவிகள்தான் அதுவும் அவள் சமையலறையில் கூடு கட்டி வாசம் செய்கின்றன. 

கதையோடு கதையாக  இதையெல்லாம் என் லைலாவிடம்    சொல்லி அழுதிருக்கின்றாள். நீக்ரோ வெளியே சென்று விட்டு வரும்போதெல்லாம் அவளை புனர்வது வழக்கமாம். அவள் உணர்ச்சிகள் பற்றி அவனுக்கு அக்கரையில்லை. 

“நூறு நூநு போர்க்குதிரைகள்  எதிரொலிக்கக் கணைத்தபடி ஃ நிலம் உடைத்துப்பெயர்கின்றன.
பின் கழுத்தில் புதைந்து மோகிக்கும் வெப்பத்தில் ஃ கலச்சுவர்கள் வெடிக்கின்றன…..
மயிர்க்குழாய்கள் புடைக்கின்றன….உயிரணுக்கள் இரைகின்றன.
திமிறுகின்ற பேராறு மலைகளைத் தகர்க்கின்றது
அலறியடித்துக்கலைகின்றன இராட்சதப்பறவைகள்
மாரிடை ஃ தொப்புள் நடு ஃஇடைவழியே சீறிப்பிரவகித்து பாய்ந்து ஓய்கிறது பாற்கடல்.
பிளந்திருந்த பாறைகளில் ஃ மதர்த்திரந்த புற்களின் மேல்  குளிர்கிறது சூரியன்…
பேரமைதி ஃகடல் ஓய்ந்துஃ மலை அடங்கி ஃஉடல் அயர்ந்து பேரமைதி.ஃ

நீ அப்போது ஃகோடியில் ஒரு பூவாய் மலர்ந்திருந்தாய்.. “


என்.ஆத்மாவின் கவிதையில் வரும் அந்த அந்தர முயக்கம் போன்றல்லாவிடினும் மிகச்சாதாரணமாய் கூட அவன் அவளை இன்பத்தின் படித்துறைக்கு அழைத்து வரத்தயாரில்லை .

 சூடான் அவளை அலாக்காக தூக்கி சுவரில் சரித்துக்கொண்டு புனர்வானாம். சில நேரம் சமைத்துக்கொண்டிருக்கும் போது சமையலறை மேசையில் மல்லாக்கப்போட்டு சிதைப்பானாம். 

கள்வன் போல் பதுங்கி வந்து அவள் உறங்கும் தருணம் பார்த்து உறவு வைத்துக்கொள்ளவும் செய்வானாம். படுக்கையில் அசையாமல் உறைந்திருக்கும் அவள், தன் மேல் கவிந்திருக்கும் அவனின் காவி படிந்த பற்களின் துர்நாற்றத்தை சகித்துக்கொண்டு குமைந்து அழுதிருக்கின்றாள் . 

ஜன்னல்களையும் மூடி கதவையும் இறுக அடைத்த விட்டு செல்லும் நீக்ரோவின் மேல் நான் கடுப்பாய் இருந்தேன். அவனை பழிவாங்க தக்க தருணம் பார்த்துக்கொண்டிருந்தேன். 

என் முறைப்பை புரிந்து கொண்டவன் போல் அவனும் பதிலுக்கு  முகத்தை தொங்க போட்டவாறு என்னைக்கடந்து செல்வான்.

மூன்று மாதங்கள் கடந்திருக்கும். அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் நாழிகையில்  சூடானை வழியில் பார்த்தேன். அவன் பின்னால் அவள் சென்று கொண்டிருந்தாள். வெளிக்காற்றை சுவாசித்த உற்சாகம் அவளில் கரை புரண்டதாக தெரியவில்லை கால்லை இழுத்து இழுத்து விந்தி விந்தி நடந்து வந்தாள்.

மூடிய முகத்திரைக்குப்பின் சலனமற்ற இரு விழிகள் என்னை ஊடுருவி தாக்கின. ஏக்கம் நிறைந்த பரிதாபத்திற்குரிய அந்த விழிகளின் இறைஞ்சுதல் என்னை சுட்டெரித்தது.

என்னை எப்படியாவது இந்த மிருகத்திடமிருந்து விடுதலை செய்யுங்கள் என்ற கெஞ்சல் அது. குறைந்தது அவனின் அடாச்செயல்களை தட்டிக்கேளுங்கள் எனக்கு ஆறுதலாக இருக்கும் என்ற நப்பாசையின் வெளிப்பாடாக அந்தப்பார்வை. 

பூசாரியின் பின்னால் இழுபட்டு போகும் பலியாடாக அவள் போய்க்கொண்டிருந்தாள். இவனுக்கு பெண் கொடுத்த இலங்கைத்தாய் மீது சினமேறியது.

வீட்டுக்குள் நுழைந்ததும் லைலாவின் வீங்கிய முகம் என்னை வரவேற்றது. விபரீத கற்பனைகள். ஒரு கணத்தில் தேகம் அதிர ஆடிப்போனேன். ஆதுரமாய் அவள் தலையை கோதியபடி “ என்னம்மா“  என்றேன். 
“அவள் எதிர் வீட்டைக்காட்டி அவளுக்கு இன்று அபேஷன் ஆகிவிட்டது. அந்த கருத்த நாய்  அடிவயிற்றில் உதைத்தானாம் “.

 இந்த அபார்ட்மென்ட அதிரும்படி அவள் கூக்குரலிட்டாள். துடியாய் துடித்தாள் .

“இரத்தம் கசியும் ஆடையை அள்ளிக்கொண்டு என்னிடம்தான் ஓடி வந்தாள். அந்த நாய் அவள் முடியை கொத்தாகப்பிடித்து இழுத்துக்கொண்டு போனான். 
ஆஸ்பத்திரிக்கு  போகப்போவதாக “ஹொஸ்பிடல் ஹொஸ்பிடல் “ என்று என்னைப்பார்த்து கூவி விட்டு இவளை இழுத்துப்போனான். 
அவளோவெனில்  “ என்  புள்ள, என் புள்ள“ எனப்பினாத்தியபடி இரத்தம் தோய்ந்த உள்ளாடையை பார்த்தபடி கதறிச்சென்றாள்.  
    “ பாவம் எந்தப்பொண்ணுக்கும் இப்படி வரப்படாது“.  

நான் லைலாவின் மனம் பேதலிப்பதை உணர்ந்தேன். இச்சம்பவத்திற்குப்பின் நீக்ரோ எனது அயலானாக இருக்கப்படாது என உறுதி பூண்டேன் அனெக்ஸ் கொடுத்த கம்பனிக்காரர்களுக்கும் அவனில் திருப்தி இல்லை. இதையும் காரணம் காட்டி சூடானியனை இரண்டு நாளைக்குப்பின் வேறிடத்திற்கு பெட்டிகட்டவைத்துவிட்டேன்.

 சில காலம் லைலா அவள் நினைவாகவே புலம்பிக்கொண்டிருந்தாள். படுக்கயறை வரை அவள் புலம்பல் தொடர்ந்து பின்  திடீரென நின்றும் விட்டது. காலம் என்ற மருத்துவன் மனக்காயங்களுக்கு மருந்து போட்டு ஆற்றுவதில் வல்லவன் என்பதை லைலாவுக்கும் நிரூபித்துக்காட்டினான்.

எனினும் நான் மன உபாதைகளிலிருந்து தப்பிக்க எத்தனித்துக்கொண்டிருந்தேன். மனசின் இரகசிய அறைகளில் அந்தக்கண்கள் ஒட்டிக்கொண்டு என்னை பயமுறுத்தின. ஓரு பெண்ணின் அபயக்குரல் என் கனவுகளை கட்டிப்போட்டுப்பயமுறுத்தியது. 

அனெக்ஸில் நுழையும்  காற்றுமுழுக்க அந்தக்குரலை காவியபடி அலைவதான பிரேமை என் தூக்கத்தை கலைத்தது. அவளின் அந்திமப்பார்வையும் அவனின் பின்னால் இழுபட்டுச்சென்ற அவளின் பரிதாப தோற்றமும் என் நினைவின் கடைக்கோடி வரை எகிறி வந்து சித்திரவதை செய்தது.
 காற்றைக்கூட சுவாசிக்க முடியாமல் அடைத்து வைத்து என்னெதிரே ஒரு உயிரை கொன்றுள்ள பாவியை நான் சும்மா விட்டிருக்கின்றேன் என்பதை நினைக்கும் போது என் விலா எலும்பு ஒடுங்கியது.

எங்கள் விலா எலும்புகளை காப்பாற்றவியலா என் கோழை மனசை காறி உமிழ்ந்து தன் கால்களின் கீழ் மிதித்து விட்டுச்சென்ற அவள் விழிகளின் ஏளனத்தை என்னால் பொறுக்க முடியவி;ல்லை. இந்த மன அவசம் எத்துனை காலம் என்னை துன்புறது;தியதோ நானறியேன்.

4

ஓரு இளவேனிற்காலம். இயற்கை எழில் கொஞ்சும் கண்டி நகருக்கு அலுவலக நிமித்தம் சென்றிருந்தேன்.  எனது தங்குமிடம் வழக்கம் போல் ரிவசைட் ஹோட்டலில் புக்காகி இருந்தது. 

மாலையில் உலா போகும் எண்ணத்தில் தெப்பக்குளப்பக்கம் நடக்கவாரம்பித்தேன். முன்பு போல் லேக்சைட் அமைதியாக  இல்லை.ஜனப்பிரளம் இதற்குள் யாரை விலத்தி எப்படி நடந்து சமாளிப்பது. பேசாமல் நடக்கும் நிய்யத்தை கைவிட்டு விட்டு  சீமென்ட பெஞ்சில் அமர்ந்து குளத்தை அளக்கத்தொடங்கினேன். 

 கரையோரம் துள்ளித்துள்ளி விளையாடும் மீன் கும்பல்களின் மேல்  ஆசை ஆசையாய் வந்தது. நன்கு கொளுத்த மீன்கள். தூண்டிலும் வலையும் ஸ்பரிக்காமல் புத்தனின் காருண்யத்தில் மதர்த்த அவைகளின் திமிறை அடக்க வேண்டும் என்ற என் வேட்டைப் புத்தி மேலெழுந்தது .

சுற்றும் முற்றும் பார்த்துப்பார்த்து அலுத்த கண்கள் எதேச்சையாக வலது புற பெஞ் பக்கம் சென்றதும் நிலை குத்தி நின்று விட்டது.

 சிமென்ட பெஞ்சில்  ஒரு ஜோடி உல்லாசமாக இருந்தது. அந்தப்பெண் அவன் காதண்டை குசுகுசுக்க அவன் அவள் மொன்னியைத்திருகி செல்லமாக கடிந்து கொண்டிருந்தான்.

 .அவளின் முகத்தில் பட்டுத்தெறித்த மாலைச்சூரியனின் கதிர்கள் அவளுடைய அழகிய முகத்தை மேலும் மெருகூட்டிக்காட்டியது. நெடு நேரம்  அவர்களை பர்த்திருக்கவும் முடியவில்லை. லஜ்ஜையாக இருந்தது.

 குளத்தையே வெறித்தபடி அந்த ஜோடியை நினைவுக்கு கொண்டு வர பிரயத்தனம் எடுத்துக்கொண்டிருந்தேன் . தண்ணீரில் தெரிந்த பிம்பத்தில் என்னருகே ஒரு உருவம் நிற்பதைக்கண்டு திடுக்கிட்டு திரும்பினேன். 

சற்றைக்கு முன் பெஞ்சில் அந்தப்பென்னுடன் காதல் கவிதை படித்துக்கொண்டிருந்தவன்.  என்னைபார்த்து முறுவலித்தபடி 

“ஹலோ சேர் என்னத்தெரியலியா, நீங்க எப்படி இஞ்ச? “

 என் குழப்பங்களில் கல்லெறிந்து விட்டு, அவன்; உதடுகளில் புன்னகையை உலரவிடாமல் பிடித்துக்கொண்டிருந்தான். 

“ஓபிஸ் விஷயமா இங்கு வந்தனான். தம்பி உங்கள் நல்லா பரிச்சயம் ஆனா எங்கயன்டு இப்ப பல வருஷமிருக்குமி;ல்லயா? “

 நான் தடுமாறினேன்.

“ஓம் சேர் பல வருஷங்கள்தான், உங்கட அனெக்சுக்கு பக்கத்தில ஒரு சூடான்காரன் இருந்தான் தெரியுமா“?

மர்ம முடிச்சுக்கள் அவிழ்ந்து தறிகெட்டு ஓடத்தொடங்கியது. 
சூடானின் வீட்;டுக்கு வரும் அவனின் நம்பிக்கைக்குறிய ஊழியன். அப்படியெனில் அவள் ?  சே அவளாக இருக்காது .அவள் நிச்சயம் அவனின் இம்சை தாங்கேலாமல் ஒரு புனர்பொழுதில் செத்துப்போயிருப்பாள். 

“தம்பி கலியாணம் கட்டிட்டிங்க போல“.

“ ஓம் சேர் இப்ப ரெண்டு புள்ளயும் இருக்கு, பொண்ணும் ஒங்களக்கு தெரிந்தவதான் “

“எனக்கு தெரிந்தவளா? “வியப்பில் விழிகள் அகன்று விரிந்தன.

“ஓம் சேர். “

“அந்த சூடாகாரனின் மனைவிதான் “

இப்போது அவளை கூர்ந்து பார்த்தேன் அதே விழிகள்.ஏக்கமுடன்  மேவி  என்னைப்பார்த்த   அந்த விழகளா இது தடுமாறிப்போனேன். 

நழுவி குளத்தில் விழுந்து அமிழ்ந்து போனேன்.சர்வாங்கமும் ஒடுங்க உடல் சிறுத்து குறுகியது.  அவமானத்தால் குனிந்தபடி குளத்தை வெறித்துக்கிடந்தேன். அவன் மகிழ்ச்சியில் சொல்லிக்கொண்டு போனான் 

“ஒரு நாள் சாமான்கள் கொடுக்க என்ன அனெக்சிக்கு அனுப்பினான் சேர் இவ என் கைய பிடிச்சி அழுதா என்னய காப்பாத்தி அவட ஊருக்கு கொண்டு போய் விடச்சொன்னா. “ 

“இல்லாட்டி தற்கொலை செய்வேன் என அடம்பிடித்தா வேறு வழி இல்ல அவட பரிதாப கதயக்கேட்டன் வாழ்வு கொடுத்தன் எல்லாம் சட்டப்டிதான் சேர். “

அவன் எனக்கு முன்னே நீண்டு போய் ஆகாசத்தை தொட்டு நின்றான்

தண்ணீரின் பிம்பத்தில் அவளின் நடை அசைந்து, என் திசைநாடி வந்தது. நீக்ரோவின் இரும்புப்பிடியிலிருந்து விடுதலைப்பெற்ற மிடுக்கு நடை. என்னுடன் பேசப்போகிறாள்.

அல்லது நான் நாக்கைபிடிங்கிக்கொள்ளுமளவிற்கு கேள்வி கேட்கப்போகிறாள். அன்று நான் கதறக்கதற கூச்சலிட்டும்  என்னை ஏன் நீங்கள் காப்பாற்றமுன்வரவில்லை என்ற கேள்வியுடன் என் முகத்தை வெறுப்புடன் நோக்கப்போகிறாள் என்றெல்லாம் கற்பனித்தபடி நீருக்குள் ஆடும் அவள் உருவத்தை வெறித்தபடி உறைந்திருந்தேன்.

.அவள் கணவனின்  கையைப்பிடித்து 
“வாங்க போவம்,“மஃரிபாயிட்டு“  என்றவள் அவனை இழுத்துக்கொண்டு போனாள். 

அவன் சங்கோஜமாக அவளை இழுத்தபடி 

“ஹமீதா சேர  தெரியுமா இவங்கட  பக்கத்து அனெக்ஸிலதான் நீங்க ஆரம்பத்துல இருந்திங்க. “ அவன் அறிமுகம் தேவயில்லை என்பது போல் அவளின் குரலில் அந்த ஏளனமும் அலட்சியமும் வெளிப்பட்டது.

 “ஓ தெரியுமே ! “





09.10.2005 இரவு 7.45
பிரசுரம் வீரகேசரி டிசம்பர் 

Wednesday 24 September 2014

புத்தரின் நிழல்

சிறுகதை
01

35வருடமிருக்குமா? ஆம் அதை விடக்கூடினாலும் குறைவதற்கு வாய்ப்பில்லை. தயாவதி டீச்சர் வாசலில் நின்றிருந்தா.முகத்தில் சுருக்கம் விழுந்திருந்தாலும் முகம் களையாகவே மின்னியது. இளமையில் அவவின் ‘தெத்துப்பல்’ சிரிப்பில் மயங்காதவர் யாருண்டு. டீச்சரின் அந்தப்பல் இன்னும் விழாமல் வசீகரித்துக்கொண்டிருந்தது.

கிறவல் வீதிகளை ‘காபட்’ சாலைகளாக மாற்றிக்கொண்டிருக்கின்றது கிழக்கின் வசந்தம். அது உருவாக்கிய புத்த விகாரைக்குள்ளிலிருந்து ஒலிக்கும் ‘பன’யில் ‘அபே ரட்ட’ என்ற இறுமாப்பு கசிந்து காற்றில் மிதந்து கொண்டிருந்தது. பிரபாகரன் என்ற மாயை கலைந்த பின் துளிர்க்கத்தொடங்கிய கிழக்கின் வசந்தத்தில் தயாவதி டீச்சர் போன்றோர் தனியாளாய் வந்து நின்று களை கட்டவும் பழைய இடத்தை தக்க வைக்கவும் இயலுமாயிருக்கிறது.

‘ஆயுபோவன் என்றேன்’

‘ஆயுபோவன்’  டீச்சரின் புருவங்கள் ஆச்சரியத்தி;ல் நெரிந்தன. கவுத ? என்றா.

‘மம முபாரக்’

‘என்னத்தெரியுமா டீச்சர்?’

தடுமாற்றத்துடன் ‘நே நே ’ என்றா. 

‘நான் ஒங்களுகிட்ட சிங்களம் படிச்ச டீச்சர்’ .

‘எந்த ஸ்கூல்?’

‘ஓட்டமாவடி ஸ்கூல்’

‘அப்ப நீங்க தாருட கிளாஸ் செல்லிங்க, வயசு பெய்த்துதானே புதா, நினப்பு வரமாட்டன்’

‘நாஸர், நவ்சாத்,பைசால் , கைருன்னிசா இஸ்ஸதீன்..

‘ஓவ் ஓவ் தன்னவா இப்ப தெரியும்’

டீச்சரின் விழிகள் தீபம் போல் ஒளிர்ந்தன. இதழ் விளிம்பில் மந்தகாசம் பிரவகிக்க ‘வாடிவென்ட புதா’ என்றா.

‘எங்க முகமெல்லாம் பெரிசா டீச்சருக்கு நினப்பிருக்காது’ பீடிகை போட்டேன்.
‘எய் புதா ?’ 

‘ஓங்களுகிட்ட படிச்சத விட சிங்கள பாடமென்டா புத்தகத்த தூக்கிட்டு முன்னுக்கிருந்த யாசீன் பாவாட தோட்டத்துக்குள்ள நாவல் பழம் பொறுக்கப்போனதுதான் மிச்சம்’

டீச்சர் வாய் விட்டுச்சிரித்தா.ஆளை கிறங்கடிக்கும் தெத்துப்பல்,குழி விழும் கன்னங்கள். டீச்சரின் இதழ் கோடியில் பூத்த இள நகை வாடாமல் அப்படியே நின்றது.

85க்குப்முன் டீச்சர் நாவலடியில் வாழ்ந்தது என் நினைவில் முட்டியது.நீண்டு வியாபித்திருந்த மரக்கறித்தோட்டம்.வீதியோரக்கடை,கடை முன்றலில் படர்ந்திருக்கும் போகன்விலா. 

புளியந்தீவுக்கு சரக்குகள் ஏற்றிக்கொண்டு வரும் லொறிகள் டீச்சரின் கடையில் தரித்து இளைப்பாறிப்போகும்.  ஓட்டமாவடி,மீராவோடை, வாழைச்சேனைப் பகுதியிலிருந்தெல்லாம் பெரிய நானாமார்கள் டீச்சரின் கடையருகே மாலை நேரம் சைக்கிள் உலா வருவர். 

டீச்சரிடம் கல்வி கற்றவர்கள் டியூசன் எடுத்தவர்கள் எல்லோரும் வருவார்கள். டீச்சரின் மேல் அவர்களுக்கு அலாதியான பிரியம். டீச்சரின் தோட்டத்துப்பசளிச்செடிகள்போல் வீட்டுக்குள் மதமதவென்று வளர்ந்து நிற்கும் இரண்டு பருவக்குட்டிகளுக்காகத்தான் அந்த போக்குவரத்து நிகழும் என்பதும் டீச்சருக்குத்தெரியும். பருவத்தின் விளிம்பில் பார்ப்போர் மனதை நுள்ளி எடுக்கும் கட்டுடல்காரிகள். பிள்ளைகளில் டீச்சரின் விழிகள் கவனத்துடன் இருக்கும். 

‘டீச்சர் எப்ப வந்தீங்க?

நான் டீச்சரின் பழைய தோட்டத்தின் நுழைவாயிலில் நின்றபடி வினவினேன்.
‘நாம வந்து மூனு நாள் ,கடய துப்பரவாக்கனும், பழைய காணிய திருப்பி எடுக்கனும்’ 
டீச்சரின் பழைய காணியில் முஸ்லிம் ஆக்கள் இருபத்தைந்து வருஷமாக குடியிருக்கின்றார்கள். வீடு கட்டி பிள்ளைப்பெற்று குடியும் குடித்தனமுமாக இருப்பவர்களை டீச்சர் எழுப்பி விட்டு காணியை எடுத்துக்கொள்ளப்போகின்றா என்ற நினைப்பே மனதில் தைத்துக்கொண்டிருந்தது.

அவர்கள்தான் இந்தக்கிராமத்தின் இருப்பை  தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள்.ஓடியும் ஒளிந்தும் மீண்டும் உயிர்த்தெழுந்து மண் மீட்புப்போரில் ஜெயித்தவர்கள்.பள்ளியை ஆமி ஆக்கிரமித்து ‘கேம்’ அமைக்கும் வரை உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்தவர்கள்.
பழம் உண்பதற்கு வந்து நிற்கும் பலரில் தயாவதி டீச்சரும் ஒருவர்.

‘இப்ப டீச்சர் என்ன செய்றீங்க?’ பொங்கி வந்த துக்கத்தை மென்றபடி நான்..

‘பென்ஷன் வருது புதா’

‘அப்ப டீச்சருக்கு இஞ்ச இரிக்கிற எண்ணமா?’ 

என் அடி மனசில்  பல வர்ணக்கோலங்கள் சிதறி தாவியோடின.குன்றின் மேல் பட்டுத்தெறித்து குதித்துப்பாயும் நீரோடையின் தாளம் போல் எண்ணங்களும் நிலையின்றி தத்தளித்தபடி..

அதை வடித்து எடுப்பது போல் டீச்சரின் குரல் எனக்குள் அதிர்ந்து அடங்கியது.
‘இஞ்ச வந்து வந்து போகனும். இது நம்மட இடம்தானே’
!
‘நம்மட’ என்பதில் ரீச்சரின் ‘அபே ரட்ட’ மிகைத்திருந்ததை கவனிக்கவே செய்தேன். 

டீச்சரின் கையால் வகை வகையாக உணவுகள் சாப்பிட்டிருக்கின்றோம்.தோட்டத்தில் உட்கார வைத்து சோளகம் உடைத்து அவித்து தருவா. உப்பில் ஊறிய சோளகக்கதிரின் சுவை குட்டி நாக்கில் ஊறித்திளைத்து சலாம் போடும். கச்சான் விளையும் காலத்திலும் அப்படித்தான்.

அந்த தோட்டத்தை துவம்சம் செய்யும் சில பச்சைக்கிளிகள் குருவிகளுடன் எங்களின் குறும்புத்தனங்களும்..

காருண்யம் கசியும் டீச்சரின் விழிகளை ஏறிட்டு அளக்கி;ன்றன என் விழிகள். புத்தரின் மந்தகாசம் போல் சதா மினுங்கும் அந்த விழிகள் சாயம் போய் வெளுத்திருப்பதைப்போல் சோர்வுற்றிருந்தது. கருமணிகளின் பின் மௌன வாளின் கூர்மை பதுங்கியிருப்பதைப்போன்ற பிரமை.

‘சே… என்ன இது டீச்சரைப்பற்றி இப்படியா மட்டமாக…. மனம் அலுத்துக்கொள்ள,டீச்சரைப்பார்க்கிறேன்.
‘புதா தே பொன்ட’ பனங்கருப்பட்டித்துண்டுடன் ஆவி பறக்கும் ‘கஹட்ட’யை நீட்டியபடி நிற்கும் டீச்சரின் வதனத்தில் மலர்ச்சிதான் தெரிந்தது. ‘பொஹம  ஸ்துதி’  டீச்சர் என்றேன்.
என் அருகாமையில் அமர்ந்து கொண்டு டீச்சர் கதைத்துக்கொண்டிருந்தா.

02

ஒரு மழைக்காலத்தின் மாலை நேரம் எனது தோட்டத்திற்கு செல்வதற்காக புறப்பட்டேன். மழையின் சீதள முத்தத்துடன் வீசியது காற்று. மரங்களில் வந்தமர்ந்து குருவிகள் கீச்சிட்டபடி தானிய வயல்களை குறிவைத்திருந்தன.ஈரமும் சகதியுமாக பூமி ஏகத்துக்கும் சொதசொதத்தது. வழமையாக பாவிக்கும் கிறவல் வீதி, மழைக்கு இடிந்து சிதிலமாகிவிட்டது. குன்றும் குழியுமாகி காட்சி தரும் அதில் பயணிக்கவே முடியாது. மெயின் ரோடில் பைக்கை திருப்பினேன். இருபது வருடங்களுக்குப்பின் நாவலடி பள்ளிவாயலை விடுவித்திருந்தது இரானுவம். நான் வயலுக்குப்போகும் தருணங்களில் ஒரு பிளேன்றி குடித்து இளைப்பாறிப்போகும் பெரிய மரங்களைக்காணவில்லை. தறிக்கப்பட்ட அடிக்குற்றிகளில் சில பெரியவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 

லாலும் அங்குதான் இருந்தான். டீச்சரின் தூரத்து உறவினன்.பக்கத்துக்காணியில் மழைக்காலத்தில் சேனை செய்ய வந்திருப்பதாக டீச்சர் அன்று பேச்சு வாக்கில் சொன்னது நினைவில் முட்டியது. எனக்கும் ஒரு பிளேன்றி குடிக்க வேண்டும் போல் இருந்தது. தறிக்கப்பட்ட மரக்குற்றி ஒன்றில் அமர்ந்து கொண்டேன். லால் என்னை அடையாளம் கண்டு கொண்டான் அவனே பிளேன்ரீக்கு ஓடர் கொடுத்தான். 

‘ஆமிகாரங்க உங்கட பள்ளிய தந்துட்டாங்கதானே இனி ஒங்களுக்கு சந்தோஷம் இல்லியா? என்றான் பள்ளியை நோக்கியபடி.
‘ஓம் லால் நாங்க நினைக்கவே இல்ல இது கிடைக்கும் எண்டு குரலில் மகிழ்ச்சி பொங்க கூவினேன்.

‘இப்ப சிவில்தானே. எல்லாம் சட்டப்படி நடக்கும். எங்கட ஆக்கள் முன்னம் இருந்த காணி துண்டுகளுக்கெல்லாம்  இப்ப ‘போமிட்’ வந்திடுச்சி நாங்க இஞ்ச வந்து பிசினஸ் செய்ய நெனச்சி இருக்கம். உங்கட சப்போர்ட் வேனும் லாலின் விழிகளில் இறைஞ்சுதல் மட்டுமல்ல அதையும் தாண்டி ஏதோ ஒன்று உறுத்துவதை கவனிக்கவே செய்தேன்.

‘சரி லால் நீங்க வாங்களேன்’  பாப்பம் என்றேன் ஒப்புக்கு.

 மாதங்கள் உருண்டோடிவிட்டன.நினைவின் நுனியிலிருந்து உதிர்ந்து விழுந்த பல்லாயிரக்கணக்கான இலைகளில் துளிர்த்து மெருகூட்டும் மொட்டாக  டீச்சரும் அவர் குடும்பமும் புதிதாய முகிழ்ந்தபடி எனக்குள் வேர்விடத்தொடங்கினர். டீச்சரின் காணியை சுற்றி அவவின் பிள்ளைகள் குடியேறிவிட்டனர். மூத்தவளுக்கு இரு பிள்ளைகள் இளையவளுக்கோ மூன்று. அக்காவுக்கு முன் அவளின் திருமணம் நிகழ்ந்து விட்டது. காமண்ட்ஸ் ஒன்றில் தையல் வேலைக்குப் போனவள் அங்கு மேற்பார்வை செய்த சிறில் மல்லியை காதலித்து கரம் பிடித்தாள். அக்கா அப்போதும் படித்துக்கொண்டும், மாலைநேர வகுப்புக்குமாக நேரத்தைக்கடத்திக்கொண்டுமிருந்தாள்.
                              
தங்கை இரண்டாவது பிரசவத்திற்கு அம்மா வீட்டுக்கு வந்தபோது அக்காவின் நிலை பரிதாபமாக இருந்தது.அங்கவீனமுற்ற இராணுவ வீரரின் மனைவி என்ற அனுதாபத்தை தவிர வேறொன்றையும் அவளால் பெறமுடியவில்லை.இரு பிள்ளைகளையும் டீச்சரே கவனிப்பதாக அன்று பேச்சுவாக்கில் கூறியிருந்தா. அந்த அக்காவும் டீச்சரின் அயலண்டையில்தான் இருந்தாள்.லாலின் மனைவியும் டீச்சரின் பெண் பிள்ளைகளும் மார்பு குலுங்கித்ததும்ப குளத்தில் நீராடுவதை ஆரம்பத்தில் ஆச்சரியத்துடனும் முகச்சுளிப்புடனும் பார்த்தவர்களின் விழிகளுக்கு, அந்தக்காட்சிகள் இசைவாக்கமடைந்து விட்டது.

 மாலை நேரத்துக்குளியலில் பாதிமாக்களும் தங்கள் முதுகுப்பின் வழியவிட்ட கூந்தலை விரித்து நீரில் அலசிக்குளிக்கவும் வெயில் படாத மார்புகளை மஞ்சல் வெயிலில் காயப்போடவும் அவர்களுக்கு மனம் கூசவில்லை. இள வட்டங்கள் மாலையில் குளக்கட்டில் கூடியிருந்து பொழுதை போக்கவும், அரசியல் பேசவுமான சவுகரியங்களை காலம் நன்கொடையாகத்தந்துவிட்டு வேடிக்கை பார்க்கின்ற அழகே தனி.

தயாவதி டீச்சரும் நானும் பேசிக்கொள்வது அரிதாகிவிட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான மூத்தவளின் கிடைப்பதற்கரிய நட்புக்கு முன் கற்றுத்தந்த டீச்சர் எம்மாத்திரம் ?

இப்படித்தான் ஒரு மாலை வந்தது.பொன்னிறக்கதிர்கள் மேய்ந்து திரிந்த கத்தரி தோட்டத்தில் நீர் பாய்ச்சியபடி அவள் நின்றிருந்தாள்; மாமரத்தில் சாய்ந்தபடி நான் …. என்ன பேசுகிறோம் என்ற இலக்கற்ற பேச்சு. எதற்கு சிரிக்கிறோம் என்ற வகையறியாக் கும்மாளம். மன வயலில் முற்றிய நெற்கதிர்களின் நறுமணமாக எங்கள் நட்பு கொத்துக்கொத்தாக…

சௌந்தர்ய லாகிரியில் மிதக்கும்  தருணங்களை    வெட்டிச்சரித்தபடி லால் வந்து நின்றான். என்னையும் அவளையும் இகழ்ச்சியுடன் பார்த்தவனின் முகம் இறுகிக்கிடந்தது. வலிந்து ஒரு புன்னகையை இழுத்து என்னில் வீசினான்.

அவள் ஒப்புக்கு மண் வெட்டியால் மண்ணைக்கிளறிக்கொண்டிருந்தாள்.என் மனமோவெனில் பசளை ஊறிய செடியாக மதர்த்துச்சடைத்து நின்றது.மாலை வெயில் அவள் சுந்தரங்களை மினுக்கிக்காட்டியபடி சரிந்து போனது.

‘ஒங்கள உதய மாத்தயா வரச்சொன்ன,இப்ப அவசரமா ஒரு மீட்டிங் போட்ரிக்கி லால் தகவலை சொல்லி விட்டு அவளை முறைத்து விட்டுச்சென்றான். 

நான் விடை பெறும் போது அவள் இடுப்புத்துண்டை அவிழ்த்து தலையைத்துடைத்தபடி நாளை சந்திப்பம் என்றாள். ஏகத்துக்கும் பயிர்கள் நிறைந்த பூமி குளிர்ச்சியாக இருந்தது.

03

அறிமுகமானவன் என்பதால் என்னை யாரும் ‘செக்’ பண்ணவில்லை. இராணுவ முகாமைச்சுற்றி போடப்பட்ட முள் வேலிகள் அகற்றப்பட்டு முட்கம்பிகள் மூலைக்கு மூலை குவியலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  காப்பரண்கள் அகற்றப்பட்ட மண் திட்டுக்களில் சாவகாசமாக அமர்ந்து கொண்டு சிப்பாய்கள் அரட்டையடித்துக்கொண்டிருந்தனர். 

உதயா மாத்தையாவின் அறையில் நான்கு இருக்கைகள் இருந்தன.என்னை மட்டும் ஒர் இருக்கை காத்துக்கிடந்தது. ஒன்றில் பள்ளித்தலைவரும் மற்றதில் லாலும், இன்னுமொன்றில் ஆர்.டி.எஸ் செயலாளரும் அமர்ந்திருந்தனர். 

‘குட்வினிங் ஸேர்’  என்றேன். 
‘குட்வினிங் டேக்யுவ சீட்’ என்றார் உதயா. 
‘தேங்யூ ஸேர்’.

அவர் வழக்கம் போல் பீடிகையுடன் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசப்பேச அதன் உள்ளிருக்கும் மர்ம முடிச்சுக்கள் அவிழத்தொடங்கின. அவர் விசம் பொதிந்த மையப்புள்ளியில் இருத்தி எம்மை சிக்க வைக்கப்போகிறார் என்ற பனி மூட்டம் கலையத்தொடங்கியது. உடன் இருந்தவர்களுக்கும் இலேசாக புரிய ஆரம்பித்திருக்க வேண்டும். முகங்களில் செழுமை நீங்கி அவர்கள்  தலை கவிழ்ந்திருந்தனர்.

 இந்த மண்னின் எதிர்காலம் குறித்த அச்சம் பிரமாண்டமாய் என் முன் விரிந்து சென்றது.

எமது மௌனங்களை அவர் அங்கீகாரம் என்பதாய் நினைத்து பேசிக் கொண்டிருந்தார். ஓளிந்திருக்கும் மரணக்கரங்களுக்;கு அஞ்சி நாங்கள் மரண தண்டனைக்கைதிகளாய் மின்சார இருக்கைகளில் அமர்ந்தபடி எங்கள் வினாடிகளை கணக்கிட்டுக்கொண்டிருந்தோம்.

சுருக்கம் இதுதான்;:

 இந்த இராணுவ முகாம் இருபது வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. புலிகளிடமிருந்து இந்தக்கிராமத்தை நாங்கள் பாதுகாத்திருக்கின்றோம். இப்போது சிவில் வந்து விட்டது. இந்த இடம் பொதுமக்களின்  காணிகள். இதை திருப்பிக்கொடுக்க வேண்டும் என்ற அழுத்தம் வந்துவிட்டது.

நாங்கள் இஞ்ச இருந்த போது மத நம்பிக்கைதான் எங்களை வாழ வைத்தது. உங்கட பள்ளியக்கூட விடுவிச்சிப்போட்டம், இப்ப  நீங்க அதுல வணக்கம் செய்றிங்க, நாங்க ஒரு அரச மரம் நட்டி வளர்த்து புத்தரை அதன் அடியில வச்சிருக்கம். இருபது வருஷமாக எங்கட மனதுக்கு நம்பிக்கையும் சாந்தமும் தந்த புத்த பகவான்.சக வீரர்களின் சாவுகளை பார்த்துப்பார்த்து மனம் நொந்து போன புத்தர். அங்கங்களை இழந்து இரத்தக்காயங்களுடன் கதறிக்கொண்டு வந்த வீரர்களை அவர் முன் கிடத்தி சிகிச்சை அளித்த போதும் மந்தகாசப்புன்னகையில் ஆறுதல்படுத்திய பெருமான். 

இந்தக்காணி உங்கட ஆக்கள்ர காணி. அவங்கட காணியில அவங்க இருக்கிற உரிமை இருக்கு. என்றாலும் நாங்க இந்த இடத்த விட்டு போனதுக்குப்பொறகு எங்கட புத்தரையும் அரச மரத்தையும் என்ன செய்வீங்க.. ?

நாங்கள் முகாமை விட்டு வெளியே வந்த பின்பும் அந்தக்கேள்வி எனக்கு முன் ஒரு நாயைப்போல் ஓடத்தொடங்கியது.

2010.02.15
பிரசுரம்  காலம் 44  ஜுன்  - 2014

Sunday 3 August 2014

கரை படிந்த துயரம்

நேற்று மாலை ஜம்இய்யதுல் உலமா சபையுடன் பேசுவதற்கென்று சில இளைஞர்கள் வருகை தந்தனர்.பேஸ்புக்கில் குளத்தில் குட்டையில் குளித்து விட்டு படம் போட்டு பிலிம் காட்டும் இளைஞர்கள் போலன்றி நியாயமான கவலை அவர்களின் உள்ளத்தில் குடியிருந்ததை அவதானித்தோம்.

பலஸ்தீன் பற்றியெரியும் போது அங்கு குழந்தைகள் கொத்துக்கொத்தாய் மடியும் போது முஸ்லிம்களாகிய நாம் இந்தப்பெருநாளை இவ்வளவு பகட்டாக கொண்டாடத்தான் வேண்டுமா? இந்தக்காணிவேல் களியாட்டங்களில் ஆண் பெண் கலப்பை ஏன் நிறுத்தவில்லை போன்ற நியாயமான கேள்விகளும் சினமும் அவர்களிடம் இருந்தன.

இளைஞர்களின் மனதில் முஸ்லிம் சமூகத்தின் சீரழிவு குறித்த விழிப்புனர்வு ஏற்பட்டுவிட்டால் இலகுவான மாற்றங்களை சமூகத்தில் கொண்டு வந்து விடலாம்.

பொன்னூஞ்சல் மற்றும் களியாட்டங்களை நடாத்துபவர்களை அழைத்து கல்குடா உலமா சபை பல உபதேசங்களை செய்து எழுத்து மூமாக சில வரையறைகளையும் வழங்கியது.பள்ளிவாயல்களின் நிறுவாகிகளிடத்திலும் வலியுறுத்தியது.யாரும் அதனை காதில் வாங்கிக்கொண்டதாக தெரியவில்லை.

வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் வீதியில் “மேய அனுப்பிவிட்டு“ வீட்டில் ஜாலியாக முடங்கிக்கி்ந்த “ஆண் அசிங்களின்“ இந்த வீரத்தை என்னவென்று நாம் எடுத்துக்கொள்வது.

இலாப நோக்கத்தை மட்டும் குறியாக கொண்டு இயங்கும் களியாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களிடத்தில் முஸ்லிம் சமூகத்தின் மீதான அக்கரையை எதிர்பார்க்க முடியாது.

களியாட்டங்கள் குழந்தைகளுக்கானது. அதனை அவர்கள் அனுபவிக்க கடமைப்பட்டவர்கள்.

பெரியவர்கள் காசாவிற்காக அதனை தவிர்ந்திருக்கலாம்.

அங்கே பிள்ளைகளை இஸ்ரேல் அரக்கர்களிடம் பலி கொடுத்து விட்டு கதறும் தாய்மாரின் கண்ணீரில் பங்கெடுத்திருக்கலாம்.

குறை்நத பட்ச கவலை வெளிப்படுத்த முடியாத எங்களின் சகோதரத்துவ உணர்வை என்னவென்று சொல்ல.?

பொறுப்புவாய்ந்த சமூக நிறுவனங்கள் ,அரசியல் தலைமைகள் இருந்தும் மக்களை வழிநடாத்த முடியாமல் போய்விட்ட நிகழ்வு  கல்குடாவின் வரலாற்றில் கரை படிந்த துயரம்.

தஃவா அமைப்புக்கள் நண்மையை ஏவி தீமையை தடுக்கும் நல்லுபதேசங்களை செய்யலாம். அதிகார மையங்கள் அதனை செயற்படுத்தியிருக்கலாம். 

எதிர்காலத்தில் ஆண் பெண் கலப்பு களியாட்டங்கள் கல்குடா முஸ்லிம்களின் வளரிளம் பருவத்தினரை  அதளபாதாளத்திற்கு அழைத்து சென்று விடும் என்ற எச்சரிக்கையை சமூக ஆர்வலரின் கவனத்திற்கு தருகின்றேன்.

சமூக அக்கரையுடன் தட்டிக்கேட்ட இந்த இளைஞர்களின் இதயங்களை அல்லாஹ் தொடர்ந்தும் இஸ்லாத்தில் உறுதியாக வாழச்செய்ய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன். 

Saturday 21 June 2014

IN OUR TRANSLATED WORLD '( எனது மொழி பெயர்ப்பு உலகினுள்)



IN OUR TRANSLATED WORLD '( எனது மொழி பெயர்ப்பு உலகினுள்) என்ற தலைப்பில் கனடாவிலிருந்து 78 கவிதைகள் அடங்கிய மொழி பெயர்ப்பு தொகுப்பு ஒன்று வெளியாகியுள்ளது.கனடாவில் இயங்கும்தமிழ் இலக்கியத்தோட்டம் இந்நூலை வெளியிட்டுள்ளது.பிரபஞ்சத்தில் பரந்து வாழும் பல்வேறு சமகால தமிழ்க்கவிகளின் 400க்கு மேற்பட்ட கவிதைகளை ஆராய்ந்து கவிதைகள் தெரியப்பட்டுள்ளதாக வெளியிட்டாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.எம்.எல்.தங்கப்பா (இந்தியா) அனுஷ்யா ராமசாமி (அமெரிக்கா) மைதிலி தயாநிதி (கனடா) ஆகியோர் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கின்றார்கள்.

இதில் எனது  “இருள்“ என்ற எனது கவிதையும் இடம்பெற்றுள்ளது.
என்னால் வெளியிடப்பட்ட இரண்டு கவிதைத்தொகுப்பிலும் இடம்பெறாமல் தப்பிப்பிழைத்த கவிதை.மூன்றாவது மனிதனில் பிரசுரம் பெற்றது.
எனது கவனத்திலிருந்து தப்பிய இதனை கவிஞர் அனார்தான் அனுப்பி வைத்திருக்கிறார்.

தற்போது கவிதையை வாசிக்கும் போது எனக்குள் ஆச்சரியம். இரண்டு தொகுதியிலும் சேர்க்கப்படாமல் இது எப்படி மறைந்திருந்தது. எனது கவனயீனம்தான் காரணம். இவ்வாறான நல்ல கவிதைகள் சில வெளியே இன்னும் இருக்கின்றன.

 கலாநிதி அ.யோகராஜாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது இந்திய இராணுவத்தைப்பற்றி நான்  எழுதிய ஒரு கவிதையை நினைவுட்டினார்.
அதுவும் புலம் பெயர் சஞ்சிகையொன்றில் பிரசுரம் பெற்றது.தனக்கு மிகவும் பிடித்த கவிதை என்றார்.

இந்தக்கவிதையை கண்டுபிடித்து கனடாவுக்கு அனுப்பி  மொழி பெயர்ப்பு அந்தஸ்தை  வழங்கிய அனாருக்கு மிக்க நன்றிகள்.



Saturday 31 May 2014

சிறுகதை

ஜின்


        வீட்டுக்கு அடங்காத “தல தெறிச்ச“ பிள்ளைகளை வேதம் படிக்கவென வலுக்கட்டாயமாக மதரசாவுக்கு சேர்த்துவிடும் ஒரு காலமிருந்தது. ஆகம நியதிகளை கற்று ஞானதீட்சைபெறும் இளங்குருக்கள் பழைய சேஷ்டைகளை துறந்து ரொம்ப அடக்கமாக நடந்து கொள்வர் .

      1985 இன் முற்பகுதி குதியான் பருவத்தில் பனை மரம் , நாவல் மரம், மாமரம் எனப்பாய்ந்து திரிந்த அலியை அவனது வாப்பாவான முஹம்மது முத்து மரிக்கார், மதரசாவுக்கென நேர்ச்சை செய்து பிரகடனப்படுத்திவிட்டார்.  குடும்பங்கள் கூடி மகிழ்ச்சியில் திளைத்து, நார்சா கொடுத்து , லெப்பை வந்து பாதிஹா ஓதி மாப்பிள்ளை அழைத்துப்போவது போல், அலியை மதரசாவுக்கு அழைத்துப்போனார் மரிக்கார் .
  
       முன் பனி உறையும்  குளிர்காலம் . வைகரையின் சௌந்தர்யங்களை துளைத்துக்கொண்டு ,ஊளையிட்டபடி மூச்சிரைத்து வந்து நிற்கும் மட்டக்களப்பு உதய தேவியில், அலி வாப்பா சகிதம் ஏறிக்கொண்டான்.முழங்கால் தழைய தைக்கப்பட்ட ஜிப்பா, தலைப்பாகை, தொப்பி புது லேஞ்சு , முதன் முதலில் வாங்கிய அண்டவெயர், ஒரு பீங்கான், தேனீர்க் குவளை, பெட்ஷீட் , துவாய், ஒன்றிரெண்டு சந்தண சோப், ஐந்து பார்சோப், பென்குயின் நீலத்திரவப்போத்தல், அலியின் உம்மா விடிய விடிய விழித்திருந்து சுட்ட முறுக்கு ,பலகாரம், கொக்கச்சி, சீனி மா அய்ட்டங்கள்  அனைத்தும் மரிக்காரின் கையில்.

         அலியின் தோளிலோ, புத்தம் புதிய ரவல் பேக் பச்சைக்கலரில் ஊறப்போட்ட ரவல் பேக்கின் தோல் மணம் மூக்கைப்பிசைந்தது. பேக்கின் சிப் வந்து முடியும் நுணியில் தொங்கும் ஒரு சின்னப்பபூட்டு. சாவி ரவல் பேக்கின் வெளியறைக்குள் பத்திரமாகக்கிடந்தது.

        மதரசாவுக்குச்செல்வதென்றால் வாட்ச் வாங்கித்தரவேணும் என்ற பிடிவாதத்தின் பயனாக கிடைத்த “மெண்டியா“ மணிக்கட்டில் உருண்டு திரண்டு சிமிட்டிக்கொண்டிருந்தது.அடிக்கொருதரம் அதை திருப்பித்திருப்பி மணிக்கட்டில் இருக்குமாறு சரிபார்த்துக்கொண்டான் . புத்தம் புதிய தோள் சப்பாத்து . வாப்பா காத்தான்குடியில் இறக்கி தயிர்வடையும் டீயும் வாங்கித்தந்தார் .

        இலங்கையில் பெயர் பெற்ற மதரசாவுக்குள் கால் பதிக்கையில் நெஞ்சுக்கூடு பதகளித்தது. கருகருவென்ற அடர்ந்த தாடிகள், முழங்கால் தொடும் நீண்ட ஜிப்பாக்கள் பச்சை நிற பாம்புகள் போல் தோளில் வழிந்து கிடக்கும்  பச்சைத்தலைப்பாகை.

உஸ்தாதின் முன் அலி நிற்கிறான்.அலிக்குப்பின்னால் வாப்பா கூனிக்குறுகி மரியாதை கலந்த அச்சத்துடன் ஒடுங்கி நிற்கிறார். காலில் விழவும் தயார் என்ற பவ்யம்.

“ தம்பி நல்லா ஓதுவியா “  உஸ்தாதின் குரல் தடித்து அவனில் தெறித்து அறை  முழக்க வெடித்தது. 

“ இப்புடி வா “

அவரருகில் சைக்கினை செய்ய, மகுடிக்கு மயங்கிய நாகமென உஸ்தாதின் காலடியில் நின்றான். அவரின் வியர்வையுடன் மசிந்து ஜன்னதுல் பிர்தவ்ஸின் திவ்வியம் நாசி  விடைத்து , கல்பு நிறைகிறது.

அறையை நோட்டமிடுகிறான். சுவரோரமாய் ஒரு கருங்காலிக்கட்டில் மேசை, நாற்காலி மேசை நிறைய தினுசான புத்தகங்கள் . காகிதங்கள்.அலியின் தொண்டைக்குள் புளியாணம் உறைக்கிறது.

“ ஓம் அசரத் “

“ ஆ நல்ல பொடியன் ஆகிரத்துல உனக்கும் அல்லாஹ{த்தஆலா சிபாரிசுக்கு சங்க செய்வான் “

“ எங்க அல்ஹம்த ஓது பாப்பம் “  

அஊதுவில் தொடங்கி , வலல்லாழ்ழீன் ஆமீனில் முடிக்கிறான் .உடுத்தியிருந்த வெள்ளைச்சாரன் பிருஷ்டத்தில் ஒட்டிக்கொண்டு, திமிர் காட்டியது. உஸ்தாத் மூக்குப்பொடி உருஞ்சிக்கொள்ள குணிந்த தருணம் பார்த்து, பிரயாசைப்பட்டு அதை பிய்தெத்தெடுத்தான். அசிங்கமாக  அங்கயெல்லாம் கையப்போடக்கூடாது என்பது போல் வாப்பா கண்களால் எச்சரித்துக்கொண்டிருந்தார் .

உஸ்தாத் சாய்வு நாற்காலியின் முனையைத்தருகியபடி ஆழ்ந்து சிந்தித்தார் .பின் அலியை நோக்கி கனிவாக இள நகை பூத்தார்.

“ நல்லம் , அர்கானுல் ஈமான் சொல்லு “ என்றார் .

ஒரு வாரத்திற்கு முன் விடுமுறையில் வந்திருந்த அலியின் ஊர்க்காரன் அசன், இதே மதரசாவில்தான் ஓதுகிறான் . கேள்விகளின் ரகம் அதற்கான பதில்கள் எல்லாவற்றையும் விலாவாரியாக சொல்லிக்கொடுத்திருந்தான். அர்கானுல் ஈமான் ஒப்பிவிக்கப்பட்டது. 

உஸ்தாதின் முகம் பூரிப்பில் மலர்ந்தது.  

“ ம் மரிக்காரு பொடியன் நல்ல கெட்டிதான். “

     வாய்விட்டு புகழ அலி கால் பாவாது மிதந்தான். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட தெய்வக்குழந்தையாகிய திமிர் நெஞ்சுக்குள் பரவியது. வாப்பா பூரிப்பில் திளைப்பதை முகம் உணர்த்தியது. உஸ்தாதின் அறையே ஒரு விந்தையான உலகமாய் விரிந்தது .அலியின் விழிகள் வியந்து வியந்து அறை முசிய வலம் வந்து, ஈற்றில் அந்தக்கருங்காலிக்கட்டிலில் முட்டி நின்றது. 

    அலியின் உம்மாவுக்கு மூத்தாப்பா சீதனமாய் கொடுத்த கருங்காலிப்பெட்டகத்தின் நினைவு .மனசின் மேலெழுந்து, கல்பை அடைத்தது.அதற்கு ஏக சொந்தக்காரியான உம்மாவின் நினைவு , அவட மீன் கரியின் ரசம், என ஒவ்வொன்றாய் சங்கிலித்தொடராக அலியின் நினைவுச்சந்தைக்குள் இரைச்சல் கொடுத்தன.தொண்டைக்குள் காலையில் வாப்பா வாங்கித்தந்த தயிர் வடை  மகா வளையமாக குறுக்கே கிடந்தது . 

உஸ்தாது எதிரே மங்கலாகத்தெரிந்தார். அவரண்டையில் வாப்பா ஒரு புள்ளியாக நின்றார். அறையில் சற்றைக்கு முன் பார்த்த எந்தப்பொருளும் இல்லை. வெறும் கட்டாந்தரை இவன் மட்டும் ஏகனாய் நின்றான்.உம்மா வந்து மார்போடு அணைத்து தலைக்குள் விரல் புதைத்து  கோதி விடுகிறா.அவவின் மெத்தென்ற மார்பில் முகம் புதைத்து  விசும்புகின்றான்.

“ என்னடாம்பி குழர்றாய் “

   உஸ்தாதின் குரலில் இழையோடிய இதம் வெப்பிசாரமாய்  வெடித்து, கேவலாய் எழுந்தது. வாப்பா சங்கடத்தில் நெழிந்தார். 

“ மனெ இப்ப என்னத்திற்கு குழர்றாய். அடுத்த மாசம் லீவாம் அச்சுப்பெருநாள் லீவு, இடையில நானும் உம்மாவும் வருவம் நம்மட ஊருப்புள்ளயளும் இருக்காங்க பயப்பிடாம இரு தம்பி “

    தலை தடவி வாஞ்சையுடன் அணைத்தபடி வாப்பா தழுதழுத்து விடைபெற்றுச்சென்றார் . அவர் குரலும் கம்மியதை அலி கவனிக்கவே செய்தான்.

    தனியனாய் அறையில் நின்றவனை உஸ்தாத் ஏற இறங்கப்பார்த்து விட்டு, மேசையில் உறங்கிக்கிடந்த பெல்லை அழுத்தினார்.ஒரு இளவல் ஓடி வந்து ஸலாம் சொன்னார் .

“ இந்தப்புள்ளக்கு கீழ றூம கொண்டு போய் காட்டிட்டு , இப்ப சேர்த்திருக்க முதலாம் வகுப்புல வுடு. “


 இளவலின் பின்னால் பலியாடு போல் சென்றான். அறைக்குள் நிலவிய மனப்புழக்கம் இளகியது.முற்றத்தில் இறங்கி விடுதியை நோட்டமிட்டான்.பிரமாண்டமான இரு மாடிக்கட்டடம்  “ப“ வரிசையில் மண்டபங்களும், வகுப்பறைகளும் நடுவே முற்ற வெளி சூழவும் தென்னை, பலா, மா மரங்கள். சமையறை மட்டும் காவி படிந்து  பார்ப்பதற்கு அசூசையாய் தோற்றம் தந்தது.

     இளவல் வழி நெடுகவும் ,அலியை புலன்விசாரணை செய்து கொண்டு போனார் . கடைசியாக வூட்டுல எத்தின பொம்புளப்புள்ளயல் என்ற கேள்விக்கு ரெண்டு என்றவுடன் , விடுதி வாசல்  வந்தது. பெரிய ஹோல் வரிசையாக ஆனால் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சின்னச்சின்ன மரத்திலானான கபேட்டுக்கள், அருகில் சுருட்டி அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பாய்கள். தாறுமாறாக கொடியில் தொங்கும் வர்ணத்துணிகளான  ஆடைகள்.தண்ணீர் போத்தல்கள்,விடுதிக்குறிய இலட்சணங்களுடன் அந்த ஹோல் ஒழுங்கற்ற காட்சி தந்தது. இவனுக்குறிய கபேட்டில் கொண்டு வந்த சாமான்களை அடுக்கு மட்டும் இளவல் கூடவே நின்றார். 

      அதென்ன பேக்குல தின்னுற சாமானா எனக்கேட்டுவிட்டு முறுக்கு வளையங்களை கையிலெடுத்து கடிக்கத்தொடங்கினார்.

“ராத்தமாரு எத்தினையாம் ஆண்டு படிக்கிற“

  சீனிமாவை வாயில் போட்டபடி மீண்டும் வேதாளம் ஏறியது.

“ ஒருவர் ஏ.எல். இளயவ ஜி.சி என்றான். “

 கடைவாயில் படிந்திருந்த துகள்களை தலைப்பாகையால் துடைத்தபடி “உங்களப்போல மாநிறமா அவங்களும் “ என்று விட்டு, அசடாக சிரித்தார். மிஸ்வாக்கு ஏறிய பல்லிடுக்கில் சீனிமா அப்பிக்கிடந்தது.அலி எதுவும் பேசாமல் சாமான்களை அடுக்கினான் .

“ என்னயும் தேவையென்றா ஆரும் கரச்சல் கொடுத்தா எங்கிட்ட சொல்லுங்க “

       கொண்டு வந்த பெட்லொக்கை கபேட்டில் மாட்டி மூடி விட்டு, வகுப்பு எங்க என்றான். இளவல் சிரித்தபடி அலியை வகுப்பறைக்கு கூட்டிச்சென்றார் . ஏலவே வந்திருந்த புதிய பையன்களுடன் அலியும் வகுப்பில் விடப்பட்டான்.

       அருகருகே பல வகுப்புகள். தினுசான பார்வைகளுடன் பையன்கள். அயல் வகுப்பில் பாடம் நடாத்தும் உஸ்தாதின் குரல் சுவரில் மோதி எல்லா வகுப்புகளுக்கும் தாவியது. அப்படியொரு வெண்கலக்குரல்.அலி மிரண்டபடி வகுப்புக்குள் நுழைகிறான் .பாடம் நடாத்திக்கொண்டிருந்த உஸ்தாத் இயல்பான கேள்விகளை கேட்டு விட்டு அமரச்சொன்னார். 

ஐந்தாக பிரிக்கப்பட்டிருந்த நீண்ட கட்டடத்தில் அலியின் வகுப்பு இடமிருந்து வலமாக மூன்றாவது இருந்தது. ஆங்கிலத்தில் யு -3 என்று இடது பக்க மூலையில் பொறிக்கப்பட்டிருந்தது.வலது பக்கம் திறந்து விடப்பட்ட ஜன்னல்களின் வழியே குளிர்காற்று இறங்கி வந்தது. ஜன்னலுக்கு அப்பால் நெஞ்சுயர மதில். மதிலை ஒட்டினாற் போல் அகன்ற தாமரைக்குளம் ஆங்காங்கே தண்ணீரின் மினுப்பு மினுப்புத்தெரிய,குளத்தை மூடிக்கொண்டு தாமரைகளே கிடந்தன.மிதமான அலைகளுக்கு மேலும் கீழும் வழுவி இறங்கும் அகன்ற தாமரைப்பூக்களில் வண்டுகள் குந்த தருணம் பார்த்து சுற்றிச்சுற்றி வளையவந்தன. குளத்தின் நுணியில் மலைத்தொடர்.அதன் அடியில் அடர்ந்திருக்கும் தென்னந்தோப்புகள். விளைச்சலுக்கு தயாராக நிற்கும் நெற்கதிர்கள்  என அந்த இடமே சௌந்தர்ய வியப்பையும், புலன்களில் சிலிர்ப்பையும் தந்தது.

“ என்னடாம்பி ஒங்கட ஊருல குளம் கிளம் ஒன்டுமில்லப்போல “.

பாடம் நடாத்திக்கொண்டிருந்த உஸ்தாதின் நக்கலில் முகம் நாணி கரும்பலகையை நோக்கினான் .


        இடைவேளையின்போது ஊர்  பிள்ளைகள் இவனை சூழ்ந்து கொண்டார்கள். கென்ரீனுக்கு அழைத்துப்போனார்கள்.குரக்கன் கூழ் 5 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வாங்கித்தந்தார்கள். 

        கென்ரீனில் கடன் சொல்லி  பெரியநானாக்கள் திண்பண்டங்கள் வாங்கிப்போனார்கள்.போகும் வழியில் இவனில் ஒரு முறைப்பு வைத்துவிட்டே சிலர் சென்றனர்.

        மாலை ஐந்து மணிக்குப்பிறகு காலாற உலாவரவும், விளையாடவும் அனுமதியிருந்தது. பேச்சுவாக்கில் இரவில் மதரசாவில் சின்னப்பிள்ளைகள் தூங்கும் ஹோலில் ஜின்களின் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை செய்து விட்டு கமுக்கெனச்சிரித்தார்கள்.

       அலியின் கால்கள் நடுங்கத்தொடங்கின.ஜின்களின் அட்டகாசம் குறித்து ஒவ்வொருவரும் திகிலூட்டும் கதைகளை சொன்னார்கள்.இரவில் வந்து வுழூச்செய்வது, சாமத்தில் ஒண்ணுக்குப்போகையில் லைட்டை அணைத்து விடல்,பள்ளியில் வந்து தொழல், வழில் தூங்குபவர்களை தூக்கி விளாசல் அல்லது அமுக்கல் என ஏகப்பட்ட ஜின்களின் அட்டகாசங்களை சொல்லிச்சொல்லி கிலியூட்டினார்கள்.

       ஜின் வாசிலாத்து பண்ணும் மந்திரங்கள் தனக்குத்தெரியும் என்டு அசன் எடுப்புக்காட்டினான்.அலிக்கு இரவில் மூத்தம்h சொல்லும் பேய்க்கதைகளுடன் ,ஜின்களும் கூட்டுச்சேர்ந்து அச்சமூட்டின .  

பள்ளியில்  அசன் பச்சை தலைப்பாகையுடன் ஜின் தொழுது கொண்டிருந்ததை தான் கண்டதாக வேறு கதையளந்தான் .நெடுநெடுவென்று வளர்ந்த உருவம் ,முகட்டை தொட்டு விடுமளவிற்கு அதன் கைகள் உயர்ந்ததையும் அசன் விஸ்தாரமாய் சொல்லிக்கொண்டிருக்கையில் இரவு வந்து விட்டது.

5
இருள் இறங்கி பூமியைத்தழுவ, அச்சம் கவ்வத்தொடங்கியது.தாமரைக்குளத்தின் விரிந்த மலர்களில் ஜின்கள் பதுங்கி இருக்குமோ என்ற ஜன்னி .மஃரிபு நேரத்தில் குளத்தைப்பார்ப்பதை தவிர்ந்து கொண்டான் .
யாருக்கும்  அஞ்சாத இரவு  வெகு உல்லாசமாக பூமியை தனக்குள் உறிஞ்சிக்கொண்டது. விடுதியில் படுக்கை அறை தனித்தனியே இல்லை .ஒற்றை மண்டபத்தில் பாயை விரித்து படுத்துக்கொள்ள வேண்டும். குறுக்காக பெஞ்சு இருக்கும் அருகில் தூங்குபவரின் மேல் கை கால் படாமல் ஒரு பாதுகாப்பு .பெரியவர்களுக்கு மேல் மாடியில் படுக்கை. 

       அலி ஜின் நடமாட்டம் கம்மியாக இருக்கும் என ஊகித்து ஒரு மூளையில் பாயை விரித்தான். வண்ணாரவெட்டைக்குள் “கல்பன் புல்“ பிடுங்கி ,  காய வைத்து மூத்தம்மா பின்னித்தந்த வர்ணப்பாய் .மடமடவென்று தரையில் இருக்கமாட்டேன் என அடம்பிடித்தது. 

அலி தலையை வைத்து அழுத்திப்படுத்துக்கொண்டான். இந்த இடத்தை தேர்வு செய்ததற்கு இரு காரணங்கள். ஒன்று இது மூளை ஜின்கள் மூளை முடுக்கெல்லாம் வராது. பெரிய உஸ்தாதின் பின் வழி தலைவாசல் இரண்டாவது காரணம். 

வெகு நேரமாய் தூக்கம் வராமல் அவதி;ப்பட்டான். புது இடம், முதன் முதலாக உம்மாவின் மூச்சுக்காற்றுப்படாத இரவு. ராத்தாமார்களின் சண்டைகளற்று உம்மென்று இவனை முறைத்தபடி இருக்கும் நைட் லாம்பு.எல்லாவற்றையும் மீறி மிகைத்து நிற்கும் ஜின்களின் அட்டகாசம் என அலியின்  உறக்கம் நி;த்தியமாய்  உறைந்திருந்தது.

எத்தனை மணிக்கு தூங்கினான் என்பது தெரியாது .கண் விழித்தபோது சலனங்களற்று நிர்த்தாட்சண்யமாய் தெரிந்தது இருள். இருள் பதுங்கிய இடங்களைத்தேடித்தேடி விரட்டிக்கொண்டிருந்தது நைட் லாம்பு. அயலண்டை குளத்திலிருந்து தவளைகளின் சலக்புலக் ஓலிகள்.வெகு தொலைவில் ஊளையிடும் நாய்கள். அவனைச்சூழவும் குறட்டை ஒலிகள் .

அலியால் தன் கை கால்களை அசைக்க முடியவில்லை. மரத்துப்போய் விட்டதா அவன் மேல் கணதியாக ஏதோவென்று கவிழ்ந்திருப்பதை சடுதியாக உணர்ந்தான் .உடம்பை அசைக்கவே முடியாத அழுத்தமான பிடிக்குள் தான் இறுக்கப்படுவதை அறிந்தும் அவனால் ஒர் இம்மியளவும் நகர முடியவில்லை .

ஜின்தான் சந்தேகமில்லை. ஆயதுல் குர்ஷியை ஓதினால் ஜின் விலகிவிடும் மாலையில் அசன் சொன்னது பொறி தட்டியது .அவசரமாக ஓதினான் .உதடுகள் பிரிய மறுத்தன. ஜின்னின் சூடான மூச்சுக்காற்று கழுத்தை தீய்த்தது. பயத்தில் உறைந்து தரையோடு தரையாக நைந்திருந்தான்.
6
தன் மேல் கவிழ்ந்திருக்கும் ஜின்னின் அழுங்குப்பிடி இறுகியது உடல் அதிர, வீறிட்டுக்கத்தினான். சப்தம் அடி வயிற்றுக்குள் உறைந்து அடங்கிப்போனது. 

தன்னை பிடித்திருந்த ஜின் எப்போது விலகிப்போனது என்று தெரியாது .உடல் இலேசாகிக்கிடந்தது. வியர்வையில் நனைந்து தெப்பமாயிருந்தான். 

 நெஞ்சுக்கு மேல் தூக்கிவிடப்பட்ட சாரனை இறக்கி விட்டு துடைத்துக்கொண்ட பின்பும், அசூசையான வாசத்தை நுகர்ந்தான். ஜின்னின் செய்கை அருவருப்பாகவுமிருந்தது. 

ஜின்னை பார்க்க வேண்டும் போல் உணர்வு தட்டியது. இலேசாக ஒருக்களித்து மிக ஜாக்கிரதையாக கண்னிமைகளைப்பிரித்தான்.பயத்தில் உடல் வெடவெடத்தது. நெடுநெடுவென்ற உருவம் அடர்ந்த தாடி, கட்டம் போட்ட ஜிப்பா, தலையில் சுற்றிய பச்சைத்தலைப்பாகை ஜின் அசைந்தசைந்து பெரிய உஸ்தாதின் அறைக்குள் நுழைவதை பார்த்துக்கொண்டே இருந்தான். மண்ணில் கால் பாவாது ஜின் நடக்குமென்று அசன் கூறியது சுத்தப்பொய் என்பது உறுதியாயிற்று .

வியர்வையில் தெப்பமாகிக்கிடந்த உடம்பில் திடீரென ஜன்னதுல் பிர்தவ்ஸின் நறுமணம் கமழ்ந்தது . ஓங்காரம் வருவது போல் மனம் அவதிப்பட்டது.சடுதியாக எழுந்தவன் தன் மேல் வீசிக்கொண்டிருக்கும் ஜன்னதுல் பிர்தவ்சை துடைக்கத்தொடங்கினான் .

புதைந்திருக்கும் இருள் நாளைய இரவு பற்றி, அவனை பயமுறுத்திக்கொண்டிருந்தது.துடைக்கத்துடைக்க தன் மேல் படிந்திருக்கும் பிர்தவ்ஸின் காரம் உடல் முழுக்க திகுதிகுவென எரியத்தொடங்கியது. அடிவயிற்றில் புதைந்திருந்த கேவல் வெடிக்க வீறிட்டு கத்தினான் ஜின்... ஜின்...


பிரசுரம் முஸ்லிம் குரல்
 2005.04.17  காலை 9.05

Monday 12 May 2014

துறவிகளின் அந்தப்புரம்


1

சங்கையான நிலா! நடுவானில் நின்று கும்மாளமடிக்கின்றது. நட்சத்திரங்களின் மின்மினி கூச்சலில் பூமி அதிர்கிறது. பூவிதழ்களின் ஓரத்தில் பனி இறங்கி சொட்டும் அழகு கொள்ளை.

மௌனம் புதைந்த முற்றத்தில் குளிர் சிலிர்க்கிறது.ஒரு பறவை ஏகாந்தமாக கூவிக்கூவி அவளை வட்டமிட்டு தன் துயரத்தை பகிர்ந்து கொள்கிறது.

 அதன் கரிய நிழல் அவளில் படியுமாற் போல் தாழப்பறந்து தன் நெகிழ்ச்சியை தெரிவிக்கின்றது. வீட்டுக் கூரையின் மேல் பூனைகளின் புனர்ச்சிக்கலவரம். வளவின் கோடியில் நிற்கும் கிடாயின் முயங்கும் எத்தனிப்பு.கடல் குமுறி அலையடிக்கிறது மனசுக்குள்.

உள்ளே வயதான உம்மாவின் இருமல் கதவிடுக்கில் எகிறி அவள் காதுக்குள் நசிகிறது. நடமாட  முடியாத வாப்பா இந்நேரம்  கொட்டக்கொட்ட விழித்திருக்கக்கூடும்.

பொங்கும் தேகத்தின் திணவுகள் கொதிக்கின்றன. நெற்றி புடைக்க அவள் கரைந்து வடிகிறாள் திண்னையில்! கொதிக்கும் உலை விழிகளின்  இடுவலில் ஆவி பறக்கிறது. கடந்த பல இரவுகளாய் இந்த அவசம்.

சாச்சாவை இம்முறை ஏமாற்ற விரும்பவில்லை.உம்மாவின் நச்சரிப்பு வேறு.
“மாப்புள்ள நல்ல பேணுதல்.தீனுன்றா நல்ல உசிரு, உன்ன நல்லா பாத்துக்குவாரு” சாச்சா அவள் காதில் ஓத ஓத சர்ப்பம் படுத்துவிட்டது.

அவர் மகுடியில் உம்மாவும் சரண். 

வாப்பாவின் பாரிசவாதத்தின் பின் காலம் சாச்சாவாகி அவரின் நிழலில் தரிக்கும்படியான தரித்திரம் தொற்றிக்கொண்டது.

அழகின் மதர்ப்பில் அவள் பெண்மை தர்க்கம் கண்டது மெய்! வாழ்வு பற்றிய சௌந்தர்ய வர்ணங்கள் கனவுகளில் விழுந்து இன்பமூட்டின.கற்பனைத்திடலில் திமிர்பிடித்த குதிரைகள்

அவளைச்சுழவும் ஒளிவட்டம்.அவள் ஓர் ஆணின் மார்பில் ஒதுங்கும் வண்ணத்துப்பூச்சியாகி சிறகடித்தாள்.

“மாப்புள்ள இசுலாமிய முறப்படிதான் நிகாஹ் செய்வாராம், பொண்ணு வூட்டுலேர்ந்து  செப்புக்காசும் வேணாமின்னுட்டாரு, செலவு சாத்தும் வானாமாம்” 

சாச்சாவின் செய்தி அரசல் புரசலாய் அயல் வீடுகளில் பரவிற்று.
  
”பாருங்க லைலாட காலத்த சும்மா மாப்புள்ள கிடச்சிருக்கான்,அப்ப ஏதோ சம்சயம் இருக்கு, நாம கையில காசோட பெரிய்ய வூட்டயும்  வச்சிட்டு மாப்புள்ளமாருட காலுல வுழனும்,இவளுக்கு பழம் நழுவி பாலுலலுவா வுழந்திரிச்சி எல்லாம் வெள்ளத்தோலுக்குத்தான் ” 
அவள் சம்பந்தந்தில் ஊர் கூடி அதிசயப்பட்டது. கர்வப்பட்டது.தீயாய் எரிந்தது.

லைலாவின் மிடுக்கும் மிகைத்து விட்டது. ”என்ட அழகுக்கு, வாரவன் குடுத்து வக்கனும்டி” தோழிகளுடன் ஆனந்தித்தாள். 

பெண் பார்க்கும் படலம். பெண்னும் மாப்பிள்ளையை பார்க்கத்தானே வேண்டும். அந்த சுன்னத் ஹயாத்தாக்கப்பட்ட ஓர் மாலைப்பொழுதில்தான் அவள் கனவுகள் சிதறின.அதன் உடைவுகளில் இடறி இரத்தம் சொட்டச்சொட்ட நடந்து போனாள்.

முஹம்மது நபிக்கு  வஹீ இறங்கிய வயதிருக்கும் மாப்பிள்ளைக்கு.முழங்காலிடை நீன்டிருக்கும் உடை. அழகுபடுத்தப்படாத தாடி. கையிலொரு துண்டு. அவள் இராஜகுமாரனின் தலைப்பாகைக்குள் நறுமணம் இல்லை.கம்பீரமும் இல்லை.பனிக்குடம் உடைகிறது.

உம்மாவின் மடிக்குள் புதைந்து கிடக்கும் அவள் முதுகு அதிர்கிறது. லைலாவின் மனத்துடிப்பு தாய்க்கு புரிகிறது.என் குஞ்சு நான் என்னடி செய்வேன் என்பது போல் ஆதுரமாக மகளின் முதுகை நீவிக்கொண்டிருந்தாள். அந்தர சௌஜன்யம்; தந்த தகிப்பில் லைலா ஓவென்று கதறுகின்றாள்.

வாப்பாவின் பாரிசவாதம்,உம்மாவின் நோயும் தனிமையும், குடும்பத்தின் கையறு நிலை சாச்சாவால் மீட்டி ஓதப்படுகிறது.அடிமேல் அடி அவள் மனமென்ற அம்மி மெல்ல நகர்த்தப்படுகிறது. மிகச்சாதுர்யமான நிர்ப்பந்த நகர்த்தல் அது.

லைலாவின்  நீரோடை கலங்கி விட்டது. அவளுக்கேயுரிய பளிங்கு ஓடையில்  எருமைகள் உழல்கின்றன.  முதலிரவில் பலத்த குறட்டை ஒலிக்குள் அவள் மன வெக்கை அடங்;கிச்சிறுத்தது.இன்பத்தின் படித்துறைக்கு அழைத்துச்செல்வான் என்ற வல்லமையான கனவுகள் அவள் மஞ்சத்தில் உதிர்ந்து கிடந்தன.

தன்னை ஆசுவாசப்படுத்தி வாழ வேண்டுமென்று அவள் தீர்மானித்துக்கொண்டாள். வாழ்க்கை கனவு கண்டது போல் இல்லை.ஓர் ஆணின் திணவு பற்றி அவள் கொண்டிருந்த பிரமைகள் வானவில்லாகின.ஆகிருதியுள்ள உடலை சுமக்கும் வல்லமை தனக்கு வரமாக வாய்க்கவில்லை என்ற ஆதங்கம்.

அவள் முன் எதிர்காலம் கோரப்பற்களுடன்  ஆவென்று நின்றது.கவிழ்ந்து விழும் இரவுகளும் கும்மிருட்டும் அவளை அச்சமூட்டின.சல்லாபங்கள் அற்ற இயந்திரத்தனமான வாழ்க்கை அவளை வாழ் என்று சாபமிட்டு சென்று விட்டது.

மணம் புரிந்து ஒரு வாரம் உருண்டு விட்டது.அவரின் உள்ளே கனன்று கொண்டிருந்த ஆன்மீக ஊற்றின் கண்களை யாரோ காலால் கெந்தியிருக்க வேண்டும்.

”இஞ்செ புள்ள நான் இந்த வெள்ளிக்கிழமை வக்துல போகனும்,பேரு குடுத்து கிழமையாயிட்டு, வாரதுக்கு சுணங்கும் இந்தாங்க இத செலவுக்கு வச்சிக்கிங்க”
  ஆயிரம் நோட்டுக்கள் இரண்டு அவள் கைகளுக்குள் திணிக்கப்பட்டது.

 ”அப்ப நான் போய்ட்டு வாரன். ” 

அவள் முகத்தை பார்க்காமலே மீரான் வெளியேறிச்சென்றான். லைலா திக்பிரமை பிடித்தவளாய் உறைந்திருக்கின்றாள். அடிமேல் அடி அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

மருமகனின் பக்தி ரசம் லைலாவின் உம்மாவை கனிய வைக்கின்றது.
”நீ ஏன்புள்ள யோசிக்கிறா அவரென்ன கள்ளுக்கடக்கா போறாரு பொம்புள புடிக்கியா போற. அல்லாட பாதயில போறாரு, ஒரு நாப்பது நாள் கண்ண மூடி திறக்குறதுக்குள்ள பறந்திடும் ”

தாயின் வார்த்தைகள் தீயாய் உருகி  மனதை பொசுக்கின.

நாற்பது இரவுகள் நாற்பது மாலைபொழுது நாற்பது பகல்கள் அவள் இத்தா இருக்க வேண்டும். கனன்றெரியும் தீயை ஊதி ஊதி அணைக்க வேண்டும். சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டு செல்லும் கிருக்கனாக அவன் செல்வதை அவள் வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

விம்மித்தணிந்த மார்புகளுக்குள் இன்னும் ஏமாற்றம் இறங்கிக்கொண்டிருந்தது.

”மனைவிக்கு செலுத்த வேண்டியகடமைகள் உண்டு கொடுத்து விடுங்கள். ”

”உங்கள் மனைவி உங்களுக்காக அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது போல், நீங்கள் உங்கள் மனைவிக்காக உங்களை  அழகுபடுத்துங்கள். ”

”உங்கள் மனைவியிடம் இன்பம் பெறுவதும் தர்மம் ”

”அவள் வாயில் ஆசையுடன் ஊட்டிவிடும் ஒரு கவளச்சோறும் வணக்கம்”; 
ஹதீஸ் கலரியில் கேட்ட பயான்கள் காதுக்குள் நிறைகின்றன. 

 ஓ நாயகமே! நீங்கள் மகான். பெண்ணின் உணர்வுகளை சொல்லிச்சொல்லி புரிய வைத்த பொக்கிஷம். என்ன செய்ய அவை சில ஆண்களால் பள்ளிவாயல்களில் மட்டும் படிக்கும் மந்திரங்களாகி விட்டதே !


2

வக்தில் வந்து ஐந்தாவது நாள். மலை நாட்டின்  செழிப்பான கிராமத்தில் பணிகள் தொடர்கின்றன.சுற்றிலும் பசுமை குளிப்பதற்கு நீரோடை.

 கொளுந்து மணம் மாறா தேனீர். கால்களை பிடித்து விட விடலைகள். மாலை நேர நறுக்குத்தீனி வட்டிலப்பம்,மிக்சர்,லெவரியா,முறுக்கு இத்தியாதி.

ஐந்தாவது நாள் மீரானின் முறை.ஜமாஅத்துக்கு”ஹித்மத்”செய்ய வேண்டும். காலையில் பள்ளி வராந்தாவில் ஒரு கூட்டம் தஃலீம் வாசித்துக்கொண்டிருந்தது.

புது மாப்பிள்ளை மீரானை சீண்டியபடி இரண்டு இளைஞர்கள் தேனீர் தயாரித்துக்கொண்டிருந்தனர்.குளிருக்கு வாகான மெதுவென்ற ஸ்வெட்டர்கள். மீரான் லைலாவை நினைப்பது பாவமென்ற தோரணையில் ஸ்வெட்டருக்குள் உடலை புதைத்து இறைச்சி வெட்டிக்கொண்டிருந்தான்.

”புள்ளயால் என்ன கத கதக்கிறிங்க, நான் வக்துலலியா நிக்கிறன்.ஸஹாபாக்கள் கலியாணம் முடிச்சி மறுநாளே யுத்தத்திற்குப்போய் ஷஹீதாகலியா? ” மீரான் அல்லாஹ்வை கண்டது போல் பரவசப்பட்டான். அந்தக்கிராமத்தின் தெருத்தெருவாய் அவன் கால்கள் அலைந்தன.

அவன் முற்றிய ஆன்மீகவாதி  முக்தியின் விளிம்பு வரை வந்துவிட்டான்.அவன் பாதையில் மலக்குகள் நிறைகின்றனர். வலீமார் கைலாகு கொடுக்கின்றனர்.

நாதாக்கள் அவன் திருப்பாதங்களில் பன்னீர் தெளிக்கின்றனர். மூசாவுக்கு மட்டுமா கடல்  பிளக்கும் ?  ஆபிரிக்கக்கடல்கள் அவனது குழாத்திற்கு பளிங்குத்தரையாகின்றது.

 இஸ்ரேல் அவர்களை கட்டியணைத்து முத்துகிறது.அமெரிக்காவின் சந்து பொந்துகளில் அவர்கள் முதன்மை மனிதர்கள்.

அந்தரத்தில் அலையும் பாவம் சுமந்த ஆன்மாக்களை  மர்கஸில் அடைத்து சுவர்க்கத்திற்கு அனுப்பும் பணி மீரான் போன்ற இளம் துறவிகளால் ஈடேறுகின்றது.

செல்லுமிடமெல்லாம் ”ஹித்மத்”. அட்சயப்பாத்திரங்களில் கோழிகள் விழுந்தன. கிடாய்கள் கனத்தன.நபியின் வாரிசுகள் வயிறு புடைக்கவும் உண்ணலாம். 

உண்டி சுருங்குதல் பெண்டிருக்கு மட்டும்தான். உண்டி மட்டுமா இவர்களால் சுருங்குகின்றது?

வனாந்திரங்களில்  ஏகனைத் தேடியலையும் பிரம்ம ரிஷிகள் இமயமலைச்சரிவில் நித்ய நிம்மதிக்கு கரையும் சன்னியாசிகள். பாரத கங்கையோரங்களில்  தியானத்திலிருக்கும் முனிகள் .

மீரானும் தெருத்தெருவாய் அலைவதன் ஊடே அல்லாஹ்வைக்காண்கிறான். அழியும் உடல் பற்றி அவனுக்கு கவலையில்லை.

இந்த உலகம் மூமின்களின் சிறை கூடம்.சிறைக்குள் தன்னை வருத்திக்கொள்ளும் கடவுளின் ஆயுள் கைதி மீரான். அவன் கூண்டருகே லைவாவால் அண்மிக்கவே முடியாது.

ஈமானின் முழு ஜோதியும் அவனைச்சூழவும் பரிவட்;டம் போட்டுள்ளது.

”ரசூலுல்லாவே! நீங்கள் ஆடு மேய்த்திருக்கின்றீர்கள்,வியாபாரம் செய்திருக்கின்றீர்கள்,குடும்பத்தை காப்பாற்ற கூலியாகவும் வாழ்ந்திருக்கின்றீர்கள். உங்கள் உம்மத்துக்களால் முடியவில்லையே! ”

பால்மாவுக்கு ஏங்கும் குழந்தைகள். ஆலிங்கனத்திற்குத்துடிக்கும் மனைவிகள். நோயுற்றிருக்கும் வயதான அன்னையர்,கடன்தாரிகள், தந்தையில்லை என்ற ஓர்மத்தில் ஊர் சுற்றும் பிள்ளைகள்,

காதலித்து கழுவேறும் குமருகள்,வேலிதாண்டும் ஆடுகள் இந்த துன்பங்களிலிருந்து விடுதலை பெற நாயகமே நீங்களா காட்டினீர்கள் வக்தையும், பக்தியையும் ?

”மேலான பெரியார்களே! அல்லாட தீனில சம்பூர்ணமாக நுழஞ்சி கொள்ளுங்க” 
மீரான் பள்ளியின் மத்தியில் அமர்ந்து கொண்டு உபந்நியாசம் செய்து கொண்டிருந்தான்.

மர்கஸ் அவனுக்கு ”அமீர்” பட்டம் சூடிவிட்டது. இனி அவனுக்கு கவலையில்லை. கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் செல்லும் குழுவில் அவனும் அடக்கம். அவன் பயானில் பள்ளி நெக்குறுகி கரைகின்றது.அவனை கூர்ந்து பர்ர்த்தபடி ஜனப்பிரளயம் ஆனந்திக்கின்றது. 

”அமீர் ஷாஹிப் ” என்ற பட்டம் பெற எத்துனை தியாகம் வேண்டும்.இனி இந்த அழியும் உடல் தீனுக்குத்தான். இன்னும் வக்த கூட்ட வேண்டும் அமீர் சாப் நாற்பது நாளில் வீடு திரும்புவதா ?

3

லைலாவின் மனசுக்குள் கடற்பாறை இறங்கியது.வாப்பாவின் பென்சன் அவரின் மருந்துக்கும் உம்மாவின் இருமலுக்கும் போதுமாயிருந்தது. திணித்து விட்டுப்போன இரண்டாயிரத்திற்கும் பசி தெரியுமா விலை வாசி தெரியுமா மூன்று கிழமைதான் அது தாக்குப்பிடித்தது.

”எல்லாவற்றையும் அல்லாஹ் பார்த்துக்கொள்வான்,தவக்குள் வையுங்க மீரான் ஷாப் இன்னும் நாப்பது நாள் பேரு குடுத்திருக்காரு.முடிஞ்சிதான் வருவாராம் ”

 ஊர் மர்கஸிலிருந்து செய்தி வந்தது. அது செய்தியல்ல மரணம்.

லைலா தான் ஏது செய்கிறேன் என்றில்லாமல் இலக்கற்றுதிரிந்தாள். தூங்காத இரவுகள் முற்றத்தில் கழிந்தன.நிலவில் தோய்ந்தாள்.இருளுடன் இருளாய் கரைந்தாள்.பனியில் இளகினாள். கிளர்ந்தெழும் அலையடங்க உச்சந்தலையில் நீரை ஊற்றினாள்.

நடுங்கும் தேகத்தை அடித்து அடக்கினாள்.ஊழித்தாண்டமாவடிய மனசை தேற்ற எதிர்வீட்டில் புத்தகங்கள் வாங்கினாள்.வாசித்தாள்.

கெம்பஸ் முடித்து விட்டு, வேலை பார்க்கும் பால்ய வயதுத்தோழன் நியாஸ் நல்ல புத்தகங்களை தந்தான்.அவளை உற்சாகப்படுத்தினான். உரையாடினான்.

”லைலா குடும்பத்த கவனிக்கிறதும் இபாதத் என்று அவருகிட்ட சொல்லுங்க. ”

”ஓம் நியாஸ் என்ர வாழ்க்க காட்டில் எரிகிற நிலாவாப்பெய்த்து அழகிருந்து என்ன செய்ய பாழாய்போன ஏழ்ம  என்ர வாழ்வ தின்னுட்டு”

பந்தலற்ற   கொடி தன் வழியில் ஒரு மிலாரைப்பற்றிக்கொண்டது போல் லைலாவுக்கு நியாஸின் ஆறுதல் தேவைப்பட்டது. 

காலங்கள் சடுதியாக மறைந்தன. லைலா இப்போது இழந்த வாழ்வின் வசந்தங்களை அடைந்தவள் போல் துள்ளித்திரிந்தாள். அவள் ஜன்னல்கள் ஊடே இதமான காற்று வந்தது.

எதிர்வீட்டு ஜன்னல்களும் விரிந்தே கிடந்தன.அதற்குள்ளிருந்து மொய்க்கும் இரு விழிகளுக்காகவே லைலா தன்னை அலங்கரிக்கதொடங்கினாள்.

இரவுகளில் அவளின் முற்றத்தில் நட்ஷத்திரம் பொழிந்தது.ஒரே பாயில் அருகருகே அமர்ந்தபடி அவர்கள் விவாதித்துக்கொண்ருந்தார்கள்.நெடிய வாழைமரத்தின் நிழல் விழும் ஓரத்தில் அவர்களின் நிழல்கள் கவிந்திருக்கும். 

வீட்டுக்குள் பாவும் அவன்  பார்வைகள் மொழிகளற்று அலைகின்றன. 

4

மீரானின் கியாதி ஊரெல்லாம் பரவியது.தியாகம் என்ற கம்பளியால் அவனைப்போர்த்தி மர்கஸ் அவனை அழகு பர்hத்தது. ”மீரான் ஷாப பாருங்க எவ்ளவோ தியாகம் சுபுஹானல்லா! ”

மீரானின் பிரார்த்தனைக்காய் ஜமாஅத் ஏங்கிக்கிடந்தது. அவன் கடைக்கண் கடாட்சம் கிடைத்து விட்டால் போதும் மோட்சம் பெறலாம் என்ற நப்பாசை. புறப்படும் ஜமாஅத்துக்களுக்கு ஆசி வழங்கும் கைங்கரியம் மீரானுக்கு மட்டுமே வாய்த்திருந்தது.

அவன் உருகி வழியும் மொழுகு வர்த்தி. அல்லாஹ்வின் சந்நிதியில் மாபெரும் பக்தன்.இனி அவனுக்காக ஓடும் பஸ் நிற்கும்.விமானங்கள் இறங்கும். விலங்குகள் அடிபணியும். காட்டாறு அடங்கும். திமிர்பிடித்த சிறுத்தை கூட பணியும்.

அவன் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட  முனி. அவன் தோட்டத்தில் ஏவாளின் கனி இல்லை ஆதாமின் சாத்தானும் இல்லை. அவனுக்கு நிகர் அவன். அல்லாஹ்வின் அர்ஷில் அவன் மூச்சுக்காற்று முட்டும்.ஜிப்ரயீல் வந்து அவனுக்கு தூது சொல்லுவார்.சித்ரதுல் முன்தஹாவில் அவன் ரூஹ்ம் தங்கும். 

தேவகன்னியரின் கொங்கைகளை பற்றியபடி தேனாற்றில் அவன் குளிப்பான். மது ரசம் ஏந்தி நிற்கும் சொர்க்கலோக கன்னியரின் இடைகளில் முகம் புதைத்தபடி கஸ்தூரியின் வாசத்தை நுகர்வான் புனரப்புனர முடிவுறா இன்பத்தில் அவனை கன்னியர் மூழ்கடிப்பர். 


மேலான பெரியார்களே! பெண்களுக்கு வீட்டுத் தஃலீம் முக்கியம் .இஷாவுக்குப்பின் ஒரு மணி நேரம் வாசியுங்க. தீனுக்காக பாடுபடுவது இந்த துன்யா , துன்யாவுடைய வஸ்துக்களை விட மேலானது. ” மீரான் சிறகடித்தான்

5

”உம்மா தேடுவாக நான் போய்ட்டு வாரன், சொன்னது நெனப்பிருக்கட்டும் செல்லமாக லைலாவின் முகத்தை கிள்ளி விட்டு  நெடு நேரமாக கதைத்துக்கொண்டிருந்த நியாஸ் விடைபெற்றுச்சென்றான்.

மௌனமாய் எரிந்த திரியை தூண்டிவிட்டுச் செல்கிறான் பாதகன்.அவள் குழப்பங்களின் மொத்த உருவாய் மாறிப்போனாள்.

நள்ளிரவு நெருங்கும் தருணம் அவள் இதயம் அடித்துக்கொண்டது.கணத்த நெஞ்சுடன் உள்ளறைக்குள் சென்றாள்.

வெகு நாளாய் படுக்காத மஞ்சத்தை தட்டி சரிந்து கொண்டாள்.சிமினி விளக்கின் பிஞ்சு ஒளி அறை முழுக்க வழிந்திருந்தது.வீட்டின் மூலைக்கு மூலை ஒட்டடைகள் அடைந்திருந்தன.ஒழுங்குபடுத்தப்படாத பொருட்கள் வீடு முசிய இரைந்து கிடந்தன.படுக்கயறை அவளுக்கு மூச்சுமுட்டியது. கதவு சாத்தப்படாத வெளிவாசல் மௌனமாய்  அடைந்திருந்தது.அதில் அவள் விழிகள் ஆர்வமுடன் மொய்த்து நின்றன.


தூரத்தே நாய்கள் குறைக்கின்றன.புறவளவில் நின்ற ஆடுகள் அரவம் கண்டு மிரள்வது தெரிகிறது.மரக்கிளைகளில் அடைந்த கோழிகள் சலனத்துடன் அசைகின்றன. அவள் செவிப்பறை நுண்ணிய ஒலிகளுக்கும் வசியமாயிருந்தது.வாப்பா புரண்டு படுக்கின்றார் நார்க்கட்டில் கீச்சிடுகிறது.

உம்மாவுக்கு மாத்திரை மயக்கம் தீரவில்லை. மெலிந்த குறட்டை ஒலி வாப்பாவுடன் பொருதுகிறது.வாசலில் ஆளரவம்.கூதலில் கொடுவும் குஞ்சுப்புறாவாக தேகம் நடுங்கியது.ஏறி இறங்கும் மார்பின் துடிப்பு கணத்துக்கதிக்கிறது.

ஜிவ்வென உடல் அதிர்ந்து அலற, லைலா வாசக்கதவில் கண் பதிக்கிறாள். மோகன இருள் அறை முசியப் பரவுகிறது. திண்ணைக்குள் ஊரும் நிழல் நெருங்க நெருங்க லைலா நடுக்கத்துடன் எழுந்து நின்றாள்.



2006‏‏-‏02‏‏-.28‏   

பிரசுரம் வீரகேசரி உயிர் எழுத்து 03.07.06

Sunday 4 May 2014

 மகளிர் தின நிகழ்வு-கோரளைப்பற்று மத்தி  பிரதேச செயலகம்
மகள் -அமாறா சிறீன்

மண்முனைப்பாலம்

அலுவலக நண்பர்களுடன் காத்தான்குடி கடற்கரையில்

மகள் மற்றும் தம்பியின் மகன் அஸ்கரி அஹ்மத்

மகள் -அமாறா சிறீன் மட்டக்களப்பு வாவி


என் தோட்டத்தில்


ஈஸ்ட் லகன் ஹோட்டல் முன் 
இளைஞர் பயிற்சியில் பரிசில் வழங்கும் போது ஏறாவுா்


மகள் -அமாறா சிறீன்


மகள் -அமாறா சிறீன் திருகோணமலை அஷ்ரப் துறைமுகம் பின்னால் லோகேஸ் ஹேப் மிதக்கும் புத்தக கப்பல்


                                    லோகேஸ் ஹேப் மிதக்கும் புத்தக கப்பல்

லோகேஸ் ஹேப் மிதக்கும் புத்தக கப்பலில் மகள்

மகள்- பாலர் பாடசாலை வெளியேற்று விழா

லோகேஸ் ஹேப் மிதக்கும் புத்தக கப்பலில்

மகள்- பாலர் பாடசாலை வெளியேற்று விழா



பிள்ளைகள் மூவரும் வீட்டில்

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...