Thursday, 27 January 2011

சாபம்

காற்றின் துவர்ப்பு 
நுணி நாவில் கரைகிறது
விழியழுத உவரலைகள் 
நெஞ்சின் மேல் வாரியடித்தன பெருங்குரலாய்.

என் செய்தீர் வீரர்காள் என்னினத்தானை?
அத்தாங்கு கொண்டள்ளி
சுடு மணலில் கொட்டிய மீன்களென
வெடி குண்டு கொண்டல்லோ 
குழியிட்டு மூட வைத்தீர்.

கடலின் அந்தரத்தில் 
பிரலாபித்ததெம் ஆத்மா.
சாவென்னும் தீ மூட்டி எம்முயிரை கொன்றொழித்தீர் வீரர்காள்
கொன்றொழித்தீர்.

சக மொழி பேசுவோனை,
சக தேசத்தானை 
ஏனங்கு குறிவைத்தீர்?

வரி தந்தோம் (தருகிறோம்)
நீவீர் பயந்தொதுங்கி வந்த போது
இடம் தந்தோம்.
உயிர் தந்து விடுதலைக்காய் உருக்குலைந்தோம்.

எமக்கென நீர் எது தந்தீர்
வீரர்காள்?

இதோ
அநீதி இழைக்கப்பட்ட
என்னினத்தானின் சாபம்
உமை  நோக்கி எழுகிறது. நிச்சயம் ஓர் நாள் அது 
உங்கள் விடுதலையை பொசுக்கும்.

கீறல் 01,2002

Wednesday, 12 January 2011

ஜின்

வீட்டுக்கு அடங்காத 'தலதெறிச்ச' பிள்ளைகளை வேதம் படிக்கவென வலுக்கட்டாயமாக மதரசாவுக்கு சேர்த்து விடும் ஒரு காலமிருந்தது. ஆகம நியதிகளை கற்று ஞான தீட்சை பெறும் இளங்குருக்கள் பழைய சேஷ்டைகளை மறந்து மிக அடக்கமாக நடந்து கொள்வர்.

1985  இன் முற்பகுதி குதியான் பருவத்தில் பனை மரம், நாவல் மரம், மா மரம் எனப் பாய்ந்து திரிந்த அலியை அவனது வாப்பாவான முஹம்மது முத்து மரிக்கார் மதரசாவுக்கென நேர்ச்சை செய்து பிரகடனப்படுத்தி விட்டார். குடும்பங்கள் கூடி மகிழ்ச்சியில் திளைத்து, நார்சா கொடுத்து லெப்பை வந்து பாதிஹா ஓதி மாப்பிள்ளையை அழைத்துப்போவது போல் அலியை மதரசாவுக்கு அழைத்துப்போனார் மரிக்கார்.

முன்பனி உறையும் குளிர்காலம். வைகரையின் செளர்ந்தர்யங்களை தொலைத்துக்கொண்டு ஊளையிட்டபடி மூச்சிரைத்து வந்து நின்றது மட்டக்களப்பு உதய தேவி. அலி வாப்பா சகிதம் இரயிலில் ஏறிக்கொண்டான். முழங்கால் தழைய தைக்கப்பட்ட ஜிப்பா தலைப்பாகை. தொப்பி, புது லேஞ்சு, முதன் முதலில் வாங்கிய 'அன்ட வெயார்' ஒரு பீங்கான், தேனீர்க் குவளை. பெட்சீட், துவாய் ஒன்றிரெண்டு சந்தன சோப், ஐந்து பார் சோப்,பென் குயின் நீலத்திரவப்போத்தல். அலியின் உம்மா விடிய விடிய விழித்திருந்து சுட்ட முறுக்குப் பலகாரம். கொக்கச்சி, சீனி மா, அய்ட்டங்கள் அனைத்தும் மரிக்காரின் கையில்.

அலியின் தோளிலோ புத்தம் புதிய 'ரவல் பேக்' பச்சைக்கலரில்.    பையின் தோள் மணம் மூக்கைப்பிசைந்தது. பையின் 'சிப்' வந்து முடியும் நுணியில் தொங்கும் ஒரு சின்னப்பூட்டு. சாவி டரவல் பேக்கின் வெளியறைக்குள் பத்திரமாகக்கிடந்தது.

மதரசாவுக்கு செல்வதென்றால் 'வாட்ச்' வாங்கித் தரவேண்டும் என்ற பிடிவாதத்தின் பயனாக கிடைத்த 'மொண்டியா' மணிக்கட்டில்  உருண்டு திரண்டு சிமிட்டிக்கொண்டிருந்தது.அடிக்கொரு தரம் அதைத்திருப்பித்திருப்பி மணிக்கட்டில் இருக்குமாறு சரிபார்த்துக்கொண்டான்.புத்தம் புதிய தோல் சப்பாத்து காலைக்கடித்தபடி கிடந்தது. வாப்பா காத்தான்குடியில் இறக்கி தயிர்வடையும் டீயும் வாங்கிக்தந்தார்.

இலங்கையில் பெயர் பெற்ற மதரசாவுக்கு கால்பதிக்கையில் நெஞ்சுக்கூடு பதகளித்தது. கருகருவென்ற அடர்ந்த தாடிகள்,முழங்கால் தொடும் நீண்ட ஜிப்பாக்கள் பச்சைநிற பாம்புகளென தோளைத்தொட்டுத்தொங்கும்  தலைப்பாகைகள்.

உஸ்தாதின் முன் அலி நிற்கிறான். அலிக்குப்பினால் வாப்பா. கூனிக்குறுகி மரியாதை கலந்த அச்சத்துடன் ஒடுங்கி நிற்கிறார்.காலில் விழவும் தயார் என்ற பவ்வியம்.

'தம்பி நல்லா ஓதுவியா? '

உஸ்தாதின் குரல் தடித்து அவனில் எகிறி அறை முழுக்க வெடிக்கிறது.

'இப்புடி வா'

 அவரருகில் வரும்படி  சைக்கினை செய்கிறார். மகுடிக்கு மயங்கிய  நாகமென உஸ்தாதின் காலடியில் நின்றான். அவரில் வியர்வையுடன் மசிந்து ஜன்னதுல் பிர்தவ்சின் திவ்யம் நாசி விடைத்து கல்பு நிறைகிறது. அறையை நோட்டமிட்டான் சுவர் ஓரமாய் ஒரு கருங்காலிக் கட்டில் , மேசை ,நாற்காலி.
மேசை நிறைய தினுசான புத்தகங்கள். காகிதங்கள்.அலியின் தொண்டைக்குள் புளியானம் உறைந்தது.

'ஓம் ஹசரத்'

ஆகிரத்துல உனக்கும் அல்லாகுத்தஆலலா சிபாரிசுக்கு சங்கை செய்வான்.

'ஆ நல்ல பொடியன்'       அல்ஹம்த ஓது பார்ப்பம் '

அஊதுவில் தொடங்கி வழல்லாழீன் ஆமீனில் முடித்தான்.

 உடுத்தியிருந்த வெள்ளைச்சாரன் பிருஸ்டத்தில் ஒட்டிக்கொண்டு திமிர்காட்டியது.  உஸ்தாது மூக்குப்பொடி உறிஞ்சிக் கொள்ள குணிந்த தருணம் பார்த்து பிரயாசைப்பட்டு அதைப்பிய்தெடுத்தான்.அசிங்கமாக அங்கெயெல்லாம் கையப்போடக்கூடாது என்பது போல் வாப்பா கண்களால் எச்சரித்தார்.
உஸ்தாத் சாய்வு நாற்காலியின் முனையைத்திருகியபடி ஆழ்ந்து சிந்தித்ததார்.பின் அலியை நோக்கி கனிவான இள நகையுடன் கேட்டார்.

'நல்லம் அர்கானுல் ஈமான் சொல்லு?'

ஒரு வாரத்திற்கு முன் விடுமுறையில் வந்திருந்த அலியின் ஊர்க்காரன் அசன் இதே மதரசாவில்தான் ஓதுகிறான்.கேள்விகளின் ரகம் அதற்கான பதில்கள் எல்லாவற்றையும் விலாவாரியாக சொல்லிக்கொடுத்திருந்தான்.அர்கானுல் ஈமான் ஒப்புவிக்கப்பட்டது.உஸ்தாதின் முகம் பூர்ப்பில் மலர்வதை அலியும் வாப்பாவும் ஏகத்தில் கண்டனர்.

'ம்... மரிக்காரின் பொடியன் நல்ல கெட்டிதான்.

வாய்விட்டுப்புகழ அலி கால்பாவாது மிதந்தான். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட தெய்வக்குழந்தையாகிய திமிர் நெஞ்சுக்குள் பரவியது.  வாப்பா பூரிப்பில் திளைப்பதை முகம் உணர்த்தியது.

உஸ்தாதின் அறை ஒரு விந்தையான உலகமாய் விரிந்தது. அலியின் விழிகள் வியந்து வியந்து அறை முசிய வலம் வந்து ஈற்றில் அந்தக்கருங்காலிக் கட்டிலில் முட்டிநின்றது.

அலியின் உம்மாவுக்கு மூத்தப்பா சீதனமாய் கொடுத்த கருங்காலி பெட்டகத்தின் நினைவு மனசில் மேலெழுந்து கல்பை அடைத்தது.அதற்கு ஏக சொந்தக்காரியான உம்மாவின் நினைவு அவட மீன் கரியின் ரசம் என ஒவ்வொன்றாய் சங்கிலித்தொடராக அலியின் நினைவுச்சந்தைக்குள் இரைச்சல் கொடுத்தது. தொண்டைக்குள் காலையில் வாப்பா வாங்கித்தந்த தயிர்வடை மகா வளையமாக குறுக்கே கிடந்தது.

Friday, 7 January 2011

இன்னொரு மாலைப்பொழுதிற்காய்..........

மாலைத்தேனீர் 
ஆறிக்கிடந்தது.
என்னுடன் நீ 
பரிமாறிக்கொள்ளும்
ஓராயிரம் கனவுகளும் 
விழிகளுள் நொருங்கிச்சிதறின.

தேனீர்க்குவளையின்  விளிம்பினிடை
நமது எல்லைகள் விரியும்,
சுதந்திர நினைவின் எதிரொலி நம் விழிகளில் கசியும்.
காலம் முகிழாக்கனவுகளும்
வெகுளித்தனகளுமற்ற ஓர் உள்ளுலகில் 
நாம் வாசமிருந்தோம்.

நம் சிநேகிதம் 
இப்படித்தான் நித்யம் பெற்றது.

நேற்று முன்னிரவு 
என் விரல் தழுவிய
உன் விரல்களின் மென்னுரசல்
இன்னுமென்  உள்ளங்கையில் சுடுகிறது.

ஊர் செம்மண் தரையில் கை கோர்த்து
நடக்கையில்- நீ 
ஒரு கவிதை போலச்சிரித்து வந்தாய் என்னுடன்.

காலங்கள் நெடுகவும்
இப்படி சிரித்துத்திரிவாய்
என்ற என் கணிப்பீட்டின் மீது 
அவர்கள் துப்பாக்கி கொண்டு 
அழித்து விட்டு சென்றனர்.
என் பிரிய நண்பனே
குறைந்தபட்சம் 
நீ எதற்காக என்றேனும் அறிவாயா?

2000-10-14  - மூன்றாவது மனிதன் - 2000

Thursday, 6 January 2011

குருவிக்கூடும் சில குரங்குகளும்.

இதுவல்ல என்னிலம் 
உதிரமும், சதையுமாகி
குருவிச்சிரமமாய் 
புனரமைத்த  வீடு என்னது.

என் மனையோ மழலையின்
சிரிப்புத்ததும்பினது
 சொந்தங்களினதும், நண்பரினதும்
சகவாசம் சுமந்த தலைவாசல் என்னது.

அதனுள் என் பேடையுடன் இரவிலும்,பனி விசிறும் மாலையிலும்
முயங்கிக்கிடந்தேன் தனிமையில்.
என் வீட்டை என்ன செய்திருக்கிறாய் 
கொடியவனே
என் கவிதைகள் மூச்சுத்திணறி சாகும் வரை
தீ-நாக்கால் 
துளாவினாய் என் கூரையின் மேல்
நான் துடித்து நின்றேன்.

நான் பார்த்திருக்க 
என் சதையும், உதிரமும்
கரைந்தோடி உறைந்திற்றேன்  காலடியில்.
என் புறாக்களின்
மாடத்தை நீ-தகர்த்தெறிந்தாய் 
உன் - சாமாதானப்போரால்.

உருகி வழிந்து தரையுடன் உறைந்திருக்கும் 
மெழுகுவர்த்தி சிதைவென 
இதோ என்னிலம்.

கழுதைகள் சயனிக்கவும், நாய்கள் புணரவுமான 
மயானமாக்கினாய்
என்  வீட்டை.
என் பூவலில் 
நீ - கடித்துண்ட மனிதரின்
எலும்புகளை வீசிச்சென்றாய்.

பார் 
என்  வீட்டை
பெருவெளியில்
மழை கரைகிறது.
 வெய்யிலில் கருகிறது.

உன் நண்பர்களின் சப்பாத்தொலியிலும் 
எக்காளச்சிரிப்பிலும் சிறுத்து நிற்கிறது என் வீடு.
இனி எப்போதுமுள்ள 
என் வாழ்க்கையைப்போல.

 2000-06-08 சரிநிகர் 99