Saturday, 14 November 2015

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

50

இப்படி அந்த எதிர்ப்பு நீண்டு செல்கின்றது.
யதீந்திரா போன்ற புலி அபிமானிகளின் பார்வையில் புலிகள் நல்லவர்கள்.அவர்கள் மனம் நோக ஒரு ‘அ’ க்கூட எழுதிவிடக்கூடாது.மற்ற இனத்தின் மீது என்னதான் அத்துமீறல் செய்தாலும் அதனை வாய் பொத்தி கைகட்டி பார்த்திருக்க வேண்டும்.இதனை மீறுபவர்கள் புலி எதிர்ப்பாளர்கள். தேசத்துரோகிகள் .
யதீந்திரா போன்றவர்களிடம் நான் கேட்பது ஒன்றுதான் 30 வருட போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு புலிகள் பெற்றுக்கொடுத்த தீர்வு என்ன?
என்னிடம் இருக்கும் மனப்பதிவு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டபின்பும்,மனநோயாளியாக மாற்றப்பட்டபின்பும்,அங்கவீனர்களாக ஆக்கப்பட்டபின்பும்,சொத்தழிவுகள் ஏற்பட்ட பின்பும், மக்கள் அலைந்துழந்து நிம்மதியிழந்தபின்பும் நீங்கள் பெற்றுக்கொண்டது ஒரு முன்னால் முதலமைச்சர், ஒரு அரை அமைச்சர்.இப்போது ஒரு முதலமைச்சர்.
பேரினவாத்தின் ஓங்கிய கரங்களை மடக்கிவிடமுடியாத இவர்களால் இன்னும் தமிழ் மக்களின் பிரகாசம் ஜொலிக்கின்றது என்ற சிலரின் கனவுகள் பலிக்க நானும் யதீந்திரா போன்றவர்களுடன் இணைந்து பிரார்த்திக்கின்றேன்.அது நிற்க!
நினைவில் மலர்ந்த மலர்கள் உங்கள் விழிகளில் மருந்தாகி ,சில நேரம் விருந்தாகி இதயங்களை தொட்டுச்சென்றிருக்கும். இந்தப்பத்தியை எழுத ஆரம்பித்த போது எங்கே ஆரம்பித்து எப்படி முடிப்பது என்ற அச்சம் எனக்குள் இருந்தது. எழுத ஆரம்பித்த போது விடயங்கள் வெள்ளம் போல் மடை திரண்ட போது எப்படி முடிப்பது என்ற அச்சம் பின்னெழுந்தது யதார்த்தம்.
தோண்டத்தோன்ட நினைவின் பெட்டகத்திற்குள்ளிலிருந்து புதையல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.அதனை தொட ஆரம்பித்தால் முடிவுறாமல் போய்க்கொண்டே இருக்கும். சொல்ல மறந்த கதைகள் எத்தனையோ இடையில் வந்து போய்விட்டன. அவற்றையெல்லாம் சொல்லி விட முடியவில்லை.
இன்னும் பல நூறு கதைகள் ,துரோகம்,ஏமாற்றம்,துயரம், மகிழ்ச்சி என ஊஞ்சலில் ஆட காத்திருக்கின்றன.இந்தப்பத்தியில் வந்த சில திகிலூட்டும் விடயங்களை நிஜமா என வியந்தும்,ஐயமுற்றும் நண்பர்களில் சிலர் கேட்கின்றனர்.எல்லாக்கதைகளும் நிஜத்திலிருந்து பிறந்தவை.கற்பனைக்கு இதில் இடமில்லை. ஒரு சமூகத்தின் கலை கலாசார அரசியல் வரலாற்றினை எனக்குத்தெரிந்த மொழியில் சொல்லியிருக்கின்றேன். எனக்கு  பட்டுக்கோட்டை பிரபாகர் போல் மர்மங்களை சொல்லி பயமுறுத்தும் தைர்யம் கிடையாது.அல்லது நமது ஈழத்தில் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் சில ரமணி சந்திரன்களைப்போல் திகிலூட்டவும் வராது.
என்னுடைய பெரும்பாலான கதைகள் என் அனுபவத்தில் வெளிப்பாடு. அது போர்க்காலமாகட்டும்,அல்லது தனிநபர் அறம், உணர்வுசார் அம்சமாகட்டும்,எதுவாகினும் அதன் பின்புலத்தில் என் மூன்றாவது கண்ணும் நுழைந்திருக்கும்.
வறுமை,அச்சம், உயிர்ப்பயம்,அகதி வாழ்வு, சுகபோகம் என எல்லா வாழ்வையும் அனுபவித்திருக்கின்றேன்.குடிசைகொட்டிலில் ‘டேஸ்ட் கிழங்கு’ம் ‘பாபத் அவியலு’ம்,  ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உயர் ரக உணவும் ருசித்துப் பார்த்திருக்கின்றேன். கஞ்சிக்கே வழியில்லாமல் இளமையில் துடித்தும் இருக்கின்றேன். ஒரே ஆடையில் ஒரு வருடம் பள்ளிக்கூடம் பொது நிகழ்ச்சி என்று கந்தையாயினும் கசக்கி கட்டியிருக்கின்றேன்.விதம் விதமாய் ஆடைகள் அணிந்தும் பார்த்திருக்கின்றேன்.
வீடற்று அலைந்ததும் குதூகலம் நிறைந்த வீட்டில் வாழ்வதும் என இரண்டு தருணங்களை வாழ்வில் இறைவன் எனக்கு தந்திருக்கின்றான். துன்பமும்,இன்பமும் என்னளவில் அல்லாஹ்வின் சோதனை அதில் துவண்டு விடாமல் பின்னயதில் துய்த்துவிடாமல் வாழ்ந்தால் வாழ்க்கை சம நிலையாக ஓடும்.
எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையில் சத்தியத்தை பேண நினைக்கின்றேன். அதை பின்னபற்றியொழுகவும் செய்கின்றேன். ஆணவம், அகம்பாவம்,வித்துவச்செருக்கற்ற  படைப்பின் மூலம் இந்த சமூகத்திற்கு பல விடயங்களை சொல்லியிருக்கின்றேன்.இது எனது இரட்சகன் எனக்கு தந்த அருட்கொடை.
வாழ்வில் எல்லா நிலைகளிலும் அவனின் இந்த அருட்கொடை மீது அளவில்லா நம்பிக்கை கொண்டுள்ளேன். எழுத்தாளன், திருடனாக.. கொலைகாரனாக, ஏமாற்றுபவனாக..பொய் சொல்பவனாக. .போட்டுக்கொடுப்பவனாக….ஊழல்மிகு வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக.. ஏய்த்துப் பிழைப்பவனாக இருப்பதை விட அவன் பிச்சை எடுப்பது மேல் என்பது எனது கொள்கை.
இந்த தொடரை தொடராகப்படித்து என்னை ஊக்கப்படுத்திய ஆலோசனை சொன்ன நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் இதனை பிரசுரித்து உதவிய எங்கள் தேசத்தின் ஆசிரிய குழாத்தினருக்கும்,நான் ஆடிய ஊஞ்சலின் கயிறுகள் அறுந்து விடாமல் என்னை கரை சேர்த்த இறைவனுக்கும் பல கோடி நன்றிகள்.
இனி ஊஞ்ஞல் நிற்கும்.

மழை

   நெடுநாளாய் மழை பெய்து கொண்டிருக்கின்றது.மழை எப்போதும் என் உகப்புக்குரியது,வியப்பிலாழ்த்துவது.வீட்டின்  ஜன்னலோரம் அமர்ந்தபடி மழையின் தூரல்களை வருடிக்கொண்டிருக்கின்றேன்.இந்த மழை நாள் மட்டுமே வீட்டில் என்னை கட்டிப்போடும்.பிள்ளைகளுடன் விளையாடவும்,பழைய புத்தகங்களை கிளறவும்.எனது படிப்பறையை ஒழுங்குபடுத்தவும் கொஞ்ச நேரம் தொலைக்காட்சிப்பார்த்து, ரசிக்கவும் மணிக்கணக்காக வீட்டைச்சூழ மலர்ந்திருக்கும் மலர்களை வருடியபடி நடக்கவுமான அவகாசத்தினை மழை எனக்கு தருகிறது.
மழைக்காலம் எழுதுவதற்குறிய உந்துதல் கிளறும் காலம்.அனல் காலத்தின் நசநசப்புக்கிடையில் எழுத்தும் உன்னத மனமும் கருகிப்போகும்.அழகின் வாத்சல்யங்களையும்,அதிசயங்களின் அபிநயங்களையும் ஆரோகணிக்கும் இந்த மழைக்காலத்தின் முன் ஒரு குழந்தையாகிப்போகின்றேன்.
பொடுபொடுத்துப் பெய்யும் மழை மேலும் காதலை கிளறச்செய்யும். கிளர்ச்சிகளின் மாயங்கள் முடிச்சவிழ்க்கப்படமால் என்னை தாப்புக்காட்டும்.
காமத்தின் கிளைகள் துளிர்த்துப்பசளிக்கும் வண்ணங்களையும் மழைதான் தாளித்துக்கொட்டும்
எத்துனை தாளத்துடன் மழை  இந்த  மண்னை நனைக்கின்றது. மெல்லிய தூரலில் சைக்கிளில் செல்வது எனகுப்பிடித்தமானது.நீர்த்திவளைகள் நெஞ்சிலும் முகத்திலும் அடிக்கும் அழகில் சொக்கிப்போவேன்.
மழை நாட்களில் குளத்தின் கரையில் அமர்ந்து கொண்டு குளத்தினை ஊடுறுவிப்பார்த்திருக்கின்றேன்.
குளத்தின் மையத்தில் விழும் மழைத்துளியின் வீச்சம்தான் எத்துனை ஆரவாரமாய் இருக்கும்.மழை நாளில் காடுகளுக்குள் நின்றிருக்கன்றீர்களா அது ஒரு ஆனந்த உலகம்.வனத்தின் இடுக்குகளில் பட்டுத்தெறிக்கும் மழையின் உக்கிரத்தில் ஆகாயத்தின் ஜலக்கதவுகளின் ஊடே மழை ஆக்ரோசமாய் கொட்டும். 

திடுதிடுவென காடே அதிரும்.குரங்குகள் கொடுவிக்கொண்டு அடர் கிளைகளுக்குள் பதுங்கிக்கிடக்கும்.மேய்ச்சலுக்கு வந்த மாடுகளும் வாலைச்சுருட்டி பிருஷ்டத்துக்குள் சொருகிக்கொண்டு  அசைபோட்டபடி அப்படியே நிற்கும்.இயங்கும் அத்தனை வஸ்த்துக்களையும் அதனதன் இடத்தில் நிலைத்து நிற்கச்செய்யும் மாய  மந்திரம் மழை.

மழை அழிக்கவும் ஆக்கவுமான திறவுகோளை காவிக்கொண்டு இந்த மண்ணிற்கு வருகின்றது. விருப்பமற்றவர்களை மண்ணுக்குள் இழுத்துக்கொள்கின்றது. வீடுகளுக்குள் அழைக்காமல் வரும் விருந்தாளியாய் நுழைந்து துவம்சம் செய்கின்றது. கட்டுக்கடங்காமல் அணைகளை உடைத்து குதித்துப் பாய்ந்து வெறித்தனமாய் எல்லேரையும் தாக்கி அழிக்கின்றது.

வயல்நிலங்கள் குடியிருப்புக்கள் மரம் செடிகள் குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என சகட்டுமேனிக்கு மூா்க்கத்துடன் ஏப்பமிட்டு தன்பாட்டில் போய் கடலில் தஞ்சம் புகுந்து கொள்கின்றது.

என்னைக்கிளர்ச்சியு!ட்டிய மழை ஒரு கோழை. எல்லாவற்றையும் அழி்த்து விட்டு கடலில் போய் பதுங்கிக்கொள்கின்றது.பிரித்தெடுத்து தண்டிக்க முடியாத பலசாலியிடம் தன்னை சங்கமாக்கிக்கொண்டு ஆணவமாய் சிரித்துக்கொண்டு கரையை முட்டிவிட்டுச்செல்கையில் மழையின் மீது சினம் வருகின்றது.
தொண்டர்களை ஏவிவிட்டு எதிராளியை தாக்கும் சொரணையற்ற அரசியல்வாதியைப்போல் இந்த மழை தராதரம் பார்க்காமல் எதுவும் நடக்கவில்லை என்பது போல் மீண்டும் மண்ணில் விழுகிற போது மனம் குதூகளிப்பதை என்னவென்று சொல்ல .?