Saturday 2 June 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


தொடர் -15

ஜின் என்றவுடன் என் நினைவு மரத்தில் பல ஊஞ்சல்கள் ஆடத்தொடங்குகின்றன.ஜின்னை வைத்து ஒரு கதையே பின்னியிருக்கின்றேன்.(ஜின்- பிரசுரம் முஸ்லிம் குரல் 2005 உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி சிறுகதைத்தொகுதியில் இக்கதை சேர்க்கப்பட்டுள்ளது) 

நான் அட்டாளைச்சேனை விடுதியில் தங்கிப்படித்த காலம். மாலை வேளையில் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையின் விளையாட்டு மைதானத்திற்குச்செல்வோம்.அங்கிருந்து ஒரு பொடி நடை போட்டு அக்கரைப்பற்று எல்லை வரை சென்று விட்டு திரும்புவோம். இப்போது வைத்தியசாலை அமைந்திருக்கும் இடம் கருங்கொடித்தீவின் எழுவட்டவான் மைதானம்.சதுப்பு நிலம்.

 நண்பர்கள் புடை சூழ இலக்கியத்தின் வேர்களை கெல்லி எறிந்து விளையாட்டு நடக்கும்.நண்பர்களான எம்.பௌசர்,என்.ஆத்மா,ரஷ்மி,மஜீத் (பொத்துவில்), கருங்கொடியூர் கவிராயர் என அறியப்பட்ட மறைந்த நண்பர் அமீனுத்தீன்,ஏ.எம் தாஜ் அக்கரைப்பற்று ஜாபிர்.என ஒரு பட்டாளமே கூடியிருப்போம்.வாராந்தம் தினகரன் கவிதை சாகரத்திலும்,சரிநிகரிலும் பிரசுரமாகிய எங்களின் கவிதைகளைப் பற்றிய கருத்துக்கள் விவாதிக்கப்படும்.

காலம் இப்போது எங்களை திசைக்கொன்றாகப் பிரித்துப்போட்டுள்ளது. ஆளுக்கொரு திசை. அந்தக்கனாக்காலம் மீண்டும் வராதா என்ற ஏக்கம்! அக்கரைப்பற்றுக்குச் செல்லும்போதெல்லாம் மனசில் வந்து மோதிவிட்டுச்செல்கிறது. 

 இலக்கிய அரட்டைக்குப்பின் மீண்டும் அட்டாளைச்சேனைக்கு நடை. நான் மைதானத்திற்கு செல்லாத நாட்களில் நண்பர் பௌசர் விடுதிக்கு வந்துவிடுவார்.துவிச்சக்கர வண்டியில் வியர்த்து விறுவிறுக்க பெடலில் ஒரு காலும் தரையில் மறுகாலுமாக நின்றபடி கதைப்பார். முக்கிய இலக்கியத்தகவல்களை தந்துவிட்டுப்போவார்.

 அக்காலத்தில்தான் அவரின் கைவண்ணத்தில் தடம் இலக்கிய சஞ்சிகையும் வெளிவந்துகொண்டிருந்தது.

இப்படித்தான் ஒரு மாலை நேரம் நடையை முடித்து விட்டு திரும்பிய நேரம் விடுதியில் இருக்கும் பள்ளிவாயலில் மாணவர் கூட்டம் திமுதிமுவென்றிருந்தது. என்னவென்று எட்டிப்பார்த்தால் அக்குரனையைச் சேர்ந்த ஒரு மாணவர் படுத்தபடி இருந்தார்.கண்கள் முகட்டை வெறித்தபடி இருந்தன.என்னவென்றேன். இவருக்கு ஜின் பிடித்திருக்கு என்றார்கள்.

 விடுதியில் இணைந்து ஆறு மாதம் இருக்கும்.ஹஜ் விடுமுறைக்குப்பின் அடுத்த விடுமுறைக்காக கலண்டரின் பக்கங்கள் நீண்டு செல்வதால் ஜின் பிடிக்க வாய்ப்பு அதிகம். விடுமுறைக்குப்பின் விடுதிக்குக்குத்திரும்பியதும் முதல் வேலையாக அடுத்த விடுமுறை எப்போது வருமென்று ஊகித்து குறித்த மாதத்தில் திகதிக்கு நேர் கோடிட்டு வைப்போம். ஓவ்வொரு நாளும் நாட்களை கணக்கிடுவதில் அப்படியொரு சந்தோஷம்.

பெரிய உஸ்தாதுக்கு தகவல் போய் சேரவும் அவரிடம் உள்ள ஜின் விரட்டும் பிரம்பு வரவும் நாங்கள் கலைந்து போனோம்.ஆனால் சற்று தூரத்தில் நின்றபடி அந்த ஜின் உஸ்தாதின் பிரம்படியில் அலறிச்செல்லும் காட்சியைப்பார்க்க ஆவலாய் இருந்தோம்.

சும்மா நின்றிருந்த நண்பர்கள் நிறையக்கதைகளை அவிழ்த்துவிட்டார்கள். 
'சாமத்துல பாத்றூம் போய் குந்தினா ஆருண்டு தெரியா மச்சான் வெளியில நின்று லைட்ட ஓப் பண்ணுரதும் போடுரதுமாக இருந்தாங்க. வெளிய வந்து பார்த்தா ஒருத்தரும் இல்ல.' என்பான் ஒருவன்.

' எனக்கும் அப்படித்தான்டா ஹவ்லுல தண்ணிய அள்ளி இறைக்கிற மாதிரி சத்தம் கேட்டுச்சி பார்த்தா தண்ணி ஆடும் ஆள் இல்ல.' என்றான் இன்னொருவன் 

 ஜின் மின் குமிழ்களை அணைக்கும் கதை இதுதூன். களப்புப்பகுதியில் (பக்கத்தில் அழகான நீண்ட தாமரைக்குளம்)அதிகமான காற்று வீசும்.பழைய ஹோல்டர் காற்றுக்கு இடம் விட்டு பின்பு சரியாகி விடும். இடம் விடும்போது லைட் ஓப் ஆகும். சரியாகும் போது லைட் எரியும். ஜின்கள் இலங்கை மின்சார சபையில் ஓய்வில்லாமல் இராப்பகலாக வேலை செய்வதை நினைத்தால் பாவமாக இருக்குது.

பெரிய உஸ்தாத் ஜின்னுடன் இரகசியமாக பேசினார்.அவர் சூரதுல் ஜின் (ஜின் அத்தியாயத்தை) ஓதி ஜின்னை வசியம் பண்ணப்போரார் என்றான் ஒருவன். அப்ப நாம சூரதுல் பீல் (யானை அத்தியாயம்,) சூரதுன்னிசா (பெண்கள் அத்தியாயங்களை) ஓதினால் அவைகளை வசியம் செய்ய ஏலுமாக்கும் என்றான் மற்றொருவன்.

இந்த நவீன யுகத்தில் ஜின்னை விரட்ட இசும் எழுதி தண்ணீர் தாங்கியில் கரைத்து விடுவதும் ,இசுமை நகல் எடுப்பதும் சில மௌலானாக்களின் கைங்கரியம்.மனிதர்களை வசியம் பண்ண இப்ப ஜின்கள் எதற்கு,கையில் ஒரு கார்.கழுத்துப்பட்டி,சகிதம் வீடு வீடாக ஏறி இறங்கி நிதிக்கம்பனிகளின் துதி பாடினாலே போதும் வசியம் ஆகாத சகல சாத்தானும் வசியமாகிவிடும்.வட்டி எனும் மாய வலை விரிக்கப்படும் வித்தை இதுதான்.

  ஒரே சளக்புளக் கதைகள். பெரிய உஸ்தாத் அவனை ஊருக்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாக சொன்ன மறு நொடியில் கண்களை முகட்டிலிருந்து விடுவித்தான்.உஸ்தாத் மன வசியம் படித்தவர்.ஜின்களின் மன ஓட்டங்களை படிப்பது பெரிய சிரமல்லவே! இருந்தாலும் அவர் ஜின்னுக்கு அந்த பிரம்பால் நாலு அடி அடிக்காதது பெரும் ஏமாற்றமாக இருந்தது.

எனக்கும் இப்படித்தான் ஜின்னின் திருவிளையாடல் வாய்த்தது. 1992 இல் மத்திய மாகாணத்தில் குருணாகல் வீதியில் அமைந்துள்ள சிறு நகரம் ஹேதனிய.கண்டி மத்திய பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து கலகெதர,கண்டி,பஸ்களில் ஏறினால் ஹேதெனியாவில் இறங்கலாம். அல்லது வெரல்லகம பஸ்சில் ஏறி,பல்கும்புர என்ற இடத்தில் இறங்கினால் நான் பணி செய்த இடம் வரும். நூற்றுக்கு மேற்பட்ட படிகள் ஏறி சம தரையை தொட வேண்டும். பள்ளிவாயல் மையவாடிக்கு பக்கத்தில். இரவில் ஆட்கள் நடமாட்டம் இல்லை.மரங்களையும் பனிப்புகார்கள் மூடிக்கிடக்கும். பள்ளிவாயலின் அறையில் தனியேதான் தங்க வேண்டும்.மோட்சம் கதையின் கதைக்களம் இந்த ஊர்தான். பணிக்கமர்ந்த சில நாட்கள் தனிமையில்தான் காலம் கடந்தது.தனிமை என்பது அந்த வயதில் பெரிய சுமையாகத்தெரியவில்லை. எதற்கும் அஞ்ஞாத நெஞ்சு.

ஒரு நாள் நள்ளிரவு 2 மணி இருக்கும் நான் அறையில் தனிமையில்தான் தங்கியிருந்தேன். வெளியே தண்ணீர் சத்தம் கேட்டது.யாரோ முகம் கழுவி கை கால்கள் கழுவி தன்னை முழுமையாக சுத்தப்படுத்திக்கொண்டு பள்ளிக்குள் நுழைவதை கேட்டுக்கொண்டுதான் படுத்திருந்தேன்.கால் துடைப்பானில் கால்களை நன்றாக துடைப்பதும் துள்ளியமாக கேட்டது.வெளியே சத்தம் கேட்டால் என்னவென்று பார்க்காமல் தூக்கமே வராது என்பது என் பிறவிக்குணம்.கிறீஸ் மனிதன் விடயத்தில் மட்டும்தான் அது பொய்த்துப்போனது.வருகின்றவர் யாராக இருக்கும் என்ற ஆவலில் கதவைத்திறந்தேன்.

எங்கள் தேசம் -222                                                         ஊஞ்சல் இன்னும் ஆடும்.......

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...