Thursday, 26 January 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


எங்கள் தேசம் பத்திரிகையில் தொடராக வெளிவரும் நினைவுக்குறிப்புகள் 
 

தொடர் -06

பாம்புகள் பற்றி சொன்னேனில்லையா. இந்தப்பத்தியில் ஒரு பரம இரகசியத்தை போட்டுடைக்கவேண்டும். பாம்பென்றால் படையும் நடுங்குமென்பார்கள்.

நான் பாம்பை கண்டு நடுங்கிய,ஆனால் அதிசயப்பட்ட ஒரு உச்சிவெய்யில் நினைவிலாடுகிறது. இன்று நினைத்தாலும் மன ஊஞ்சலில் தூக்கி வைத்து ஆடும்படியான ஆழ்மனப்பதிவு.

ஒரு பகற்பொழுது முள்ளிவெட்டவானில் இருக்கும் என் வாப்பாவின் கடைக்கு செல்கின்றேன். ஓட்டமாவடியிலிருந்து வயல்களை ஊடறுத்துச் செல்வதானால் எட்டு மைல். பிரதான வீதியால் செல்வதாயின் 12 மைல்.

அக்காலத்தில் புது வெளிப்பாலத்தை கடப்பது மகா அதிசயம்.அதைப்பற்றி மர்மக்கதைகள் பல அநாமேதயமாக உலாவித்திரிந்தன. ஏனெனில் அதன் கீழ் வாயைப் பிழந்தபடி படுத்திருக்கும் முதலைகளுக்கு தப்பி, காகித ஆலையின் கழிவு நீரின் துர்நாற்றத்திற்குத் தப்பி, இரு மருங்கிலும் பாதுகாப்பு அரணில்லாத பாலத்தின் ஏகவெளிக்குத் தப்பி என எத்தனையோ உயிராபத்துக்களை தாண்டி புதுவெளிப்பாலத்தைக் கடப்பதென்பது கத்தியில் நடப்பதற்கு ஒப்பானது.

நான் இந்த அவலங்களை எனது துவிச்சக்கர வண்டியின் உதவியுடன் கடந்து போகிறேன்.விழிகளுக்கு எட்டாத தூரத்தில் பச்சைப்பசேலென்ற வயல் வெளிகள். சதா ஓடும் சிற்றோடை. காத்து நின்று இரை கவ்வும் வெள்ளை நாரைகள். இவற்றையெல்லாம் பார்த்தபடி சைக்கிளை ஊன்றி மிதிக்கின்றேன்.

மூக்கர் கல் கடைதாண்டி சைக்கிள் வேகம் கொள்கிறது. இரட்டைத் துரிசியின் கதவுகள் இறுக மூடிக் கிடந்தன. வாகநேரிக்குளம் ததும்பி வழியப்போகிறேன் என அச்சமூட்டுகிறது. வான் போடவில்லை.

ஆனாலும் அலைகள் எம்பி வந்து அணையில் ஓங்கி அறைந்துவிட்டு பின்வாங்கிப் போகின்றன. மீன் வேட்டைக்கென பல தோணிகள் அலையிலாடி மிதந்தபடி தூரத்தே தெரிந்தன.குளத்துக்கப்பால் தெரியும் புனானை ரெயில்வே ஸ்ரேஷனின் மேம்பாலம் துல்லியமாகத்தெரிகிறது.

(புனானை ஸ்ரேஷன் என்றவுடன் ஒரு நினைவு மன ஊஞ்சலில் ஆடிப்பார்க்கின்றது பாம்புக்கதை முடிய அதை சொல்கிறேன்.)

குளக்கட்டில் ஏறி சைக்கிளை மிதிக்கின்றேன். இன்னும் ஒரு மைல் தூரம். நெடுகவும் ஓங்கி வளர்ந்த பனை மரங்கள். அடர்ந்தகாடு,பின்பு ஏகாந்த வெளிகள் என அந்தப்பெரு வெளி அச்சமூட்டும் பரப்பாகவே என் முன் விரிந்து கிடந்தது. நான் கடைக்கு வருவதற்கு இன்னும் அரை மைல்.

என்னை யாரோ பனை மரத்திலிருந்து உற்றுப்பார்ப்பதைப்போல் உணர்கிறேன். சைக்கிள் தானகவே 'பிரேக்" போட்டு நிற்கிறது. சுற்றும் முற்றும் விழிகளை எறிகிறேன்.விரிந்து அலையடிக்கும் குளம்.வலது பக்கம் ஏகாந்த வெளி.நெடுகவும் ஓங்கி வளர்ந்த பனைகள் எனக்கும் ஒரு பனைக்கும் இடையில் தொட்டுவிடும் தூரம்தான்.

அண்ணாந்து பார்க்கிறேன். பனையின் கிளைக்குள் ஒரு கருநாகம். கண்கள் தீச்சுவாலையாக மின்ன என்னை உற்றுப்பார்த்தபடி இருந்தது. கருப்பு என்றால் வார்த்தைகளால் விபரிக்கவியலா கருப்பு. அதன் உடல் நெளிவில் கருப்பின் பிரகாசம் அந்தப் பிராந்தியத்தையே ஜெக ஜோதியாக பரிணமிக்கச் செய்தது. எனது பாதங்கள் நிலைகுத்தி நின்றன. அதன் பார்வை என்னிலிருந்து விடுபடும் தருணத்திற்காக காத்து நின்றேன். 
 
அது என்னையே பாhத்தபடி பாந்தமாக வளையமிட்டு படுத்திருந்தது. கண்கள் மட்டும் என்ன பிரகாசம். தாரினால் ஒரு இராட்சத ஸ்பிரீங்" சுற்றிக்கிடப்பதைப்போல் பனை மரத்தில் அது படுத்திருந்தது.

(பிற்காலத்தில் மிருககாட்சிசாலையில் அதனை நிகர்த்த பாம்புகளும்,கண்களும் இருக்கின்றனவா என தேடிப்பார்த்ததுண்டு.எனது தேடல் பொய்த்துப்போனது.)

எனக்கும் அதற்குமிடையில் நீண்ட மௌனம் உறைந்திருந்து.மதியம் என்பதால் வீதியில் சனங்களும் இல்லை.குளத்தின் சலக்புலக் அலைகளின் தாலாட்டைத்தவிர எதுவுமே எங்களுக்கிடையில் குறுக்கீடாக இல்லை.அது சட்டென சரசரவென்று இறங்கி பனைமரத்தின் புற்றுக்குள் மறைந்து போனது.புற்றுக்குள் இறங்கும் தருணத்திலும்  அதன் பார்வை என்னில் படர்வதை உணர்ந்தேன்.

என்னைக்கண்டு அச்சப்பட்டதாகவோ நான் அதைக்கண்டு அச்சபட்டதாகவே இரண்டு பேருமே காட்டிக்கொள்ளவில்லை. எனினும் பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பதற்கொப்ப நான் நிலைகுலைந்து போனது மகா நிஜம்.அதற்கு காரணம் கனவும் நிஜமுமே அன்றி வேறில்லை.

இந்தக்கனவு கலைந்து எழுந்தபோது அதிகாலை நாலு மணியிருக்கும். உடல் வியர்வையில் குளித்திருந்தது. விடிந்ததும் கடைக்குப்போனேன்.அதிசயம் என்னை வரவேற்க காத்திருந்தது.எந்த பனையில் கருநாகத்தைக்கனவில் கண்டனோ அதே பனையில் அதே கண்களில் தீப்பொறி பறக்க அந்த நாகத்தைக்கண்டு ஆச்சரியத்தில் உறைந்திருக்கின்றேன்.

சிறுபராயத்தில் கண்ட கனவும் நிஜமும் இன்னும் மனதில் சுவரோவியமாய் குன்றாமல் நிற்கின்றது.
ஊஞ்சல் இன்னும் ஆடும்......
எங்கள் தேசம் இதழ் : 213