Saturday 8 October 2011

நேர்முகம் : பகுதி 02


  • ஈழத்துச்சிறுகதையின் இரண்டாவது கட்டப்படைப்பாளிகளில் முக்கியமானவர் ஓட்டமாவடி அறபாத். 
    சிறுகதை,கவிதை,பதிப்பு,சமூகச்செயற்பாடுகள் என்று செயற்பட்டு வருபவர்.     எரி நெருப்பிலிருந்து,   வேட்டைக்குப்பின் என்ற கவிதைத்தொகுப்புகளையும் நினைந்தழுதல்,ஆண்மரம் போன்ற காத்திரமான சிறுகதைத்தொகுப்புகளையும் தந்திருக்கிறார்.   தன் நிலையை,சமுதாயத்தை,தன் மண்ணின் உள் வெளிப்பக்கங்களை புற விசைகளைப் பொருட்படுத்தாது மண்ணின் பச்சையோடு தன் எழுத்துக்களில் கொண்டு வருபவர்.   முஸ்லிம் சமுதாயம்,முஸ்லிம் தமிழ் இன உறவுகள் முரண்களை தீவிரமாக எதிர்கொண்டு, 90களுக்குப்பிந்திய காலத்தில் இருந்து ,வடகிழக்குச்சூழல்,அரசியல், சமூகவியல்,ஆயதவியல் நிலைமைகளை இவரது கவிதைகள், கதைகள் பேசுகின்றன.                    -வாசுகி சிவகுமார்-



4. ஒரு விளிம்பு நிலைச் சமூகம் என்ற வகையில் கிழக்கில் பெரும்பான்மை போலத் தெரியும் சிறுபான்மையான முஸ்லிம் சமூகம் அதன் போலித் தோற்றமான அரசியல் பலம் இந்நிலை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? 

முஸ்லிம்களிள் அரசியல் நிர்ணயம் 1981க்குமுன் நீலம் பச்சை என்றிருந்தது.பெரும்பான்மை சிங்கள அரசியல் கட்சிகளின் அரசியல் நிரலுக்கு முண்டு கொடுக்கக்கூடிய ஒரு சமூகமாகவே அது இருந்தது. 1988இல் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக தன்னை பதிவு செய்து கொண்டதின் பின் 1994 இல்  அது ஏக காலத்தில் 9 ஆசனங்களைப்பெற்று தேசியக்கட்சிகளின் கனவுக்கோட்டையாக மாறியது. முஸ்லிம்களின் வாழ்வுரிமைப்போராட்டத்தை தேசிய சர்வதேச மயமாக்கியதில் முஸ்லிம் காங்கிரசுக்கு கணிசமான பங்குண்டு . அதன் தலைவர் எம்.எச்எம்.அஷ்ரபின் மரணத்துடன் முஸ்லிம்கள் அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளனர்.  அரசியல் பலமும் சிதைவடைந்து விட்டது. 

போலித்தனமான அரசியல் கோஷங்களும்,கிளைவிடும் பல கட்சிகளும்,சுய நல கட்சித்தாவல்களும் இன்றைய முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சூன்யத்தை பறைசாற்ற நல்ல உதாரணங்கள். மேய்ப்பரில்லாத மந்தைகளாக விளிம்பு நிலை முஸ்லிம் மக்கள் தவிக்கின்றனர். இந்நிலையில் முஸ்லிம மக்களின் அரசியல் எதிர்காலம் மிகப்பயங்கரமானதாக என் முன் விரிகின்றது.

 குர்ஆனில் ஒரு வரியைக்கூட “திக்காமல்” ஓதத்தெரியாதவர்களெல்லாம் முஸ்லிம் அரசியல் பற்றி பேசுவதும் தங்களுக்கு தாங்களே தலைவனென்று குதூகலிப்பதையும் பார்த்து கியாமத் நாள் நெருங்கி விட்டது என்ற அச்சம்தான் மேலோங்குகின்றது.

 சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் மிகைப்படுத்தப்பட் வாய்ச்சவாடல்களும் போலித்தோற்றமும் அபாயகரமானது. உதிரிக்கட்சிகளின் மாய ஜால வித்தைகள் முஸ்லிம்களின் அரசியலை ரொம்பவுமே மலினப்படுத்தி விட்டது.கிழக்கில் பெரும்பான்மை என்ற சுயதம்பட்டம் எல்லாம் எதிர்காலத்தில் பூஜ்ஜியமாக போகின்றது என்பதைக்கூட அறியாத புற்று நோயாளியின் தரத்தில் கிழக்கு முஸ்லிம்களின் அரசில் இருப்பு அடகு வைக்கப்பட்டுள்ளது என்பதை நடக்கின்ற நிகழ்வுகள் நமக்கு சொல்கின்றன.

5. முஸ்லிம் சமூகம் அதன் பெண்கள் இது தொடர்பாக பல்வேறு உள்,வெளிச் சர்ச்சைகள் இருக்கின்றன. முஸ்லிம் பெண்கள் தொடர்பாக அதன் புத்திஜீவிகளையும் கடந்து ஏனையவர்கள் அதிகம் அக்கறை கொள்ளுகின்றார்கள் இந்த அக்கறைகளின் பின்னால் உள்ள அரசியல்,அரசியலின்மை பற்றிய உங்கள் பார்வை? 

முஸ்லிம் சமூகத்தின் பெண்கள் தொடர்பான உள்,வெளிச்சர்ச்சைகளும் புத்திஜீவிகளின் அகன்ற அக்கரையும் அதன் பின் புல அரசியலும் ,அரசியலின்மையும் முஸ்லிம் சமூகத்தின் ஆணாதிக்கச்செயற்பாட்டின் பின் விளைவுகளின் மோசமான எதிரொலி என்பது என் அபிப்பிராயம்.

பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள வாழ்வியல் உரிமைகளை சில நேரங்களில் பெரும்பான்மையான ஆண்கள் வழங்கத் தவறிவிடுகின்றார்கள். பிற்காலத்தில் ஆணாதிக்கச்சிந்தனைகளும் மத அமைப்புக்களும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் பெண்களை பூட்டிவைத்து போஷிக்க முனைந்த போது பெண்களை முஸ்லிம் தேசியம் ஒடுக்குகிறது என்ற கருத்து வலுப்பெற்றது.

இது ஆணின் தகுதியுணர்வின் (ளுநளெந ழக Pசழிசநைவல) மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஒரு வடிவமே அன்றி  பெண்னுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளுக்கும் இஸ்லாத்திற்கும்  கிஞ்சித்தும் தொடர்பில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

குர்ஆன் வழங்கியுள்ள வாழ்வியல் உரிமைகளை தன் சொந்த சமூகத்திற்குள்ளேயே மறுதலிக்கின்ற ஒடுக்குகின்ற தீவிர செயற்பாடுகள் அவளை ஒரு பெண்ணிய விடுதலைக்கு நகர்த்துகின்றது. 

யதார்த்தத்தில் பெண்களுக்கு கல்வி,திருமணம், சமூகச்சீர்திருத்தம், விவாகரத்து உரிமை, மறுமணம் செய்யும் உரிமை, கருத்துச்சுதந்திரம்,போன்ற எண்ணற்ற சுதந்திரங்களை இஸ்லாம் வழங்கியுள்ளது.


புத்திஜீவிகளினதும் மற்றவர்களினதும் பின்னால் ஒழுங்கற்ற அரசியல் மலிந்திருப்பதைப்போல் முஸ்லிம் பெண்களின் உரிமை குறித்த அறியாமையும் தெளிவின்மையும் குவிந்திருந்திருக்கின்றது.

 பெண்ணுடல் சார்ந்த அவர்களின் அரசியல் மற்றும் கொள்கைகள் சித்தாந்தங்கள் அவர்கள் அவாவுகின்ற சட்டகத்திற்குள் அடக்க முடியாத தருணங்களில் முஸ்லிம் சமூகத்தின் பெண் விடுதலை குறித்து உரத்துப்பேசுவதை ஒரு மிகைப்படுதத்தப்பட்ட அரசியல் என்றே கருதுகின்றேன். 

உண்மையில் முஸ்லிம் பெண்கள் தேசிய சர்வதேச ரீதியாக பாதிக்கப்படுவதை இஸ்லாமிய மதத்துடன் ஒப்பிடுவதை இந்த புத்தி ஜீவிகள் நிறுத்திவிட்டு பெண் சுதந்திரம் அவளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை ஆழ்ந்து படிக்க வேண்டும்.சிலரின் பெண் மீதான அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளும் விதி முறைகளும், ஆணாதிக்க கடும்போக்கும்,நில சொத்துரிமை ஆதிக்கங்களும் பொதுவான பெண் மீதான அத்துமீறல் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது.


தொடரும்......
நன்றி :  தினகரன் வார மஞ்சரி

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...