Saturday 23 June 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்



தொடர்- 17

என் சர்வாங்கமும் ஒடுங்கி இதயம் வெடித்துவிடுமாற்போல் அடித்துக்கொண்டது. ஐந்தடி உயரமுள்ள கருத்த நாயொன்று பாய்வதற்கு தயாராக இருந்தது. அந்தக்கண்கள் நெருப்புக்கங்குகள் போல் சுடர்விட்டுக்கொண்டு மின்னிக்கொண்டிருந்தன.தீட்டிய வால் போல் நாக்கு நீண்டு ஈரத்தில் மினுமினுத்தது.திறந்த வேகத்தில் கதவை இழுத்து மூடினேன். 

பருந்தின் கால்களில் அகப்பட்ட கோழிக்குஞ்சாக தேகம் நடுங்கிக்கொண்டிருந்தது.வியர்வையில் தெப்பமாகி பிரமையுடன் கட்டிலில் குந்திக்கொண்டிருந்தேன்.காதுகள் இரண்டும் வெளியில் இருந்தன. ஒரு சிலமனுமில்லை. அக்காலத்தில் கையடக்கத்தொலைபேசி வசதிகள் இல்லாத காலம்.எனக்கு ஊரிலிருந்து கடிதம் மட்டும்தான் வரும்.நானும் அப்படித்தான் வாரமொரு முறை தபால் அனுப்புவேன். 

எத்தனை மணிக்குத்தூங்கினேன் என்று தெரியாது.காவன்னா ஹாஜியார் வந்து கதவைத் தட்டு மட்டும் தூங்கியிருந்தேன். காலையில் யாரிடமும் இரவு நடந்த சம்பவத்தை சொல்லவில்லை.மறுநாள் இரவு தனியே தூங்குவதில்லை என்ற முடிவுடன் இருந்தேன். அங்கு பணி செய்த ஒரு வருடமும் நண்பர்கள் புடை சூழத்தான் தூங்கினேன்.எனது உஸ்தாதிடம் கேட்டேன்.

 'மகன் அது ஜின். பள்ளியில் இபாதத்துக்கு வருவது நல்ல ஜின்களின் அன்றாடப்பணி.அது நாய் பாம்பு ரூபத்திலும் வரும் என்பது ரசூலுல்லாஹ்வின் பொன் மொழி' என்றார்.அது சரி பள்ளிவாயலுக்குள் வரும்போதும் நாய் வேசம் எதற்கு என்று ஜின்னிடம் கேட்டிருக்கவேண்டும் அதற்குப்பின் அதைக்கானும் பாக்கியம் கிடைக்கவே இல்லை. மனிதர்களே குதறிக்கடிக்கும் வேட்டைப்புலி வேசத்தில் பள்ளிவாயலுக்குள் நுழையும் போது ஜின் வந்தால் என்ன? நான் தம்புள்ள பள்ளிவாயலுக்குள் (20.04.2012) வந்தவர்களை இப்படி சொல்லவில்லை.

 அவ்வப்போது கருப்பு நாய்களைக்கானும் போது அந்தக்காட்சி மனதை விட்டும் அகலாமல் பயமுறுத்திக்கொண்டுதான் இருக்கிறது.

99 காலப்பகுதியிலும் இப்படித்தான் ஜின்னில் அகப்பட்டுக்கொண்டு திமிறியிருக்கின்றேன். வவுனியா வீதியில் மதவாச்சி நகருக்கு அண்மையில் இருக்கும் கிராமம் இக்கிரிகொல்லாவ.என்னுடன் படித்த இரு நண்பர்களின் கிராமம். ஏ.எல் எடுத்தபின் இங்கெல்லாம் வந்திருக்கின்றேன். 

வரட்சியான ஊர் விவசாயம்,கால் நடை வளர்ப்புத்தான் பிரதான தொழில்.பெரும்பாலானோர் வீட்டு முற்றத்தில் மாட்டுப்பட்டி இருக்கும். ஆடுகளும், நாட்டுக்கோழிகளும் சர்வசாதரணமாக முற்றத்தில் கிடந்து மேயும்.பெண்கள் சாணி அள்ளுவதும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவுதிலும் இருப்பதைக் கண்டிருக்கின்றேன்.

புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முல்லைத்தீவுவாசிகளின் அகதி முகாமும் இருந்தது. சுற்றுத்தொலைவில் மன்னார் அகதி முகாம் ஒன்றும் இருந்தது.மன்னார் வேப்பங்குளம்,சாளம்பைக்குளம் நண்பர்களும் இக்கிரிகொல்லாவ அகதி முகாமில் தங்கியிருந்தது எனக்கு வாய்ப்பாக போய்விட்டது. 

யாழ்ப்பாணத்து முஸ்லிம் குடும்பங்களும் தங்கிருந்தார்கள். சில யாழ்ப்பாணத்துப் பிள்ளைகள் எனது மாணவர்களாக இருந்தார்கள். இக்கிரிகொல்லாவைக்கு சீக்கிரமாக வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.நண்பர்களின் ஊர் என்பதால் வறட்சி வசதி வாய்ப்புகளை மறந்து வந்து விட்டேன். இங்கு வருவதற்கு இன்னுமோர் காரணம் எனது மச்சான் மன்சூர் அவர்கள் மதவாச்சி மில்போர்ட் மனேஜராக மாற்றலாகி வந்திருந்தார்.

 இங்கு வந்த பிறகுதான் அன்றாடத் தினசரி கூட இல்லாமல் இருப்பது தெரிந்தது. இரண்டு மைல் தொலைவில் உள்ள ரம்பாவ நகருக்குச்சென்று  பத்திரிகை எடுத்து வந்து படிப்பது என் அன்றாட பழக்கங்களில் ஒன்றாக இருந்தது.அல்லது மதவாச்சிக்குப்போய் மச்சானுடன் கதைத்து விட்டு வருவது. யுத்தம் உச்சத்தில் நின்ற காலம்.இரானுவ நெருக்குவாரங்களும்,புலிகளின் பழிவாங்கள்களும் குறைவில்லாமல் மக்களுக்கு கிடைத்துக்கொண்டிருந்தன. 

அந்தக்கிராமங்களில் பெரும்பாலும் அறையில் தூங்குவதும் ,பேக்கரியில் வேகுவதும் ஒன்றுதான்.நான் அறையில் படுப்பது கிடையாது.இருக்கவே இருந்தது மிகப்பெரிய பள்ளி ஹோல்.முஅத்தினார்,வழிப்போக்கர்கள், என  ஒரு பட்டாளமே பள்ளியில் தங்க தினமும் ஆட்கள் கிடைத்தார்கள்.நானும் அன்று அப்படித்தான் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தேன்.பள்ளிவாயிலில் மிம்பருக்கு எதிரே உள்ள தலைவாயிலில் யாரும் உள்ளே நுழைந்து விடாதவாறு குறுக்காக மரமொன்றை தரித்து வீழ்த்தியதைப்போல் நான் படுத்துக்கிடந்தேன்.வெற்றுடம்பு ஈரமான காற்றுடன் மின்விசிறியின் காற்றும் ஒருசேர தாலாட்டுப்பாடியிருக்க வேண்டும்.நல்ல தூக்கம்.

 நள்ளிரவு 1மணி தாண்டியிருக்கும் என நினைக்கின்றேன்.வலிய இரு கரங்கள் எனது கால்களைப் பிடித்து மேல் நோக்கியவாறு சுழற்றி எடுத்ததை உணர்ந்தேன் .என்ன நடக்குதென்று நிதானிக்க முடியவில்லை அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இரு கால்களும் அசைக்கவே முடியாத அளவிற்கு இரும்புப்பிடி. என்னை அந்தரத்தில் ஒரு பம்பரம் போல் சுற்றிக்கொண்டிருப்பது யார் ?.கனவா என்று யோசித்துப்பார்த்தேன்.பலம் கொண்ட மட்டும் கத்திப் பார்த்தேன். இடுப்பிலிருந்த சாரம் நழுவி விடுமாற்போல் இருந்தது. கனவல்ல என்று உணர்ந்தபின் முழுப்பலத்தையும் குவித்து கத்தினேன்.

நான் படுத்த இடத்திலிருந்து சற்று அப்பால் நான் வீசப்பட்டுக்கிடப்பதை உணர்ந்தேன். பள்ளிவாயலுக்குள் படுத்த முஅத்தின்சாப்தான் முதலில் என் காட்டுக்கத்தலைக்கேட்டு ஓடி வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் பயத்தில் உறைந்து போய் பின் நிதானித்து அருகில் வந்து அள்ளி எடுத்து குடிக்க தண்ணீர் தந்தார். நடந்ததை சொல்வதற்கு எனக்கு அவகாசம் தேவைப்பட்டது. திக்பிரமை பிடித்தவன் போல் தூங்கிய இடத்தைப் பார்த்தேன் .போர்வையும் தலையணையும் அப்படியே கிடந்தது. அது ஜின்னின் வேலையாக இருக்கும்.ஒதி ஊதிக்கிட்டு படுங்க என்றார்.

 பள்ளிவாயலின் தலைவாயலில் படுக்கப்படாது.ஜின் வருகின்ற நேரம் வழியில் படுத்தால் இப்படித்தான் செய்யும்.வருகின்ற ஜின்னுக்கு எவ்வளவோ வாசல் இருக்க என்னை பம்பரமாய் சுற்றி வேடிக்கை காட்டிய மர்மம் என்ன ?மற்றது நான் தூங்கும் போது சொல்லாமல் ஜின்னிடம் என்னை மாட்டிவிட முஅத்தின்சாப் திட்டம் போட்டாரா? எந்த ஜின்னிடம் கேட்கலாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

எங்கள் தேசம் -224                                                                                                   ஊஞ்சல் இன்னும் ஆடும்.....

Saturday 2 June 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


தொடர் -15

ஜின் என்றவுடன் என் நினைவு மரத்தில் பல ஊஞ்சல்கள் ஆடத்தொடங்குகின்றன.ஜின்னை வைத்து ஒரு கதையே பின்னியிருக்கின்றேன்.(ஜின்- பிரசுரம் முஸ்லிம் குரல் 2005 உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி சிறுகதைத்தொகுதியில் இக்கதை சேர்க்கப்பட்டுள்ளது) 

நான் அட்டாளைச்சேனை விடுதியில் தங்கிப்படித்த காலம். மாலை வேளையில் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையின் விளையாட்டு மைதானத்திற்குச்செல்வோம்.அங்கிருந்து ஒரு பொடி நடை போட்டு அக்கரைப்பற்று எல்லை வரை சென்று விட்டு திரும்புவோம். இப்போது வைத்தியசாலை அமைந்திருக்கும் இடம் கருங்கொடித்தீவின் எழுவட்டவான் மைதானம்.சதுப்பு நிலம்.

 நண்பர்கள் புடை சூழ இலக்கியத்தின் வேர்களை கெல்லி எறிந்து விளையாட்டு நடக்கும்.நண்பர்களான எம்.பௌசர்,என்.ஆத்மா,ரஷ்மி,மஜீத் (பொத்துவில்), கருங்கொடியூர் கவிராயர் என அறியப்பட்ட மறைந்த நண்பர் அமீனுத்தீன்,ஏ.எம் தாஜ் அக்கரைப்பற்று ஜாபிர்.என ஒரு பட்டாளமே கூடியிருப்போம்.வாராந்தம் தினகரன் கவிதை சாகரத்திலும்,சரிநிகரிலும் பிரசுரமாகிய எங்களின் கவிதைகளைப் பற்றிய கருத்துக்கள் விவாதிக்கப்படும்.

காலம் இப்போது எங்களை திசைக்கொன்றாகப் பிரித்துப்போட்டுள்ளது. ஆளுக்கொரு திசை. அந்தக்கனாக்காலம் மீண்டும் வராதா என்ற ஏக்கம்! அக்கரைப்பற்றுக்குச் செல்லும்போதெல்லாம் மனசில் வந்து மோதிவிட்டுச்செல்கிறது. 

 இலக்கிய அரட்டைக்குப்பின் மீண்டும் அட்டாளைச்சேனைக்கு நடை. நான் மைதானத்திற்கு செல்லாத நாட்களில் நண்பர் பௌசர் விடுதிக்கு வந்துவிடுவார்.துவிச்சக்கர வண்டியில் வியர்த்து விறுவிறுக்க பெடலில் ஒரு காலும் தரையில் மறுகாலுமாக நின்றபடி கதைப்பார். முக்கிய இலக்கியத்தகவல்களை தந்துவிட்டுப்போவார்.

 அக்காலத்தில்தான் அவரின் கைவண்ணத்தில் தடம் இலக்கிய சஞ்சிகையும் வெளிவந்துகொண்டிருந்தது.

இப்படித்தான் ஒரு மாலை நேரம் நடையை முடித்து விட்டு திரும்பிய நேரம் விடுதியில் இருக்கும் பள்ளிவாயலில் மாணவர் கூட்டம் திமுதிமுவென்றிருந்தது. என்னவென்று எட்டிப்பார்த்தால் அக்குரனையைச் சேர்ந்த ஒரு மாணவர் படுத்தபடி இருந்தார்.கண்கள் முகட்டை வெறித்தபடி இருந்தன.என்னவென்றேன். இவருக்கு ஜின் பிடித்திருக்கு என்றார்கள்.

 விடுதியில் இணைந்து ஆறு மாதம் இருக்கும்.ஹஜ் விடுமுறைக்குப்பின் அடுத்த விடுமுறைக்காக கலண்டரின் பக்கங்கள் நீண்டு செல்வதால் ஜின் பிடிக்க வாய்ப்பு அதிகம். விடுமுறைக்குப்பின் விடுதிக்குக்குத்திரும்பியதும் முதல் வேலையாக அடுத்த விடுமுறை எப்போது வருமென்று ஊகித்து குறித்த மாதத்தில் திகதிக்கு நேர் கோடிட்டு வைப்போம். ஓவ்வொரு நாளும் நாட்களை கணக்கிடுவதில் அப்படியொரு சந்தோஷம்.

பெரிய உஸ்தாதுக்கு தகவல் போய் சேரவும் அவரிடம் உள்ள ஜின் விரட்டும் பிரம்பு வரவும் நாங்கள் கலைந்து போனோம்.ஆனால் சற்று தூரத்தில் நின்றபடி அந்த ஜின் உஸ்தாதின் பிரம்படியில் அலறிச்செல்லும் காட்சியைப்பார்க்க ஆவலாய் இருந்தோம்.

சும்மா நின்றிருந்த நண்பர்கள் நிறையக்கதைகளை அவிழ்த்துவிட்டார்கள். 
'சாமத்துல பாத்றூம் போய் குந்தினா ஆருண்டு தெரியா மச்சான் வெளியில நின்று லைட்ட ஓப் பண்ணுரதும் போடுரதுமாக இருந்தாங்க. வெளிய வந்து பார்த்தா ஒருத்தரும் இல்ல.' என்பான் ஒருவன்.

' எனக்கும் அப்படித்தான்டா ஹவ்லுல தண்ணிய அள்ளி இறைக்கிற மாதிரி சத்தம் கேட்டுச்சி பார்த்தா தண்ணி ஆடும் ஆள் இல்ல.' என்றான் இன்னொருவன் 

 ஜின் மின் குமிழ்களை அணைக்கும் கதை இதுதூன். களப்புப்பகுதியில் (பக்கத்தில் அழகான நீண்ட தாமரைக்குளம்)அதிகமான காற்று வீசும்.பழைய ஹோல்டர் காற்றுக்கு இடம் விட்டு பின்பு சரியாகி விடும். இடம் விடும்போது லைட் ஓப் ஆகும். சரியாகும் போது லைட் எரியும். ஜின்கள் இலங்கை மின்சார சபையில் ஓய்வில்லாமல் இராப்பகலாக வேலை செய்வதை நினைத்தால் பாவமாக இருக்குது.

பெரிய உஸ்தாத் ஜின்னுடன் இரகசியமாக பேசினார்.அவர் சூரதுல் ஜின் (ஜின் அத்தியாயத்தை) ஓதி ஜின்னை வசியம் பண்ணப்போரார் என்றான் ஒருவன். அப்ப நாம சூரதுல் பீல் (யானை அத்தியாயம்,) சூரதுன்னிசா (பெண்கள் அத்தியாயங்களை) ஓதினால் அவைகளை வசியம் செய்ய ஏலுமாக்கும் என்றான் மற்றொருவன்.

இந்த நவீன யுகத்தில் ஜின்னை விரட்ட இசும் எழுதி தண்ணீர் தாங்கியில் கரைத்து விடுவதும் ,இசுமை நகல் எடுப்பதும் சில மௌலானாக்களின் கைங்கரியம்.மனிதர்களை வசியம் பண்ண இப்ப ஜின்கள் எதற்கு,கையில் ஒரு கார்.கழுத்துப்பட்டி,சகிதம் வீடு வீடாக ஏறி இறங்கி நிதிக்கம்பனிகளின் துதி பாடினாலே போதும் வசியம் ஆகாத சகல சாத்தானும் வசியமாகிவிடும்.வட்டி எனும் மாய வலை விரிக்கப்படும் வித்தை இதுதான்.

  ஒரே சளக்புளக் கதைகள். பெரிய உஸ்தாத் அவனை ஊருக்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாக சொன்ன மறு நொடியில் கண்களை முகட்டிலிருந்து விடுவித்தான்.உஸ்தாத் மன வசியம் படித்தவர்.ஜின்களின் மன ஓட்டங்களை படிப்பது பெரிய சிரமல்லவே! இருந்தாலும் அவர் ஜின்னுக்கு அந்த பிரம்பால் நாலு அடி அடிக்காதது பெரும் ஏமாற்றமாக இருந்தது.

எனக்கும் இப்படித்தான் ஜின்னின் திருவிளையாடல் வாய்த்தது. 1992 இல் மத்திய மாகாணத்தில் குருணாகல் வீதியில் அமைந்துள்ள சிறு நகரம் ஹேதனிய.கண்டி மத்திய பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து கலகெதர,கண்டி,பஸ்களில் ஏறினால் ஹேதெனியாவில் இறங்கலாம். அல்லது வெரல்லகம பஸ்சில் ஏறி,பல்கும்புர என்ற இடத்தில் இறங்கினால் நான் பணி செய்த இடம் வரும். நூற்றுக்கு மேற்பட்ட படிகள் ஏறி சம தரையை தொட வேண்டும். பள்ளிவாயல் மையவாடிக்கு பக்கத்தில். இரவில் ஆட்கள் நடமாட்டம் இல்லை.மரங்களையும் பனிப்புகார்கள் மூடிக்கிடக்கும். பள்ளிவாயலின் அறையில் தனியேதான் தங்க வேண்டும்.மோட்சம் கதையின் கதைக்களம் இந்த ஊர்தான். பணிக்கமர்ந்த சில நாட்கள் தனிமையில்தான் காலம் கடந்தது.தனிமை என்பது அந்த வயதில் பெரிய சுமையாகத்தெரியவில்லை. எதற்கும் அஞ்ஞாத நெஞ்சு.

ஒரு நாள் நள்ளிரவு 2 மணி இருக்கும் நான் அறையில் தனிமையில்தான் தங்கியிருந்தேன். வெளியே தண்ணீர் சத்தம் கேட்டது.யாரோ முகம் கழுவி கை கால்கள் கழுவி தன்னை முழுமையாக சுத்தப்படுத்திக்கொண்டு பள்ளிக்குள் நுழைவதை கேட்டுக்கொண்டுதான் படுத்திருந்தேன்.கால் துடைப்பானில் கால்களை நன்றாக துடைப்பதும் துள்ளியமாக கேட்டது.வெளியே சத்தம் கேட்டால் என்னவென்று பார்க்காமல் தூக்கமே வராது என்பது என் பிறவிக்குணம்.கிறீஸ் மனிதன் விடயத்தில் மட்டும்தான் அது பொய்த்துப்போனது.வருகின்றவர் யாராக இருக்கும் என்ற ஆவலில் கதவைத்திறந்தேன்.

எங்கள் தேசம் -222                                                         ஊஞ்சல் இன்னும் ஆடும்.......

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...