Thursday 24 March 2016

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையும்,பின் தொடரும் துயரமும்.


புலமைப்பரீட்சை திட்டமானது கிராமப்புரங்களில் உள்ள விவேகமான மாணவர்களை நகர்ப்புரங்களில் தெரிவு செய்யப்பட்ட தரமான பாடசாலைகளில் கற்பதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அமுறிமுகப்படுத்தப்பட்டதாகும். இத்திட்டத்தின் மூலம் வறிய கிராமங்களில் வசிக்கும் ஏழைகளின் பிள்ளைகள் அரசின் உபகாரத்தினைப்பெற்று  தனது உயர்கல்வியினை தொடர்வதற்கான நோக்கை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வந்தது.

மேற்படி இலக்கினைஅடைய இத்திட்டம் ஓரளவு வெற்றிகரமாக கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்டது.
எனினும் காலப்போக்கில் இது ஒரு போட்டித்தன்மைமிக்கதாகவும், வக்கிரமிக்கதாகவும் மாற்றமடைந்து இன்று சமூகத்தில் விவாதத்திற்குரிய ஒரு விடயமாக மாறிவிட்டது.

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் சமூகத்தில் உள்ள  அக்கரையும் ஊக்குவிப்பும் பிரமிக்கத்தக்கதாக உள்ளது. கல்விசார் நடவடிக்கையில்  
அடிமட்ட மக்களின் ஈடுபாட்டிற்கும் பாடசாலை சமூகத்தின் மீதான பற்றையும் மேம்படுத்த இப்பரீட்சை வழியமைத்துக்கொடுத்துள்ளது. பெற்றோர் பாடசாலையின் வளர்ச்சியில் காட்டும் அக்கரையும்  மாணவர் கல்வி சார் நலனில் காட்டும் அதீத ஈடுபாடும் இப்பரீட்சைக்குப்பின் ஆர்வமாய் தொடர்ந்துள்ளது எனில் மிகையல்ல. 

எனினும் தற்காலத்தில் இப்பரீட்சைகுறித்த கேள்விகளும் இதன் பின்னனில் நடைபெறும் கல்வி வணிகமும் எதிர்காலத்தில் கல்வி நிறுவனங்களை ‘மாபியா‘க்களாக மாற்றிவிடுமோ என்ற ஐயம் தவிர்க்கமுடியாமல் மேலெழுகின்றது.

இது தொடர்பில் சமூகத்தல் வேரூன்றியுள்ள சில விடயங்களை சிந்தனைக்கு விடுவது பொருத்தமெனதோன்றுகிறது.

புலமைப்பரிசில் பரீட்சை  ஏற்படுத்திய பிரதிபலன்களை விட அது ஏற்படுத்தும் காயங்களும் வலிகளும்,மன உளைச்சல்களும் சமூகத்தில் மனோவியாதியாக மாற்றமடைந்துள்ளன.

 பனிப்போர்

ஆசிரியர்களுக்கிடையான குரோதங்களும் போட்டித்தன்மையும் இப் பரீட்சையின் மூலம்  தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆசிரியரின் முயற்சியால் சித்தியடையும் மாணவர் தொகையினை ஒப்பிட்டு  நோக்கி அந்த ஆசிரியரின் கியாதி சமூகத்தில் மிகைப்படுத்தி மெச்சப்படுகின்றது.

திறமையாக கற்பிக்கும் பிற துறை சார் ஆசிரியர்களின் உழைப்பும் பணியும் உதாசீனப்படுத்தப்படுகின்றது.புலமைப்பரீட்சைப்பரிசில் பரீட்சைக்கு தயார்படுத்தும் ஆசிரியர்களின் முதன்மையும், வரவேற்பும் சக ஆசிரியர் குழாத்தினரிடையே போட்டி மனப்பான்மையையும், குரோத எண்ணங்களையும் வளர்த்து விடுகின்றது. இதனால் மறைமுகமான பனிப்போர் பாடசாலை மட்டங்களில் நிகழ்வதை அவதானிக்கலாம்.ஒழுக்கம் நன்னடத்தை,உயர் குணாதிசயங்களின் உறைவிடமாக உள்ள ஆசிரியர்கள் வஞ்சகம், குரோதம், போன்ற துர்க்குணங்களால் ஆற்றுவிக்கப்படுவதை அவதானிக்க முடியுகிறது. 

புலமைப்பரீட்சைக்கு தயார்படுத்தும் திறமையானவர் எனக்கருதுபரிடம் மாணவர்களை சேர்த்து விட பெற்றோர்கள் முற்படுவதானால் அதே தரத்திலுள்ள ஐந்தாம் ஆண்டிற்கு வகுப்பெடுக்கும் பிற ஆசிரியர்களின் மனதில் புலமைப்பரீட்சை வகுப்பெடுக்கும்  ஆசிரியர் மீது பொறாமையும், போட்டியும் நிலவுகின்றது. இதனால் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய சில ஆசிரியப்பெருந்தகைகள் தனிப்பட்ட விடயங்களை துருவித்துருவி பரப்புவதற்கு முனைகின்றதையும் காணலாம். 

ஒரு பாடசாலையில் திறமையாக கற்பிக்கும் ஆசிரியரை மற்றுமொரு பாடசாலை விலைபேசி பகுதி நேர வகுப்புகளுக்கு இழுப்பதும் அரசியல் செல்வாக்கினைப்பயன்படுத்தி மாற்றம் பெற முயற்சிப்பதும் சாதாரணமான நிகழ்வுகளாகி விட்டன.இது கல்விசார் சமூகத்தினரிடையே எதிர்காலத்தில் பாரிய ஒழுக்க வீழ்ச்சிக்கு வித்திடும் என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது.

கல்வியை கடமையாக கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் இதனை முழு நேர இலாபம் தரும் மூலதனமாக மாற்றி விடுகின்றனர்.இதற்காக இரவு பகலென மாணவர்களை பிழிந்தெடுக்கும் தந்திரங்களையும் சில ஆசிரியர்கள் வகுத்துள்ளனர். தயாரிக்கப்பட்ட கேள்விகள்,கடந்த கால வினாப்பத்திரங்கள், நண்பர்களால் எழுதப்பட்ட புலமைப்பரீட்சை வழிகாட்டிகள் அனைத்தையும் காசாக்கும் இலகு தொழிலாக ஐந்தாம் ஆண்டின் புலமைப்பரீட்சை வழியமைத்துக்கொடுத்துள்ளது.

வாராந்தோறும் இடித்த மாவை திரும்பத்திரும்ப இடித்து மாணவர் சமூகத்தினதினதும் பெற்றோர் சமூகத்தினம் தலையில் கட்டி மிளகாய் அரைக்கும் புத்தசாலித்தனத்தை சில ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை ஆசிரிய வணிகர்கள் கச்சிதமாக செய்து வருகின்றனர்.அடித்த பாம்மை அடித்து வீர தீரப்பட்டம் பெற்;ற மாண்மியம் பெறும் இந்த ஆசிரியப்பெருந்தகைகள் இருக்கு மட்டும் புலமைப்பரிசில் என்ற நாகம் மாணவரின் உயிரையும் பெற்றோரின் பொருளாதாரத்தினையும் கொத்திக்கொண்டே இருக்கும்.

உளவியல் உபாதைகள்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு தயார்ப்படுத்தப்படும் மாணவர்கள் பெரும்பாலும் உளவியல் உபாதைகளுக்கும், உளைச்சலுக்கும் உள்ளாக்கபட்படு வருகின்றமை கண்கூடு. கல்வித்திணிப்பும், மிகைப்படுத்தப்பட்ட  கட்டுப்பாடுகளும் மாணவர்களின் உளவியல் உபாதைகளுக்கு வேர்க்காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

மேலதிக வகுப்புக்கள் என்ற சிறை மாணவரின் சுதந்திரத்தினையும் ,சுறுசுறுப்பினையும் வேரோடு கெல்லி எறிந்து விடுகின்றது. சராசரி ஒரு மாணவன் விளையாடவும் ஓய்வெடுக்கவுமான நேரங்களைக்கூட இந்தப்பரீட்சை கபளீகரம் செய்து விடுகின்றது. அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் புலமைப்பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர் எழும்ப வேண்டும். கலையாத தூக்கத்துடன் பிரத்தியேக வகுப்புக்களுக்கு செல்லவேண்டும்.அதே சீருடையில் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு பாடசாலை வகுப்பறைக்கு செல்ல வேண்டும்.பின்னர் பாடசாலை நேரம் முடிந்ததம் சரியாக அரை மணி நேரத்திற்குப்பின் மாலை வரை  தொடரும் பிரத்தியேக வகுப்பு . 

ஓரு மாணவன் அன்றைய தினம் தன்னை ஆசுவாசப்படுத்துவதற்குள்  இரவு நேர கற்கைகள்  கடந்தகால வினாப்பத்திரங்கள் செய்தல், பயிற்சிகள் என இரவு 10 மணி வரை  பலவந்தமாக  சிறைக்குள் திணிக்கப்படுகின்றான். ஈற்றில்  வீடு திரும்புகையில்  ஆசிரியரால்  மாணவனுக்கு   உபரியாக சில வீட்டுப் பயிற்சிகளும்  வழங்கப்பட்டிருக்கும். 

இந்த கல்விச்சித்திரவதைகள் மூலம் மாணவரின் மனம் பெரிதும் சோர்வுற்று  உள நோய்களாலும், இரத்த அழுத்தத்தினாலும் சிதைவுறுகின்றது.கற்றலில் ஆர்வம் குன்றி வெறுப்பும், சோர்வும் ஏற்பட இது வழி செய்கின்றது.ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு தயார்படுதப்பட்ட மாணவர்களில்  அனேகர் பிற்காலங்களில் மந்த புத்தி உள்ளவர்களாகவும் கற்றலில் ஆர்வம் குன்றியவர்களாகவும் இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

விளையாட்டு உடல் மற்றும் மன ஆற்றலின் விருத்திக்கு வழிகோலும் முக்கிய விடயம்.மாணவரின் ஆரோக்கியத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று போதிக்கின்ற கல்விச்சமூகம் ஐந்தாம் ஆண்டில் மட்டும் விதிவிலக்குகளை கையாள்வது அதிகார மையத்தின் வலிமை எனில் மிகையல்ல. உடல் ,உள ஆரோக்கயம் ,ஓய்வு இந்த அம்சங்களை சிதைத்து விட்டு கல்வியினை மட்டும் திணிப்பதற்குள்ள பின்னணிகள் துலாம்பரம். 

இவற்றிக்குப்பின் பாடசாலைகளினதும், ஆசிரியர்களினதும், பெற்றோர்களினதும், தன்மானம் ஒளிந்து கிடக்கின்றது. இதைத்தவிர வேறெதனையும் புதிதாக நாம் கண்டுபிடித்துவிட முடியாது.

மாணவ சமூகத்தின் உளச்சிதைவுகளின் மீதுதான் தனது தன்மானம்,கௌரவம்,பாதுகாக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்கள் நினைப்பது கூட பாசிசத்தின் நீட்சியேயன்றி வேறில்லை.இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்,சிறுவர் சித்திரவதை சட்டத்தின் கீழ் இத்தகையவர்களுக்கெதிராக நடவடிக்கை  எடுக்கப்படல் வேண்டும். தன்னுடைய சுய கௌரவம் கீர்த்தி பாதுகாக்கப்பட பிஞ்சுகளின் வாழ்வில் விளையாடுவது மன்னிக்கமுடியாத துரோகமாகும்.

சுமாராக இருக்கின்ற மாணவரின் பெற்றோர் வேகமாக கற்கும் மாணவனுடன் ஒப்பிட்டு அவனைப்போல் நீ ஏன் அதிக மார்க் வாங்குவதில்லை என துளைத்தெடுக்கின்றமை அவதானிக்ப்பட்ட யதார்த்தமாகும். இதுவும் மாணவருக்கு மத்தியில்  தாழ்வு  மனப்பான்மை  பொறாமைக்குணம் பலிவாங்கும் தன்மை, போன்ற தீய குணங்களை தோற்றுவிக்கின்றது. 

இந்தப்பரீட்சைக்குத்தோற்றும் மாணவரிடையே ஏற்படும் இள வயது வடுக்கள் காலத்தால் அழியாத காயங்களாக மனதில்  தேங்கி நின்று பலிவாங்கும் உணர்ச்சிக்கு தூபமிட்டுக்கொண்டே இருக்கும்.

மாணவரின் மன நிலை சிறந்த கல்விச்சூழலுக்கு இன்றியமையாத அம்சம் என்பதனை இதில் தொடர்புள்ள மூன்று சாராரும் கவனத்திற்கொள்ள வேண்டும். 

பொருளாதாரச்சுமை

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை ஏற்கனவே குறிப்பிட்டது போல் தொழில் சார் மூலதனமாகும்.ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு தோற்றும் ஒரு பிள்ளையின் குடும்பம் மேலதிகமான பொருளாதார நெருக்கடியினை எதிர்நோக்குவதை அவதானிக்க முடிகின்றது.பின் தங்கிய ஏழை மாணவரின் நிலை  பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டது.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பபரீட்சை சமூகத்தில் போட்டித்தன்மைமிக்க கௌரவமாக ஊதிப்பெருப்பிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியரால் நிர்ணயிக்கப்படும்  பணம்  பெற்றோரால் மறுப்பின்றி வழங்கப்படுகின்றது. தவிர ஆசிரிய வணிகரால் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் அவசியமான மற்றும் அவசியமற்ற புத்தகங்கள், வழிகாட்டிகள்,கடந்த கால வினாப்பத்திரங்கள்,பருவகால வினாக்கள் கேள்விகள்,பிற மாகாணப் பாடசாலையின் கடந்த கால விணாப்பத்திரங்கள் என விற்பனைக்கு கொண்டு வரும் அத்தனை குப்பைகளையும் பெற்றோர்கள் விலை கொடுத்து வாங்க வேண்டும். வாங்காவிட்டால் பிள்ளை பரீட்சையில் தோற்றுவிடுவான் என்ற அச்சுறுத்தல் வேறு விடுக்கப்படுவதுண்டு .

இதனால் திறந்த பொருளாதார கலாச்சாரம் மிகைத்துள்ள தேசத்தில் புலமைப்பரீட்சை எனும் பல்தேசிய கம்பெனிகளின் உற்பத்திகளை  உயர்ந்த விலையில் (மலிவுப்பதிப்புகள்)  விற்றுத் தீர்ந்து விடுகின்றன.கவர்ச்சிகரமான அட்டைகள்,மனதை அள்ளும் விளம்பர உத்திகள் மூலம் ஏஜென்டு ஆசிரியத்தரகர்கள் இந்த வேலையை தாம் கற்பிக்கும்  மாணவருக்கு விற்றுத்தீர்த்து தரகுப்பணத்தினையும் பெற்றுவிடுகின்றனர். கவனிப்பாரற்று சீண்டுவாரற்று பல புத்தகங்கள் வீட்டின் அலுமாரிகளை அடைத்துக்கொண்டு கிடப்பதை பார்க்கலாம்.இதுவெல்லாம் பெற்றோர் மீது இந்தப்பரீட்சையின் பெயரால் சுமத்தும் பாரிய சுமையாகும்.

இது தவிர அவ்வப்போது ஏற்படுத்தப்படும் பரீட்சைபற்றிய கருத்தரங்குகளும் அதற்கென வெளிமாவட்ட மாகாணங்களுக்கு அழைத்துச்செல்லலும் இந்த புலமைப்பரீட்சை வியாபாரிகளால் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் செலவீனங்களாகும். 

இந்தச்செலவுகளை பெற்றோர்கள் மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியே தாண்டிவருகின்றனர்.இரவு நேர கற்கைகளுக்காக முறைவைத்து பெற்றோர்களிடமிருந்து சிற்றுண்டிகள் வரவழைக்கப்படுவதும், அதற்காக மேலதிக கட்டணங்கள் அறவிடப்படுவதும் கண்கூடு. சாதாரணமாக கூலி வேலை செய்யும் ஒருவனின் திறமையான பிள்ளை இத்தகைய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து சிக்கித்தவிப்பதை வணிக சிந்தனையுள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கொள்வதில்லை.


வெற்றி விழாக்கள்

புலமைப்பரீட்சை  ஒன்றிற்கு தோற்றும் ஒரு மாணவன் மேற்குறித்த தடைகளை தாண்டி அவன் இலக்கினை அடைந்து கொள்ள வெற்றியடைந்து சித்தியடைவானாயின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. குறித்த மாணவனை விட அவனை பெற்றவர்களும் ,கற்பித்த ஆசிரியர்களும்  சந்தோஷத்தில் திளைக்கின்றனர். 
எனினும் இந்த வெற்றிக்குப்பின் சித்தியடைந்த சில மாணவரின் குடும்பம் எதிர்கொள்ளும் பொருளாதாரச்சுமை சொல்லுந்தரமன்று.
கற்பித்த ஆசிரியருக்கு உயர் தர அன்பளிப்புக்கள் வழங்கப்படல் வேண்டும்.பரீட்சை வெற்றிக்குப்பின்னரான  அன்பளிப்புக்களை கேட்டுப்பெற குடும்ப பொருளாதாரப்பின்னணியை நன்கு தெரிந்துள்ள ஒரு சில ஆசிரியர்கள் தீர்மானித்துவிடுகின்றர்.சித்தியடைந்த மாணவனின் தந்தையோ தாயோ வெளிநாட்டில் தொழில் பார்ப்பவர்களாக இருந்தால் ‘ஸ்மாட்; ‘தொலைபேசிகளை கேட்டுப்பெருகின்றனர்.
தொலைபேசியின் மொடல் குறிப்பிடப்பட்டு சில ஆசிரிய வணிகரால் கப்பம் கோரப்பட்ட சம்பவங்களும் உண்டு.தனக்கும் தனது குடும்பத்தினருக்குமான அனைத்து தேவைகளையும் சித்தியடைந்த பிள்ளையின் வெற்றியின் மீதேறி நிறைவேற்றும் இழி நிலைக்கு சில ஆசிரியர்கள் தன்னை சர்வதிகாரியாக மாற்றிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் இங்கு நடைபெறத்தான் செய்கின்றது.

கடன்பட்டு அடகு வைத்து வட்டிக்கடையில் அடைமானம் வைத்து தன் பிள்ளையின் புலமைப்பரீட்சை வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு பெற்றோர்கள் பணம் அள்ளிக்கொடுப்பதை சமூக அக்கரையுள்ள யாரும் கை கட்டிக்கொண்டு பார்த்திருக்க முடியாது.
இது நிற்க!
 பாடசாலைகளில் ஆசிரியர்களின் அதிபர்களின் தயவில் நடக்கும் கொடுமை சொல்லி மாளாது.புலமைப்பரீட்சையில் சித்தியடையும் மாணவரின் விகிதாசாரத்திற்கேற்ப அடைவு மட்டங்களை கல்வித்திணைக்களத்திற்கு காட்டி பெருமைப்படும் அதிபர்கள் வெற்றி விழாக்களின் போது பாதிக்கப்படும் சில குடும்பங்களின் கண்ணீர் பற்றி சிந்திப்பது கிடையாது.

பாடசாலை நிருவாகம் இந்த விடயத்தில் புத்தசாலித்தனமாக நடப்பது போல் வெளிப்படையாக காட்டிக்கொண்டாலும் தன்னுடைய ஒரு வருட பரிசளிப்புத்திட்டத்திற்கான அனைத்து செலவீனங்களையும் புலமைப்
பரீட்சையில் சித்தியடைந்த மாணாக்கரின் பெற்றோர்களிடமிருந்துதான் சுரண்டி எடுக்கின்றது.

சித்தியடைந்த ஒரு மாணவனிடமிருந்து மூவாயிரம் (3000) அல்லது நான்காயிரம் ( 4000) ரூபா அறவீடு செய்யப்படுகின்றது. அவனுக்கு கிடைப்பதுநூற்றி ஐம்பது  (150) ரூபாய் பெறுமதியான நினைவுச்சின்னம் அல்லது மெடல்  ஐம்பது (50) ரூபா பெறுமதியான சிற்றுண்டி. இதனையும் வணிக விளம்பரம் மூலம் தேடிக்கொண்டு மிகுதியை ஆசிரியர்களுக்கான அதிக பட்ச கொடுப்பனவாக வழங்கிவிடுகின்றனர்.

இது மட்டுமா இத்தகைய வெற்றி விழாக்களுக்கு பிரதேச மற்றும் பிரயல்யமிக்க பிரமுகர்களையும்,அரசியல்வாதிகளையும் அழைத்து விருந்து வைத்து மாலை மரியாதை வழங்கி அவர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்குவதற்கும் இந்த ஏமாளிப்பெற்றோர்கள்தான் பணம் வழங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.

நிச்சயமாக இது ஒரு பகற் கொள்ளை.இந்தக்கொள்ளையை கல்விச்சமூகம் ,மற்றும் சில பிரதேச கல்வி அபிவிருத்திச்சங்கங்கள் நாகரீகமாக அறவிடுவதை  பெற்றோர் மௌனமாக  அங்கீகரிப்பதுதான் இந்த தவறுகள் தொடர்கதையாக செல்வதற்கு காரணியாக இருக்கின்றது.சில பாடசாலை நிருவாகம் மாணவரிடம் பணம் அறவிடும் அதே சமயம் ஒவ்வொரு வேலைகளுக்கும் நலன் விரும்பிகளையும் நாடி பணம் பெறுவதும் கண்கூடு.சான்றிதழ் அடித்துத்தாருங்கள்,மெடல் செய்து தாருங்கள்,இன்ன செலவினை தங்களின் தயவில் செய்து தாருங்கள் என்ற யாசிப்பின் ஊடாக சமூகத்தில் இந்த விழாக்களை வீண் விரயமிக்க பகட்டான விடயங்களாக மாற்றிவிட்டன.

இது மட்டுமல்ல தெரிந்தவர்கள் நண்பர்கள் குடும்பத்தினர்கள் என பிள்ளையின் வெற்றியின் மீது ‘ஒன்றுமில்லையா ?’ என ஏறி நின்று கேட்டு வாங்கித்திண்ணும் அநாகரீக கலாச்சாரமும் இன்று கோலோச்சுகின்றது.பணமுள்ளவன் செய்யும் போது தன்னுடைய பிள்ளையின் மனமும் குன்றிப்போகும் என்பதற்காக கடன் பட்டு வெற்றிவிழாக்கொண்டாடும் ஏழை பெற்றோர்களின் கண்ணீருக்கு கல்வி சமூகம் பதில் சொல்லுமா?

சுய நலமும்.கல்வியில் மிகைத்து நிற்கின்ற வணிகச்சிந்தனையும் இன்று இலவசக்கல்வியை பெரும் சுமையாக மாற்றியுள்ளது.ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து விட்ட சில பிள்ளைகளின் பெற்றோர் அதே வகுப்பில் பரீட்சைக்குத்தோற்றி  ஒரு சில புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய மாணவர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்வதும் ,துக்கம் விசாரிப்பது போல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதும் இரக்கமற்ற சுபாவத்தின் வெளிப்பாடாகும். இது மனித மனத்தில்  உறங்கிக்கிடக்கும் மிருகக் குணம். 

இறுமாப்பும் தன் பிள்ளையின் மீது கொண்டுள்ள தற்பெருமையும் மற்றவர்களின் மனங்களில் படிந்துள்ள துயரங்களையும் அவமானங்களையும் மறக்கடிச்செய்து விடுகின்றது.தோல்வியில் துவண்டுள்ள தன் பிள்ளையை தோற்றுவதற்கு வழியில்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்திற்கு தவிச்ச முயல் அடிக்கும் வேலையை சிலர் நாசூக்காக செய்து வருவது கண்டிக்கத்க்கது.கீழ்த்தரமான வக்கிரங்களை மற்றவர்களின் துயரத்தைக்கிளறி ஆற்றுகின்ற இத்தகைய இழி செயலை ஊக்குவிக்கின்ற சாதனமாக இப்பரீட்சை மாறி வருகின்றது.

குறைந்த பட்சம் தொலைபேசியில் எனது பிள்ளைக இத்துனை மார்க் வாங்கியுள்ளார். உங்களது பிள்ளையின் மார்க்க என்ன என்று கேட்டாவது தங்களுடைய குரூரத்தை தீர்த்துக்கொள்கின்றனர்.சமூகத்தில் இத்தகைய இழிகுணங்களையும்,வக்கிர குணங்களையும் மறைமுகமாக வளர்த்தெடுப்பதற்கு இப்பரீட்சை வழியமைத்துக்கொடுத்துள்ளது.

மேலும். வசதி படைத்த  குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளை வெற்றி பெற்றபின் ஏற்ப டுத்தும் வெளிப்பகட்டுக்களும் அலங்காரங்களும்,வசதியற்ற பிள்ளைகளின் மனதில் தாழ்வுப்பனப்பான்மையை ஏற்படுத்தி விடுகின்றது.இதனை நிகர்;த்த ஒரு பரிசினை அல்லது சிற்றுண்டி நிகழ்வினை தனக்காக நடாத்தும்படி ஏழை மாணவன் கெஞ்சும் போது அன்றாடங்காய்ச்சி தந்தையின் நிலை என்ன?

உண்மையில் இந்தப்பரீட்சையின் பின்னணியில் கட்டமைக்கப்பட்டுள்ள பகட்டும் மேதாவித்தனமும்தான் முக்கிய காரணியாக கண்டறியப்பட்டுள்ளது.
சாதரணமாக நோக்க வேண்டிய ஒரு விடயத்தை ஊதிப்பெருப்பித்து அதில் நின்று வியாபாரம் செய்யும் உத்தியினை வளர்த்தெடுக்கவும் இந்தப்பரீட்சையின் மேல் அளவற்ற மோகத்தினை உருவாக்கவும் முக்கிய பின்புலமாக செயற்படுபவர்கள் பாடசாலை சமூகமும் அதில்  இலாபமீட்டும் ஆசிரிய குழாமும்தான். 

க.பொ.த.சாதாரண மற்றும் உயர்தரத்தில் கற்கும் ஒரு மாணவனிடத்தில் இத்தகைய பரிவும் அக்கரையும் சமூகம் எடுக்குமெனில் அவன் எதிர்கால வாழ்வு மிகவும் சிறப்புற்று விளங்கும்.அல்லது உயர்தரப்பரீட்சைகளுக்குப்பின் வழிகாட்டல்கள் வழங்கப்படுமாயின் அரிய துறைகளில் மாணாக்கர் சிறப்புற்று விளங்குவர்.

இதனை விடுத்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சைக்குப்பின் தாகத்துடன் ஓட்;டமெடுக்கும் கணிசமான ஆசிரியர்களும் ,பெற்றோர்களும் தங்களின் பராக்கிரமங்களை பறைசாற்றவே ஒடுகின்றனர் என்பது சௌ;ளிடை மலை. சமூகத்தின் மன நிலை மாறாதவரை புலமைப்பரீட்சையின் தலைவிதியையும் மாற்றவே முடியாது.

2016.03.24

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...