Monday 24 December 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


 தொடர் : 30
 ண்மைக் காலத்திலும் காட்டில் தங்கியது நினைவில் நிற்கிறது.அது காஞ்சிலங்குடாக்காடு. மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிபாய்ந்த கல் வீதியில் இருபது மைல்களாவது பயணிக்க வேண்டும்.முன்னர் புலிகளின்  தனி இராட்சியமாக இருந்த பூமி முஸ்லிம்களின் பல்லாயிரக்கணக்கான வயல் நிலங்கள் இங்குதான் உண்டு.

 இருபது வருடமாக இந்த வயல்களில் விதை விதைத்து அறுவடை செய்து அனுபவித்த புலிகளும் அவர்களின் அருவருடிகளும் கடைசி வரைக்கும் முஸ்லிம்களுக்கு குத்தகை கொடுக்காமலேயே செத்து மடிந்தனர். இப்போது அதைவிடவும் கொடுமை. ஆதி அந்தமாய் காடு வெட்டி வயல் செய்து வந்த அந்த மக்களின் வயல்களுக்கு சட்டப்படி ‘பேர்மிட்’ தரமுடியாது என்று மிரட்டுகின்றார்கள்.இருபது வருடம் ‘ஓசியில்’ வயல் செய்த கூட்டத்திற்கு அதனை சூரையாட வேண்டும் என்ற பேராசை வந்து விட்டது. சில அதிகாரிகளின் பேருதவி இவர்களுக்கு துணை உண்டு.

 உரம் எடுப்பதற்கும் வயல் செய்கை பண்ணுவதற்கும் நாய் ஓட்டம் ஓட வேண்டியுள்ளது. .தங்களது பூர்வீக நிலன்களை பாதுகாக்க இன்று பெரும் போராட்டமொன்று மௌனமாக அரங்கேறியுள்ளதை அறிந்தவர் அறிவர். மாட்டுப்பட்டிகளும் அனந்தம். முன்பு அங்கிருந்த மாடுகளை விட்டுவிட்டுத்தான் ஓடிவந்தனர். அதையெலல்hம் தமிழீழம் கேட்டு துவக்கு தூக்கியவர்கள்

 எடுத்துக்கொண்டார்கள். ஆட்டுப்பட்டிகள்,கோழிப்பண்ணைகள் என ஏகப்பட்ட கால்நடைகளை அபகரித்துக்கொண்டுதான் விரட்டினார்கள். 

சுற்றி வர ஆறும், வயலும் சார்ந்த ரம்யமான காடு. சைக்கிள் செல்ல முடியாத இடம் வரை சைக்கிளில் சென்றோம். ஒரு புளிய மரத்தடியில் சைக்கிள்களைப் போட்டுவிட்டு கால்நடையாக நடக்கத்தொடங்கிய போதுதான் தூரம் தெரிந்தது. தூரத்தில் காடு எம்மை இரு கரம் விரித்து அழைப்பது போன்ற உணர்வு. நடக்க நடக்க வயல்வெளிகள் பெருகிச்செல்ல காடு பின்நோக்கி ஓடிப்போனது. 

கையில் பொதியுடன் இரண்டு மைல்கள் நடப்பதென்பது மகா கொடுமை.   அதுவும் இரவில் தங்கியிருந்து வேட்டைக்குப்போகவென்று புறப்பட இருந்தோம். யானைக்கூட்டம் பற்றி அழைத்துப்போன நண்பர் எதுவும் சொல்லவில்லை.நாங்களும் புறப்படும் அவசரத்தில் அது பற்றிக்கேட்கவில்லை .

 இரவு உணவுக்கு முயல் கறி சமைக்க முடியுமா என்பதிலேயே குறியாக இருந்தோம். வயற்காடுகளில் கதைத்துச்சிரித்து கும்மாளமிட்டபடி நடந்தோம் .ஈற்றில் பாதுகாப்பற்ற ஒரு வாடியில் கொண்டு போய் விட்டார்கள் . அப்போது நேரம் மாலை ஐந்தரை மணி இருக்கும். சூரியன் சடுதியாக மேற்கு வானின் அடிவாரத்தில் சரிந்து கொண்டிருந்தான். கால்கள் வலியெடுத்தன. காட்டிற்குள் செல்லும் எண்ணம் ஈடேறவில்லை. தெரியாத்தனமாக ஆர்வக்கோளாறினால் நிலவு காலத்தில் வந்திருக்கின்றோம்.ஒரு உடும்பைத்தானும் பிடிக்க முடியாத காலம். அந்த வாடியில் சமைத்து சாப்பிட்டவுடன்,நண்பர் ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.

 நாம தங்கியிருக்கிற வாடியிலிதான் போன மாசம் ஒருவர யான அடிச்ச. ஒரு ஆள் மௌத்து மத்தவர்ற கால் உடைஞ்சிட்டு .ஏனென்றா அவர் செத்த மாதிரி படுத்திருக்கிறார். ஊரில் பரபரப்பாக பேசப்பட்ட விடயம். அது நிகழ்ந்த களத்தில் நாம் பொறியில் அகப்பட்டது போல் நிற்பது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.உடைந்த காலுடன் வீட்டில் படுத்தவரை நான் பார்த்து விட்டு வந்திருந்தேன். யானை எப்படி வந்தது அதன் மூர்க்கம் நெல் மூட்டைகளை அது உறிஞ்சிக்குடித்த இலாவகம் உள்ளிட்ட எல்லாவற்றையும் அவர் ஒரு திகில் படம் பார்ப்பதைப்போல சொல்லி முடித்தபோது அது பெரிதாக என்னில் தாக்கம் செலுத்தவில்லை.முகம் குப்புறப்படுது;திருந்த அவரைக்காப்பாற்றியது அந்த நெல் மூட்டைதான் என்றார்.

இடுப்புக்ழன்று போனது வயல்  அறுவடைக்காலம் என்பதால் தூரத்தில் வாடிகளில் லாந்தர் விளக்குகளில் மினுக்கம் தெரிந்ததது.நுளம்புகள் புழுதியைப்போல் வந்து அப்பிக்கிடந்தன.சித்தாலேப தைலத்தை கால் முழுக்க பூசிக்கொண்டு உறவுக்காரர் சொன்ன திகில் படத்தின் காட்சிகள் அரங்கேறுவதான பிரேமை என்னைத்தொற்றிக்கொள்ள கால்களுக்குள் தலையை புதைத்தபடி இரவைக்கழித்தேன்.

 இடைப்பட்ட பகுதியில் கும்மிருட்டு யானை அருகில் வந்து ஸலாம் சொன்னால்தான் தெரியும்.யானைவரும் வழியில் வயற்காரர்கள் காவல் நின்றார்கள்.விடிய விடிய நெஞ்சைப்பிடித்தபடி அந்த வாடிக்குள் குந்தியிருந்தோம்.சிலர் முயல் வேட்டைக்குப்போய் ஈற்றில்  அரைக்கிலோ பெறுமதியான முயலொன்றுடன் வந்தார்கள். 

காலையில் ஆற்றுக்குப்போய் ஒரு குளியல் போட்டோம். முன்பு குளித்த ஏனைய ஆறுகள் போல் ரசித்துக் குளிக்க முடியாத நீரோட்டம். என்றாலும் பகற்பொழுது வரை நீர் யானைகளைப்போல் நீந்திக்களைத்து கரையில் படுத்து,மறுபடியும் ஆற்றில் குதித்து, தூண்டிலில் மீன் பிடித்து அந்தக்காட்டை அதிர வைத்தோம். மாலையானதும் வரிந்து கட்டிக்கொண்டு காட்டை விட்டு கிளம்பிவிட்டோம்.

காடுகள் திகிலையும் ஆச்சரியத்தையும் மரணவலியையும் பாதுகாப்பையும் தந்தன என்பதை நினைக்கையில் எவ்வளவு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது.


எங்கள் தேசம் 235                          ஊஞ்சல் இன்னும் ஆடும்….

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...