Friday, 25 May 2012

“ உடைந்த கண்ணாடி அல்லது ஏவாளின் தோட்டம் ”


ஓட்டமாவடி அறபாத்தின் “ உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி ”

 சிறுகதைத்தொகுதியை முன்னிறுத்தி 
சில குறிப்புகள்.

எல்லா அழகியலும் மறுக்கப்பட்ட புனைவுக்குள்ளிலிருந்து மொழியை பிரித்தெடுப்பது அசாதாரண முயல்வு.அதை அதுவாகப்பார்த்து விட்டு நகர்ந்து விடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது. மொழிக்கற்றைகளின் திரட்சி என்னிடம் தரப்பட்டிருக்கிறது.உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கம் குருவி –முட்களாலான கீரிடமொன்றினுள் பிளவுபடாமல் இறகொன்றினை தொட்டெடுக்கும் கவனிப்புடன் அறபாத்தின் பிரதியை அணுகினேன்.

இருள் என்ற பிரக்ஞை பூர்வமான காதல் வரிகளால் என்னிடம் அறியப்பட்டவர் அறபாத். உணர்வுகளின் மிகச்சிதிலமான நிலையியலை காட்சிகளாக படிமப்படுத்தப்பட்ட கவிதையது. எனது 13 வயதில் படித்த ஞாபகம்.

மிகநீண்ட இடைவெளியின் பின்னர் அடிக்கடி என்னுள் எட்டிப்பார்க்காத பிரதிகளிலிருந்து “ நீக்ரோவின் மனைவி ” வாசிக்கக்கிடைத்தது.பெண் உணர்வு சார்ந்த கட்டமைக்கப்பட்ட கருத்தியல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பிரதியது. மிக இயல்பான தருணங்களிலிருந்து மீள நினைக்கும் ஆண் பற்றியதான போர் மன நிலையும் தன்னை முழுமையாய் நீக்ரோவிடம் ஒப்படைத்து விட்டு உணர்வுகள் மறுதலிக்ப்பட்ட பெண்ணைப்பற்றியதாயும் கதை பின்னப்பட்டுள்ளது. “ நான் ” என்ற பாத்திரத்தேர்வை கதைக்குள் எட்டி நிற்கும் நபராகவும் வெறும் பார்வையாளராகவும் காட்டும் முயற்சியது.

 எனினும் அறபாத்தின் விடுபட முடியாத மன நிலையும் மௌனமான அந்தப்பெண்னின் பேசும் விழகளுமே கதையின் களமும் நிகழ்வுகளெனலாம். துன்பியலை மனதிலேற்றி காணும் நபர்களிடமெல்லாம் வாழ்ந்து விட்டு வரும் என் பாழ்பட்ட ரசனையை தொட்ட இடங்கள் நீக்ரோவின் மனைவி முழுக்க விரவியுள்ளது. சொந்த வீட்டுக்குள்ளேயே வாடகை கொடுத்து வாழும் பெண் மனதின் ஆற்றாமையை இதில் குறிப்பிட்டு நிற்கிறார்.

நேரங்களும், வாழ்வும் தரும் அவகாசத்தில் அடுத்து என்னை ஆகர்ஷித்த பிரதி “ ஓணான் ” கதைக்களம் ஜனரஞ்சகத்தனமான அரசியலின் இருண்ட பக்கங்களை தோலுரித்துக்காட்டும் முயல்வுகளெனினும் வயது ரீதியாக பரம்பரை இடைவெளி கொண்ட இரண்டு பெண்களைப்பற்றிய கதையிது. அறபாத் நிஜத்தன்மைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் கதை மாந்தர்களை நேரடியாக தரிசிப்பதிலிருந்து விடுபடவும் பிரதான பாத்திரங்களை கழுதையாகவும், ஓணானாகவும், ஆமைகளாகவும், மரமாகவும் உருவகித்து விடுகிறார். 

இது ராம கிருஷ்ணனின் அஃறிணைப்பொருட்கள் மீதான படிவை ஞாபகப்படுத்துவதால் இவரது அழகியல் புனைவுகளை அவையே நிரப்பி விட வேண்டிய தேவையும் உள்ளது. இருப்புக்கொள்ள முடியாமல் தளம்லுறும் கஸ்ஸா மூத்தம்மா தனது பசுவைத்தொலைக்க ஒவ்வொரு ஓணானுமே காரணம் என கலங்கி எனது பசு எங்கேடா ? என்ற வினாவுடன் மூர்ச்சையாகி விடுவதும் “சிரித்தால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என யாரோ எச்சரித்து நிற்பாட்டி இருக்க வேண்டுமென்ற” எள்ளல் நடையிலும் ஒன்றுக்கொன்று முரணாண கதை சொல்லும் பாங்கு அறபாத்திற்கு லாவகப்பட்டிருக்கிறது.

இதன் பிறகு உதிரியாக படிக்கக்கிடைத்தது “அரங்கம்”  பெத்தாக்களின் ஊடாக பழமையின் திரட்டுகளால் புள்ளி தொடுத்து புது உலகின் விம்பங்களை காண முனைகிறார் போலும். எடுத்தாளத்துணிந்த பொருளுக்கும், கதையாடலுக்குமான தொடர்பின்மை அங்கங்கே ஒட்டியும் கொள்கிறது. “ஓணானை” மீண்டும் படித்தது போலிருந்தது.

கட்டிருக்கமான மொழி நடையிலிருந்து தளர்வான நடையை நோக்கி வேர் விடும் தருவாயிலும் சில கதைகளை காண முடிகிறது. மிக எளிமையான மொழியாடல்கள் ஊடாக எந்தப்படைப்பும் அழகுபடுத்தப்படவும் அதிலுள்ள செறிவான தன்மையில் விடயங்கள் இலகுபடுத்தப்படவும் ஊடுபாபவும் வழியுண்டு. இயல்பான கதையாடல்களை விபரிக்கும் “வன்மம்” சிறுகதை பண்பாடுகளோடு இணைந்த ஒரு பொழுது சில்லாய் சிதறும் கடந்த நிகழ்வுகளை பதிகிறது. “சோமாவின் தனிமை” கலகத்தன்மையான பதிவு.

 உறவு நிலைகளிக்கிடையிலான சிதம்பல்கனை சொல்கிறது. பதப்படுத்தப்படாத நிலமொன்று எல்லா வகையான பயிரிடல்களுக்கும் எற்றது. அது தவறாக பயன்படுத்தப்படும் போது பச்சை மனமும், ஈரப்பதமும் உலரும் தன்மையை சோமா குறித்து சொல்லலாம்.

 “மூத்தம்மா”வில் தசாப்தங்களுக்கு முன்புள்ள எமது சுதேசிய கிராமிய பெண்களிடமிருந்த தீரமும், கலப்பற்ற சுயத்தையும் தனித்துவத்தையும் கட்டியெழுப்பிய விதம் பற்றிக்கூறுகிறார்.   “பிரமை” - இன்மையில் உயிர்ப்பான உணர்வுகள் தூண்டப்பட்டதில் உண்டான இயலாமையை பேசுகிறது. நிர்மலமான ஆண் மன நிலையில் இளம் பெண்னின் கரிசனையான அசைவுகளால் ஏற்படும் சலனங்களையும், தோல்விக்கணங்களையும் பதிகிறது “பிரமை.”

“துறவிகளின் அந்தப்புரம்” எதிர்பார்த்த அல்லது சர்ச்சைப்பட்ட அளவு ஆகர்~pக்கவில்லை.  இருந்தும் ஒரு பெண் பற்றி எழுந்த ஆண் குரல் என்பதனால் முக்கியப்படுகிறது . அத்துடன் ஆண் உடல், ஆண் சதையின் உள்ளடக்குகளும், கிளர்வுகளும் எனும் விடயத்தில் பரிச்சயமற்ற என்னிடம் இந்தக்கதைகளின் அன்னியத் தன்மை ஓர் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கலாம்.

 எனினும் புனிதத்துவமான கற்பிதங்களை நோக்கி விரல் நீட்டியமையிலும், குரல் எழுப்பியமையிலும் அறபாத் முக்கியப்படுகிறார். அத்துடன் இவற்றை பிரித்தறிவதில் அவருக்குண்டான தெளிவு பற்றியும் மிரமிக்கின்றேன். “மோட்சம்” பிரதியின் இறுதிப்பகுதி முக்கியப்படுகிறது கதை நகர்த்தல் முறையிலும் பெண்ணுடல் சார்ந்த மிகைபடாத இயம்புதல் நியாயப்படுத்தலிலும்  அறபாத்தின் மேவுகை அவரை தனித்துக்காட்டுகிறது.

நாட்டாரியலின் அழகுச்சுவை வாய் மொழிப்பாட்டுக்குள் தேங்கிக்கி;;டக்கிறது. நாடோடிப்பாடல்களும், தெருப்பாடல்களும் தரும் அனுபவம் பல வேளை புத்தக அடுக்குகளுள் கிடைப்பதில்லை. “மூத்தப்பாவின் மாட்டு வண்டி” பிரதி முழுவதும் விரவிய கிராமியமும், கதை நபர்களின் யாதார்த்தப் பாங்கும் அழகு தருவன. 

சிறுவர் மன நிலையும் அவர்களின் வண்ணமயமான (ஒளி நிறைந்த கண்களைப் போல) உலகின் உளவியலும் கூர்மைபெற்வறு வரும் நிலையில் அலியின் தெறிப்புகள் நிறைந்த அப்பாவித்தனமான நம்பிக்கைகள் பரிதவிப்பை சொல்கின்றன. “ஜின்” சிறுகதை பரிதாபம் நிறைந்த ஒன்று “திசைகளின் நடுவே” ,மிகத்தீவிரமாக அரசியல் பர்ர்வை. “தனிமை” துறவு நிலையின் அபத்தம் குறித்தும் பெண்ணின் ஆற்றாமையில் உள்ள வழிகளையும் விரவுகிறது.

“ஏவாளின் தோட்டத்தில் கனிகள் இன்னும் மிச்சமிருக்கின்றன.” உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி தொகுப்பின் சிம்ம சொப்பணம் இதுவெனலாம். மிகையான அழகியலும், அறபாத்தின் மொழியியலின் புதிய பரிமாணத்தையும் வெளிக்காட்டுகிறது. அவரது புனைவின் தொடர்ச்சியின் நீட்சியை குறிப்பதாய் இதைச்சொல்லலாம் தனது அக உலகு சார்ந்த அந்தரங்கமான உணர்வுகளின் கிளர்வை பெண்னை பாம்பாக உருவகித்து கூற முற்பட்டிருக்கிறார் இதிலுண்டான காமத்தையும் அது சார்ந்த தேடலையும் இருளின் வர்ணம் கொண்டு தீட்டிய ஓவியம் போல புலனின்றி காட்சி தருகின்றது.

 அவரது “இருள்” கவிதையைப்போல. இரவும் அதன் அலாதியான இன்பங்கள் குறித்தும் எப்போதும் பிரமிப்புடன் இருக்கிறார். “அதன் மேல் பாந்தம் கமழ அருகில் சென்றேன். பொறுக்குவாரற்ற நாவற்பழங்கள் சிதறிக்கிடந்த மரத்தின் நிழலை மிதித்தபடி பாதங்கள் நகர்ந்தன. நாகத்தின் ஸ்தூல வாசம் என் நாசியில் விடைத்தது. நாக ரசம் நாவில் ஊறித்திளைத்தது…..” மிகத்தேர்ந்த சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

தனது மொழியை விரவ விடும் துணிவு இருக்கிறது. தான் சார்ந்த அனுபவத்திலும் உறுதியாய் இருக்கிறார். ஆனாலும் உள் மன உணர்வுகளை பதிவு செய்ய தவறுகிறார். காதல் வர்ணனைகளில் வார்த்தைகள் சலிப்பூட்டக்கூடியனவாயுள்ளன. 

உடைந்து விழும் நுண்ணனர்வு கொண்ட பிரதிகளுக்கு முயற்சிக்கலாம். மிக மென்மைனயான இயற்கை வர்ணணை உணர்வுத்தளம்பல் பற்றி ஆண்களால் எதிர்கொள்ள அல்லது முகம் பர்ர்க்க முடிவதில்லை. அது அவர்களின் இயலாமையின் வெளிப்பாடு. ரமேஷ் பிரேம் தமது காதலியை வர்ணிக்க மறுக்கின்றனர். வாசிப்பவர்கள் அவள் மேல் காதல் கொண்டு விடக்கூடுமென. இத்தகைய பலவீனமான நுண் இழையங்களாலும் ஆண்கள் உள்ளனர்தான். 

- சலனி 

Thursday, 17 May 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

பகுதி-14

அவர்களின் சாமியாட்டம் என்பது திகில் நிறைந்த அனுபவத்தை தந்தது.பூசாரி சாமியாட்டம் நிகழும் இடத்தில் நின்றபடி மந்திரகளை உச்சரிப்பார்.உடுக்கை ஒலிகள் ஓங்கி ஒலிக்கும்.காடே அதிரும்.பறவைகள் கீச்சிட்டபடி மரத்திலிருந்து சிறகடித்துப் பறக்கும்.வெற்றுடம்புடன் நிற்கும் பூசாரியின் மேனியெங்கும் திருநூற்றை அள்ளிப்பூசுவார்கள்.

சாமியாட்டம் நிகழ்வது பெரும்பாலும் ஆலமரத்தின் கீழ்தான்.நெருப்புக்கங்குகள் மரத்தைச்சூழவும் தகித்துச்சுழழும். உடுக்கை ஒலி வெறிபிடித்து உயர உயர பூசாரி நிதானமிழந்து ஆடத்தொடங்குவார்.தலையை சிலுப்பி அவர் ஆடத்தொடங்க கூட்டம் ஆவென்று வாய் பிழந்து நிற்கும். அவரைச்சுற்றி ஆனால் சற்று கைதொடும் தூரத்தில் ஆண்களும் பெண்களும் வட்டமிட்டு நிற்பார்கள். நானும் இந்த நெரிசலுக்குள் நுழைந்து ஒரு ஆட்டுக்குட்டிபோல் தலையை மட்டும் நீட்டி சாமியாட்டத்தை பார்க்கத் தொடங்கினேன்.

சாச்சா பின்வரிசையில் நின்றபடி கடையில் ஒரு கண்ணும் சாமியில் ஒரு கண்ணுமாக இருப்பார்.
பூசாரி திடீரென கூவென்று அலறினார். அவர் காலடியில் கிடந்த பாணிச்சேவல் அச்சத்தால் கொக்..கொக் என்றது. 'தாடா ..தாடா ……' என்றார். அவர் குரல் இடிபோல் முழங்கியது.கண்கள் பெரிதாகி வட்டமிட்டு ஒரு மிருகம் போல் இரையை கவ்வும் வெறியுடன்அலைந்தன.  

கூட்டம் அச்சத்தில் உறைந்திருந்தது. உதவியாளர்கள் பூசாரியை இழுத்துப்பிடித்தபடி நிற்க, கற்பூர வெளிச்சத்தில் சேவலின் தலையிலிருந்து இரத்தம் சொட்டுவதை நடுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறு பிள்ளைகளும் பெண்களும் சற்று மிரண்டு அவசத்துடன் விலகினர்.பூசாரி கோழியை கையில் எடுத்து பச்சை இரத்தத்தை முகர்ந்தபின் கோழியை பிடித்து ஆலமரத்திற்கப்பால் வீசினார். ம்..ம்.. என்று சதா கர்ஜித்தபடி இருந்தார்.

ஓவ்வொருவராக அவர் முன் வந்து வணங்கி காணாமல் போன பொருட்கள் பற்றி கேட்கத் தொடங்கினர். கேள்வி கேட்க எனக்கும் ஆசையாக இருந்தது. வாப்பா ஆசையாக வாங்கி த்தந்த புதுச் செருப்பு வெள்ளிக்கிழமை பள்ளியில் வைத்து காணாமல் போய்விட்டது,களிசனில் மறைத்து வைத்த ஐம்பது சதமும், காணாமல் போன மர்மம் தெரியாது. பூசாரியிடம் கேட்டால் என்ன?

பிறகு ஒரு பயம் நெஞ்சுக்குள் குமிழிபோல் நடுங்க வைத்தது. எனது காணாமல் போன பொருட்களை கேட்கப்போய் நான் யாருக்கும் தெரியாமல் எடுத்த பொருட்களையும் பூசாரி சொல்லி அதையெல்லாம் குடுடா என்றால் நான் எங்கே போக?

வாப்பாவிடம் ஒரு எவரெடி டோர்ச் இருந்தது. அதன் பின் பக்க மூடி சரியாக மூடுப்படாது என்பதனால் ஒரு ரூபா அல்லது ஐம்பது சதக்குற்றியை பெற்றரியின் பின் பக்கம் வைத்து டோர்ச்சின் மூடியில் அண்டுமாற்போல் இறுக மூடுவார்.இந்த தங்க மலை இரகசியம் எனக்கு தெரிய வாப்பாவின் டோர்ச்சில் அடிக்கடி ஒரு ரூபா ஐம்பது சத நாணயங்கள் காணாமல் போகத்தொடங்கின. இன்று வரை பிச்சைக்காரர்களுக்கு உம்மாதான் சில்லரை இல்லாததால் அந்த குற்றிகளை கொடுத்திருப்பா என்று அவர் நினைத்துக் கொண்டிருப்பதால் பூசாரியிடம் ஏன் மாட்டுப்படவேண்டும்.

தவிர யாசீன் பாவாட தோட்டத்தில் அத்துமீறி பறித்த முந்திரி மா,விழாப்பழங்களின் சுவை வேறு கேட்க விடாமல் அரணாக தொண்டைக்குள் வந்து குறுக்காக நின்றது. பூசாரியை பார்க்காமலேலே நழுவி சாச்சாவிடம் வந்து நின்றேன்.யாசீன் பாவாவின் கையில் இருக்கும் காய்ந்த மூங்கில் தடியிலும் அச்சம் இருந்தது.

இன்றைக்கு அந்த பூசாரி இருந்திருந்தால் சாமியாடச்சொல்லி கிடாய் வெட்டிக்கொடுத்து காணாமல் போன பலரைப்பற்றி கேட்டிருக்கலாம். கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் காணாமல் போனோரின் புகைப்படங்களுடன் கண்ணீர் சிந்தி நிற்கும் பெண்களின் நெஞ்சில் குடம் குடமாய் பால் வார்த்திருக்கலாம். அமெரிக்காவின் சீல் படையினர் பாகிஸ்தானிலிருந்து கவர்ந்தெடுத்துச் சென்ற உசாமா பின்லேடனின் ஜனாசா எங்கிருக்கின்றது என்பதையும் வன்னியில் இறுதிக்கட்டப்போரில் கண்டுடெடுத்த தங்கக்குவியல்கள் யாருடைய கையில் இருக்கின்றது என்பதையும் கண்டுபிடித்திருக்கலாம். 

இது தவிர எதிர்கட்சிகளின் மண்டைக்குள் சீகிரிய குழவிகள் போல் சதா கொட்டிக்கொண்டிருக்கும் கே.பி என்ற புலிகளின் சர்வதேச தொடர்பாளர் இலங்கையில் எங்கே இருக்கின்றார் என்பதையும் அவர் ஓடவிட்ட கப்பல்கள் எங்கே என்பதையும் கண்டுபிடித்திருக்கலாம். அந்தப்பூசாரியும் சாமியாட்டமும் இருந்திருந்தால் நிறைய கேள்விகள் என்னிடம் இருக்கின்றது அவற்றையெல்லாம் அச்சமின்றி கேட்டிருக்கலாம். குறிப்பாக கிறீஸ் பூதங்களை ஏவி விட்டு வயிற்றைக்கலக்கியவர்களையும் கண்டுபிடித்திருக்கலாம். காலம் வெகு தூரம் எல்லோரையும் தொலைத்து விட்டு வேடிக்கை பார்க்கும் அழகே தனி அழகு.

நானும் இப்படித்தான் ஒரு நாள் காணாமல் போன ஒரு இள நெஞ்சின் ஆசையை கண்டுபிடித்துக்கொடுத்தேன். உறவினர் ஒருவரின் வீட்டிந்குப்போயிருந்தேன். புதினான்கு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிள்ளையைச்சூழ சனங்கள் நின்றிருந்தனர்.என்னவென்றேன்.இவக்கு ஜின் பிடிச்சிட்டு என்றனர். ஜின்னாவது மண்ணாவது விலகுங்கள் என்றேன். பிள்ளை வானப் பார்த்தபடி படுத்திருந்தாள். கண்களை அகலத்திறந்தபடி அவள் படுக்கும் தோரணை எனக்குள் சில முடிவுகளை எடுக்க தோதாக இருந்தது.


கூட்டத்தை அப்புறப்படுத்தி விட்டு எல்லோரும் சற்று அப்பால் போங்கள் நான் ஜின்னுடன் பேசப்பபோகின்றேன் என்றேன். பிள்ளையிடம் தனிந்த குரலில் ஜின்னே உனக்கு என்ன வேண்டும் கேள். பேசாமல் இருந்தால் அடிப்பேன் என்றேன். எனது கையில் பிரம்பும் இருந்தது.பிள்ளை முரண்பிடிப்பது தெரிந்தது. பிரம்பை ஆத்திரத்துடன் ஓங்கினேன். அடிக்கும் எண்ணமில்லை. பிள்ளை மெல்லிய குரலில் கீச்சிட்டது. எனக்கு அப்பிள் பழம் தாருங்கள் போய்விடுகிறேன். 

சரி நான் அப்பிள் வாங்கித்தருகின்றேன்.எழும்பு என்றேன். பிள்ளை எழும்பி தண்ணீர் வாங்கி குடித்து விட்டு எதுவும் நடவாதது போல் சென்றது.குடும்பத்தின் வறுமை.நீண்ட நாட்களாக அப்பிள் சாப்பிடும் ஆசை.இந்த உத்தியை கையாள வைத்துள்ளதே தவிர ஜின்னுமில்ல பேயுமல்ல. ஜின் வைத்தியத்தை தொழிலாக செய்யும் பலர் இந்த வித்தைகளை தெரிந்துதான் கொள்ளையிட்டு வருகின்றார்கள்.

நான் சாச்சாவிடம் போய் அண்டிக்கொண்டதும் சாமியாட்டம் முடியவும் சரியாக இருந்தது.பூசாரி இயல்பாக எழுந்து புதுக்குடத்திலிருந்த தண்ணீரை குடித்து விட்டு நடக்கத்தொடங்கினார். அவர் வீசியெறிந்த சேவலை நரி தூக்கிச்செல்லாமல் இருக்க அவர் வரம் கேட்டிருக்க வேண்டும். நான் கடைவேலைகளை கவனிக்கத்தொடங்கினேன்.

ஊஞ்சல் இன்னும் ஆடும் .........
எங்கள் தேசம்: 221Tuesday, 8 May 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


                                                               தொடர்- 13

ஆல மரங்களையும் விழுதுகளையும் கண்டவுடன் இலேசான அச்சம் பரவத்தொடங்கிற்று. நான் படித்துக்கொண்டிருந்த ஓட்டமாவடி முஸ்லிம் மஹா வித்தியாலயத்திற்கு முன் (தற்போது பாதிமா பாளிகா பெண்கள் பாடசாலை) பெரியதொரு ஆல மரம். அனீபா காக்காவின் ஐஸ் பழ சைக்கிள் இடைவேளையில் தரித்து நிற்க தோதான இடம்.அனீபாக்கா ஏறாவூரிலிருந்து ஐஸ்பழம் விற்க சைக்கிளில் வந்து போவார். சில மூத்தம்மாக்களின் கச்சான்,வடை வியாபாரமும் ஆலமரத்தின் கீழ் மும்முரமாய் இருக்கும்.

இன்றைய மூத்தம்மாக்கள் கச்சான் வடை விற்பதையெல்லாம் அறியமாட்டார்கள்.பேரப்பிள்ளைகளின் பாதுகாவலர்,பிள்ளைகளின் வீடுகளில் காவல் பார்க்கும் இலவச காவலாளி,வெளியூரில் மாற்றலாகிப்போகும் குடும்பங்களில் சிறைவைக்கப்படும் சிறகிழந்த கிழட்டுக்கிளிகள்.

 இந்த மூத்தம்மாக்களுக்கு பான்கீன்மூனைத் தெரியும் அவரின் உற்ற இலங்கை நண்பர் விமல் வீரவங்சவையும் தெரியும்.கிரிக்கெட் தெரியும்,அப்துல்கலாமை தெரியும். எனது மூத்தம்மாவுக்கு ஆல மர பேய்களையும் மரணத்தின் கட்டியக்காரி குருட்டுப்பக்குளையும் தவிர வேரென்ன தெரியும்.

இந்த ஆலமரத்தைப் பற்றி எனது மூத்தம்மா கதைகதையாக சொல்லுவா.அதன் விழுதுகள் பேய்களின் ஊஞ்சலாம். இரவில் அவைகள் கூட்டாக ஆடிக் கொண்டிருப்பதை பார்த்தவர்கள் மறுநாள் எழுந்திருக்கமாட்டார்களாம்.

நள்ளிரவில் சினிமா பார்த்து விட்டு வந்தவர்கள்; தலைவிரிகோலமாக ஒரு பெண் இந்த ஆலமரத்தில் ஊஞ்சலாடுவதைப் பார்த்து இரத்தம் கக்கிச் செத்ததாகவும் மூத்தம்மா சொன்னா.

எஸ்.ஜே.சூரியாவின் சினிமாவைப் பார்த்துவிட்டு நள்ளிரவில் வருபவர்களுக்கும்,சில தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் கதைகளைப் படிப்பவர்களுக்கும் நவீன பேய்களில் நல்ல பரிச்சயம் இருக்கும் என்பது மகா உண்மை.

இன்னுமொருநாள் இப்படித்ததான் தனியே வந்த ஒருவனிடம் தன் கை வரிசையை காட்டியதாம் பிசாசு. ஆல மரத்தின் அடியில் ஒரு பெண் பிள்ளையை வைத்துக்கொண்டு நின்றாளாம். பிள்ளை அழுது கொண்டிருந்ததாம்.இவர் அருகில் சென்றவுடன் அந்தப்பெண் காக்கா இந்தப்பிள்ளய கொஞ்சம் புடிங்க என்றாளாம். இவருக்கு விசயம் விளங்கிற்று. ஆளும் பேய்களுக்கு பயப்பிடாத ஆசாமி.

அடியேய் ஹராமில புறந்தவளே என்னிட்டயாடி உன்ற திருவிளையாட்ட காட்டுறாய் என்று திட்டி ஆயதுல்குர்சீயை ஓதி அவளுக்கு ஊதியபடி திரும்பிப் பார்க்காமல் வூட்ட வந்து கதவ சாத்தியுள்ளார். மூடிய கதவில் ஓங்கி ஒரு அடி. நீ தப்பிட்டாய்டா மகனே என்று ஆக்ரஷமாய் ஒரு முரட்டு பெண் குரல்.

அது யாருமில்ல மோகினிப்பிசாசு.இந்த ஆலமரத்துலதான் இருக்குதாம். தனிய வார ஆம்புளயலப் புடிச்சி இரத்தம் குடிக்குமாம். அது தார பிள்ளய வாங்கினா ஆள் சரி. 

மூத்தம்மாவுக்கு இப்படிக்கதைகள் அத்துப்படி. ஆல மரத்தை வைத்து நிறையக்கதைகள் என் செவிகளுக்குள் வந்து சேர்ந்தன.ஆலமரங்கள் என் வாழ்க்கையில் மரண பயத்தை விதைத்துச் சென்றமைக்கு மூத்தம்மாவின் பேய்க்கதைகளும் ஒரு காரணம்.

ஆல மரத்தில் வெள்ளைப்புடவையுடன் தலைவிரி கோலமாக பாட்டுப்படித்து, சோகமாய் கம்மிங் பண்ணியபடி நடந்து போகும் ஆவிகளை ?சில சினிமாக்களில் பார்த்திருக்கின்றேன்.

நான் பாடசாலை விட்டதும் ஆல மரத்தை திரும்பிப்பார்க்காமலே வீட்டுக்குச் செல்வேன்.குறிப்பாக மதிய நேரத்தில் அந்தப்பக்கம் தலைகாட்டவே மாட்டேன். இந்தப் பேய்க்கதைகள் மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரும் நம்பிக்கை மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

அறிவு வளர்ச்சியும்,சன்மார்க்கங்களின்பாலுள்ள நாட்டமும் இவைகளை புறந்தள்ளி வீசியிருக்கின்றன. இறந்தவர்களால் உலகில் உயிருடன் உலாவரமுடியாது என்ற பேருண்மையின் ஒளிக்கீற்றுப் பரவப் பரவ அறியாமை என்ற இருள் விலகியே விட்டது.

இப்போது ஆலமரம் நின்ற இடம் சில படித்தவர்களின் செல்லுபடியற்ற செக், திருப்பிச் செலுத்தாத கடன்,சில விதானைகளின் இலஞ்சக்கணக்கு பார்க்கும் தளமாகவும்,  சண்டைகளின் உறைவிடமாகவும்,சில வாலிபர்களின் மாலை நேர தேவியர் தரிசனங்களுக்காகவும் உபயோகப்படுகின்றது என்பது வேறு விடயம். 
லதீப் ஹாஜியாரின் பேக்கரியில் மாலை நேரம் வீசும் மொறுமொறு பாண் வாசத்திற்கு வராத பேய்களா இனியும் வரும்?

சரி அது அப்படியே இருக்கட்டும். 

நான் சாச்சாவுடன் வனத்திற்குள் வந்த கதைக்கு வருகின்றேன். ஆதிவாசிகளின் ஆண்கள் வெற்றுடம்புடன் இடுப்பில் கச்சையுடன் திரிந்தார்கள்.ஓங்கி வளர்ந்த மரங்கள் நகர்வது போல் இருந்தது.பெண்களோவெனில் ரவிக்கை அணியாத மார்புகளை சேலையால் இழுத்து மறைத்தபடி முழங்காலுக்கு சற்று மேல் நோக்கி சேலை கட்டிக்கொண்டிருந்தார்கள்.

பெரும்பாலானவர்கள் காதுகளில் பெரிய வளையங்களையும் மாட்டிக்கொண்டு மூக்குத்தியும் அணிந்திருந்தார்கள். சதா வெற்றிலையை குதப்பிக்கொண்டு புளிச்புளிச்சென துப்பித்திரிந்தார்கள்.

தூர இடங்களிலிருந்து மாட்டுவண்டிகளில் குடும்ப சகிதம் சனங்கள் வந்து குழுமியிருந்தனர்.ஒவ்வொரு குடும்பத்தினரும் தோதான மரங்களில் கூடாரமடித்து தங்கியிருந்தனர்.காட்டின் அமைதியை கெடுக்குமாற் போல் குஞ்சு குருமான்களின் கும்மாளம்.இளவல்கள் ஆற்றில் குதிப்பதும்,மரங்களில் தாவுவதுமாக காடே தன் இயல்பை மீறி அந்தரப்பட்டது.
சாமியாட்டத்திற்குரிய ஆயத்தங்களை பூசாரி செய்து கொண்டிருந்தார். 

அவரைப்பார்க்கவே அச்சமாக இருந்தது.கருத்த ஆஜானுபாகுவான ஆகிருதி.சிவப்பேறிய கண்களால் உருள உருள காட்டையே சுழற்றி வந்தார்.மஞ்சல் நீரால் ஆசீர்வதிக்கப்பட்ட சில ஆடுகளும்,சேவல்களும் அவர் காலடியில் திமிறிக்கொண்டிருந்தன.சாம்பிராணிப் புகை பனிப்புகாரென மேலெழுந்து கரைந்து மறைந்தது.


ஊஞ்சல் இன்னும் ஆடும் .........
எங்கள் தேசம்: 220