Sunday 2 December 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்



                      28


ருவர் மட்டும் வரும்படி சைகையில் காட்டினார்கள்.நான்தான் சென்றேன். ட்ரவலின் பேக்கை வைத்து விட்டு வரும்படி  மறுபடியும் கத்தினான். கைகளை உயர்த்தும்படி மற்றொருவன் கூச்சலிட்டான்.கைகளை உயரே தூக்கியபடி இராணுவ முகாம் அண்டையில் சென்றேன். 

துருவித்துருவி விசாரித்து விட்டு அலசி அலசி சோதனையிட்ட பின்பு மற்றவர்களையும் கைகளை உயர்த்தியபடி வரும்படி சைகை காட்டினார்கள்.எல்லோரையும் சோதித்து விட்டு ம்.. ஏறுங்கள் ஜீப்பில் என்றார்கள் .

 மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் ஆறு மைல்கள் நடக்க வேண்டும் என்ற மனக்கஷ்டம் மறந்து போனது. ஆர்வமுடன் பாய்ந்து ஏறினோம். இரானுவத்தினர் திறந்த ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வாழைச்சேனைக்கு வந்தார்கள்.

ஓட்டமாவடி பசாரில் சில கடைகளில் நிற்பாட்டி எங்களை தெரியுமா என அடையாளம் கேட்டார்கள்.ஓம் எங்கட ஊ+ருப்பொடியன்கள் என்றவுடன், சாவன்னாட சந்தியில் இறக்கி விட்டுப்போனார்கள்.தெரியாது என்றால் இருக்கவே இருந்தது வெற்று ரயர்கள், போட்டு எரித்து விட்டுத்தான் மறு வேலை

.ஏனெனில் அக்காலங்களில் புலிகள் முஸ்லிம்கள் போல் வேடமிட்டும் ஊருக்குள் நுழைந்து வேவு பார்த்து வந்தனர்.இராணுவத்தினதும் புலனாய்வுப்பிரிவினதும் கண்களில் மண்னைத்தூவி விட்டு அடிக்கடி வந்து போவதால் தொப்பி போடுவதும் முஸ்லிம்கள் தம் அடையாளங்களை பின்பற்றுவதும் பெரும் சவாலாய் இருந்தது.ஜீப்பில் பாய்ந்து ஏறிய மகிழ்ச்சியை இந்த விசாரணைகள் துடைத்தெறிந்தன.

வீட்டுக்கு வந்தவுடன் மரணத்திற்குத்தப்பி வந்தவர்கள் என்ற பிரமிப்புடன் ஊரே திரண்டு வந்து வியப்புடனும் ஆறுதலுடனும் பார்த்து விட்டுச்சென்றது.

மரத்தால் விழுந்தவனை மாடு முட்டியது போல் ,அன்று மாலையே அபத்தமான செய்தி காட்டுத்தீ போல் பரவத்தொடங்கியது. முள்ளிவெட்டவான் கடைக்கு முன்னுள்ள புளியமரத்தில். வாப்பாவும் தம்பியும் தொங்குவதாகவும் முஸ்லிம் ஆக்கள் காட்டுப்பாதையால் தப்பி புனானைக்கு வந்து கொண்டிருப்பதாகவும் அந்த வதந்தீ வேகமெடுத்தது 

இந்தக்காலம் புலிகள் முஸ்லிம்களின் இரத்தத்தால் யாகம் நடாத்திய துர்க்காலம்.உறவினர்கள்,ஊர் மக்கள் என பெரும் படை பொலிஸ் இரானுவத்தின் உதவியுடன் முள்ளிவெட்டவானுக்கு புறப்பட ஆயத்தமானோம்.

வாப்பாவுக்கும்,தம்பிக்கும் அப்படியொன்றும் நடக்கவில்லை என்றும் காட்டுவழியால் தப்பி வருகிறார்கள் என்றும் பிந்திய செய்தி கிடைத்து.அலைந்துழல்தலின்  முதல்படி இங்கிருந்துதான் ஆரம்பமாயிற்று.

நாங்கள் நேசித்த தோட்டத்தை, கடையை, கதைக் களமான புளியமரத்தை, ஆடுகளை,மாடுகளை,நீந்தி விளையாடிய ஆற்றை, வயல் வெளியை, ஓடையை,கோல்டன் மீன் நீந்தும் குளத்தை,திராய் செடி நோண்டும் வயல் வெளியை  பனை மரங்களை,காடுகளை தலை தாழ்த்தி மேயும் கோழிகளை,அவ்வப்போது எட்டிப்பார்க்கும் பாம்புகளை,முற்றத்தில் கூட்டமாய் இறங்கி மேயும் மணிப்புறாக்களை இனிய புல் வெளிக்கனவுகளை இழந்து வெறும் கோதுகளாக திரும்பினோம்.

காடு என்றவுடன் மற்றுமொரு நினைவுகளையும் மனம் உசுப்பிப்பார்க்கிறது.
காடுகள் மனிதனுக்குத்தரும் படிப்பினைகள் அனந்தம்.

அற்புதமான,ஆனால் அழகான அனுபங்களை காடுகள் நமக்குத்தருகின்றன.அப்படியொரு இனிமையான நினைவுகளை  யுத்தம் நின்றவுடன் காடு எனக்கு வழங்கியது.

2006ம்ஆண்டு என நினைக்கின்றேன்.கொழும்பில் வேலை பார்த்தபோது எனது நிறுவனத்தினால் ஒரு சுற்றுலா செல்ல ஏற்பாடுகள் நடந்தேறின

.நுவரெலியா,ஹம்பாந்தோட்ட பொத்துவில், பாசிக்குடா, காலி,என இடங்களை தெரிவு செய்த போது எல்லாமே சென்று இடங்கள் என ஓரங்கட்டப்பட்டன.ஈற்றில் புத்தளம் தெரிவு செய்யப்பட்டது.

மூன்று நாள் பயணம்.புத்தளத்திலிருந்து எலுவான்குளத்திற்குச்சென்றோம். எலுவான் குளம் வரை எமது வாகனத்தில் செல்வதென்றும் அங்கிருந்து காட்டுவழிப்பயணத்திற்கு இரண்டு ட்ரக்டர்களில் செல்வதென்றும் தீர்மானித்தபடி எலுவான்குள நண்பர் ட்ரக்டர்களுடன் தயாராக இருந்தார். ஆற்றுக்குப்போக ஒரு எட்டு மைல் இருந்தது. பொருட்கள் ஏற்றப்பட்ட ட்ரக்டர் காட்டுப்பாதையால் உறுமியபடிச்சென்றது. 

யானைகளின் விட்டைகளும் காலடித்தடங்களும் அவ்வப்போது கண்களில் பட்டன. வனத்தின் அடர்த்தி நீக்கமற எங்கும் நிறைந்திருந்து.கண்ணுக்கெட்டிய தூரம் வரை இறுசல் காடே எம்மை அழைத்துச்சென்றது.இப்படியொரு வனத்திற்குள் வருவது இது தான் முதற்தடைவ. இதற்கு முன்பு சென்ற காடுகளில் இவ்வளவு அடர்த்தியும் விசாலமும் இல்லை.சூரியக்கண்களால் பூமியை பார்க்கவே முடியாதபடி சில இடங்களில் மரங்கள் பிண்ணியபடி காட்சியளித்தன.  புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

எங்கள் தேசம் : 234                                                               ஊஞ்சல் இன்னும் ஆடும்……..



  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...