Saturday 22 October 2011

சிறுகதை - மோட்சம்


நெடுஞ்சாலையிலிருந்து இறங்கி பசுமையான வயற்பரப்பின் குளிர்மைக்குள் கால் புதைத்தார் ஹசரத்.கிராமத்திற்கு செல்லும் குறுக்குப்பாதை இந்த வயற்காடு.சூடு குவிக்கப்பட்ட வயற்பரப்பு அறுணாக்கொடியற்ற குழந்தையின் இடையைப்போல் தோவெனக்கிடந்தது.தூரத்தே மாடுகள் மௌனமாக தலைபுதைத்து மேய்ந்து கொண்டிருந்தன.

“அஸ்ஸலாமு அலைக்கும் அசரத்”

“எதிரே நூவன்னா ஹாஜி”

“வஅலைக்குமுஸ்ஸலாம் எங்கயன் போற ஹாஜி”

“டவுனுக்க அசரத்”

அவர் வார்த்தைகளில் பவ்யம்

“அல்லாட காவல் போய்ட்டு வாங்க”

ஹசரத்தின் ஆசீர்வாதம் பெற்ற நூவன்னா ஹாஜி வகிடெடுத்த வரம்பிலிருந்து சற்று ஒதுங்கி நின்று  ஹசரத் போக வழிவிட்டார்.

ஹசரத் பீலியையும் மேலேகிச்செல்லும் படிக்கட்டுக்களையும் தவிர்த்து ஊருக்குள் நுழைய முடியாது. 
நேற்றிரவு பெய்த மழைக்கு அட்டை நெளியும் மனசுக்குள் கூவிக்கொண்டு மிகக்கவனமாக பாதங்களை பார்த்துக்கொண்டார்.

பீலியைக்கடந்து செல்ல மொத்தம் 26படிகள். ஒரு நாள் ஹசரத்த கணக்கிட்டுக்கொண்டே ஏறிப்பார்த்தார்.முதற்படிக்கட்டில் கால் வைக்கும் போதே பள்ளத்தில்  பீலியில் குளிக்கும் பெண்களின் கும்மாளம் வரவேற்றது.

கதம்பங்களை சுமந்த வந்த காற்று வயல்வெளியெங்கும் பித்துப்பிடித்து அலைந்தது.பல வர்ண சோப்பு, ஷாம்பூக்களின் வாசனை ஹசரத்தின் இதயத்தை தளும்பச்செய்தது.

பீலிக்குள் விழிகளை திருட்டுத்தனமாக எறிந்தார். நிஹாரா சிரித்தபடி நுரைக்க நுரைக்க தலையில் ஷாம்பூ தேய்த்துக்கொண்டு நிற்கிறாள்.இன்னும் உடையாத பனிக்குடம்.அவளிடம் ஹசரத்துக்கு ஒரு இது உண்டு. அவளின் திமிரும் அழகு,துடுக்குப்பேச்சு, பார்க்கப்பார்க்கப் பரவசம் கிளரும் பருவச்சிறுக்கி. மினுங்கும் உடலில் உண்ணிபோல் ஒட்டிக்கிடக்கும் ஈரத்துணிமேல் ஹசரத்துக்கு எரிச்சலாய் வந்தது.

படிக்கட்டுக்களின் இரு மருங்கிலும் கராம்பு, சாதிக்காய், ஈரப்பலா என எண்ணற்ற வாசனை மரங்கள் அடர்ந்து நின்றன. சில மரக்கந்துகளை வெற்றிலைக்கொடிகள் இறுகப்பற்றியபடி மேலேறிச்சென்றன. படியேறிப்போவோர் பீலியில் குளிப்பவர்களை மிக இரகசியமாக ரசித்துப்போக இந்த மரங்கள் தோதாக வாய்த்துவிட்டதில்  பூரித்துப்போகும் இதயங்களுள்  ஹசரத்தும் ஒருவர்.

கராம்பு மரங்கள் காய்த்துத் ததும்பின.  மரக்கந்துகளின் முகங்களில் கிளை கொள்ளா மச்சம். இளவயதுப்பையன்கள் சருகுகள் விலத்தி கராம்பு பொறுக்கிக்கொண்டிருந்தனர். சிலர் மரக்கந்துகளில் ஏறி நின்று கிளைகளை உசுப்பிக்கொண்டிருந்தனர்.

தொலைந்து போன பொருட்களை ஆர்வத்துடன் தேடுவார் போல் கராம்பு பொறுக்கும்  பையன்கள் ஹசரத்தின் சிலமங்கண்டு  கோரசாக ஸலாம் வைத்தனர்.

ஹசரத்தின் மனப்பறவை அடித்துக்கொண்டது. குருபக்தியின் மகோன்னதம்.எல்லையற்ற பரவசத்துடன் தலை தாழ்த்தி பதில் கூறிக்கொண்டார். அவர் முகத்தில் வரவழைத்த சாந்தம் மலர்ந்தது.

மரத்திலிருந்த பையன்கள் இறங்குவதா வேண்டாமா என்ற பதற்றத்தில் கிளைக்கு கிளை தாவி துடிப்பதை உணர்ந்த ஹசரத் கை உயர்த்தி வேண்டாம்  என்பது போல் சைகை செய்தார்.

அவர்கள் ஹசரத்திற்கு மரியாதைக்குறைவாக நடந்து விட்ட குற்ற உணர்வில் சங்கோஜப்பட்டுக்கொண்டிருக்க ஜன்னதுல் பிர்தவ்சின்  நறுமணத்தை அவ்விடத்தில் விட்டு விட்டு ஹசரத் மறைந்து போனார்.


ஹசரத்தின் திருப்பாதம் இந்தக்கிராமத்து கராம்புத்தோட்டங்களில் பதிந்த போது வராத மழை வந்து அவ்வருடம் தோட்டங்கள் செழிப்புற்றன.அவரின் மந்திரங்களுக்காக தோட்டங்கள் தவமிருந்தன.

தோட்டத்தில் ஆரம்பித்த அருள் மழை கடைகள்,வீடுகள் என எங்கும் நீக்கமறப்பொழிந்தது. புழுதியைத்தவிர எதும் தெரியாத பெட்டிக்கடை,  பின்கட்டில் எலிகள் பூனை உள்ளிட்ட பெருச்சாளிகள் வாசம் செய்யும் ஹோட்டல். பழைய இரும்புக்கடை என அவரின் திருக்கரம் பட்ட இசும் தகடுகள் மின்னின.

புதிய கடைகளின் கல்லாப்பெட்டிகளில் ஹசரத் மை தொட்டெழுதிய இசும்கள், செம்புத்தகடுகளில் தலைக்கு மேல் தொங்கும். ஹசரத்தின் காவல் தெய்வங்கள்  உள்ளே நுழையும் கொள்ளையர்களையும், வெள்ளை வானில் வந்து கப்பம் பெறுவோரையும் கடைசி வரை கண்டு கொள்ளவே இல்லை.

மோதின் முற்றி லெப்பை ஆகியது போல் ஹசரத்திற்கும் மோட்சம் கிடைத்து விட்டது.
ஊரின் மையத்தில் கொளுவிருந்து அருள்பாலிக்கும் மௌலானாவாகி விட்டார் ஹசரத். காகம் நிற்க  பனம் பழம் விழுந்த கதையாயிற்று.மத்திசத்தின் வீட்டின் மேல் மாடி ஹசரத்தின் ரூஹ் ஓய்வெடுக்கவும் அருள் வீசவுமென ஒதுக்கப்பட்டது,

கொழும்பில் காலை ஆகாரம் பானும் பருப்பும்;. பகலில் சைவ ஹோட்டலில் வெஜிடேரியன், இரவிலோ ஒரு டீ பன்னுடன் காலம் தள்ளிய ஹசரத்தின் பூட் மெனு, ஒரே நாளில் மாறிப்போய்விட்டது. காலையில்  ஒரு டம்ளரில் முறுகக்காய்ச்சிய பசும்பால், அவித்த முட்டை, வாழைப்பழம். மதியத்தில்  பொறித்த மீன்,வேக வைத்த மரக்கறி, சம்பாச்சோறு, கோழி அல்லது ஆட்டிறைச்சி,இராப்போசனம் இடியப்பம் சவ்வரிசிக்கஞ்சி. ஊர் முழுக்க முறை வைத்து தீனி போட மௌலானாவின் புனித உடலில் தேஜஸ் ஓளிர்ந்தது.

வெயில் படாத முகத்தில் பளீரென சௌந்தர்யம் கூடிற்று.

 “அவகட மொகத்த பாரு சாந்தமாமாபோல என்னா பசுந்து”

சனங்கள் சிலாகித்து வியக்கும்படியான மௌன அழகு ஒரு அபாயம் போல் வளர்ந்து கொண்டு வந்தது.

இளைஞர்கள் அவரைச்சூழ்ந்துகொண்டு பத்வாக் கேட்டபடி வட்டமிட்டிருந்தனர். குதர்க்கமான கேள்விகளுக்கெல்லாம் மௌலானா சலிக்காமல்  பதில் தந்து கொண்டிருந்தார். அவருக்கு சில அந்தரங்க நண்பர்களும் இருந்தனர். அவர்களுடன் இரவில் ஊர் சுற்றுவார். ஆசி வழங்கும் நேரம் தவிர, இளைஞர்களுடன் தேயிலைச்செடிகளுக்குள் மறைந்திருந்து ஓய்வெடுப்பார்.

தேயிலை தோட்டத்தின் அடியில் ஒரு பீலி. சம வேகத்தில் நீர் கொட்டிக்கொண்டிருக்கும். பீலிக்கு லயத்துப்பெண்கள் மட்டுமே குளிக்க வருவார்கள். மாலை நேரங்களில் பீலியை அண்டினாற்போல் மேலிருக்கும் தேயிலைச்செடிகளுக்குள் ஹசரத் சரிந்து கிடக்க அவரண்டையில் இளைஞர்கள்.

லயத்துப்பெண்கள் குறுக்குத்துணி அவிழ்த்து சரிந்து விழும் குளிர் நீரில் மதர்த்த முலைகளை அலசுவதை வியந்தபடி ஹசரத் தேயிலைச்செடிகளின் இடுக்குகள் வழியே கண்னெறிந்து கிடப்பார்.

நீர் விட்டபடி கை விட்டுக்கழுவும் அந்தரங்களை ஹசரத்தின் மனம் ஆலிங்கணம் செய்யும்.

“ஹசரத் நீங்க கஞ்சா குடிக்கிய இது பாவமிலியா?”

கேள்வியில் அடிபட்ட நாகமாய் சீறி எழுவார். தேயிலைச்செடிகள் பலமாக ஆடி ஓயும்.

“தாரேன் சென்ன பாவமின்டு, கஞ்சா ஆலிம்களுக்கு ஹலால். ஷைகுமாருக்கு அது ஞானச்செடி கொஞ்சமா குடிக்கலாம்,மத்தவங்களுக்கு இது ஹராம் தெரிய்மா, ஆதாரம் ஓணுமா “பத்ஹ{ல் முயீன்” என்ட கிதாபுல இரிக்கி, ஏலுமென்டா வேற ஆலிம்சாகிட்டயும் கேளுங்க. அந்தச்செடிய ஒகளப்போல ஆமிகள் தொடப்படா புள்ள விளங்கினா.”

“சரி மௌலானா, எகட அனீஸ் மௌலவி அவங்கட பக்கத்து வூட்டு டீச்சருட்ட சாமத்துல போய்ட்டு வார, இதுவும் அந்தக்கிதாபுல இரிக்கியா?”

 கூட்டத்தில் இருந்த அஸ்வர்தான் கேட்டான்

மௌலானாவின் முகம் இறுகிப் போனது. அடிபட்டவராக சீறி எழுந்தார்.

“ஆர்ரா அது ஹராங்குட்டி வாய்காட்டுர, ஏன்டா அவரு ஒகட வூட்யா வாற. பாயிசா டீச்சர் ஒரு விதவ ஏதாவது ஜின் பிடிச்சிருக்கும் மந்திரிக்கப்போவாராக்கும். “

மௌலானா ஒரு மதிய நேரத்தில் பாயிசா டீச்சரின் வீட்டுக்குள்ளிருந்து வந்தததை தன் வீட்டின் ஜன்னலூடே பார்த்துவிட்ட அஸ்வரின் கேள்வி அவரை தடுமாற வைத்தது. அவன் அதை உள்ளுர ரசித்தபடி உம்மென்றிருந்தான்.

“மௌலானா போன மாசம் கலியானம் முடிச்ச என்ட கிளாஸ் மெய்ட் ரீமா புருசன புடிக்காம விதவையாக வந்திருக்கா இப்ப நானும்  மந்திரிக்கப்போகவா?” கேள்வியை உதடு வரை அடக்கிவிட்டு மெலிதாக சிரித்த சியாமின் பக்கம் மௌலானா திரும்பி என்ன என்பது போல் முறைத்தார்.

அவன் ஒண்டுமில்ல என்பது போல் பலமாக தலையை அசைத்தான்.

மௌலானா பீலியை உற்றுப்பார்த்தார். குளித்துவிட்டுப்போன பெண்களின் அடையாளங்களுடன் அது வெறிச்சோடிக்கிடந்தது.

தளிர் விடும் தேயிலைக்கொழுந்துகளை நொள்ளி வாயில் போட்டு மென்று துப்பினார். ஞானச்செடிகமழ்ந்த அவர் அதரங்களில் தேயிலைச்சாறு கசிந்தது.

அந்தி வெய்யில் மலையடிவாரத்தில் இறங்கிச்சரிந்து கொண்டிருந்தது.மழை உச்சியிலிருந்து விறகுக் கட்டுக்களை சுமந்தபடி பெண்கள் இறங்கிக்கொண்டிருந்தனர்.

மாலை வகுப்பு முடிந்து, ஆண்களும் பெண்களும் ஜாடையாக பேசியபடி வீதியின் இரு மருங்கிலும்  சிரிப்புகளை உதிர விட்டபடி சென்று கொண்டிருந்தனர்.
டியூசன் கொடுத்து விட்டு ரிசானா டீச்சரும் இறங்கிக்கொண்டிருந்தாள்.

கிராமத்தின் இள வட்டங்களின் சௌந்தர்ய தேவதை. அவள் அவர்களை கடந்து சென்ற பின் ரிசானாவின் பின்னழகில் கண்கள் மொய்த்துக்கிடக்க அந்த  அவஸ்தையை அஸ்வர்தான் உடைத்ததான்.

“மௌலானா ரிசானா டீச்சருட பெக்கப்பாருங்க ஒன்டு அள்ளுது,மற்றது அறைக்குது.“ கூட்டம் ஓவென்று சிரித்தது. மலை உச்சியில் மேகங்கள் இறங்கிக்கொண்டிருக்க இருள் கவியத்தொடங்கியது.

பனியின் கரங்கள் பூமியை தீண்ட ஆரம்பித்தன.புற்களின் நுணியில் ஈரம் படர்ந்திருந்தது.மௌலானா எழுந்து நின்றார்.இளைஞர்கள் அவரைச்சூழவும் அரண் அமைத்தது போல் தொடர்ந்தனர்.

“மௌலானா நீங்க இப்ப பள்ளிக்குப்போறதில்ல ஏன்? ”;

தெரு முழுக்க  ஆன்மீகம் கமழ்ந்தது.

“நாங்க முரீது வாங்கினவங்க,இப்ப முரீதும் குடுக்கிய, இபாதத்து சாதாரண ஆக்களுக்குத்தான்.ஞானம் கிடச்சவுடன அல்லாவுடன் சேருதுது எங்கட ஆன்மா.

நாங்க காமராவுக்குள்ள (அறை) இருந்துண்டே கஃபாவுக்குப்போய் தொழுவுற. இது கஷ்புட இல்ம் உள்ளவங்களுக்கு நல்லா விளங்கும்.வலீமாரோட முஷாபஹா செய்யுற. நாயகமவங்க எங்கட ஸலாத்துத்துக்கு புறத்தி செல்லிய”.
2

பழைய மாதம்பயில்தான் ஹசரத் ஞானத்தீட்சைக்கென நேர்ச்சை செய்துவிடப்பட்டிருந்தார். குருகுலத்தின் எல்லையற்ற விதிகளை சகித்தபடி மூன்று வருடங்கள் உருண்டோடி விட்டன. தினம் அதிகாலை மூன்று மணிக்கு துயில் கலைதல்,திலாவத், மனப்பயிற்சி,திக்ர்,ஸலவாத்,மொட்டை போட்ட தலையில் நீக்கமற சுற்றப்பட்ட தலைப்பாகை ,தெருக்காற்றுத் தீண்டாத குருகுல வாசம்.அவருக்கு சகிக்கவே இல்லை.

அவரின் குருகுலத்தை அண்டி ஓர் அகன்ற தாமரைக்குளம். இளமையுடன் கன்னிவிட்டிருந்தது.ஆண்களுக்கும் பெண்களுக்குமான வெவ்வேறு படித்துறைகள். மதிய நேரத்தில் சிங்களக்குட்டிகள் குளித்துக்கொண்டிருப்பதை குருகுலத்தின் மேல்மாடியிலிருந்து உற்றுப்பார்த்தால் துலங்கும். ஹசரத்தும் அவரின் தோழர்களும் தினம் ஓய்வு எடுக்கும்  நேரத்தில் கண்டு களிக்கும் அற்புதக்காட்சி.
 
தாமரைக்குளத்திற்கு  திருட்டுத்தனமாக குளிக்கப்போவதென்று தீர்மானித்த ஒரு பகற்பொழுதில் உஸ்தாதுமார்கள் ஜும்ஆராத்திரிக்கு சென்றுவிட்டிருந்தனர்.

வெய்யில் அந்தரித்துக்கொண்டிருந்தது.ஹசரத் என்ற அஸ்லமும், அவரின் தோழர்களும் தாமரைக்குளத்தில் கழுத்துவரை புதைந்து கிடந்தனர்.விழிகள் சிவந்து கன்றிப்போகும் வரை முங்கிக்குளித்தார்கள்.பளிங்கு நீரின் மதர்ப்பில் முகம் பார்த்தபடி சிறு மீன்கள் பாதங்களை சுண்டியிழுக்க சிலிர்த்தபடி நீர்க்குளியல்.

தூரத்தே பெண்களின் படித்துறை.மொட்டை போட்ட இவர்களின் கூத்தில் பெண்களின் கவனம் சிதறியது. கேலியுடன் திரும்பிப்பார்த்து சிரித்துக்கொண்டார்கள். பார்ப்பது பெண்களல்லவா ஆழிக்கூத்தில் குளம் குமுறிக்கொட்டியது.

ஒரு மாதம் கடந்து விட்டது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் உச்சிவெய்யில் குளியல். தாமரைக்குளத்தில் மண் சோறாக்கி திண்பது போல் பாசாங்கு செய்தார்கள். எல்லோரும் சொல்லி வைத்ததாற்போல் படித்துறையில் நின்று தொபீரெனக்குதிப்பார்கள். மணலில் முகம் அழுந்து மட்டும் நீரைக்கிழித்துக்கொண்டு,பின் மேலேகி கெக்கலித்துச்சிரிப்பார்கள்.

”வெள்ளைக்கொக்குகள்.” 

பெண்களின் படித்துறையிலிருந்து பத்மாவதி கூவினாள்.அவளை சைகையால் நையாண்டி செய்தார்கள்.

நள்ளிரவுக்கனவுகளில் காமக்கிளர்ச்சியூட்டும்; தேவதைகளில் ஒருத்தியாக பத்மாவும் வந்து போனாள்.

அதிகாலையில் பிசுபிசுக்கும் சாரத்தை விரல் நுனியில் தூக்கிப்பிடித்தபடி மர்மக்கனவுகளின் இன்ப லாகிரியில் மிதந்தபடி அழுக்கு நீரில் குளிக்கப்போவார்கள்.

அவர்களின் கனவுத்தொழிற்சாலைக்கு தீ வைக்கும் அசுரனாக உஸ்தாத். பகற்பொழுதில் விழித்தும் பார்த்திராத அவர் விழிகள் அன்று அவர்களின் நீர் விளையாடல்களை பார்த்துவிட்டன.

அன்றைய மாலைப்பொழுதே குருகுலத்திலிருந்து அவருக்கு விடுதலை கிடைத்து விட்டது.

“தங்கள் புத்திரன் அஸ்லம் என்பார் குருகுலத்தின் விதிகளை மீறி அதற்கு களங்கம் கற்பித்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டார் எனவே இங்கு தொடர்ந்தும்  கல்வி கற்க தகுதியற்றவராக கருதப்படுகிறார்.” தந்தி ஊருக்குள் பறந்து வந்து வாப்பாவின் கரத்தில் அமர்ந்து சிறகடித்தது.

 தாமரைக்குளமே உனக்கு நன்றி.தன் விலங்கினை தகர்த்து இளமையின் இன்ப இறக்கைகளை பூட்டிய தாமரைக்குளத்தருகே நின்று விடைபெற்றுக்கொண்டார்.  பத்மா இல்லாத தாமரைக்குளம் சலனமற்றுக்கிடந்தது. அவர் வீட்டின் கரங்கள் அவரை மறுதலித்தன.

 “தலயால தெறிச்ச ஹராங்குட்டி, போற இடத்துல ஒழுங்கா இருந்து மனுசனா வராம,வந்திருக்கான் குரங்கு.”

 வாப்பா அச்சி மரைக்காரின் முறைப்பு. வீடு இன்னொரு குரு குலமாவதற்குள் கொழும்புக்கு வந்து விட்டார்.

பள்ளிவாயலில் துப்பரவாக்கும் பணி. சிறு சம்பளத்தில் மூவேளை உணவு. போதும் என்று உட்கார்ந்து விட்டார்.மோதினற்ற சுபஹ் வேலையில் அதான் ஒலித்தார். குரலின் இனிமையில் பழைய மோதின் இரண்டாவது இடத்திற்கும் இவர் முதற்தரத்திற்குமாக உயர்த்தப்பட்டார்.

இமாமற்ற தருணங்களில் தொழுகை நடாத்தினார். சிறு பிரசங்கமும் செய்து பார்த்தார்.ஓதிப்பார்த்தார்.இசும் கட்டினார். காகம் நிற்க பனம் பழம் விழுந்தது. பணமும், புகழும் உயர ஆன்மீகம் நல்ல கலை. அஸ்திரத்தை கையிலெடுத்த அஸ்லம் அசரத் மௌலானாவாகிப்போனார்.

3

மௌலானாவின் பிரசன்னம் இந்தக்கிராமத்தில் கடந்த நான்கு வருடங்களாக நித்தியம் பெற்றுள்ளது. மத்திசத்தின் வீடே அருள் வழங்கும் ஸ்தலம்.

மத்திசம் அவர் வயதான மனைவி. அந்த வீட்டில் அவருக்கு எந்த தொந்தரவும் இருக்கவில்லை.இந்த வீட்டை தெரிவு செய்ததற்கு மற்றுமோர் காரணம் அங்கிருந்த கருப்பு வெள்ளை டீ .வி.

வாரம் ஒரு தடவை புதன்கிழமை இரவில் 9.30 மணிக்கு அம்பிகா மற்றும் லலிதா ஜுவலரிமார்ட் ஆதரவில் போடும் தமிழ் படங்கள் அவர் கலைப்பசியை போக்கின.

புதன் கிழமைகளில் ஒன்பது மணிக்குப்பின் மௌலாவின் தரிசனங்கள் பெரும்பாலும் சனங்களுக்கு கிடைப்பதில்லை.அவர் தியானமிருப்பதாக கதைகளை உலவவிட்டிருந்தார்.ஜின்களுக்கு இரவில் ஓதிக்கொடுப்பதாக வேறு  வதந்திகளை பரப்பியிருந்தார். ரிமோட் இல்லாத டீவியண்டை அடிக்கொரு தரம் சென்று அதன் குமிழைத்திருகி செனல்களை மாற்றிக்கொள்வார்.


மௌலானா அறைக்குள் கிடந்து உழன்று கொண்டிருந்தார். மனம் நிலையற்று தவித்துக்கொண்டிருந்த சமயம் கதவு தட்டப்பட்டது.

“யாரது?” என்றார்

“அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா” என்றபடி இரு வாலிப நண்பர்கள் அறைக்குள் நுழைந்தனர்.

மௌலானாவிற்கு மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பீறிட்டது.கதைப்பதற்கு ஆள் கிடைத்துவிட்டதில் அவர் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகை புடைத்தெழுந்தது. சுற்றி வைத்த ஞானச்சுருட்டை உதட்டில் பொருத்தி தீ மூட்டினார்.

“இனி என்தயன் செய்தி”

 என்பது போல் சிஷ்யர்களை ஏறிட்டார். அவரின் கேள்விக்கு காத்திருந்தவர்கள் போல்
“மௌலானா ஒகளுக்கு செக்ஸ் சாமி ரஜனீஷ தெரியுமா?” என்றான் ஒருவன்
“அவரு ஒரு தியானம் செல்லித்தந்திருக்கிய. குட்டிகளும், பொடியன்மாரும் இடுப்பளவு தண்ணிக்குள்ள கைகோர்த்து நிருவாணமா நின்டு எந்த கெட்ட நெனப்புமில்லாம தியானம் செய்யனுமாம்”

அவரின் முகம் பிரகாசித்தது.கஞ்சா வாசம் அறையில் சுழன்று உழன்றது. நண்பர்கள் இலேசாக இருமிக்கொள்ள மௌலானா கட்டிலில் ஒருக்களித்து சாய்ந்து கொண்டார்.

கேள்வி கேட்டவனின் பக்கம் திரும்பி  “ஆருடா அவன் ரஜனீசு, புதுசா தியானம் செல்லிக்குடிக்கிய?

“பல வருஷங்களுக்கு முன்னால நாம சியாரத்தக்கட்டி, அதுல ஆம்புளயும் நம்மட பொம்பளயளும், பொடியன்மாரும், குட்டிகளும் மாசா மாசம் கூடி பண்ணுற தியானத்த விட அவன் என்னடா புதுசா நமக்கு செல்லிக்குடுக்கிய?”

“போய்பாருங்கடா  கல்முன கடக்கர பள்ளி, கச்சிமல, கதிர்காமம் இந்த இடத்துல எத்துன கள்ள சோடி, களட்டிகளும் குருத்துகளுமா தியானம் பன்னுதுகள். இது வலீமாரோட பெயருல நடக்குற காம மோட்சம் டோய்?” மௌலானாவின் சிரிப்பு புகைச்சுருளுடன் இணைந்து அறையை மயக்கியது.

கருக்கல் நேரம் வந்தவர்கள் விடைபெற்றுச்செல்ல புதிதாக ஒரு உருவம் அறைக்குள் நுழைந்தது. அது பரிச்சயமான முகம். மௌலானா அவன் முகத்தில் பதற்றத்தையும்,அவரசத்தையும் உணர்ந்தார்.

 “என்ன மவன்?” என்றார் ஆதுரமாய்.

“மௌலானா உம்மாக்கு சரி வகுத்துவலி, துடிக்கிய கொஞ்சம் வந்து மந்திரிக்கனும்.” அவர் மறுப்புச்சொன்னால் அவன் அழுது விடுவான் போலிருந்தது.

மௌலானா வீடுகளுக்கு சென்று அருள்பாலிப்பதில்லை என்ற கொள்ளையை வரித்துக்கொண்டாலும்,சிஷ்யனின் முகத்தில் தெரிந்த கலவரமும் பதற்றமும் அவன் மேல் மௌலானாவுக்கு பிரியத்தைப்போர்த்தின.

“மௌலானா வாகனம் வந்தீக்கிய”

 அவர் முகத்தில் படர்ந்த சிந்தனையின் உக்கிரம் அவனை கிலிகொள்ளச்செய்தது. தஸ்பீஹ்மாலையை கையில் உருட்டியபடி கீழிறங்கி சிஷ்யனைத்தொடர்ந்தார்.

அவர் அறைக்குள் நுழைந்த போது, அவள் வலியால் துடித்துக்கொண்டிருப்பதை மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு அட்டையைப்போல் சுருண்டு இரு கரங்களால்  வயிற்றை அழுந்தப்பற்றியபடி முணங்கிக்கொண்டிருந்தாள்.

கட்டிலில் அலங்கோலமாக உருண்டு துடிக்கும் அவளின் வாளித்த அங்கங்கள் ஆங்காங்கே துருத்திக்கொண்டு மௌலானாவுள் உறங்கும் மிருகத்தின் முகத்தில் நீர் தெளித்தது.

அவள் கணவன் சவூதியில் என்றார்கள். நான்கு வருடங்களாகியும் இதோ வாரன் என்று போக்கு காட்டியபடி இருக்கின்றான் என சிஷ்யன் வரும் போதே முறையிட்டுக்கொண்டு வந்தான்.

அரேபிய மணங்கமழும் அற்புதமான வீடு!

மௌலானா அவளை பார்த்துக்கொண்டே நல்லெண்ணையும், பன்னீரும் கேட்டார். சாம்பிராணி போடச்சொன்னார்.

சிஷ்யன் ஓரு நிமிடத்தில் கேட்ட பொருட்களை கையில் ஏந்தியபடி நின்றான்.வீடு முழுக்க அகில் புகையின் நறுமணங்கமழ்ந்தது.

பல வருடங்கள் ஆண் தொடாத அவளை, தொட்டு நிமிர்த்தி மல்லாக்கச்சரித்தார்.மதர்த்த மார்புகள் எகிறிக்கொண்டு அதிர்ந்தன.சிஷ்யன் உம்மாவின் மார்புகளை முந்தானையால் மூடி மூடி மறைத்துக்கொண்டிருந்தான்.

 மௌலானா அவள் இடையில் இறுக்கிய நாடாவை தளர்த்தி வயிற்றையும், தொப்புளையும் பன்னீரால் கழுவினார். செம்மஞ்சல் மயிரடர்ந்த நாபியின் கீழ் அவர் வில்கள் நர்த்தனம் புரிந்தன.

பரவசம் ததும்பிய அறையில் மீட்டப்படாத வீணை ஒன்றின் இனிய கானம் உச்சஸ்தாயில் ஒலிக்கத்தொடங்கியது.

 கண்மூடி படுத்திருக்கும் அவள் இதழ்களின் இள நகை அறை முசிய பிரகாசித்தது.

19.07.07
அதிகாலை-5.46


  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...