Wednesday 5 October 2011

புரிந்து கொள்ளப்படாத பெண்ணுரிமையும்,போராடும் முஸ்லிம் பெண்களும்.


இகபரத்தின் இரட்சகனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம்.. இஸ்லாத்தின் அறிவியல், ஆன்மிக வளர்ச்சியை சகித்துக் கொள்ளத்திராணியற்ற மேற்குலகு இஸ்லாத்திற்கெதிரான சதிகளில் பட்டவர்த்தனமாகவே ஈடுபட்டு வந்தது.

இஸ்லாமிய சமூகத்திற்குள்ளிருந்து மூளைச்சலவை செய்யப்பட்ட ஈமானிய பலஹீனர்களை இனங்கண்டு அவர்களினூடாக கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்தி ஐக்கிய உம்மாவை சிதைக்கும் கைங்கரியங்களை மேற்கின் வல்லூறுகள் கச்சிதமாக செய்து வருகின்றன.

ஸல்மான் ருஷ்டி,தஸ்லீமா நஸ்ரின், ஹெஜ்.ஜி.ரசூல் போன்ற எழுத்தாளர்கள் மூலம் ஹிந்துப் பார்ப்பனீயமும், கிறிஸ்தவ மிஷனரிகளும் ஒருங்கிணைந்து இஸ்லாமிய சித்தாந்தங்களுக்கெதிரான பிரகடனங்களையும் கலகங்களையும் உருவாக்கின.

மேற்கின் தொடர்பூடகங்கள் எரியும் சமவெளியில் வக்கிர எண்ணெய்யூற்றி ஜுவாலை எழுப்பின.

இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ள மகத்தான உரிமைகளை மறுதலித்து அல்லது மூடிமறைத்து விட்டு பெண்ணுரிமைக்கோஷங்கள் முன்னெடுக்கப்பட்டன. கி.பி. (1798-1801) வரையிலான காலப்பகுதியில் முஸ்லிம்களிருலிருந்தே தயார்படுத்தப்பட்ட முதல் நபராக முஹம்மத் ரிபாஅத் அல் தஹ்தாவி  என்பவர் கருதப்படுகின்றார்.
இவர் மூலமே பெண்ணியச்சிந்தனைகள் உள்ளிட்ட இஸ்லாமிய விழுமியங்களை மலினப்படுத்தும் கருத்துக்கள் தோற்றம் பெற்றன. பாரிஸ் நகர நாகரீகத்துடன் இஸ்லாமிய நாகரீக அம்சங்களை ஒப்பு நோக்கிய அல்தஹ்தாவீ இஸ்லாமிய கலை கலாச்சார பரிணாமங்களை காலோசிதமானதல்ல என்ற தர்க்கங்களை முன்வைத்தார்.

இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ள நாகரீகத்தையும் உரிமையையும் மலினப்படுத்திய இவர் பாரிஸ் நகர நாகரீகமே உன்னதமானது என்ற மனப்பதிவை உருவாக்கினார். உலக உச்சங்களை தொடும் கட்டற்ற நாகரீகம் என பாரிஸ் நகரத்து கலாச்சாரத்தை போற்றி எழுதினார்.

பெண்ணை ஒரு மனிதப்பிறவியாக ஏற்காத கிறிஸ்வத உலகம் அவளுக்கு ஆன்மா உண்டா இல்லையா என்ற  வாதப்பிரதிவாதங்களில் கூட இறங்கியது. அவள் ஆணுக்குறிய போகப்பொருள் என்ற எல்லையுடன் பெண்ணின் தகுதியை சுருக்கிக்கொண்டது.

அவள் அலங்கரிக்கவும்,குளிக்கவும் எல்லை போட்டது.ஹிந்து மதமோ தனது மதமாச்சரியங்களுக்குள் அடக்கி எல்லையற்ற ஆச்சாரங்ளை போட்டது. விதவையை மறுமணம் செய்ய தடைவிதித்ததுடன் அவள் ஒரு சபிக்கப்பட்ட பிறவியாக பிரகடனம் செய்தது.

கணவனை இறந்தபின் அவனை எரிக்கும் தீயில் உடன் கட்டை என்ற சதி ஏறச்சொன்னது. பெண் குழந்தை எனில் பிறந்தவுடன் நெல் மணியும் கள்ளிச்சொட்டும் கொடுத்து கொன்றொழித்தது. அறிவியல் வளர்ச்சி கண்ட பின் கருவிலேயே இனங் கண்டு பெண்ணை நசுக்குகின்ற சமூகக் கொடுமையை இன்றை நாகரீக உலகில் தரிசிக்க முடிகிறது.

யதார்த்தத்தில் பெண்ணியம் என்பது அல்லது பெண்ணிய சிந்தனை என்பது என்ன?பெண்ணுடைய இயல்பையும் அவளுடைய விடுதலைக்கான கருத்தையும் இணைத்த சொல்லே இந்த பெண்ணியம்.சமூக சிக்கல்களில் பெண்ணடிமை தொடர்பான கூறுகளையும் அதற்கான தீர்வுகளையும் கருத்தியல் வடிவில் பார்ப்பதும் பெண்ணியம் எனப்படுகிறது.

இந்தப்பெண்ணிய கருத்தியல் வளரும் போது அதன் வளர்ச்சிக்கு மிகத்தடையாக சமூக அமைப்பு இருக்கின்றது. இந்த சமூக அமைப்பில் ஒடுக்க நினைப்பது ஆணாதிக்க உணர்வின் இயல்பாக உள்ளது.
உழைப்புப்பிரிவினையும், தனிச்சொத்துடமையும் சமூகத்தில் உருவானபோது  பெண் குடும்பம் என்ற கூட்டுக்குள் அடக்கப்பட்டாள்.மறுபுறம் மதவியல் கருத்துக்கள் அவளை வழிநடாத்தியது.
மறுபடியும் பெண்களை இழிவாகவும் கவர்ச்சியாகவும் காட்ட திரைப்படங்கள் வந்தன. அதை அனுமதிப்பது ஆணின் வக்கிர உணர்வும் பெண் மீதான அவனின் பெறுமதியற்ற எண்ணங்களுமே!

பாலியல் உணர்வை தூண்டும் கூறுகளை உருவாக்குவதில் பெண்களை பயன்படுத்தும் சினிமாவும்,தொலைக்காட்சி விளம்பரங்களுமே பெண் உணர்வின் மரணத்திடல்கள்.  மேலும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வருகையும் பெண்களின் உரிமைகளை சிந்திக்கும் ஆற்றலை மடடுப்படுத்தியது.
இணையத் தளங்களில் பெண்களுக்கெதிராக கருத்தியல்கள் வடிவமைக்கப்பட்டன. பெண்ணை அழகியல் சார்ந்த அடிமையாகவே மேற்குலகு இனங்காட்டியது.

தங்மாங்கல்யத்திட்டம் (மூன்று வருடங்களுக்கு பெண்களை வேலைக்கமர்த்தி மொத்தமாக பணம் தருவது) தேவதாசி, சாமிக்கு நேர்ச்சை செய்து விடல்  மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் நவீன விபச்சாரத்தை அறிமுகப்படுத்தி பெண்னை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும் விளைவுகள் இன்றும் அமுலில் உள்ளன.

உலகமாயதல் என்ற கோஷத்தின் மூலம்  பெண்கள் “கோல் சென்ரர்களில்” கொத்தடிமைகளாக பாலியல் சுரண்டலுக்குட்பட்டவர்களாக வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
அழகிப்போட்டி,பாலியல் சுற்றுலா,டேட்டிங், போன்ற சீரழிவுகளால் பெண் இனமே சிதைவுண்டு மானம் இழந்து நிற்கிறது. சாதியத்தின் பெயரால் நில ஆக்கிரமிப்பின் பெயரால் முதலில் சுரண்டப்படுவதுபெண்கள்.

காஷ்மீர்,பலஸ்தீனம்,நாகலாந்து,பங்களாதேஷ்,பிலிப்பைன்ஸ்,குர்திஷ்தான்,நேபாளம், இலங்கை போன்ற  விடுதலை போராட்ட நாடுகளில் முதல் இலக்கு பெண்களுக்கெதிரான பாலியல் யுத்தமே!
  
இத்தகைய பெண் மீதான அடக்கு முறை இஸ்லாத்திலும் உண்டு என்ற தப்பபிப்பிராயம் சில ஆங்கிலம் படித்த முஸ்லிம் பெண்களிடமும் படிந்துள்ளதால் முஸ்லிம் பெண்களுக்கு தாங்கள் விடுதலைப் பெற்றுத்தரவந்த இரட்சகர்களாக தங்களை கருதிக்கொண்டு விடுதலைப் போராட்டங்களில் குதித்துள்ளனர்.

இஸ்லாம் பெண்ணை மனித இனத்தின் உன்னத படைப்பு என்று பாராட்டுகின்றது. அவள் ஒரு மகத்துவமான ஜீவன் என்று ஏற்றுக்கொள்வது அவள் மண்ணில் கௌரவமாக வாழும் உரிமையை தந்து விடுகின்றது.

(உங்கள் ) மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காகவே உங்களிலிருந்து  அவன் படைத்தும் உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும்,உண்டு பண்ணியிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும் (அல்குர்ஆன் 30:4)

அவர்கள் (பெண்கள்) உங்களது ஆடையாகும் நீங்கள் அவர்களுக்குறிய ஆடையாகும். (அல்குர்ஆன் 2:187)

இது போன்ற எண்ணற்ற வசனங்கள் மூலம் பெண் ஆணின் தேவைக்காக அன்றி வாழ்வின் உன்னதங்களை அனுபவிக்க படைக்கப்பட்டவள் என்பதை அல்லாஹ் உணர்த்துகின்றான்.
பெண்ணுரிமை பற்றி மகளிர் அமைப்புக்கள் முன் வைக்கும் வெற்றுக்கோஷங்கள் இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ள உரிமைகள் குறித்த தெளிந்த சிந்தனையற்ற விளைவின் முடிவும் இஸ்லாம் குறித்த நுனிப்புல் மேய்தலுமே என்பது துலாம்பரம்.

நல்லறங்கள் செய்யும் போது ஆண் பெண் பாகுபாடின்றி சரிசமனான கூலியை வழங்குவதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது . இது பெண்களின் உரிமையை ஆணுக்கு நிகராக வழங்குகின்ற யார்த்தமாகும்.

இன்னும் அவர்கள் இம்மியளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் 4:124)

ஆண் அல்லது பெண்  அவர் விசுவாசம் கொண்டவராக இருக்க, யார் நற்செயலை செய்தாரோ நிச்சயமாக நாம் அவரை நல்ல வாழ்க்கையாக வாழச்செய்வோம் .இன்னும் நிச்சயமாக அவர்களுக்கு அவர்களது கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில்,மிக அழகானதைக்கொண்டு நாம் கொடுப்போம். (அல்குர்ஆன் 16:97)

எவர் ஒரு தீமையைச்செய்கிறாரோ அவர் அதைப்போன்றதையே தவிர (அதற்கதிகமாய்)கூலியாகக்கொடுக்கப்படமாட்டார். இன்னும் எவர் ஆணாயினும் பெண்ணாயினும் அவர் விசுவாசங்கொண்டவராக இருக்கும் நிலையில், நல்ல செயலைச்செய்வாரோ அ(த்தகைய)வர்கள் சுவனபதியில் நுழைந்து விடுவார்கள் அதில் கணக்கின்றியே (அனைத்து சுவனத்து அருட்கொடைகளிலிருந்தும்) அவர்கள் கொடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 40: 40)

மேற்படி வசனங்களும் இதனை நிகர்த்த பல வசனங்களும்  பெண்ணுக்குள்ள சரிசம விகிதாசாரத்தை துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன. அவள் செய்கின்ற கூலிக்கு ஆண்மீகமாயினும் சரி உலகியல் விவகாரமானாலும் சரி தக்க கூலியை அவள் பெற்றுக்கொள்கின்றாள். இங்கு மதத்தின் பெயரால் சுரண்டப்படும் அநீதி தடுக்கப்பட்டு தகுந்த வாக்குறுதியை குர்ஆன் வழங்கி விடுகின்றது,

பெண்களை துன்புறுத்துவதையும் அவள் உள்ளுணர்வில் காயமேற்படுத்துவதையும் இஸ்லாம் வன்மையாக கண்டித்து பெண்ணுரிமையை பேணிப்பாதுகாத்து பெண்களின் மானத்தையும் பாதுகாக்கின்றது.

இன்றைய நாகரீக உலகில் கலாச்சாரம் தழைத்தோங்குவதாக மார்தட்டும் நாடுகளில் பெண் ஈவ்டீஸிங் என்ற பெயரில் உயிருடன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகிறாள்.வன்புனர்வுக்குள்ளாக்கப்பட்டு அவளின் தன்மானத்தையே சந்திக்கு இழுத்து வந்து பத்திரிகைகள் தம் அரிப்பை தீர்த்துக்கொள்கின்றன.

மேலும் விசுவாசம் கொண்ட ஆண்களையும் விசுவாசம் கொண்ட பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தைச்செய்ததாகக் கூறி துன்புறுத்துகிறார்களோ அத்தகையவர்கள் நிச்சயமாக பெரும் அவதூறையும்,பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொண்டனர்.
(அல்குர்ஆன் 33: 58)

(ஆகவே) நிச்சயமாக விசுவாசம் கொண்ட ஆண்களையும் ,விசுவாசம் கொண்ட பெண்களையும் (இவ்வாறு) துன்புறுத்திய பின்னர் அவர்கள் (தவ்பாச்செய்து)  மன்னிப்புக்கோரவில்லையோ அத்தகையோர் அவர்களுக்;கு நரக வேதனையுண்டு அவர்களுக்கு (விசுவாசிகளை அவர்கள் கரித்தவாறு) நெருப்பால் கரிக்கும் வேதனையுமுண்டு.   (அல்குர்ஆன் 85: 10)

இது போன்ற வசனங்கள் பெண்ணுக்குள்ள தன் மான வாழ்வுரிமை இயல்புகளில் களங்கம் கற்பிக்க முனையும் தீக்குணமுள்ளோரை கண்டிக்கின்றது.

இது இஸ்லாம் பெண்ணின் மானத்தின் மீது செய்துள்ள காப்புறுதியாகும். உலகில் வேறெந்த மதமும் இத்தகைய காப்புறுதியை வழங்கவில்லை என்பது பெண்ணுரிமைக்கோஷமிடும் முஸ்லிம் வனிதையர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பெண் தன் வாழ்வினை தானே தீர்மானித்துக்கொள்ளும் உரிமையை இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ளது. திருமண வயதை அடைந்த பெண்ணுக்கு அவள் தந்தை அல்லது பாதுகாவலர் மணம் பேசும் போது மணமகளின் பூரண மனப்பொருத்தம் பெறப்படுவது முக்கிய நபி வழிகளில் ஒன்று.

விதவைப்பெண்ணிடம் ஒப்புதல் பெறும் வரையிலும் கன்னிப்பெண்ணிடம் அனுமதி பெறும்;வகையிலும் திருமணம் செய்து வைக்கப்படக்கூடாது என்று நபி ஸல் கூறியதும் இறைத்தூதரே (கன்னிப்பெண்ணான) அவளிடம் எப்படி அனுமதி பெறுவது ? என (நபித்தோழர்கள்) கேட்டனர். அவளின் மௌனமே (அனுமதி) என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹ}ரைறா (ரழி )  நூல்கள்: புகாரி, முஸ்லிம் இன்னும் பல..

நிர்ப்பந்தம் செய்து மணம் முடித்து வைக்கப்படுமாயின் அத்திருமணத்தை இரத்து செய்யும் உரிமையையும் இஸ்லாம் மணப்பெண்ணுக்கு வழங்கியுள்ளது. தனது வாழ்வை தானே அமைத்துக்கொள்ளும் இந்த உரிமை அவள் எதிர்கால வாழ்விற்கான நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உரிய சாட்சிகளுடன் இந்த வாழ்க்கை ஒப்பந்தம் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. 

 இதை விடுத்து அளவுக்கு மீறிய சுதந்திரத்தின் மூலும் பெண் தன்னை அழித்துக்கொண்டு தவறான பாலியல் சுரண்டல்களுக்கு உட்பட்டு சுரண்டப்படுவதையும் அனுபவித்து விட்டு ஏமாற்றப்படுவதையும் இஸ்லாம் தடுத்து பெண்ணுக்கு தகுந்த காப்புறுதியை வழங்குகின்றது.

தனது திருமணத்தை தனது சுய விருப்பின் பேரில் பாதுகாவலரை புறந்தள்ளிவிட்டு மேற்கொண்ட மேற்கின் பெண்கள் இன்று நிம்மதியற்ற சீரழிந்த சமூகப்பிராணிகளாக ஒதுக்கப்பட்டுள்ளதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அமெரிக்காவில் மட்டும் 30 இலட்சம் பருவப்பெண்கள்  பால்வினை நோயினால் பாதிப்புற்றனர். 14-19 வயது பருவப்பெண்களில் நான்கில் ஒரு பங்கு பெண்கள் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றில் கருப்பின பெண்கள் அதிகமாகவும் மற்றும் வெள்ளை இனப்பெண்கள் 20 வீதமாகவும் பாதிப்புற்றுள்ளதாக நோய் தடுப்பு மையங்களின் கூட்டமைப்பு ஆய்வு தெரிவிக்கின்றது. இத்தகைய பெண்ணுடல் மீதான சுரண்டலை இஸ்லாம் தடைசெய்கின்றது, அவளை தவறான அர்த்தத்தில் பார்ப்பதைபும் பழகுவதையும் அது கண்டித்து  அத்தகைய பார்வைகளை பாவச்செயலென பிரகடனம் செய்கின்றது,

மேலும் திருமணம் செய்யும் முன்பே தன் எதிர்கால வாழ்வின் பாதுகாப்பு நிமித்தம்  கணவன் இறக்கலாம் அல்லது அவளை விவாகரத்து செய்யலாம் இது போன்ற நிகழ்வுகளை எதிர்பார்த்து  அவள் சிரமத்திற்குள்ளாகாமல் இருக்க தனக்கு கணவனாக வருபவனிடம் ஒரு தொகை முற்பணத்தை பெற்றுக்கொள்வாள்.இதற்கு மஹர் என இஸ்லாம் பெயரிட்டு இந்த சமூகக்காப்பீட்டை அவளுக்கு வழங்கியுள்ளது.

அவளை கணவன் தலாக் எனும் விவாக இரத்துச்செய்து விட்டாலும் கொடுத்த மஹரை திருப்பி பெற்றுக்கொள்ள தடை விதிக்கின்றது.

 நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் திருமணக்கொடையைகளை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்து விடுங்கள்… (அல்குர்ஆன் 4: 4)

நீங்கள் ஒரு மனைவி (யை விலக்கி விட்டு அவளு)க்குப்பதிலாக மற்றொரு பெண்ணை (மணந்து கொள்ள) நாடினால் முந்தைய மனைவிக்கு ஒரு (பொருட); குவியலையே கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக்கொள்ளாதீர்கள். அபாண்டமாகவும் பாவமாகவும் அதனை நீங்கள் (திரும்பி ) எடுக்கின்றீர்களா? அதனை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள் ? …(அல்குர்ஆன் 4: 20)

இது முன்கூட்டியே பெண்ணால் வாங்கிக்கொள்ளப்படும் ஜீவனாம்சமாகும். மஹர் என்ற மணக்கொடை மூலம் வாழ்க்கைக்குரிய பாதுகாப்புரிமையை இஸ்லாம் மகளிருக்கு வழங்கியுள்ளது.

மட்டுமன்றி மனம் ஒப்பாத வாழ்வை அவள் தொடர்ந்து வாழ நிர்ப்பந்திப்பக்கடவில்லை .கல்லானாலும் கணவன்  புல்லானாலும் புருஷன் என்ற சிறைக்குள் அவளை தள்ளவில்லை.
பிடிக்கவில்லை என்றால் நியாயமான காரணங்களை முன் வைத்து அவள் மணவிலக்;குப்பெறும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. மாமியார் கொடுமை, தீ வைப்பு திட்டமிட்ட கொலைகள் எதுவும் இஸ்லாமிய குடும்பவியலில் சந்திக்கமுடியாத அம்சமாக உள்ளது.

ஆண்களுக்கு தங்கள் மனைவியரை விவாகரத்து செய்யும் உரிமை போல் பெண்ணுக்கும் அந்த உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. இந்த அனுமதிக்கு”குல்உ” என பெயரிட்டுள்ளது.
இன்னும் சற்று அதிகப்படியான உரிமையை இஸ்லாம் பெண் விஷயத்தில் வழங்குகின்றது. கணவனை பிடிக்காத மனைவி அதற்குறிய காரணத்தை சமூகத்தலைவரிடம் சொல்லி  விவகாரத்துப்பெற வேண்டியதில்லை. அவரும் அதை துருவித்துருவி கேட்க வேண்டிய அவசியமுமில்லை.

 இஸ்லாத்தில் பெண்ணுரிமை மறுக்கப்படுகிறது என்ற கோஷமிடும் பெண்களின் சூன்யக்கண்களுக்கு இது ஏன் படவில்லை.

சமூகப்புனரமைப்பில் பெண்ணுக்கு இஸ்லாம் சீர்திருத்தப்பணிகளில் ஈடுபடும் உரிமையயை வழங்கியுள்ளது. ஆண் மட்டுமன்றி அவனுக்கு நிகராக அவளும் சமூகத்தின் இன்ப துன்பங்களில் பங்குபற்றி நண்மையை ஏவி தீமைய தடுத்திட இயங்கும் முழு சுதந்திரத்தையும் அவளுக்கு வழங்கி பெண்மையை கௌரவப்படுத்துகிறது.

“விசுவாசியான ஆண்களும் விசுவாசியான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லதைச்செய்யத்தூண்டுகிறார்கள் தீயதை விட்டும் விலக்குகிறார்கள்.” . (அல்குர்ஆன் 9: 71)

சமூகச்சீர்திருத்தப்பணிகளில் ஆண்கள் மட்டும் ஈடுபட வேண்டும் என அல்லாஹ் விரும்பவில்லை அதில் பெண்களும் அக்கரையுடன் செய்றபட வேண்டும் என ஆசையூட்டுகின்றான்.

இன்றை நாகரீகம் வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்கள் கல்வி கற்கும் உரிமை கூட மறுதலிக்கப்பட்டு அதையும் அவர்கள் போராட்டத்தின் மூலம் பெற வேண்டிய நிலை உள்ளது.  சுpல நாடுகளில் குறிப்பிட்ட வயது அல்லது குறித்த எல்லையுடன் கல்விக்கு தடை விதிக்கப்படுகிறது.

அதிகம் பெண் படிக்கக்ககூடாது என்ற ஆணாதிக்க வக்கிர குணங்களும் சமூகச்சட்டம் என்;ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட போலிச்சட்டங்களும் மதங்களின் பெயரால் கல்விக்கு தடை விதிக்கப்படுவதும் உலகின் செவிகளில் விழாமலில்லை.

இஸ்லாம் பெண்ணுக்கும் கல்வி அவசியம் என வலியுறுத்தி அவளை துறை போக கற்றகச்சொல்கிறது.

கல்வியை கற்பது அனைத்து முஸ்லிம்கள்  (ஆண்,பெண்) மீதும் கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்: பைஹகீ .

கணவனை இழந்த பெண் மறுமணம் செய்யும் உரிமையை இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ளது. மேற்கின் நாகரீகம் போல் அவளை வைப்பாட்டியாகவோ, செல்வந்தர்களின் அந்தப்புரத்து நாயகியாகவோ சிதையில் தள்ளுவதையோ தீர்வாக சொல்லாமல் அவளை மறுமணம் செய்ய அனுமதித்து அனுமதிக்கப்பட்ட முறையில் இன்பம் பெற வழி காட்டியது இஸ்லாம்.

பின்வரும் அம்சங்களில் இஸ்லாம் பெண்னுரிமைகளை வழங்கி மகளிரை சிறப்பித்துள்ளது அவையாவன.

1.    கருக்கலைப்பை தடை செய்ததன் மூலம் பெண் சிசுக்கொலை தடை செய்யப்பட்டுள்ளது.

2.    பெண் குழந்தையை போற்றி வளர்க்க வேண்டும் என்ற நபிகளாரின் பொன் மொழிகள்

3.    பெண்ணுக்கு கல்வி மற்றும் பொருளாதார உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன்,அல்குர்ஆனின் அழியா வசனங்கள் ஊடாக உலக அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

4.    பெண் விருப்பத்தின் பேரில் அவள் திருமணம் நடைபெறல்

5.    பெண்ணை இழிவுபடுத்தும் சீதனக்கொடுமைக்கு நிகரான மஹர் எனும் நன்கொடைத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றமை.

6.    கணவனை பிடிக்காவிட்டால் அவனிடமிருந்து விவாகரத்துச்செய்யும் உரிமை

7.    தான் விரும்பும் ஒருவரை மறு மணம் செய்யும் உரிமை

8.    பெண்ணுக்கான சொத்துரிமை பங்கீடு

9.    விதவைகள் ஏளனம் செய்யப்படுவதை விடுத்து அவர்களுக்காக சமூக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளமை.

10.    மாதவிடாய் என்பதை ஒரு இயல்பான நிகழ்வாக ஆக்கயமை

11.    தாய்மைக்கு மதிப்பும் அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளமை

12.    திருமண உறவு தவிர்ந்த பாலியல் உறவுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றமை.

இது போன்ற எண்ண்ற்ற உரிமைகளை இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ளதை ஆராயாமல் நுனிப்புல் மேய்ந்து விட்டு இஸ்லாமிய இள நங்கையர் இஸ்லாம் பெண்ணை கொடுமைப்படுத்துகிறது விடுதலை தாருங்கள் எனக்கோஷமெழுப்புவது கதிரவனை சருகு கொண்டு மறைப்பதற்குச் சமன்.

கருப்பைச்சுதந்திரத்தின் ஊடாக தந்தையற்ற வாரிசுகளை சுமக்க ஆவலுறும் பெண்ணினம் இவற்றின் மூலம் விபச்சாரத்திற்கு அனுமதி கேட்கும் விந்தையை இஸ்லாம் அனுமதிக்கவே இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 ஹிஜாப் அணிவது மகளிரின் முன்னேற்றத்திற்கு தடை என்ற மனக்கிளர்ச்சியை ஆங்கிலம் படித்த சில மேற்கின் நாகரீக முஸ்லிம் லேபல் குஞ்சுகள் பிரச்சாரம் செய்கின்றன.
இது பெண்ணின் உயர் பாதுகாப்பு என உலக நாடுகளில் பெண்கள் குரலெழுப்பி மறுக்கப்பட்ட உரிமைகளை மீளப்பெற நீதிமன்ற வாசற்படிகளில் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆடைக்குறைப்பில் சுதந்திந்தை காணும் இவர்களின் கனவு பல ஆண்களின் மிருக இச்சைக்கு பெண்ணை பலியாக்கி அவளை வெறும் போகப்பொருளாக மாற்றியுள்ளதை இவர்கள் அறியவில்லையா.

 கவர்ச்சி விளம்பரங்களில் பெண் மலிவுப்பொருளாக சீரழிவதும் கலாச்சார நெறி பிறழ்வின் மையமாக மாறுவதும்தான்  இவர்கள் யாசிக்கும் பெண்ணுரிமைகளா?

இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ள இவ்வுரிமைகளை விட வேறெந்த சிறப்பான உரிமைகளையும் சமூகக்காப்பீடுகளையும் உலகில் தோன்றிய எந்த நாகரீகமும், மத சிந்தனையும் வழங்கிடவில்லை என்பது அறிஞர்களின் ஏகோபித்த முடிவு.

சர்வதேச மகளிர் தினமாக மார்ச் 08இல் மட்டும் கூடி பெண்ணுரிமைக்கோஷமிடும் ஞாபகார்த்த நிகழ்வு இஸ்லாத்தில் கிடையாது. ஏனெனில் அது இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம்.

பெண்ணின் உரிமைகளை மறுப்போரை அது கண்டிப்பதன் மூலம் நடைமுறை வாழ்வில் உரிமைகளை நிலைநாட்டப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கின்றது.

“பெண்ணை இழிவாகக்கருதுவோர் (அதாவது உரிமையளிக்க்படாத நிலையில் வைத்திருப்போர்) அவர்களது முடிவை அல்லாஹ் விமர்சித்து அது கெட்டது எனத்தீர்ப்பளிக்கின்றான்.” (அல்குர்ஆன் 16: 58-59)

பிற்காலத்தில் ஆணாதிக்கச்சிந்தனைகளும் மத அமைப்புக்களும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் பெண்களை பூட்டிவைத்து போஷிக்க முனைந்த போது இஸ்லாமிய அறிவுசூன்யங்களும் இஸ்லாத்திற்கெதிராக காழ்ப்புனர்ச்சி கொண்டோரும் பெண்களை இஸ்லாம் ஒடுக்குகிறது அவர்களுக்கு விடுதலை தாருங்கள் என்ற கோஷத்தை முன் வைத்து பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.

 இதில் முஸ்லிம் பெண்களையும் உள்ளீர்த்து அவர்கள் உடாக இப்பிரசச்hரங்களுக்கு வலுவூட்டப்பார்த்தனர். இது ஆணின் தகுதியுணர்வின் (Sense of Propriety) மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஒரு வடிவமே அன்றி  பெண்னுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளுக்கும் இஸ்லாத்திற்கும்  கிஞ்சித்தும் தொடர்பில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே மேற்கும் அதன் ஊடக வலையமைப்பும் இஸ்லாமிய பெண்களின் உரிமை பற்றி நீலிக்கண்ணீர் வடிப்பதன் நோக்கம் பெண்களின் உயர்வுக்காக அல்ல இஸ்லாத்தின் அபரித வளர்ச்சியை தடுப்பதே அவர்களின் உள்ளாந்த இலக்காகும்.

இதற்கு சில N.G.O க்கள் முஸ்லிம் பெண்களை பணிக்கமர்த்தி கொழுத்த சம்பளமும் வசதியும் வழங்கி அவர்களையே இஸ்லாமிய வடிவங்களுக்கெதிராக அபிப்பிராயம் கூறவும் விமர்சிக்கவும் தூண்டிவிடுகின்றனர்.

பெண்களின் வளமான வாழ்விற்கு உரிமைகளை முழுமையாக வழங்கியுள்ள இஸ்லாத்தின் போதனைகள் இத்தகைய மூளைச்சலவை செய்யப்பட்டு இறக்குமதியாகியுள்ள முஸ்லிம் பெண்களுக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்பதே நமதவா !

பிரசுரம் விடி வெள்ளி






  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...