Saturday, 1 October 2011

நேர்முகம் : பகுதி 01


  • ஈழத்துச்சிறுகதையின் இரண்டாவது கட்டப்படைப்பாளிகளில் முக்கியமானவர் ஓட்டமாவடி அறபாத். சிறுகதை,கவிதை,பதிப்பு,சமூகச்செயற்பாடுகள் என்று செயற்பட்டு வருபவர்.     எரி நெருப்பிலிருந்து,   வேட்டைக்குப்பின் என்ற கவிதைத்தொகுப்புகளையும் நினைந்தழுதல்,ஆண்மரம் போன்ற காத்திரமான சிறுகதைத்தொகுப்புகளையும் தந்திருக்கிறார்.   தன் நிலையை,சமுதாயத்தை,தன் மண்ணின் உள் வெளிப்பக்கங்களை புற விசைகளைப் பொருட்படுத்தாது மண்ணின் பச்சையோடு தன் எழுத்துக்களில் கொண்டு வருபவர்.   முஸ்லிம் சமுதாயம்,முஸ்லிம் தமிழ் இன உறவுகள் முரண்களை தீவிரமாக எதிர்கொண்டு, 90களுக்குப்பிந்திய காலத்தில் இருந்து ,வடகிழக்குச்சூழல்,அரசியல், சமூகவியல்,ஆயதவியல் நிலைமைகளை இவரது கவிதைகள், கதைகள் பேசுகின்றன.                    -வாசுகி சிவகுமார்-உங்கள் படைப்புலகத்தை வடிவடைத்த சூழல் பற்றிச் சொல்லுங்கள்  உங்களைப் பாதித்தவர்கள்.... 

நான் பிறந்தது ஓட்டமாவடி என்ற இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில். என்னுடைய குடும்பத்தில் படித்தவர்கள் அதிகம் இல்லாத காலம்.அதிகம் என்று சொல்வதை விட அறவே இல்லை என்று சொல்வது பொருந்தும். விவசாயத் தந்தை வீடே கதி என்று அவருக்கு ஒத்தாசையாக இருந்த தாய். இவர்கள் தவமாய் தவமிருந்து பெற்ற முதல் பிள்ளை நான்.  

பின் 78இல்கிழக்கில் அடித்த சூறாவளி குடும்பச்சூழல் எல்லாம் சேர்ந்து எங்களை ஓட்டமாவடிக்கு வடக்கே உள்ள முள்ளிவெட்டவான் என்ற ஊருக்கு விரட்டியது. 

அங்கு எனது பாட்டனின் கடை ஒன்றிருந்தது. புளியமரத்தடிக்கடை என்றால் சின்னப்புள்ளயும் அறியும். அவ்வளவு பிரபல்யமான கடை. தயிர்வடைக்கும் பாலப்பத்திற்கும் பிரசித்திபெற்ற இடம். இஞ்சி பிளேன்றியை வாய் நிறைய உறிஞ்சியபடி வாய்கொள்ளா யாழ்ப்பாணத்து பாணிச்சுருட்டுடன் மரக்குற்றிகளில் அமர்ந்திருந்து சாவகாசமாக கதையளக்கும் பெரிசுகளின் அடித்தளமே எனக்கு கதை கேட்கும் ஆர்வத்ததை தூண்டியது. வாய் பார்த்த நிற்கும் சிறுவனாக அந்தக்கதைகளுக்காகவே சுருட்டுப்புகையைக்கூட சகித்தபடி சுற்றிச்சுற்றி வருவேன். 

முள்ளிவெட்டவான் வனமும் புல் வெளியும் ஆறும் சூழ்ந்த அற்புதமான இடம். தமிழ்ர்களும் முஸ்லிம்களும் ஒரே மரத்தடியில் படுத்துறங்கி வண்டில் கடடிப்போன காலம் அது. அந்தப்புளியமரத்தடிக்கடையை அதாவது எனது படைப்பூக்கம் விதையூன்றிய மண்ணை பயங்கரவாதம் பறித்துக்கொண்டு எங்களையும் போ வென்று விரட்டி விட்டது.

1984 இல் ஓட்டமாவடியில் எனது மாமா முறையான கபூர்; மௌலவியின் வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தேன்.வாசிப்பார்வத்தை தூண்டியவர்களில் அவரும் ஒருவர். அவர் அலுமாரிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற நூல்களை ஆசையுடன் வாசிக்கத்தொடங்குவேன். ஓன்றுமே புரியாது. லைலா மஜ்னூ மட்டுமே அக்காலத்தில் இந்த மண்டைக்குள் ஏறியது. 

1985 இல் அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கிழங்கை அறபுக்கல்லுரியின் விடுதியில் கொண்டு சேர்த்தார்கள் . தமிழ்நாட்டில் பாக்கியாத் கல்லூரியில் படித்து விட்டு வந்த மௌலவி ஏ.சி.கே.முஹம்மது பாகவி என்பவரின் தூண்டுதல் அங்கு வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியது. வாசிப்பு என்ற பாடத்தை போட்டு வாசிகசாலைக்கு விரட்டி எங்களை வழிகாட்டியவர்.

கல்லூரியில் கிழக்கின் ஒளி என்ற கையெழுத்து சஞ்சிகை வெளிவந்தபோது ஏக காலத்தில் சிறுகதை ஒன்றும் கவிதை ஒன்றும் எழுதினேனன். அதுதான் எனது முதல் ஆக்கம். மௌலவி முஹம்மத் என்னை அழைத்து நீதானா இதை எழுதினாய் என ஊக்கப்படுத்தி விளையும் பயிரை முளையில் தெரியும் என்றார். இந்தியாவுக்கு சென்று வரும் போதெல்லாம் அறிஞர்களின் நூல்களுடன் அவரை சந்திப்பது சந்தோஷமாக விடயம்.

ஆண்டு இறுதிப்பரீடசையில் எல்லோரும் தீவிரமாக தியரிகளை பாடமிட்டுக்கொண்டிருந்த வேளை சாண்டில்யனின் கடல்புறாவை  கள்ளத்தனமாக வாசித்த திகிலனுபவம் இன்னும் நெஞ்சில் வந்து அச்சமூட்டுகிறது. அட்டாளைச்சேனையில் இருக்கும் போது நண்பர் பௌசரின் நட்பு கிடைத்தது. 

அப்போது அவர் அக்கரைப்பற்றில் தடம் என்ற பெயரில் சிறு சஞ்சிகை நடாத்திக்கொண்டிருந்தார். வைரமுத்து மேத்தா அப்துல் ரகுமான் இன்குலாப் ஆகியோரின் கவிதைகளை தேடிப்படித்து அது போன்று எழுதத்தோடங்கினேன். இக்காலத்தில் படித்த சோலைக்கிளியின் எட்டாவது நரகம் புரியவில்லை.

  பிற்காலத்தில் எனது முதல் கவிதை தொகுதி 'எரி நெருப்பிலிருந்து.. தொகுதியில் சோலைக்கிளியின் தாக்கத்தை தவிர்க்க முடியவில்லை.

தினமுரசுக்கு எழுதத்தொடங்கிய காலம் எனது பெயர் பிரசித்தமானது. வாரம் ஒரு கதை எழுதினேன், கவிதையும் தான். எனது படைப்புலகத்தை வடிவமைத்த சூழல் அப்போதுதான் எதேச்iசாயாக நடந்தேறியது எனலாம். 

1994இன் நடுப்பகுதி என நினைக்கின்றேன். எஸ்.எல்.எம் ஹனீபாவை அவரின் எழுவான் பண்ணையில் சந்திக்கச்சென்றிருந்தேன். பலதும் பத்தும் என்று கதைத்து விட்டு இறுதியில் என்னில் பாவுகிறது அவர் பார்வை. அதை அவரின் வார்த்தையில் சொல்வது நல்லது.

“தம்பி அறபாத் இந்த நம்மட ஊருக்க இப்ப உன்னத்தெரியாத ஒரு குட்டியும் இல்ல பொடியனும் இல்ல நானும் பத்து வருஷமா எழுதுறன் என்ன ஒருத்திக்கும் தெரியா” என்றார் குத்தலாக. 

அவர் சொன்னதன் அர்த்தம் எனக்கு உரைக்க நேரமெடுக்கவில்லை. ஜனரஞ்சகப்பத்திரிகையில் சஞ்சிகையில் நான் அக்காலத்தில் எழுதிய கவிதைகள் காதல் பிரிவையும் அதன் இழப்பையும் சொல்லும் கவிதைகள்.இவைகளை இள வயதினர் பாடமிட்டு சொல்லித்திரிவதைதான் அவர் அப்படிக்குத்திக்காட்டினார்.  பிறகு என்னில் அழுத்தமாக பதிகிறது அவர் வார்த்தைகள். இதுகள விட்டுப்போட்டு புதும பித்தன படி என்றார்.

 அதுவரை அப்படி ஒரு எழுத்தானை எனக்கு சத்தியமாக தெரியாது. சுpல தினங்களின் பின் அவர் வீட்டுக்குச்சென்று புதுமைப்பித்தன் சுந்தர ராமாசாமி, ஜெயகாந்தன், லா.ச.ராமாமிர்தம் போன்றோரை எனது வீட்டுக்கு அழைத்து வந்தேன். அதன் பிறகுதான் எனது கண் விடுத்தல் நிகழ்ந்தது.

 எனது படைப்புலகம் எல்லையற்று விரிந்தது .தேடிப்படிக்கும் ஆவல் பல மைல்கள் பயணம் செய்யும் ஆர்வத்தை தந்தது. கைய நிறைய இனிப்பு இருந்தும் இன்னும் வேணும் என அடம்பிடிக்கும் சின்னக்குழந்தையாய் புத்தகங்களும், இலக்கியத்தேடலுமாக எனது பணிகளுக்கு மத்தியில் நேரத்தை ஒதுக்க முடிந்தது

.கொழும்புடன் தொழில் நிமித்தம் தொடர்பு ஏற்பட்ட போது. சரிநிகர் நண்பர்கள் அறிமுகமானார்கள். சிவகுமார். ரஷ்மி,ஷகீப் என்.ஆத்மா, மற்றும் சிராஜ் மஷ்ஹீர் போன்ற நண்பர்களின் தொடர்பு நல்ல படைப்புலகத்தை எனக்கு காட்டியது. குறிப்பாக பௌசர் ஆத்மா இருவரும் எனது கதைகளை வாசித்து அபிப்பிராயங்களை சொல்லி படைப்பின் ஆர்வத்தை தூண்டியவர்கள்.

படைப்புலகத்தை வடிவமைத்த நிஜமான சூழல் 90களுக்குப்பின் எனக்குள் நிகழத்தொடங்கியது எனலாம். 90 களுக்குப்பின் கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட தமிழ் ஆயுதக்குழுக்கள், வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம், இந்திய இராணுவத்தின் வருகை போன்ற கடினமான துன்பங்களை இளைஞனாக இருந்த எனை நிகர்த்த பலரை சினங்கொள்ளச்செய்தது.

 சிலர் பல்லுக்கு பல் காலுக்கு கால் என்று வீராப்பு பேச எங்களது பேனா ஆயுதமானது. கண் முன் நிழ்ந்த பயங்கரவாதங்களுக்கு எதிராக தமிழ் முஸ்லிம் என்ற பாகுபாடின்றி எழுதினேன்.எனது படைப்புலகத்தை வடிவமைத்த சூழல் மிக பயங்கரமானதாக இருந்தது.

எனது அகன்ற வாசிப்பில் என்னை ஆகர்ஷித்தவர்கள் பாத்தித்தவர்கள் பலருண்டு.சு.ரா.புதுமைப்பித்தன்,பாரதி,ஜெயகாந்தன்,தகழி, ராமகிருஷ்ணன், கொஞ்சமாக எழுதினாலும் அதிர்வை ஏற்படுத்திய இமையம்,சக்கரவர்த்தி, ரஞ்சகுமார் ஜே.பி.சாணக்யா போன்றவர்களுடன் பிரான்ஸ்காப்கா,சதத் ஹஸன் மாண்டோ, கே.ஏ.அப்பாஸ், வைக்கம் மு.பஷீர்,மற்றும் பலரை குறிப்பிடலாம். 

2. பெரும்பாலும் இந்தச் சூழலிலிருந்து, சமூகத்துக்குள் இருக்கும் பிரச்சினைகள், முஸ்லிம் மதம், பல்வகைக் கலாசாரம், இறுக்கமான சமூக அமைப்பு, நடைமுறைச் சிக்கல், பெண்ணுடல், பாலியல் துஷ்பிரயோகம், அசியல் ரீதியான பாலியல் வக்கிரங்கள், சமயத் துறவிகளின் உறவுகள் பற்றியெல்லாம் உங்கள் எழுத்துக்கள் பேசுகின்றன.சமுதாயத்திலுள்ள அகமுரண்பாடுகளை அவை விவரணப்படுத்துகின்றன. இந்த விதமான கதை சொல்லல் முறையில் உங்களுக்குள்ள ஈடுபாட்டின் பின்னணி

சாதாரண மனிதனின் பார்வைக்கும் எழுத்தாளனின் சமூகப்பார்வைக்குமிடையே இடைவெளிகள் அதிகம். ஒரு சமூகத்தின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்ப்புச்சொல்வது எழுத்தாளனுக்குரிய பணியன்று. அது ஒரு சமூகவியலாளனின் கரிசனை. உங்களுடைய கேள்வியின் உள்ளார்ந்த நோக்கம் இறுக்கமான மத மற்றும் சமூக ஆசாரங்களை கேள்விக்குட்படுத்தும் என்னுடைய எழுத்து பற்றியே என நினைக்கின்றேன்.

மதத்தை வைத்து பிழைப்பு நடாத்தும் சில துறவிகள்,அல்லது மதத்தின் பெயரால் பிழைப்பு நடாத்தும் சில முல்லாக்கள் இவற்றில் குறு நில மன்னர்களாக இருக்கும் அரசியல் அதிகாரமிக்கவர்கள் இவர்களுடனான எனக்குள்ள பரிச்சயம்,சமூகத்துடனான நெருங்கிய உறவு,அரச சார்பற்ற நிறுவனங்களில் இணைந்து பணியாற்றிய காலங்களில் பெற்ற அனுபவங்கள், பல்வேறு பிரதேசங்களிலும் பெற்றுக்கொண்ட அனுபவங்கள், என் கதை சொல்லும் திறனில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.

அதிகார எல்லைகளுடன் இருக்கின்றவர்களுக்கு அது மத பீடமாயினும் சரி, அரசியல் பீடமாயினும் சரி இரு முகங்கள் உண்டென்பது என்னுடைய அனுபவம். இதில் சில விதிவிலக்குள் இருக்கலாம்.பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் ஒரு முகம் அந்தரங்கத்தில் இன்னொரு முகமும் கொண்ட பலருடன் நான் பழகியுள்ளேன். சில எழுத்தாளர்களும் இதில் அடக்கம்.

சமூகத்தின் மீது படிந்துள்ள அக முரண்பாடுகள், பிறரால் சொல்வதற்கு தயங்கும் மனப்பிறழ்வுகள்,அல்லது எதற்கு வீண் வம்பு என்று கண்டும் காணாதது போல் ஒதுக்கிப்போகும் சமாச்சாரங்கள், அவற்றையே நான் எழுதுகின்றேன்.கேள்விக்குட்படுத்துகின்றேன் புனிதங்கள் உடைபடும் போது தங்களைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் போலி பிரமாண்டம் சரிவதை சகிக்கமுடியாதோர் என்னை ஒரு கலகக்காரனாக பார்க்கின்றனர். 

1997ம்ஆண்டு; இஸ்லாமிய வரலாற்றில் அண்மையில் தோன்றிய ஓர் இயக்கம் பற்றி நான் எழுதிய ஒரு நூலுக்காக வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப்பின் குறித்த அமைப்பினரால் என்னுடைய தலையைச் சீவ 10 இலட்சம் பகிரங்கமாக பரிசு அறிவிக்கப்பட்டதென்றால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது புரிகிறதா? இந்த தலைக்கு 10 இலட்சம் என்று மதிப்பீடு செய்கின்ற அளவிற்கு ஒரு சரக்கும் இல்லை என்பது வேறு விடயம்.

நான் எழுத ஆரம்பிக்கும் சமூக முரண்பாடுகள் குறித்த விமர்சனங்களின் போது எனக்கு முகங்கள் முக்கியமல்ல. முரண்பாடுகளின் தீவிரம் குறித்தே சிந்திக்கின்றேன்.இல்லாத ஒன்றை இருப்பதாக பாவ்லா காட்டும் மதத்தின் பெயரால் பாலியல் சுரண்டல் பெண்னுடல் மீதான அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள்,அரசியலின் பெயரால் புரியும் அக்கிரமங்கள் தங்களுக்கு தாங்களே இட்டுக்கொண்ட போலி சமூக இறுக்கங்கள் எல்லாவற்றையும் தயவு தாட்சயண்மின்றி கேள்விக்குட்படுத்துவதை இலக்காக வைத்தே அண்மைக்கால கதை சொல்லலில் ஈடுபாட்டுடன் உழைத்து வருகின்றேன்.

படைப்பாளி குறைந்த பட்சம் நேர்மையாளனாக சோரம்போகாதவனாக இருக்க வேண்டாமா? சத்தியமான எழுத்தெல்லாம் அருகி விட்டது திருப்திப்படுத்தல்கள் முதுகு சொறிதல்கள் தாங்களே தங்களை மெச்சிக்கொள்ளும் வித்துவச்செருக்கு இதுவே இன்றை இலக்கிய உலகில் முடிசூடிக்கொண்டிருக்கின்றது. நீங்கள் குறிப்பிடும் இந்த சமூக அக முரண்பாடுகளில் நான் அக்கரையுடன் இருப்பதால்தான் என்னவோ அதிகமானவர்களுக்கு “ நான் அவ்வளவு நல்ல பிள்ளை இல்லை” 

3. முஸ்லிம், தமிழ் உறவு தொடர்பாக உதாரணமாகக் கூறப்பட்டுவந்த மட்டக்களப்புப் பிரதேசம் இன்று, கடந்த 20 வருடங்களில் பல்வேறுகொதி நிலைகளைச் கடந்துவந்துவிட்டது. 70களிலும் அதற்கு முன்னரும் இருந்த சமூக, சகவாழ்வு முற்றுமாகச் சிதைக்கப்பட்டு விட்ட கடந்த காலத்தில் பின் கிழக்கின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது? கலைஞர்கள் எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எத்தகைய மனநிலைகளைக் கொண்டிருக்கின்றார்கள்? 

இது ஒரு முக்கியமான கேள்வி தமிழ் முஸ்லிம் மக்கள் சண்டை இல்லாமல் இருக்கின்றார்கள் என்பது சந்தோஷமான சங்கதி. மனங்கள் ஒட்டிக்கொள்ள முடியாத ஒரு போலி சந்தோஷம் என்றே அதை என்னால் அவதானிக்க முடிகிறது. இரு இன மக்களின் மனங்களிலும் கடந்த காலத்தின் காயங்கள் நீரு பூத்த நெருப்பாக அடங்கியிருக்கின்றது.

தமிழ் முஸ்லிம் உறவுக்கு பாலமாக இருந்த மட்டக்களப்பு பிரதேசத்தின் தமிழ் முஸ்லிம் உறவில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டவர்கள் சுய நலம் கொண்ட சில அரசியல் சக்திகளும் இயக்கங்களுமே. குறிப்பாக 90களுக்குப்பின் தமிழ் முஸ்லிம் உறவில் பாரிய விரிசல் விழுந்து விட்டது.

 அது தமிழ் போராட்ட இயக்கங்களாலும் சமூக அக்கரையற்ற சில முஸ்லிம்களாலும் இன்னும் ஆழமாகவே அந்த விரிசல் விழுந்து விட்டது .பிட்டும் தேங்காய்ப்பூவும் என்ற செப்படி வித்தைகள் இனிவரும் காலங்களில் செல்லுபடியாகும் என்ற கனவுகளும் இல்லை எரிர்பார்ப்பும் இல்லை.

சமாதான காலங்களில் கூட சகவாழ்வு மறுக்கப்பட்ட ஒற்றுமையை நிலைநாட்டாத இந்த உறவில் எனக்கு நம்பிக்கை அற்றுப்போய்விட்டது. இரண்டு இனங்களும் ஒன்றுபட்டால் தன்னுடைய நலன்கள் பாதிப்படைந்து விடும் என்பதில் பெரும்பான்மை பேரினவாதம் குறியாக இருக்கின்றது.திட்டமிட்டு அது செயல்படுகின்றது . 20 வருஷத்திற்கு முன்பு இருந்த அந்த இனிமையான கள்ளங்கபடமற்ற உறவில் நிறையவே புள்ளிகள் விழுந்து விட்டன.தலைக்கு மேல் வெள்ளம் போய்க்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் கலைஞர்களும்,எழுத்தாளர்களும்,சமூக ஆர்வலர்களும், இந்த உறவு அறவே செத்துப்போகாமல் இருக்க கோமாவில் இருந்தாலும் பரவாயில்லை உயிர் இருக்கிறதே என்ற நப்பாசையில் இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள் 

N.G.O க்கள் இரு தரப்பினரையும் அழைத்து “வேர்க் சொப்” நடாத்துகின்றது. எல்லோரும் இந்த ஒற்றுமைக்கு உழைக்கின்றார்கள் என்பது  மிகைப்படுத்தல். ஆனால் சில கலைஞர்குள் எழுத்தாளர்கள் வெள்ளை மனதுடன்  இயங்;குகின்றார்கள். உழைக்கின்றார்கள். அவர்கள் பகீரதப்பிரயத்தனத்துடன் ஒன்றை சரிகட்டும் போது சகட்டுமேனிக்கு ஒரு பேரலை வந்து எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக அடித்துக்கொண்டு போய் விடுகிறது. அது அரசியல் என்ற பெயரில் நிலம் என்ற பெயரில் மதம் என்ற பெயரில் இன்னும் எத்தனையோ….

20வருஷத்திற்குப்பின் இங்கிருந்து (ஓட்டமாவடி) வாகனேரி அடர்ந்த வனத்திற்குள் சுமார் 12 கிலோ மீட்டர் கோயில் திருவிழாவுக்கு சென்று அங்கே முற்றத்தில் ஆற்றோரம் படுத்துறங்கி கை வீசி நடந்து வந்த காலங்கள், அங்கிருப்பவர்கள் ஓட்டமாவடிக்கும் ஏறாவூருக்கும் கரத்தை வண்டியில் கந்துரிக்கு வந்து தங்கிப்போவதையும் நினைத்துப்பார்த்து ஆறுதல் அடைவதை தவிர வேறென்ன 

செய்ய முடியும?; அந்த அற்புதங்களை என்னுடைய சிறிய வயதில் என்னுடைய சாச்சாவுடன் (சித்தப்பா) சென்று அனுபவித்தேன் என்பதை நினைக்கையில் எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கின்றது. இன்று செக்கலுக்குள் முஸ்லிம் பிரதேசத்துக்குள் தமிழரோ தமிழ் பகுதிக்குள் முஸ்லிமோ செல்ல முடியாத துர்ப்பாக்கியமும்,துப்பாக்கியும் மிகுந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 

திகரன் வார மஞ்சரி : மார்ச் 16.2008
தொடரும்.....