Friday 24 December 2010

அடைகாத்தல்

என் அறைக்குள் சொட்டியது
மழைத்துளி
துவானம் முகத்தில் அறைய
கண் விழித்தேன்
ஒரு பூனைக்குட்டியாய்
என் மனசுக்குள்
நீ சுருண்டு கிடந்தாய்
கனவு கலைந்த பின்பும்.

Sunday 28 November 2010

ரெயில்வே ஸ்ரேஷன்

திடுதிப்பென்று வருவாரென்று இவன் எதிர்பார்க்கவில்லை. உம்மாவுக்கும் ஆச்சரியம். மூத்தப்பா நம்ப முடியாதவராய் கண்களை இடுக்கியபடி சாய்மனக்கதிரையில் ஆவென்றிருந்தார்.

ஆங் அஹமது ஐயா, நான்தான் கருணாரட்ன, ஓவ் ஸ்ரேஷன் மாஸ்ரர், எப்படி சுகமா?

அவர் குசலம் விசாரித்ததும், பளிச்சென்று சிரித்ததும் இவனுக்கு உறைக்கவில்லை. அவரைக் கண்டதில் அப்படியொரு அதிர்ச்சி.

வாங்க மாஸ்ரர் என்ற உம்மாவின் குரலில் அதீத பரிவும், அன்பும் நெகிழ்வதை அவதானித்தான்.

இவன் கருணாரட்னவை விழித்தபடி நின்றான். மனிதர் எப்படி மாறிப் போய்விட்டார். மூப்பும், மரணமும், காலங்களை வென்றபடி தன்பாட்டிற்கு ஓடிக்கொண்டிதானிருக்கின்றன. மூப்பும், நரையும் மேவிய கருணாரட்னவை பார்க்கும்போது இனம்புரியா அச்சம் மனசில் ஊறிப்பரவுகின்றது. முதுமையின் ஆக்கிரமிப்பை திண்மையுள்ள ஒவ்வொரு இளமையும் எதிர்த்திடவியலா கடுமவஸ்தை இவனையும் அக்கணத்தில் தொற்றிக் கொண்டது.

தன் மிருதுவான முகத்தில் சுருக்கங்கள் விழுவதான பிரேமை. கருகருவென்ற தாடியும், படியப்படிய வாரியிடப்பட்டு கண்ணாடி முன் நின்று அழகு பார்க்கும் கேசமும் திடீரென வெண் பஞ்சு மேகமாய் காற்றிலாடி திக்கொன்றாய் பறப்பதான உணர்வு. விரித்த நெஞ்சின் திண்மையும் புஜங்களின் குறுகுறுப்பும் ஒடுங்கிப் போய், மூன்றாவது காலொன்றின் துணையுடன் நிதானித்து நடப்பதான தளர்வு. என்னவாயிற்று இவனுக்கு. இப்படி பேயறைந்தவன் போல் நிற்கிறானே! உம்மாவின் பார்வையில் அச்சம் விரவியது. சுதாகரித்துக் கொண்டான். கருணாரட்ன ஐயா ஓலைப்பாயில் அமர்ந்தபடி சிங்களப் பிரதேசத்திற்கேயுரிய பண்டங்களை பகுத்து உம்மாவின் கையில் கொடுத்தபடி இருந்தார்.

சாபிர் தம்பி இந்தாங்க ஒங்களுக்கு என்றபடி ஒரு பெட்டியை நீட்டினார். இவன் கலைகளை ஆராதிப்பவன் என்ற வகையில் மரத்தினால் செதுக்கப்பட்ட சிற்பமொன்ற இவனுக்கென கொணர்ந்திருந்தார். பல தடவை நன்றி கூறிக்கொண்டான். இரு மகளிர் நீர்க்குடமேந்தி செல்லும் அற்புதமான கலை வண்ணம். முலையின் முனைவு தொடக்கம் அதரங்களில் தேங்கி நிற்கும் இளஞ்சிரிப்பு வரை நுணுக்கமாக செதுக்கப்பட்ட சிற்பியின் புத்திசாலித்தனத்தை மெச்சிக் கொண்டான்.

கருணாரட்னவின் காலத்தில்தான் ஊருக்குள் சீராக ரெயில் ஓடியது. பிளாட்பாரத்தில் இவனினதும், இவனையொத்த வாண்டுகளினதும் வாழ்க்கை ஓரளவு சீராக ஓடிக்கொண்டிருந்ததும் இவர் காலத்தில்தான். மனசுக்குள் தூர்ந்து கிடக்கும் ரெயில்வே நினைவுகள், இந்த முதியவரால் கிளறப்பட்டுவிட்டது. வறுமையும், பிணியும் மிகுந்த அவலத்தனமான இவ்வாண்டுப்பருவத்தின் காயங்களும், அதனை மீறி நிற்கும் சமூகப் பிணைப்பும் இந்த சிங்களக் கிழவரின் வருகையால் மனக்குளத்தில் எகிறி வந்து மிதக்கத் தொடங்கின.

குடும்பத்தில் இவன் இரண்டாவது. மூத்தவன் தண்டச் சோறுண்டு, இந்திரியம் புடைக்க, கடலை விற்கும் அயலூர்க்காரியை இழுத்துக்கொண்டு போய் அவள் ஊரிலேயே குடும்பம் நடத்துவதாக பின்னாளில் தெரிந்து கொண்டான். கழுதையாகப் பிறந்தாலும் கடைசியாகப் பிறக்கக் கூடாதென்பது இவனளவில் மெய்த்துப் போயிற்று. வாப்பாவுக்கோ நிரந்தர ஜீவனோபாயமில்லை. கூலிக்கென அங்குமிங்கும் ஆலாய் பறந்தார். அடுக்கடுக்காக தாம்பத்தியத்தில் காட்டிய அக்கரையை ஒரு தொழிலில் காட்டியிருந்தால், எட்டுப் பிள்ளைகளுக்குப் பதிலாக பெயர் சொல்லிக் கொள்ளும்படி தலை நிமிர்ந்து நின்றிருக்கலாம்.

அவருடைய கனவு யாழ்ப்பாணத்து பாணிச்சுருட்டும், கட்டித் தயிரும் பழம்சோறும், அதப்பிக்கொள்ள வெற்றிலையும், தொட்டுக்கொள்ள உம்மாவுமாக கழிந்து போயிற்று. இதைத்தவிர வேறொரு கனவும் அவருக்குள் விரிந்திரிக்காது. ஒருநாள் கருவாக்கேணிக்கு முருங்கைக்காயும், கருவாடும் விற்கப்போனவர் கண்கள் தோண்டபட்டு கைகள் கட்டப்பட்டு இரண்டு நாட்களின் பின் ஒரு சிங்களப் போலீஸ்காரனால் கண்டெடுத்து முன்றலில் கிடத்தும் வரை அவர் கனவு இப்படித்தான் மலர்ந்திருக்கும்.

வால் முறுக்கும் அந்த வயதில் காய்ந்துலர்ந்து கருவாடென சைக்கிளில் ஏறிச்சென்ற வாப்பா, ஒரு கொத்துக்காற்றூதி கொழுத்துக் கிடப்பதை இவன் பிரமிப்புடனும் மிகுந்த அச்சத்துடனும் பார்த்து நின்றான். அன்று மயக்கம் போட்டு சரிந்த உம்மா இத்தாவிலிருத்தி, மூன்று நாட்களின் பின் கண்திறந்தாள். மறுநாள் இவன் தலையில் ஏறிய அப்பப்பெட்டி பிளாட்பாரத்தில் இவனை தள்ளிற்று.

பனிவிசிறும் காலம் முருங்கைப்பூக்கள் முற்றம் முசிய சோளகப்பொறியாய் சொரிந்து கிடக்கும். ஆடாதோடை பதிமருந்தின் ஔடதக் கமறல் நாசியில் கமறும். வெள்ளி நிலாவின் குளிர்ந்த சிரிப்பில் ஊரே கிறங்கிக் கிடக்கும். சூரிய கதிர்கள் வீசா வைறையில் இவன் அப்பப் பெட்டியுடன் வெளியேறுவான். வாசலில் உம்மா வந்து நிற்பா. தலை குனிந்த இவனுக்கு ஒரு இச் தருகையில் இவன் கழுத்தில் உம்மாவின் விழிநீர் கரிக்கும். இவன் மயிர்களும் சிலிர்த்து நெஞ்சு புடைக்கும். இவன் தேயும் வரை படிக்கட்டில் வெறித்து நிற்பாள் உம்மா. அவள் விழிகளின் ஈரம் இவன் பிடரியைக் கவ்வியபடி பின் தொடரும்.

இந்தக் கருணாரட்னதான் அன்றைய ஸ்ரேஷன் மாஸ்ரர். ரெயில் வண்டியில் கடலை வியாபாரம், பீடி, சிகரெட், டொபி விற்போர் , கஞ்சியும் டீயும் விற்போர், அப்பம், இடியாப்பம், பிட்டு விற்போர் என ஓர் உணவுச்சாலையே நடமாடித்திரியும். பத்து நிமிஷம் உதய தேவி தரித்து நிற்கும். அதற்குள் கூவித்திரியும் பொடியன்களும் பெட்டைகளுமாக ரெயில் பெட்டிகள் திணறும்.

‘ஆ அப்பம் பாலப்பம், அம்மா எடுங்க, ஐயா திண்டு பார்த்து காசிதாங்க’.

அவரவர் தொனியில் கூவித்திரிவர். கண்ணகி கிராமத்திலிருந்து கோமதி வண்டப்பம் கொண்டு வருவாள். அவள் கூவி விற்கும் அழகே தனி அழகு.

வண்டப்பம், வண்டப்பம் என அவள் கூவிக்கொண்டு வருவாள். தயிர் விற்கும் குத்தூஸ் காக்கா அவளருகில் மெல்ல வந்து ஆ என்டப்பம் என்டப்பம் என சத்தம் வைப்பார். கோமதிக்கு நெஞ்சில் தேசிப்பழ அளவில் மொட்டு விரியத் தொடங்கிய வயது. சற்று எடுப்பாக இருப்பதால் குத்தூஸிக்கு அவளில் ஒரு கண்.

ரெயில் புறப்பட்டுச் சென்ற பின்பும் பிளாட்பாரம் கொப்பிலிருந்து தேனீக்களை கலைத்துவிட்டது போல் இரைச்சலில் இருக்கும் அடுத்த ரெயில் வரும்வரை அரட்டைகள் நீளும். ஸ்ரேஷன் மாஸ்ரர் கோமதியை கூப்பிடுவார்.

‘என்ன கோமதி உண்டப்பம் நல்ல இனிப்போ, இஞ்ச ஒண்டு தாரும் திண்டுபாப்பம்’

பொடி வைத்து அவர் பேசுகையில் மூக்கின் கீழ் மச்சம் விழுந்த பையன்கள் களுக்கென சிரிப்பர். அவளுக்கோ இதுவெல்லாம் அத்துப்படி. வியாபாரத்திலும் விண்ணி.

‘ஓம் ஸேர் அம்மா சீனி போட்டுத்தான் சுட்டவ’.

‘இந்தாங்க கணக்குல எழுதட்ட, கைக்காசா’ என்பாளே, கருணாரட்னவின் முகத்தில் சிக்னலின் மினுமினுப்பு நூர்ந்து விடும்.

பின்னாளில் இந்தக் கோமதி ஊருக்குள் நெஞ்சு நிறைய குண்டுடன் சீருடையணிந்து யமஹா பைக்கில் வந்து இறங்கியபோது இவன் பிரமித்துப் போய் உறைந்து போனான். அவள் முகத்தை ஏறிடப் பயமாக இருந்தது. இந்த இறுக்கம் எப்படி இவளில் தொற்றிக்கொண்டது.

அக்காலத்திற்கென ஒரு ஐஸ்வர்யம் இருந்தது. தமிழன் முஸ்லிம் என பாகுபாடு காட்டாத காலம். பொடியன்களுடன் காக்காமாரும் சேர்ந்து போராடித்திரிந்த காலம். காக்காமாரின் வீடுகளில் வீரர்கள் துவக்கை சாத்திவிட்டு நித்திரை செய்த காலம். ஊருக்குள் வண்ணானும், மருத்துவச்சியும் குடில் போட்டு சேவை புரிந்த காலம். நாசிவன் தீவிலும் கிரான் குளத்திலும் காவடியும், திருவிழாவும் பார்க்கச்சென்ற காக்காமார் கோயில் முற்றத்தில் உறங்கியெழுந்து வெயிலேறிச்சரிய சாவகாசமாக வீடேகிய காலமது.

அந்தக் காலத்தை சபித்த முனிவன் யாரென யோசிக்கையில் மர்மங்கள் விரிகின்றன. அதை சிறை பிடித்த கொடியவன் மூட்டிய தீயில் எரிந்துபோன மானசீக உறவுகளின் பிரலாபம் காற்றில் அலைவதான பிரமை இவனை நெடுநாளாகவே தொற்றிக்கொண்டு வதைக்கிறது. சரித்திரங்களும், வரலாறும் இவன் வளர்ச்சியுடன் திடீரென முற்றுப் பெற்றதைப் போல் சகலதும் ஒரு திருப்பத்தில் வந்து ஸ்தம்பித்துவிட்டது.

துயரங்களில் ஒட்டுமொத்த சரிதங்களை சுமந்தபடி வரலாற்று நதி தன் பாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவனுடன் ரெயில்வேயில் விளையாடி வியாபாரம் செய்தவர்களை ஆயுதம் தூக்க வைத்ததும் இந்த வரலாறுதான். அந்த ஆயுதங்களால் அவர்களுடன் பிரியமான மனதுடன் உறவாடியவர்களை துன்புறுத்தும்படி தூண்டிய வரலாறு எது? யோசிக்கையில் எல்லாமே குழம்பிக் கொண்டு வந்தது இவனுக்கு. நினைவுகள் நெக்குருகி மயங்குகின்றன.

கருணாரட்ன மக்கிப்போன கூரையை வெறித்தபடி மூத்தாப்பாவின் சளப்பலில் ஐக்கியமாயிருந்தார். உம்மா காச்சி வைத்த குரக்கன் கூழ் அவர் முன் ஆறிப்போய் உறைந்திருந்தது.

‘தம்பி ஸ்ரேஷன் வரை போய் வருமா’ என்றார். ‘கூழ்க்குடியுங்கோ ஸேர் போவம்’ என்று விட்டு இவன் உடைமாற்றத் தொடங்கினான்.

ஜே ஜேவென சனங்கள் வழிந்த ரெயில்வே ஸ்ரேஷன் ஓவென்று வெறிச்சோடிக் கிடந்தது. ஒன்றிரண்டு நாய்கள் பிளாட்பாரத்தில் படுத்துக்கிடந்தன. இவர்களின் சிலமங்கண்டு ஒரு நொண்டி நாயைத் தவிர மற்றதெல்லாம் சடுதியாக எழுந்து முறைத்து விட்டு அப்பால் சென்றன. மாடுகளின் தங்குமிடமாய் கென்ரீன் இருந்தது. எந்தச் சாதனங்களுமற்று சிக்னல் றூம் வயர்களை மட்டும் துறுத்தியபடி பரிதாபமாகத் தெரிந்தது. ஸ்ரேஷன் மாஸ்ரரின் அறையில்ரிந்த தகவல் கருவிகளும், டெலிபோனும், டிக்கற் ட்றக்கும், காணாமல் போயிருந்தன். மொத்தத்தில் தண்டவாளங்கற்ற ரெயில் பாதையில் தடம் மட்டும் எங்கள் முன் வியாபித்திருதது.

பயணிகள் தங்குமிடத்தில் ஒரு பைத்தியக்காரனின் சொத்துக்கள் இறைந்து கிடந்தன. அவன் எந்நேரமும் திரும்பி வரலாம் என்னுமாற்போல் கதவு உடைக்கப்பட்டு படுக்கையாக கிடந்தது. ஜன்னல்கள் மிகுந்த சிரமத்துடன் கழற்றப்பட்டிருந்தன. மேற்கூரையில் முன்பகுதி பெயர்த்தெடுக்கப்பட்டிருந்தது. நீர்த்தாங்கி வெடிப்பு விழ ஆரம்பித்து விட்டது. ஸ்ரோர் ரூமிலிருந்த இரும்புத்தளபாடங்கள், காகிதாகிகள் எதுவுமின்றி ஆவென்று கிடந்தது.

கருணாரட்ன ஐயா ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவரது முகம் இறுகிப்போயிருந்தது. நெஞ்சின் வலி முகத்தில் விழுந்து அவர் விழிகளில் இறங்கி கோடிடுவதை இவன் அவதானித்தான். அந்தக் காலத்து ஸ்ரேஷனில் நின்றபடி ஏகாந்தமாய் மன உளைச்சலுடன் சுற்றுமுற்றும் பார்த்தபடி நின்றான். ஸ்ரேஷனின் முன் சடைத்து நின்ற வேப்பமரத்தில் வெசாக் கூடுகள் தொங்கின. காற்றிலாடும் அக்கூடுகளின் நர்த்தனம் இவனுக்கு மிகுந்த அச்சத்தைத் தந்தது. பழுது பார்க்கவென தரித்து நின்று ரெயில் பெட்டிகளிற் சிலதில் இராணுவம் முகாமிட்டிருந்தது. அந்தப் பெட்டிகள் நிற்கும் தண்டவாளங்கள் மட்டும் காப்பாற்றப்பட்டிருந்தன.

நீர்த்தாங்கியின் வலப்புறத்தில் ஒரு காட்டுமரம். கொத்துக் கொத்தாய் காய்த்து குலுங்கும் அக்காலம். இப்போது மனித் சஞ்சாரமற்று பட்டு விடுவேன் என பயங்காட்டியபடி உம்மென்றிருந்தது. வாண்டுப்பருவத்தில் கள்ளன் பொலீஸ் விளையாட தோப்புக்குள் இதுவொன்றுதான் தோதான மரம். புளி மாங்காயும், உப்புக்கல்லு சேர்த்து நாவூற தின்ற பொன்னந்திகள் இவன் முன் பளிச்சிட்டன. நா நீரில் மிதந்தது.

பிட்டுக்காரி சரஸா மரம் ஏறுவதில் வலுகெட்டி. சரசரவென ஏறுவாள். கட்டை பாவாடையும், சட்டையும் அணிந்து வரும் அவளில் சிக்னல் ராஹலாமிக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. அவளை குவார்ட்டசுக்கு கூப்பிடுவதும் கதைப்பதுமாக இருப்பார்.

‘அவர் ஏன் சதா பிட்டு தின்னுரார். உடம்பு கட்டியாயிடுமோ’ – என்று குத்தூஸ் காக்கா நக்கலடிப்பார். சரஸா கொப்பிலிருந்தபடி கந்துகளை பலம்கொண்ட மட்டும் உசுப்புவாள். மாங்காய் பொலபொலவென உதிர்ந்து சிதறும். அண்ணார்ந்தபடி இவன் கத்துவான்.

‘ஏய் சரஸா உன்ர அது தெரியுதுடி மூடிக்க’.

இவன் தலையை குறிவைத்து அவள் எறியும் மாம்பிஞ்சு மட்டும் அதிக புளிப்பில்லாமல் இருக்கும். ‘சீ வளிசல் ஹராங்குட்டி உள்ளுக்க எல்லாம் போட்டிருக்கண்டா.’

‘இனி ஒரு நாய்க்கும் பழம் பறிச்சித்தரமோட்டேன்.’

கொல்லென்ற சிரிப்பினிடை அவள் பொய்க்கோபத்தின் சௌந்தர்ய அழகுடன் எத்துனை அந்திகள் கடந்து போயிற்று.

கருணாரட்ன மலசலகூடம் வரை எட்டிப்பார்த்துவிட்டு வந்தார். நீர்த்தாங்கியின் நிலவரை உடைக்கப்பட்டி அதற்கு பொருத்தியிருந்த பம் செட்டை இராணுவம் எடுத்துச் சென்ற தகவலை இவன் தெரியப்படுத்தினான். மோட்டார் ரூமில் பெண்களின் உள்ளாடையும் உடைந்த கண்ணாடி வளையல்களும் சிதறிக் கிடந்தன. சுவர் முசிய குருதியின் சீந்தல். இவனுக்கு சர்வாங்கமும் ஒடுங்கிற்று. கருணாரட்னவோ தான் அவமானப்பட்டு சிறுத்துவிட்ட குற்ற உணர்வில் திணறிக்கொண்டிருந்தார். அழியாத சப்பாத்துத் தடங்களில் அவர் விழிகள் கிடந்து துடித்தன. இவன் சுதாகரித்துக்கொண்டு இதுவெல்லாம் சகஜம் என்பதாய் சுவர்களை அலசத் தொடங்கினான்.

கரித்துண்டும், கள்ளிப்பாலும் கொண்டு சுவர்களில் கிறுக்கிய கிறுக்கல்கள் இன்னும் மனசின் ஆழத்தில் கோணல் பக்கங்களாக உறைந்திருக்கின்றன. இவன் பிரமிப்புடன் அந்த கிறுக்கல்களை பார்த்தபடி நடந்தான்.

‘சரசு ராஹலாமி காதல் ஒழிக’.

‘கமலின் அக்பர்’

‘பாலப்பமும் கடலை பருப்பும் தொடர்பை நிறுத்து’

‘ஆயிஷா நீ நைஸா’

‘ரயிலப்போல கைரிய்யா நீ ஆத்துப்பக்கம் வாரியா’

இவனுக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. இவனும் புஹாரியும் சேர்ந்து எழுதிய சில கிறுக்கல்களும் சுவரில் அப்படியே சற்று நிறம் மங்கி அழியாமல் துலங்கின. தனது பெயர் முதல் தடவையாக பத்திரிக்கையில் வந்ததைப் போன்ற ஆனந்தப் பரவசம். பால்யத்தின் கிறுக்கல்களில் புளகித்துப் போனான்.

கென்ரீன் நடத்திய சரஸா அக்காவையும் ஸ்ரேஷன் மாஸ்ரரையும் இணைத்து இவன் எழுதிய வாசகங்களும் புறச்சுவரில் நிறம் மங்கித் தெரிந்தன. குரும்பட்டியின் வலிமையை மனதார மெச்சிக்கொண்டான். மாம்பிஞ்சினால் அவை அழிக்கப்பட்டாலும் கூர்ந்து பார்க்கும் ஒருவரால் அதை முழுமையாகப் படித்து விடலாம். கருணாரட்ன இப்போது அதை பார்த்து விடுவாரோ என்ற சங்கடம் திடீரென இவனைக் கவ்விக்கொண்டது.

இவன் கடைசியாக ரெயிலேறிய நாள் நினைவின் நுனியில் துருத்தியது. 83ஆம் ஆண்டின் துவக்கதில் கொழும்புக்கு போகவென சாச்சாவுடன் இந்த ரெயில்வே ஸ்ரேஷனுக்கு வந்ததுதான் நினைவில் நிற்கிறது. அப்போது ஆட்டோக்கம் அதிகம் ஊருக்குள் வராத காலம். ஒன்றிரண்டு வாடகைக் கார்கள் ரெயில்வே வளாகத்தில் தவமிருக்கும். இவன் கடைசியாக ஏறிய ரஜனி ரயிலின் சனக் கும்பலும் சிக்குபுக்கும் இன்னும் மூச்சில் முட்டுகிறது. அப்போது கருணாரட்ன 20 வருஷங்களுக்குப் பின் இந்த கிராமத்தை விட்டும் ஓய்வு பெற்று சென்று விட்டார். இவனும் வியாபாரத்திற்கு முழுக்குப் போட்டுவிட்டு படிப்பதில் ஆர்வமாகிய வயது.

வெலிக்கந்தையில் ரயிலுக்கு குண்டு வைத்து, ஏதுமறியா சனங்களின் இனிமையான கனவுகளையும், உயிர்களையும் தகர்த்தபோது தொடர்ந்து ரயிலை பார்க்க முடியவில்லை. பின்னர் காகித ஆலைக்கருகில் ஓடிவந்த ரெயிலை மரம் தரித்து தடுத்து ஏதுமறியா தமிழர்களை இந்தியன் சுட்டுப்பொசுக்கிய போது அந்தப் புகையின் கமறலில் ஒருவாரம் ஆகாரம் ஏதுமின்றி இவன் மயங்கிக் கிடந்ததும் இந்த ரெயிலால்தான். அதற்குப்பின் ரெயில்களின் சிக்குபுக்கு சங்கீதத்தை வெறுக்கத் தொடங்கிற்று மனது. இதற்குப் பின் ஊருக்குள் ரெயிலே ஓடவில்லை. ஸ்ரேஷனை மூடிவிட்டு ஊழியர்கள் தத்தம் கிராமங்களுக்கு சென்று விட்டனர். அவர்களின் படி மாதாமாதாம் போய்க்கொண்டுதானிருந்தது.

இந்த ரெயில்வேயில் ஒவ்வொரு தூணிலும், சுவரிலும், இளமைக்காலத்தின் இனிய நினைவுகள் உறிஞ்சப்பட்டு உறைந்திருக்கின்றன. முடிவுறாத்துயரங்கள் இவனளவில் பொய்த்துப் போகவில்லை. சிந்தனையின் இடைவிடாத சங்கிலிகளை கோர்த்தபடி காலங்கள் கடந்துவிட்டன. எதிலும் சிக்கிக்கொள்ளாமல் ஒவ்வொரு ஸ்தலத்திலும் உராய்ந்தபடி நினைவுப் பெருவெளியில் கணீரென்ற ஓசையெழுப்பியபடி அவை நீள்கின்றன. இறைக்க இறைக்க ஊறும் என்ணெய்க்குதமென, அதன் ஊற்றுக்கள் கனக்கிறது. ஊற்றுக்களின் அடர்த்தியும், வீச்சமும், அச்சம் தரும் வீர்யத்துடன் பீறிட்டெழுகின்றன. இந்த வேட்கை இனி ஓய்வதற்கில்லை. கல்வெட்டுக்களென அவை மனசில் கவிழ்ந்து போயிற்று. கல்யாண மண்டபமாய் களிப்புற்றிருந்த ரெயில்வே ஸ்ரேஷன். சுடுகாடாய் ஆழ்ந்த மவுனத்துள் சிதிலமாகி சிதைவடைந்து நிற்பதை இவன் வெகுநேரமாக விம்மலுடன் பார்த்தபடி நின்றான்.

சரிநிகர், 2000

வீடு போர்த்திய இருள்

வீடு மௌனத்துள் புதைந்திருந்தது. இருள் கவ்விய முற்றத்தில் இலைகளால் போர்த்திக்கொண்டு நின்ற மாமரம் அவ்வப்போது உயிருடன் இருக்கிறேன் என்பதை சலசலத்து உணர்த்திக்காட்டியது. “கொக்குகள் மலக்குள்” மூத்தம்மா சொல்வா. முதுகில் வௌளை கோடிட்ட கொக்குகள் மரக்கிளை முழுக்க நிரம்பி வழிந்தன. அடிக்கொரு தரம் இடம் மாற்றி தூங்க எத்தனிக்கும் இரைச்சல் வீட்டுக்குள் விழுந்தது.

வீட்டின் மௌனம் கிலி கொள்ளச்செய்தது. வியாபாரத்திற்குச் சென்றிருந்த வாப்பா செக்கலுக்குள் வீடடைந்து விட்டார். அவரும் பறவையைப்போல இந்த நாட்களில் வீடடைந்து தவித்து நிற்பது வலாயமாகிவிட்டது. வாப்புப்பா சாய்மணக்கதிரையில் சாவகாசமாக உடலைக் கிடத்தியிருந்தார். அவர் விழிகள் முகட்டில் குத்திட்டு நின்றன.

கதிரயைணீன் கீழ் படிக்கம். அவர் வெற்றிலை இடிக்கும் சின்ன உரலும் கூடவே இருந்தது. கழற்றிவிடப்பட்ட மூக்குக்கண்ணாடி நெஞ்சின்மேல் கிடந்தது. வாப்பா திண்ணைக்கும் வாசற் கதவிற்குமாய் பதற்றத்துடன் நடந்து கொண்டிருந்தார்.

இன்று வெளியிலிருந்து யார் வந்தாலும் கதவைத்திறப்பதில்லை என்பதில் எல்லோர் கவனமும் குவிந்திருந்தது. சமையலறையில் வேலையாய் இருந்த உம்மாவின் மேல் ரகசியமாய் விழிகளை மேயவிட்டபடி காத்திருந்தனர்.

இசாத் தொழுகைக்கான அதான் முடியுந்தருணம். மாமரத்தின் இலைகள் உக்கிரமாக அசைந்து மூர்க்கத்துடன் ஆடின. வீட்டின் வரைபடம் தாறுமாறாக கிழிபட்டுக்கொண்டிருந்தது. மரணத்தின் கொடிய கரங்கள் நீக்கமர எங்கும் வியாபித்திருக்கும் அச்சத்தில் உறைந்திருந்தனர்.

உம்மாவின் இயல்பு நெகிழத்தொடங்கியது. விழிகள் விறாந்தைக்கப்பால் ஊடுருவி எதையோ உற்றுப்பார்க்க ஆரம்பித்தன.

எங்கள் வீட்டின் முன் ஹாலுக்கு சுவர் இல்லை. பெண்கள் தூங்குவதும் இளைப்பாறுவதும் உள்ளறையில் எனில், ஆண்கள் வெளித்திண்னையில். முன் அறை கம்பிகளிலான கிராதியாக இருந்தது. முற்றத்தில் ஆட்களின் சிலமனை இங்கிருந்து இலகுவில் பார்த்து விட முடியும் .

உம்மாவின் பார்வை இரும்புக்கிராதிகளின் மேல் குத்திட்டு நின்றது.

” புள்ள கொஞ்சம் சுடு தண்ணி கொண்டு வா”

உம்மாவை உலுக்கி வாப்பா அனுப்பி வைத்தார். வாப்பாவை எரிச்சலுடன் பார்த்து விட்டு தண்ணீரை கொண்டு வந்து தொப்பென அவர் முன் வைத்தா. வாசலில் யாரோ நடமாடும் காலடி ஓசை. உம்மா கதவண்டை பாய்ந்து சென்றா.

வாப்பா சரோலென குறுக்கே பாய்ந்து “நான் பார்க்குறன் போ” என்றார். ஒரு திகில் நாடகத்தின் உச்சம் அரங்கேறும் தருணத்திற்கான வினாடிகள். வீடு பதற்றத்தில் தத்தளித்தது. எதிர்பார்த்த அந்த விபத்து எந்த ரூபத்திலும் நடப்பதற்கான சாத்தியங்கள் புனையப்பட்டுக் கொண்டிருந்தன.

உம்மா இரும்புக்கிராதிகளின் மேல் பார்வையைப்பதித்தபடி வரமாட்டேன் போ வென்று தலையை சிலுப்பிக்கொண்டிருந்தா. வாப்பா பழைய “எவரெடி”யின் ஒளியை ஜன்னலை நோக்கி பீச்சினார். யாருமே இல்லை. இருள் மட்டும் முற்றத்திற்கு அப்பால் நீண்டிருந்தது.

“யாரு புள்ள உன்ன கூப்பிர்ற?” வாப்பா உசுப்பியதில் உம்மா சுய நினைவிற்குள் விழுந்தா. உம்மாவின் அதரங்கள் உலர்ந்து வரண்டிருந்தன. முற்றத்தின் அமைதி குலைந்திற்று.

ஒரு பட்டியை அவிழ்த்து விட்டதைப்போல் மாடுகளின் மூச்சிரைப்பில் முற்றமே அவதிப்பட்டது. “அந்தா அவரு கூப்பிர்றாரு நான் போகனும்” உம்மா ஜன்னலின் பக்கம் பார்வையை வெறித்தபடி புலம்பத்தொடங்கினா. வாப்பாவுக்கு புரிந்து விட்டது. “அங்க யாருமில்ல நீ போய் உள்ள படு ” என்றார் காட்டமாக.

உம்மா உள்ளறைக்குள் தூங்கப்போனா. மண்னை அள்ளி வாசலில் யாரோ வீசிவிட்டுப்போனார்கள். வாப்பாவுக்கு தலைக்கு மேல் கோபம் எகிறியது. அவர் “உலவியம்” சொல்லித்திட்டியபடி டோர்ச்சின் ஒளியை பீச்சினார். யாருமே இல்லாத முற்றம் அச்சமூட்டியது. திங்கள் புதன் வௌளிகளில் அரங்கேறும் இந்த நாடகத்தின் உச்சத்திற்காக வீடு காத்திருந்தது.

மூன்று நாட்களிலும் திசையறியா காட்டில் சிக்கிக்கொண்டு தடுமாறும் சிறு பிள்ளைபோல் உம்மா பதகளித்துக்கொண்டிருப்பா. விழிகளில் தேங்கிக்கிடக்கும் கனிவு வௌளம் வற்றி, வெயில் உலர்த்திய ஏரியாக உம்மாவின் விழிகள் வெறிச்சென இருக்கும். பு+மரம் போல் மிருதுவான உம்மாவின் தேகம் இரும்புப்பாளமென கணத்துக்கிடக்கும். இந்நாட்களில் உம்மா மயங்கிச்சரிந்து விடுவா. கதவின் தாழ்ப்பாள் இறுக மூடப்படும் உம்மாவுக்கு பக்கத்தில் வாப்பா ஒரு மல் யுத்த வீரன் போல் காத்திருப்பார். அது ஒரு அமானு‘யமான கணங்கள். சற்றைக்கெல்லாம் கண் விழிக்கும் உம்மா கதவை நோக்கி தாவியோட எத்தனிப்பா. விழிகள் இரும்புக்கிராதிகளின் மேல் நிலை குத்தி நிற்கும். “என்ன வுடுடா என்ன வுடு” என்ற கர்ஜனையில் வீடே நடுங்கும். அப்படியொரு கடூரம். வாப்பா உம்மாவின் இடுப்பைச்சுற்றி வளைத்து சுவரில் கால்களை பதித்தபடி இறுக்கிப்பிடித்திருப்பார். திமிறிக்கொண்டிருக்கும் சிறுத்தையைப்போல் வாப்பாவின் பிடியில் உம்மா உறுமிக்கொண்டிருப்பா. ஆகிருதியான வாப்பால் மட்டுமே இதை அடக்கி பணிய வைக்க முடியும். வாப்பாவின் வியர்வை நெற்றியிலிருந்து தரையில் சிந்தும். அவரின் புஜங்கள் புடைத்து நரம்புகள் வெடித்து விடுமோ என்ற அச்சம் மேவும். அவ்வளவு பலத்தையும் உம்மா சோதித்துக்கொண்டிருப்பா. மாமரம் தலை விரி கோலத்துடன் சிலுசிலுவென ஆடும். முற்றத்தில் மிருகத்தின் மூர்க்கம் மிகுந்த பேரிரைச்சலுடன் காதில் அறையும். மயிர்கள் குத்திட்டு நிற்க அச்சம் கவ்விய நெஞ்சுடன் வாப்புப்பாவின் மேல் குவிந்திருக்கும் சின்னஞ்சிறுசுகளின் தலையை அவர் ஆதுரமாய் தடவி விட்டபடி உம்மாவையும் வாப்பாவையும் பாடத்துக்கொண்டிருப்பார்.

“நாசமத்த தூத்தேறி எங்கட சீதேவியப்படுத்துறபாடு. இவவுல இனி என்ன இரிக்கி, விட்டுப்போட்டு போவன்டா சைத்தான்” உம்மாவில் கண் பதித்து சலிப்புடன் கத்துவார்.

ஏன் வாப்புப்பா உம்மா இப்புடி உறுமுறா ?: பிள்ளைகளின் கேள்வி அந்தரத்தில் நிற்கும். வாப்புப்பா இரும்புக்கிராதிளை வெறித்தபடி பெரு மூச்செறிவார். உம்மாவின் சீற்றம் அரை மணி நேரத்திற்குள் அடங்கி விடும். மயக்கம் தெளிந்து கண் விழித்ததும் தண்ணி என்பா அடிக்குரலில்.

அது ஓரு கரடு முரடாண ஆணின் குரலை நிகர்த்தது. சிறு குவளைத்தண்ணீரைத்தானும் ஒரே மூச்சில் குடித்துவிட இயலாத உம்மா பெரிய அண்டாவில் வைக்கும் நீரை பசி கொண்மட மிருகம் போல் ஒரே மூச்சில் மடக்மடக்கென குடித்து முடிப்பா. தொப்பெண வெற்றுக்கோப்பையை தரையில் போட்ட மறு கணமே மயங்கிச்சரிவா. வாப்பா பிடியைத்தளர்த்தி பெரு மூச்செறிவார், கதவுகளைத்திறந்து விடுவார்.

சற்றைக்கெல்லாம் எதுவுமே நடவாதது போல் உம்மா எழுந்து கொண்டையை அள்ளி முடித்தபடி சமையலறைக்குள் நுழைவா. வாப்பா வாசற்படியில் குந்தியபடி வானத்தை அளந்து கொண்டிருப்பார்.

“ஏன்னடாம்பி இப்புடி எத்துன நாளக்கி மாயப்போறாய்.?

வாப்பாவின் முதுகில் வாப்புப்பாவின் கேள்வி விழுந்து சிதறும். பெரு மூச்சுடன் வாப்பாவின் குரல் உடைந்து சிதறும். “நான் என்ன செய்யிற வாப்பா, இது காட்டேறியாம் காட்டுல கொண்டு போய் ஏற்றிப்போட்டுத்தான் விடுமாம்”.

சாதுவான உம்மா எல்லோரையும் சாப்பிட அழைப்பா. அந்தக்குரலில்தான் எத்துனை பரிவும் குழைவும்.

இன்று உம்மாவை கதவண்டை அண்டவிடுவதில்லை என்பதில் வீடு உடன்பட்டிருந்தது, திண்ணையின் பிரதான வாயிலில் தலை வைத்தபடி வாப்பா ஒருக்களித்து படுத்திருந்தார்.

வாசற்கதவில் ஓங்கி அறையப்பட்டது வாப்பா திடுக்கிட்டு ஆரது என்றார்.

“நான்தான் இளய மாமி”

“ஓய் வாரன்” என்ற படி குரல் வந்த திக்கில் உம்மா பாய்ந்து வந்தா. வாப்பா ஒரு சாகசம் நிகழ்த்துபவரைப்போல் குறுக்கே பாய்ந்து சென்று கதவின் தாழ்ப்பாளில் கை பதித்து இறுகப்பற்றியபடி உம்மாவை உக்கிரமாகப் பார்த்தார்.

குப்பி லாம்பின் வெளிச்சத்தில் மாமி முற்றத்தில் நின்றிருந்தா. வௌளைப்பிடவையில் மாமியின் சாந்த சொரூபம் ஒளிப்பிழம்பாய் மின்னியது.

“என்ன மாமி இந்த நேரத்துல?” வாப்பா கதவைத்திறக்காமலேயே கேட்டார். “அவள் மூத்தவள்ர புள்ளக்கு சரியான வகுத்து வலி, புழுவப்போல துடிக்காள், கொஞ்சம் ஓமவட்டரு இருந்தா தாங்களன்”

“எங்க அந்தப்புள்ள? என்றா உம்மாவை நினைத்தபடி.

“அவ அந்தா உள்ளுக்க படுக்கா, நில்லுங்க மாமி தாரன்” என்றவர் ஓமத்திராவத்தை தேடியலைந்தார். மாமி முற்றத்தில் ஏகமாய் நின்றா. குப்பி லாம்பின் ஒளி வெளிச்சத்தில் மாமியின் முகம் பிளந்த வௌளரிப்பழம் போல் பளீரெனத்தெரிந்தது.

வாப்பா அடுக்களைக்குள் லாம்புடன் அலைந்தார். அங்குமிங்கும் சாமான்கள் ஒழுங்கின்றி சிதறிக்கிடந்தன. இன்றைய நாளின் பதற்றம் போல் சிம்னி விளக்கின் திரி முனை காற்றின் தாளத்திற்கு சதா ஆடிக்கொண்டிருந்தது. அடுக்களைக்குள் வைத்த சாமான்களைத்தேட உம்மாதான் வர வேண்டும். வாப்பா மருந்தை தேடிக்கொண்டே உம்மாவின் அறை நோக்கி குரல் வைத்ததார்.

சாப்பிட்டவுடன் சாய்மணக்கதிரையில் உடலைக்கிடத்திய வாப்புப்பாவின் குறட்டை ஒலி வீட்டின் மவுனத்தைக்கலைத்தது. அவர் காலடியில் தம்பியும் குட்டித்தங்கையும் குப்புறக்கிடந்து தூங்கிவிட்டிருந்தனர். வாப்பாவின் சலனம் மட்டும் அபூர்வ நிழலாய் ஆடித்திரிந்தது.

வாப்பாவின் குரலுக்கு உம்மா வரவேயில்லை. கை லாம்புடன் வாப்பா உம்மாவின் அறைக்குள் நுழைந்தார். வாப்பா பதகளிப்புடன் அடுத்த அறைக்குள் நுழைந்தார். வாப்பாவின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியா சிம்னி விளக்கின் இளஞ்சுடர் அணையப்போகிறேன் என வேறு அச்சுறுத்தியது.

“கொஞ்சம் நில்லுங்க மாமி” என்றவர் வாசலைப்பர்த்தார். அகலத்திறந்த கதவின் வழி முற்றம் இருளுக்குள் உறைந்திருந்தது.

05.10.2009
http://kaalammagazine.wordpress.com/2010/03/27/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D/

போரில் வெற்றி பெறல்

தனித்துக்கிடந்த முற்றத்தில்
காற்றெழுந்து அழுதது
உயிர்கள் முக்கும் கிணற்றினுள்ளிருந்து
சப்பாத்தொலியும் சிங்கள மணமும் எழுந்தன.

பல யெளவனத்திகளின்
வீர முழக்கத்தினிடை
மாமிசம் தின்று கொழுத்த பாழ் கிணற்றின்
பெரு மூச்சு வீதியெங்கும் கூவித்திரியும்.

சிறு பற்றை,குளம்,சேற்றுவயல்,பாழ்வீடு சகலதிலும்
சீருடையின் வீச்சமிருக்கும்.

குமரிகளின் முலையறுத்து
விதவையின் வீடுடைத்து, புணர்ந்த பின்
அவள் மகவையும் வீசியடிப்பாய் சுவர்கள் திணற.
சீருடையணிந்த சிட்டோன்றை வழிமறித்து கடித்துத்தின்று
மண் கெல்லி மறைத்த பின்னும், உன் சினமாறா
மணாளனை கட்டி வைத்து, அவனெதிரில் துணியை
ருசித்து
தேடியலையுமவர் சனத்தையும் நதி வயிற்றில் உருட்டி பின்
உன் போர் ஓயும்.

செய்தி
போரில் வெற்றி
படையினர் முன்னேற்றம்
ராஜ குமாரத்தி நீயொரு பெண் தானே?

எக்ஸில் - பிரான்ஸ்
2006-06-03


காணி நிலம் வேண்டும்

35 வருடமிருக்குமா? ஆம் அதை விடக்கூடினாலும் குறைவதற்கு வாய்ப்பில்லை.

தயாவதி டீச்சர் வாசலில் நின்றிருந்தா.முகத்தில் சுருக்கம் விழுந்திருந்தாலும் முகம் களையாகவே மின்னியது. இளமையில் அவவின் ''செத்துப்பல்" சிரிப்பில் மயங்காதவர் யாருண்டு. டீச்சரின் அந்தப்பல் விழாமல் இன்னும் வசீகரித்துக் கொண்டிருந்தது.

கிறவள் வீதிகளை "காபட்" சாலைகளாக மாற்றிக்கொண்டிருக்கிறது கிழக்கின் வசந்தம்.அது உருவாக்கிய புத்த விகாரைக்குள்ளிருந்து ஒலிக்கும் "பன" யில் "அபே ரட்ட" என்ற இறுமாப்பு கசிந்து காற்றில் மிதந்து கொண்டிருந்தது. பிரபாகரன் என்ற மாமையை கலைந்த பின் துளிர்க்கத் தொடங்கிய கிழக்கின் வசந்தத்தில் தயாவதி டீச்சர் போன்றோர் தனியாளாய் வந்து நின்று களை கட்டவும் பழைய இடத்தை தக்க வைக்கவும் இயலுமாயிருக்கிறது.

"ஆயுபோவன்" என்றேன்.
"ஆயுபோவன்" டீச்சரின் புருவங்கள் ஆச்சரியத்தில் நெரிந்தன. "கவுத"? என்றா.
"மம முபாரக்"
"என்னைத்தெரியுமா டீச்சர்"?
தடுமாற்றத்துடன் ''நே நே " என்றா. 'நான் உங்களுக்கிட்ட சிங்களம் படிச்ச டீச்சர்".
'எந்த ஸ்கூல்' ?
'ஓட்டமாவடி ஸ்கூல்'
'அப்ப நீங்க தாருட கிளாஸ் சொல்லிங்க, வயசு பெய்த்துதானே புதா, நினைப்பு வரமாட்டேன்'.
'லெக்ஸர் நாசர், பி.எச்.ஐ.நவ்சாத், பைசல் சேர், கைருன்னிஷா இஸ்ஸதீன்......
'ஒவ் ஒவ் இப்ப தெரியும்'.
டீச்சரின் விழிகள் தீபம் போல் ஒளிர்ந்தன. இதழ் விழிம்பில் மந்தகாசம் பிரவாகிக்க "வாடிவென்ட புதா" என்றா.
"எங்க முகமெல்லாம் பெரிசா டீச்சருக்கு நினைப்பிருக்காது." பீடிகை போட்டேன்.
"எய்"
"ஒங்களுக்கிட்ட படிச்சத விட சிங்கள பாடமென்றா புத்தகத்த தூக்கிட்டு முன்னிக்கிருந்த யாசீன் பாவாட தோட்டத்துக்குள்ள நாவல் பழம் பொறுக்கப்போனது தான் மிச்சம்."
டீச்சர் வாய் விட்டு சிரித்தா. ஆள கிறங்கடிக்கும் தெத்துப்பல், குழி விழும் கன்னங்கள். டீச்சரின் இதழ் கோடியில் பூத்த இள நகை வாடாமல் அப்படியே நின்றது.

85 க்குப்பின் டீச்சர் நாவலடியில் வாழ்ந்தது என் நினைவில் முட்டியது. நீண்டு வியாபித்திருந்த மரக்கறித்தோட்டம். வீதியோரக்கடை, கடை முன்றலில் படர்ந்திருக்கும் போகன்விலா.
புளியன்தீவுக்கு சரக்குகள் ஏற்றிக்கொண்டு வரும் லொறிகள் டீச்சரின் கடையில் தரித்து இளைப்பாறிப்போகும். ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனைப் பகுதியிலிருந்தெல்லாம் பெரிய நானாமார்கள் டீச்சரின் கடையருகே சைக்கிள் உலா வருவர்.

டீச்சரிடன் கல்வி கற்றவர்கள், டியூசன் எடுத்தவர்கள் எல்லோரும் வருவார்கள்.டீச்சரின் மேல் அவர்களுக்கு அலாதியான பிரியம். டீச்சரின் தோட்டத்துப்பசளிச்செடிகள் போல் வீட்டுக்குள் மதமதவென்று வளர்ந்து நிற்கும் இரண்டு பருவக்குட்டிகளுக்காகத்தான் அந்த போக்குவரத்து நிகழும் என்பதும் டீச்சருக்குத்தெரியும். பருவத்தின் விழிம்பில் பார்ப்போர் மனதை நுள்ளி எடுக்கும் கட்டுடல்காரிகள்.பிள்ளைகளில் டீச்சரின் விழிகள் கவனத்துடன் இருக்கும்.

"டீச்சர் எப்ப வந்தீங்க?"
நான் டீச்சரின் பழைய தோட்டத்தின் நுழைவாயிலில் நின்றபடி வினவினேன்.
"நாம வந்து மூனு நாள், கடய துப்பரவாக்கனும், பழைய காணிய திருப்பி எடுக்கணும்."

டீச்சரின் பழைய காணியில் முஸ்லிம் ஆக்கள் இருபத்தைந்து வருஷமாக குடியிருக்கிறார்கள். வீடு கட்டி, பிள்ளைப்பெற்று குடியும் குடித்தனமுமாக இருப்பவர்களை டீச்சர் எழுப்பி விட்டு காணியை எடுத்துக்கொள்ளப்போகின்றா என்ற நினைப்பே மனதில் தைத்துக்கொண்டிருந்தது.

நாவலடி என்ற கிராமத்தின் இருப்பை இதுவரை தக்கவைத்துக்கொண்டிருக்கும் இவர்கள் புலிகளின் நரவேட்டையிலிருந்து தப்பியவர்கள்.
ஓடியும் ஒழித்தும் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து மண் மீட்பு போரில் ஜெயித்தவர்கள். பள்ளியை ஆமி ஆக்கிரமித்து "கேம்" அமைக்கும் வரை உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்தவர்கள்.

பழம் உண்பதற்கு வந்து நிற்கும் பலரில் தயாவதி டீச்சரும் ஒருவர்.
"இப்ப என்ன செய்றீங்க " பொங்கி வந்த துக்கத்தை மென்ற படி கேட்டேன்.
" பென்ஷன் வருது புதா"
"அப்ப டீச்சருக்கு இஞ்ச இருக்கிற என்னமா?"

என் அடி மனசில் பல வர்ணக்கோலங்கள் சிதறி தாவியோடின. குன்றின் மேல் பட்டுத்தெறித்து குதித்துப்பாயும் நீரோடையின் தாளம் போல எண்ணங்களும் நிலையின்றி தத்தளித்தபடி............

அதை வடித்து எடுப்பது போல் டீச்சரின் குரல் எனக்குள் அதிர்ந்து அடங்கியது.
"இஞ்ச வந்து வந்து போகணும். இது நம்மட இடம் தானே!"
"நம்மட" என்பதில் டீச்சரின் "அபே ரட்ட" மிகைத்திருந்ததை கவனிக்கவே செய்தேன்.

டீச்சரின் கையால் வகை வகையாக உணவுகள் சாப்பிட்டிருக்கின்றோம். தோட்டத்தில் உட்கார வைத்து சோளகம் உடைத்து அவித்து தருவா. உப்பில் ஊறிய சோளகக்கதிரின் சுவை குட்டி நாக்கில் ஊறித்திளைத்து சலாம் போடும்.
கச்சான் விளையும் காலத்திலும் அப்படித்தான்.

அந்த தோட்டத்தை துவம்சம் செய்யும் சில பச்சைக்கிளிகள் குருவிகளுடன் எங்கள் குறும்புத்தனங்களும்..........

காருண்யம் கசியும் டீச்சரின் விழிகளை ஏறிட்டு அளக்கின்றன என் விழிகள். புத்தரின் மந்தகாசம் போல் சதா மினுங்கும் அந்த விழிகள் சாயம் போய் வெளுத்திருப்பதைப்போல சோர்வுற்றிருந்தது. கருமணிகளின் பின் மெளன வாளின் கூர்மை பதுங்கியிருப்பதைப்போன்ற பிரமை.

"சே என்ன இது டீச்சரைப்பற்றி இப்படியா மட்டமாக." மனம் அலுத்துக்கொள்ள, டீச்சரைப்பார்க்கிறேன்.
"புதா தே பொன்ட"
பனங்கருப்பட்டித்துண்டுடன் ஆவி பறக்கும் "கஹட்ட"யை நீட்டிய படி நிற்கும் டீச்சரின் வதனத்தில் மலர்ச்சிதான் தெரிந்தது. "பொஹமஸ்துதி" டீச்சர் என்றேன்.
என் அருகாமையில் அருகாமையில் அமர்ந்து கொண்டு டீச்சர் கதைதுக்கொண்டிருந்தா.............

ஒரு  மழைக்காலத்தின் மாலை நேரம் எனது தோட்டத்திற்கு செல்வதற்காக புறப்பட்டேன். மழையின் முத்தத்துடன் குளிர்ச்சியாய் வீசியது காற்று. மரங்களில் வந்தமர்ந்து குருவிகள் கீச்சிட்ட படி தானிய வயல்களை குறி வைத்திருந்தன.ஈரமும் சகதியுமாக பூமி ஏகத்துக்கும் சொதசொதத்தது. வழமையாக பாவிக்கும் கிறவள் வீதி, மழைக்கு இடிந்து சிதிலமாகிவிட்டது. குன்றும் குழியுமாய் காட்சி தரும். அதில் பயணிக்கவே முடியாது. மெயின் ரோட்டில் பைக்கை திருப்பினேன். இருபது வருடங்களுக்குப்பின்னர் பள்ளி வாசலை விடுவித்திருந்தது இராணுவம். நான் வயலுக்குப்போகும் தருணங்களில் ஒரு பிளேன்றி குடித்து இளைப்பாறிப்போகும் பெரிய மரங்களைக் காணவில்லை. தறிக்கப்பட்ட அடிக்குற்றிகளில் சில பெரியவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். லாலும் அங்கு தான் இருந்தான். டீச்சரின் தூரத்து உறவினன். பக்கத்துக்காணியில் மழைக்காலத்தின் சேனை செய்ய வந்திருப்பதாக டீச்சர் அன்று பேச்சு வாக்கில் சொன்னது நினைவில் முட்டியது. எனக்கும் ஒரு பிளேன்றி குடிக்க வேண்டும் போல் இருக்கிறது.
தறிக்கப்பட்ட மரக்குற்றி ஒன்றில் அமர்ந்து கொண்டேன். 
லால் என்னை அடையாளம் கண்டு கொண்டான். அவனே பிளேன்றி ஒன்றுக்கு ஓடர் கொடுத்தான். "ஆமிக்காரங்க உங்கட பள்ளிய தந்துட்டாங்க தானே. இனி ஒங்களுக்கு சந்தோஷம் இல்லியா? ஓம் லால் நாங்க நினைக்கவே இல்ல இது கிடக்கும் என்டு குரலில் மகிழ்ச்சி பொங்க கூவினேன்.

இப்ப சிவில் தானே. எல்லாம் சட்டப்படி நடக்கும். எங்கட ஆக்கள் இப்ப இருந்த காணி துண்டுகளுக்கெல்லாம் இப்ப "பேர்மிட்"  வந்திடுச்சி நாங்க வந்து பிசினெஸ் செய்ய நெனச்சி இருக்கோம். உங்கட சப்போர்ட் வேணும். லாளில் விழிகளில் இறைஞ்சுதல் மட்டுமல்ல அதையும் தாண்டி எதோ ஒன்று உறுத்துவத்தை கவனிக்கவே செய்தேன். சரி சரி லால் நீங்க வாங்களேன் பாப்போம் என்றேன் ஒப்புக்கு.

நினைவின் நுனியிலிருந்து உதிர்ந்து விழுந்த பல்லாயிரக்கணக்கான இலைகளில் டீச்சரும் லாலும் சருகுகளாகியிருந்தனர். மாதங்கள் உருண்டோடி விட்டன. டீச்சரின் காணியைச்சுற்றி அவவின் பிள்ளைகள் குடியேறி விட்டனர். மூத்தவளுக்கு இரு பிள்ளைகள். இளையவளுக்கோ மூன்று. அக்காவுக்கு முன் அவளின் திருமணம் நிகழ்ந்து விட்டது. காமன்ட்ஸ் வேலைக்கு தையல் வேலைக்கு போனவள் அங்கு மேற்ப்பார்வை செய்த சிறில் மல்லியை காதலித்து கரம் பிடித்தாள்.அக்கா அப்போதும் படித்துக்கொண்டும், மாலை நேர வகுப்புக்கும் போய்க்கொண்டிருந்தாள். 

தங்கை  இரண்டாவது பிரவசத்துக்கு வீட்டுக்கு வந்த போது அக்காளின் நிலை பரிதாபமாக இருந்தது. அங்கவீனமுற்ற இராணுவ வீரரின் மனைவி என்ற அனுதாபத்தை தவிர அவளால் வேறெதையும் பெற முடியவில்லை. இரு பிள்ளைகளையும் டீச்சரே கவனிப்பதாக அன்று பேச்சுவாக்கில் கூறியிருந்தா. அந்த அக்காவும் டீச்சரின் அயலான்டையில்தான் இருந்தாள். லாலும் மனைவியும் டீச்சரின் பெண் பிள்ளைகளும் மார்பு குளிங்கித்தழும்ப குளத்தில் நீராடுவதை ஆச்சரியத்துடனும், முகச்சுளிப்புடனும் பார்த்தார்கள். பின் அந்தக்காட்சிகள் கிராமத்தவர்களுக்கு இசைவாக்கமடைந்து விட்டது.

மாலை  நேரக்குளியலில் பாத்திமாக்களும் தங்கள் முதுகுப்பின் வழிய விட்ட கூந்தலை விரித்து நீரில் அலசிக்குளிக்கவும் வெயில் படாத மார்புகளை மஞ்சள் வெயிலில் காயப்போடவும் அவர்களுக்கு மனம் கூசவில்லை.இளவட்டங்கள் மாலை நேரத்தில் குளக்கட்டில் கூடியிருந்து பொழுதைப்போக்கவும், அரசியல் பேசவுமான சவுகரியங்களை காலம் நன்கொடையாக தந்து விட்டு வேடிக்கை பார்க்கின்ற அழகே தனி.

மாயாவதி டீச்சரும் நானும் பேசிக்கொள்வது அரிதாகிவிட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான மூத்தவளின் கிடைப்பதற்கரிய நட்புக்கு  முன் கற்றுத்தந்த டீச்சர் விதி விலக்கா?

இப்படித்தான்  ஒரு மாலை வந்தது. பொன்னிறக்கதிர்கள் மேய்ந்து திரிந்த கத்தரித்தோட்டத்தில் நீர் பாய்ச்சிய படி அவள் நின்றிருந்தாள். நான் மாமரத்தில் சாய்ந்த படி "என்ன பேசுகிறோம் என்ற இலக்கற்ற பேச்சு. எதற்கு சிரிக்கின்றோம் என்ற வகையறியாக்கும்மாளம். மன வயலில் முற்றிய நெற்கதிர்களின் வசமாக எண்கள் நட்பு கொத்துகொத்தாக".

செளந்தர்யா லாகிரியில் மிதக்கும் தருணங்களை வேட்டிச்சரித்த படி லால் வந்து நின்றான். என்னையும்அவளையும் இகழ்ச்சியுடன் பார்த்தவானின் முகம் இறுகிக்கிடந்தது. வலிந்து ஒரு புன்னகையை இழுத்து என்னில் வீசினான். அவள் ஒப்புக்கு மண்ணை மண் வெட்டியால் கிளறிக்கொண்டிருந்தாள்.

"ஒங்கள உதய மாத்தயா வரச்சொன்ன, இப்ப அவசரமா ஒரு மீட்டிங் போட்ரிக்கி லால் தகவலை சொல்லி விட்டு அவளை முறைத்து விட்டு சென்றான். என்னுடன் அவள் நட்பாய் இருப்பதில் கடுப்பாக இருந்தவர்களில் லாலுக்கு முதலிடம் கொடுக்கலாம்.
நான்  விடை பெரும் போது அவள் இடுப்புத்துண்டை அவிழ்த்து தலையைத்துடைத்த படி நாளை சந்திப்பம் என்றாள். ஏகத்துக்கும் பயிர்கள் நிறைந்த பூமி குளிர்ச்சியாக இருந்தது.

அறிமுகமானவன்என்பதால் என்னை யாரும் "செக்" பண்ணவில்லை. இராணுவ முகாம்களைச் சுற்றி போடப்பட்ட முள் வேலிகள் அகற்றப்பட்டு முட்கம்பிகள் மூளைக்கு மூலை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காப்பரண்கள் அகற்றப்பட்ட மண் திட்டுக்களில் சாவகாசமாக அமர்ந்து கொண்டு சிப்பாய்கள் அரட்டையடித்துக்கொண்டிருந்தனர். 

உதய மாத்தையாவின் அறையில் நான்கு  கதிரைகள் இருந்தன. என்னை மட்டும் ஒரு இருக்கை காத்துக்கிடந்தது. ஒன்றில் பள்ளித்தலைவரும், மற்றதில் லாலும், இன்னுமொன்றில் ஆர்.டி.எஸ். செயலாளரும் அமர்ந்திருந்தனர். குட்ஈவினிங்  சேர் என்றேன்.
குட்ஈவினிங் டேக் யுவர் சீட் என்றார்.தேங்க யூ சேர்.
அவர் வழக்கம் போல பீடிகையுடன் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசப்பேச அதன் உள்ளிருக்கும் மர்ம முடிச்சுக்கள் அவிழத்தொடங்கின. அவர் விஷம் பொதிந்த மையப்புள்ளியில் இருத்தி எம்மை சிக்க வைக்கப்போகிறார் என்ற மூட்டம் கலையத்தொடங்கியது.
 
உடன் இருந்தவர்களுக்கும் லேசாக புரிய ஆரம்பித்திருக்க வேண்டும். முகங்களில் செழுமை நீங்கி அவர்கள் தலை கவிழ்ந்திருந்தனர்.
இந்த மண்ணின் எதிர் காலம் குறித்த அச்சம் பிரமாண்டமாய் என் முன்  விரிந்து சென்றது.

எமது மெளனங்களை அவர் அங்கீகாரம் என்பதை நினத்துப் பேசிக்கொண்டிருந்தார். ஒழிந்திருக்கும் மரணக்கரங்களுக்கு அஞ்சி நாங்கள் மரண தண்டனைக்கைதிகளாய்  மின்சார இருக்கைகளில் அமர்ந்த படி எங்கள்  வினாடிகளை கணக்கிட்டுக்கொண்டிருந்தோம் . 

சுருக்கம் இது தான்:
இந்த இராணுவ முகாம் இருபது வருடங்களாய் இயங்கிக்கொண்டிருக்கின்றது. புலிகளிடமிருந்து இந்தக்கிராமத்தை நாங்கள் பாதுகாத்திருக்கின்றோம். இப்போது சிவில் வந்து விட்டது. இந்த இடம் போது மக்களின் காணிகள் இதை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற அழுத்தம் வந்து விட்டது.

நாங்கள் இஞ்ச இருந்த போது மத நம்பிக்கை தான் எங்களை வாழ வைத்தது. உங்கட பள்ளியக்கூட ஆயுதக்கிடங்கா பாவித்தோம் இப்ப நீங்க  அதுல வணக்கம் செய்றீங்க. நாங்க ஒரு அரச மரம் நாட்டி வளர்த்து புத்தரை அதன் அடியில வத்திருக்கம். இருபது வருஷமாக எங்கட மனதுக்கு  நம்பிக்கையும்,  சாந்தமும் தந்த புத்த பகவான். சக வீரர்களின் சாவுகளை பார்த்துப்பார்த்து மனம் நொந்து போன புத்தர். அங்கங்களை இழந்து இரத்தக்காயங்களுடன் கதறிக்கொண்டு வந்த வீரர்களை அவர் முன் கிடத்தி சிகிச்சை அளித்த போதும்,  மந்தகாசப்புன்னகையில் ஆறுதல் படுத்திய பெருமான்.

இந்தக்காணி உங்கட ஆக்கள்ர காணி. அவங்கட காணியில அவங்க இருக்கிற உரிமை இருக்கு. என்றாலும் நாங்க இந்த இடத்தை விட்டுப்போனதுக்குப் பொறகு எங்கட புத்தரையும், அரச மரத்தையும் என்ன செய்வீங்க............??????
2010.02.15

Saturday 7 August 2010

உயிரறுந்தவனின் கவிதை

மூசாப்பு மூடிய மனத்திலிருந்து
துக்கவிதை வீசிற்று
தூர்ந்து விட்ட உயிரின் சிறகசைப்பில்
துயரம் குமட்டும் தேச நிகழ்வில்
ஒரு சொட்டுப்போல வாழ்வு துளிர்த்தது.

குமையுமிந்த கனவுத்திடலில்
நீர்க்காகமென வாழ்வின் தலை
மரணக்குளத்தில் எகிறி வந்து அச்சமூட்டும்.
பச்சோந்திகளின் தேசமிது
காற்றுலவாத
அறையினுள் தினம் சிறைபட்டு போகிறதெம்
விடுதலை.
சவர்க்கார குமிழியென
ஒரு கணப்பொழுதின் வர்ணமுட்டையாய்
இன்றின் பகற்பொழுதில்
சிரித்துலாவிய வசந்தம்
இரவில் மட்டுமிங்கு மரணத்தை போர்த்திற்று.

மூளையின் தகிப்பில்
உருகிற்று என் விழிகள்
வெண்ணுடுக்களுதிர்ந்த சாமமொன்றில்
என்னிமைக்கூண்டில் சிறைப்பட்டன கனவுகள்.
பின்னவும் நான் பார்த்திருக்க உயிரறுந்த
பல உடல்கள் ஸுஜுதில் கிடந்தன பள்ளியில்.

மூசாப்பு மூடிய மனத்திலிருந்து
அப்பள்ளியில் படித்த துர்க்கவிதை
இன்னும் தான் மூக்கில் கரைகிறது.
எதையும் மறப்பதற்கில்லை நண்பனே
இந்த அகதிக்குடில் எரியுமட்டும்.

சரிநிகர் 2000-03-27

Wednesday 4 August 2010

மரணக்கரங்கள்

உனக்கென்ன
சட்டமியற்ற கைகள் உயர்த்துவாய்
இருக்கின்ற சட்டங்களோ இருக்கமாயுள்ள
இக்கனத்தில்,
இன்னுமின்னும் குரல்வளையை நெரிக்கும்
உன் கைதூக்கல்.

நீ-வியர்க்காமல் பயணிக்க
குளிர் ஊர்தியுண்டு
வானிலும் பறந்தேகுவாய்
தங்குமிடம்,வாகனம்,பெட்ரோல்,டெலிபோன்,
போனேசசென
உன் பை நிரம்பும் எம் வரிப்பணத்தில்.

உன் மெய் காக்க படையுண்டு
ஏவலரும் இன்னும் சில அடியாலும்
உனக்குண்டு
உன் குழந்தைகளோ கடல் தாண்டி அறிவுண்ணும்

உனக்கென்ன குறையுண்டு தலைவா
இரவிரவாய் விலையுர
நீ உயர்த்தும் கைகள்
உனக்கு வாக்குப்போட்ட
எம் கழுத்தையல்லோ நெரிக்கிறது.


2000-05-05 யாத்ரா-2001

Tuesday 3 August 2010

துண்டிக்கப்பட்டவனின் சாபம்.

தடித்த குரலுயர்த்திப்பேசிலேன்
பிறர் அஞ்சுதற்குறிய
கொடூரனுமல்ல நான்.
எனினும்
நாடு நிசியில்
வஞ்சித்தென்
கழுத்தை எனறுத்தீர்.?

என் துவிச்சக்கரவண்டியே
சந்தூக்கானது.
முன்னர் எரித்தவரின்
அபயக்குரல் அடங்கு முன்
என் கழுத்தை
எனறுத்தீர் சொல்லுங்கள்.

பொங்கலுக்கா பலி எடுத்தீர்
ஈழத்தர்ச்சணைக்கா எனை எடுத்தீர்.?
கத்தியை செருகி என்
பிடரியை அறுக்கையில்
கதறிய என் ஓலத்தை
தேசிய கீதமாக்கவா
திட்டமிட்டீர்.?

அறுபத்தைந்து வருஷங்கள்
வாழ்ந்தவொரு கிழவன் நான்
ஒரு கோழியைக்கூட
திருகத்தெரியா வயோதிபனை
கதறக்கதற அறுத்தனையோ
வீரர்காள்.?

இளம்பிறையை எரித்துண்ட
கல்மடுக்கிராமமே
இனி உன்னில் யுகாந்திரமாய்
அலையுமென் அபயக்குரல்.

அது உன் பிச்சலத்தின் ஆணிவேரை
உசுப்புமொரு நாள்.
அப்போதுணர்வாய்
துண்டிக்கப்படுகையில்
என் வலியை!

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...