Tuesday 21 February 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

 
 தொடர் -08

தோட்டத்திற்கு முன்னால் பெரிய ஆட்டுப்பட்டி.
இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட செம்மறியாடுகள். அடர்ந்த உரோமங்கள்,சதா துக்கம் நிறைந்த கண்களுடன் பூமியை உற்று நோக்கிய படி அந்த ஆடுகள் தனித் தனியே பிரிந்துதான் படு சுறுசுறுப்பாக மேய்ச்சலுக்குச்செல்லும்.

அவை எம்.கே. ஹாஜியாரின் பட்டி. அவரின் பூர்வீகம் இந்தியா.ஆடுகளை கவனிப்பதற்கென நிரந்தரமாக இரண்டு குடும்பங்கள் குடிசைபோட்டிருந்தன. ஹாஜியார் வாரமொரு முறை வியாழக்கிழமைகளில் வருவார்.

முகடு திறந்த ஜீப் வண்டி புழுதியை இரைத்தபடி கடை முன்றலில்தான் தரித்து நிற்கும்.வாப்புப்பாவிடம் அவருக்கு கொள்ளைப்பிரியம் இரண்டு பேரும் சிரித்தபடி ஆடுகளைப்பார்க்க கிளம்பிப்போவார்கள். அவரின் ஜீப்புக்கள் தொழுவதற்கான முசல்லா, தண்ணீர் பாய் உட்பட அனைத்தும் இருக்கும்.
 
ஹாஜியார் சென்ற பின்பும் ஓரிரு நாட்கள் அவர் விட்டுப்போன ஜன்னதுல் பிர்தவ்ஸின் நறுமணம் புளிய மரத்தைச்சூழவும் கமகமக்கும்.

சற்று தொலைவில்  பரந்து கிடக்கும் வயல் வெளி. வயலையும் குளத்தையும் பிரிக்குமாற் போல் இராட்சத பாம்பாய் படர்ந்து நீளும் குளக்கட்டு. வயலைத்தாண்டி விழுந்தால் மாந்துரை ஆறு.

எங்கள் அடுப்படியில் எப்போது உலை கண் மூடும் என்று தெரியாது.புசுபுசுவென்று அடுப்பெரிந்து கொண்டே இருக்கும். சதா ஆக்கி கொட்டுவதற்கு அக்காமார்கள். பாக்கியம்,திரவியம், ராசாத்தி. நீங்கள் எங்கிருக்கின்றீர்கள் என்ன ஆயிற்று உங்கள் அந்திமம்.
 இது வரை தெரியாது.

தங்கைகள் இருவரும் வாகநேரி தமிழ் கலவன் பாடசாலையில் படிக்க போவார்கள். நான்கு மைல் தெலைவு. நடந்து போய் மறுபடியும் நடந்தே வருவார்கள். சைக்கிளில் வரும் தெரிந்தவர்கள் ஏறச்சொன்னாலும் ஏறிவரவேமாட்டார்கள். நடப்பதில் அப்படி ஒரு சுகம் அவர்களுக்கு. 
 
'மில்க்போர்ட்' சந்தி வரை கலகலவென்று வெண்புறாக்கூட்டம் கலைவதைப்போல் மற்றப்பிள்ளைகள் விடைபெற அவர்கள் மட்டும் மீதியிருக்கும் ஒரு மைல் தூரத்தை தனித்து நடந்து வந்து விடுவார்கள்.

இருந்தாற்போல அவர்களுக்கும் சைக்கிள் சவாரி வாய்த்து விடும்.ஊரிலிருந்து வரும் சாச்சாமார்களின் சைக்களின் முன்னே ஒருவரும் பின் கரியறில் ஒருவருமாக கலகலப்பாக வந்து இறங்கியவுடன் உம்மாவின் நக்கல் வந்து வாசலில் விழும்.  
 
“ என்னடி குளக்கட்டு நாளக்கு உங்கள கோவிக்காதாக்கும்..”

அந்தப்பாடசாலையில்தான் எனது மாமிமார்களும் சாச்சாமார்களும் படித்ததாக வாப்புப்பா சொல்வார்.

வாப்புப்பாவின் கடைக்கு வன்னியனார் கடை என்றால் பிரசித்தம். புளியமரத்தடிக்கடை என்பது பின்னாளில் மருவிற்று, கடை என்றால் கிராமத்திற்குரிய அசல். அகன்ற புளியமரம், கடைக்கு முன்னால் குரல் நீட்டி முழங்கும் ரோடியோ. ஒரு சோகேஸ்.

அதற்குள் கொஞ்சூண்டு தயிர் வடை, போலை, பாலப்பம், வண்டப்பம், லெவரியா (கோழிஅப்பம்) கவண்ரொட்டி,தட்டு ரொட்டி.உம்மாவினதும் வாப்பாவினதும் கைவண்ணத்தில் தயாராரிக்கப்பட்ட பண்டங்கள்.

சில தட்டுகளில் பியான் ரோல்,பனிஸ், அட்டக்கேக், யானக்கத்தா,ரோஸ்பான், வட்டர்,கட்டப்பான் (ஆட்டுக்கால்) கொழும்பு வட்டர் பான் வகையறாக்கள்.

கடை பென்ஜில் எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். யாழ்ப்பானத்து பாணிச்சுருட்டும்,பீடியும் வாயில் இருக்க தம்பி,பிரபாகரனிதும்,ஜே.ஆரினதும் அரசியல் சாணக்கியங்கள் பற்றிய கதைகள் சூடுபறக்கும். வாப்பா டீ ஆற்றுவதில் ஒரு கண்ணும் ‘சோகோசி’ல் ஒரு கண்ணுமாய் இருப்பார்.

இரண்டை விழுங்கி விட்டு ஒன்றுக்கு கணக்கு விடுபர்கள் கையும் களவுமாக அவரிடம் கடன் பட்டு சொல்லி கழன்ற கதைகளும் முன் பென்ஜில் இருப்பவர்களால் ஹாஷ்யமாக சொல்லப்படும். கொல்லென்ற சிரிப்பினிடை எட்டி நின்று மேயும்  அவிழ்த்து விடப்பட்ட காளைகளின் கழுத்து மணிஓசையும் சேர்ந்து கொள்ளும்.

பட்டிதொட்டியெல்லாம் பால் சேகரிப்பவர்கள்,மீன்வியாபாரிகள்,புல் அறுக்கச்செல்பவர்கள்.கீரை அறுக்கும் கூட்டம்,கரை வலை வீசுபவர்கள் என்ற அடிமட்ட தொழிலாளியும், போடிமாரும் ஒன்றாய் கலப்பதற்கும் கதைப்பதற்கும் புளியமரத்தடிக்கடை வாகாக இருந்ததது.

வாப்புப்பாவின் ஹாஷ்யத்திற்காக அவர் வாயைக் கிளறிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் அதிகம். இன்சிப்பிளேன்றியுடன் லெவரியாவைக்கடிக்கும் போடிமார் மட்டும் வெற்றிலை வட்டுவத்தை உருவி விட்டபடி இருப்பர்.

அதற்குள் பாக்கு சீவல், சுண்ணாம்பு டப்பா, ஏலக்காய்,சாதிக்காய்,கராம்பு, வெற்றிலை,புகையிலைத்துண்டுகள்.கையிப்பு.

 கையிப்புத்தகட்டுக்குப்பெயர் போன இடம் ஏறாவூர், வட்டுவத்திற்குள் அறையாகப்பிரித்து இவைகளை போடிமாரின் பெண்டிர் அடுக்கி வைத்திருப்பவர். சுற்று மெதுவாக மெல்ல சின்ன உரலும் துவைப்பதற்கு ஆணியும் இருக்கும்.

 பாக்குச்சீவலை உரலுக்குள் இட்டு, வாசனைப்பொருட்களையும் இட்டு துவைக்கும் ஓசையுடன் ஊர் வம்பும் பசைபோல் அரைபடும்.

எங்கள் கடைக்கு முன் எப்போதும் ‘தீனா’(தீக்கிடங்கு) எரிந்து கொண்டிருக்கும்.பச்சை மரங்களை வெட்டிப்போட ஆட்கள் இருந்தார்கள்.

மஃரிபு நேரத்தில் ஊரிலிருந்து வரும் மாட்டு வண்டிகள் இங்கு தரித்து விடும். கரத்தைகளின் கீழ் தொங்கும் லாந்தரின் மினுக்கம் கண் சிமிட்டி வாவென்று அழைப்பது போன்றிருக்கும். 
 
வால் வண்டிலில் ஒரு சாக்குப்பை கட்டப்பட்டிருக்கும். அதற்குள் கத்தி மண் வெட்டி உள்ளிட்ட சட்டி பானைகளும் அடக்கம்.

 யானைகளுக்குப் பயந்து வண்டில்காரர்கள் புளியமரத்தடியில் குவிக்கப்பட்டிருக்கும் ஆற்று மணலில் படுத்துக்கொள்வார்கள்.

தீனாவைச்சுற்றி மாடுகள் நுளம்புகளை விசுக்விசுக்கென வாலால் விரட்டியபடி அசைபோட்டு நிற்கும். இந்த மாடுகளுக்கு நல்ல ஞாபக சக்தி.

 வண்டி ஓட்டிக்கொண்டு வருபவர்கள் கண் மூடிப்படுத்தாலும் வழக்கம் போல் தரித்து நிற்கும் கடைகளில் மாடுகள் சற்று இளைப்பாற நிற்கும். யாராவது தட்டி எழுப்பினால் உண்டு. இல்லாவிட்டால் என்ன தேனீர் குடித்து மீளவும் ஏறும் நாழிகை அதற்கு அத்துப்படி.வண்டிக்காரன் எழும்பாவிட்டால் அரை மணி நேரத்திற்குள் காளைகள் நடையைக்கட்டும்.

இடையில் சக வண்டில்களுக்கும்,ஏனைய பிரயாணிகளுக்கும் வழிவிட்டபடி ஐந்தறிவு ஜீவன்களின் பயணங்கள் தொடரும். செக்கலுக்குப்பின் வண்டியோட்டிகள் தூங்கவேமாட்டார்கள்.

 வனப்பாதையில் மாடுகள் நேரே பழகிய  பாதையில் சென்று விடும். யானைகளின் தொல்லைகள் அதிகம் என்பதால் புளியமரத்தடி கடை வரை விழித்துக்கொண்டு வருவர்.லாந்தரின் திரி கீழிறங்கும்.

பனியை ஊடறுத்து புகைச்சுருள்கள் மேலேகும். இடையிடையே வண்டிக்காரர்கள் எழுந்து சுருட்டை பற்ற வைத்து இழுத்தபடி தீயைச்சுற்றி அமர்ந்திருப்பர்.உள்ளங்கைகளை ஜ்வாலையில் காட்டி முகத்தில் தடவிவிட்டபடி சாமத்திலும் சிரிப்பும் கேலியும் கடையைச்சூழவும் ஒளி வட்டமாய் பிரகாசிக்கும்.
வாப்புப்பா பெரிய தும்பட்டியால் தன்னை மூடிச்சுற்றிக்கொண்டு பிளேன்றியுடன் வந்து விடும் தருணங்கள் மகா அற்புதமானவை. நெருப்புக்கங்குகள் திகுதிகுவென எரியத்தொடங்கும்.

எங்கள் தேசம் - 215
ஊஞ்சல் இன்னும் ஆடும்.....

Saturday 18 February 2012

சிறுகதை: மண் புழு

மாலையில் பள்ளிக்கூடம் விட,வீட்டுக்குள் நுழைந்தான் தம்பி.
‘டைகர்’ வாலைச்சுருட்டி கவட்டுக்குள் நுழைத்துக்கொண்டு முற்றத்தில் படுத்திருந்தது.முற்றத்து முகப்பில் வரவேற்புக்கு அமர்த்தி வைத்த ‘சைனா பொம்மை’ போல் முன்னங்காலில் மேவாயைத்தேய்த்தபடி மிகுந்த அவதானத்துடன் அதன் விழிகள் படலையின் முகப்பில்  பதிந்திருந்தன. அது படுத்திருக்கும் தோரணை தம்பிக்கு பிடித்திருந்தது.

 வானம் தலை சிலுப்பி நட்ஷத்திரங்கள் உதிர்ந்து கிடப்பதைப்போல் கச்சான் காற்றின் உக்கிரத்தில் முருங்கைப்பூக்கள் வாசலெங்கும் தூவிக்கிடந்தன. கச்சான் காற்றை கீதா டீச்சர் திட்டிக்கொண்டு போனதை தம்பி நினைத்துப்பார்த்தான். அவவின் குட்டைப்பாவாடையை சந்தியில் நின்றவர்களின் விழிகளுக்கு தூக்கி காட்டி விருந்தாக்கியதில் அவவுக்கு காற்றின் மேல் கடுப்பாய் இருந்தது.


வீடு மௌனத்துள் புதைந்திருந்தது. தம்பி முன் கதவில் கை பதித்தான். மெல்லிய முனகலுடன் அது வழிவிட்டது. மாலையிருள் விறாந்தையின் முகத்தில் முகப்பூச்சுப்புவுடராய் அப்பிக்கிடந்தது.

‘ ராத்தா……………… ராத்தோய்........

 ராத்தாவின் சிலமனில்லை. மாமரத்தில் சைக்கிள் சாத்தியிருந்தது. ‘டபிள் போக்கு’கள் பொருத்திய பழைய ‘ரெலி’ சைக்கிள். முன் ' ரிம்'  மட்டும் சற்று மட்கிப்போய்  தெரிந்தது.மச்சானின் சைக்கிள் போலவுமிருந்தது.

‘ராத்தா எங்கரிக்காய் ?’

தம்பி  சத்தம் வைத்தபடி வீடு முழுக்க சுற்றி வந்தான்.

உள்ளறையில் கட்டில் கிரீச்சிடும் சத்தம். ராத்தா படுத்து எழும்புறா போல.. தம்பி குர்ஆனை மேசையில் கிடாசி விட்டு தொப்பியைக்கழற்றி ஆணியில் கொழுவினான். உள்ளே தாழ்ப்பாள் விலகியது.

 ராத்தாவின் விழிகள் தூக்கம் கலையாத மயக்கத்தில் மிதந்தன.சேலையை தாறுமாறாக சுற்றியிருந்தா அது நழுவி நழுவி தரையில் விழுந்து சரிய தூக்கிப்பிடித்து மார்புகளை மறைத்துக்கொண்டா. “சே என்ன இவ சட்டை போடாம சேலை மட்டும் சுத்தியிருக்கா ,நித்திர வந்தா ஒன்டும் விளங்காது போல ’. 
 
தம்பி மனசுக்குள் கறுவிக்கொண்டான். செழுமையான மார்புகளின் மத்தியில் தலை புதைத்து ராத்தாவிடம் ஒண்டிக்கொண்டு தூங்குவதை  நினைத்துக்கொண்டான்.

‘என்னடாம்பி?’

அவவின் குரல் கிறக்கத்தில் ததும்பியது.

‘நான் விளயாடப்போறன்.’என்றான்.

‘சரிடா மகுரிபுக்குள்ள  வந்திடு:’

‘தம்பியிரிக்கான் விடுங்களன்’

சிணுங்கியபடி ராத்தா கதவை தாழிடுவதை தம்பி காதில் போட்டபடி பறந்தான்.


குறி பார்த்துப் பாய்வதற்கு எத்தனிக்கும் பூனைப்போல் பதுங்கிக்கொண்டு  ராத்தா முற்றத்தில் நின்றா.தெருவில் சனத்திரள் வடிந்து கொண்டிருந்தது.  அவள் விழிகள் தெருவில் அங்குமிங்கும் அலைந்து திரிந்தன. பழைய ரெலி சைக்கிள் படலையைத்தாண்டவும்  தம்பி கிறவல் ஒழுங்கையால் காரோட்டியபடி வீட்டுக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

சைக்கிளில் முட்டிய தம்பி  ஆளைப்பார்க்காமலே சரேலென பிறேக் போட்டு நிமிர்ந்து பார்த்தான். அந்தியில் மாமரத்தில் சாத்தியிருந்த சைக்கிளில்தான் முட்டியதை தம்பி நினைத்தபடி ஒரு பீப் போட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

ராத்தா கிணற்றடியில் குளித்து விட்டு தலையை துவாயால் சுற்றியபடி வந்தா.

“என்னடாம்பி விளயாடினியா ? என்ன நேரத்தோட வந்திட்டாய்?”என்றா.

ராத்தாவின் கண்கள் கன்றிச்சிவந்து கதீஜா மாமி வீட்டு ஜே ம் பழம் போலிருந்தது. ஜன்னல்களை சாத்தி கொளுக்கி போட்டா.ஏழு மணிக்கெல்லாம் ஜன்னல்களை சாத்திவிட வேண்டும் என்ற வாப்பாவின் கட்டளை அரங்கேறிக்கொண்டிருந்தது. அவர் இஷாவுக்கு பாங்கு சொல்ல வீட்டுக்குள் வந்து விடுவார்.

மச்சான் புகையிலை வாடிக்கு சாமான் கட்டிக்கொண்டு ஓரு மாதத்திற்கு முன்தான் கெக்கிராவைக்குப்போனார்.தம்பிதான் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் பேக்கைத் தூக்கிக்கொண்டு போனான்.

ராத்தா மச்சானிடம்  பேசவில்லை. “போய்ட்டு வாரன் புள்ள” .வாசற்படியில் நின்று மச்சான் குரல் கொடுத்த போதும் ராத்தா வெளியே வந்து அவரை வழி அனுப்பவில்லை. மச்சான் காத்திருந்து விட்டு நடையைக்கட்டினார். இவன் பின்னால் இழுபட்டு ஓடினான்.

மச்சானின் சுருட்டுப்புகை வயிற்றைக் குமட்டும். கரிக் கோச்சி போவதை போல் மச்சான் தெரு முழுக்க புகையை ஊதி விட்டபடி பஸ்சுக்கு காத்து நிற்பார்.அவரின் காவி படிந்த பற்களும் வெற்றிலை மென்று துப்பிய வாயும் பார்ப்பதற்கு வயிற்றைப்பிசையும். இன்று மாலையில் முற்றத்தில்  பார்த்த ‘ரெலி’  சைக்கிள்காரரை  நினைத்து தம்பி மனசுக்கள் அழகுபார்த்தான்.

வாப்பா சைக்கிளை தள்ளியடி வீட்டுக்குள் நுழைந்தார். ராத்தா அடுப்படியில் வேலையாக இருந்தா. அவவின் கூந்தலிருந்து  வடிந்த நீர் சொட்டுக்கள் திண்ணை முழுக்க கோலம் போட்டிருந்தன.முதுகும் பின்பகுதியும் ஈரத்தில் தகதகத்தன. நெருப்பின் நிழல் ராத்தாவின் முகத்தில் படிந்திருந்து.அவவின் முகம் தக்காளிப்பழம் போல் கனிந்திருந்தது.கள்ளச்சிரிப்புடன் புகைக்குள் ராத்தா பழுத்திருந்தா.

ராத்தா எவ்வளவு அழகு.தம்பி மனசுக்குள் ஓதியபடி  ராத்தாவின் கட்டிலில் போய் குப்புறப்படுத்தான்.சிகரெட்டின் வாசம் அறை முழுக்க கவிந்திருந்தது. தம்பி மூக்கைப்பிடித்து அதை இழுத்துப்பார்த்தான். இதமாக இருந்தது.

விழிகளை கசக்கியபடி ராத்தா வேகமாக அறைக்குள் நுழைந்தா.கையில் ஒரு பேப்பர் துண்டுமிருந்தது.கட்டிலின் அடியில் எறும்புகள் மொய்க்கத்
தொடங்கிய அதை  விரலால் நுள்ளி எடுத்து பேப்பரில் அள்ளிப்போட்டா. பரபரப்புடன் கொல்லைப்பக்கம் ஓடினா.  ஓடிய வேகத்தில் ஒரு சொட்டு தரையில் ஒழுகியது. தம்பி கால் பெரு விரலால் தேய்த்துப்பார்த்தான்.கிழிந்த போன புத்தகத்தை ஒட்டுவதற்கு காதர் ஸேர் பீச்சித்தரும்  'அற்லஸ் 'பசை போலிருந்தது.

‘என்ன ராத்தோய் இது ‘ ? 

தம்பியின் உதடுகள் அருவருப்பாய் நெளிந்தன.ராத்தாவின் முகம் மஞ்சளித்துக்கனிந்ததை தம்பி முன்னெப்பேதும் கண்டதே இல்லை. புன்னகையின் ஈரம் சொட்டச்சொட்ட ராத்தாவின் அதரங்கள் துடித்தன.

‘அது மண் புழுவின்ர எச்சம்டா’என்றா. தம்பி எதுவும் புரியாமல் பேவென விழித்துக்கொண்டிருந்தான். 
 
தம்பின் பிருஷ்டத்தில் ராத்தா செல்லமாகத்தட்டினா. ஓர விழிகளால் அவனைப் பார்த்தா. அவவின் விழிகளுள் ஓராயிரம் மின்மினிகள் சிறகடிப்பதை அவன் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

30.09.09

Tuesday 7 February 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

எங்கள் தேசம் பத்திரிகையில் தொடராக வெளிவரும் நினைவுக்குறிப்புகள் 
 
தொடர் -07

பின்பும் இரண்டொரு தரம் கனவில் வரும் பாம்புகள் நிஜத்திலும் என் முன்தோன்றி ஆச்சரியப்படுத்தியதுண்டு. கனவில் பாம்புகள் தோன்றி மறைந்த  இடத்தை நான் எப்போதாவது கடந்து போகும் தருணத்தில் அதே பாம்புகள் என்னை ஊடறுத்துச் சென்ற தருணங்கள் அதிகம். எனக்குள் தெறிக்கும் படைப்பார்வம் மெதுவாக அவைகளின் பின் ஊர்ந்து கொண்டே செல்லும்.

"ஏவாளின் தோட்டத்தில் கனிகள் இன்னும் மிச்சமிருக்கின்றன" என்ற எனது சிறுகதையில் வரும் பாம்பின் வர்ணிப்பும் பாம்பு பற்றிய கதை உத்திகளும் இந்தக்கனவு நிஜத்தின் நிழல் தவிர வேறொன்றுமில்லை.

புனானை ஸ்ரேஷனைக் கண்டதும் ஒரு சம்பவம் நினைவின் நுனியில் எட்டிப்பார்க்கின்றது என்றேன் இல்லையா? எனது சிறுபராயத்து ரெயில்வே பாந்தத்தை நான்காவது அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

வாழைச்சேனை ஸ்ரேஷனில் தரித்து நிற்கும் ரெயிலில் ஏறி ஓட்டமாவடி பாலம் அல்லது பெக்டரி ஸ்ரேஷனில் நாங்கள் இறங்குவதுண்டு. இது தினமும் மாலை நேரங்களில் களவில் நடக்கும் திரு விளையாட்டு.

நாங்கள் மூன்று நண்பர்கள். அவர்கள் ரெயில்வே ஸ்ரேஷனில் என்னுடன் வியாபாரம் செய்பவர்கள். மாலையில் வரும் ரெயில்கள் பெரும்பாலும் சரக்கு ரெயில்களாகவே இருக்கும்.இரண்டொரு பெட்டிகளை இழுத்துக்கொண்டு வரும். வியாபாரம் இருக்காது.

இந்தப்பெட்டிகளுக்குள் எங்கள் குதியான் பருவத்து சேட்டைகள் அரங்கேறும். ரெயில் கார்ட் கடைசிப்பெட்டியில் இருப்பார். அடிக்கடி எங்களை காண்பதால் ஸ்ரேஷன் மாஸ்ரர் கருணாரெட்ன கண்டுகொள்ளவேமாட்டார்.அவரின் சிநேகிதர்கள் பட்டியலில் நாங்களும் சேர்த்தி.

நாங்கள் எப்போதாகிலும் புனானையில் வந்து இறங்குவதுண்டு. பின்வழியால் குதித்து, மேம்பாலத்தைக்கடந்து பாதைக்கு அப்பால் இருக்கும் குளத்திற்கு வருவோம். நீர் விiயாட்டுத்தொடரும்.

திராய் பிடுங்குவோம்.அத்தாங்கில் மீன் பிடித்து மடியில் கட்டிக்கொள்வோம்.விறால் மீன்களும்,கெலுத்தியியும் தாப்புக்காட்டும். காடைக்குருவிகளைத்தேடி காடுகளுக்குள் அலைவோம். புனானை காடுகளில் மிதி வெடி முளைக்காத காலம்.

தோணிகள் சகட்டுமேணிக்கு கரையில் ஒதுங்கிக்கிடக்கும்.அதை தீ வைப்பதற்கும் கொத்தி சேதமாக்குவதற்கும் அரக்கர்கள் இல்லை. அடுத்த கோச்சி வரும் வரை குளத்தின் அமைதி இழந்து குதியாட்டமிடும்.

பின்பு டிக்கற் எடுக்காமலே அடுத்த ரெயிலில் பின் கதவால் ஏறி டிக்கற் பரிசோதகர்களின் கண்களில் மண்னைத்தூவி வாழைச்சேனை ஸ்ரேஷனில் வந்து இறங்குவோம்.

ரெயிலில் சும்மா போவதெல்லாம் கிடையாது. ஒரு பெட்டியின் ஆட்கள் இறங்கும் வழியால் ஒரு காலை வைத்து,அடுத்த பெட்டியின் நுழைவு வாயிலை மிக இலாவகமாக கடப்போம்.இது ஓடுகின்ற ரெயிலின் வெளிப்புறத்தில் அரங்கேறும் காட்சிகள்.அல்லது ஓட்டமாவடி பாலத்தைத் தாண்டுகையில் குதித்து பாலத்தின் இரும்புக்கேடர்களை அணைத்தபடி நிற்போம். ரெயில் சென்றவுடன் அப்படியே தண்டவாளத்தால் நடந்து மீண்டும் ஸ்ரேஷனுக்கே வந்து நிற்போம்.

ஒரு நாள் வாழைச்சேனை ஸ்ரேஷனில் ஏறியவுடன் விளையாட்டை ஆரம்பித்தோம். பேப்பர் பெக்டரி வரை ரெயில் மிக மெதுவாகவே செல்லும். நான் தான் முதலில் பெட்டிக்குத்தாவும் விளையாட்டை ஆரம்பித்தேன்.

வழமைபோல் ரெயிலின் வெளிப்புரத்தில் நான் தாவி அடுத்த பெட்டிற்குள் கால் வைக்கவும், ஓட்டமாவடி பாதுகாப்பு கடவை வரவும் சரியாக  இருந்தது. அங்கே வாப்பா நின்றதும்,கடவையில் மற்ற ஆட்கள் நின்றதும் தெரியவே தெரியாது. வியாபாரத்திற்குச் சென்ற வாப்பா வீட்டிற்குத் திரும்புகையில் நான் குப்பிலாம்பின் வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருந்தேன்.

வந்த வேகத்தில் திண்ணையில் 'ஸ்டான்ட்" போட்டு சைக்கிளை நிறுத்தியவர். முகட்டிலிருந்த கம்பை உருவி எடுத்து விளாசும் வரை உம்மா மலைத்துப்போய் நின்றா.பின்பு சுதாகரித்தபடி என்னை அவரின் அதிரடித்தாக்குதலிருந்து காப்பாற்றப்போராடினா.

அவர் அடித்து ஓய்ந்து,கிணற்றடிக்குப்போனார். போகும் போதே 'ஓடிப்போர கோச்சிக்கு வெளியால மகன் வித்த பழகுறாரு. தவறி வுழந்தா மண்ட ஓட்டயும் பொறுக்கேலா".என்று கத்திக்கொண்டே சென்றார். உம்மா தலையை தடவி இனி அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்றா.
 
கொழும்பிலிருந்து வந்த கோச்சியிலிருந்து ஆட்களை ஓட்டமாவடி பாலத்தருகே இறக்கி தீவைத்து அட்டூழியம் புரியும் வரை இந்த விளையாட்டை நாங்கள் விடவே இல்லை.
 
எனது படைப்பூக்கத்திற்கான அனேக களங்களை புகையிரதப்பயணங்கள் தந்திருக்கின்றது என்பது பேரின்ப ஆனந்தமாக இருக்கின்றது.பாம்புகளுடன் இந்த ரெயில்களுக்கும் ஒத்திசைவுகள் உண்டு.இரண்டும் ஊர்ந்து ,நெழிந்து செல்லும் இலாவகத்தில் நினைவுகள் சிதறிப்பிரகாசிக்கின்றன. 
 
ஊஞ்சல் இன்னும் ஆடும்......
எங்கள் தேசம் இதழ் : 214

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...