Monday 24 March 2014

சிறுகதை

கழுதைகளின் விஜயம்

ஊரெல்லாம் இறக்கைகட்டிக் கொண்டு பறந்தது. யாரைச்சந்தித்தாலும் இது பற்றியே பேசிக்கொண்டனர். ஊரே விழாக்கோலம் புண்டிருந்தது. கழுதைகளுக்கு இப்படி ஒரு வரவேற்பா? சிலர் தம் எரிச்சலைத் தீர்த்துக் கொண்டனர். இந்தக் கழுதைகளைக் கண்டு எத்தனை வருஷமாயிற்று.

போர் தரித்த புமியில், இப்போது கழுதைகள் வருவதில்லை என்பதையாவது ஜீரணிக்கலாம். இந்தக் கழுதைகள் கஞ்சியுற்றிய குடிகளைக் கூட மறந்து விட்டனவே. ஒரு குடியானவன் சந்தியில் நின்று கருத்துச் சொன்னான். அனேக விழிகள் அவனை எச்சரிக்கை செய்யுமாற் போல் எரித்து நின்றன.

முன்பு கழுதைகள் மலிந்த ஒரு காலமிருந்தது. சலவைத்தொழிலாளியின் கழுதைக்கே பலம் அதிகம் என இவன் பால்யத்தில் நினைத்திருந்தான். அழுக்கு மூட்டைகளைக் காவிக்கொண்டு வெகு ஒய்யாரமாக அது நடந்து செல்லும் அழகே தனி அழகு. 

மாலையில் மடமடக்கும் துணிகளை உலர்த்திக்கொண்டு ஊருக்குள் நுழையும் மையிருட்டில் முச்சந்திக்கு வரும் கழுதைகள் தென்னங்கள்ளும், வாழைப்பழத்தோலும், தின்று ஏப்பமிடும். உண்ட மயக்கம் தொண்டனுக்கு மட்டுமா? பல வருடங்களாக ரயில் ஓடாத தண்டவாளத்தில் கழுத்தை நீட்டிப் படுத்துக்கொள்ளும்.

ஒரு கழுதைக்கு ஐந்து கால்கள் என ஒரு மாலை நேரம் பள்ளியடி வீட்டிலிருந்து அது திருட்டுத்தனமாய் வெளியேறிய போது இவன் தெரிந்து கொண்டான். இவனைப் போல பலருக்கும் இந்த இரகசியம் அம்பலமாயிற்று. அதற்கு ஐந்து கால்கள் தான். பள்ளியடி வீட்டிலிருந்த அவளுக்குக் கழுதைச்சாயலில் ஒரு குழந்தை பிறந்தது. அவளின் கற்பும் பிற்காலத்தில் பல கழுதைகளின் சொத்தாயிற்று.

சலவைக்காரனின் கழுதை என்பதால் ஊரிலும் அதற்குக் கியாதியிருந்தது. அது தூய்மையின் சின்னமெனப் போற்றப்பட்டது. பள்ளிக் கூடம், பள்ளி வளவு, பொது மைதானம், வாசிக சாலை, திருமண வீடு, பொலீஸ் நிலையம், ஒன்றும் பாக்கியில்லாமல் கழுதை மேய்ந்து வந்தது. படுத்துப் புரண்டது. தட்டிக்கேட்பாரின்றி அமர்க்களம் செய்தது. அதன் முதுகில் சவாரிக்கும் தேன் குடிக்கும் சில குருவிகள், ~~செக் பொயின்ற்றுகளில் அடையாள அட்;டையின்றிப் பயணம் செய்தன. கழுதைக்கு வேண்டியோர் துன்புறுத்தப்படலாமா? இது தவிரச் சில கட்டாக்காலிக் கழுதைகளும் ஊரில் வாழ்ந்தன. சலவைத் தொழிலாளியின் கழுதைக்கும் அவைகளுக்கும் ஒத்து வருவதில்லை. பொது வைபவங்களில், இரண்டும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு போக்குக் காட்டின.

இந்தக் கழுதை இனம் இன்னும் சில தினங்களில் ஊருக்குள் வருவதையிட்டு, ஊரே திமிறிக்கொண்டு நிற்கிறது. இதில் உடன் பாடில்லாதவர்கள், வாய்மூடி இருக்கட்டும் என்று ஊர்ப்பெரியவர்கள் சட்டம் போட்டுவிட்டார்கள். ஊர் கூடிக் கழுதைக்குக் கொண்டாட்டம் நடத்தப்போகின்றது. இவனும் இவனின் கருத்தை ஒத்த சிலரும் கடுப்பாயிருந்தனர். பொரித்த கிழங்கும், பாபத் அவியலும் தின்று கொண்டே ஊர்ப்பள்ளிக்கூட மைதானத்தில் விடியவிடிய பேசித் தீர்த்தனர்.  திட்டங்கள் வகுத்தனர். தேவைப்பட்ட போது சமூகத்துக்குப்பயன்படாத கழுதைகள் இப்போது மட்டும் எதற்கு இங்கு வர வேண்டும்.

தனி நாடு கேட்டுப்போராடியவர்கள் ஊரின் நடுவே ஷெல்லெறிந்தார்கள். ஆன்மீகம் பொங்கும் பள்ளியின் முகப்பில் ஒரு ஷெல். ஏதுமறியாச் சிறுவர்கள், பெண்கள் எனத் தூக்கத்திலிருந்தோரின் வீடுகளை நோக்கி விழுந்த ஷெல்கள் என ஊரே உயிரைப்பிடித்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடித்தவித்த போது, இந்தக் கழுதைகள் எங்கே போயின. செஞ்சோற்றுக் கடனாவது கழிக்க வர வேண்டாமோ? எல்லாக் கழுதைகளும் ஊரை அம்போ என்று விட்டு விட்டு நகரத்துக்கு ஓடிவிட்டன. அங்கு சாக்கடை நீரைப்பருகிக் கொண்டு, மயானங்களில் உறங்கியெழுந்தன.

ஊருக்குள் ஜனாஸாக்கள் தீப்பெட்டிபோல ஒரே வரிசையில் அடுக்கப்பட்டு கிரியைகள் நடந்தன. அப்போதும் ஒரு கழுதையேனும் இங்கு வந்து ஆறுதல் சொல்லவில்லை. அப்படியொன்று தான் வளர்ந்து, வாழ்ந்து,வந்த கிராமத்தில் தவிடும், புண்ணாக்கும், தந்து வளர்த்த மக்களுக்கு நடந்ததாக எந்தக் கழுதையும் அறிந்ததாகத் தெரியவில்லை. கோவேறு கழுதைகள், குதிரைகள் போல் பேசித் திரிந்தன. முன்பு நகர சபையிலும், பட்டின சபையிலும், அழுக்குச் சுமந்த கழுதைகள் மமதையுடன் தலைநகரில் சேரிப் புறத்தில் குதிரைச்சாயம் புசிக்கொண்டு கும்மாளமிட்டன. இந்தக் கேடுகெட்ட கழுதைகளுக்கு எதற்கு விழாக்கோலம்?

உருப்படியான ஆலோசனைகள் வரவில்லை. கழுதைகளுக்கு எதிர்ப்புத்தெரிவிக்க வேண்டும். இவன் நண்பன், மறந்து விட்ட ஒன்றை நினைவுபடுத்துவது போல் அடியெடுத்துத் தந்தான்.

கறுப்புக்கொடி காட்டுவோம், கடையடைப்புச் செய்வோம், மூன்றாமவனோ அதை ஹர்த்தால் என்று சுருக்கமாகச் சொல்லன். அதுக்கும் ஊர் ஒத்துக் கொள்ளணுமே என்றான். நாம் என்ன செய்திடினும் கழுதைகள் வரத்தான் செய்யும். கடையடைப்பு, ஹர்த்தால்,ஆர்ப்பாட்டமெல்லாம் அவைகளுக்கு அத்துப்படி அது தவிர சமயத்தில் ஆள் வைத்து அடிக்கவும். அடக்கவும் அவைகள் முற்படக் கூடும். கழுதை மனம் யாரறிவர்? இது தேவைதானா என்றான் மறுபடியும் இரண்டாமவன்.

நாங்கள் எதிர்ப்புக்காட்டாவிட்டால் கழுதைகளுக்குத் தலைக்கனம் பிடித்துவிடும். ஊருக்குள் தமக்கு இன்னும் மவுசு குறையவில்லை என மக்களின் தலையில் மிளகாய் அரைக்க முனையும் இப்போதும் அவை பொது நலன் பேசவில்லை. நாடி பிடிக்கத்தான் வருகின்றன. அதன் தாடையை உடைத்து அனுப்ப வேண்டும். இவன் தான் பங்கிற்கு அபிப்பிராயம் சொன்னான். மூன்று பேரும் மெதுவாக விவாதித்துத் தம்மை அறியாமலேயே கலவரப்பட்டனர். கழுதை விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கிற்று.

ஊருக்குள் வருகை தரும் பழைய கழுதை,புதிய கழுதை, ஊரைவிட்டும் ஓடிப்போய் முகமூடி அணிந்து வரும் உள்ளுர்க் கழுதை எல்லாவற்றிக்கும் எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வலம் செல்வதென்று தீர்மானித்த பின் இன்னதென்று சொல்ல முடியாத பேரமைதி இவர்களைச் சூழவும் கவ்விக் கொண்டது. 

மேற்கொண்டு பேசுவதற்கு இனி ஒரு விடயமும் இல்லை என்றாற்போல் மௌனம் குவிந்திருந்தது. எனினும் இந்த அமைதி அச்சம் தந்தது. ஆர்ப்பரிக்காத குளத்தில் பதுங்கியிருக்கும் முதலையின் காத்திருப்புப்போல் பல்வேறு கழுதைகளின் சுவரொட்டிகள் சுவர்களை அடைந்திருந்தன. பச்சை குத்திய கழுதை, நீலநிறக் கழுதை, பல் நிறத்தாடை கொண்ட சடைத்த கம்பீரக் கழுதை, என ஒரே கழுதை மயம். எல்லாக் கழுதையின் பெயருக்கு முன்னாலும் ஒரு சிறப்புப் பெயரும் பட்டமும் இருந்தன. சமூகத் தொண்டன், சமூக ஜோதி, தியாகச் செம்மல், சமூகத் தலைவன் என்கிறாற் போல். ஒரு எருதையும் அதற்கீடாக எருமையையும் தொடுத்து விட்ட மாட்டு வண்டிபோல் சிறிதும் பொருந்தாமல் அப்பெயர்களை விட்டும் விலகியே இருந்தன கழுதைகள்.

முகத்தில் மயிர்கள் அடர்ந்த வசீகரக் கழுதைகள், சற்று மிடுக்காகப் போஸ் கொடுத்த படி போட்டோக்களில் சிரித்துக் கொண்டிருந்தன. சீருடையணிந்த ஒரு கழுதை மூன்று காலில் சிரித்துக் கொண்டிருந்தது. புகைப்படத்தில் மட்டும் வசீகரிக்கும் சில முகங்கள், நேரிடையாகப் பார்க்கும் போது ஏமாற்றம் தரும். இவர்களுக்குத் தெரிந்த அப்படிப்பட்ட முகங்களும் சுவர்களை அலங்கரித்திருந்தன.

கழுதைகளுக்கென விஷேட பிரார்த்தனை நடத்தவிருப்பதாக வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் அறிவித்தார்கள். சிறீமாவின் பிறந்த நாளுக்கு விஷேட பிரார்த்தனை செய்து ஜே.பீ. பட்டம் பெற்ற ஒரு பிரபல மௌலவிக்கு இனிக் கழுதைகளின் புண்ணியத்தால் கலாபுஷணம் தான்.

வெட்கங்கெட்ட சமூகம், மறுபடியும் கழுதைகளை எதிர்நோக்கி மனுக்களுடன் காத்திருந்தது. ஊருக்குள் ஷெல்லடிபட்டு இறந்தவர்களின் குடும்பங்களும் கையில் படிவங்களுடன் அலைந்தது சகிக்க முடியாமலிருந்தது. ஊருக்குள் மரணங்கள் விழுந்த போது ஏனென்றும் கேட்காத கழுதைகளுக்கு இந்த மனுக்கள் புத்தகம் சுமப்பது போல, புத்தகம் சுமக்கும் கழுதைகள் இவனும். நண்பர்களும் இந்தச் சுலோகத்தை உரத்துச் சொல்லி கெக்கலித்தனர்.

ஏக குரலில் கத்திப்பார்த்தனர். திடீரெனத் தீப்பொறிகள் கனன்றன. இந்தச் சுலோகத்தையே கழுதைகளுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் முழங்கலாம். இவன் புத்தியை மெச்சிக்கொண்டு மண்ணில் கால் பாவாது கும்மாளமிட்டுக் கோஷமிட்டனர்.

கழுதைகள் எந்த நிறத்தில் வந்தாலும் அதை ஆதரிக்கவென ஒரு கூட்டமிருந்தது. எல்லாக் கழுதைகளுக்கும் தொண்டரடிகள் இருந்தனர். கூஜா தூக்கிக் கொண்டு பைலாப்போட ஒரு பேரணி இருந்தது. எந்த முகத்தில் வந்தாலும், கழுதை கழுதைதான் என்பது இவர்களின் தீர்மானமாயிற்று.

கழுதைகளை வாழ்த்துவதே தன வாழ்வின் பிறவிப்பயனாக எண்ணி வாழும் ஒரு கவிஞர் ஒரு நீண்ட கவிதையை மர நிழலில் அமர்ந்து பாடிப்பாடி ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்தக் கழுதைகள் தான் ஊருக்குள் வருகின்றன. கழுதைத் தரிசனம் பெறவும், குரவையிட்டு, ஆராத்தி எடுக்கவுமெனப் பெண்கள் வீதி மருங்கில் அணிவகுத்து நின்றனர். முன்பு சடண்டியராய்த் திகழ்ந்த மடிச்சிக் கட்டிகள், ஊர்ர்தலைவராகிக் கழுதைகளை வரவேற்கவென மாலையுடன் காத்திருந்தனர். வில்லன் முகம் மாறா அவர்களின் சிரிப்பு மட்டும் சற்றுத் தூக்கலாய்த் தெரிந்தது கூட்டத்தில்.

ஒரு ஈ எறும்பும் புக முடியாத பந்தோபஸ்து ஒழுங்கைகளில் விட்டேச் சாரியாய் சுற்றித்திரிந்த கழுதைகளுக்கு இத்துணை கவுரவமா? இவன் தன் நண்பர்களுக்கு ஜாடை காட்டினான். மடித்து வைத்திருந்த கொடும்பாவிகள் மைதானத்தில் எரிக்கப்பட்டன. பதாதைகள் எழுந்தன. கோஷங்கள் இல்லாமல் ~~புத்தகம் சுமக்கும் கழுதைகள்|| இவன் அடிக்குரலில் கத்தினான். இவன் குரலுடன் ஒரு நண்பனின் குரல் மட்டும் இரைந்து வந்தது. அதிர்ச்சியுடன் திரும்பினான். ~~கிழங்குப் பொரியல்|| தின்று கழுதைகளுக்கெதிராக இவனுடன் அமர்ந்து கிளர்ச்சி பேசிய நண்பர்களை மேடை நடுவே கண்டான். அவமானத்தில் முகம் கறுத்திற்று.

அவர்களின் ஒருவன் கழுதைகள் போட்டுக் கழற்றிய மாலையுடன்,மற்றவனோ பன்னீர்ச் செம்புடனும் மேடையின் ஓரத்தில் கூச்சமின்றி நின்றிருந்தானர்.நாடி நரம்புகள் இற்றுப்போகப் பற்களை நறறநவென நெரித்துக் கொண்டான். எனினும் இவன் சுற்றம் அதிரும் வண்ணம் கத்தத் தொடங்கினான். சனங்கள் இவன் பக்கம் திரும்பி ஒரு பைத்தியம் என்று விட்டுக் கழுதைகளின் சிரிப்பில் இலயிக்கத் தொடங்கினர். கழுதைகள் கனைக்கத் தொடங்கின.“கறள்“ படிந்த ஒலி பெருக்கிகள், அதை வாங்கி ஊருக்கு வெளியே மிதக்க விட்டன. உயர்ச்சி மிகு கோஷங்கள் முழங்கின. யுகாந்திரமாகக் கேட்டுப் புளித்த பல்லவிகள்.

இவன் நெஞ்சே அதிரும்படி கைதட்டல்கள். சனங்கள், கழுதைகள் வாழ்கவென கோரஸ் பாடினர். சீனடிச் சிலம்புகள் காதைப் பிளந்தன. இவன் நெஞ்சுமுட்டும் பெருமையுடன் மறுபடியும் கழுதைகளுக்கெதிரான கோஷங்களை முழங்கியபடி முன்னேரத்தொடங்கினான். கனவிலும் தரிசித்தறியா குரூர முகங்கள் இவனை நோக்கிப் பாய்ந்து வந்தன. மேடையிலிருந்த நண்பர்களோ இலகுவாக இவனை அடையாளம் காட்டிவிட்டு முதுகைக் காட்டிய படி பராக்குப் பார்த்தனர்.

எனினும் இவன் தனியனாய்க் கால்களைப் பரப்பி முன்னேறத் தொடங்கினான். இவன் முன் எல்லாமே இருண்டு வந்தன. தன்னைச் சூழவும் பலத்த கேலிச் சிரிப்பை நுகர்ந்தான். நன்கு பழக்கப்பட்ட குரல்களை இனங்கான விழித்திரை விரித்தான். எனினும் உலகைத் தரிசிக்க முடியா இருளுக்குள் தான் மெல்லமெல்ல அமிழ்த்து கொண்டிருப்பதை உணர்ந்தபடி விறைத்துக் கிடந்தான்.

சரிநிகர்-  98

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...