Friday 23 November 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


தொடர்- 27
தைக்காப்பள்ளியில் வேன் நிற்கும் வரை பாதரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். முகத்தில் பிறை வடித்தில் அழகிய அம்சமான தாடி,சாந்தம் தவழும் புன்னகை பூசிய முகம்.மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் திடகாத்திரமான பார்வை.பாதர்  பள்ளி நிறுவாகத்தினரிடம் எங்களை ஒப்படைத்துவிட்டு எங்கள் கரங்களை பற்றிக்குலுக்கினார்.

 வழியில் ஒரு கூட்டம் முஸ்லிம் ஆக்கள வெட்டுவதற்கென்று கத்தியுடன் நிற்பதாக தகவல் கிடைத்துள்ளது. எங்களையும் கண்டு அப்படியே விட்டால் பெரிய இனக்கலவரம் வெடிக்கும் என்ற நல்லெண்ணத்தினால் இவ்வளவு பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்திருக்கின்றார்.அவர்தான் பாதர் ரொபர்ட் கிங்ஸ்லி.

 நினைவுத்தடங்களில் அழிக்க முடியாத நன்றியுடன் நினைவில் மணக்கும் பெயர்.பிற்காலங்களில் மட்டக்களப்பு மண் ரோசா இல்லத்தில் அவர் இருப்பதாக சொன்னார்கள்.

 சில வருடங்களுக்குப்பின் மட்டக்களப்பிலிருந்து வந்த மைக்கல் கொலின் அவர்களை ஆசிரியராகக்கொண்டு  வெளிவந்த தினக்கதிர் பத்திரிகையில் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். அதைப்படித்து விட்டு அவர் என்னைத்தேடி வீட்டுக்கு வந்ததும்,அளவளாவிச்சென்றதும் இன்று போல் உள்ளது.

 ஆனால் பதினைந்து வருடங்களைத்தாண்டிவிட்டது என்பதை நினைக்கும் போது காலத்தின் அசுர வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத கையறு நிலை நெஞ்சில் பாறாங்கல்லாய் அழுத்துகின்றது.
  
எங்களுடன் வந்த காத்தான்குடி நண்பர்கள் நின்றுவிட்டார்கள். சுகைப் ஹாபிழின் வீட்டில் பகலுணவு தந்தார்.மிகவும் மென்மையானவர்.எங்கள் பயணத்தின் வழிகாட்டியும் மூத்தவரும் அவர்தான். சதா வுழுவுடன் இருப்பார். கல்லூரியில் எப்பொழுதும் குர்ஆனுடன் இருப்பவர். வுழுவை அடிக்கடி புதுப்பிக்கும் அவரின் நீள் சட்டையின் கை ஓரங்களில் மஞ்சல் படர்ந்திருக்கும்.

 ‘பள்ளிக்குருவி’ என்றுதான் நாங்கள் அவருக்கு செல்லப்பெயர் வைத்தோம். அவரை வீதியில் கடைத்தெருவில் கடற்கரையில்,மைதானத்தில் எங்குமே காணமுடியாது நீக்கமற பள்ளியில் இருப்பார். கூச்ச சுபாவம் உள்ளவர். மஞ்சந்தொடுவாயிலுள்ள அவரின் வீட்டிற்குப்பக்கத்தில் உள்ள பள்ளியில் இரண்டு நாள் கழித்து சுஜுதில் இருக்கும் போது அவரையும் சுட்டுக்கொன்று விட்டதாக தகவல் கிடைத்தது.

பாதை நெடுகிலும் பயணத்தில் ஒரு வார்த்தையேனும் வீணாகப்பேசாமல் குர்ஆனை ஓதியபடி அவர் நடந்து வந்தது என் நினைவில் காலத்தால் அழியாமல் நிற்கிறது.

அன்று பகலுணவுக்குப்பின் அங்கிருந்து புறப்பட்டு மாலை ஏறாவூரில் நண்பர் ஜாபிரின் வீட்டில் தங்கினோம்.இருள் பரவ ஆரம்பித்து விட்டது மனித நடமாட்டங்களற்ற வீதியில் நாய்களைத்தவிர துப்பாக்கி ஏந்திய பொலிஸ் மற்றும் இரானுவத்தைத்தவிர வேறொன்றையும் காணவில்லை. இன்னும் எட்டு மைல்கள் நடக்க வேண்டும். கால்கள் வீங்கி கொப்பளித்துவிட்டன. அவர் விண்டோஜன் வாங்கித்தந்தார்.இரவு முழுக்க பூசினோம்.

மறுநாள் காலையில் வாழைச்சேனை நோக்கி நடந்தோம். கூட்டமாக வந்த போது இருந்த தெம்பு மறைந்து விட,காத்தான்குடியிலும்,ஏறாவ+ரிலும் நண்பர்கள் உதிர்ந்து விட,எஞ்சியவர்கள் அச்சம் மேவிய மனங்களை பொத்தியபடி நடந்தோம்.காத்தான்குடியில் நரவேட்டையாடிய புலிகள் ஓரிரு தினங்கள் கழித்து ஏறாவூரிலும் சுட்டும் வெட்டியும் வேட்டையாடினர்.நண்பர் சபீக்கின் குடும்பத்தில் எல்லோரையும் இழந்திருந்தான்.

அவனும் அவனது சகோதரர் அமீனுத்தீன்(முன்னால் அரசியல் துறை விரிவுரையாளர் பேராதனை பல்கலைக்கழகம்) அவரும்தான் தப்பிப் பிழைத்ததாக கேள்வியுற்றேன். நண்பர் அதன் பின் ஆமியில் இணைந்து புலிகளை அழிக்க திடசங்கற்பம் பூண்டு புறப்பட்டுச்சென்றார்.இப்படி கல்வியை இடைநடுவில் முடித்துக்கொண்டவர்வர்கள் பலர்.ஜாபிரின் குடும்பத்திலும் இந்த இழப்புக்கள் அவனையும் கல்லூரியை விட்டு நிறுத்தியது. நண்பர் ஜாபிரை பிற்காலங்களில் கொழும்பில் சந்தித்தேன். அங்கேயே திருமணம் முடித்துள்ளதாக சொன்னார். 

வழியில் மனிதர்களின் நடமாட்டம் அவ்வளவாக இல்லை.கும்புறுமூலை சந்தியில் மறு ஆபத்து காத்திருந்தது.வழி நெடுகிலும் இராணுவம் துப்பாக்கியுடன் நின்றிருந்தாலும் இளவட்டங்களான எங்களில் கரும்புள்ளியாய்; அவர்களின் பார்வை தொடர்ந்து வந்திருக்க வேண்டும்.முகாம் அருகில் நெருங்குவதற்கு முன் இராணுவத்தினர் கத்திக்கொண்டு எமை நோக்கி ஓடிவந்தனர்.ஓரடி முன் நகர்ந்தாலும் ரவை மழை பொழியக் காத்திருந்தது.

அசைவற்று கால்கள் அப்படியே தரித்து நின்றன.வியர்வையில் உடல் தெப்பமாயிருந்தது.மரணத்தின் தப்பிக்கமுடியா சுறுக்குக்கயிறு எங்களின் தலைக்கு மேல் தொங்கியது. கைகளை உயர்த்தும்படி அங்கிருந்து கத்தினார்கள். 
எங்கள் தேசம்     233                                                                                                     ஊஞ்சல் இன்னும் ஆடும்.....

Tuesday 13 November 2012

கௌரவத் திருடர்கள்


கடந்த மாதங்கள் களப்பணிகளில் ஈடுபட்டிருந்தேன்.வறுமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.

 சமுர்த்திக் கொடுப்பனவு,திவிநெகும,கமநெகும, புரநெகும போன்ற திட்டங்கள் கிராமங்கள் தோறும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அடிமட்ட மக்களின் பொருளாதார மேம்பாட்டு எழுச்சிக்கு இத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்;படாலும்,மேற்படி திட்டங்கள் தகுதியான மக்களுக்கு சென்றடைகின்றதா என்பது கேள்விக்குறி. 

கிராம சேவகர்கள்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புறம்பாக அண்மையில் பொருளாதார அமைச்சினால் உள்ளீர்க்கப்பட்ட பட்டதாரி பயிலுநர்களும் இச்சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மனைப் பொருளாதாரத்தை வீடுகள் தோறும் அறிமுகம் செய்யும் திவிநெகும திட்டத்தின் ஊடாக பயனாளிகளுக்கு அரசின் உதவிகள் சென்றடைவது கேள்விக்குரியாகவே உள்ளது.

சில கிராம சேவகர்களும்,சமுர்த்தி உத்தியோகத்தர்களும் இந்த உவிகள் தகுதியான மக்களை சென்றடைவதில் பெரும் முட்டுக்கட்டையாக இருந்ததை அவதானித்தேன்.அவர்களுக்கு நெருங்கியவர்களின் வாசலுக்கு வலிந்து செல்லும் உதவிகள்,ஏழைகளின் குடிசைகளை திரும்பிப்பார்க்கவில்லை என்ற யதார்த்தம் என்னை விசனப்படுத்தியது. மக்களின் மனக்குமுறல்கள் என் முன் சிதறி வெடித்தன.

வீடற்றவர்களுக்கென அரசாங்கம் உதவி செய்தது.வீடுகளை அமைத்துக்கொள்ள ஓர் இலட்சம்  மானிய அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட்டன.எமது பிரதேசத்தில் நானறிந்தவரை மூன்று கிராம சேவகர்களைத்தவிர மற்றவர்கள் ஏழைகளின் வயிற்றில் தாராளமாக அடித்திருக்கின்றார்கள். ஓர் இலட்சம் ரூபாயில் ஆளாளுக்கு அவர்களின் வசதிகளுக்கேற்றபடி பணத்தைப்பிடுங்கியதை நினைக்கும் போது இவர்களை விட கல் நெஞ்சக்காரர்கள் யாருண்டு என நினைக்கத்தூண்டியது. 

ஒருவர் இருபதாயிரம், இன்னொருவர் பத்தாயிரம்,இன்னொருவர் ஐயாயிரம் என பறித்தெடுத்துள்ளார்கள்.வங்கிக்கணக்கில் பணம் வந்தவுடன் உரியவர்களுக்கு செய்திகளை இவர்களே கொண்டு சேர்ப்பிப்பார்கள்.வீடு கட்ட மானியத்திற்கு விண்ணப்பித்தவர்கள் வங்கிக்கு வந்தவுடன் கிராம சேவையாளரின் ஆள் வங்கியில் காத்திருப்பார். அல்லது நேரிடையாக கிராம சேவையாளரின் அலுவலகத்திற்கு சென்று பேரம் பேசிய தொகையை கொடுத்து விட வேண்டும்.

அரசாங்கத்தின் எண்ணக்கருக்களுக்கு தடையாக நிற்பவர்கள் இத்தகைய இலஞ்சப்போர்வழிகள்தான்.வீடுகள் முடிக்கப்படாமல் அரையும் குறையுமாக காட்சி தருவதைக்கண்டேன். கேட்டால் ஜி.எஸ்மார்கள் மீது அப்பாவிச்சனங்கள் சாபம் விடுகிறார்கள். வீடுகளுக்கு கப்பம் பெறுவது மட்டுமல்ல அந்த வீட்டை நிருமாணிக்கும் கொந்தராத்துப்பணியையும் சில கிராம சேவகர்கள் மேற்கொண்டுள்ளது தெரிய வந்தது. 

மலிவு விலைக்கு பொருட்களை வாங்கி வீடுகளை முடித்துக்கொடுத்திருக்கின்றார்கள். தரமற்ற பொருட்கள், பழைய இற்றுப்போன மரக்குற்றிகளை சில வீடுகளில் அவதானித்தேன். ஏனிப்படி ஏழைகளின் வாழ்வில் விளையாடுகின்றார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களிடம் கேட்டேன். நீங்கள் ஏன் இவர்களுக்கு எதிராக மேலிடத்திற்கு புகார் தெரிவிக்கக்கூடாது?  அதற்கு அவர்கள் சொன்ன பதில் 
‘என்ன செய்ய புலி வால புடிச்சதப்போல எங்கட நில, மேலிடத்திற்கு சொன்னா எதிர்காலத்தில் எங்களுக்கு கிடைக்கும் நிவாரணங்கள் மட்டுமல்ல பொதுத் தேவைகளுக்கு ஒரு கையொழுத்துக்கூட போட்டுத் தரமாட்டார்கள்.பலி வாங்குவார்கள்” என்று குமுறினார்கள்.

மேலிடங்களுக்கு தேனும் கருவாடும் கொடுத்து மடக்கி வைத்துள்ளார்கள்.இங்குள்ள மேலதிகாரிகள் கூட இத்தகையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத்தயங்குவதையும் மக்கள் கூறி விசனப்பட்டனர்.

 மேலதிகாரிகளுக்கு எழுத்து மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சி சொல்ல அஞ்சுவதால் அவர்களாலும் இந்த இலஞ்சப்பேய்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவோ, விசாரணை செய்யவோ முடியாது என்பதை பொது ஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்பாவிகளுடைய இந்தப் பலவீனங்களை பயன்படுத்தி சில விதானைமார்கள் இலஞ்சத்திலும் முறைகேட்டுப்பங்கீட்டு விளையாட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர். எதற்கெடுத்தாலும் இலஞ்சம் எதிர்பார்ப்பு என்ற நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கும் இந்நிலை கிராமங்களிலிருந்துதான் ஆரம்பிக்கப் படுகின்றது.

 சில கிராம சேவகர்கள் குறு நில மன்னர்களாக செயற்பட்டு வருகின்றர். சில கிராம சேவகர்கள் தாம் நியமிக்கப்பட்டிருக்கும் பிரிவுகளுக்கு வருவதே இல்லை என மக்கள் என்னிடம் முறையிட்டனர். எப்படி உங்கள் பணிகளை நிறைவேறு;றுகின்றீர்கள் எனக்கேட்டேன் .சில  கிராம சேவகர்களால் நியமிக்கப்பட்ட  உதவியாளர்கள். இவர்கள்தான் உத்தியோகப்பற்றற்ற கிராம நிலதாரிகளாக கடமையாற்றுவதையும் அவதானித்தேன்.

இது அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணான செயற்பாடாகும்.அரசியல் செல்வாக்குத்திமிறினால் ஆளும் கட்சியினரின் ஆதரவு என்ற மமதையினால் சில கிராம சேவகர்கள் பொது மக்களின் வயிற்று நெருப்பை ஊதி ஊதி அணல் எழுப்பி சூடேற்றுவதை எதில் சேர்ப்பது. மக்கள் எழுச்சி கொண்டு இத்தகையவர்களுக்கு எதிராகப்போராடமல் இந்த திருடர்களின் அட்டகாசத்தை அடக்கவோ ஒழிக்கவோ முடியாது. ஏழைகளின் வயிற்றில் அடித்து தின்று பழகியவனுக்கு இதுவெல்லாம் ஒரு பெரிய கதையாக இருக்காது. 

நான் சந்தித்த பல ஏழைத்தாய்மார்களின் முடிவற்ற பிரார்த்தனை அநியாயம் செய்த கிராம சேவகர்களையும் சமுர்த்தி உத்தியோகத்தர்களையும் உடனடியாக தாக்காவிட்டாலும் நின்று கொல்லும் என்பது வலுவான நம்பிக்கை. சில நேரம் அவர்களின் மனைவி மக்களைக்கூட தெருவில் நின்று அந்தப்பிரார்;த்தனைகள் பிச்சை எடுக்க வைக்கலாம்.

 இறைவனின் விதியை நாம் எப்படி சொல்ல முடியும்.ஏனெனில் அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனைகள் இறைவனிடம் எந்தத்திரையுமின்றி நேரிடையாக சென்றடைகின்றது என்பதை இந்த இலஞ்ச மகா பாதகர்கள் புரிந்து கொண்டால் மட்டுமே சமூகத்திற்கு உய்வு உண்டு .

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...