Saturday 4 May 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

                                                   38

முன்பு வேலைப்பார்த்த இடங்களில் வாசிப்பதற்கு வாசிகசாலை இல்லை என்றால் பெரும் திண்டாட்டம் எனக்கு. நண்பர்களிடம் இரவல் வாங்கிக்கொண்டு வருவேன்.தினசரிப் பத்திரிகைகளைப் பார்ப்பதும் அன்றாடம் வலாயப்பட்டுப் போனது.

அட்டாளைச்சேனை விடுதியில் தங்கிப்படிக்கும் போது அட்டாளைச்சேனை பொது வாசிகசாலையை மாலை நேரங்களில் அதிகம் பயன்படுத்தியிருக்கின்றேன்.

விடுதிக்கட்டணம் அக்காலம் நூற்றி ஐம்பது ரூபா.ஊரிலிருந்து மணி ஓடர் இரு நூறு ரூபாய் வரும். மீதி ஐம்பதில் ஒரு புத்தகத்தை வாங்கிவிட்டுத்தான் மற்றதை கைச்செலவுக்கு எடுப்பேன்.அப்படி சேகரித்த நூல்கள் ஆயிரம் தொடும் இப்போது.இன்னும் விரித்துப்படிக்காத பல நூல்கள் அலுமாரியில் இருக்கின்றது. ஒரு நூல் கிடைத்ததும் அதை விட இது முக்கியமாகப்படும் வாசித்துவிடுவேன். 

இப்படி கைபடாத பல நூல்கள் காத்துக்கிடக்கின்றன. வாசிக்க வேண்டும். அல்லது வாசிக்கப்படாமலேயே அவை இருந்துவிடலாம்.அல்லது எனது நூலகத்தைப்பயன்படுத்தும் யாருக்கேனும் அவை பயன்படலாம்.

சாண்டில்யனின் கடல் புறா,ராஜ யோகம்,கல்கியின் ‘பார்த்திபன் கனவு’ ஆகிய புத்தகங்களை நான்;காம் வருட இறுதிப்பரீட்சையின்போது படித்து முடித்திருக்கின்றேன்.

பரீட்சைக்கு பாடம் மீட்டுவது போல் குறிப்புப்புத்தகத்தினுள் கடல் புறாவை அமுக்கி வைத்துக்கொண்டு தீவிரமாகப் படித்திருக்கின்றேன்.

 ஆனால் வகுப்பிலும் கோட்டை விடாதபடிக்கு எப்படிப் படித்தேன் என்று எனக்குத்தெரியாது.சோலைக்கிளியின் எட்டாவது நரகம்,நானுமொரு பூனை,பாம்பு நரம்பு மனிதன் தொகுதிகளையும்,வைரமுத்து,மு.மேத்தா, இன்குலாப்,போன்றவர்களின் பெரும்பாலான புத்தகங்களையும் இந்த வாசிகசாலையில்தான் படித்தேன்.

92ம்ஆண்டு முழுக்க ஒலுவில் சின்னப்பாலமுனையில் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தேன்.சோலைக்கிளியும் என்னன்டையில் அவ்விடத்தில்தான் இருந்துள்ளார். தினம் அவர் வேலை பார்த்த அலுவலகத்தை கடந்துதான் கடற்கரைக்கும்,மைதானத்திற்கும் செல்வேன்.  படிப்பு முடிந்து ஊருக்கு திரும்பிய பிறகுதான் சோலைக்கிளி எனக்குப்பக்கத்தில் என்ற விடயமே தெரிய வந்தது.

அப்துல் ரஹீமின் வாழ்வது ஒரு கலை என்னால் வாசிக்கப்பட்ட ஆகர்சன நூல்.ஒரு ஐந்து தடவைக்கு மேல் அதனைப் படித்திருப்பேன். அப்துல்ரகுமானின் முட்டை வாசிகள்,அவளுக்கு நிலா என்று பெயர்,போன்ற தொகுதிகளையும் அட்டாளைச்சேனை வாசிகசாலை எனக்குத்தந்தது.

இதைத்தான் படிக்க வேண்டும் என்ற தேர்வுகளும் இல்லை.தெளிவும் இல்லை.கையில் அகப்படும் நூல்களை படிப்பதுடன் குறிப்பும் எடுத்துக்கொள்ளும் பழக்கமும் என்னிடமிருந்தது.இறுக்கமாக விடுதிச்சூழலில் சொற்ப நேரம் கிடைக்கும் மாலை நேர ஓய்வை இந்தவாசிகசாலைக்கு வருவதில் கழித்திருக்கின்றேன் என்பதை இப்போது நினைத்துப் பார்;க்கின்றேன்.

தூக்கு மேடை பார்த்து வந்த மௌலானா மௌதூதி,இதுதான் இஸ்லாம். போன்ற நூல்கள் முதன் முதலில் படித்த மௌதூதி அவர்களின் அறிமுக நூல்களாகும். ஏழு வருடங்களில் ஏறக்குறைய ஆறு வருடங்கள் அந்த வாசிகசாலையின் புத்தகங்கள் எனது அறிவுப்பசிக்கு தீனி போட்டன. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் பத்து பாகங்களையும் படித்திருக்கின்றேன்.

கலை இலக்கியப்புத்தகங்களை வாசிப்பதற்கு தடைசெய்யப்பட்ட எனது விடுதிக்குள் வாய் வழியே அபின் கடத்துவது போல் புத்தகங்களை கொண்டு வந்து மறைத்து மறைத்துப்படித்து குறிப்பெடுத்திருக்கின்றேன். வழிகாட்டும் வான் மறை இன்பத்தமிழுக்கு அமுதூட்டிய நூல். அதன் மொழி நடை என்னை வாய் விட்டுப்படிக்கத்தூண்டும்.

வான் சுடர் சஞ்சிகை அப்துல் ரகுமான் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த இஸ்லாமிய முற்போக்கு சிந்தனை இதழ். இந்த சஞ்சிகையை தொடராக வாசித்திருக்கின்றேன்.

87 காலப்பகுதயில் அக்கரைப்பற்று நண்பர் பவ்சரின் நட்புக்கிடைத்தது.அவர் மூலம் கிடைக்கப்பெற்ற நூல்கள் முக்கிய திருப்பு முனையாக அமைந்தன.அப்போது அவர் ‘தடம்’ இலக்கிய சஞ்சிகையை ஆரம்பித்து நடாத்தி வந்தார். அவ்வப்போது அட்டாளைச்சேனைக்கு வந்து என்னை சந்திப்பார். அந்தச்சந்திப்பு கொழும்பில் இருக்கும் வரை தொடர்ந்தபடிதான் இருந்தது.

 எங்கள் தேசம்- 244                                                                                       ஊஞ்சல் இன்னும் ஆடும்....

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...