Thursday 26 January 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


எங்கள் தேசம் பத்திரிகையில் தொடராக வெளிவரும் நினைவுக்குறிப்புகள் 
 

தொடர் -06

பாம்புகள் பற்றி சொன்னேனில்லையா. இந்தப்பத்தியில் ஒரு பரம இரகசியத்தை போட்டுடைக்கவேண்டும். பாம்பென்றால் படையும் நடுங்குமென்பார்கள்.

நான் பாம்பை கண்டு நடுங்கிய,ஆனால் அதிசயப்பட்ட ஒரு உச்சிவெய்யில் நினைவிலாடுகிறது. இன்று நினைத்தாலும் மன ஊஞ்சலில் தூக்கி வைத்து ஆடும்படியான ஆழ்மனப்பதிவு.

ஒரு பகற்பொழுது முள்ளிவெட்டவானில் இருக்கும் என் வாப்பாவின் கடைக்கு செல்கின்றேன். ஓட்டமாவடியிலிருந்து வயல்களை ஊடறுத்துச் செல்வதானால் எட்டு மைல். பிரதான வீதியால் செல்வதாயின் 12 மைல்.

அக்காலத்தில் புது வெளிப்பாலத்தை கடப்பது மகா அதிசயம்.அதைப்பற்றி மர்மக்கதைகள் பல அநாமேதயமாக உலாவித்திரிந்தன. ஏனெனில் அதன் கீழ் வாயைப் பிழந்தபடி படுத்திருக்கும் முதலைகளுக்கு தப்பி, காகித ஆலையின் கழிவு நீரின் துர்நாற்றத்திற்குத் தப்பி, இரு மருங்கிலும் பாதுகாப்பு அரணில்லாத பாலத்தின் ஏகவெளிக்குத் தப்பி என எத்தனையோ உயிராபத்துக்களை தாண்டி புதுவெளிப்பாலத்தைக் கடப்பதென்பது கத்தியில் நடப்பதற்கு ஒப்பானது.

நான் இந்த அவலங்களை எனது துவிச்சக்கர வண்டியின் உதவியுடன் கடந்து போகிறேன்.விழிகளுக்கு எட்டாத தூரத்தில் பச்சைப்பசேலென்ற வயல் வெளிகள். சதா ஓடும் சிற்றோடை. காத்து நின்று இரை கவ்வும் வெள்ளை நாரைகள். இவற்றையெல்லாம் பார்த்தபடி சைக்கிளை ஊன்றி மிதிக்கின்றேன்.

மூக்கர் கல் கடைதாண்டி சைக்கிள் வேகம் கொள்கிறது. இரட்டைத் துரிசியின் கதவுகள் இறுக மூடிக் கிடந்தன. வாகநேரிக்குளம் ததும்பி வழியப்போகிறேன் என அச்சமூட்டுகிறது. வான் போடவில்லை.

ஆனாலும் அலைகள் எம்பி வந்து அணையில் ஓங்கி அறைந்துவிட்டு பின்வாங்கிப் போகின்றன. மீன் வேட்டைக்கென பல தோணிகள் அலையிலாடி மிதந்தபடி தூரத்தே தெரிந்தன.குளத்துக்கப்பால் தெரியும் புனானை ரெயில்வே ஸ்ரேஷனின் மேம்பாலம் துல்லியமாகத்தெரிகிறது.

(புனானை ஸ்ரேஷன் என்றவுடன் ஒரு நினைவு மன ஊஞ்சலில் ஆடிப்பார்க்கின்றது பாம்புக்கதை முடிய அதை சொல்கிறேன்.)

குளக்கட்டில் ஏறி சைக்கிளை மிதிக்கின்றேன். இன்னும் ஒரு மைல் தூரம். நெடுகவும் ஓங்கி வளர்ந்த பனை மரங்கள். அடர்ந்தகாடு,பின்பு ஏகாந்த வெளிகள் என அந்தப்பெரு வெளி அச்சமூட்டும் பரப்பாகவே என் முன் விரிந்து கிடந்தது. நான் கடைக்கு வருவதற்கு இன்னும் அரை மைல்.

என்னை யாரோ பனை மரத்திலிருந்து உற்றுப்பார்ப்பதைப்போல் உணர்கிறேன். சைக்கிள் தானகவே 'பிரேக்" போட்டு நிற்கிறது. சுற்றும் முற்றும் விழிகளை எறிகிறேன்.விரிந்து அலையடிக்கும் குளம்.வலது பக்கம் ஏகாந்த வெளி.நெடுகவும் ஓங்கி வளர்ந்த பனைகள் எனக்கும் ஒரு பனைக்கும் இடையில் தொட்டுவிடும் தூரம்தான்.

அண்ணாந்து பார்க்கிறேன். பனையின் கிளைக்குள் ஒரு கருநாகம். கண்கள் தீச்சுவாலையாக மின்ன என்னை உற்றுப்பார்த்தபடி இருந்தது. கருப்பு என்றால் வார்த்தைகளால் விபரிக்கவியலா கருப்பு. அதன் உடல் நெளிவில் கருப்பின் பிரகாசம் அந்தப் பிராந்தியத்தையே ஜெக ஜோதியாக பரிணமிக்கச் செய்தது. எனது பாதங்கள் நிலைகுத்தி நின்றன. அதன் பார்வை என்னிலிருந்து விடுபடும் தருணத்திற்காக காத்து நின்றேன். 
 
அது என்னையே பாhத்தபடி பாந்தமாக வளையமிட்டு படுத்திருந்தது. கண்கள் மட்டும் என்ன பிரகாசம். தாரினால் ஒரு இராட்சத ஸ்பிரீங்" சுற்றிக்கிடப்பதைப்போல் பனை மரத்தில் அது படுத்திருந்தது.

(பிற்காலத்தில் மிருககாட்சிசாலையில் அதனை நிகர்த்த பாம்புகளும்,கண்களும் இருக்கின்றனவா என தேடிப்பார்த்ததுண்டு.எனது தேடல் பொய்த்துப்போனது.)

எனக்கும் அதற்குமிடையில் நீண்ட மௌனம் உறைந்திருந்து.மதியம் என்பதால் வீதியில் சனங்களும் இல்லை.குளத்தின் சலக்புலக் அலைகளின் தாலாட்டைத்தவிர எதுவுமே எங்களுக்கிடையில் குறுக்கீடாக இல்லை.அது சட்டென சரசரவென்று இறங்கி பனைமரத்தின் புற்றுக்குள் மறைந்து போனது.புற்றுக்குள் இறங்கும் தருணத்திலும்  அதன் பார்வை என்னில் படர்வதை உணர்ந்தேன்.

என்னைக்கண்டு அச்சப்பட்டதாகவோ நான் அதைக்கண்டு அச்சபட்டதாகவே இரண்டு பேருமே காட்டிக்கொள்ளவில்லை. எனினும் பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பதற்கொப்ப நான் நிலைகுலைந்து போனது மகா நிஜம்.அதற்கு காரணம் கனவும் நிஜமுமே அன்றி வேறில்லை.

இந்தக்கனவு கலைந்து எழுந்தபோது அதிகாலை நாலு மணியிருக்கும். உடல் வியர்வையில் குளித்திருந்தது. விடிந்ததும் கடைக்குப்போனேன்.அதிசயம் என்னை வரவேற்க காத்திருந்தது.எந்த பனையில் கருநாகத்தைக்கனவில் கண்டனோ அதே பனையில் அதே கண்களில் தீப்பொறி பறக்க அந்த நாகத்தைக்கண்டு ஆச்சரியத்தில் உறைந்திருக்கின்றேன்.

சிறுபராயத்தில் கண்ட கனவும் நிஜமும் இன்னும் மனதில் சுவரோவியமாய் குன்றாமல் நிற்கின்றது.
ஊஞ்சல் இன்னும் ஆடும்......
எங்கள் தேசம் இதழ் : 213
 



Sunday 15 January 2012

சிறுகதை - மாயநதி



            இன்றைய குத்பாவிலும் நரகத்தின் ஏழு தலைப்பாம்புகளும் காட்டுவிரியன்களும்தான் பள்ளி முழுக்க ஊர்ந்து திரிந்தன.சென்ற மாதமும் அதற்கு முந்திய மாதத்திற்கு முந்திய வாரமும் சீழும், புண்னும் கள்ளிச்செடியும் கொதிக்கும் எண்ணெய்க்கொப்பரையும் மாறி மாறி வந்து வாழ்வை பீதிக்குள் அமிழ்த்தி விட்டுச்சென்று விட்டதை நீங்கள் அறிவீர்களா?

மூன்று நாட்களாக கால் மேல் போட்டு ஆரத்தழுவிய அவளைக்கூட தொட முடியாத அளவிற்கு உங்கள் நரக வர்ணனை உணர்ச்சிகளை மழுங்கடித்து விட்டதே! கனிந்த இரும்பின் மேல் கொல்லன் தெளித்த நீரின் சத்தத்துடன் எல்லாமே அடங்கிவிட்டது ஹசரத்!

 ஏன் ஹசரத் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சுவர்க்கத்தைப் படைக்கவே இல்லையா? பாலாறும் தேனாறும் மதுவாறும்  கன்னி கழியா பருவமங்கையரும் நறுமணமும் மலர்த்தோட்டங்களும் இன்னும் பல இன்ப லாகிரி நிறைந்த சுவர்க்கத்தைப் பற்றி எங்களுக்கு ஓதவே மாட்டீர்களா? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?

இங்கிருந்து வத்திகானுக்கு காவித்துணியைக்கொண்டு போய் போர்த்திய ‘அகமக்கு’வின் தில்லுமுல்லுகளைப்பற்றியெல்லாம் நீங்கள் வாய் திறக்கவே மாட்டீர்களா? நான் இதையெல்லாம் சொல்வது உங்களை எதிர்த்து நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்பதற்கல்ல.

எனக்கு 100க்கு 100 அல்லாஹ் மார்க் போடுவான் என்ற பேராசை இல்லாவிட்டாலும் என்னை பெயிலாக்கமாட்டான் என்ற நம்பிக்கை நிறையவே உண்டு ஹசரத். அதற்கு உங்களிடம் சான்றிதழ் பெறத்தேவையில்லை. 

முஹம்மது நபி சொன்னதைப்போல என் மனைவியிடம் அந்தச்சான்றிதழை பெற்றுவிடுவேன். ஏனெனில் அவளுக்கு நான் சக்களத்தியுடன்  போரிடும் மனச்சுமையை எப்போதும் தரமாட்டேன் என்ற ‘பைஅத்’தின்படி வாழ்ந்து வருபவன்.

என்றாலும் என்ன செய்ய ஹசரத் இந்த துன்யா பாடாத பாடு படுத்துகிறதே? நான் அவளை சந்திக்காமல் இருந்திருக்கலாம். அவள் ஒரு மாய நதி, மூஸா நபியின் கைத்தடி போல் மந்திரங்களால் ஜெயிக்க முடியா ஜீவ ரசம். 

பிர்அவ்னின் சந்நிதியில் கயிற்றுப்பாம்புகளைப்பிடித்து அசர வைத்த தீர்க்கதரிசியைப்போல் நானும் லேசாகத்தான் அவளை எடை போட்டேன்.  

என்னவாயிற்று முன்னொரு போதும் இல்லாத அவசங்களை என்னில் இழுத்துவிட்டுப்போனாள். அவள் மூட்டிய விரகத்தீயில் எரிந்து கருகியவர்களில் நானும் ஆகாமல் பாதுகாத்தது உங்கள் துஆ ஒன்றைத்தவிர வேறொன்றுமில்லை ஹசரத்.

நிறையப்பேர் அவள் சுக்கிலக்கயிற்றை விழுங்கி மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவதிப்பட்டதையும், கவிதைகள் எழுதி பித்துப்பிடித்தலைந்ததையும் உங்களுக்குச்சொல்லாமல் வேறு யாருக்கு சொல்ல முடியும் ஹசரத். இப்படித்தான் என்னிடமும் சவால் விட்டிருந்தாள்.
  
‘டேய் எனக்கு நீ வேணும்டா என்னயக் கலியாணம் முடிக்காட்டி நான் செத்திடுவன்டா’ என்றாள்.

‘அடியேய் பைத்தியக்காரி நான் மூனு பிள்ளையின்ற தந்தை, தவிர என் மனைவி எனக்கு எந்தக்குறையும் வைக்கவில்லை உனக்கு வயசுக்கோளாறு வடிவா யோசி’என்றேன். ‘இல்லடா நல்லா யேசித்துப்போட்டுதான் சொல்றன்’.

அவளின் ஆசையை என்னால் அடக்கமுடியவில்லை. மைதானத்தின் மையப்புள்ளியில் நிற்கும் காளையாக அவளும், அதன் முன் மல்லுக்கட்டி நிற்கும் வீரனாக நானும் .. கடைசியில் ‘போடி போக்கிரி’ என்று விட்டு வந்து விட்டேன்.

என் முதுகுக்குப்பின் அவள் குரல் விம்பி வெடித்தது.        ‘எனக்கிட்ட வாரவனெல்லாம் என்ர காலடியில் விழுந்து கிடக்கானுகள். நீ மட்டும் பொண்டாட்டிக்கு விசுவாசமா இருந்தா சொர்க்கமா கிடைக்கப்போகுது.? ’

‘உன்ட காலடியில விழுந்து கிடக்கிறவனுகளெல்லாம் சாக்கடைப்பன்றிக்குட்டிகள்.

பதிலுக்கு நானும் கத்திவிட்டு வந்து விட்டேன். ஹசரத் நீங்களே சொல்லுங்கள்!

எழுதுறவனுகளெல்லாம் இப்படி வாழனும்டு சட்டமா போட்டிரிக்கி. சமகால இலக்கியம், காத்திரமான படைப்பு, கஸ்மாலம் என்றெல்லாம் பேசிக்கொண்டு பிறர் மனையில் கன்னம் வைக்கும் சிருஷ்டிகளுக்கு குர்ஆனில் என்ன தண்டனை கூறப்பட்டுள்ளது என்பதை அடுத்த குத்பாவிலாவது ஓதுங்கள். 

ஏனெனில் இவர்கள் முஸ்லிம் தேசம் பற்றிய அதீத புனைவுகளில் மயங்கிக்கிடக்கும் இலக்கிய முனிகள்..


உப குறிப்பு 1

கால நதி தன்பாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. மாய நதிகளின் மந்திரங்கள் அதை அசைக்க முடியாமற்போயிற்று. போலியும், பகட்டும் ஏமாற்று வித்தைகளும் அறிந்த இரட்டை இதயக்காரிகளின் சூழ்ச்சிகளை நதி அறியும். அதெப்படி என்னிடமே அவள் திருமணச்செய்தி சொல்வது சாத்தியமானது ஹசரத்?

ஒரு மஞ்சல் நிற மாலைப்பொழுதையும் மையிருட்டின் நெருக்கத்தையும் தவிர்த்து விட்டு எதுவும் நடவாத ஒருத்தியைப்போல் அந்நியம் காட்ட முடிகிறது? நான் வியப்பின் முனைக்கே ஏறிவிட்டேன் தெரியுமா?

பரம அதிர்ச்சி! உடலை கூறு போட்ட ஒருத்தி தன் புருஷனுக்கு விசுவாசமாக இருக்கப்போகிறேன் என்பது உங்கள் பார்வவையில் ‘ஹிதாயத்’ அல்லவா?
 அதுதான் என் விருப்பமும். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது அவளுக்கு அடித்த இந்த யோகம் ‘ஹிதாயத்து’தான். 

நேற்று வரை பலரை பித்துப்பிடிக்க வைத்த ஒருத்திக்கு வேறொரு ‘கராமத்து’ம் நேர வாய்ப்பில்லை ஹசரத். அவளை எல்லாம் வல்ல ரப்பு காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை எனக்கு அதீதமாகவே உண்டு .ஏனெனில் என்னையும் அவன் காப்பாற்றினான்.

தவிர முன்பு அவளின் வாழ்வெனும் சிறு மலரை கசக்கி எறிந்து அவமானப்படுத்தியனின் கயமைகளை என்னிடமும் இன்னும் சிலரிடமுமம் சொல்லிச்சொல்லி அழுதவள். 

அவனால்தான் என் வாழ்வையே நரகமானது என்றவள் அவனின் அந்தரங்க உறுப்பின் மீது காட்டுவிரியன்கள் கொத்தக்கடவ! விஷம் படர்ந்த நரக ரசத்தை பருகிச்சாக! அந்திம காலத்தில் விஷர் நாய் கடித்து நாயைப்போலவே குறைத்துச்சாக என்றெல்லாம் அவனைப்பற்றி என்னிடம் பகைமை பராட்டியவள்.
 
இனி அவனின் உறவும் நினைவும் வேண்டாம் என்று உதறித்தள்ளியவள் திடீரென மீளவும் தீக்குள் விரலை விட்டு குளிர்ச்சி என்கிறாள் இது  என்ன குணம் ஹசரத்?

 வந்த விஷயம் என்னவென்றால்  அப்பாவிப்பெண்களை? விபச்சார வழக்குத்தொடுத்து மறுமையின் மன்றத்தில் நிறுத்தி விடாதீர்கள். அவர்களும் வாழ்ந்து பார்க்க ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் ஹசரத். நடு நிசியில் நீங்கள் நடாத்தும் தஹஜ்ஜத்துக்களில் இதையும் நினைவில் வைத்து மன்றாடுங்கள்.

உப குறிப்பு -2

தம்பி உனக்கு வேல நிச்சயம்.என் வெற்றிக்கு உழைத்த உன்னை கைவிடமாட்டன், ‘ஸ்கூல் கார்டர்’ வருகுது போட்டுத்தாரன்.

தம்பி இதை நம்பி பெரிய இடத்தில்  சம்மதம் வைக்க சிக்னல் காட்டி விட்டதில் உம்மாவுக்கு தலைகால் புரியா மகிழச்சி. தேதி மட்டும் குறிக்கவில்லை.

மந்திரியின் கூஜா ஒரு வசதியான குடும்பத்துப்பையனுக்கு வந்த கார்டரை விற்றுவிட்டார். தம்பி ஏமாற்றத்துடன் அவர் வீட்டிற்கு முன்னால் நின்று திட்டினான். பரதேசி நாய்களே! நீங்க ஏறி வர நாங்க ஏணியா இருந்தம். மேல வந்தா எங்கள எட்டி உதைக்கிறிங்களா? காச வாங்கிட்டு வேலய விற்ற நன்றி கெட்ட கல்பு,ஹராங்குட்டி நீயும் உன்ட குடும்பமும் விபத்தில் சாகனும்! 

அடுத்த முறை படு தோல்வி  அடையனும்! (குண்டு வெடித்துச்சாக சாபமிட தம்பி நினைத்து அதை முளையிலேயே கிள்ளி எறிந்தான். பிரபாகரன் செத்தபின் குண்டு வெடிக்காது என்ற நம்பிக்கை) ஆத்திரம் தீர கத்தி விட்டு தம்பி அரசியலை தூக்கி உப்பாற்றில் கரைத்து விட்டு வந்தான்.

உப குறிப்பு -3

‘நான் புள்ள குட்டிக்காரன் சேர் நூறு ரூவா தாரன் உடுங்க சேர். கோர்ட்டுக்கு கேஸ் எழுதாதீங்கசேர்’. ஆட்டோக்காரனின் இறைஞ்சுதல். அல்லாஹ்விடமும்  இப்படி  பணிந்திருக்கமாட்டான்.

முகத்தை மட்டுமல்ல மனத்தையும் கல்லாக்கி நின்றிருந்தான் அவன்.செய்வதறியாது ஐந்நூறு ரூபா நோட்டை பைலுக்குள் வைத்து நீட்டுகிறான். ‘ட்ரபிக் பொலிஸ்’ அதை மடித்து பேண்டுக்குள் திணித்தான். லைசன் பைலுக்குள் வருகிறது. 
 
பெரும்பாலான நாட்களில் பெற்றோல் போக ஒரு நாள் ஹயர். நெஞ்சு பொறுக்குதில்லையே! கள்ள ஹராங்குட்டிகள். பிரபாகரா இவர்களை எல்லாம் குண்டு வைத்து சின்னாபின்னப்படுத்தாமல் போயிட்டியே ராசா !

ஓம் ஹசரத் இதற்கெல்லாம் அரசியல் பலம் வேண்டும். இருந்தால் அக்கிரமம் செய்து பொலிசில் பிடிபட்டால் லேசாக கழன்று விடலாம். எனக்கும் அரசியலுக்கு வர கொள்ளை ஆசை (தோதான தொழில்) நீங்கள் வேறு  இவற்றையெல்லாம் ஹராம் ஹராம் என்று கூச்சல் போட்டு அச்சமூட்டுகின்றீர்கள். இல்லாட்டி ஏக்கர் கணக்கில் காணியை பிடிக்கத் தெரியாமலா இருக்கன்.

சும்மா கிடந்த சங்கு வாயெனுக்கெல்லாம் நீலக்கடலில் கப்பல் ஓடுது.சிங்கப்பூரிலும், இந்தியாவிலும் பிஸ்னஸ் நடக்குது. அவன்ட பிள்ளைகளின்ற மனைவியின்ற பெயரில் சுவிஸ் பேங்கில் கணக்கு ரண் ஆகுது.
 
நாங்கள் செய்தா மட்டும் அது பாவம்.அவர்கள் செய்தால் அது புண்ணியம். ஒரு விஷயத்தையும் உருப்படியாகச் செய்ய முடியாமல் நீங்கள் படுத்துகிற பாடு ஹசரத் . அல்லாஹ் மன்னித்தாலும் நீங்கள் குறுக்கே விழுந்து தடுப்பீர்கள் போல் இருக்கிறது உங்கள் உபந்நியாசம்.

உப குறிப்பு -4

தமிழ் மொழியை வளர்ப்பதற்கென்று முழு மூச்சாக இயங்கும் வானொலி ஒன்றின் அலைவரியை டியூன் பண்ணுகிறேன்.உங்கள் இதய வானொலியின் அடுத்த புரோகராம் சொல் புதிது பொருள் புதிது நிகழ்ச்சி. 

கல் தோன்றி மண் தோன்றாக்காலத்துக்கு முன் தோன்றிய மூத்த தமிழ் மொழியை வளர்க்கவும், உங்கள் வேகத்தையும் விவேகத்தையும் பரீட்சிக்கவும் இதோ ஒரு சொல் விளையாட்டு. 

நேயர்களே! நாங்க ஒரு சொல்லைச் சொல்லுவம், நீங்க அதற்கு எதிர்சொல் சொல்லனும்,உதாரணமா நாங்க காதல்னா நீங்க கீதல்னு சொல்லனும். நாங்க கீதல்னு சொன்னாக்கா நீங்க காதல்னு சொல்லனும் இடைவெளி வராம பட்டுன்னு சொல்லனும் ஒகேவா போட்டிக்குப்போவமா..

நீண்ட நேரம் ஒரு நேயர் அழைப்பில் இருக்கிறார்.
ஹலோ வணக்கம்
வணக்கம் அக்கா!
 யாரம்மா? 
நான் அம்புத்தளை மேரி.

மேரி நீங்க செஞ்சிக்கிட்டு இரிக்கிங்க?

‘அக்கா இப்ப நான் தமிழ் வானொலியின்ற ரசிகையா இருந்து,அழகான உங்களிடம் பேசிக்கிட்டு இருக்கன்

‘யப்பா கடி தாங்கல்லடா’ ரொம்ப தேங்க்ஸ்ம்மா’

 ‘எங்கள புள்ளரிக்க வச்சிட்டிங்க மேரி எப்படியிருக்கிங்க? அம்புத்தளையில தேயிலை பூக்குதா?’

 ‘ஓம் அக்கா நான் ரொம்ப கஷ்டப்பட்டு பல நாள் ரை பண்ணினன்   இப்பதான் லைன் கிடச்சிது. ஏனக்கு ரொம்ப சந்தோஷம்…’

‘ரொம்ப தேங்கஸ் மேரி.’

‘அக்கா எங்கட அம்மாவும் பேசனுமாம்.’

ஹலோ அம்மா வணக்கம்!

எப்புடி இரிக்கிங்கம்மா? மேரி உங்களுக்கு எத்தினையாவது பிள்ள? ஆள் வீட்டுல எப்புடி குழப்பம்தானே?

ஓம்

மகள் சரியான குழப்பம்.

மேரி பார்த்திங்களா நான் உங்க ஜாதகத்தையே கண்டுபிடிச்சிட்டன். அறிவிப்பாளினியின் சிரிப்பு தமிழ் வானொலியின் அலை வரிசையில் கலந்து வீடு முழுக்க கசிகிறது. 
 
அம்மாவும் மேரியும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.மூத்த தமிழும் சிரிக்கிறது.


சரி மேரி போட்டிக்குப்போலாமா? நாங்க ரெடி நீங்க ?
ரெடி அக்கா!

நாங்க யானன்டு சொன்னா நீங்க பூன சொல்லனும் நாங்க பூன சொன்னா நீங்க யான சொல்லனும். ஓகேவா

ஓகே அக்கா

யான… பூன..
யான… பூன..
பூன.. யான
யான… பூன..
பூன.. யான
பூன.. பூன..

‘ஓ மைகார்ட்’ மேரியின் கதறலில் அலை வரிசை நடுங்குகின்றது. ஆர்வத்துடன் சொல் விளையாட்டில் பங்குபற்றிய மேரிக்கு வாழ்த்துக்கள். அடுத்த நேயர் நீண்ட நேரமாக காத்திருக்கின்றார். ஹலோ… வணக்கம் யாரது?..

ஹசரத் இப்படி வசந்தமான தமிழை வளர்க்கப் பேசிய ஒரு மௌலவியின் மனைவி வீட்டில் சும்மா இருக்கப்பிடிக்காமல் வானொலிக்காரர்களின் மாய வலையில் சிக்கி இரவோடு இரவாக தமிழ் வளர்க்க ஓடிவிட்டாள்.

மௌலவி ஊருக்கு உபதேசம் செய்ய பெட்டி படுக்கையோடு புறப்பட்டு சரியாக மூன்றாவது நாள் நள்ளிரவில் வந்து நின்ற வெள்ளை வேனில் அவள் ஏறிப்போனதை அரிசி ஆலை காவல் காரன்தான் முதலில்கண்டான்.

பிறகு அந்த தீ ஊர் முழுக்க பரவி அமோசன் காட்டில் பரவிய கொடுந்தீயாக  கொழுந்து விட்டெரிந்ததை அணைக்கவே முடியாமல் போனது.

நள்ளிரவில் அறிவிப்பாளர்களுடன் கொஞ்சி மகிழும் இன்னும் சில குமரிகளும் களட்டிகளும் (திருமணம் முடித்தவளுகளுக்கு நான் வைத்த செல்லப்பெயர்) மிக விரைவில் ஜம் பண்ணவிருப்பதாக இரண்டு நாட்களின் பின் பதுளையில் பிடிபட்ட மௌலவியின் மனைவியான ஏக பத்தினி திருவாய் மலர்ந்தருளியது வேறு விஷயம்

 அவள் வயிற்றிலும் தங்கமான தமிழ் வளர்ந்திருக்கும் இல்லையா ஹசரத்? அவன் மானமுள்ள மௌலவி ஓடிப்போன இரவில் தலாக் சொல்லி விடுதலைப்பத்திரம் வழங்கிவிட்டான்.

அவள் வாழ்வோவெனில் வஸந்தமும் இல்லை, தென்றலும் இல்லை சூரியனாய் போய் விட்டது. இப்படித்தான் எனக்குத்தெரிந்த பலர் பெண்களை வசியப்படுத்த செல்போனிலும் வித்தைகள் பல செய்து பிடிபட்டு மாண்டு போயினர்.சுங்கான் கருவாடு திமிங்கிலம் ஆக முடியுமா ஹசரத் ?

உப குறிப்பு -5

சைலாவின் பிள்ளை காணாமல் போன கதை

சைலா வருஷத்திற்கு ஒரு பிள்ளை என்ற விகிதத்தில் பெற்றுப்போடுகிறாள். பூனை குட்டி போடுவது போல்.. தெருவோர குழாய்க்கடியில் அவள் பிரசவம் நிகழ்வதாக பேசிக்கொண்டார்கள். இந்தத்தடைவ அரசினர் வைத்தியசாலையில் நிகழ்ந்தது அவள் சுகப்பிரசவம்.

 ஓல்லியான தேகம். வெற்றிலை மென்று சிவப்பேறிய அதரங்கள். கூந்தலை உயர்த்திக்கட்டி கொண்டை போட்டிருப்பாள். கொசுவம் வைத்து சேலையை நேர்த்தியாக உடுத்தியிருப்பாள். சைலாவின் கால் படாத எந்தத்தெருவும் இல்லை, கடையுமில்லை.
 
குறைந்தது பத்து ரூபா. அதற்கு குறைய கொடுத்தால் வாங்கமாட்டாள். அவளிடமும் சில தர்ம குணங்களை இறைவன் வழங்கியிருந்தான் .முக்கியமாக நள்ளிரவில் தெருவில் கிடக்கும் அவளை யாராவது தழுவினாள் பாவம் என்று விட்டுக்கொடுக்கும் குணம்.

 என் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கடை வீதிக்கு சென்றிருந்தேன். சைலா அங்கு வருவாள் என்று யாருக்குத்தெரியும்? வந்தவள்  கொசுவத்தை பிரித்து பத்து ரூபா நோட்டை எடுத்து சொக்லட் வாங்கி பிள்ளைகளுக்கு கொடுத்தாள்.
 
ஆச்சரியத்துடன் அவளைப்பார்த்தபடி நின்றிருந்தேன். நிறைமாதமாய் சென்ற மாதம் கண்டது நினைவுக்கு வந்தது. எங்க சைலா உன்ற பிள்ளை? என்றேன். வெடித்துப்பறந்த மத்தாப்பூவாய் சிரித்து ஓய்ந்தவள் அதைக்காணல்ல என்றாள் சர்வசாதரணமாய்.

பிள்ளைக்கு சொந்தக்காரன் தூக்கிட்டுப்போயிருப்பான் என்றார் கடை முதழாளி.அதற்கும் அவளிடமிருந்து சிரிப்பு வெடித்துச்சிதறியது.அவர் கொடுத்த பத்து ரூபாய் நோட்டை வாங்கி கொசுவத்தின் முடிந்தபடி படியிறங்கிச் செல்லும் அவளை வியப்புடன் பார்த்தபடி நின்றேன்.

இவளுக்கும் அந்த மாய நதியானவளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு ஹசரத்.உங்கள் புருவங்கள் உயர்வது புரிகிறது. இவள் காசுக்குத்தழுவ தவமிருப்பவள்.அவள் பசித்தபோதெல்லாம் தழுவ உடல் விரிப்பவள்.

அவளின் பிள்ளை காணாமல் போனது ஆச்சரியமில்லை ஹசரத். அது குடிக்கும் முலைப்பாலை அவள் என்ன செய்கிறாள் என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். 
 
ஏனெனில் அது தழும்பி கசிந்து ஈரலித்துக் கிடந்ததை நான் எப்போதும் கண்டேனில்லை என்பது சைலாவின் அயலானான மம்மனிவாவின் சத்திய வாக்கு. டேய் மம்மனிவா நீ ஆரோக்கியமாக இருப்பதன் அர்த்தம் புரியவே இல்லடா சண்டாளா.

உங்களின் தீட்சண்யப்பார்வையில் இவைகள் பஞ்சமா பாதகங்களாக தெரிவதே இல்லையா ஹசரத் ? வானத்திற்கு மேலேயும் பூமிக்கு கீழேயும் உள்ள வாழ்வைப்பற்றியே குத்பா ஓதுகிறீர்கள். இடையில் உள்ள இடைவெளிக்குள் எத்துனை அரிதாரம், எத்துனை பகட்டு போலி?


உப குறிப்பு -6

ரிஸ்னி சாமியின் கள்ளக்காதல்

ரிஸ்னி ஆலிம் கடத்திச்செல்லப்பட்ட செய்தி ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை பரவியது. புலிகளும் இல்லை, வெள்ளை வானும் இல்லை,சி.ஐடி.யுமில்லை.
 
சமாதானம் பூத்துக்குலுங்கும் புண்ணிய பூமியில் ரிஸ்னி கடத்தப்பட்டது ஊர் மக்களை அதிர்ச்சியின் நுணிக்கே தூக்கிச்சென்று விட்டது. அவரைப்பற்றியும் அவரின் காம லீலைகள் பற்றியும் அரசல்புரசலாக கதைகள் வேறு இறக்கை முளைத்து பறக்கத்தொடங்கிய காலம்.
 
அதிகாலை வணக்கத்திற்கென பள்ளிவாயல் நோக்கி சென்றவரின் துவிச்சக்கர வண்டி முற்றத்தில் கிடந்தது. ஒற்றைப்பாதணியும் அதனருகே அநாதரவாக கிடந்ததாக ரிஸ்னி ஆலிமின் மனைவி புலம்பிக்கொண்டிருந்தாள்.

கடத்தியது யார்? ஏன் கடத்தினார்கள் என்பதெல்லாம் அவிழ்க்க முடியாப் புதிர்களாக ஊர் மனதை அரிக்கத்தொடங்கியது.

‘அது அவரு முன்ன ஒரு சிங்களக்குட்டியோட பழக்கமாம்.அவள்ர ஆக்கள்தான் பழிவாங்கண்டு கடத்தினயாம்’ சந்தியில் ‘டேஸ்ட் கடை’ வைத்திருக்கும் அனிவா கிசுகிசுத்தான்.

‘சே என்ன அனிவா ஒரு ஆலிம பத்தி கேவலமா கதைக்காய். சிங்களக்குட்டிய அவரு வச்சிருந்தாரா? நம்ப முடியலியே! அவருக்கு சிங்களமும் பேச வராதடா தம்பி, உசன் மறுத்துப்பார்த்தார்.

அனிவா விடுகிறபாடில்லை. ‘உசன் காக்கா நானும் அத நம்பலத்தான். அங்க வேல செஞ்ச எங்கட நானாட மகன்தான் விசயத்த உண்மைப்படுத்தினாரு. பள்ளிக்கு முன்னால ஒரு காமண்ட்ஸ். அதுல வேல செஞ்ச குட்டிய அவரு தூக்கிட்டுப்போய் கண்டியில குடும்பம் நடத்தினயாம்.
 
அது மஹல்லாவாசிகளால பிடிபட்டு இரண்டு பேருக்கும் நிகாஹ் செஞ்சி வச்சயாம், பிறகு…? அனிவா முடிப்பதற்குள் உசன் ஆவலில் உந்தினார். 
 
பிறகென்ன.. என்றவர் கடைப்பக்கம் திரும்பினார். இரண்டு இளவல்கள் பெஞ்சில் உட்கார்ந்திருந்தனர். என்னாம்பி என்றார். ரெண்டு டேஸ்ட் தாங்க காக்கா.நுரையீரலும் வெட்டிப்போடுங்க…

அனிவா இரண்டு பிளாஸ்ரிக் தட்டில் லஞ்ச் சீட்டை விரித்து அவித்த கிழங்குகளை நசித்து உப்பும் மிளகுத்தூளும் தூவினார். பின் பாபத் ஆணத்தை ஊற்றி நுரைஈரல் துண்டுகளை  நறுக்கிப்போட்டார். தேசிக்காய்சாற்றை மேலே பிழிந்து இரு பிளேட்டையும் மேசையில் வைத்து விட்டு உசன் காக்காவிடம் வந்தார்.

ம் ..பிறகு கதய முடியன் அனிவா, என்று அவஸ்தைப்பட்டார் உசன் காக்கா.. கிளைமாக்ஸ் கண்டு விடும் ஆவல் முகத்தில் ததும்பியது.

என்னத்துல காக்கா நான்  கதய உட்ட? அனிவா தடுமாறிய போது, உசன் அடிகளை எடுத்து கையில் கொடுத்தார்.ரெண்டு பேருக்கும் கலியாணம் முடிஞ்ச கதயில வுட்டாய், ‘ஓம் காக்கா அப்ப இவரு வெளிநாட்டுக்கு போறன் எண்டு போட்டு எயாபோட்டுல பின் வாசல் வழியா ஓடி ஊருக்கு வந்ததிட்டாரு வந்துதான் இப்ப இஞ்ச கலியாணம் முடிச்சயாம்..

 அது சரி அனிவா சாமி மாருக்கெல்லாம் கள்ளக்காதல் காதலி இருக்கிறதெல்லாம் சகஜம்தானே! நம்மட சாமியும் வச்சிட்டுப்போகட்டுமே.

அதெப்படி காக்கா ஊருக்கு உபதேசம் பண்ணுற ஆலிமு இப்படி செய்யிறத பார்த்தா நெஞ்சு பொறுக்குதில்லையே!.தண்ணிக்குள்ளாள நெருப்புக்கொண்டு போற மாதிரி,இவரு குர்ஆனுக்குள்ளாள காதல் கடிதமும் கொண்டு போயிருக்கிறார். ‘இவர கடத்துர அளவுக்கு நம்மட ஊர்ல பேயன் ஆரு இருக்கானுகள் அனிவா?’

இவரக்கடத்தி தும்புமுட்டாயி கூட வாங்கேலாதுண்டு தெரியும் காக்கா, அவரே போய் எங்கயாச்சும் ஒளிச்சிருப்பாரு. சிங்களவனுகள் சும்மா வுடுவானுகளா? சாமி நித்தியானந்தா உம்மை விஞ்சவும் எங்களுரில் விண்ணர் உண்டு தெரிஞ்சிக்கிடும்.

நீங்களே சொல்லுங்கள் ஹசரத்! இந்த முல்லாக்களுக்கெல்லாம் அல்லாஹ்விடத்தில் தண்டனை என்ன விதிவிலக்கா ? நீங்களும் கஞ்சா வாங்க சகீலாவின் வீட்டிற்குப்போவதாக அரசல் புரசலாக கேள்விப்பட்டன். 
 
பரவாயில்லை அதுக்கும் உங்களிடம் ‘பத்வா’ இருக்கும்தானே! கஞ்சாவும் பெண்களும் எங்களுக்கு ஹராம் என்று அச்சுறுத்தும் உங்களுக்கு சுவர்க்கமா நரகமா ஹசரத்?
   
2010.01.29



அறபுச்சொல் விளக்கம்

ஆலிம்,ஹசரத்,மௌலவி: இஸ்லாமிய மார்க்க போதகர்
அல்லாஹ்,ரப்பு:  கடவுள்
அகமக்கு :    முட்டாள்
பைஅத்:       உடன்படிக்கை
மூஸா நபி :   (மோசே) தீர்க்கதரிசி
பிர்அவ்ன் :    மோசே நபி காலத்து மன்னன்
துஆ:        பிரார்த்தனை
ஹிதாயத் :    நேர்வழி
கராமத் :      அற்புதம்
தஹஜ்ஜத் :    நடுநிசித்தொழுகை
ஹராங்குட்டி :  திருமண உறவுக்குப்புறம்பாக பிறந்தவர்கள்
ஹராம் :      விலக்கப்பட்டது
பத்வா :       மார்க்கத்தீர்ப்பு
நிகாஹ்:        திருமணம்
குர்ஆன்:        புனித வேத நூல்
குத்பா:        வெள்ளிக்கிழமை பிரசங்கம்.
மஹல்லா வாசி: ஊர் வாசிகள்

பிரசுரம் ஜுன் 2010   ‘உயிர் நிழல்’ பிரான்ஸ்

Tuesday 10 January 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


எங்கள் தேசம் பத்திரிகையில் தொடராக வெளிவரும் நினைவுக்குறிப்புகள்  
 
 
தொடர் - 5
 
நான் எப்போது எழுதத்தொடங்கினேன் என்பது நினைவில் இல்லை. வாசிக்கத் தொடங்கியது படிந்திருக்கின்றது. கடைகளின் முன்றலில் தொங்கும் விளம்பரப் பதாகைகளை எழுத்துக்கூட்டி வாசித்ததில் ஆரம்பித்தது.

அவசரமாக கடைக்குச்சென்றாலும் நாலு கடையை அண்ணாந்து பார்த்து வாசித்து விட்டு வருவதற்கிடையில் போதும் என்றாகிவிடும். கீழே கிடக்கும் துண்டுக்காகிதங்கள்,போஸ்டர்கள் அறைகுறை வாசிப்பின் தீனிகளாயின.

எனக்கு தூரத்து சொந்தம் பல்கீஸ் மாமி. அவவின் கையில் எப்போதும் குமுதம் ஆனந்த விகடன் இருக்கும். தலைப்பையும் படங்களையும் பலமுறை வாசிப்பேன்.

மாமி அசந்து தூங்கும் தருணங்களுக்காக காத்திருந்து தலைமாட்டிலிருந்து அந்தப்புத்தகங்களை உருவியெடுத்து வாசித்ததுண்டு. எதையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் ததும்பிய அந்த வயதில் பள்ளிப்புத்தகங்கள் மட்டும் கசந்தது எப்படி என்ற வித்தை இன்று வரை புரியமாட்டேன் என்கிறது.

ஆறாம் ஆண்டில் படிப்பதற்கு என் மாமா கபூர் மௌலவியின் வீட்டிற்கு உம்மா அனுப்பி விட்டா. அவரின் புத்தக அலுமாரிக்குள் நிறைய புத்தகங்கள் கட்டுக்கட்டாக இருக்கும். பெரிய பெரிய அட்டைகள். இஸ்லாமிய புத்தகங்கள், கதைப்புத்தகங்கள். புரிந்ததோ இல்லையோ அங்கிருந்து அக்கரைப்பற்றுக்கு செல்லும் வரை அந்தப்புத்தகங்களை வாசித்தேன்.

அப்துர்ரஹீமின் புத்தகங்கள் அங்குதான் அறிமுகமாயின. லைலா மஜ்னு,மஹ்ஜபீன் காவியம்,மும்தாஜ் சாஜஹான் வரலாறு மிக இலகுவாக புரிந்து கொள்ளும் மொழியில் இருந்தன. அக்காலத்தில் வாசித்ததில் மனதில்  நின்ற பாத்திரங்கள் அவை.

1984 என் நினைவில் படிந்திருக்கின்றது. தமிழரும் முஸ்லிம்களும் இரண்டறக்கலந்து வாழ்ந்த பொற்காலம். பிட்டும் தேங்காய்ப்பூவும் என்பார்களே அதை விடவும் நெருக்கமான உறவுக்காலம்.

ஒருவரோடொருவர் பின்னிப்பிணைந்து வாழ்ந்தது என்றால் மிகப்பொருத்தம்.
 மாமாவின் வீட்டிலிருந்து அவருக்கு தெரியாமல் எட்டு மைல்கள் நடந்து வந்தேன்.தன்னந்தனியே வனங்களை தாண்டி இருட்டில் நடப்பதென்பது ஆரம்பத்தில் தெம்பாக இருந்தது. நேரம் செல்லச்செல்ல மிருகங்களின் பறவைகளின் வினோத ஒலிகளும் குளத்திலிருந்து எழும்பும் அலைகளும் என்னை உறைய வைத்தன. 

அச்சத்தில் பெருங்குரலெடுத்து அழுதபடியே வாப்புப்பாவின் கடைக்கு வந்து சேரும் போது உம்மா இஷாத்தொழுகைக்கு வுழச்செய்ய செம்புடன் நின்றா.

எனது வாப்புப்பாவுக்கு ஒரு தோட்டமிருந்தது. ஐந்து ஏக்கர் விசாலமுள்ள தோட்டம் தோட்டம் முழுக்க பலா, தோடை,கொய்யா, மாதுள,அன்னமினா,என மரங்கள் அடர்ந்த பழமுதிர்சோலை.

வலது கோடியில் சின்னதாக ஒரு ஆட்டுப்பட்டி, வகிடெடுத்து விட்டாற்போல் மையத்தில் கோழிகளின் உறைவிடம். நாட்டுக்கோழிகளின் கும்மாளம் செக்கலுக்குள் கூடடைந்து குதூகலிக்கும்.

இரவில் பாம்புகள் கோழிகளை குறி வைத்து வரும், பகலில் நரியும் கீரிப்பிள்ளையும். வாப்பா அடிக்கடி எழுந்து ஆட்டுப்பட்டியையும், கோழிக் கூண்டையும் லைட் அடித்துப்பார்த்து விட்டு வருவார். 

அவரின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு ஒரு கோழியையோ ஆட்டையோ பாம்பு தீண்டியிருக்கும். இது எப்போதாகிலும் இடம்பெறும்.

ஒரு நாள் இரவு படுத்து கண்ணயரும் நேரம்.கோழிகளின் கூப்பாடு காதைக் கிழித்துக்கொண்டு வாடிக்குள் விழுகிறது. வாப்பா எவரெடியை எடுத்துக்கொண்டார். பக்கத்தில் அயர்ந்து தூங்கிய முத்து மாமாவையும் எழுப்பிக்கொண்டார்.அவர் கையில் பெரிய தடி.

கோழிக்கூண்டுக்குள் எவரெடியின் கண்கள் துளாவி ஒரு மூலையில் குத்திட்டு ஸ்தம்பித்து நின்றன.மறு மூலையில் கோழிகள் ஒடுங்கி அஞ்சி நின்றன.அவைகளின் கண்கள் மருட்சியில் மின்னின.ஒரு பேடு சிறகுகள் உதிர்ந்து செத்துக்கிடந்தது.

அடுத்த மூலைக்கு எவரெடி திரும்ப விரிந்த படத்துடன் நாகம்.கண்கள் ஜ்வலித்து நிலத்திலிருந்து இரண்டடி எழுந்து நின்றது.அதன் அகன்ற படம் அன்று பார்த்த முதல் நாக தரிசனம் பாம்பின் மீதிருந்த அபரித அசட்டு தைர்யங்களை துடைத்து எரிந்தது அதன் சீற்றம்.

சரியான மொத்தம் மச்சான் இதுக்கு நாம மட்டும் போதாது. மம்மலியயும் கூப்பிடுவம்.

உம்மாவை நான் எழுப்பி மம்மலிமாமாவை எழுப்பிக்கொண்டு வரும் மட்டும் படம் விரிக்கப்பட்டு சினத்துடன் சீறிக்கொண்டு மூலையில் நின்றது நாகம். 
வாப்பா கூண்டை  திறப்போம் என்றார். கூட நின்றவர்கள் வேண்டாம் என்றனர்.கோழிகள் பயத்தில் முனுமுனுத்தபடி கரைந்தன.

வாப்பா என்ன நினைத்தாரோ உம்மாவிடம்  ‘லாம்பெண்ண’ போத்தல தா என்றார். உம்மா ஓடிப்போய் ஓடி வந்தா .வாப்பா மண்ணெய் திரவத்தை அண்ணாந்து பார்த்தபடி தன் வாய்க்குள் ஊற்றினார். பின் பாம்பின் படத்தை நோக்கி ஆக்ரோஷமாய் சீறித்துப்பினார். பீய்ச்சியடிக்கப்பட்ட மண்ணெய் அதன் வழவழப்பான மேனியெங்கும் தகதகவென ஓடி இறங்கி முடிவதற்குள் படத்தை சுருட்டிக்கொண்டு பின் வழியால் நழுவியது.

மச்சான் லாம்பெண்ண பட்டது இனி பயமில்ல ஓடாது அடியுங்க முத்து மாமா கத்தினார். டோர்ச் வெளிச்சங்கள் ஏகத்திற்கும் பின் வழியால் திரும்பின.இருவரின் கையில் ஓங்கிய தடி.

வாப்பா உள்ளே சென்று தாப்புக்காட்ட அது பின்வழியால் நழுவவும் சட்சட்டென அடிகள் விழுந்தன. கயிற்றில் கட்டி மரத்தில் தொங்கப்போட்டு விட்டுப்படுக்கப்போயினர்.விடிந்ததும் வீரக்கதைகள் பேச அது சாட்சியாக அவர்களுக்கு தேவைப்பட்டது.

ஒரு நாள் இரவு ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த மலைப்பாம்பு ஒன்றை இப்படித்தான் இரண்டாக வெட்டி இரு வேறு இடங்களில் வெட்டிப்புதைத்தார்கள். பிற்காலத்தில் எழுதப்பட்ட பாம்பு குறித்த என்னுடைய  பாத்திரங்களின் விபரிப்பும் அவை கதைகளில் ஊடுறுவியதற்கு காரணியாகவும் அமைந்தது இந்தச்சம்பவங்களே.

பாம்பை இப்போது பார்த்தாலும் அழகும் பிரமிப்பும் இருக்கிறது. அதன் அமைதியான ஊர்தலில் பொதிந்திருக்கும் மரணத்தின் மௌனம் இரகசியமாக கிலி கொள்ளச்செய்வது.அழகிய விஷத்தை அடக்கிக்கொண்டு அது எவ்வளவு ஆர்ப்பாட்டமின்றி ஊர்ந்து செல்கிறது.

மௌனமே ஆபத்து நிறைந்தது என்பதை பாம்புகளிடம் கற்றுக்கொள்ள வைத்தது.இந்த பருவத்தில்தான்

ஊஞ்சல் இன்னும் ஆடும்......

எங்கள் தேசம் இதழ் : 212


Friday 6 January 2012

சிறுகதை: முள் வேலி



“என்னத்தெரியுமா ஸேர்” ?

குரல் வந்த திக்கில் திரும்பினான். சாண்டில்யனின் நாவல்களில் சித்திரிக்கப்படும்  அரசிளங்குமரியின் அழகினை நிகர்த்த ஒருத்தி எதிரே நின்றிருந்தாள்.

 அவளை கூர்ந்து பார்த்தவனின் விழிகள் ஒரு நொடிப்பொழுதில் சலனத்துள் அமிழ்ந்து பின் மீண்டன. அதிர்ச்சியுடன் அவளில் மொய்த்த விழிகளை பிய்த்தெடுத்து “தெரியாதே” என்றான்.

அவள் முகத்தில் ஏமாற்ற மேகங்கள் கருக்கட்டின.

தன்னை சுதாகரித்தபடி  “நான்தான் சங்கரப்பிள்ளையின்ர கடக்குட்டி பத்மப்பிரியா. நீங்க அப்ப சின்ன வயசில  என்னோட விளயாடக்குள்ள பத்மா என்டுதான் கூப்பிடுவீங்க மறந்துட்டிங்களா “?

அவன் மனசின் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தன.மேகம் உடைந்து திடுதிடுவென மழைகொட்டவாரம்பித்தது. நினைவின் ஓரங்களில் அவனின் பாட்டனின் கடையும்,பத்மாவின் நினைவும் பிம்பங்களாய் விழுந்து பெரு வெள்ளமாய் பெருக்கெடுத்தன. ஒரு மரக்கிளையில் சாவகாசமாக அமர்ந்து கொண்டு தன் அலகினைக்கோதியபடி ஓய்வெடுக்கும் ஜோடிப்புறாக்கள் போல்   ஒன்றன்பின் ஒன்றாய் நினைவுகளும்..

 “நீ பத்மா எப்புடி இந்தக்கோலத்தில “ ? அவன் நிஜத்தில் பிரமை பிடித்தவன் போல் பதகளிக்கத்தொடங்கினான். கருப்பு அபாயா, தலையில் சுற்றப்பட்ட துப்பட்டா இடுப்பில் ஒரு குழந்தை அவளின் அலைபாயும் விழிகள் போல் அந்தக்குழந்தையின் துறுதுறுக் கண்கள்.

 ஓவசியரின் ஆட்டு மந்தைகளை ஓட்டிச்சென்ற துடுக்கான குட்டியா இவள்.  பருவத்தின் வனப்பில் பூத்துக்கிடக்கும் அழகின் வனத்தை அள்ளிப்போர்த்தியிருக்கும் அபாயா ஒரு காப்பரண் போல்  அவளைச் சுற்றியிருந்தது. 
 
துயர சாகரத்தில் அடிபட்டு வாழ்க்கைக்கரையில் தத்தளிக்கும் ஒர் அபலைத்தனம் அவளில் கருவளையமெனப் படர்ந்திருந்ததை உளவியல் ஆலோசகனான அவன் மிக எளிதில் புரிந்து கொண்டான்.

“நான் இஸ்லாம் மதத்துக்கு வந்து இப்ப ரெண்டு வருஷம் ஸேர். கலியாணம் கட்டிட்டன். இந்தப்புள்ளயும் இங்க வந்து கிடச்சது. அந்த அல்லாதான் என்ன இஞ்ச கொண்டு வந்து சேர்த்தான்.”

 இடுப்பில் இருந்து திமிறிக்கொண்டிருக்கும் குழந்தை அவளைப்போலவே மூக்கும் முழியுமாக..

“உன்ர அவரு இப்ப என்ன செய்யுறாரு ” ?

“நான் வாண்டு ஒரு வருஷத்தால அவர ஆரோ சுட்டுப்போட்டானுகள்.. காட்டுக்கு மரம் வெட்டப்பபோனவரு, மய்யத்தா வந்தாரு ”

 அவள் மார்புகள் துயரம் தாழாமல் பொங்கிச்சரிந்தன. குரல் அடைத்திருந்தது.

இருபத்தைந்து வருஷத்திற்கு முன் சங்கரப்பிள்ளையும் அவர் குடும்பமும் இவனின் பாட்டனின் வாடிக்கு அடுத்தவாடியில் வசித்து வந்தனர்.  ஆடு மேய்ப்பதும் பராமரிப்பதும் பத்மா குடும்பத்தின் பரம்பரைத்தொழில் அப்போது இவன் சிறுவனாயிருந்தான்.
 
கிராமத்தில் ஒரு வாத்தியாரை வைத்துக்கொண்டு பாடம் நடத்திய காலத்தில் கொட்டகை வாசலில் மணலில் உட்கார்ந்தபடி படித்தது நினைவில் முட்டியது.பிஞ்சுப்புளியங்காயும் உப்புக்கல்லும் மறைத்து வைத்திருக்கும் அவள் இவனுடன் உரசியபடி  சண்டை போட்டபடி ஆரவாரத்துடன் வருவாள்.

அந்தப்பள்ளிக்கூட வாத்தியார் காலை பத்தரை மணிக்கெல்லாம் மினுமினுத்தவெளி வெட்டைக்கு கிளம்பி விடுவார். அவருக்கு அங்கு ஐந்து ஏக்கர் வயலும், சில ஆடுகளும் இருந்தன. நாங்கள் அரை மணி நேரத்திற்குள் பாடசாலையிலிருந்து நேரே ஆற்றுக்குக்கிளம்பிப்போய் மதியம் சாய்ந்தபிறகு வீட்டிற்கு செல்வோம்.
 
படித்துக்களைத்த எங்களை வீடு அமைதியாக வரவேற்று உள்ளிழுத்துக்கொள்ளும். பத்மா என்னுடன்தான் வீட்டில் சாப்பிடுவாள். அவளை வெளித்திண்ணையில் உட்காரவைத்து உம்மா சோறு போடுவா.

முதலாழிமார் கட்டிவரும் கிழமைச்சாமான்களிலும், சேனையில் விளையும் கிழங்குகளின் தயவிலும் பத்மா குடும்பத்தின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. 
 
தவிர சங்கரப்பிள்ளை நல்ல வேட்டைக்காரர் கட்டுத்துவக்கால் மான் சுட காட்டுக்குப்புறப்படும் போதே, முஸ்லிம் ஆக்கள் உண்ண வேண்டும் என்பதற்காக தக்பீர் சொல்லி அறுக்க முஸ்லிம் ஒருவரையும் கூடவே அழைத்துப்போவார்.

புறைவாடிக்கருகில்  இறைச்சியை காய வைத்து தேக்க இலையில் பார்சல் பண்ணி எதுவும் எதிர்பார்க்காமல் இவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைப்பார். உம்மா பதிலுக்கு அரிசி மூடையை அனுப்பி வைப்பா. எருமை மாட்டுத்தயிரை புதுச்சட்டியில் பத்மா காவிக்கொண்டு  கிழமைக்கு ஒரு தடவையேனும் வீட்டுக்கு  பத்மா வந்து போவாள்.

அவன் கடையிலிருக்கும் நேரங்கள் தவிர்த்து ஆற்றிலும் குளத்திலும் அலைந்து திரிவான்.சிறு கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு ஓடைக்கரையில்  விறால் மீன் வெட்டித்திரிவதும்,பனம்பழம் பொறுக்குவதும் வயல் வெளிகளில் காடைக்குருவி அடிப்பதுமாக அவர்களின் பொழுதுகள் இனிக்கும். 
 
பத்மாவுக்கு ஒர் அண்ணனும் இருந்தான் அவனும் இவர்களுடன் சேர்ந்து கொள்வான். மரமேறுவதில் விண்ணன். வாப்பாவுக்கு இவனில் கடுப்பு அதிகம். படிக்காம என்னத்துக்காம் இந்த தமிழ்க்குட்டியோட கூத்தடிக்கான் என்று உம்மாவிடம் கத்துவார். உம்மா செல்லமாக தலையை வருடிக்கொண்டு சொல்லுவா.

“அவள் பொட்டப்புள்ள அவளோட ஆத்துலயும் காட்டுலயும் சுத்தாம ஒழுங்கா இருந்து படிங்க மகன் .”

பத்மா ஆற்றுக்குள் மிதக்கும் தருணங்களில் இவன் வேண்டுமென்றே ஆற்றில் பாய்வான். காமம் கிளைவிடத்தொடங்கிய பருவம் .அவளும்தான் இந்தா அந்தா வெடித்து விடுவேன் என்று பயமுறுத்தும்  தோரணையில் பருவத்தின் விளிம்பில் நின்று கொண்டு வினோதம் காட்டினாள்.

“உன்ட அப்பா அம்மா மற்ற குடும்பமெல்லாம் எங்க பத்மா”?


“இப்ப நான் பத்மா இல்ல ஸேர் சாரா.”

அவன் வெட்கத்துடன் நாக்கை கடித்துக்கொண்டான். பேச்சு சுவாரஸ்யத்தில் அவள் புதியபெயரைக்கூட கேட்க மறந்த தனது கவனயீனத்தை நொந்து கொண்டான்.

அதைப்புரிந்து கொண்ட அவளின் இதழோரம்  இளநகைப்பூத்து பின் மறைந்தது.

அது வெயிலும் மழையும் ஏக காலத்தில் அடிப்பது போலிருந்தது.

 “எல்லாரும் அந்தப்பழய இடத்துலதான் இருக்காங்க… குழப்பம் வாரதுக்கு முதல் இந்தப்புள்ளயோட அப்பா மாடு வாங்க அங்க வாரவரு. அப்பதான் நாங்க ஒருத்தர ஒருத்தர் விரும்பினம், அப்பாவுக்கு தெரியாம ஓடிவந்திட்டன். இஞ்ச பள்ளியில கலிமா சொல்லித்தந்து முஸ்லிமாகி நல்லாத்ததான் வச்சிருந்தாரு. அவர சுட்டத்துக்குப்பிறகு அவர்ர தம்பி என்னக் கலியானம் முடிச்சாரு அதுவும் ….”

  வார்த்தைகளின் உயிர் நசுங்க அவள் அதரங்கள் நடுங்கத்தொடங்கின. இடுப்பிலிருந்த குழந்தை நழுவி நழுவி துடித்துக்கொண்டிருந்தது. இவனை பார்த்து விரல் சூப்பியபடி சிரித்தது. மூக்கின் ஓரம் சளியோடி உறைந்திருந்தது. 
 
சூழல் இருண்ட மவுனத்தில் உறைந்திருந்தது. பள்ளி;க்கிணற்றில் நீர் மொள்ளச்செல்லும் சிறுவர்கள் இவர்களை ஆச்சர்யமாகப்பார்த்தபடி சென்றனர் வெயில் கொதிப்பில் பூமி தகித்துக்கொண்டிருந்தது.ஆடுகள் வீட்டுக்கூரையிலும் மரங்களின் அடியிலும் அசைபோட்டபடி நின்றிருந்தன.

சங்கரப்பிள்ளையின் பின்னால் பாவாடையும் சட்டையுமாக இரட்டைச்சடை முன் புரள துள்ளித்திரியும் அந்தப்பத்மாதான் அவனுக்குள் தவிர்க்க முடியாமல் வந்து விழுந்தாள்.

 “ஏன் சாரா என்னவோ சொல்ல வந்தாய் ? ”

“இல்ல ஸேர்  ஒண்டுமில்ல” அவள் குரல் அடைத்திருந்தது. விழிகளில் நீர் மணிகள் சுரந்து ஒரு சொட்டு கன்னத்தில் சிதறியது. ஸ்காபின் நுனியால் அதை துடைத்துக்கொண்டாள்.அவள் கட்டுடல் அதிர்ந்து நடுங்கியதை இவன் கவனிக்கவே செய்தான்.  

“என்ன விசயமென்டாலும் பயப்பிடாம சொல்லு என்னால முடிஞ்சத செய்யிரன்.”

ஒரு கலகக்காரியாக துடுக்கான சின்னப்பெண்ணாக துள்ளித்திரிந்;த அவள் ஓவென்று உடைந்து அழுகையில் அவன் மனம் நொருங்கிச்சரிந்தது. அவளை தேற்றுவதற்கு வார்த்தைகளின்றி தவித்தான்.
 
“.சாரா அழாத கண்ணத்துரச்சிப்போட்டு சொல்லு.”

“நான் இஸ்லாத்துல வரக்கே எல்லாத்தையும் எல்லாரையும் உட்டுப்போட்டுதான் வந்தனான். ஆரயும் நான் கணக்கெடுக்கல்ல, அவர மட்டும்தான் தெரியும், நம்பி வந்தனான். அவரு போன பிறகு அவர்ர குடும்பம் என்ன பார்த்திருக்கனும்.

 அவங்களும் என்ன வேண்டாதவளாப்பார்த்தாங்க, கடைசியில ஒரு குடிகாரனுக்கிட்;ட என்ன ஒப்புக்கொடுத்து பாதுகாப்புத்தேடும்படியா ஆயிட்டு. இப்ப ஒரு பிச்சக்காரியா நடுத்தெருவுல நிக்கன்.” அவள் விம்மி விம்மி  கேவிக்கொண்டிருந்தாள். வார்த்தைகள் உயிரற்று அவள் காலடியில் சிதறின.

 “இப்ப அவனுக்கும் நான்தான் சோறு போடனும், இந்த ஊருக்க பிச்ச எடுத்தா அப்பாவுக்கு தெரிஞ்சிரும்,  மானம் போயிரும் தாங்க மாட்டாரு முஸ்லிம் ஆக்கள்ள இருந்த மரியாதையும் இல்லாம போயிடும்., அதனாலதான் வெளியூருல போய் பிச்ச எடுக்கன். ”

அவள் விழிகளின் மடை பெருக்கெடுத்தது.

“ஏன் சாரா அவருக்கு சம்பாதித்து உன்ன காப்பாத்த ஏலாதா?”

“அத ஏன் கேக்குரிங்க ஸேர் “

“அந்தாளு மரம் ஏறக்க விழுந்து காலுடைஞ்சி போச்சி,இது நடந்து ஒரு வருஷமிருக்கும். அந்த நேரம் இவரயும் புள்ளகளயும் காப்பாத்த பிச்ச எடுத்து சோறு போட்டன் அந்த திமிறுதான், கால் நல்லா வந்த பிறகும் கொழுப்பேறிப்போய் வூட்டுல கிடக்கார் . இந்த மனுசனுக்கும் நான்தான்  பிச்ச எடுத்து  தினமும் நூறு ரூவா கொடுக்கனும் இல்லாட்டி அடியும் உதயும்தான்”

“காசு குடுக்காட்டி தாண்டியடியில போய் கடனுக்கு தண்ணிவாங்கி குடுக்கனும் பள்ளி ஆக்கள்ட்ட செல்லவும் பயம். தெரிஞ்சா அடிச்சே சாகடிச்சிருவாரு”

அவள் குடிசை நிற்கும் திசையில் விழிகளை எறிந்தான்.புதிதாக காணித்துண்டுகள் பெற்றுகுடியேறியவர்களின் குடிசைகளின் மத்தியில் சாராவின் குடிசை உருக்குலைந்து பரிதாபமாகத்தெரிந்தது. சுழன்றடிக்கும் கச்சான் காற்று கிடுகுகளை ஆங்காங்கு இழுத்து வீசி தலை விரிகோலமாக அந்தக்குடிசையை கலைத்துவிட்டிருந்தது.

சகலதும் கணவன் என நம்பி வந்தவளின் வாழ்க்கையை பிச்சைக்கோலத்தில் பார்க்கையில் மனம் நடுங்கத்தொடங்கியது.

வாளிப்பான அவள் உடலின் மீது மொய்க்கும்இலையான்களின் தொல்லையிலிருந்தும் அவள் தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தன் வயிற்றுக்கும் பிள்ளைகளின் வயிற்றுக்கும் குடிகாரக்கணவனின் வயிற்றுக்கும் கஞ்சி ஊற்ற வேண்டும். கரும்புத்தோட்டம் போல் சரசரவென நிற்கும் சாராவின் திரட்சியான தோற்றம் அவனுக்குள் திகிலை ஊட்டியது.

“ஏன் சாரா நீ கைத்தொழில் தெரிஞ்சவள்தானே தெருத்தெருவா அலையாம அத செஞ்சி மானத்தோட வாழன்.”

“அதுக்கும் நாதியில்லையே ஸேர். அந்தா குடிலுக்குள்ள முடங்கிக்கிடக்கிறானே பாவி அவன் வுடனுமே”

அவன் பேச்சற்று சற்று நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற மன அவசம் தொற்றிக்கொண்டது. 
 
சமூர்த்தி ஊடாக சுயதொழிலுக்கான சிபாரிசை செய்யலாம்.. அவன் சிந்தனையின் ஆழத்தில் அமிழ்ந்து போகும் தருணத்தில் அவர்;களைத்தாண்டி பதற்றத்துடன ஒர் உருவம் சாராவின் குடிசைக்குள் நுழைவதைக்கண்டான்.

சாராவின் கண்களில் மருட்சியும் கிலியும் நிழலாடியது. அவள் நகங்களை கடிக்கத்தொடங்கினாள்.

“ஏன்ன சாரா ஏன் உன்ர முகம் மாறிட்டு அவன் யாரு. ஏன் அவனக்கண்டதும் நீ பயந்து நடுங்குறாய் கடன்காரனா ? “

“இவன் என்ட புருஷன்ட கூட்டாளி, இடுப்புல மறச்சி வச்சி தண்ணி வாங்கிட்டு போறான் .ஒவ்வொரு நாளும் வருவான் இரண்டு பேரும் குடிப்பானுகள். அவனுகளுக்கு நான் மீன் பொரிச்சி கொடுக்கனும். தேத்தண்ணி ஊத்திக்கொடுக்கனும். அவனுக்கிட்ட நிறைய கடன் வேற பட்டிருக்காரு. குடிச்சிட்டு அவன் என்ன படுத்துறபாடு நான் குடிலுக்கு வெளியில வந்து நிற்பன். இல்லாட்டி அவன் போரவரைக்கும் அக்கம் பக்கத்துல போய் கதச்சிருப்பன்.

 எனக்கு நரகம் மேல் ஸேர். நான்  சட்டியில இருந்து அடுப்பில உழுந்த பாவி”

 அவள் நடுக்கத்துடன் கேவத்தொடங்கினாள். அழுதழுது அவள் முகம் வீங்கிப்போய் இருந்தது. தன் குழந்தையை நெஞ்சுடன் இறுக அணைத்தபடி அவள் நடுங்குவதை பார்க்கத்திராணியற்ற அவன் வானத்தை வெறித்தபடி வெதும்பிக்கொண்டு நின்றான். பிரிக்கமுடியா மௌனம் அவர்களிடை குத்துக்கல்லாக அமர்ந்திருந்தது.


2009.06.23.

பிரசுரம் : வாழை மடல்
வாழைச்சேனை மத்தி பிரதேச சாஹித்ய மலர் 2009

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...