Friday, 22 May 2015

விசித்திர மனிதர்கள்.


எனக்கு சில வித்தயாசமான நண்பர்கள் வாய்த்திருந்தார்கள்.
அவர்களின் எதிராளிகளுடன் நான் நட்புடன் இருக்கக்கூடாது என்கிற ரகம்.
அவர்களின் நண்பர்களை நான் எதிராளியாக பார்க்க கூடாது என்கிற ரகம்.
யாரையாவது சகட்டு மேனிக்கு விமர்சித்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிற ரகம்.
இந்த விசித்திர மனிதர்களின் மனங்களில் கொட்டிக்கிடப்பதென்ன வக்கிரமா ? மன வியாதியா ? மனப்பிறழ்வா ? என்பதில் எனக்கு இன்னும் தெளிவில்லை. ஒருவரை காட்டமாக விமர்சிக்கும் போது அதில் நியாயத்தன்மை பேணப்படல் வேண்டும். நண்பர்களாக இருந்து விட்டு போகட்டுமே. அதனால் என்ன குறைந்துவிடப்போகின்றது.
ஓவ்வொருவருக்கும் தனித்தன்மை குணாதிசயங்கள் என்பதில் மாறுபட்ட சிந்தனைகள் இருப்பது மறுதலிக்க முடியாது.
இன்று ஐக்கியப்பட்டுள்ளவர்கள் நாளை கருத்து வேற்றுமையால் பிரிந்து செல்வதற்கும், பிரிந்து நிற்பவர்கள் சேர்ந்து பழகுவதற்கும் நிறைய சந்தர்ப்பங்கள் உருவாகும் கட்டமைப்பில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்ந இடைவெளியில் அவசரமாக விமர்சனங்களை அள்ளி வீசுவதும்,இடைவெளிகளில் மலத்தினை தெளித்து குரூரமாக அழகுபார்ப்பதும் ஜீரணிக்கமுடியாத விடயங்கள்.
நீண்ட நாள் நட்பின் பிரதிபலனை  இவ்வாறான வக்கிரமான சிந்தனைகள் சின்னாபின்னமாக்கி சீரழித்து விடுகின்றது.
கருத்துப்பரிமாற்றத்தில் நாகரீகமான வார்த்தைகளை கையாளத்தெரியாதவர்களின் அந்தரங்கள் அசிங்கங்களின் மொத்த வடிவமாக இருப்பது அவர்களுக்கே தெரிவதில்லை. பூனை கண்மூடிக்கொண்டு பாலை அருந்துகையில் உலகுக்கே தெரியாமல்தான் நான் அருந்துகின்றேன்.என்று நினைப்பதுண்டு அவ்வாறுதான் எனது நண்பர்களும் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிந்து பார்த்து மூக்குடையப்போவதை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு விடயத்தை விமர்சிப்பதற்கும் கருத்து சொல்வதற்கும் எல்லோருக்கும் உரிமையுள்ளதைப்போல் அதனை மறுதலித்து மாற்றுக்கருத்துக்களை சொல்வதற்கும் மற்றவர்களுக்கு உரிமை உண்டு.சொல்லப்படும் மொழிதான் இங்கு முக்கியம்.சொல்பவர்கள் யாராகவும் இருந்து விட்டு போகட்டும்.ஒரு முஸ்லிமின் பண்பின் சிகரமே இந்த இதமான  வார்த்தைகள்தான்.

மடியில் கணமில்லாதவனுக்கு வழியில் பயமில்லை என்பதற்கொப்ப  நமது வாழ்க்கை  ஓரளவு மற்றவர்களுக்கு பொல்லாப்பு இல்லாமலும் பொல்லாங்கு இல்லாமலும் ஓடிக்கொண்டிருக்கின்றது.அப்படி வாழத்தெரியாமல் சாக்கடையில் இருப்பவர்கள் மற்றவர்களின் விடயத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்காமல் தன் பிழைகளை திருத்தி வாழப்பழகிக்கொள்ள வேண்டும்.

எனக்கு மனிதர்களின் அந்தரங்களை தோண்டி எடுத்து வைத்துக்கொண்டு விமர்ச்சிக்கும் ஆற்றலில்லை.அவ்வாறான பண்பாட்டிலும் வளர்ந்தவனல்ல.நல்லதை தடடிக்கொடுத்து தீயதை நாகரீகமாக சுட்டிக்காட்டிக்கொண்டு என் பயணம் தொடர்கின்றது.

பிரபாகரன் வெற்றியின் உச்சத்திலிருந்த 95 காலப்பகுதியிலும் பத்திரிகைகளில் அவருக்கு பகிரங்க கடிதங்களை எழுதியவன்.என் எழுத்துக்களுக்காக பல கொலை மிரட்டல்களை சந்தித்தவன்.இடுப்பில் முதுகெலும்பில்லாதவர்கள் செய்வது போல் முகம் மூடிக்கொண்டு அடையாளங்களை மறைத்துக்கொண்டு எதனையும் செய்து பழக்கமில்லை.நிறைய நண்பர்கள் எனக்கு சம்பந்தமில்லாவற்றை என்னுடன் பொருந்திப்பார்த்து பொருமிக்கொண்டிருக்கின்றார்கள்.அது அவர்களின் அறியாமை.
ஒருவர் நல்லது செய்கின்றார் என்பதற்காக அவரை தலையில் வைத்துக்கொண்டு ஆடி மகிழவும்,பின்னர் பிடிக்கவில்லை என்பதற்காக திரைமறைவில் நின்று கொண்டு அவருக்கு கல்லெறிவதையும் குலத்தொழிலாக கொண்டு ஆற்றுபவர்களைப்போல் நம்மால் வாழமுடியாது. உண்மையான நட்பு என்பது குற்றம் செய்யும் போது தவறிழைக்கும் போது கூடவே இருந்து திருத்துவது. இன்று திருத்துவதற்கு பதில் ஆஹா போட்டு கூஜா தூக்கும் நக்குப்பிழைப்புத்தான் மலிந்துள்ளது.

இந்த செஞ்சோற்றுக்கடன்தான் நமது கண்களை குருடாக்கி மற்றவர்களின் மானத்தையும் கடைவிரித்து கூவி விற்கும் அளவிற்கு மாறிவிட்டது.
இத்தகைய செயல்கள் நட்புடன் பழகுவதற்கு உகந்தது அல்ல என்பதை அறிந்துதான் ஒழுக்கமற்றவர்களை என் நண்பர்களாக ஏற்றுக்nhள்வதில் தயக்கம் காட்டுவதுடன்,அவர்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஆற்றுப்படுத்தவும் முயற்சிக்கின்றேன்.

நடுக்கடலில் விட்டாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்  என்றால்  நாமென்ன செய்வது ?

நாற்றமடிக்கும் வலைப்பூக்கள்

     ண்மைக்காலமாக முக நூலில் படித்தவர்களின் பண்பாடுகள் பொது வெளியில் வயிற்றைக் குமட்டுவதை அவதானிக்க முடிகின்றது.
உயர் பதவியில் இருப்போர்,படித்தவர்கள் என மக்களால் நம்பப்படும் நபர்கள் போலி முகநூல் பக்கங்களில் வந்து நாற்றம் வீசும் சொற்களை விதைப்பது நல்ல பண்பாட்டின் குணாதிசயமாக தெரியவில்லை.இஸ்லாத்தின் நிழலில் வளர்ந்த இத்தகையவர்கள் எழுதுவதற்கு முன் தன் எழுத்துக்களை பொது வெளியில் எல்லோரும் படிக்க நேர்கின்றது என்பதை வசதியாக மறந்து விடுகின்றார்கள்.
புடிப்பதற்கு அருவருத்தக்க விடயங்களையும் ,புகைப்படங்களையும் இடுவதன் மூலம் எதனை சாதிக்கலாம் என அவர்கள் நினைக்கின்றார்கள் என தெரியவில்லை. தனி மனிதனின் மானம் கௌரவம் பாதுகாக்கப்படல் வேண்டும் என்று நபிகளார் தனது இறுதி ஹஜ்ஜின் அறபாப்பெருவெளியில் பிரகடனம் செய்ததை சற்று நினைவில் கொண்டால் எழுதுவதற்கு முன் அல்லாஹ்வைப்பயந்து கொள்வார்கள்.

‘நீங்கள் நன்மையின்பாலும் இறையச்சத்தின்பாலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து கொள்ளுங்கள்.தீமைக்கும் பகைமை பாராட்டுவதிலும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்க வேண்டாம்’ என அல்குர்ஆன் போதிக்கின்றது.
நமது கிராமத்திற்கு ஒரு நல்ல திட்டம் வரும் போது அதனை யார் செய்தால் என்ன  ஆதரித்து , கொண்டு வந்து சேர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர , அதனுடன் சம்பந்தப்பட்டவர்களின் அந்தரங்களை தோண்டி முக நூலில் வீசுவதென்பது நபிகளார் காட்டித்தராத பண்பாடாகும்.

எல்லாத்திட்டங்கிளலும் குறைகள் இருக்கத்தான் செய்யும்.குறைகளை நாகரீகமாக சுட்டிக்காட்டி சீர் செய்ய பங்களிப்பு செய்வதனை விடுத்து திட்டங்களை முன் மொழிந்து நடைமுறைப்படுத்தும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் அவர்களின் படுக்கறையறைக்குள் புகுந்து நிர்வாணப்படுத்தி அழகுப்பார்ப்பது நமது வக்கிர மனத்தின் உச்ச கிறுக்குத்தனத்தை காட்டும் கோழைத்தனமான செயல்.

அல்லாஹ்வால் அறிமுகுப்படுத்தப்படாத நபிகளாரால் அமுல்படுத்தப்படாத எந்த திட்டத்திலும் மனிதர்கள் என்ற வகையில் குறைகள் இருக்கத்தான் செய்யும்.அதனை சுட்டிக்காட்டி திருத்தும் நடைமுறையில் அநாகரீகம் பேணப்படுகின்றது என்பதே நமது வருத்தமாகும்.
ஈஸ்ட்மிரர் ,கல்குடா ஜேர்னல் உள்ளிட்ட அநாமேதைய வலைப்பூக்களை நடாத்துபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.அநியாயம்,ஊழல், இவற்றிக்கெதிராக குரல் கொடுக்கின்ற போது தனிமனிதர்களின் அந்தரங்களை கிளறி அதனுள் குளிர்காய்வதை விடுத்து ஆக்கபூர்வமான காத்திரமாக கருத்துக்களை முன் மொழிந்து சமூக மாற்றத்திற்கு உங்களின் பங்களிப்பை வழங்குங்கள்.

இன்று சக மனிதனின் மானத்தினை கப்பலேற்றும் உங்களுக்கு நாளை ஒருவன் உங்களின்  அந்தரங்களை அரங்கேற்ற  ஒரு சந்தர்ப்பத்தினை வழங்க நீங்களே வழியமைத்துக்கொடுத்து விடாதீர்கள். 
தவிர ஒரு முஸ்லிமின் குறைகளை இம்மையில் மறைத்தால் மறுமையில் அல்லாஹ் உங்களின்குறைகளை மறைத்து விடுவான்.என்ற நபிகளாரின் பொன் மொழியை நினைத்துப்பாருங்கள். நமது பொது வாழ்வில் பல்லாயிரம் குறைகளுடன் நாற்றத்துடன் வாழ்ந்து கொண்டு ‘இறாலை’ப்போல்  மற்றவர்களை நோக்கி மூக்கைப்பொத்திக்கொண்டு உன்னிடம் துர்நாற்றம் வீசுகின்றது என சொல்லும் போது நமது மனசாட்சியை எங்கே அடகு வைத்து விட்டு சொல்கின்றோம்.
பாதிக்கப்பட்டவர்களின் மனம் நொந்த துஆக்கள்  உங்கள் பிள்ளைகளை மனைவியை எச்சந்தர்ப்பத்திலேனும் தாக்கம் செலுத்தாது என்பதற்கு எந்ந உத்திரவாதமும் இல்லை.ஏனெனில் அது யாராக இருந்தாலும் திரையின்றி அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படும்.

பொது வெயில் எழுத்துக்களை பதியும் போது அதனை எல்லோரும் விரும்பிப்படிப்பதற்கும் அதிலுள்ள உண்மைத்தன்மையை  பிரஸ்தாபிப்பதற்கும் விவாதிப்பதற்குமான நாகரீகம் கற்றவர்களிடம் இருக்க வேண்டும் 

சமூக சீர்திருத்தம் பற்றி எழுதுவதற்கும் சிந்திப்பதற்கும் எவ்வளவோ விடயங்கள் உள்ள இத்தருணத்தில் முட்டையில் மயிர் பிடுங்கும் இழிச்செயல்கள் தேவைதானா?  என்பதை போலி முகவரியில் போலி பெயர்களில் இயங்கும் அனைத்து வலைப்பூ மற்றும் முகநூல் சகோதரர்களையும் சிந்திக்குமாறு தயவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
ஆன்மீக வறுமை,கலாச்சார சீரழிவு வழிகெட்ட சீஆசிந்தனை என  இந்தக்கிராமத்தின் தலைவிதியை மாற்றிக்கொண்டு வரும் கொடிய நோய்களை இனங்கண்டு அவற்றிக்கெதிராக உங்கள் எழுத்துக்களைப் பயன்படுத்துங்கள். ஆரோக்கியமாக அரசியல் தலைமைத்துவங்களை கட்டியெழுப்பவும் அதனை ஸ்திரப்படுத்தவுமான நியாயமான காரணங்களை மக்களுக்கு நடுநிலையாக முன் வையுங்கள். கடந்த காலங்களில் அரசியல் அநாதைகளாக இருந்த போது நிகழ்ந்த அசம்பாவிதங்களை மக்கள் முன் தெளிவு படுத்துங்கள்.இருக்கின்ற தலைமைகள் விடுகின்ற தவறுகளையும் செய்ய வேண்டிய பணிகளையும் இடித்துரையுங்கள்.

இதனை விடுத்து மற்றவர்களின் மனைவியை சகோதரியை நீங்கள் இழுத்து வைக்க அவர்களோ  உங்களின் மனைவியை இழுத்து வைத்து துகிலுரிக்க …….. 
இதுவா இன்றைய தேவை

தயவு செய்து இணையத்தளங்களில் இத்தகைய இழிவான வார்த்தைகளை நீக்கிவிடுங்கள். எழுதுவதற்கும் பேசுவதற்கும் இஸ்லாம் நாகரீகமான வார்த்தைகளை சொற்களை கற்றுத்தந்துள்ளது.அதனை தத்தெடுத்து எழுதிப்பாருங்கள் உங்கள் எழுத்தில் சத்தியத்தின் ஜீவ ஒளி வீசத்தொடங்கும்.

   

Wednesday, 20 May 2015

வட்டியின் அதிகாரம்.

வட்டிக்கு  வம்பிழுக்கும் கூட்டம்

வட்டியின் கொடிய கரங்கள்  அனைவரினதும் வீட்டின் கதவுகளையும் வேகமாக தட்டிக்கொண்டிருக்கின்றது.சமூர்த்தி என்ற பெயரில் வீட்டுக்கடன் என்ற பெயரில் மானியம் என்ற பெயரில் போர்வைகளை மாற்றிக்கொண்டு வட்டியின் நிழல் பின் தொடர நாம் அதன் குளிர்ச்சியில் சுகம் காணத்தொடங்கிவிட்டோம்.
வட்டிக்கு விண்ணப்பித்து பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளதாதவர்கள் அதிகாரிகளிடம் வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கு நின்று வம்புக்கிழுத்து சமர் செய்யத்துணிந்து விட்டனர்.
வட்டி நம் சமூகத்தின் கண்களை குருடாக்கியது போல் வேறொன்றும் குருடாக்கவில்லை.
குளிர்சாதனபெட்டி,எல்சி. டிவி.கையடக்க தொலைபேசி,சோபா செட் அலுமாரி,மின்சார உபகரணங்கள் என அனைத்திற்கும் வட்டியின் பெயரால் கடன் வழங்கப்படுகின்றது.
பழைய வாகனங்களை  விற்றுத்தொலைத்து விட்டு புதிதாக வாங்கிப்பயணம் செய்ய கம்பனிகள் தயாரா ஆள்பிடிக்க காத்திருந்து கவ்விக்கொண்டு ஓடுகின்றன.
வட்டியில்லாமல் மூச்சுவிடமுடியாத அளவிற்கு வட்டி நம்மை நரகத்தின் குகைக்குள் தள்ளிவிட்டு தீ மூட்டியுள்ளதை அறிந்தும் விழுந்து எரிவதற்கு நாம் தயாராகியுள்ளதை விதி என்பதா அல்லது சதி என்பதா ?