Monday 4 July 2011

அன்புள்ள பீமா........

காலையில் பிள்ளைகளை நேரத்திற்குப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்ற 'டென்ஷ'னில் சுஹா ஆலாய் பறந்து கொண்டு கட்டளைகள் இட்டபடி சமையலறைக்குள் குதித்துக்கொண்டிருக்கின்றாள் .நான் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற பரபரப்புக்கு மத்தியில் குளியலறையில் தண்ணீரை வழிய விட்டு குளிர்ந்து நிற்கிறேன் . வீட்டுத்தொலைபேசி அலறித்துடிக்கிறது.
யாரது காலையில் என்றபடி அவள்தான் சென்று 'ரிசீவரை' காதில் பொருத்தியவுடன் 'என்ன மாமா 'என்கிறாள்.
முறுவல் பூத்த முகத்தின் மஞ்சளிப்பு எனக்கு நன்றாகத் துலங்குகின்றது.
'குளிக்கிறாக' ! என்றவுடன் அங்கிருந்து அடுத்த கேள்விக்கு
'இப்ப பெய்த்திடுவாக' என்கிறாள்.
எப்ப மாமா என்ற ஆச்சரியங்களை மேவிய அவள் கேள்வியில் வியப்பின் உச்சம் தெரிகிறது. 'ஆ..சரி மாமா வந்தவுடன் சொல்லுறன்'.தொலைபேசி மறுமுனையில் துண்டிக்கப்பட்டதும் ரிசீவரை வைத்து விட்டு குளியலறைக்குள் பார்வை விழுகிறது.
கண்ணாடிகளினூடே எஸ்.எல்.எம்.மாமா என்கிறாள்.என்னவாம் என்றேன்.இந்நியாவுக்கு கப்பலில போகப்போறாகளாம்.
தனியாகவா இல்ல மாமியும் கூட?
'இல்ல யோகராசா சேரும் இன்னும் பலரும்.மற்றத நீங்க வந்து கேளுங்க'' என்றபடி பிள்ளைகளை விரட்டத்தொடங்கினாள்.
போகிற போக்கில் இன்னொரு தகவலும். 'ஏதாவது நேர்ச்சை இருந்தா தரட்டாம் அப்படியே அவ்லியாக்கள்ற கையில கொடுத்திட்டு வருவாகளாம் என்றவளின் எகத்தாளச்சிரிப்பு சமையலைறைக்குள் நிறைந்து ததும்புகிறது.
நிச்சயம் ஆப்தீன் காக்காவுக்கும் இந்த தகவலை. சொல்ல வேண்டும்.
நான் இந்தக் கடிதத்தை எந்த அவ்லியாவுக்கு சமர்ப்பிப்பது என்பதில் குழம்பித்தான் போனேன்.
கூடவே சில நேர்ச்சைகளும் என்னிடம் உண்டு .இந்தியாவுக்கு கொடுத்தனுப்ப வேண்டும்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எல்லா குப்பைகளையும் தேடினேன். சுப்ஹான மெளலீது, முஹ்யித்தீன் மெளலிது,மீரான் சாஹிபு மெளலிது,தலைப்பாத்திஹா,ஸலாதுன்னாரியா,சைதூன் கிஸ்ஸா,வெள்ளாட்டி மசாலா, சீராப்புராணம், யாகுத்பா, ஒடுக்கத்துப்புதன்,பராஅத்,கந்தூரி, கத்தம்,பாதிஹா,தாயத்து,மந்திரம், நூல் கட்டுதல்,ராதிபுகள்,நூறு மசாலா,தீன் சாயம் பூசிய இலக்கிய இதிகாசங்கள் இன்னும் பல.. தினுசுகளையும் சேர்த்து அனுப்புகின்றேன்
ஒன்பது அடுக்கு கப்பலில் இதெல்லாம் கொண்டு போய் என் குருநாதர் எஸ்.எல்.எம். எங்க கொட்டுவார்.? இலக்கி மேடைகளில் கொட்டும் பொய் புரளிகளையும், அரசியல் மேடையில் அள்ளி வீசும் கள்ளத்தனங்களையும் கேட்டுப்பழகிய நமக்கு அமெரிக்கா கொட்டும் கோதுமையை விட கொஞ்சம் மிஞ்சிய இந்தக்குப்பைகளை கொட்டவா கஷ்டம் வரப்போகிறது. இருந்தாலும் கொடுத்தனுப்பத்தானே வேண்டும்.

'கடலோரம் வாழும் பீமாவுக்கும்,பைத்தியங்களை சங்கிலியால் கட்டிப்போடும் நாகூர் ஆண்டகைக்கும். இன்னும் பிற ஏகப்பட்ட அவ்லியாக்களுக்கும்........
உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!
மேற்படி பொதிகளை உங்கள் மண்ணுக்கே மீளவும் திருப்பி அனுப்புவதில் கொஞ்சம் சங்கடம்தான்.என்ன செய்ய மார்க்கம் என்ற பெயரில் இங்கு கொண்டு வந்தவைகளை மீளவும் திருப்பி அனுப்புவதில் கொஞ்சம் திருப்தியும்தான்.
எங்கள் ஆலிம்சாக்களின் வயிறு எரிய எரிய இதை 9 அடுக்கு கப்பலில் கீழ் அறையில் போட்டு அனுப்புகின்றேன்.
கடலில் இவைகள் விழுந்து கடல் நஞ்சாகாமல் இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் காப்பாற்றுவானாக !
இந்த புராணங்களை தயவு செய்து அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
எனக்கு சில ஐயங்கள் உண்டு எப்பவும் தீர்க்க முடியாத அகல முடியாத ஐயங்கள்.
ஏகப்பட்ட கபுறடிகள் உங்கள் பெயரால் தீன் குலத்தவரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அரசியல்வாதிக்கும்,நடிகர் நடிகையர்க்கும் இரசிகர் மன்றம் திறப்பது போல் உங்கள் பெயரால் பல கபுறுகள் திறந்து வைக்கப்பட்டு கூத்தும் கும்மாளமுமாய் இஸ்லாமியர் வாழ்வு கொடி கட்டிப்பறக்கிறது.
படைத்தல், காத்தல்,பாதுகாத்தல் மூன்று செயல்களுக்கும் அல்லாஹ் தானே பொறுப்பென்று அறுதியிட்டுக்கூற, நாங்களோ மூன்றிக்கும் வெவ்வேறு அவ்லியாக்களையல்லவா நாடிப்போகிறோம்.
கடலில் வந்த சுனாமியை முஹ்யித்தீன் அப்துல்காதர் ஏன் தடுக்கவில்லை என்ற ஐயத்துடன் ஆயிரக்கணக்கான மனித உயிர்களை கடல் காவு கொள்கிறதே அதையும் அவர் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கின்றாரா?
இந்தியாவிலிருந்து உங்கள் பெயரால் வந்தவைகளை அனுப்பும் காலம் கனிந்து விட்டது.
இராமர் பாலத்தையாவது முஹ்யித்தீன் ஆண்டவர் பாதுகாக்கத்தவறிவிட்டார் என்பது என் வலுவான குற்றச்சாட்டு.இலங்கைக்கு கப்பல் விட்டதனால் தமிழினப்போராளிகளின் நெஞ்சங்கள் கருகித்தீய்கின்றன.
நீங்களோ அவரோ (முஹ்யித்தீன்ஆண்டவர்) சீமான் போன்ற பெருந்ததலைவர்கள் தற்கொலை செய்யப்போவதை தடுத்திருக்கலாம்.
ஜெயலலிதா அம்மாவுக்கு சீமான் விடுத்திருக்கும் காலக்கெடு முடிவதற்குள் உங்களால் முடிந்தால் முஹ்யித்தீன் ஆண்டவரிடம் சொல்லி புதையுண்டு கிடக்கும் பாலத்தை இந்து சமுத்திரத்தின் மேற்தளத்திற்கு கொண்டு வர ஆவண செய்யுங்கள்.
என்னதான் போராடினாலும் கடவுளின் பாலத்தில் தற்கொலை செய்ய சீமானும் நெடுமாறனும் துணியவா போகிறார்கள்?
தமிழ் சினிமா பெண்களின் தொப்புளில் கோழிக்குஞ்சு மட்டும் தான் பொறிக்கவில்லை. உங்கள் கபுறடிகளுக்கு நேர்ச்சை செய்ய வரும் பெண்களின் தொப்புளில் வயிற்றில் மற்றும் பிற அங்கத்தில் மந்திரிக்கின்றோம் என்ற பெயரில் லெப்பைக்கூட்டம் நடாத்தும் காம லீலைகள். இவர்களின் கைகளை இன்னும் நீங்கள் சுத்தமாக வைத்திருப்பது ஏன் என்பது என் ஐயங்களில் ஒன்று.
உங்களின் பெயரால் இருக்கும் கபுறடிகளைச்சூழவும் கள்ள ஜோடிகள் தங்க லொட்ஜீம்,அருகில் கருக்கலைப்பு நிலையங்களும் முளைத்திருப்பது உங்கள் கராமத்துக்களில் ஒன்று தானோ?
மார்க்கத்தின் பெயரால் உங்களை காட்டி பயமுறுத்தி பிழைப்பு நடாத்தும் புரோகிதக்கும்பலை விரட்டினால் இஸ்லாம் சுத்தமாகி விடும். என்ன செய்ய அந்த சக்திதான் உங்களுக்கு இல்லையே!
ஒன்பது அடுக்குக்கப்பலில் இனி உங்களை நாடி வரும் அறியாமைக்கூட்டமும் நிச்சயம் சேர்ந்து வரும் .உங்களுக்கும் இனி 'நல்ல காலம் பொறந்திருக்கு' என்று தூத்துக்குடியில் வந்திறங்கி நானும் பாடத்தான் போகிறேன். என்னுடன் குத்தாட்டம் போட நயனை பிரபுதேவா விடவா போகிறார்?
கடலோரம் வாழும் பீமாவே !
முடிந்தால் தமிழ் இலக்கிய விழாவிற்கு வரும் அவருக்கு உங்கள் புண்ணியத்தில் ஒரு பயணப்பையை அன்பளிப்பாக கொடுக்க பேராசிரியர் ஹாஜி கே.எம்.காதர் மொஹிதீன் அவர்களுக்கு சிபாரிசு செய்யுங்கள்.சிபாரிசு இல்லை என்றால் பொன்னாடை ஏது?பட்டங்கள் ஏது? பொற்கிழிகள் ஏது ?
தயவு செய்து அவருக்கு இலக்கியச்செம்மல், அல்லது வேந்தர்,போன்ற பட்டங்களை வழங்கிவிடாதீர்கள்.அதை தாங்கும் சக்தி அவருக்குக்கிடையவே கிடையாது.
அன்புடன்
அறபாத்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...