Saturday 23 July 2011

காத்திருந்த மரணப்பொறி.....

னக்கு ஒரேயொரு பெரியம்மா. அவவின் பெயர் வெள்ளையும்மா .ஆள் பொது நிறம்.பெரியப்பா ஒர் அப்பாவி.மூத்தது பெண் இரண்டாவது ஆண். பெயர் ஹயாத்து முஹம்மது. குடும்பத்தில் உள்ளவர்கள் 'அயாத்தமது' என்று கூப்பிடுவார்கள். நான் 'அயாத்து காக்கா' என்பேன். பெரியப்பாவை போல் அவனும் ஒர் அப்பாவி. படிப்பு ஏறவில்லை. வயலுக்கு குருவிக்காவலுக்கு அனுப்பி விட்டார்கள்.
'கிடச்சிமடுக்கண்டத்தில் தாய் மாமனின் வயலுக்குள் விழும் குருவிகளை விரட்டும் தொழில் அவனுடையது.
எதற்கும் பயந்த அப்பாவி முகக்களை. சனத்திரளுக்குள் வரமாட்டான்.அவ்வளவு கூச்ச சுபாவம். அதைவிடப்பயம் காக்கி ஆடைகளைக்கண்டால்.
நான் சொல்வேன் 'காக்கா காக்கி சட்டயக்கண்டா ஓடாதீங்க. சந்தேகம் வரும் சுட்டுப்போடுவானுகள்' அதற்கு ஒரு வெகுளிச்சிரிப்பு பதிலாக வரும். 'நம்மளச்சுட ஆருக்கு தைரியம் வரும் ' என்பது போல் இருக்கும் அந்தச்சிரிப்பு.
புலிகள் துள்ளித்திரிந்த காலம்.ஆட்சியென்றால் அப்படியொரு ஆட்சி.எங்கள் ஊரில் ஏரியா பொறுப்பாளராக புஹாரி. சீர் திருத்தவாதியாக... ஹீரோவாக.. அவர் கையில் எப்பவும் ஒரு "மெசின் கண்" ஒரு கோழியை சுடுவதற்கும் முப்பது குண்டுகளை அநாயாசமாக பொரிந்து தள்ளும் மாவீரர்.
உம்மா ஆசையாக வளர்த்த ஒரு பாணிச்சேவலை முப்பதுக்கும் மேற்பட்ட குண்டு களை செலவழித்து சுட்டுக்கொன்றது என் மனக்கண்ணில் நிற்கிறது.
முள்ளிவெட்டவான் கடையின் பின் வளவில் தீனி பொறுக்கிக்கொண்டிருந்த சேவலையொத்த பல சேவல்கள் அவரின் துப்பாக்கிக்கு இரையாகியிருந்த காலம் அது.
பொத்தானையில் அஹமது காக்காவின் கடை,முள்ளிவெட்டவானில் வன்னியனாரின் கடை,(எனது வாப்பாவின் வாப்பா) முக்கர் கல்லி்ல் அப்துல் ஹமீதின் கடை, புணாணையில் டாப்பரின் கடை என சிதறிக்கிடந்த கடைகளில் முஸ்லிம்களும் தமிழர்களும் கூடிக்குலாவி மகிழ்ந்திருந்த அது ஒரு பொற் காலம்.
பொத்தானைக்கண்டத்திற்கு பொறுப்பாக தியாகு நியமிக்கப்பட்டிருந்தான். அந்தப்போராளி தூங்குவது அஹமது காக்காவின் கடை பெஞ்சில்.வயல் வெட்டுக்காலங்களில் வரி வசூலிப்பது,சின்னச்சின்ன சண்டைசச்சரவுகளில் மூக்கை நுழைத்து சமாதான தூதுவனாய் கருமமாற்றுவது,இன்னும் சில அதிகாரங்களை வைத்துக்கொண்டு தியாகு கூடவே சிறு படையையும் வழிநடாத்திக்கொண்டிருந்தான்.
அவனுடன் கிருஷ்ணன் என்ற போராளியும் முக்கிய நபராக இருந்தான் இந்தியாவிலும்,பலஸ்தீனத்திலும் கெரில்லா பயிற்சி எடுத்தவன்.இந்திய அமைதிகாக்கும் படையினருடன் பொருதி குடல் தொங்க அதை அள்ளிச்சொருகிக்கொண்டு தப்பி ஓடியவன் என்ற பெருமையும் அவனுக்கு உண்டு. அது ஒரு சாகச நிகழ்வு என்பது போல் கடைகளில் கூடி நிற்கும் கூட்டம் கதைத்து மாய்ந்தது.
தியாகுவுக்கும் அவனுக்கும் பூவை ஒருத்தி்யின் காதலைப்பெறுவதில் வந்து விட்டது சனியன்.ஆளையால் அடித்துக்கொள்ளவில்லை. பொருமிக்கொண்டு அலைந்தது சுற்று வட்டாத்திற்கும் தெரியும்.
ஒரு நாள் பனி அடர்ந்திருந்த அதிகாலை நேரம் அயாத்து காக்கா அஹமது காக்காவின் கடைக்கு வந்து சேர்ந்தான்.இரவெல்லாம் நித்திரை முழித்த அயர்வு.தேயிலைப்பொடி வாங்கி வர மாமாதான் அனுப்பியிருந்தார்.
காக்கா செல்லும் போது கடை மூடியிருந்தது.கடையைச்சுற்றி சனக்கூட்டம் முண்டியடித்துக்கொண்டு முன்னேறியது.அயாத்து காக்கா பயத்தில் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்தான். பக்கத்து வயல் மில்லக்காரன் கூட்டத்திலிருந்து அயாத்து காக்காவை நோக்கி முன்னேறி வருகிறார். 'தம்பி அயாத்தமது இஞ்செ நிக்காத வாடிக்குப்போ, அவன் தியாகுவ யாரோ வெட்டிப்போட்டு துவக்கையும் பறிச்சிட்டு பெய்த்தானுகளாம். அவனுகள் வந்து ரவுண்டப் பண்னுரதுக்கு முதல் வாடிக்குப்போய் மாமாவேட இரி'
வயற்காரன் வார்த்தைகளை முடிக்கவில்லை புழுதியை வாரி இரைத்தபடி ஜீப்புகளும், வேன்களும் வந்து சேர்ந்து விட்டன. வந்த வேகத்தில் வேடிக்கை பார்த்தவர்களை பிடித்த வைத்து விசாரிக்கத்தொடங்கினர். தூரத்தில் நின்றவர்களையும் கையசைத்து கூப்பிடனர். அயாத்து காக்காவை நோக்கி பல கரங்கள் ஆவேசத்துடன் அருகே வாவென அசைந்தன.
புலிக்கோடிட்ட சீருடைகள். காக்காவின் கண்களில் காக்கியின் நிறம் தைத்தது. கால்கள் பரபரக்க வயலை நோக்கி ஓடத்தொடங்கினான்.அவனை விரட்டிச்சென்ற போராளிகள் வயற்பரப்பில் மத்தியில் பிடித்து விட்டனர்.
'ஏனடா ஓடினாய் என்பதற்கும் பயத்தில்தான் ஓடினேன் என்று பதில் சொல்லத்திராணியற்ற அவன் சிறு நெஞ்சு அச்சத்தால் துடித்துத்துடித்து எம்பியது.
அவன் அணிந்திருந்த 'சேர்ட்டி'னால் கரங்களிரண்டையும் முதுகுப்பின்னால் இழுத்து வைத்து கட்டியிருந்தனர்.
தியாகுவின் கழுத்தை வெட்டி துவக்கை பறித்த எதிராளியை பிடித்து விட்ட வெற்றிப்பெருமிதம் அவர்கள் கண்களில் துலங்கியது.அவனை ஜீப்பில் அள்ளிக்கொண்டு போயினர்.
ஆறாம் கட்டை புலிகளின் முகாமிற்கு பெரியம்மா நடை நடையாக அலைந்து திரிந்தா. புஹாரி கையை விரித்து விட்டார். 'நாங்கள் செய்யவில்லை' தமிழ்ச்செல்வன் ஊடகங்களுக்கு காட்டும் புலி முகம் போல் புஹாரியும் சொல்லிவிட்டார். நாங்கள் பிடிக்கவில்லை.
பெரியம்மா முந்தானையை விரித்து வானத்தை நோக்கி அழுத விழியுடன் பார்த்த பார்வை.
புஹாரி இந்திய அமைதி காக்கும் படையினரிடம் சரணடைந்ததும்,ஊருக்குள் மகிழ்ச்சியாக ,சுதந்திரமாக சுற்றியதும்,பின் அரேபிய தீபத்தில் வேலை பார்த்ததும் பெரியம்மாவை கடவுளிடம் பிடிப்பைக்கொடுக்காமல் தள்ளியிருக்கச்செய்தது என்னவோ உண்மைதான்.
முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் பரிதாபகரமாக மடிவதற்கு சில மாதங்களுக்கு முன்...
பெரியம்மா முகத்தில் மகிழச்சிப்பொங்கிப்பூரிக்க ஓடிவந்தா....
என்னவென்றேன் . முகத்தில் இனம் புரியா குதூகலம்.
மேலே கையை விரித்த அவவின் விழிகள் ஆனந்தத்தால் நனைந்திருந்தன.
பெரியம்மாவின் ஈர விழிகளையும் அன்று அவ அழுத அழுகையும் தவிர்க்க முயன்றேன் முடியவில்லை.பதினைந்து வருடங்கள் ஓடி விட்ட பின்பும் அது நெஞ்சில் தீயாக எரிகிறது என்ன ஒரு தீட்சண்யப்பார்வை.
"தம்பி புஹாரிட வூட்டுக்கதவுல குண்டு வச்சி அவன அழிச்சிட்டானுகள்,பொத்தான ஆத்துக்குள்ள உன்ட காக்காவ அடிச்சிக்கொன்று மையத்தயும் என்ட கண்ணுல காட்டாம புதச்சானே அன்டக்கி கேட்ட துஆ இப்ப பலிச்சிரி்ச்சிடா என்ட மகனே!'
அதிர்ச்சியில் நான் உறைந்து நின்றேன்.

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...