Monday, 3 September 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


தொடர்- 22

மறு கேள்வி என் காதில் விழுந்தது.

நீ புலிக்கு சாப்பாடு குடுத்தியா

ஓம் சேர்

வந்தது. வினை முழந்தாளில் நின்ற எனது முகத்தில் வாகாக அவன் கையை மடக்கி விட்டான் ஒரு குத்து.

சர்வாங்கமும் ஒடுங்கி கண்களின் வழியே பட்டாம் பூச்சி பறக்க ஆரம்பித்தது,
அவன் துவக்க காட்டி கேட்டா எப்படி சேர் குடுக்காம இருக்க முடியும்.
மறுபடியும் ஒரு குத்து

இனி வந்தா குடுக்கப்படாது என்றான்
சுரி சேர் என்றேன்.

சகாயம் எந்தச்சேதாரமும் இன்றி சிரித்துக் கொண்டிருந்தான் அவனிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு அவன் அந்தக் காண்டத்திலிருந்து தப்பித்து நின்றான்.போராட்டத்தில் உங்களுக்கு எந்தப்பங்களிப்பும் இல்லை என்பவர்களுக்கு இதுவெல்லாம்  சொல்லிப் புரியவைக்க முடியும் என்று நினைப்பது தவறு.அது செவிடன் காதில் ஊதிய சங்கு.

தமிழ்  தேசிய படையும் ஈபிடியியும் இணைந்து என்னை குடையத் தொடங்கினர். உடற்பயிற்சி செய்து உடம்பும் திரட்சியாக இருந்தது அவர்களுக்கு என்னில் சந்தேகத்தை உண்டாக்கியிருக்க வேண்டும்.அத்துடன் முஸ்லிம் இளைஞர்களும் புலிகளின் முகாமில் இருந்தார்கள்.முஸ்லிம் பகுதிகளில் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடல்,முன்னணியில் நின்று இராணுவத்திற்கெதிராக தாக்குதல் நடாத்துதல் போன்ற பணிகளில் அவர்கள் போராடி வந்தார்கள்.தாக்குதலில் அடிபட்ட புலிக்கொடி போர்த்திய  உடல்கள் எங்கள் வீடுகளுக்கும் வந்து சேர்ந்தன.

விடுதியில் மாணவர்களுக்கு காலையிலும் ,மாலையிலும் உடற்பயிற்சி வழங்குவதும் நான்தான்.முன்னர் ஈ.ப்p.டி.பியில் ஆயுதப்பயிற்சிபெற்று பிறகு அதிலிருந்து விலகிய தோழர்களின் புண்ணியத்தால் மேலதிகமாக கடின பயிற்சிகளும் அப்போது எனக்குத் அத்துப்படி.

கல்லூரியின் அடையாள அட்டையை காட்டினேன். மறுநாள் ஓ.எல் பரீட்சை அனுமதி அட்டையையும் காட்டினேன்.

தமிழ் தேசிய படையின் வீரன் என்னை நோக்கி கத்தினான்.
இஞ்ச ஏன்டா வந்து நிற்கிறீங்க.உங்கட அஸ்ரபுக்கிட்ட போங்களன்டா' .

இந்ந நூற்றாண்டில் இப்படித்தான் சில காவியு தரித்த இனவாதிகள் கூப்பாடு போடுகின்றார்கள். .இந்த நாட்டில் நீங்கள் இருப்பது என்றால் இருங்கள் இன்றேல் அறபு நாடுகளுக்கு செல்லுங்கள்.அதையும் கேட்டுக்கொண்டு வாய்ச்சொல்லில் வீரர்களும் ,அறிக்கை மன்னர்களும் சும்மாதான் முதுகு சொறிந்தபடி இருக்கின்றார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் கொடி கட்டிப்பறந்த காலம். கல்முனையில் போராளிகள் தீவிரமாக இயங்கத்தொடங்கி நாரே தக்பீர்கள் முழங்கத்தொடங்கிய பொற் காலம். முஸ்லிம் பகுதிகளில் காங்கிரசுக்காக நோன்பிருந்து தாய்மார்கள் அழுது புலம்பி அல்லாஹ்விடம் மன்றாடிய காலம்.

 குர்ஆனும் ஹதீசும் ஏந்தி வந்த முஸ்லிம் கட்சியின் ஸதாபகரை இறைத்தூதர் என்று போற்றாத குறை. அவரை தோளில் வைத்து உலா வந்து எழுச்சி அலைகள் பல நூறடி எழுந்து ஆர்ப்பரித்த அக்காலத்தில் தமிழ் பேரின அரசியல் சக்திகள் காழ்ப்புணர்வில் கருவித்திரிய ஆரம்பித்தனர்.இப்போது தனித்துவம், முஸ்லிம் கட்சி என்பதெல்லாம் அரசியல் வெற்றுக்கோசங்களாகவும் உதிரிகளாகவும் பறந்து விட்டன.எவரையும் பணத்தையும் ,பதவியையும் காட்டி இலேசாக வளைத்துவிடலாம் என்ற நிலைக்கு வந்து விட்டனர்.

கட்சிக்காக தியாகமிருந்தவர்கள்,தங்களை அர்ப்பணித்தவர்கள் ஓரமாக நின்று கண்ணீர் வடிப்பபதை தவிர வேரொன்றும் செய்யமுடியாத கையறு நிலை.

எல்லோருக்கும் கட்சி தலைவரு ஆக வேண்டும்  என்ற ஆசை. ஆதனால் இரண்டு பேரு சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பித்து வயிறு வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.எல்லாக்கட்சிகளையும் அறிக்கையில் அணுகுண்டு போட்டு தகர்த்து விடலாம் என்று மனப்பால் குடிப்பதற்கும் சிவப்புக்குல்லாய் போட்டு ஒரு கட்சி.உம்மாவுக்கும் ஒரு கட்சி,வாப்பாவுக்கும் ஒரு கட்சி. ஆளாளுக்கு நியாயங்கள் சொல்ல மட்டும் குறைவில்லை.

அதன் விளைவே எங்களில் எதிரொலித்தது. அவன் என்னை அஸ்ரபின் கல்முனையில் போய் வாழச்சொன்னான்.தென்னிலங்கையில் உள்ள சில சிங்கள பெருந்தேசியவாதிகள் சவூதிக்குப்போய் வாழச்சொல்லுகின்றார்கள். நாங்க ஆர்ர சொல்லுக் கேக்குற பிள்ளைகளா வாழுறது? 

நான்  ஜிஹாத் படை  என்ற சந்தேகம் அவர்களுக்கு. முழங்கைகளையும் கால்களையும் பார்;த்தான். பயிற்சியின்போது அவைகள் கன்றிப்போய் அடையாளம் இருக்கும். ஆயுதப்பயிற்சி எடுத்தவர்களை சில உறுப்புக்களை பரிசோதிப்பதன் மூலம் இலகுவில் அடையாளம் கண்டு கொள்ளலாம். ஆயுதப்பயிற்சி எடுத்தவர்களின் கண்களும் அவர்களை காட்டிக்கொடுத்து விடும்.

 சுண்டு விரலையும் பார்த்தான் பின்பு ஓடு என்றான். வீங்கிய முகத்துடன் நொறுங்கிய நெஞ்சுடன் ஒரு மைல்தூரம் ஓடினேன். அடிக்கடி இந்திய இராணுவமும் தமிழ்தேசிய படையும் இப்படி எங்களை அள்ளிப்போவதும் விசாரிப்பதும் அடிப்பதுமாக பதப்படுத்தப்பட்டோம்.ஓட்டமும், மனப்பதகளிப்புமாக 85க்குப்பின் வாழ்வு மாறிப்போனது. இரு பக்கமும் அடிபடும் மத்தளங்களாக எங்கள் வாழ்க்கை.

ஊஞ்சல் இன்னும் ஆடும்....
எங்கள் தேசம்.229