Monday, 21 March 2011

சொல்ல மறந்த கதை............

கல்குடாமுஸ்லீம் (www.kalkudahmuslims.com) இணையதளத்தில் வெளிவந்த சகோதரர் ஜிஃப்ரி ஹாஸன் அவர்களால் வழங்கப்பட்ட எனது  சொல்ல மறந்த கதைகள் - என்னும் சிறுகதைப் பிரதிநூல் மதிப்பீடு.

மனித வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் எழுத்துக்குள் கொண்டுவந்துவிட முடியுமா? என்பது படைப்பாளிகளின் முன்னால் எப்போதும் இருந்து வரும் கேள்வியாகும். அதுவும் போர்-வன்முறை-ஜனநாயகமற்ற சமூக அரசியற் சூழல்- குறைந்தளவான சகிப்புத்தன்மை- வறுமைக்குள்ளான வாழ்வு என பொதுமக்களுக்கும்-படைப்பாளிகளுக்கும் பெருத்த சவாலாக விரியும் அசாதாரண சூழலுக்குள் வாழும் மக்கள் குழுமம் ஒன்றினது வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் ஒரு படைப்பாளியினால் தனது எழுத்துக்குள் கொண்டு வந்து விட முடியுமா?
‘உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி’ என்ற தனது தொகுப்பிலுள்ள சிறுகதைகளுக்குள்ளால் அறபாத் இது மாதிரியான கேள்விகளுக்கு பதிலளிக்கப் பிரயாசப்படுகிறார் என நினைக்கிறேன்.
அடையாளம் வெளியீடாக வந்திருக்கும் இச்சிறுகதைத் தொகுதி அறபாத்தின் இதுவரை வெளிவந்த சிறுகதைகளின் தொகையாக வெளிவந்துள்ளது. ஏற்கனவே இலங்கையில் தொகுப்பாக வெளிவந்த “நினைந்தழுதல்”, “ஆண்மரம்” ஆகிய சிறுகதைத் தொகுதிகளிலுள்ள கதைகளையும் மற்றும் ஏனைய கதைகளையும் இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது. யுத்தத்துக்குள் அகப்பட்டுக்கொண்ட இலங்கை முஸ்லிம்களின் போர் மற்றும் சமய வாழ்வின் பல்வேறு தருணங்கள் இங்கு கதைகளாக்கப்பட்டுள்ளன.
அறபாத்தின் ஒட்டுமொத்தக் கதைகள் குறித்தும் ஓர் ஆழமான மறுவாசிப்பைச் செய்யவேண்டுமென்ற உந்துதல் எழும்புகின்ற போதிலும் தொடர்ந்தும் அது கைகூடாமல் வெறும் தொகுதிரீதியான வாசிப்பாக மட்டுமே சுருங்கிப்போய்விடுகிறது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், அறபாத்தின் கதைகள் எந்தப் பொல்லாப்புமில்லாமல் நமது மக்களைப் பற்றிப்பேசுகின்றன. இதனால் மக்களது வாழ்வுக்கும் இவரது எழுத்துக்குமிடையில் எந்தத் திரைகளும் இருப்பதில்லை. தனது நிஜமான வார்த்தைகளினாலும் அழகான சொற்றொடர்களினாலும் இந்த மக்களின் கதையை அலங்கரித்திருக்கிறார் அறபாத். துயர் நிறைந்த பிடிப்புக்கள் எதுவுமற்ற வாழ்வின் உண்மையான பிரதிபலிப்புகளாக மட்டுமே அவையுள்ளன. இதனை எல்லா எழுத்தாளர்களாலும் சாத்தியப்படுத்த முடியுமா?
பலதரப்பட்ட மனிதர்களும் பலதரப்பட்ட சம்பவங்களும் அறபாத்தின் கதைகளுக்குள் புனைவாக்கப்பட்டுள்ளனர். அதிலுள்ள பலதரப்பட்ட மனிதர்களும் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளிகளைத் தேடுபவையல்ல இவரது எழுத்துக்கள். அந்த மனிதர்களின் நிலமைகளுக்கு ஒரு காட்சியை, அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கான குரல்களை-தள்ளாடும் அந்த மனிதர்களுக்கான ஊன்றுகோளை வழங்குபவையாக அறபாத்தின் எழுத்துக்கள் உள்ளன.
அறபாத்தின் கதைகளுக்குள் அரசியல் இருக்கிறது-வரலாறு இருக்கிறது-கலாசாரம் இருக்கிறது-காரசாரமிருக்கிறது- சினேகம்-எதிர்பார்ப்பு-ஏமாற்றம்-புன்னகை-அழுகை ஏன் காமம் கூட இக்கிறது. எனினும் அவை எல்லாம் இருப்பதனால் வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் எழுத்துக்குள் கொண்டு வந்ததாக ஆகிவிடுமா? இவை எல்லாம் இருப்பதனால் ஒரு படைப்பு உயிர்ப்புடையதாகி விடுமா?
உண்மையில், ஒரு கதையின் ஆன்மா அதுவல்ல சத்துள்ள ஆரோக்கியமுள்ள ஒரு கதையின் ஆன்மாவாக ஒருபோதும் கருப்பொருட்கள் இருப்பதில்லை. இங்கும் அறபாத்தின் கதைகளின் மைய விடயங்களாக மட்டுமே அவை உள்ளன. ஆனால் அவையே அவரது கதைகளாகிவிடுவதில்லை. அந்தவகையில் இவரது கதைகள் ஆரோக்கியமற்ற சத்தற்ற ஒரு நோயாளியைப் போல அலைபவையல்ல, அறபாத்தின் கதைகள் ஒவ்வொன்றுக்குள்ளும் துயர் நிறைந்த மனிதர்களின் கூட்டு வாழ்க்கை குமுறிக் கொண்டிருக்கிறது. புறக்கணிக்கப்பட்ட, கண்டுகொள்ளப்படாத மனிதர்களின் குரல்கள், ஒவ்வொரு கதையினுள்ளும் ஒலிக்கிறது.
அறபாத்தின் இந்தத் தொகுதியிலுள்ள கதைகள் இந்த மக்களின் மூன்றுவித வேறுபட்ட வாழ்நிலைமைளை அமரத்துவமுடைய இலக்கியப் பொருளாக்கியுள்ளன.

1. யுத்தத்துக்குள் அகப்பட்டுக் கொண்ட ஓர் மக்கள் திரளின் துயரம்.
2. சமூக அரசியல் போராட்டம் குறித்த மறு விசாரணை
3. உள்ளக கலாசாரப்பன்மைத்துவத்தை எதிர்த்தல் (Anti-Internal Cultural Diversity)

ஆனால் காலச்சுவட்டில் அறபாத்தின் கதைகளைப் பற்றி எழுதிய அனார் அறபாத்தின் கதைகள் எந்த சட்டகத்துக்குள்ளும் உள்ளடங்குவதில்லை என எழுதுகிறார். அதுவும் ஒரு வகையில் உண்மைதான். இந்த மூன்று சட்டகங்களுக்கப்பாலும் அறபாத்தின் கதைகள் நீள்கின்றன என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஏனெனில், ஒரு கதையில் வரும் மனிதர்கள் இன்னொரு கதையிலும் வருகின்றனர். ஏல்லாக் கதைகளிலும் ஒரே வகையான முரண்பாடுகளும் பிரச்சினைகளும் இருப்பதை அந்த மனிதர்கள் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஒரு கதையின் தொடர்ச்சியாக இன்னொரு கதை எழுதப்பட்டிருப்பது போன்று நம்மை உணரவைத்து விடுகிறது. எனினும் பெரும்பாலான கதைகள் இந்த சட்டகத்துக்குள் உள்ளடங்குகின்றன என்பதைக்காட்டிலும் அறபாத்தின் கதைகளுக்குள் இந்த சட்டகங்களும் உள்ளடங்குகின்றன என்று சொல்வதே பொருத்தமானது.
நான் மேலே கூறியதைப் போன்று முதலாம் வகைக் கதைகளையே இப்பிரதி அதிகமாகக் கொண்டிருக்கின்றபோதிலும் ‘ரயில்வே ஸ்டேசன்’, ‘வேட்டை’, ‘கப்பம்’, ‘நினைந்தழுதல்’ போன்ற கதைகள் போரின் வாழ்வையும் வலியையும் வெவ்வேறு கோணங்களில் பேசுபவை.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் போராட்டம் குறித்த மறுபரிசீலனையை இதற்குள் சில கதைகள் முன்வைக்கின்றன. அவை வெறும் கட்சிகளுக்கிடையிலான பரஸ்பர எதிர்ப் பிரச்சாரங்களைப்போலன்றி ஓர் எதிர்க் கருத்துநிலையை முன்வைப்பவை. ஏமாற்றப்பட்ட தோற்றுப்போன மக்களின் எதிர்க்கதையாடல்களாக அவை எழுந்து நிற்கின்றன. முஸ்லிம் அரசியல் போராட்டம் இன்று அடைந்திருக்கும் கோமா(ளி) நிலையை அடையாளப்படுத்த முனையும் இக்கதைகள் நமது அரசியல் தலைமைகள் சுயவிசாரணைக்கு தயாராக வேண்டும் என உரத்துக் கூறுபவை. இந்த வகைக் கதைகளுக்கு இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் ‘கழுதைகளின் விஜயம்’, ‘தேர்தல் காலக்குறிப்புகள்’, ‘ஓணான்கள்’ போன்ற கதைகளை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
இலங்கை கலாசாரப் பன்மைத்துவத்தைக் கொண்ட நாடு என்பதைப்போலவே இங்கு வாழும் முஸ்லிம்களும் தங்களுக்குள் பல கலாசார உட்கூறுகளைக் கொண்ட இனக்குழுவினராவர். அறபாத்தின் சில கதைகள் சமயரீதியான இந்த இயக்கப்பல்வகைமையை அங்கீகரிப்பவையல்ல இவ்வாறான சக இயக்கங்கள் மீது எந்த சகிப்புத்தன்மையையும் காட்டாதவை இவரது எழுத்துக்கள். எனினும் இவரது கதைகளில் வெளிப்படும் இந்த விமர்சனரீதியான பார்வை சமய இயக்கங்களின் பலவீனத்தை அடையாளப்படுத்தும் முனைப்பைக் கொண்டிருப்பதையும் அத்தகைய இயக்கங்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். இதிலிருந்து இஸ்லாமிய இயக்கங்கள் சில விடயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன். ‘துறவிகளின் அந்தப்புரம்’, ‘ஜின்’ போன்ற கதைகளுக்குள் நாம் இத்தகைய செய்திகளைக் காணலாம்.
அதேநேரம் வாழ்க்கையை லேசாக எடுத்துக்கொள்கிற கேலியும் கிண்டலும் நிறைந்த மனிதர்களும் இந்த உடைந்த கண்ணாடிகளுக்குள் குருவிகளைப்போல மறைந்திருப்பதை நீங்கள் காணலாம். ‘அரங்கம்’ கதையில் வரும் பெத்தா, ‘ஓணான்கள்’ கதையில் வரும் கஸ்ஸா மூத்தம்மா போன்றவர்களோடு இன்னும் பலர் இதற்குள் உள்ளனர்.
சில கதைகளைத் தவிர பெரும்பாலான கதைகளின் தொடக்கமும் முடிவும் ஒரே புள்ளியில் தொடங்கி ஒரே புள்ளியில் முடிவடைவதால் கதைக்குள் கதை கூறல் இவரது எழுத்துக்குள் இல்லாமல்போய்விடுகிறது. இன்று சிறுகதை அடைந்திருக்கும் வடிவ மாற்றங்களை அறபாத் ஏற்றுக்கொள்கிறாரா? அல்லது மறுதலிக்கிறாரா? அறபாத்தின் புனைவுக்குள் வாழும் அந்த சாமான்ய மக்களின் பிரச்சினைகளை இன்னொரு தளத்துக்கும் எடுத்துச் செல்லும் திறன் படைத்த படைப்பாளியான அறபாத் கதையின் ஏனைய வடிவங்களையும் பரீட்சித்துப்பார்ப்பது பயனுள்ளது என்று சொல்லத்தோனுகிறது. எனினும் சில மாதங்களுக்கு முன் எனக்கு வாசிக்கக்கிடைத்த அவரது சிறுகதை ஒன்று (மூன்று பூனைகள் பற்றிய ஏழு குறிப்புகள்- என்று நினைக்கிறேன்) குறிப்பிடத்தக்க முயற்சியாக இருந்தது. அத்தகைய புதிய மாற்றங்களையும் சேர்த்துக்கொள்வது இலக்கியத்தில் ஒன்றும் ‘பித்அத்’ இல்லையே!
அறபாத் எனும் கதைசொல்லி கதையினைச் சொல்லும் பாங்கில் வெளிப்படும் அழகியல் ஒரு கதையிலிருந்து ஏனைய கதைகளுக்கும் ஊடுறுவி விடுகிறது. கதைசொல்லியின் விவரணம் ஓவ்வொரு கதையிலும் ஒரேமாதிரியாக அமைந்திருப்பது போன்ற உணர்வுக்கு வாசகன் உள்ளாகும் நிலை ஏற்பட்டிருப்பது வருத்தத்துக்குரியதே. இது ஒரு வகையான அருட்டுணர்வை ஏற்படுத்தக் கூடியது என்பதை ஒரு வாசகனாக நின்று நான் உணர்கிறேன்.
‘எழுத்தாளர்களான நாங்கள் பயன்படுத்தும் கற்கள் வார்த்தைகள். அவற்றை எங்கள் கைகளில் ஏந்தி எவ்வொன்றும் மற்றொன்றுடன் இணைந்திருக்கும் வழிவகைகளை உணர்ந்து சில நேரங்களில் அவற்றைத் தூர வைத்துப் பார்த்து சில வேளைகளில் எங்கள் விரல்களாலும் பேனாக்களின் முனைகளாலும் ஏறக்குறைய தட்டிக்கொடுத்து, சீராட்டி அவற்றை எடைபோட்டு, அங்குமிங்கும் நகர்த்தியமைத்து வருடவருடமாகப் பொறுமையோடும், நம்பிக்கையோடும் புதிய உலகங்களை உருவாக்குகிறோம்’ என்று ஒரு முறை ஓரான் பாமுக் எழுதியதாக ஞாபகம். எழுத்தாளர்கள் தமது கதைகளை பொது அரங்குக்கு கொண்டு வருமுன் இத்தகைய நிலைகளைத் தாண்டியே ஆகவேண்டியுள்ளது. இந்த தடைதாண்டலில் எல்லா எழுத்தாளர்களும் துரதிஸ்டவசமாக வெற்றி பெறுவதில்லை. கதையாக்கத்தில் ஓரான் பாமுக் சொல்லும் இந்தப் படிமுறைகளை அறபாத்தும் தாண்டுகின்றபோதிலும் ஓரான் பாமுக் கடைசியாகச் சொல்லும் ‘புதிய உலகங்களை உருவாக்குகிறோம்’ என்பது இங்கு அறபாத்துக்குச் சாத்தியமில்லாததாகப் போய்விடுகிறது.
நமது சூழலில், எழுத்தாளர்களாகிய நாங்கள் புதிய உலகங்களைக் கட்டியெழுப்புவதில்லை, புதிய மனிதர்களை உருவாக்குவதில்லை, புதிய கனவுகளைப் படைப்பதில்லை, ஏற்கனவே இருந்த உலகங்களையே புனர்நிர்மாணம் செய்கிறோம், ஏற்கனவே உள்ள மனிதர்களையே செப்பனிடுகிறோம், ஏற்கனவே பேசப்பட்ட வார்த்தைகளுக்கு, நம்பிக்கைகளுக்கு புதிய வடிவங்களைக் கொடுக்கிறோம், தூர்ந்துபோன கனவுகளுக்கு புதுத்தெம்பூட்டுகிறோம். இதுதான் எங்களால் இப்போது செய்ய முடியுமான பணியாகவுள்ளது. இந்த மண்ணிலிருந்து கொண்டு அறபாத்தாலும் எப்படித்தான் புதிய உலகங்களை உருவாக்க முடியும்?
ஓர் அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டு எழுதத்தொடங்கும் போது அந்த அறை வியாபகம் கொள்கிறது. அந்த அறை முழுதும் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் எல்லாவிதமான கதைகளும் அறபாத்தின் இந்த உடைந்த கண்ணாடிகளுக்குள் மறைந்துகிடப்பதைப் போல அவரது அறைக்குள் கிடக்கின்றன. அதை பொறுக்கி எடுத்து ஒட்டி நேர்த்தியாக்கி அவர் தருகிறார். உடைந்த கண்ணாடிகளாயினும் அறபாத்தின் குருவிகள் உயிருள்ளவை. சிறிய இறக்கைகளேயாயினும் உலகை வலம் வர முனைபவை.