Wednesday, 22 August 2012

ஷைத்தான்களின் தெரு

ரமழானில் தளையிட்டிருந்த ஷைத்தான்கள் சங்கிலிகளை அறுத்துக்கொண்டு தெருக்களில் அலைவதைக்கண்டு அதிர்ந்து போனேன். 

ஆம் நோன்புப்பெருநாள்  தொழுகை முடிந்ததும் இந்த பயங்கர காட்சி எனக்கும் மற்றவர்களுக்கும் துலாம்பரமாகத்தெரிந்தது.

ஒரு மோட்டார் சைக்கிளில் குறைந்தது மூன்று ஷைத்தான்கள் சென்றன.புழுதியை வாரி இறைத்தபடி அதி வேகமாகச்செல்லும் ஒரு ஷைத்தானின் கையில் ஊது குழல் ஒன்றும் இருக்கும் .அது கனரக வாகனங்கள் ஹார்ன் அடிக்கும் ஒலியை மிஞ்சிய ஒலி.மூன்றாவது அல்லது இரண்டாவதாக அமர்ந்திருக்கும் ஷைத்தான் அந்தச்சங்கை பெருங்குரலெடுத்து ஊத தெருவே பெரும் ரகளையாக மாறி இருந்தது. 

ஏக காலத்தில் சில நேரங்களில் பத்துக்கும் மேற்பட்ட பைக் ஊர்வலங்களில் இந்த ஹார்ன் ஒலி கர்ண கடூரமாய் தெருவின் அமைதியை துவம்சம் செய்தன. 

முறையான சாரதி அனுமதிப்பத்திரமோ, தலைக்கவசமோ இருக்காது.
இது பெருநாள் தினங்களில் சில சமூகத்தலைமைகளால்  எங்களுக்கு கிடைத்த விஷேட அலவன்ஸ்.

அநாகரீகமான கலாச்சாரப்பிறழ்வில் வளர்க்கப்பட்ட ஒர் இளம் சமூகம் உருவாகி வருவதை இது போன்ற அண்மைகக்கால நிகழ்வுகள் நமக்கு அதிர்ச்சியை தருகின்றன.

நாட்டின் சட்டங்களை அடாத்தாக மீறுவதில் இவர்களுக்கு உள்ள ஆர்வம் நம்மை பயங்கொள்ளச்செய்கிறது.

இத்தகைய விஷேட தினங்களில் சலுகைகளை வழங்குமாறு பணிப்பவர்கள் அரசியல்வாதிகள். தங்கள் பவரை நாட்டுச்சட்டங்களை மீறுவதற்குப்பயன்படுத்த தூண்டும் இவர்கள் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எத்தகைய அடக்கு முறைக்கு எதிராகவும் குரல் எழுப்பத்திராணியற்றவர்கள்.


சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய பொலிசாரின் கரங்களை வலுவிழக்கச்செய்வது சில உள்ளுர் அரசியல் சக்திகள். இதனால்  அவர்களுக்கு கிடைக்கும் அற்ப இலாபம் ஒரு சமூகத்தின் இளந்தலைமுறையினரை காட்டுமிராண்களாகவும் மனிதப்பண்புகளை மதிக்காதவர்களாகவும் உருவாக்குகின்றது  என்பதை இந்த அரசியல் தலைமைகள் சிந்தித்துப்பார்ப்பதில்லை.

இவ்வருட பெருநாள் தினத்திலும் அதற்கு முந்திய தினத்திலும் அவதானிக்கப்பட்ட சம்பவங்களை கவலை கொள்ளச்செய்வதும் வெட்கித்தலைகுனியச் செய்வதுமான துர்ச்செயல்களாகும்.

தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் ஓட்டலாம் என்ற சலுகையை சில இளைஞர்கள் அத்துமீறி பிரயோகித்ததை அவதானிக்க முடிந்தது

. ஒரு சைக்கிளில் மூவர் செல்வது Nபாக்குவரத்துப்பபொலிசாருக்கு அருகில் சென்று உரத்த தொணியில் ஹார்ன் அடிப்பது ஓட்;டமாவடி சுற்றுவட்டத்தில் வேண்டுமென்றே ரவுண்ட் அடிப்பது. பொலிசாருக்கு அண்மையில் சென்று பட்டாசுகளை கொளுத்திப்போடுவது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

உண்மையில் பொலிசாரின் கடமைகளை செய்யவிடாது இவ்வாறான அநாகரீக கலச்சாரத்திற்கு வித்திடும் சமூகத்தலைமைகள் இவற்றின் ஊடாக எதைத்ததான் சாதிக்க முயல்கின்றன என்பது நம்முன் நிற்கும் பெருங்கேள்வி..

வேறெந்த சமூகத்திலும் கிராமத்திலும் இல்லாத இழிவான கலாச்சாரத்தை கல்குடா தொகுதியில் மட்டுமே தரிசிக்க முடியும்.

 இது தொடர்ந்தேர்ச்சியாக பின்பற்றப்படும் ஒரு கேவலத்தை உருவாக்கி விடும். இதனை தடுத்து நிறுத்தி சட்டத்தை அமுல்நடத்த பொலிசாருக்கு இடமளிப்பதுடன் இத்தகைய வரம்பு மீறல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் போது அதில் தலையிடாதவாறு அரசியல் சக்திகள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

தங்களுடைய சுய நல அரசியல் நலன்களுக்கு இளைஞர்களை பகடைகாய்களாக்க முனைவது ஒரு சமூகத்தின் ஒழுக்க விழுமியங்களுக்கு எதிரான சாட்டையாகும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து செயற்படவேண்டும். 

பள்ளிவாயல் நிருவாகங்கள் ஜம்இய்யதுல் உலமா சபையினர் மற்றும் பொது நிறுவனங்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்

வளர்ந்து வரும் அதிவேக சைக்கிள் கலாச்சாரம் விஷேட தினங்களில் மிகப்பெரும் சமூக அவலத்தை வளர்க்கின்றது.

 விலங்கிடப்பட்ட சைத்தான்;கள் அவிழ்த்து விடுவது சமூகத்தின் மானத்தை ஏலம் போடுவதற்கு சமன்.