Tuesday 1 December 2020

 

முக நூல் இலக்கியம்

ஓட்டமாவடி அறபாத்.

 

 

2003ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது. Blog என்கிற வலைப்பூவும் ஒரு தனி நபரின் களியாட்ட கண்டுபிடிப்பு தளமாகும். இதனையே Google நிறுவனம் அவரிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் கபளீகரம் செய்து கொண்டது.

 நாளடைவில் வலைப்பூவின் ஊடாக பொழுது போக்கு அம்சங்களை துவக்கத்தில் பரிமாரிக் கொண்டாலும் ,அதன் போதாமைகள் சலிப்படையச் செய்தன.இலக்கிய ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், சமூகவியல் சார் அறிஞர்கள், பொழுது போக்கிற்காக எழுதுகின்றவர்கள் என பல்வேறு சாரார் தனக்கென்று பிரத்தியேக வலைப்பூக்களை Blog spot உருவாக்கி தகவல்களையும் எண்ணங்களையும் பரிமாறிக் கொண்டனர்.

எனினும் Blog விட வேகமாக செயலாற்றும் ஒன்றின் தேவை அதிகம் உணரப்பட்டது. அமெரிக்காவின் ஹாவார்ட்பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு தீவிர முயற்சியில் இறங்கினர்.

GAM விளையாட்டை நிகர்த்த ஒரு இணையத்தள சேவை ஒன்றை உருவாக்கினர்.2004ல் இந்த விளையாட்டு தீவிரமடைந்தது. ஒரு புகைப்படத்தை பதிவிட்டு Hot or Not என்ற கண்ணியமான விளையாட்டொன்றை அவர்கள் இணையத்தள சேவை ஊடாக உருவாக்கினர். கருத்துக்கள் பகிரப்பட்டன.

இதுவே 2006ல் Face book முகநூல் ஆட்டமாக பரிணாமம் அடைந்தது.

இன்று முகநூல் கணக்கொன்று இல்லாதவர்கள் முகவரியற்ற மனிதர்களாக நோக்கப்படுவதுண்டு. முகநூல் பொழுது போக்கு இணைய சேவையை தாண்டி, சமூக மாற்றத்தின் முதல் நிலை தளத்தில் சாசுவதமாகி  உள்ளது.

 அரசாங்கமொன்றின் நகர்தலுக்கும் அரசாங்கமொன்றின் தளர்வுக்கும் ஆணிவேராக முகநூலை குறிப்பிட முடியும். தனிமனிதனின் சமூக, சுய வாழ்வில் புஐ பல செல்வாக்கினை நிலைநிறுத்தும் ஆதர்சன சக்தியாக முகநூல் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.

கடினமான விடயங்களையும் இலகுவாக்கி மூச்சுக்காற்றும் எட்ட முடியாத அண்ட சராசரங்களை மிக அநாயாசமாக கடந்த போகும் அபார துணிவை முகநூல் கற்றுத்தந்துள்ளது.

 பல்சுவை தகவல்கள் , சர்வதேச தேசிய விவகாரங்கள் , அரசியல் நகர்வுகள் , இலக்கிய இதிகாசங்கள் போன்ற துறைசார் அம்சங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்ட பெருமை முகநூலையே சாரும்.

முகநூலில் இலக்கியம் படைப்போர் கணிசமாக பெருகி விட்டனர். Blog என்ற வலைப்பூ காலாவதியாகி Facebook அந்த இடத்தினை தனதாக்கி ஸ்திரமடைந்துள்ளது.

கவிதை, சிறுகதை ,தொடர்கதை , இலக்கிய தகவல்கள் விமர்சனங்கள் ,உரையாடல்கள் ,நேர்காணல்கள் என தமிழ் இலக்கியப் பணியில் முகநூலின் வகிபாகம் கணதியும் காத்திரமுமிக்கது.

  லிபி வடிவ இலக்கிய பரிணாமத்தின் நீட்சியாக  கணினி வடிவ கலியுக மாற்றம் வளர்ச்சியடைந்துள்ளமை இதன் அபாரத்திற்கு ஒரு பருக்கையாகும்.    துரிதமாக ஓடும் காலச்சக்கரத்தில் மனிதன் நின்று நிதானித்து ஒரு நூலை வாங்கி வாசிப்பதில் உள்ள இடரினை முகநூல் இலகுபடுத்தி விடுகின்றது. தான் பயணிக்கும் அல்லது ஓய்வெடுக்கும் ஓரிடத்தில் அமர்ந்தபடி தனக்கு விருப்பமான கவிதையை, சிறுகதையை அல்லது விமர்சனத்தை படித்து விடும் வாய்ப்பினை முகநூல் தருகின்றது.

காத்திரமாக எழுதிக் கொண்டிருந்த பலர் முகநூலுக்குள் இடறி விழுந்து தன் காருண்ய எழுத்துக்களால் முகநூல் மணமக்களின் கழுத்தினை அலங்கரிக்கும் பூமாலையாக மாறி விட்டார்கள்.

மிகப்பெரும் ஆளுமைகளை தன் வசீகரத்தினால் வளைத்து போட்ட முகநூலின் சாதுர்யம் கண்டு தமிழ் உலகு பேருவகை அடைகின்றது. எப்படி எழுதுகிறோம் என்பதல்ல, என்ன எழுதினாலும் 100 Like விழுந்து விட்டால் அவன் மகா கவிஞனாகி விடுகிறான். கவிதைக்கென்று பல்லாயிரம் பட்டயங்கள், வட்டங்கள் ,வலம்புரி ஜாலங்கள்.  இவைகளை ஆளாளுக்கு அணிந்து தம்மைத்தாமே மெச்சுகின்ற சௌபாக்கியம்  சகட்டு மேனிக்கு முகநூல் இலக்கியத்தில்  வாலாயப்பட்டுள்ளது.

மலினமான சொற்களால் மலினமான எழுத்துக்களை கட்டியெழுப்பி மாபெரும் ஆதர்சன சக்தியாக  பீற்றிக்கொள்ளும் சில இலக்கிய கர்த்தாக்களின் பேரிருளை  ஜெக ஜோதியாக்கி  முகநூல் இலக்கியம் ஆர்ப்பரிக்கின்றது.

 எழுத்து மாயா ஜாலங்களின் வர்த்தகர்கள் ,இலக்கிய உலகில்  ஒரு முட்டையிட்டு பின் ,  கொக்கரிக்கும் கோழித் திருடர்களுக்கு  முன்  காத்திரமான இலக்கிய ஆளுமைகள் தோற்றுத்தான் போகிறார்கள்.

முகநூல் இலக்கியத்தின் மற்றுமொரு  சருக்கல் காத்திரமான  எழுத்தாளர்களும் தனது படைப்புக்களை முகநூல் நளினத்திற்கேற்றாற் போல் வடிவமைத்துக் கொண்ட துயரம். ஒரு சிலரின்  மேதைமைகளை தவிர,  முகநூல் இலக்கியத்தின் செல் நெறி மெச்சும்படியாக இல்லை.

 விரல்விட்டு எண்ணி விடுவோர் இப்பக்கத்தில் காத்திரமான விவாதங்களையும், கருத்துக்களையும் இறுக்கமாக முன் நகர்த்துகின்றனர்.

 எனினும் அதற்கீடாக விமர்சனங்களை முன் வைக்கும் வாசகர் குறைவாக காணப்படுகின்றனர். அல்லது மலினமாக பின்னூட்டங்கள் இடும் வாசகர்களைத்தான் முகநூல் உருவாக்கியுள்ளது. பலஹீனமான தனிநபர் தாக்குதல்களும், மிகைப்படுத்தப்பட்ட துதிப்பாடல்களும் நிறைந்த துர்வாடை வீசும்  பூங்காவாக முகநூல் இலக்கிய உலகு சில நேரங்களில் நாறிப் போகின்றது.

இலக்கியத்தின் கடினமான பாதையினை வடிவமைக்கும் பின்புலத்தில் முகநூல் இலக்கியம் காத்திரமான சிந்தனை கருத்தூட்டங்களை மலினப்படுத்தும் தளமாக இன்று பரிணமித்துள்ளது.

கிடைப்பதற்கரிய நூல்கள் படைப்புக்கள் முகநூல் ஊடாக எளிய வாசகனையும் சென்றடைந்து பரவசமூட்டுகின்றது. பிர பஞ்சத்தில் எல்லைகளற்று உரையாடவும், தொடர்புகளை பேணுவதற்குமான பாலமாக முகநூல் இலக்கியம் காணப்படுகின்றது.

அண்டங்களை வெறும் துண்டுகளாக நறுக்கி வாசகனின் இலக்கிய பசிக்கு தீனி போடும் வலைப்பூக்களும், முகநூலும் தமிழ் உலகின் வரப்பிரசாதம் எனில் மிகையல்ல.

இலக்கிய உலகின் ஜாம்பவான்களை உள்ளங்கையில் வைத்து படிக்கவும், கருத்தாடல்கள் செய்யவுமான ஓர்மத்தினை முகநூல் ஏற்படுத்தியுள்ளது. ஏக தளத்தில் நூற்றுக் கணக்கானோர் கூடி ஏற்படும் கால, நேர, பொருளாதாரச் சுமையை நிவர்த்தி செய்து தனி மனிதனை ஒரு ஜனரஞ்ச குழுமத்துடன் இணைத்துக் கொண்டு நேர்மையான விவாதங்களையும், கருத்தாடல்களையும் முன் வைக்கும் அகன்ற வெளியாக முகநூல் இலக்கியம் பரிணாமம் அடைந்துள்ளது.

 சில தனியாள் குரோத குத்துச் சண்டையினை தவிர்த்து விட்டு முகநூல் இலக்கிய உலகில் சஞ்சரிப்பின் கணிசமான நல்ல அறுவடைகளை பெற்றுக்கொள்ள ஏதுவான நிலைகள் காணப்படுவதை மறுதலிக்க முடியாது.

முகவரியற்ற ஒரு கிராமத்திலிருக்கும் ஆரோக்கியமான இளம் படைப்பாளியின் நாமம் பிரபஞ்சமெங்கும் ஒரே வினாடியில் பிரகாசிக்கவும்,கவனிக்கவும் செய்யும் வல்லமை முகநூல் இலக்கியம் நமக்கு தந்த வரம்.

 சில வருடங்களுக்கு முன்  ஒரு படைப்பாளன் தனது நூலை அச்சிட்டு விற்பனை செய்வது முயற்கொம்பு. முகநூலின் வருகை இதனை எளிதாக்கியுள்ளது. ஒரே நொடியில் பல்லாயிரம் பேர் வாசிக்கவும், கருத்தாடல் செய்யவுமான வல்லமையை வசப்படுத்தியுள்ளது.

கட்டற்ற சுதந்திரத்தின் நீட்சி முகநூலின் இலக்கியத் தரத்தினை வரையறை செய்வதும் செம்மைப்படுத்துவதும் இலகுவானதல்ல.  யாரும் எதனையும் சொந்தப் பெயரிலும், புனைப்பெயரிலும் இதில் பிரவேசித்து அதிமேதைமையாகவும் அரூபியாகவும் வலம் வரலாம்.

தரமான இலக்கியத்தை வடித்தெடுப்பது தரமான வாசகர் தெரிவில் மட்டும் தான் இத்தளத்தில் சாத்தியப்படும். அல்லது பரிந்துரைக்கப்படும். பக்கங்களையும் நபர்களையும் பின் தொடர்வததன் மூலம் முகநூல் இலக்கியத்தின் காத்திரத்தன்மையை பேணி வர முடியும்.

முகநூலில் குறிப்பெழுதும் ஆளுமைகள் குழுக்களை ஒருங்கிணைத்து தேடல் மிகு புதிய வாசகனை இணைப்பதன் ஊடாக முகநூல் இலக்கியத்தினை செழுமையாக்கி அதன் செல் நெறியை வலிமை மிகு தளமாக மாற்ற  முயற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

இது முகநூல் இலக்கியத்தில் நம்பிக்கையுடன் பயணிக்கும் தரமான வாசகனை, ஆற்றுப்படுத்தும் கைங்கரியமாக அமையும். இதுவும் தமிழுக்காற்றும் தொண்டெனில் மிகையல்ல.

 

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...