Sunday, 19 August 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்தொடர்- 21

இந்திய இராணுவம் இலங்கையில் காலடி எடுத்து வைத்தபோது தமிழ் மக்கள் தங்கள் இரத்தத்தால் பொட்டிட்டு வரவேற்றது நினைவில் நிற்கிறது. மாலையிட்டு நெற்றியில் திலகமிட்டு தங்களை மீட்க வந்த மீட்பர்களாக அவர்கள் வணங்கப்பட்டனர்.கிழக்கில் அவர்களின் பிரசன்னம் சில மனங்களில்  அடங்காத்திமிரை விதைத்ததை அறிவேன்.

சுழல்கின்ற காலச்சக்கரத்தில் மீட்பர்கள் இரத்தத்தால் திலகமிட்ட மங்கையரின் கற்பின் சுவையை அறியமுற்பட்டு அவர்களை துவம்சம் செய்தனர்.புலிவேட்டைக்குப்புறப்பட்ட ஜாவான்கள் நரவேட்டையில் இறங்கினர்.

விடலைப்பையன்களின் கன்னங்களும் அவர்களின் பற்களால் காயப்பட்ட சரித்திரங்கள் கிழக்கில் உண்டு.துகிலுரிந்த துச்சாதனர்களால் தமிழ் மக்களின் அழகிய கனவுகள் சிதைந்து கொண்டிருந்ததை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம்.எங்கள் கோவணங்களை பாதுகாப்பதே பெரும்பாடாய் இருந்த காலமது. 

இந்திய இராணுவம் திடீரென முற்றுகையிடும், அதிகாலையில் எழுந்து கதவைத்திறந்தால் எல்லா முற்றங்களிலும் துவக்குடன் நின்றிருப்பார்கள். அன்றைய தினம் அலுவல்கள் எதுவும் நடைபெற அனுமதி இல்லை.வயல் வேலைக்குப் போகவோ,அலுவலகங்களுக்குச் செல்லவோ, பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லவோ முடியாது. பெண்கள் வீடுகளுக்குள் முற்றுகையிடப்பட்டிருப்பர்.

 ஆண்களை பாடசாலை மைதானத்திற்கு அழைத்துப் போவார்கள். கையில் ஒரு பெயர் பட்டியல் இருக்கும் . அது புலிகளின் முக்கியஸ்தர்களின் பெயர்கள். அந்தப்பெயர்கள் உள்ளவர்களை தனியே பிரித்தெடுத்து விசாரிப்பார்கள் .

விசாரணைகள் பெரும்பாலும் ஹிந்தியில்தான் இடம் பெறும் மொழிபெயர்ப்புக்கு தமிழ் நாட்டுக்காரர் ஒருவர் நிற்பார்.

கையில் இருக்கும் பெயர் லிஸ்ட்டை வாசித்து விட்டு 'இவனுகள தெரியுமா? ' என்பான்

'அண்ணே இவன் கிடக்கிறான் தெரிஞ்சாலும் நீங்க இல்லெண்டு சொல்லுங்க.'
மொழி பெயர்ப்பது போல் இனப்பாசம் காட்டுவான் தமிழ் நாட்டு வீரன்.

இந்த முற்றுகை ஒரு நாள் நீடிக்கும். உணவு தண்ணீரெல்லாம் தத்தமது வீடுகளில் இருந்து மனைவிமார்களால் கணவன்மார்களுக்கும். தாய்மார்களால் பிள்ளைகளுக்கும் ,உறவினர்களுக்கும் கொண்டு வரப்படும். மைதானமே திறந்த வெளிச்சிறையாக காட்சி தரும்.

காட்டிக்கொடுக்க முகமூடிகள் தயாராக இருக்கும்.முகமூடிக்கு முன்னால் வரிசையில் செல்ல வேண்டும். புலிகள்,புலிகளின் ஆதரவாளர்,அனுதாபிகள் தனக்கு முன் வந்தவுடன் முகமூடியின் தலை இலேசாக ஆடும்.

மறுகணம் அவன் தலைவிதியை ஜாவான்கள் நிர்ணயிப்பர். நான் ஒவ்வொரு முற்றுகையிலும் பிரார்த்திப்பதுண்டு .முகமூடிக்கு முன் வரும்போது அல்லாஹ்வே ஒரு ஈயைக்கூட அவன் அருகில் அண்ட விடாதே .மூக்கில் மொய்க்கும் ஈக்கும் தலையாடினால் என் நிலை என்ன? அச்சத்தில் உறைந்திருப்போம்.

தனக்கு வேண்டாதவர்களை பகை தீர்த்துக்கொள்ள முக மூடிகளின் தலைகள் ஆடிய வரலாறும் உண்டு.

ஒரு நாள் முள்ளிவெட்டவான் கடையில் நின்றிருந்தேன்.இந்திய இராணுவத்தினர் வந்து முற்றுகையிட்டு என்னையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போய்விட்டனர்.வாப்பா கெஞ்சிப்பார்த்தார்.வாகநேரி சந்தியில் இருக்கும் மில்க்போர்ட்டுக்கு ஐம்பது அடி தூரத்தில் ஒரு ஆல மரம் நின்றது. அதன் கீழ் ஏற்கனவே குவிக்கப்பட்ட சனங்களும் நின்றிருந்தனர்.எங்களை அவர்களுடன் இணையவிட்ட கப்டன் விசாரணையை ஆரம்பித்தான். 

ஆலமரத்தின் கீழ் அவனுக்கு கதிரை போடப்பட்டிருந்தது. விசாரணைக்குட்படுத்துபவர்கள் அவன் முன்னால் முழந்தாளிட்டு நிற்பாட்டப்பட்னர்.எனக்குத்தெரிந்த புலிகளும் இருந்தார்கள்.கையில் அவர்களுக்கு துவக்கு மட்டும் இல்லை.எங்கள் ஏரியா பொறுப்பாளர் சகாயமும் நின்றிருந்தான்.மில்க் போர்ட்டுக்குள்ளிலிருந்து

 'அடிக்காதீங்க எனக்கு தெரியா கடவுளே'

 என்ற கூக்குரல்கள் மரணக்கதறல்களாக வந்து வெளியில் விழுந்தன. பனை மட்டைகள் முறியும் சத்தம் என் காதை அடைத்தது.

எனது முறை வந்தது.

தமிழ் மொழிபெயர்ப்புக்கு இ.பி டி.பி அண்ணர் ஒருவர் நின்றிருந்தார்.தமிழ்தேசிய இராணுவமும் இருந்தது. இது இந்திய இராணுவத்தாலும்,வடக்கு கிழக்கு மாகாண சபையினாலும் தோற்றுவிக்கப்பட்ட கலவை.

ஜாவான் கேட்டான் புலிய தெரியுமா ?
ஓம் சேர் 

காட்டுவியா?
கண்டா காட்டுவன்

துவக்கு வச்சிருந்தானுகளா?
ஓம் சேர்

எப்படி சாமான் ?
உங்கட துவக்க விட பெரிய துவக்கு சேர்

சகாயன் சிரிப்பதை உணர்ந்தேன்.

எங்கள் தேசம் -227                                                                  ஊஞ்சல் இன்னும் ஆடும்...