Thursday 5 November 2020



அன்புள்ள சித்தி றபீக்கா பாயிஸ்,

தங்கள் கடிதமும், கவிதை நூலும் 13.10.2020இல் கிடைத்தது. அதிகரித்த வேலைப்பளு, அலுவலகப்பணிகள் காரணமாக உடனடியாக பதில் எழுத முடியவில்லை. உங்கள் கவிதைகளையும் உடனடியாக படித்து விட வேண்டும் என்று மேசையில் வைத்திருந்தேன். ஓவ்வொரு நாளும் அது கண்களை குத்திக்கொண்டே இருந்தது. 

இந்த கொவிட் 19 இரண்டாவது அலை தக்கதோர் சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளது. வீட்டிலிருந்து என்ன வேலை செய்வது அலுவலகப்பணிகளை 8மணி நேரமாக செய்வதற்கு இங்கு ஒரு ‘பிடுங்கலு’ம் இல்லை,’பீத்தலு’ம் இல்லை. கொஞ்சம் வாசிப்பு கொஞ்சம் எழுத்து என்று பொழுது போகிறது. தவிர எனது பிரத்யேக வாசிகசாலையை ஒழுங்கமைக்கும் பணிகளையும் தொடங்கியிருந்தேன். ஒரு வாரகாலமாக பிள்ளைகள் மனைவியின் உதவியுடன் அவற்றினை செய்து முடித்துவிட்டேன்.நீண்டகால அவா இந்த கொரோனாவால் நிறைவேறியிருக்கின்றது.

சதுப்பு நிலக்கொக்கின் கால்களை வாசித்து முடிப்பதற்கும் இரண்டு நாட்கள் தேவைப்பட்டது. கவிதை மனம் ஊறிப்பிரவகித்தோடுபவர்களிடம் நேசிப்புக்கு பஞ்சமிருக்காது.உயிர்கள் என்ற சட்டகத்தை தாண்டி அஃறிணைகளையும் காதலுறும் நுண்ணிய உணர்வுகளால் பின்னப்பட்டதுதான் கலைஞனின் இதயம்.சமூகத்தின் கண்களாவும் அங்கமாகவும் நிற்பவர்களால்தான் உள்மன அதிர்வுகளை புரிந்து கொள்ள முடியும்.

றபீக்கா உங்கள் ‘சதுப்பு நிலக்கொக்கின் கால்கள்’ உள் மனதின் ஆழித்துயரங்களை உரத்துப்பேசும் சித்திரங்களாகும். ‘வற்றாத ஈரம்’ உலர்வதற்குள் மற்றுமொரு கவிதை தொகுதியை தந்திருக்கின்றீர்கள். இது உங்களின் நீண்டகால நூலுருவாக்க கனவுகளை மெய்ப்பித்திருக்கின்றது. வாழ்வின் அடிமட்டத்திலிருந்து மேலெழுந்த’ பீனிக்ஸ்’ பறவை நீங்கள் . உங்கள் இலக்கிய கனவுகள் மெய்ப்பட்டிருப்பதில் எனக்கும் பேரானந்தம்.வலிகள் மிகுந்த வரண்ட காலங்களை வசந்தமாக உருமாற்றும் அற்புதங்களை கவிதை மூலம் பூக்கச்செய்துள்ளீர்கள்.

உங்கள் கவிதைகள் பிரதானமாக மூன்று விடயங்களை பேசுகின்றன.

1. சிறுவர் உளவியல் சார் அகவியல் பிரச்சனைகள்

2. சமூகப்புறக்கணிப்புக்களானவர்களின் மன அதிர்வுகள்

3. பெண்களின் நுண்ணிய மனக்கிலேசங்களை பிரபலிக்கும் எண்ணங்கள்

சிறுவர் உளவியல் குறித்த பல கவிதைகள் இத்தொகுதிக்குள் விரவிக்கிடக்கின்றன.ஒரு சில கவிதைகளை தவிர்த்திருப்பின் சிறுவர் உளவியல் குறித்துப்பேசும் சிறந்த கவிதைத்தொகுதியாக ‘சதுப்பு நிலக்கொக்கின் கால்கள்’ பேசப்படடிருக்கும்.

ஒரு வேளை உணவுக்காக எதிர்காலத்தையே அடமானம் வைக்கும் சிறுவர்கள்,வசந்தகால கனவுகள் சூன்யமாகி மலரும் போதே கருகிய அவலங்கள் என சிறுவர்களின் உள்ளுலகத்தின் பேரவலங்களை நீங்கள் அற்புதமாக கவிதையில் பதிவு செய்திருக்கின்றீர்கள்.

குப்பையில் குண்டு மணி,ஒரு வேளை உணவு,பளிங்கு வீட்டின் தூசி, நான் இல்லை கொத்தன், எனது நாள், வெளிப்படாத பிஞ்சு மூளை, விளக்கின் விழி, டியூசனுக்கு பிந்திய நான் போன்ற கவிதைகள் சிறுவர் உலகத்தின் அறியப்படாத இருண்ட துயர்மிகு பாடல்களை பேசும் கவிதைகளாகும். 

பாசத்திற்காகவும், அரவணைப்புக்காகவும் ஏங்கும் குழந்தைகளின் அவலக்குரல் உங்கள் கவிதைகளில் மௌன ஒலிகளாக இடையறாது கேட்டுக்கொண்டே இருக்கின்றது.

பெண் என்பவள் சில நேரம் உணர்வுகளால் நெய்யப்பட்ட நூல் வேலி. அவள் நுண்ணிய அதிர்வுகளையும், சிறு ஏமாற்றங்களையும் தாங்கும் மனோதிடம் அற்றவளாக தன்னை தாழ்த்திக்கொள்கின்றாள். அத்தகைய பெண்களுக்கு மாயசக்தியினையும், மனோவலிமையையும் உங்கள் சில கவிதைகள் ஊட்டச்சத்தாக பருகத்;தருகின்றது.சில கவிதைகள் ஆற்றாமையினால் மனம் வெதும்பி புலம்புகின்றது. சில கவிதைகள் தலைகோதி ஆறுதலாக தெம்பூட்டுகின்றது . பிரியாணி,பலாச்சளை,கனவுகளின் சிதைவு, முறிந்த பேனா, இரவின் மழை, தழும்புக்குள் பூச்சிகள், போன்ற கவிதைகளில் பெண் மனத்தின் அவலங்கள் ஏக்கங்கள், ரணங்கள் குறித்து பேசியிருக்கின்றீர்கள்.

உங்கள் உள்மனத்தின் பெருவலி சொற்கட்டுமாணத்தையும் மீறி படிப்போர் மனதில் அவசத்தை தூவி விட்டுச்செல்கின்றது.பெண் விடுதலைக்கான குரல்கள் நீட்சியாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

ஒரு ஒற்றைக்குருவி நீருக்காக பாலைவனத்தின் மணற்குன்றுகளிலிருந்து கேவுவதைப்போல மனித மனங்களின் சிறு தவிப்பையும் கவிதைகளில் படியவைத்திருக்கும் நீங்கள் இடையறாத வாசிப்பினையும், தேடல்களையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை உங்கள் கவிதைகள் பெரிதும் வேண்டி நிற்கின்றன. 

தொடர்ச்சியான வாசிப்பும் பயிற்சியும் நிலைபேறாக கூடவே இருந்தால் உங்கள் கவிதை திறன் அபரிதமாக வளரும் என்பதற்கு இத்தொகுதியில் உள்ள ‘சதுப்பு நிலக்கொக்கின் கால்கள்’ ஒரு பதமாகும். உங்களை எதிர்காலத்தின் கவிதை வனத்திற்கு அழைத்துச்செல்ல வாசிப்பும் கவிதைப் பயிற்சியும் 'கை விளக்காக' இருக்க வேண்டும் என்று ஆசிக்கின்றேன்.


நன்றி

அன்புடன்

ஓட்டமாவடி அறபாத்.

5112020

 


 

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...