Tuesday, 3 May 2016

சிறுகதை

அந்திமழை


“நீங்கள் தந்த “விசிடிங்கார்ட்” விலாசத்திற்கே இக்கடிதத்தை எழுதுகின்றேன்.” 
மழைக்காலம். கனதியற்று சிலுசிலுவென அழுதுகொண்டிருந்தது வானம். தலை நகரத்து அழுக்குகளை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு அசுத்தங்கள் வீதியை நிறைக்கின்றன.

நீங்கள் ஆமர்வீதியில் நின்றீர்கள்.  “குடைகொண்டுவரவில்லை” என்ற மடமையில் வசைபொழிந்தபடி பஸ்சுக்காகக்காத்து நிற்கும் உங்களில் விழிவைத்து நின்றேன் நான்.

மாலையின் வயதை இரவாக உயர்த்திக் காட்டியது இருள். மழை இலேசாகத் தூறினாலும் நேரேநெஞ்சை நிமிர்த்தி “என்னில்விழு” என்று தாரைவார்க்க முடியாது. அப்படியொரு சீராகத்தூறிக் கொண்டிருந்தது.

குடைக்குள் நங்கூரமிட்ட சில உடல்கள் வெளியே தலை நீட்டி “பஸ் வருகுதா’ என வீதியைப் பார்ப்பதும்இ கடிகாரத்தைப் பார்ப்பதுமாய் அவஸ்தைப்பட்டனர். எனினும் நீங்கள் சாவகாசமாக நிற்கிறீர்கள்.

அருகே ஒரு பெட்டிக்கடை சினிமா நட்சத்திரங்களின் படங்களை தன்னில் மாலையாக வரித்துக்கொண்டு பிஸியாக இருந்தது. அதற்குள் பீடாஇ பாபுல் வெற்றிலை வகையறாக்கள். சில குமர் பெண்கள் பெட்டிக்கடைக்காரனிடம் சிரிப்பும் கும்மாளமுமாய் அமர்க்களப்பட்டனர். நீங்கள் புறக்காட்சிகளைச் சுவாரஸ்யமாக அவதானிப்தை நான் பார்க்கிறேன்.

அந்தப்பெண்களின் விழிகளில் இரை தேடும் வெறியிருந்தது. வீதியோரங்களில் களிநடனம் புரியும் வசீகரமும் வேண்டுமென்றே மார்பைத்தூக்கி நிமிர்த்தியிருக்கும் சில்மிஷமும் உங்களை ஒருகணம் திணறடிக்கிறது.
உங்கள் மனம் பரபரப்பதை உணர்கிறேன். ”பேரம் பேசும் தலமாக அந்தப்பெட்டிக்கடை. சுலபமாகக்கண்டுபிடித்துவிட்டீர்கள். திடீரென உங்களை அச்சம் வந்துகௌவுகிறது. இளமையின் மதர்ப்பில் தளதளக்கும் அழகிகள் கூட்டம் வசியம் செய்தது. பிரயாசைப்பட்டுஇ நீங்கள் விழிகளை விடுவித்து வீதியில் எறிகிறீர்கள்.
தூவானமே மழையாகியது. அருகிலிருந்த ஹோட்டலுக்குள் நுழைகிறீர்கள். “பிளேன்ரீ”யை உறிஞ்சியபடி மழையின் சங்கீதத்தில் லயித்திருக்கின்றீர்கள். 
உங்களின் எதிரே நானும் அமர்கிறேன். ஹோட்டலில் அவ்வளவு சனமில்லை. வாழ்வின் வனப்பையும் மதர்ப்பையும் சுவாசமாகக்கொண்டு வாழும் உங்களுக்கு வாழ்க்கை தன்பக்கத்தை புரட்டிக் காட்டியது.
வானத்தைப் புரட்டிப் போட்டால் பூமியைக்கவிழ்த்துக் கொட்டினால் என்னவெல்லாம் உதிரும். கடல் வற்றினால் எப்படி இருக்கும். எல்லாவற்றையும் என்னைப் பார்த்த முதற்பார்வையில் அவதானிக்கிறீர்கள்.
தோளில் அடம்பிடித்துத் தொங்கிய கைப்பையை அவதானத்துடன் உருவி மடியில் வைத்துக் கொள்கிறேன். நீலக்குடையின் கைப்பிடி மட்டும் வெளியே தலை நீட்டியபடி பராக்குப்பார்த்தது. 
மழை இன்னும் வலுக்கத் தொடங்கியது. டிஸ்கவரி செனலில் மட்டுமே கண்டு வியந்த பெருத்த எலிகள் உங்கள் பாதங்களில் உஷ்ணத்தை உமிழ்ந்தபடி கடைமுழுக்க ஓடித்திரிந்தன. விழிகளை இடுக்கி காலுயர்த்தி உற்றுப்பார்க்கும் வெள்ளை வெளேரென்ற எலிகள்.
திடீரென உங்கள் முதுகந்தண்டில் நண்டூர்ந்திருக்கவேண்டும். குனிந்திருந்த நீங்கள் சரேலென நிமிர்ந்து அதிர்கின்றீர்கள். எதிரே இருந்த நான் உங்களையே வெறித்துக் கொண்டிருக்கின்றேன். துணுக்குற்று உங்கள் விழிகள் என்னை துளைக்கின்றன.  உங்களுக்கு அழகான விழிகள்இ குறுகுறுவென்று எதையும் அலைந்து கௌவுகின்ற துடுக்குப் பையன் போல்இ துருதுருவென்று சுழலும் விழிகளின் வசீகரம் எனக்குப் பிடித்தது.
“நீங்க கொழும்புக்கு புதுசா”? 
எனது கேள்வி பிசகின்றி விழ நீங்கள் சுற்றமும் பார்க்கின்றீர்கள் என் இதழோரம் கேலியாய் ஒருசிரிப்பு முகிழ்ந்து உதிர்கின்றது.
“ஒங்களத்தான்இ நீங்க கொழும்புக்கு புதுசா”? 
மறுபடியும் நான் நீங்கள் சுதாரித்துக் கொண்டுஇ என்னை நோக்கி மெலிதாகப் புன்னகைக்கின்றீர்கள். ஒரு ரோஜா முகிழ்ந்து பாதி இதழ் விரிந்து இதோ முழுவதும் மலரப் போகிறேன் என்ற பாவனையைப் போல் அந்தச் சிரிப்பு. அது ஒளிர்ந்த முனையிலிருந்து உங்கள் குரலினிமை பிறக்கிறது. 
“இல்லை 10 வருஷம்” என்கிறீர்கள். 
“எங்க இருக்கிறீங்க”
“தெஹிவளையில் 
 “என்ன செய்யுறீங்க” 
“தனியார் கம்பனியில வேலை செய்யிறன்” 
நான் கேட்பதும் நீங்கள் சொல்வதுமாக இருவரிடையே மௌன முடிச்சுக்கள் நெகிழ நீங்கள் இயல்பாகி என்னைக் கேள்விகளால் துளைபோட ஆரம்பித்தீர்கள்.  
மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. கடை முன்றலில் ஏகப்பட்ட சனநெரிசல் சிறுகுடைக்கு அடங்கமாட்டேன் என்பது போல் மழை அதிக இரைச்சலுடன் கொட்டவாரம்பித்தது. 
பெண் மூடிவைத்த புத்தகம். திறந்து படிக்கும்போதுதான் உள்ளே இருப்பது தத்துவமா? கவிதையா துயரமா என்ற அனுபவம் நமக்கு ஏற்படுகிறது. உங்களிடம் என்னைத் திறந்து காட்டுகிறேன். என் கவிதைகளின் அவலமும் அலறலும் உங்கள் நெஞ்சை சுடுகிறது. வரிக்கு வரி சமுத்திரத்தின் பேரிரைச்சல். நீங்கள் படிக்கவென்றே இத்துணை காலம் நெஞ்சுக்குள் தேக்கிவைத்திருந்தேனோ!? உங்களைப் பார்த்த கணத்தில் மட்டும் ஏன் எனக்கு நம்பிக்கை துளிர்த்தது.  என்வாழ்வைப்போல் இதுவும் புதிராகவே தெரிகிறது. 
அடிக்கிற அம்மாவின் கால்களைக் கட்டிக்கொண்டு அழும் சின்னக் குழந்தை மாதிரி நீங்கள் என்னைத் தவிர்த்து விலக விலக நான் உங்களிடம் எனது கதையை கூறிக் கொண்டிருக்கிறேன்.
“எனது பெயர்பாத்திமா ஊர்காலி எனக்கு மூன்றுபிள்ளைகள். காதலித்து திருமணம் செய்து கொண்டேன். காதலின் திவ்யத்தில் பிரபஞ்சத்தில் இறக்கை முளைத்துப் பறந்துபார்த்தவர்களில் நானும் ஒருத்தி காதல் கணவன் கைவிட்டுவிட்டான். மூன்று குழந்தைகளையும் காப்பாற்ற ஆடைத் தொழிற்சாலைக்கு வந்தேன். 
இலயிப்பின்றி எழுந்து கொள்கின்றீர்கள் “மன்னிக்கவும் இந்த இடம் உன் கதைகேட்க உகந்தது இல்ல எனது விலாசம் தாரன் அலுவலகம் வா” என்றுவிட்டு நகரப்போன உங்கள் கரத்தை பலாத்காரமாகப் பற்றுகின்றேன். பிரசவத்தில் அரைவாசி வெளியே வந்து பாதிக்குழந்தை உள்ளேயிருந்தால் உண்டாகும் வலி எனக்குள் படர்கிறது. என் மனசின் சுமையை இறக்கிவைக்க நீங்கள் கடவுள் அனுப்பிய தூதர் என்றே எண்ணுகிறேன்.
“பக்கத்துல என்டரூம் இருக்கு வாங்கஇஸ “உங்களைப் பார்த்தா நல்லவரா” தெரியுது “நான்யாருக்கிட்டயும்இப்படி நடந்துக்கல்ல பிளீஸ் என்டகதயக் கேளுங்க நான் உடைந்துகரைகிறேன். சனங்களின் பார்வை நம் மீது படரத் தொடங்குகின்றது. உங்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. “சரிவருகிறேன்” நீங்கள் என்னை முன்னே விட்டு இடைவெளிகள் அதிகமெடுத்து வருகின்றீர்கள். கொட்டும் மழையில் கடைக்கு கடைதாவி வந்த உங்களின் பிரசன்னம் என் மனசுக்குள் மலையாய் உயர்கிறது. 
எனது அறை ஒருஹோட்டலின் மேல்மாடியிலிருந்தது. அங்கு வந்த பின்புதான் அதற்குள் கால்வைப்பதே பாவம் என்ற உணர்வு உங்களுக்குள் ஊர்கிறது. இலேசான நடுக்கத்துடன் அறைக்குள் நுழைவதை நான் அவதானிக்கின்றேன். உங்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியற்காக என்னை மன்னித்து விடுங்கள்.
உங்கள் திருவடியில் நான் அமர்ந்திருக்கின்றேன். “தறுக்கு” வைத்து மூடப்பட்டபுத்தகத்தைத் திறக்கின்றேன்.
ஆடைத் தொழிற்சாலையில் அறிமுகமான நண்பி அதிக பணம் சம்பாதிக்க “பார்ட்டைம் ஜொப்” இரிக்குதுஇ வா” வென்று என்னை அழைத்து வந்தாள். மருதானையில் ஒருஹோட்டல் ரூமில் என்னை இருத்திவிட்டு போய்விட்டாள். உள்ளே ஒருவன் வந்து பேரம் பேசும் வரை அந்த ”ஜொப்” இதுதான் என்று எனக்குத்தெரியாது. 
ஒரு கைதிபோல அந்த அறைக்குள் உழன்றேன். உணவும் உடையும் வந்தது. நண்பி என்ற துரோகி என்னை அந்த ஹோட்டலுக்கு விற்று விட்டசெய்தி என்னைத் துடிக்கவைத்தது.
என் அதரங்கள் துடித்தது நெஞ்சு வெடித்து கேவுகிறேன். தன்னுணர்வற்று என் துயரத்தில் தோய்ந்திருந்த நீங்கள் என் தலையை ஆதுரமாகக் கோதிவிடுகின்றீர்கள். ஆண்டவா அந்தத் தொடுகையால்தான் எத்தனைகோடி அமைதியைத் தந்தாய் நன்றி.
அழுகையினூடே என்கதையைத் தொடர்கிறேன். ”அந்தஹோட்டலில் எனக்காகத் தலைக்கு 2000 வாங்குவார்கள். எனக்கு கிடைப்பதோ 500 மட்டும். வாரமொருமுறை எனது பிள்ளைகளைப் பார்த்துவருவேன். வாழ்க்கை – உடம்பை விற்று உடலுக்குச் சோறுபோடுகிறது. ஒவ்வொருஆணின் படர்தலும் என் இரவுகளைச் சுட்டெரித்தன. கலவி என்பதை சொர்க்கமாய் அனுபவித்த நான் என்னில் ஊரும் நாகங்களை அனுமதித்தபடி மரக்கட்டையாகினேன்.
என்னைக்கட்டியவன் “தூளுக்குஅடிமையானவன். ஒருநாள் வீட்டுக்கு ஒருவனை அழைத்துவந்தான். நண்பர் எனஅறிமுகப்படுத்தி அவனுக்கு டீபோடு என்றுவிட்டு வீதியில் இறங்கிஓடினான். “எங்கேபோறீங்க?” என்றுகத்தினேன். “பிஸ்கட்வாங்கிவாரன்” என்றவனின் குரல் உடைந்து விழுந்தது. பிள்ளைகள் பாடசாலைக்குச்  சென்றுவிட்டிருந்த காலை நேரம். 
நண்பனாக வந்தவன். என்னைக் கட்டிலில் தள்ளி சூறையாடினான். “ஏனடா இப்படிச்செய்தாய்”? என்ற விம்மலிடையே அவன்கூறிய பேரிடி இணைந்து வெடித்தது.
“உன் புருஷன் தூளடிக்கவாங்கின கடன் தலைக்குமேல ஏறிட்டு தாரதுக்கு வழியில்ல  சரி உன்பொண்டாட்டிய ஒருதடவைதா என்றன் கூட்டிவந்தான் போயிட்டான். “அன்று போன கணவன்இ இன்னுமில்ல  அவன் நண்பன்தான் அடிக்கடி “கடனை” தீர்த்து போகவந்தான். உங்களுக்கு தெரியுமா நான் மக்காபோய் “உம்ரா செஞ்சவள் என்ன பயன் என்னையும் கிருபையுடன் நோக்க அருள் விழிகள் இல்லையே!
நீங்கள் பேரிடி விழுந்தவர் போல் இடிந்து போகிறீர்கள். பக்கத்து அறைகளில் சிணுங்கல்கள் பேரம் பேசல்கள் ஓர் ஆணின் துவம்சத்தில் சிதையும் பெண்ணின் வேதனைகள் எல்லாம் மிகத் துல்லியமாகக் கேட்டன.
மழையின் வேகம் குறைகிறது. இரவின் உக்கிரத்தில் தலை நகர் விழாக் கோலம்பூண்டிருந்தது. ஜன்னலிடுக்கில் கசிந்து வரும் வெளிச்சம் நாமிருந்த அறைக்குள் சொட்டியது. அந்த அறையே துயரம் படிந்து பிசுபிசுத்தது. எனது புத்தகத்தின் சுவாரஸ்யமான அத்தியாயங்களையும் படிக்கின்றீர்கள்.
“எனக்கு ஒருகூட்டாளி இருக்காருஇ என்ட “பொடிகார்ட்” போல. இந்த ஏரியாவுல அவருதான் சண்டியன். ரூமுக்க அடைபட்டுக் கிடந்தன். “கஸ்ரமர்” இல்ல. வீதிக்கு நானே இறங்கி பேரம்பேசி தொழில்தொடர்கிறேன். ”பொடிகாட்டுக்கு தலைக்கு நூறு மாமூல் ஒருநாளக்கி 5000 அல்லது 6000 வருமானம் வரும். சில நாளக்கி எதுவுமே கிடைக்காது. இந்த  ஹோட்டல்காரங்க மாதமாதம் பொலிசுக்கு இலஞ்சம் கொடுக்கிறாங்க. அதுதான் நாங்க நிம்மதியா இருக்கம். எங்கள்ற ஒவ்வொருத்திக்கும் ஒரு ஆம்பள “பொடிகாட்” இருக்கு. அவங்கதான் எங்கட பாதுகாப்பு. இதுல  வேதன அவமானம் என்னென்டா சில பேரோட புருஷனே. கட்டியவளுக்கு “மாமா” வேல பார்க்குறான்கள்.
திடீரென நாமிருக்கும் கதவு தட்டப்படுகிறது. உங்கள் சர்வாங்கமும் ஒடுங்கி வியர்த்துக் கொட்டுகிறது. சேமித்துவைத்து பாதுகாத்த மானம்  மரியாதை எல்லாம் அம்பலத்தில் கரையப் போகிறது என்ற பயம்  உங்கள் உயிரில் உறைவதைப் பார்க்கிறேன். 
நான் கதவண்டை சென்று தாழ்ப்பாள் விலக்குகிறேன். உங்களுக்கு முகம் தெரியவில்லை. ஓர் ஆணின் கை என் கரங்களுக்குள் எதையோ திணித்துவிட்டு மறைகிறது. தாழ்ப்பாளைப் போட்டுவிட்டு வந்தமர்கிறேன். அதற்குள் தெப்பமாகிவிட்டீர்கள். யாரெனக் கேட்பதற்கும் உங்கள் நாக்கு எழவில்லை. சுதாகரித்தபடி நானே சொல்கிறேன்.
இவன்தான் என்ர “பொடிகாட்” கஷ்ரமர் ரூமுக்கு வந்தா (கொண்டம்) ஆணுறை வாங்கித்தருவது இவன் பணிகளில் ஒன்று. நீங்க என்னோட வருவதப் பார்த்திட்டான். அதான் இது. சிரிக்கிறேன். என் சிரிப்பில் உயிருமில்லை. ஓசையுமில்லை. 
அந்த ஹோட்டல் முழுக்க சுக்கிலத்தின் துர்மணம் வீசுவதான பிரேமை உங்கள் நாசியை நிறைக்கிறது. 
நான் எழுந்துநிற்கிறேன். காய்ந்த திராட்சைப்பழமாய் உலர்ந்திருக்கும் உதடுகளுக்கு சாயம் பூசிமினுக்கம் கொடுக்கின்றேன். நீங்கள் என்னை வாஞ்சையுடன் பார்க்கின்றீர்கள். பவுடரை முகம் முழுக்க அப்பி தலை சீவிக்கொள்கிறேன். என் மனசிலிருந்த கணத்த பாரம் இறங்கிட்டு. என் விழிகள் ஆனந்தத்தில் ஒளிர்கின்றன. 
என் மேல் பச்சாதாபம் மேலிட ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை  நீட்டிஇ இந்தா வைத்துக்கொள் இந்த நரகத்திலிருந்து மீண்டு வேறு தொழிலைத் தேடிக்கொள் என்கிறீர்கள். நான் பிகு பண்ணவே பலாத்காரமாக என்கரங்களுக்குள் நோட்டைத் திணித்து விட்டு வெளியேறிச் சென்றீர்கள். 
உங்கள் முதுகுக்குப்பின் என்குரல் தளதளத்தது உடைந்து சிதறுகிறது.
“இந்த ரூமுக்கு வந்து என்னைத் தொடாம காசு தந்துட்டு போறமுதல் ஆம்புள நீங்கதான் நீங்க நல்லா இருக்கணும் மறுபடியும் என்னைத் திரும்பிப் பார்க்கின்றீர்கள். 
நான் ஓவென்று அழுகின்றேன். ஓங்காரமாகப் பெய்யும் அடை மழையில் என் அழுகையும் கரைகிறது.


நன்றி- ஞானம்