Saturday 22 June 2013

இமாம்கள், முஅத்தின்கள் : வாழ்வுரிமைக்கான சில முன் மொழிவுகள்

மஸ்ஜிதுகளில் அதான் ஒலிக்கப்படுவது முஸ்லிம்களின் நேர முகாமைத்துவ ஓழுக்க நெறிக்கு  முன்னுதாரணமாகும்.

தொழுகை மூமீன்கள் மீது நேரங்குறிக்கப்பட்ட வணக்கம் என்பது அல்குர்ஆனின் போதனையாகும்.

இந்த நேர முகாமைத்துப்பயிற்சிக்கு நினைவூட்டுபவர்கள் மஸ்ஜிதுகளில் கடமைபுரியும் முஅத்தின் என அழைக்கப்படும் கண்ணியமிகு அழைப்பாளர்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் இவர்களுக்கு உரிய கௌரவமும் அந்தஸ்தும்  வழங்கப்பட்டு மதிக்கப்பட்டு வந்ததை அறிய முடிகிறது.நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இவர்களின் முக்கியத்துவம் அதிகம் உணரப்பட்டது.

 மதுரக்குரலுடையவரான பிலால் (ரழி) அவர்கள் அடிமையாக இருந்து விடுதலைபெற்ற கருப்பினத்தைச்சேர்ந்த ஒருவர். எனினும் அவருக்கு தொழுகைக்கான அழைப்புவிடுக்க நபிகளாரால் பதவி உயர்த்தப்பட்டதை அறிவோம். இது தகுதியுள்ளவர்களை பணிக்கமர்த்தும் இஸ்லாத்தின் கொள்கையாகும்.

மஸ்ஜிதுகளில் இவர்களினதும்,இமாம்களினதும் வகிபாகம் என்ன என்பதை ஆராய்வதே இப்பத்தியின் நோக்கம்.

ஆசிய நாடுகளின் மஸ்ஜிதுகளில் கடமை புரியும் இமாம்களினதும் முஅத்தின்களினதும் வாழ்வாதாரம் முன்னேற்றகரமானதாக இல்லை என்பது வெள்ளிடை மலை

1- இமாம்கள்,முஅத்தின்களுக்கான தொழில் உடன்படிக்கை :

அரச மற்றும் அரச சார்பற்ற தனியார் நிறுவனங்களில் பணிக்கமர்த்தப்படும் ஊழியர்களுக்கு தொழில் உடன்படிக்கைகளும் தொழில் சார் காப்புறுதிகளும் வழங்கப்படுவதுண்டு. தொழில் வழங்கும் நிறுவனம்  தனது ஆளுகைக்குட்பட்ட நிறுவனமொன்றில் பணியாளரை நியமிக்கும் போது அவரின் தொழிற்தகுதி முன் அனுபவம் குறித்து அக்கரையுடன் பரிசீலிப்பது அவசியமாகும். இது பயிற்றுவிக்கப்படாத அல்லது துறைசார் தகுதியற்றவர்களை , குறித்த சேவைக்கு பணிக்கமர்த்தும் செயற்பாடுகளை தவிர்ப்பதற்கு பெரிதும் உதவும்.

ஆளுமையுள்ள ஒருவரை பணிக்கமர்த்தும் போது தொழில் நிறுவனங்களால் பின்பற்றப்படும் நியதிகளை பன்பற்றி தொழில் வழங்கப்படல் வேண்டும்.குறிப்பாக ஊழியர் சேமலாபநிதி ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றை இவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதுடன்,தொழில் திணைக்களத்தின் வரையறைகளை கடைப்பிடிப்பதும் அவசியம்.

அவருடைய பணிகுறித்து எழுத்து மூலமாக அறிவிப்பதுடன் அடிப்படை சம்பளம் மேலதிக கொடுப்பனவு வருடாந்த சம்பள உயர்வு குறித்தெல்லாம் தெளிவாக உடன்படிக்கையில் சுட்டிக்காட்டப்பட வேண்டும். குறித்த ஊழியர்களை நிருவாகம் பணிநீக்கம் செய்வதாயின் தொழில் திணைக்களத்தின் நிபந்தனைகளின் படி முன்னறிவித்தல் கொடுக்க வேண்டும்.

இது இருவரினதும் தொழில் ரீதியான பாதுகாப்புக்கும் திருப்பதியான சேவைக்கும் வித்திடும்.

 2- தேர்வு முறை

மஸ்ஜித் என்பது முஸ்லிம்களின் வாழ்வியலில் அன்றாடம் பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய நிறுவனமாகும். மக்கள் தொடர்பாடலில் மஸ்ஜித்தின் வகிபாகம் முக்கிய இடத்தைப் பெறுகின்றது.மக்களை மஸ்ஜித்தின் பக்கம் அழைக்கக்கூடிய முஅத்தின் என்பரும்,தொழுகை மற்றும் உபன்னியாசம் செய்யும் இமாமும் தகுதியுள்ளவராகவும் குறித்த துறையில் அனுபவம் வாய்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

வெற்றியின் பக்கம் அழைக்கும் அழைப்பாளனின் குரல் மகுடிக்கு மயங்கி நர்த்தனமிடும் சர்ப்பம் போல் அவரின் குரலின் இனிமையும் அழைக்கும் தொனியும் இங்கிதமாகவும் கம்பீரமாகவும் மதுரமாகவும் இருக்க வேண்டும். பல்லின மக்கள்வாழும் நாடொன்றில் அல்லது பல்லின மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் இருக்கும் மஸ்ஜிதுகளில் இப்பண்பு முஅத்தின்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படவேண்டும்.

நன்கு பயிற்றுவிக்கப்பட்ட முஅத்தின்கள் இத்தகைய இடங்களில் பணிக்கமர்த்தப்படவேண்டும்.

பெரும்பாலான நகரங்களில் இருக்கும் முஅத்தின்களிடம் அடிப்படை தகுதிகள் இல்லாத நிலையில் அதான் சொல்லும் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதால் அதான் ஒலி கேட்டதும் வெறுப்புடன் செவிதாழ்த்தக்கூடிய சூழல் நிலவுவதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.சில இடங்களில் ஒலிபெருக்கியில் அதான் சொல்வதற்கு நீதி மன்ற தடைவிதிக்கக் கோரி பெரும்பான்மையினர் வழக்குத்தாக்கல் செய்தமைக்கு இத்தகைய கம்பீரமற்ற இனிமையற்ற குரல் ஒலியுள்ள முஅத்தின்களின் அட்டகாசம் எனில் மிகையல்ல.

உண்மையில் மஸ்ஜிதுகள் அழைப்பாளர்களை தேர்வு செய்யும் போது
அவர்களது விடயத்தில் பின்வரும் விடயங்களை கவனத்திற் கொள்ளவேண்டும்.

•    குரல் இனிமை
•    அறபு உச்சரிப்புக்களின் ஒழுங்கமைப்பு
•   கருத்தறிந்து அதான் கூறுதல் அதற்கேற்றவாறு குரலின் தன்மையில் ஏற்ற    இறக்கங்களை உருவாக்கல்.
•    மார்க்க அறிவும் ,பொது அறிவும்

• பொதுமக்களுடன் உறவுகளைப் பேணும்படியான பண்புகளும், 

•  ஆளுமையும்.பொது மக்களால் விரும்பப்படும் குணவியல்பும்.

3- திடகாத்திரமாணவர்களை தெரிவு செய்தல்

குறிப்பாக முஅத்தின்கள் வயோதிபர்களாகவும் நோயுற்றவர்களாகும் தெரிவு செய்யப்படுவது எழுதாத சட்டம்போல் சில பகுதி மஸ்ஜிதுகளில் பேணப்பட்டு வருகிறது. இது நிருவனத்தின் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையாகும் .இதற்கு முஅத்தின்கள் பலியாகுவது வேதனை தரும் விடயம்.

இமாம்கள் தெரிவின் போது முறையாக சன்மார்க்க கூடங்களில் கல்வி கற்றவர்களும்,உயர் கல்வி கற்றவர்களும்  தெரிவு செய்யப்படவேண்டும். பொதுமக்களுடன் சன்மார்க்க விழுமியங்களை இலகுவாகவும், உண்மையாகவும்,தெளிவாகவும் விளக்கக்கூடிய ஆற்றல் இமாம்களிடம் இருக்க வேண்டும்.குறிப்பாக மொழி ஆளுமையும்,பொது விடயங்களில் பரந்த அறிவும் இனிமையான குரல் மற்றும் சொற்பொழிவுத்திறனும் இமாம்களிடம் எதிர்பார்க்கப்படும் அம்சங்களாகும்.

ஊர் மற்றும் சமூகப்பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வினை வழங்கக்கூடிய ஆற்றல் உள்ளவர்களால் ஒரு பள்ளிவாயலின் தலைமைத்துவமும் வழிகாட்டலும் சீர் பெறும்.

4- வேதனம்

சமூக நிறுவனமொன்றில் அதிக ஊழியத்திற்கு குறைவான வேதனத்தைப் பெறுபவர்கள் பள்ளிவாயல்களில் பணிபுரியும் முஅத்தின்களும், இமாம்களுமே! இது புனிதமான சேவையை மாசுபடுத்தும் கைங்கரியம்.இவர்கள் சில மஸ்ஜித் நிறுவனங்களின் தர்மகர்த்தாக்களால் கொத்தடிமைபோல் நடத்தப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் தண்டணைக்குரிய குற்றங்களாகும். பணியாள் ஒருவரை அச்சுறுத்தவோ, அல்லது அடிமைபோல் பணியிலீடுபடுத்தவோ தொழில் சட்டங்கள் இடம் தரவில்லை.

மதிப்பு மிகு முஅத்தின்கள் பஸ்ஜிதுகளில் குறைந்த வேதனத்தில் சேவகம் புரிவதற்கு அவர்களின் வறுமையும் வயோதிபமும் பிரதான காரணமாகும்.

தனியார் சம்பள அளவுத்திட்டம் இவர்களின் விடயத்தில் கவனிக்கப்படுவதும் ஊழியர் சேம லாபக்கணக்கில் நிருவாகத்தின் சார்பாக காப்புறுதிப்பணம் வைப்பிலிடப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் வைத்தியக் கொடுப்பனவு, பண்டிகைக்கால கொடுப்பனவு, பிள்ளைகளின் உயர் கல்விக்கான புலமைப்பரிசில், வட்டியில்லாக்கடன் வசதிகளும் இவர்களுக்கு வழங்கப்படல் வேண்டும்.

ஏனெனில் வேறு தொழில்கள் எதனையும் செய்யாமல் மஸ்ஜிதுகளில் முழு நேரமாக கடமைபுரியும் ஒருவருக்கு இது தகுதியான கொடுப்பனவுகளாகும்.முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும்,
( Labour Department) தொழில் திணைக்களமும் இத்தகைய திட்டங்கள் மஸ்ஜிதுகளில் நடைமுறையில் உள்ளதா அல்லது பேணப்படுகிறா என்பதை கண்காணிக்க வேண்டும். 

குறிப்பாக இந்த இரண்டு திணைக்களங்களிலும் முஅத்தின்கள் இமாம்களின் நலன்புரி விவாகரங்களை கவனிப்பதற்கென தனிப்பிரிவுகள் அமைக்கப்படவேண்டும். இவர்களின் பிரச்சினைகள், அல்லது இவர்களுக்கு எதிராக புரியப்படும் அநீதிகளுக்கெதிராக குரல் கொடுப்பதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் இவர்களுக்கென இயங்கும் குரல்கொடுக்கும் தொழிற்சங்கங்கள், அமைப்புக்கள் இல்லாதது பெருங்குறையே.

நான் சார்ந்து நிற்கும் தொழிலில் தாழ்வு மனப்பான்மையின்றி, நம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் இவர்கள் பணி செய்யவேண்டும். இவர்களின் மாதாந்த சம்பளம் தடையின்றி கிடைப்பதற்கும் ஆவண செய்ய வேண்டும். வாழ்க்கை செலவை சமாளிக்கும் பொருட்டு இவர்களின் ஒருவரின் அடிப்படை சம்பளம் பொருத்தமாக நிர்ணயிக்கப்படவேண்டும்.

எதிர்காலத்தில் ஓய்வூதியம் பெறும் முன்னேற்பாடுகளை இவர்களுக்கு அமைத்துக்கொடுக்க வேண்டும்.

ஏனெனில் மஸ்ஜிதுகளில் ஊழியம் புரிந்து விட்டு தள்ளாத வயதில் பிறரிடம் கையேந்தி நிற்கும் இழிவான காரியத்தை இவர்கள் செய்வதற்கு சமூக நிறுவனமான மஸ்ஜிதுகள் இடம் அமைத்துத் தராமல் பாதுகாப்பது அவர்களின் கடமையாகும்.
 
5-பணி வரையறை

முஅத்தின்கள் பஸ்ஜிதுகளில் குறைந்த வேதனத்தில் சேவகம் புரிவதும் எல்லையற்ற பணிகளை செய்வதற்கு பணிக்கப்படுவதும் அவர்களின் இயல்புக்கு மீறிய கடமையாகும்.

மலசலகூட சுத்திகரிப்பு,வெளிக்கள கால்வாய்கள் சுத்திகரிப்பு,பள்ளிவாயல் அதன் வெளிப்புறச்சூழலை சுத்தப்படுத்தல். மின்சார வேலைகளை கவனித்தல்,ஜனாசாக்களை குளிப்பாட்டல், ஜனாசாக்களை கபனிடல்,ஊர்க்கடமைகள் என அடையாளப்படுத்தும் மார்க்கத்திற்கு முரணான கத்தம்,பாதிஹா, மௌலூது வகையறாக்களை செய்யத்தூண்டல்,இறுதியாக மின் விளக்குகளை அணைத்து  பள்ளியை மூடி காவல் காத்தல்.
மேற்படி பட்டியலிடப்படாத பணிகளும் முஅத்தின்களுக்கு பணிக்கப்படுவதுண்டு இது பல்துறைசார் ஊழியர்கள் சுத்திகரிப்பாளர் செய்யவேண்டியதை ஒரேயொரு முஅத்தின் குறைந்த சம்பளத்தில் செய்வதற்கு பணிக்கப்படுகிறார்.

இந்நிலை மாற்றப்படவேண்டும்.முஅத்தின் என்பவர் அதான் சொல்லும் கண்ணியமிக்க பணியுடன் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.வேறு பணிகளுக்கு அப்பணிசார் ஊழியர்கள் நியமிக்கப்படவேண்டும்.

இது தொழில் உடன்படிக்கையிலும் மட்டுப்படுத்தப்படவேண்டும்.
இவ்வாறே இமாம்களும் அவர்களின் தொழிலுக்கு அப்பால் நின்று பள்ளிவாயல்களில் சேவை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். சில கிராமங்களில் முஅத்தின்கள் செய்யும் பணியையும் இணைத்து இமாம் செய்வதற்கு பணிக்கப்படுகின்றார்.இது சன்மார்க்கம் கற்றவர்களை அவமதிக்கும் செயல்களாகும்.

பள்ளிவாயல்களில் பணிபுரிகின்றவர்களும் மனிதர்களே என்ற உணர்வு நிருவாகிகளுக்கும், ஜமாஅத்தினருக்கும் உணர்த்தப்படவேண்டும். அவர்களின் பணிகளை வரையறுத்துவிட்டு அதை சுதந்திரமாக செய்வதற்கு வழிவகைகள் செய்து கொடுக்கவேண்டும்.

இவ்வாறு இமாம்களினதும், முஅத்தின்களினதும் தெரிவும்,வாழ்வுக் காப்புரிமையும் பேணப்படுமாயின் இஸ்லாம் எதிர்பார்க்கும் இஸ்லாமியக் கட்டமைப்பை மிக இலகுவாக அமுல்படுத்த முடியும் என்பது வெள்ளிடை மலை.

Thursday 13 June 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


                                                                     தொடர் - 41

போர் உச்சத்தில் இருந்த காலப்பகுதி.

2003இல் ராஜகிரியவில் மேற்கொள்ளப்பட்ட புலிகளின் அதிரடித்தாக்குதல்களை பொரல்லையில் இருந்தபடி கேட்டு அதிர்ந்திருக்கின்றேன். ஒரு விடுமுறை நாளில்தான் இந்த தாக்குதல் நடந்தது. ஜன்னல் கம்பிகள் அதிர, துவக்குகள் நேருக்கு நேர் மோதும் இசை அழகாகவும் திகிலாகவும் இருந்தது.வனவாசல் அடுக்கு மாடித்தொடருக்குள்ளும் புலிகள் புகுந்திருந்தனர். அந்நேரம் என்னுடன் சவூதி அரேபிய விருந்தாளி ஒருவரும் தங்கியிருந்தார். அவர் அச்சத்தில் ஆடிப்போனார். பயத்தில் உறைந்திருந்த அவர் முகம் சிவந்து கன்றிப்போய் தெரிந்தது. முகம் குப்புறப்படுத்தபடி கலிமாவை வேகமாக உச்சரித்தபடி இருந்தார்.

எமக்கென்றால் இது பழகிய சங்கதி. பயப்படவேண்டாம் என்றேன். எனினும் அவர் மாலையே கிளம்பி நட்சத்திர ஹோட்டலுக்கு குடி புகுந்து சென்றுவிட்டார். பாராளுமன்றத்திற்கு வரும் கௌரவ உறுப்பினர்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல் அது என்று பேசிக்கொண்டார்கள்.என்றாலும் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.

அப்போது ராஜகிரிய ஆயுர்வேத மருத்துபீடத்திற்கு அருகிலும் , சூழவும் பற்றைக்காடுகள் முளைத்திருந்தன.கொழும்பு நகரமே குப்பைக்காடாக காட்சியளித்த காலம். அழகியலை பற்றி ஆட்சியாளர்களை அலட்டிக்கொள்ளாத காலம். அதிரடித்தாக்குதல்களை சமாளித்தாலே போதும் என்றிருந்த காலம். பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்றிருந்தவர்களுக்கு அழகியல் பற்றி சிந்திக்க நேரமேது?

குண்டுவெடிப்பிலிருந்தும், தற்கொலைதாரிகளிடமிருந்தும் எப்படி தப்பிப்பது என்று சிண்டை பிய்த்துக்கொண்டு ஆளாளுக்கு பதறித்திரிந்தார்கள்.சுற்றுலாப் பயணிகள் வந்து தலைநகரின் கம்பீர அழகையும் நாட்டின் வசீகரத்தையும் இரசிக்கும் படி எதுவும் நடந்துவிடவில்லை.

எனவே நினைத்த நேரத்தில் நினையாத இடங்களில் குண்டுகள் வெடித்து மனிதர்கள் சிதறிக்கிடந்தனர். நாங்கள் வெளியே சென்றால் திரும்பி வந்தால் மட்டுமே மெய். அப்படியொரு நெருக்கடியான கொலைக்காலத்தில்தான் கொழும்பில் 10 வருடங்களை கடத்தியிருக்கின்றேன்.சோதரமில்லாதது இறைவனின் கடாட்சம்.

இப்போது கொழும்பு நகரை பார்க்கின்றபோது நெஞ்சம் குளிர்கின்றது.அழகும்,கம்பீரமும் நிறைந்த தலைநகர் வெளிநாட்டவரை மட்டுமல்ல, நம் நாட்டவரையும் சுண்டியிழுக்கின்றது. 

நடைபாதை வியாபாரிகளின் தொல்லைகளும் பிச்சைக்காரர்களின் தொல்லைகளும்,விலைமாதர்களின் பேரம் பேசுதல்களும் அற்ற புறக்கோட்டையை கடக்கும் போது கடந்த கால நெருக்கடிகள் சட்டென தோன்றி நீர்க்குமிழிபோல் உடைந்து போகின்றன.

இக்காலங்களில் அடிக்கடி நான் ஊருக்குப்போகமாட்டேன். தனி ஆள் என்பதால் நான்கைந்து மாதத்திற்கு ஒரு தடவைதான் ஊரை எட்டிப்பார்த்து விட்டு வருவேன்.

இக்காலப்பகுதியில் நண்பர் பவ்சர் பார்க் வீதியில் வசித்து வந்தார்.சரிநிகர் பத்திரிகை கிருலப்பனையில் இயங்கி வந்தது.பின்னர் 'நிகரி' என்ற பெயரில் அதே குழுமம் ஒரு பத்திரிகையை நடாத்தியது. அங்கே நண்பர்களான ஷகீப்,ரஷ;மி,சிவா போன்றவர்களின் தோழமை கிடைத்தது. 

நண்பர் எஸ். நழீம் மருதானையில் இருந்தார்.பிற்காலத்தில் முஸ்லிம் குரல் பத்திரிகையை நண்பர் பவ்சருடன் இணைந்து நாங்கள் நடாத்தி வந்தோம்.பவ்சர் பின்னர் வேக்சல் லேனுக்கு மாறிவிட்டார்.முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாம் அவரின் வீட்டுக்கு அருகாமையில்தான் இருந்தது.

முஸ்லிம் குரல் பத்திரிகை குழுவில் நண்பர் ஆத்மாவும் இணைந்திருந்தார்.தோழர் அப்துல், மற்றும் முஹ்சீன் ஆசிரியரும் முஸ்லிம் குரலில் இணைந்திருந்தனர்.மூன்றாவது மனிதன் சஞ்சிகையை பவ்சர் கொழும்பிலிருந்துதான் இக்காலத்தில் நடாத்தி  வந்தார்.

நண்பர் பவ்சரின் பம்பலப்பிட்டி மிலேணியம் புத்தக நிலையத்தின் மேற்தளத்தில்  முஸ்லிம் குரலுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெறும்.அங்குதான் பத்திரிகை வேலைகளையும் பங்கு போட்டுக்கொண்டு செய்தோம்.நான் மாலை ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்து பொரல்லையிலிருந்து பம்பலப்பிட்டிக்கு வந்து விடுவேன்.

 நண்பர் என்.ஆத்மா ரூபவாஹியிலிருந்து ஆறுமணிக்குப்பின் வருவார். ரஷமியும் வருவார். நண்பர் சிராஜ் மஷஹூரும் பத்திரிகைக்கு உழைத்தவர்களில் முக்கியமானவர். மற்றவர்கள் எங்களுக்காக காத்திருப்பார்கள்.ஒவ்வொரு ஆக்கத்தினையும் வரிக்குவரி வாசித்து செவ்விதாக்கம் செய்வோம். நள்ளிரவு  2மணி அல்லது மூன்று மணி வரை முஸ்லிம் குரல் பத்திரிகையில் பணிகளை சம்பளமின்றி தியாகத்துடன் ஒரு சமூகப்பணியாக செய்து வந்தோம்.

இலண்டனிருந்து பத்திரிகை தொடர்பாக அடிக்கடி விசாரித்து ஊக்கப்படுத்தியவர் சட்டத்தரணி பசீர் அவர்கள். பொருளாதார உதவினையும் செய்திருக்கின்றார்.முஸ்லிம்களின் பிரச்சினைகளை சொல்ல அப்படியொரு ஊடகத்தின் தேவை அவசியமாக இருந்த காலம் அது.


எங்கள் தேசம். 246                                                                ஊஞ்சல் இன்னும் ஆடும்....

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...