Thursday, 13 June 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


                                                                     தொடர் - 41

போர் உச்சத்தில் இருந்த காலப்பகுதி.

2003இல் ராஜகிரியவில் மேற்கொள்ளப்பட்ட புலிகளின் அதிரடித்தாக்குதல்களை பொரல்லையில் இருந்தபடி கேட்டு அதிர்ந்திருக்கின்றேன். ஒரு விடுமுறை நாளில்தான் இந்த தாக்குதல் நடந்தது. ஜன்னல் கம்பிகள் அதிர, துவக்குகள் நேருக்கு நேர் மோதும் இசை அழகாகவும் திகிலாகவும் இருந்தது.வனவாசல் அடுக்கு மாடித்தொடருக்குள்ளும் புலிகள் புகுந்திருந்தனர். அந்நேரம் என்னுடன் சவூதி அரேபிய விருந்தாளி ஒருவரும் தங்கியிருந்தார். அவர் அச்சத்தில் ஆடிப்போனார். பயத்தில் உறைந்திருந்த அவர் முகம் சிவந்து கன்றிப்போய் தெரிந்தது. முகம் குப்புறப்படுத்தபடி கலிமாவை வேகமாக உச்சரித்தபடி இருந்தார்.

எமக்கென்றால் இது பழகிய சங்கதி. பயப்படவேண்டாம் என்றேன். எனினும் அவர் மாலையே கிளம்பி நட்சத்திர ஹோட்டலுக்கு குடி புகுந்து சென்றுவிட்டார். பாராளுமன்றத்திற்கு வரும் கௌரவ உறுப்பினர்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல் அது என்று பேசிக்கொண்டார்கள்.என்றாலும் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.

அப்போது ராஜகிரிய ஆயுர்வேத மருத்துபீடத்திற்கு அருகிலும் , சூழவும் பற்றைக்காடுகள் முளைத்திருந்தன.கொழும்பு நகரமே குப்பைக்காடாக காட்சியளித்த காலம். அழகியலை பற்றி ஆட்சியாளர்களை அலட்டிக்கொள்ளாத காலம். அதிரடித்தாக்குதல்களை சமாளித்தாலே போதும் என்றிருந்த காலம். பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்றிருந்தவர்களுக்கு அழகியல் பற்றி சிந்திக்க நேரமேது?

குண்டுவெடிப்பிலிருந்தும், தற்கொலைதாரிகளிடமிருந்தும் எப்படி தப்பிப்பது என்று சிண்டை பிய்த்துக்கொண்டு ஆளாளுக்கு பதறித்திரிந்தார்கள்.சுற்றுலாப் பயணிகள் வந்து தலைநகரின் கம்பீர அழகையும் நாட்டின் வசீகரத்தையும் இரசிக்கும் படி எதுவும் நடந்துவிடவில்லை.

எனவே நினைத்த நேரத்தில் நினையாத இடங்களில் குண்டுகள் வெடித்து மனிதர்கள் சிதறிக்கிடந்தனர். நாங்கள் வெளியே சென்றால் திரும்பி வந்தால் மட்டுமே மெய். அப்படியொரு நெருக்கடியான கொலைக்காலத்தில்தான் கொழும்பில் 10 வருடங்களை கடத்தியிருக்கின்றேன்.சோதரமில்லாதது இறைவனின் கடாட்சம்.

இப்போது கொழும்பு நகரை பார்க்கின்றபோது நெஞ்சம் குளிர்கின்றது.அழகும்,கம்பீரமும் நிறைந்த தலைநகர் வெளிநாட்டவரை மட்டுமல்ல, நம் நாட்டவரையும் சுண்டியிழுக்கின்றது. 

நடைபாதை வியாபாரிகளின் தொல்லைகளும் பிச்சைக்காரர்களின் தொல்லைகளும்,விலைமாதர்களின் பேரம் பேசுதல்களும் அற்ற புறக்கோட்டையை கடக்கும் போது கடந்த கால நெருக்கடிகள் சட்டென தோன்றி நீர்க்குமிழிபோல் உடைந்து போகின்றன.

இக்காலங்களில் அடிக்கடி நான் ஊருக்குப்போகமாட்டேன். தனி ஆள் என்பதால் நான்கைந்து மாதத்திற்கு ஒரு தடவைதான் ஊரை எட்டிப்பார்த்து விட்டு வருவேன்.

இக்காலப்பகுதியில் நண்பர் பவ்சர் பார்க் வீதியில் வசித்து வந்தார்.சரிநிகர் பத்திரிகை கிருலப்பனையில் இயங்கி வந்தது.பின்னர் 'நிகரி' என்ற பெயரில் அதே குழுமம் ஒரு பத்திரிகையை நடாத்தியது. அங்கே நண்பர்களான ஷகீப்,ரஷ;மி,சிவா போன்றவர்களின் தோழமை கிடைத்தது. 

நண்பர் எஸ். நழீம் மருதானையில் இருந்தார்.பிற்காலத்தில் முஸ்லிம் குரல் பத்திரிகையை நண்பர் பவ்சருடன் இணைந்து நாங்கள் நடாத்தி வந்தோம்.பவ்சர் பின்னர் வேக்சல் லேனுக்கு மாறிவிட்டார்.முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாம் அவரின் வீட்டுக்கு அருகாமையில்தான் இருந்தது.

முஸ்லிம் குரல் பத்திரிகை குழுவில் நண்பர் ஆத்மாவும் இணைந்திருந்தார்.தோழர் அப்துல், மற்றும் முஹ்சீன் ஆசிரியரும் முஸ்லிம் குரலில் இணைந்திருந்தனர்.மூன்றாவது மனிதன் சஞ்சிகையை பவ்சர் கொழும்பிலிருந்துதான் இக்காலத்தில் நடாத்தி  வந்தார்.

நண்பர் பவ்சரின் பம்பலப்பிட்டி மிலேணியம் புத்தக நிலையத்தின் மேற்தளத்தில்  முஸ்லிம் குரலுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெறும்.அங்குதான் பத்திரிகை வேலைகளையும் பங்கு போட்டுக்கொண்டு செய்தோம்.நான் மாலை ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்து பொரல்லையிலிருந்து பம்பலப்பிட்டிக்கு வந்து விடுவேன்.

 நண்பர் என்.ஆத்மா ரூபவாஹியிலிருந்து ஆறுமணிக்குப்பின் வருவார். ரஷமியும் வருவார். நண்பர் சிராஜ் மஷஹூரும் பத்திரிகைக்கு உழைத்தவர்களில் முக்கியமானவர். மற்றவர்கள் எங்களுக்காக காத்திருப்பார்கள்.ஒவ்வொரு ஆக்கத்தினையும் வரிக்குவரி வாசித்து செவ்விதாக்கம் செய்வோம். நள்ளிரவு  2மணி அல்லது மூன்று மணி வரை முஸ்லிம் குரல் பத்திரிகையில் பணிகளை சம்பளமின்றி தியாகத்துடன் ஒரு சமூகப்பணியாக செய்து வந்தோம்.

இலண்டனிருந்து பத்திரிகை தொடர்பாக அடிக்கடி விசாரித்து ஊக்கப்படுத்தியவர் சட்டத்தரணி பசீர் அவர்கள். பொருளாதார உதவினையும் செய்திருக்கின்றார்.முஸ்லிம்களின் பிரச்சினைகளை சொல்ல அப்படியொரு ஊடகத்தின் தேவை அவசியமாக இருந்த காலம் அது.


எங்கள் தேசம். 246                                                                ஊஞ்சல் இன்னும் ஆடும்....