Tuesday, 5 March 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

                                                              தொடர்  -34

எல்லாம் முடிந்தவுடன் இரண்டு நாய்கள் பஸ்சுக்குள் ஏறி மோப்பம் பிடித்து ‘குண்டு இல்லை’ என்று அறிக்கைவிடும். இதற்குள்ளும் சில சுவாரஸ்யங்கள் நடக்கும்.

இருக்கைக்கு மேலே உள்ள பொதிகளை இறக்கி ‘செக்’ பண்ணாமல் இருக்க பொலிசாரின் கைகளில் சில்லறைகள் திணிக்க வேண்டும். திணித்து விட்டால் வேலை இலகுவில் முடிந்து விடும். இல்லையென்றால் இழுத்தடிப்பு.

மன்னம்பிட்டியில் இறங்கி நடக்க இயலாதவர்கள் அக்காலத்தில் ஒரு யுக்தியை கையாண்டனர்.'கரணம் தப்பினால் மரணம்' என்பதற்குச்சமன்.  இந்த தந்திரோபாயம். நீருக்குள் நெருப்புக்கொண்டு செல்வதில் நம்மவர்கள் கில்லாடிகள் அல்லவா ?

கால்களுக்கு ‘பெண்டேஜ்’ துணியை சுற்றிவிட்டு அதற்கு மேல் ‘பெட்டாடின்’ மருந்தை தடவிவிடுவார்கள். எந்த ‘செக்பொயின்று’களிலும் இறங்காமல் இருக்க இதுவொரு வழி. எப்பேர்ப்பட்ட செக்பொயின்றுகளுக்கும் டாட்டா காட்டிவிட்டு இருந்து விடுவார்கள்.

கொழும்பிலிருந்து வரும் போது வெலிக்கந்தையில் ஒரு ‘செக்பொயின்ற்' சரியாக மூன்று மணியளவில் தூக்க கலக்கத்தில் இறங்கி நடக்க வேண்டும். ஆமி உள்ளுக்குள் ஏறும் போது சீட்டில் அமர்ந்திருக்கக்கூடாது. சிலர் தூங்குவது போல் நடித்துக்கொண்டிருப்பர். ஆமிக்கு நடிப்பும் தெரியும் நாடகமும் தெரியும் .

தோளில் தட்டி எழுப்பி ‘பேக்க தூக்கிட்டு நடக்கிறது” என்பார்கள். சிலருக்கு உண்மையில் தூக்கம் மிகைத்திருக்கும் என்ன செய்ய யானைகள் நடாத்தும் போரில் இடையில் நசுபடும் பற்றைகளாக எமது நிலை.
‘செக் பொயின்ற்’ பக்கத்தில் விடிய விடிய ‘லாந்தர்’ விளக்கெரிய கடையொன்று திறந்து கிடக்கும் . 

நாய்கள் முற்றத்தில் சுருண்டு படுத்திருக்க சுடு தண்ணிப்பானை வெளிச்சத்தில் முதலாளி அம்மாவின் தூக்கம் தெரியும் .ஆச்சி ‘பிளேன்றீ’ என்றவுடன் ஆச்சியின் அகன்ற வாய் பிளந்து பெருத்த கொட்டாவி பறக்கும்.பின்பு ஆவி பறக்கும் ‘பிளேன்றீ’ அர்த்த சாமத்தில் அமிர்தமாய் இருக்கும் .

மழைக்காலங்கள் அற்புதமானவை.அதுவும் ‘செக்பொயின்ற்றை’ அண்மிக்கும் போது ஓவென்று பெய்யும் மழையை அதிகம் ஆராதிருத்திருந்தோம் அக்காலத்தில். இறங்கி நடக்கும் சிரமம் இல்லை.அவர்கள் ஏறி வந்து ‘ஐடின்டி’ பார்த்து கிண்டிக்கிளறி அனுப்புவார்கள்.

பெருத்த மழையாயின் ஆமி பஸ்சை நிறுத்தாது.பஸ்சிற்குள் பொடுபொடுத்த மழை பெய்யும்.யுத்தத்தை வென்ற மனக்கிலேசம் ஏற்படும்.

குளிர்காலங்களில் முற்றத்தில் தீ வைத்திருப்பார்கள். எங்களுடைய பஸ் வரும் வரை அதைச்சுற்றி வளையமிட்டிருப்போம்.சில நேரங்களில் தூக்க முடியாத பொதிகளை பஸ்சின் இருக்கையில் பிரித்து  வைத்து விட்டு சிலர் வந்து விடுவார்கள். ஆமிக்காரன் கிண்டிப்பார்த்துவிட்டு விட்டுவிடுவான் . 

எனினும் அனேகர்  அப்படி இல்லை    உரியவர்களை வரச்சொல்லி அவர்களாவே கிண்டிக்காட்ட வேண்டும். உள்ளாடைகளை தூக்கிக்காட்டி அவசரமாக பேக்கினுள் திணிப்பதுதான் சங்கடமாய் இருக்கும். ‘ட்ரவலின் பேக்கை’ திறந்து காட்டும் போது மற்றவர்களின் பார்வை நமது பொதிக்குள் ஊடறுத்து நிற்கும் .ஆமிக்காரரை விட மோப்பமிடும் கழுகுக்கண்கள் நம்மவர்களுடையது.

 நம்மிடம் எனனென்ன பொருட்கள் இருக்குது என்ற ‘லிஸ்ட்டை’ சிலர் ஒப்புவித்து விடுவதில் சமர்த்து. அடுத்தவர் விவகாரத்தில் அவ்வளவு கண்காணிப்பு. இந்த கெடுபிடியால்; பயணங்கள் தாமதமடைவதுண்டு.
ஏக காலத்தில் நிறைய பஸ்கள் வந்து வரிசையில் நிற்கும். முதல் வந்த பஸ் சில நேரம் கடைசியில் செல்வதற்கு காரணம் சிலரால் பஸ்ஸிலேயே விட்டு விட்டுப்போன பொதிகள்தான். ‘ரைவரும்‘, நடத்துநரும் கர் புர்ரென்று கத்துவார்கன் .

‘எல்லாரும் பேக்கை தூக்கிட்டு கெதியா வாங்கே, அடுத்த பஸ் வந்திட்டு.’
அதிலும் முண்டியடித்துக்கொண்டு பாய்ந்து செல்ல, சிலர் ஓட்ட ஓட்டமாய் ஓடுவர். வரிசையில் நின்று பிரித்துக்காட்டி முதல் ஏறி அவசரமாக போகத்தான் ஆசை.என்ன செய்ய மன்னம்பிட்டியில் விட வேண்டுமே!

அதிலும் மகா கொடுமை வழி நெடுக  ஓ வென்று பெய்யும்  கணத்த மழை ‘செக்பொயின்றி’ல் தூறல் போடுமே  அந்த மன அவஸ்தையை  எழுதுவதற்கு வார்த்தைகளே இல்லை!


எங்கள் தேசம்.240                                                                                                  ஊஞ்சல் இன்னும் ஆடும்....