Tuesday, 13 November 2012

கௌரவத் திருடர்கள்


கடந்த மாதங்கள் களப்பணிகளில் ஈடுபட்டிருந்தேன்.வறுமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.

 சமுர்த்திக் கொடுப்பனவு,திவிநெகும,கமநெகும, புரநெகும போன்ற திட்டங்கள் கிராமங்கள் தோறும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அடிமட்ட மக்களின் பொருளாதார மேம்பாட்டு எழுச்சிக்கு இத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்;படாலும்,மேற்படி திட்டங்கள் தகுதியான மக்களுக்கு சென்றடைகின்றதா என்பது கேள்விக்குறி. 

கிராம சேவகர்கள்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புறம்பாக அண்மையில் பொருளாதார அமைச்சினால் உள்ளீர்க்கப்பட்ட பட்டதாரி பயிலுநர்களும் இச்சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மனைப் பொருளாதாரத்தை வீடுகள் தோறும் அறிமுகம் செய்யும் திவிநெகும திட்டத்தின் ஊடாக பயனாளிகளுக்கு அரசின் உதவிகள் சென்றடைவது கேள்விக்குரியாகவே உள்ளது.

சில கிராம சேவகர்களும்,சமுர்த்தி உத்தியோகத்தர்களும் இந்த உவிகள் தகுதியான மக்களை சென்றடைவதில் பெரும் முட்டுக்கட்டையாக இருந்ததை அவதானித்தேன்.அவர்களுக்கு நெருங்கியவர்களின் வாசலுக்கு வலிந்து செல்லும் உதவிகள்,ஏழைகளின் குடிசைகளை திரும்பிப்பார்க்கவில்லை என்ற யதார்த்தம் என்னை விசனப்படுத்தியது. மக்களின் மனக்குமுறல்கள் என் முன் சிதறி வெடித்தன.

வீடற்றவர்களுக்கென அரசாங்கம் உதவி செய்தது.வீடுகளை அமைத்துக்கொள்ள ஓர் இலட்சம்  மானிய அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட்டன.எமது பிரதேசத்தில் நானறிந்தவரை மூன்று கிராம சேவகர்களைத்தவிர மற்றவர்கள் ஏழைகளின் வயிற்றில் தாராளமாக அடித்திருக்கின்றார்கள். ஓர் இலட்சம் ரூபாயில் ஆளாளுக்கு அவர்களின் வசதிகளுக்கேற்றபடி பணத்தைப்பிடுங்கியதை நினைக்கும் போது இவர்களை விட கல் நெஞ்சக்காரர்கள் யாருண்டு என நினைக்கத்தூண்டியது. 

ஒருவர் இருபதாயிரம், இன்னொருவர் பத்தாயிரம்,இன்னொருவர் ஐயாயிரம் என பறித்தெடுத்துள்ளார்கள்.வங்கிக்கணக்கில் பணம் வந்தவுடன் உரியவர்களுக்கு செய்திகளை இவர்களே கொண்டு சேர்ப்பிப்பார்கள்.வீடு கட்ட மானியத்திற்கு விண்ணப்பித்தவர்கள் வங்கிக்கு வந்தவுடன் கிராம சேவையாளரின் ஆள் வங்கியில் காத்திருப்பார். அல்லது நேரிடையாக கிராம சேவையாளரின் அலுவலகத்திற்கு சென்று பேரம் பேசிய தொகையை கொடுத்து விட வேண்டும்.

அரசாங்கத்தின் எண்ணக்கருக்களுக்கு தடையாக நிற்பவர்கள் இத்தகைய இலஞ்சப்போர்வழிகள்தான்.வீடுகள் முடிக்கப்படாமல் அரையும் குறையுமாக காட்சி தருவதைக்கண்டேன். கேட்டால் ஜி.எஸ்மார்கள் மீது அப்பாவிச்சனங்கள் சாபம் விடுகிறார்கள். வீடுகளுக்கு கப்பம் பெறுவது மட்டுமல்ல அந்த வீட்டை நிருமாணிக்கும் கொந்தராத்துப்பணியையும் சில கிராம சேவகர்கள் மேற்கொண்டுள்ளது தெரிய வந்தது. 

மலிவு விலைக்கு பொருட்களை வாங்கி வீடுகளை முடித்துக்கொடுத்திருக்கின்றார்கள். தரமற்ற பொருட்கள், பழைய இற்றுப்போன மரக்குற்றிகளை சில வீடுகளில் அவதானித்தேன். ஏனிப்படி ஏழைகளின் வாழ்வில் விளையாடுகின்றார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களிடம் கேட்டேன். நீங்கள் ஏன் இவர்களுக்கு எதிராக மேலிடத்திற்கு புகார் தெரிவிக்கக்கூடாது?  அதற்கு அவர்கள் சொன்ன பதில் 
‘என்ன செய்ய புலி வால புடிச்சதப்போல எங்கட நில, மேலிடத்திற்கு சொன்னா எதிர்காலத்தில் எங்களுக்கு கிடைக்கும் நிவாரணங்கள் மட்டுமல்ல பொதுத் தேவைகளுக்கு ஒரு கையொழுத்துக்கூட போட்டுத் தரமாட்டார்கள்.பலி வாங்குவார்கள்” என்று குமுறினார்கள்.

மேலிடங்களுக்கு தேனும் கருவாடும் கொடுத்து மடக்கி வைத்துள்ளார்கள்.இங்குள்ள மேலதிகாரிகள் கூட இத்தகையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத்தயங்குவதையும் மக்கள் கூறி விசனப்பட்டனர்.

 மேலதிகாரிகளுக்கு எழுத்து மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சி சொல்ல அஞ்சுவதால் அவர்களாலும் இந்த இலஞ்சப்பேய்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவோ, விசாரணை செய்யவோ முடியாது என்பதை பொது ஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்பாவிகளுடைய இந்தப் பலவீனங்களை பயன்படுத்தி சில விதானைமார்கள் இலஞ்சத்திலும் முறைகேட்டுப்பங்கீட்டு விளையாட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர். எதற்கெடுத்தாலும் இலஞ்சம் எதிர்பார்ப்பு என்ற நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கும் இந்நிலை கிராமங்களிலிருந்துதான் ஆரம்பிக்கப் படுகின்றது.

 சில கிராம சேவகர்கள் குறு நில மன்னர்களாக செயற்பட்டு வருகின்றர். சில கிராம சேவகர்கள் தாம் நியமிக்கப்பட்டிருக்கும் பிரிவுகளுக்கு வருவதே இல்லை என மக்கள் என்னிடம் முறையிட்டனர். எப்படி உங்கள் பணிகளை நிறைவேறு;றுகின்றீர்கள் எனக்கேட்டேன் .சில  கிராம சேவகர்களால் நியமிக்கப்பட்ட  உதவியாளர்கள். இவர்கள்தான் உத்தியோகப்பற்றற்ற கிராம நிலதாரிகளாக கடமையாற்றுவதையும் அவதானித்தேன்.

இது அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணான செயற்பாடாகும்.அரசியல் செல்வாக்குத்திமிறினால் ஆளும் கட்சியினரின் ஆதரவு என்ற மமதையினால் சில கிராம சேவகர்கள் பொது மக்களின் வயிற்று நெருப்பை ஊதி ஊதி அணல் எழுப்பி சூடேற்றுவதை எதில் சேர்ப்பது. மக்கள் எழுச்சி கொண்டு இத்தகையவர்களுக்கு எதிராகப்போராடமல் இந்த திருடர்களின் அட்டகாசத்தை அடக்கவோ ஒழிக்கவோ முடியாது. ஏழைகளின் வயிற்றில் அடித்து தின்று பழகியவனுக்கு இதுவெல்லாம் ஒரு பெரிய கதையாக இருக்காது. 

நான் சந்தித்த பல ஏழைத்தாய்மார்களின் முடிவற்ற பிரார்த்தனை அநியாயம் செய்த கிராம சேவகர்களையும் சமுர்த்தி உத்தியோகத்தர்களையும் உடனடியாக தாக்காவிட்டாலும் நின்று கொல்லும் என்பது வலுவான நம்பிக்கை. சில நேரம் அவர்களின் மனைவி மக்களைக்கூட தெருவில் நின்று அந்தப்பிரார்;த்தனைகள் பிச்சை எடுக்க வைக்கலாம்.

 இறைவனின் விதியை நாம் எப்படி சொல்ல முடியும்.ஏனெனில் அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனைகள் இறைவனிடம் எந்தத்திரையுமின்றி நேரிடையாக சென்றடைகின்றது என்பதை இந்த இலஞ்ச மகா பாதகர்கள் புரிந்து கொண்டால் மட்டுமே சமூகத்திற்கு உய்வு உண்டு .