Monday, 29 October 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்தொடர்- 26

எது நடக்கக்கூடாது என்று ஆசைப்பட்டோமோ அது ஈற்றில் நடப்பதற்குரிய அட்டவணைகள் நடந்தேறின.யுத்தம் எழுப்பிய புழுதி சனங்களின் முகங்களில் மரணமாய் அப்பிக்கிடந்தது.தெருவெங்கும் மூட்டை முடிசு;சுகளுடன் ஓடிக்கொண்டிருந்தனர்.சிலர் எங்களை நின்று நிதானித்துப்பார்த்து விட்டு ஓடினர்.சிலர் தன்னையும் உறவினர்களையும் காப்பாற்றும் நோக்கில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஓடினர்.

பிள்ளைகளின் குய்யோ குய்யோ என்ற இரைச்சல் வேறு விதியை அடைத்தபடி நீக்கமற எங்கும் பரவியிருந்தது. வாகனங்கள் எதுவும் பாதையில் தென்படவில்லை.முஸ்லிம் கிராமமான காத்தான்குடியை அண்மித்து விட்டதாக எங்களுக்குள் இருந்து சத்தம் வந்தது. 

அந்தக்குரலில் மிகுந்த உற்சாகம் கரைபுரள்வதைக் கேட்டேன். காத்தான்குடிக்கு முன் ஆரையம்பதி இருக்கின்றது.தேற்றாத்தீவு இருக்கின்றது. மனம் கணக்குப்போட்டபடி கால்கள் விரைய தேற்றாத்தீவு வந்து விட்டது. 

  தேற்றாத்தீவுக்குள் நுழைந்தவுடன் சில இளைஞர்கள் எங்களை சுற்றி வளைத்தனர். மனம் அந்தரமாய் அடிக்கத்தொடங்கியது. முஸ்லிம்களின் நிழல் கூட வெளியில் உலவாத மரண நேரமது. எங்களை வழிமறித்த இளைஞர்களின் முகத்தில் எந்தச்சலனமும் இல்லை. 

“உங்கள சேர்ச்சுக்குள்ள கூட்டிவரச் சொன்னார்கள் வாங்க’ என்றனர்.மறுப்பதற்கும் ஓடித்தப்பிப்பிழைக்கவும் எந்த முகாந்திரமும் இல்லை.அல்லாஹ்வையன்றி காப்பாற்றும் அனுக்கிரகமும் இல்லை. எங்கள் மனங்களில் வாழ்வின் முற்றுப்புள்ளி இடப்பட்டதான அச்சம் மேலேக அதரங்கள் கலிமாவால் துடித்தன. மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பென நடந்தோம். சேர்ச்சுக்குள் மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது.

மரங்களால் நிரம்பியிருந்த சேர்ச்சில் வழி நெடுக பூமரங்கள் தலையாட்டியபடி நின்றன.வானத்தை மறைத்தபடி எழுந்து நிற்கும் மரங்களை இரசிக்க மனமின்றி உயிரைப்பாதுகாக்க என்ன வழி என்ற சிந்தனையில் நடக்கத்தொடங்கினோம். 

சேர்ச்சுக்குள் அகதிகள் என்பது சற்று நேரத்திற்குப்பின் தெரிய வந்தது. எங்களையும் ஒதுக்குப்புரமாக உள்ள ஓர் இடத்தில் அமரச்சொன்னார்கள். யார் எம்மை அழைத்தது? ஏனிந்த இரகசிய ஏற்பாடு ? இதற்குள் எங்களை ஏன் அடைத்து வைத்துள்ளார்கள்? ஆளையாள் ஐயத்துடன் கேட்டு விடை தெரியாமல் திருதிருவென்று தரையில் அமர்ந்திருந்தோம். 

தொப்பிகளை கழற்றுங்கள் என்றார்கள்.பின்னர் தேனீர் தந்து விட்டுப் போனார்கள்.

குடிக்கும்போது ஜாபிர் சொன்னார். இது கடைசி சொட்டு தேனீர் நம்மள ஆற்றங்கரைக்கு கொண்டு போய் வெட்டப்போறானுகள். …

அதைக்கேட்டு சிறியவர்கள் அழுதார்கள்.சிலர் சமாதானப்படுத்தினாலும் மனம் அடித்துக்கொண்டது.

எமக்கு முன் இலைகுழையால் மூடப்பட்ட ஒரு வேன் நின்றிருந்ததை அப்போதுதான் பார்த்தோம். 

சுடாரென அந்த வேனில் இருந்து கொத்துக்கள் உருவப்பட்டன.வெள்ளை வேன் பளிச்சென எமது கண்களில் பீதியாய் நின்றது.

அந்த வேனில் எங்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்கள்.பாதரும் கூடவே வந்தார். அப்பபோதுதான் அவரைப்பார்;த்தோம் எங்களை வேனிலிருந்து தலையை மேலே உயர்த்தாமல் இருக்கும் படி சைகை காட்டினார். ஏதோ விபரீதம் நடந்திருக்கின்றது. அல்லது நடக்கப்போகிறது.வழியில் யாரும் பேசவில்லை. மௌனமாய் வேனுக்குள் புதைந்திருந்தோம்.கடைசி சொட்டு உயிர் வாழ்தலின் அர்த்தம் மகா யுகமாய் எம்முன் விரிந்து சென்றது.

இளமையின் கனவுகள் எங்கேயோ ஒரு வனாந்திரத்தில் மண்ணில் புதையுண்டு போவதை நினைக்கையில் மனம் ஓவென்று அலறத்தொடங்கியது. எமது பிரிவால் கதறியழும் உம்மாக்களின் கண்ணீர்.

உறவினர்களின் தவிப்பு.நண்பர்களின் பதகளிப்பு.கிராமத்தின் சோக்காட்சி இதற்காகப் பலிக்குப் பலிவாங்க அப்பாவிகளை குறிவைத்துக்காத்து நிற்கும் எமதூரின் சில இளைஞர்களின் கோபாக்கினி எல்லாமே மனசுக்குள் வேகமாய் ஓடிக்கொண்டிருக்க கண்கள் என்னை அறியாமல் நீரை உகுத்தன. 

ஆறையம்பதி தாண்டியதும் வேனை நிறுத்தி, இரும்புத் தைக்காப் பள்ளிவாயலுக்கு விடும்படி சாரதியை பணித்தார்.அப்போதுதான் சுயநினைவுக்குத்திரும்பினோம். காத்தான்குடியை அண்மித்து விட்டோம். 

இதோ கண்தொடும் தூரத்தில் மினாராக்களில் எங்கள் உயிர் பறக்கவாரம்பித்தது.பாதரின் குரலில் மலக்குள் மௌத் இல்லை. கருணையும் அன்பும் ததும்பிய மனிதத்தின் குரலினைக்கேட்டோம்.

எங்கள் தேசம்     232                                                                                                     ஊஞ்சல் இன்னும் ஆடும்.....