Thursday 29 December 2011

சிறுகதை - மூன்று பூனைகள் பற்றிய ஏழு குறிப்புகள்

          
24.08.2004

பூபாலசிங்கம் புத்தக நிலையத்திற்கு செல்ல வேண்டும். செட்டியார் தெருவில் நடந்துகொண்டிருந்தேன். பொன்னந்தியில் செட்டித்தெருவில் நடப்பதே பெரும்பாடு. கோயில்கள் நிறைந்த வீதி மருங்கில் ஆராதனையும் ஊதுபத்திப்புகையும், மணியோசயும் ஒரு கதம்பமாய் தெருவில் கவிந்திருந்தது. கூந்தலில் பூக்கள் மலர்ந்த பெண்கள் மகிழ்ச்சியுடனும் பக்திப்பரவசத்துடனும் கோயில் நடையில் காத்திருந்தனர். 
 
அப்போதுதான் யதேச்சையாக கவனித்தேன். இரண்டு பூனைகள் எதிரே வந்து கொண்டிருந்தன. இரண்டும் எனது கிராமத்தின் மண் வீட்டு பீலிக்குள் முன்பு வாழ்ந்தவை.ஒன்று வரண்டு மெலிந்திருந்தது. பஞ்சத்தில் பாவப்பட்ட ஜீவன். மற்றதோவெனில் மொழுமொழுவென்று கொழுத்த கடுவன். சோற்றுக்கடை பூனை என்பார்களே அதைப்போல.

செட்டிநாட் ரெஸ்டுரன் அருகில் ஓடும் வடிகாலுக்கு அண்மையில்தான் இரண்டையும் கண்டேன்.உழுந்து வடையும் பசுப்பாலும் குடித்து விட்டு கடைவாயை நாவால் துழாவியபடி  துர்நாற்றம் வீசும் ஓடையண்டையில் குந்தியிருந்தன. நீள் மீசையில் பாலின் நுரை உறைந்திருந்தது.

ஜெயகாந்தனின் அக்ரகாரத்துப்பூனைகள்போல் அளவிற்கு சுட்டியில்லாத ஆனால் விசமம் நிறைந்த பூனைகள். ஒன்று திருட்டுப்பூனை மற்றதோ கருப்புக்கடுவன். ஊரில் இளைஞர் வட்டாரத்தில் அதை 'சரக்கு மாஸ்ரர்' என்றும் அழைப்பதுண்டு.

09.10.2004

நிலா மெலிந்து போன வானத்தின் பேரழகு ஜெக ஜோதியாகத்தெரிந்தது.
வெளிநாட்டுப்பறவைகள் வானத்தில் வட்டமிட்டபடி வினோத ஒலிகளை உதிர விட்டன.

எலிகள் வீதி மருங்கில் கீச்கீச்சென சுற்றித்திரிந்தன.ஒரு நாற்பது தடவையாவது சுகாதார பரிசோதகருக்கு மனுப்போட்டிருப்பேன். எலிகளை கொல்வதற்காக அவர்கள் எதனையும் செய்யவில்லை.ஆபத்தான எலிகாய்ச்சல் போல் பூனைகளால் ஒரு வியாதி வராதா என மனம் குரூரமாய் எண்ணத்தொடங்கியது. எதிர்வீட்டு மதில்மேல் பூனையைப்பார்த்தேன். திருட்டு முழி மிகைத்த பூனை.

மதாரின் தியத்தலாவ இறப்பர் தோட்டத்தில் இறப்பர் மரங்களில் வெட்டுண்டு தேங்கிக்கிடந்த இறப்பர் பாலை,பசும்பால் என நினைத்து அருந்திவிட்டு தொண்டை இறுக தோட்டம் முழுக்க ஓடித்திரிந்தது.பின், காவலாளிகளால் நையப்புடைக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பூனை. அதனை நான் அடையாளம் கண்டு கொண்டதை அது கவனித்ததாக  தெரியவில்லை. எலி பிடிக்கத்தான் காத்திருந்தது.


நிலவு வெளிச்சத்தில் பூனையின் கண்கள் கபடமாக சுழன்று மின்னின.நட்சத்திரங்கள் சிதைந்து கிடந்த வானம் பிரகாசத்தை விசிறிக்கொண்டிருந்தது. சக்தியில் கோலங்கள் அபியின் விசும்பல் சில வீடுகளில் பிசுபிசுத்துக்கொண்டிருந்தது. தெருவில் காலாற நடக்கின்றேன்.

இரு பெண்கள் மதிலை உரசினாற்போல் வந்து கொண்டிருந்தனர். பேச்சு சுவாரஸ்யத்தில் அவர்கள் எதிரில் வந்த என்னையும் மதில்மேல் பூனையையும் பொருட்படுத்தவில்லை. “அந்தா மனுசனில பாயுர பூன பார்த்துப்போங்க” அவர்களின் முதுகுக்குப்பின் எனது குரல் காட்டமாக விழுந்திருக்க வேண்டும்.சாட்டையால் தாக்குண்டவர்களைப்போல் அவர்கள் வீதியின் நடுவே பாய்ந்து வேகமாக பூனைகளைக் கடந்து போயினர். மதில்மேல் பூனை என்னை முறைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது.


10.12.2004

மாலை அலுவலகத்திருந்து வீடு திரும்பியிருந்தேன்.முற்றத்தில் போகன்விலா இலைகள் தெரியாமல் பூத்துக்கிடந்தது. அட காலையில் புறப்படும்போது கவனிக்க மறந்த சௌந்தர்யம்.வீடு மருங்கிலும் பூக்கள் சிரித்தபடி தலையாட்டின.அவள் தேனீருடன் ஒரு கடிதத்தையும் கொண்டு வந்து நீட்டினாள்.அருகில் வந்து அமர்ந்தவளின் முகத்தில் பனியில் நனைந்த ரோஜாவின் குளிர்மை ஊறியிருந்தது. தேனீரை உறிஞ்சியபடி ஓரக்கண்ணால் அவளை இரசித்தபடி மாலையில் பூத்த மகிழம்பூ என்றேன். செல்லமாக முறைத்தபடி பெரிய கவிக்கோ என்ற நினைப்பு என்றாள். அதை இரசித்தபடி கடிதத்தைப்பிரித்தேன்.


எதிர்வரும் பெப்ரவரியில் நடைபெறவிருக்கும் பூனைகளின் மாநாட்டுக்கான அழைப்பிதழ் . மாநாட்டு அஜன்டாவில் சில குறிப்புகளும் சேர்க்கப்பட்டிருந்தன. மாநாட்டுக்கு வருகை தருபவர்கள் முன்கூட்டியே அறிவிப்பதற்கென  RVS என்ற அடிக்குறிப்புடன் ஒரு தொiபேசி இலக்கமும் குறிக்கப்பட்டிருந்தது. 
 
முழுநீழ வெள்ளை சேர்ட், கருப்புக்கலரில் காற்சட்டை மற்றும் கழுத்து டை அணிந்திருக்க வேண்டும். வேட்டையாடுவதில் முன் அனுபவம்,பிறர் வீட்டில் குறிப்பாக தனக்குப்பால் வார்த்த வீடுகளில் சமயோசிதமாக திருடும் சாணக்யம் தெரிந்திருக்க வேண்டும். பெண் பூனைகள் அவசியம் அழைத்துவரல் வேண்டும். சப்தமின்றி கலவிசெய்வதற்கான கருத்தரங்கும் செய்முறைப்பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. கலவிக்கான முன் ஆயத்தங்களுடன் வருபவர்களுக்கு இரகசிய லொட்ஜ் ஏற்பாடுகள் உண்டு (இதில் சிபாரிசு, சலுகைகள் இரத்து)


ஆகக்குறைந்தது ஒரு பூனை பத்து நண்பர்களை அழைத்துவர அனுமதி வழங்கப்படும். எனினும் அனைவரும் மாநாட்டுத்தீர்மானங்களுக்கு இசைவானவர்களாகவும் விசுவாசிகளாவும் நடந்துகொள்ள வேண்டும். 
 
 
தவிர்க்கப்படவேண்டியவை: தூய்மையான கற்பு பற்றி பேசுவது. வாய்மை நேர்மை குறித்துப்பேசுவது, இலஞ்சம் ஊழலுக்கெதிரான சிந்தனை, இலக்கியத்திருட்டுக்களை ஆராய்தலும், அம்பலப்படுத்தலும். பிறருக்கு முதுகுசொரிவதை கிண்டலடித்தலும் காக்காய்பிடித்து கூஜா தூக்குவதை அயோக்கியத்தனம் என ஏளனம் செய்வதும் மற்றும் பல…
 
 
ஊர் பெயர் தெரியாத பூனைகளின் பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தன. விN~ட அதிதியாக வேலையற்ற ஒரு பூனையின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அவள் வேறு சுவாரஸ்யமான கதைகளைக் சொல்லிக்கொண்டிருந்தாள்.எல்லாம் பூனைகளின் மகான்மியம்.


15.03.2005

நள்ளிரவு விழிப்புத்தட்டிவிட்டது. மனைவி அருகில் ஆழ்ந்த உறக்கம்.சீரான மூச்சில் மார்புகள் ஏறி இறங்கி அழகுகாட்டின.சின்ன மகள் அவளின் வலது கையில் முகம் புதைத்து படுத்திருந்தாள். அவளைப்பார்த்துக்கொண்டிருக்க மகிழ்ச்சி பூரித்தது. துயிலும் தருணத்திலும் முகத்தில் பாவும் சிரிப்பில் வீடே ஒரு நிலாக்காடாக ஒளியில் நனைந்து கொண்டிருந்தது.


பாத்றூம் சென்று விட்டு நீர் அருந்தினேன்.சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சப்தம் கேட்கவே எழுந்து போய் சுவிற்சைப்போட்டேன். கரிச்சட்டியை கால்களால் பிராண்டியபடி அந்தப் பூனை நின்றிருந்தது. கன்னங்கரேலென்ற கருப்புப்பூனை.அதன் விழிகள் தீக்கங்குகளாக ஜொலித்துக் கொண்டிருந்தன. வெள்ளைப்புள்ளிகள் ஏதுமற்ற சுத்தமான கருப்பு. அதனைப்பார்க்கப்பார்க்க மனசில் நடுக்கமெடுத்தது, மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. தலை விறைக்கத்தொடங்கியது. 
 
 
அது என்னையே விறைத்த விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தது. கருப்பு மீசையின் இடைவிடாத துடிப்பு மரணத்தை நினைவூட்ட நடுங்கும் கரங்களால் புசூ என்றேன்.ஒரே தாவலில் திறந்திருந்த ஜன்னல் வழியால் குதித்து ஓடியது. மிகுந்த எச்சரிக்கையுடன் பதுங்கி ஜன்னலண்டை சென்று  அதை இழுத்து மூடி கொக்கியைப்போட்டேன்.இரவு அதனை மூடாமல் படுத்த அவளின் மேல் கோபமாய் வந்தது. கருப்பு மீசையின் இடை விடாத துடிப்பு என்னை அந்தரப்படுத்தியது.


திக்குத்தெரியாமல் தனித்துவிடப்பட்ட ஒரு பூனைக்குட்டியாய் சமையலறையில் திகைத்து நின்றேன்.வீட்டுக்கூரையில் சரசரவென்று பூனைகளின் காலடித்தடங்கள் என் காதை அடைத்தது. இன்னும்  பல பூனைகள் என் ஜன்னலில் வழி நுழையக்காத்திருக்கவேண்டும். கால்கள் நடுக்கத்தில் தள்ளாடின. அசுத்தமான இடங்களில் மட்டும் பார்த்துப்பழகிய அவற்றின் விகாரம் என்னை கலவரப்படுத்தியது. கருப்பின் மீது முதற்தடவையாக அச்சம் தொற்றிக்கொள்ள உடம்பு முழுக்க வியர்வையில் பிசுபிசுத்தது.படுக்கையில் வந்து விழுந்த போது புரண்டு படுத்த மகளின் பிஞ்சுக்கரங்கள் என் மார்பில் படர்ந்தன.


26.08.2005

காலை 10.45 இருக்கும். அலுவலகத்தில் பணியில் மூழ்கியிருந்த சமயம் செல்போன் கூப்பிட்டது. என்னவென்றேன். சென்ற வாரம் பிஸ்னஸ் பார்ட்னராக என்னுடன் இணைந்து கொண்ட நண்பர்தான் லைனில் இருந்தார்.

நீங்க ஜே.பி.யா? என்றார். இல்லை என்றேன். அவருக்கு உதவும் நோக்கில் ஏதாவது சான்றிதழ் உறுதிப்படுத்த இன்னார் இன்னார் ஊருக்குள் ஜே.பி. என்ற தகவலை சொன்ன போது அவர் சப்தமாக சிரித்தார்.ஏன் சிரிக்கிறீர்கள் என்றேன்?  அப்படி ஒன்றுமில்லை உங்களுக்கு ஒரு ஜே.பி பட்டம் எடுத்து தரத்தான் என்றார்.


ஓல் ஐலன்ட ஜே.பி கொழும்பிலேர்ந்து ஒருத்தர் எடுத்து கொடுக்கிறாரு ஒரு ஐந்து இலட்சம் இருந்தா போதும் என்றார். சும்மா கிடைத்தாலும் வேணாம் என்றேன்.பின் சில தகவல்களை சொன்னார் நம்மட ஊருல ஒரு பூனைதான் இதெல்லாம் செய்து குடுக்கிறதாக அரசல் புரசலாக கதை.


ஜே.பிக்கு ஒரு ரேட், பெற்றோலியம் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு ரேட்;,ஹாபருக்கு ஒரு ரேட். கொரியாவுக்கு மட்டும் கொஞ்சம் கூடயாம். ப+னைகளின் திரு விளையாடல் குறித்து நிறையவே சொன்னார். முகத்தில் மயிரடர்ந்த கடுவன் பூனையின் விழிகள் நினைவின் நுனியில் எழுந்து மறைந்தது. எனக்கும் பரிச்சயமான பூனைதான். இந்தப்பூனையுமா  பால் குடிக்கும்? நம்ம மறுத்த எனக்கு ஆதாரங்களை அள்ளி வீசினார்.


 திருட்டுப்பூனைகள் எல்லாம் ஒன்றிணைந்து ஊரையோ ஒருவழி பண்ண சபதம் செய்திருப்பதாகத்தோன்றிற்று. பூனைகளின் பூர்வீகம் குறித்து ஆராயத்தொடங்கினேன்.பாலை காய்ச்சி இந்த சனங்கள் பூனைகளல்லவா காவல் தெய்வங்களாக்கியுள்ளனர்? கிராமத்து வீட்டில் தொந்தரவு செய்யும் பூனைகளை பெரிய சாக்கில் கட்டிக்கொண்டு போய் காட்டில் விடுவதை பார்த்திருக்கின்றேன்.

 தந்திரமுள்ள சில பூனைகள் கூர் நகங்கால் கோணிகளைப்பிறாண்டி வழியெடுத்து மறுபடியும் வீட்டிற்கே திரும்பி விடும்.நண்பர் குறிப்பிட்ட ஜே.பி வியாபாரியான பூனையும் அக்காலத்தில் காட்டில் கொண்டு போய்விடப்பட்ட தறுதலைப்பூனைதான் எப்படியோ தலை நகரத்தில் குடியேறி இப்போது தரகு வியாபாரம் செய்யும் அளவிற்கு வந்து விட்டது. பூனைகளைக்கொண்டு எங்கு வைத்தாலும் அவைகளின் திருட்டுப்புத்தியை ஒழிக்கவா முடியும்?;


08.10.2005

எனது வீட்டின் கூரையில் கடுவனின் முனகல். கலவிக்கான தகிப்பில் ஊரையே அழைத்துக்கொண்டிருந்தது. பெண்ணோவெனில் பிகு பண்ணியபடி கூரையில் அழுந்திக்கிடந்தது.விடுமா கடுவன் குரலை தாழ்த்தி ஆசையில் நெகிழ்ந்தலைத்தது. ஆணின் தேவை உணர்ந்த பெண் பூனை மறுபடியும் பிகு பண்ணி மறுகியது.விடுப்புக்காட்டக்காட்ட மோகம் வெகுண்டெழுந்தது. உள்@ர கிளர்ச்சியுடன் நெருங்கி வரட்டுமே என்ற தவிப்புடன் பெண் பூனை நிலத்தில் தவழ்ந்தபடி மெலிதாக முணங்கியது.சம்போகத்திற்கான ஆனந்த அழைப்பு.

நிலவில் நனைந்த பூமி குளிர்ச்சியாக இருந்தது. தூரத்Nது வாகனங்களின் இடைவிடாத ஹோர்ன் ஒலிகள் காதை அடைத்தன. நடு வீதியில் அசைபோட்டு படுத்திருக்கும் மாடுகளை விரட்டுவதற்கான பிரயத்தனம்தான் அந்த ஒலிகள். கடுவன் மெல்ல நகர்ந்து அதனண்டை ஊர்கிறது. உச்சங்களை தொட விழையும் அதன் இன்பக்கதறலில் அவள் விழித்து விட்டாள். நாணம் பூத்த முகத்தில் அழகு வழிந்து என் நரம்பை நனைத்தது. சப்தமில்லாமல் எனக்குள் ஆயிரம் கடுவன்கள் தவழத்தொடங்கின அவளின் மயங்கிய விழிகளில் வசீகரம் பொழிந்தது.


26.02.2006


ஜே.பி விற்கும் பூனைக்கும் ஏஜென்சி பூனைக்கும் ஒத்துவரவில்லை. வியாபாரத்தில் விசுவாசம் இல்லை என்பதைக்காரணம் காட்டி இரண்டும் ஒன்றை ஒன்று கடித்துக்குதறி விரட்டியபடி விலகிப்போயின.


நான் பூனைகள் பற்றி அதிகம் குறிப்புக்கள் எழுதுவதையும், ஆராய்வதையும் அவதானித்த மனைவி ஏளனம் செய்ய ஆரம்பித்து விட்டாள். இணையத்தில் பூனைகள் பற்றி ஆய்வில் இருந்த நான் அவளின் ஏளனங்களை பொருட்படுத்தவில்லை.
 
தூக்கம் வராத இரவுகளில் பூனைகளின் அரவம் கேட்டு உடம்பு சில்லிடத்தொடங்கும். இணையத்தில் உலா வந்தபோதுதான் சில பூனைகளின் திருட்டுக்கள் அம்பலமாகின. கண்களை மூடிக்கொண்டு பாலை அருந்தினால் பூலோகம் இருண்டு விடும் என்று யாரோ இந்த அசட்டுப்பூனைகளுக்கு சொல்லியிருக்க வேண்டும். பெரும்பாலும் களவிலும்,கலவியிலும் பூனைகளின் இயல்பை மாற்றவே முடியாது என்பதை என் ஆய்வில் கண்டு பிடித்திருந்தேன்.
 
 
எனது ஆய்வுகளை பல்கலைக்கழக பேராசிரியர்  ஒருவர் தனக்கு சமர்ப்பிக்கும் படி கடிதம் அனுப்பியிருந்தார். பூனைகள் பற்றி நான் விஷேடமாக ஆற்றிய சொற்பொழிவுகள் பிரபல்யம் பெற்றன. ஆய்வு மாணவர்களின் கவனத்திற்கு எனது கட்டுரைகள்  சத்தூட்டியதாக சொன்னார்கள்.


எனக்கு இம்முறை விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என  அவள் வேறு நக்கலடித்தாள். அப்படியென்றால் உனக்கு பூனை பொம்மைகள் இரண்டு வாங்கித்தருவேன் என்று அவள் வாயை மூடினேன். அவள் ம்கூம் என மறுகியபடி விலகிச்சென்றாள்.

இந்த நினைவுக்குறிப்புகளை எழுதும் தருணமும் நான்கு பூனைகள் ஒருங்கே இணைந்து ஒழுங்கையில் வெகு அநாயசமாக அணைந்தபடி செல்கின்றன. ஜன்னலிடுக்கால் பார்த்துக்கொண்டிருந்தேன். அவைகளின் முகத்தில் திருட்டுக்களை மிகைத்திருந்தது.எதிர்வீட்டில் புதிதாக கோழிகள் வாங்கி வளர்ப்பதை நினைத்துக்கொண்டேன். அந்தக்கோழிகள் அழகானது.

மொசு மொசுவென்று அடர்ந்த இறகுகள் கொண்டது. இந்தபூனைகளின் பார்வை எதிர்வீட்டில் நிலைகுத்தி நின்றதையும் அவாதானித்தேன்.பாவம் அந்தக்கோழிகள். மாமியிடம் எச்சரிக்க வேண்டும். 
 
அவைகள் அதிகார மிடுக்கு கொண்ட பூனைகள் நிச்சயம் மாமியை பயமுறுத்தும். அதுவும் அந்தக்கருப்புக்கடுவன் மகா முசுறு. கதிரையில் சாய்ந்தபடி சிந்தனையில் மூழகினேன்.இந்தப்பூனைகளை என்ன செய்யலாம். தலைவலிக்கத்தொடங்கியது.விழிகளை மூடினேன். தூக்கம் என்னை கவ்வத்தொடங்கியது.

பொட்டல் வெளி. நான் தனியனாய் நிற்கிறேன்;,பூனைகள் கூட்டமாக இணைந்து என்னைத்துரத்தத்தொடங்கின. ஓடிச்சவுத்த கால்கள் இருண்ட குகையுள் தரிபட்டு நின்றது. அதிர்ச்சியில் உறைந்து போக குகையை பார்க்கிறேன். எல்லாப்பூனைகளும் குகைக்குள் கூடியிருந்தன. 
 
 
மினுங்கும் கங்குள் விழிகள்,இடைவிடாத மீசைகளின் துடிதுடிப்பு,மரணத்தை வெல்லவே முடியாத பொறியில் மூடப்பட்ட குகைவாயில். நான் குகையைச்சுற்றிச்சுற்றி ஓடுகிறேன். கருப்புக்கடுவன் சீற்றத்துடன் விரட்டத்தொடங்கியது.உயிர் பிய்ந்து தொங்க  குகையில் தலை முட்ட விழுந்து வீறிட்டேன்.அவள் வந்து உலுக்கி என்ன என்றாள். உடல் வியர்வையில் தெப்பமாயிருந்தது. ‘அந்தக்கருப்பு பூனை அந்தா…’என் நாக்குளறியது.


‘என்ன இது சின்னப்புள்ள போல எப்ப பாத்தாலும் பூன பூன..’ஆதுரமாய் என் தலையை கோதிவிட்டாள்.மனம் நடுங்கிக்கொண்டிருந்தது.
 

 
23.05.09


பிரசுரம் :  காலம் (கனடா) இதழ் 33 அக்டோபர்- டிசம்பர் 2009

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...