Monday, 16 July 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

       தொடர் -19

ராசாவை சுட்டுக்கொல்ல இன்னுமொரு ராசா வந்தான். அவன்தான் மாணிக்கராசா என்ற பொலிஸ்காரன்.முஸ்லிம்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவன். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டியவன். 

முதன்முதலில் தமிழ் முஸ்லிம் கலவரங்களைத் தூண்டியதற்கு தூபமிட்ட பெருமையும் இவனையே சேரும்.மாஞ்சோலைக் கிராமத்து எல்லையில் தமிழ் முஸ்லிம் கலவரங்களைத்தூண்டி விட்டு அதில் குளிர்காய்ந்த சரித்திர நாயகன்.

கள்ள ராசாவை சுட்டு சாக்கில் கட்டிக்கொண்டு வந்து போட்டார்கள்.துள்ளித்திரிந்த பல ராசாக்களின் சரித்திரம் இப்படித்தான் குரூரமாக முடித்து வைக்கப்பட்டது என்பது நமது காலத்தின் நிஜக்கதை.

கள்ளராசாவில் ஆரம்பித்த காட்டு வாழ்க்கை, இலங்கை இராணுவத்தின் கெடுபிடி,இந்திய இராணுவத்தின் கெடுபிடி, தமிழ் தேசியபடைகளின் கெடுபிடி,ஏன் புலிகளின் கெடுபிடி என எல்லா கெடுபிடிகளுக்கும் தாக்குப்பிடித்தது.

காடுகள் தனக்குள் அடைக்கலம் தேடுபவர்களை காட்டிக்கொடுப்பதில்லை என்பதற்கு எனது வாழ்க்கை முழு சாட்சி. என்னையும் குடும்பத்தையும் அது பொத்திபொத்தி வைத்து வெளியே விட்டிருக்கின்றது. குரங்குகள் கூட உணர்வுகளைப் புரிந்து கொண்டாற்போல ஆர்ப்பாட்டமின்றி மௌனமாக எங்களைக்கடந்து போகும். அற்புதமான மலர்களும் காட்டுச்செடிகளும் மணம் வீச எத்துனை இரவுகளும் பகல்களும் எங்களைக்கடந்து போயின நாமறிவோம்.

எனது பதினெட்டாவது வயதில் இந்த ரம்யமான காடு என்னை அச்சுறுத்தியது. வனத்தின் வசீகரிப்பில் முதன்முதலாக அச்சமுற்றது அன்றுதான். ஒவ்வொரு காடும் என்னை மரணத்தின் எல்லைவரை விரட்டியது.கொடூரங்களை என்னில் துப்பியது.என்னை தத்தெடுத்த காட்டின் கரங்கள் இரத்தக்கரையுடன் வெளியே வீசியடிக்க உண்மையில் நொறுங்கித்தான் போனேன்
.
அது எனது பெரியம்மாவின் தலைச்சன் பிள்ளை சகோதரன் ஹயாத்து முஹம்மதுவை தேடிய பயணம். புணாணையில் வைத்து அவனை புலிகள் கைது செய்தனர். பொத்ததானை ஏரியாவுக்குப் பொறுப்பான புலிகளின் தலைவனை யாரோ வெட்டிப்போட்டு போய்விட்டார்கள். 

இடாப்பர் கடைச் சந்தியில் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தபோது நான் விடுமுறையில் நின்றேன். எனது பெரிய மாமாவின் வயலில் காக்கா காவலுக்கு நின்றான்.அவரின் ஒரு காலும் புலிகளின் மிதி வெடிக்கு காணிக்கையாகியது வேறு கதை.(செல்போன் கதைத்துக்கொண்டு ட்ரக்டர் ஓட்டிய சாரதியின் கவனயீத்தால் அந்த மாமாவும் இரயிலில் அடிபட்டு அண்மையில்தான் மரணடைந்தார்,அவரின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பானாக)  காக்கா ஒர் அப்பாவி. காக்கிச் சட்டையைக்கண்டால் கூட ஓடி ஒளிந்து விடும் வெகுளி.யாருக்கும் உபத்திரவம் செய்யத்தெரியாத வெள்ளை மனத்தினன்.

புலியை வெட்டியது தெரியாமல் வயலில் இருந்து கடைக்கு வந்திருக்கின்றான்.தெருவில் அதிக சனக்கூட்டம் தென்படவே தூரத்தில் நின்று வேடிக்கைபாhர்த்தபடி நின்றவனை பக்கத்து வயற்காரர் கூப்பிட்டு தம்பி நீ மாமாட வாடிக்கு ஓடிப்போ. இஞ்செ தியாகுவ வெட்டிப்போட்டிருக்காம் அவனுகள் வந்தா பிரச்சின வரும் என்று அவர் வாய் மூடுவதற்குள் புழுதிப் படலத்தை இரைத்துக்கொண்டு வாகனங்கள் வந்து நிற்கவும்,காக்கா ஓடவும் சரியாக இருந்தது.

 ஆறாம் கட்டை முகாமிலிருந்து புலிகளின் படைகள் வந்து சுற்றி வளைத்தன. தூரத்தில் நின்றவர்கள் ஓடித்தப்பினர். இவனும் ஓடிக்கொண்டிருந்தான். யாரோ இவனையும் நிற்கும்படி கூப்பிட்டிருக்கினம். இவன் கால்கள் வரம்புகளில் அடிபட்டு சேற்றில் மிதிபட்டு மாமாவின் வாடிக்குள் விழுந்தன.

விசாரித்திருக்கின்றார்கள். முடிவில் அவனை பிடித்து ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போய்விட்டார்கள். தியாகுவை வெட்டியவன் சிரித்துக்கொண்டிருக்க ஒரு நுளம்பைத்தானும் அடிக்க வக்கில்லாதவனை எக்காளச்சிரிப்புடன் பிடித்துக்கொண்டு போனார்கள்.

 எங்களது கடைக்கு முன்னால் புலிகளின் வாகனங்கள் இரைந்து சென்றதையும் சேர்ட்டை கழற்றி பின்னால் கைகள் கட்டப்பட்டு காக்கா ஜீப்புக்குள் குந்திக்கொண்டு செல்வதையும் கண்டேன். அப்போதும் அவன் முகத்தில் அந்த அப்பாவிச்சிரிப்பும் மிகுந்த நம்பிக்கையும் இருந்தது.என்னை ஒன்டும் செய்யமாட்டார்கள் என்ற ஒளிக்கீற்றை என்னால் காண முடிந்தது.

அவர்களின் முகாமிற்கு வாப்பாவுடன் நான் சைக்கிளில் சென்றேன்.கரியரில் ஏறிக்கொண்டு செல்லும் போது வழியில் சனங்கள் கூடி நின்று விவாதிப்பதைக் கண்டேன்.சில புலிக்குட்டிகள் வீதியில் நின்றபடி புலனாய்வு செய்து கொண்டிருந்தார்கள்.அவர்களின் பிஞ்சு மூளைக்குள் கொலை செய்தவன் சிக்குப்படாமல் போக்குக் காட்டிக்கொண்டிருக்க வேண்டும்.ஆளாளுக்கு துயரத்தை பங்கிட்டபடி நிற்பதைக்கண்டேன்.

நாங்கள் முகாமை அடையவும் பெரியம்மா ஆறாம் கட்டை முகாமிற்கு பிரசன்னமாகவும் சரியாக இருந்தது. கல்குடா தொகுதி முஸ்லிம் பகுதிகளுக்கான குறுநில மன்னர் புஹாரி வாசலில் நின்றிருந்தார். எங்களுக்கு தூரத்துச்சொந்தம் கூட. காக்காவைப்பற்றி நன்கு தெரிந்தவரும் கூட. பெரியம்மா மன்றாடிப்பார்த்தா. அவர் மசியவில்லை. நாங்க விசாரிச்சுப்போட்டு விட்டுப்போடுவம் என்றார். 

வாரங்கள் மாதங்கள் வருடங்கள் கடந்தும் பெரியம்மாவால் அவர் அப்பாவி மகனை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வேறு கதை.

சில நாட்களின் பின் பொத்தானை அணைக்கட்டுப் பக்கம் காக்காவை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வந்ததை கண்டவர்கள் எங்களிடம் சொன்னார்கள்.அன்று காலை சென்று விசாரித்ததில் ஒரு பேருண்மை வெளிப்பட்டது.இரவு முழுக்க அந்தக்காட்டில் ஒரு மனித அவலக்குரல் கேட்டதாம். என்னை அடிக்காதீங்க எனக்கு ஒன்டும் தெரியாது அது நள்ளிரவு வரை கேட்டது தம்பி . விடியச்சாமம் நாங்க ஆற்றுக்கு வலை வீசப்போவக்க அவனுகள்ர ஜீப்ப துரையடியில கண்டம்.கழுவிக்கொண்டு இருந்தானுகள்.அந்தப்பொடியன்ர சேர்ட்டு அவடத்ததான் கிடக்குது்

நானும் நண்பர்களும் துறையடிக்குச்சென்ற போது காக்காவின் இரத்தக் கரைபடிந்த சேர்ட்டைக் கண்டோம். காக்கா இருக்கவில்லை. பெரியம்மா புஹாரியிடம் கெஞ்சிப்பார்த்தா மையத்தயாவது தாங்க தம்பி எண்டு .சு.ப. தமிழ்ச்செல்வன் (புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர்,இலங்கை இராணுவத்தின் குண்டுக்கு இலக்காகியவர்) சொல்வதைப்போல அவரும் கையை விரித்து எங்களுக்கு ஒண்டும் தெரியாது விசாரணை நடக்குது விடுவம் என்றார். கூடவே இனி வந்து கரச்சல்படுத்தப்படாது என்ற எச்சரிக்கைவேறு.

எங்கள் தேசம் : 226                                                                         ஊஞ்சல் இன்னும் ஆடும்..Tuesday, 10 July 2012

நினைவுகளில் தொங்கும் ஊஞ்சல்


தொடர் -16

என் சர்வாங்கமும் ஒடுங்கி இதயம் வெடித்துவிடுமாற்போல் அடித்துக்கொண்டது. ஐந்தடி உயரமுள்ள கருத்த நாயொன்று பாய்வதற்கு தயாராக இருந்தது. அந்தக்கண்கள் நெருப்புக்கங்குகள் போல் சுடர்விட்டுக்கொண்டு மின்னிக்கொண்டிருந்தன.தீட்டிய வால் போல் நாக்கு நீண்டு ஈரத்தில் மினுமினுத்தது.திறந்த வேகத்தில் கதவை இழுத்து மூடினேன்

பருந்தின் கால்களில் அகப்பட்ட கோழிக்குஞ்சாக தேகம் நடுங்கிக்கொண்டிருந்தது.வியர்வையில் தெப்பமாகி பிரமையுடன் கட்டிலில் குந்திக்கொண்டிருந்தேன்.காதுகள் இரண்டும் வெளியில் இருந்தன. ஒரு சிலமனுமில்லை. அக்காலத்தில் கையடக்கத்தொலைபேசி வசதிகள் இல்லாத காலம்.எனக்கு ஊரிலிருந்து கடிதம் மட்டும்தான் வரும்.நானும் அப்படித்தான் வாரமொரு முறை தபால் அனுப்புவேன். 

எத்தனை மணிக்குத்தூங்கினேன் என்று தெரியாது.காவன்னா ஹாஜியார் வந்து கதவைத் தட்டு மட்டும் தூங்கியிருந்தேன். காலையில் யாரிடமும் இரவு நடந்த சம்பவத்தை சொல்லவில்லை.மறுநாள் இரவு தனியே தூங்குவதில்லை என்ற முடிவுடன் இருந்தேன். அங்கு பணி செய்த ஒரு வருடமும் நண்பர்கள் புடை சூழத்தான் தூங்கினேன்.எனது உஸ்தாதிடம் கேட்டேன்.

 'மகன் அது ஜின். பள்ளியில் இபாதத்துக்கு வருவது நல்ல ஜின்களின் அன்றாடப்பணி.அது நாய் பாம்பு ரூபத்திலும் வரும் என்பது ரசூலுல்லாஹ்வின் பொன் மொழி' என்றார்.அது சரி பள்ளிவாயலுக்குள் வரும்போதும் நாய் வேசம் எதற்கு என்று ஜின்னிடம் கேட்டிருக்கவேண்டும் அதற்குப்பின் அதைக்கானும் பாக்கியம் கிடைக்கவே இல்லை. மனிதர்களே குதறிக்கடிக்கும் வேட்டைப்புலி வேசத்தில் பள்ளிவாயலுக்குள் நுழையும் போது ஜின் வந்தால் என்ன? நான் தம்புள்ள பள்ளிவாயலுக்குள் (20.04.2012) வந்தவர்களை இப்படி சொல்லவில்லை.

 அவ்வப்போது கருப்பு நாய்களைக்கானும் போது அந்தக்காட்சி மனதை விட்டும் அகலாமல் பயமுறுத்திக்கொண்டுதான் இருக்கிறது.

99 காலப்பகுதியிலும் இப்படித்தான் ஜின்னில் அகப்பட்டுக்கொண்டு திமிறியிருக்கின்றேன். வவுனியா வீதியில் மதவாச்சி நகருக்கு அண்மையில் இருக்கும் கிராமம் இக்கிரிகொல்லாவ.என்னுடன் படித்த இரு நண்பர்களின் கிராமம். ஏ.எல் எடுத்தபின் இங்கெல்லாம் வந்திருக்கின்றேன். வரட்சியான ஊர்.விவசாயம் ,கால் நடை வளர்ப்புத்தான் பிரதான தொழில்.

பெரும்பாலானோர் வீட்டு முற்றத்தில் மாட்டுப்பட்டி இருக்கும்.ஆடுகளும், நாட்டுக்கோழிகளும் சர்வசாதரணமாக முற்றத்தில் கிடந்து மேயும்.பெண்கள் சாணி அள்ளுவதும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவுதிலும் இருப்பதைக் கண்டிருக்கின்றேன்.

புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முல்லைத்தீவுவாசிகளின் அகதி முகாமும் இருந்தது. சுற்றுத்தொலைவில் மன்னார் அகதி முகாம் ஒன்றும் இருந்தது.மன்னார் வேப்பங்குளம்,சாளம்பைக்குளம் நண்பர்களும் இக்கிரிகொல்லாவ அகதி முகாமில் தங்கியிருந்தது எனக்கு வாய்ப்பாக போய்விட்டது. 

யாழ்ப்பாணத்து முஸ்லிம் குடும்பங்களும் தங்கிருந்தார்கள். சில யாழ்ப்பாணத்துப் பிள்ளைகள் எனது மாணவர்களாக இருந்தார்கள்.இக்கிரிகொல்லாவைக்கு சீக்கிரமாக வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.நண்பர்களின் ஊர் என்பதால் வறட்சி வசதிவாய்ப்புகளை மறந்து வந்து விட்டேன்.இங்கு வருவதற்கு இன்னுமோர் காரணம் எனது மச்சான் மன்சூர் அவர்கள் மதவாச்சி மில்போர்ட்; மனேஜராக மாற்றலாகி வந்திருந்தார்.

 இங்கு வந்த பிறகுதான் அன்றாடத் தினசரி கூட இல்லாமல் இருப்பது தெரிந்தது. இரண்டு மைல் தொலைவில் உள்ள ரம்பாவ நகருக்குச்சென்று  பத்திரிகை எடுத்து வந்து படிப்பது என் அன்றாட பழக்கங்களில் ஒன்றாக இருந்தது.அல்லது மதவாச்சிக்குப்போய் மச்சானுடன் கதைத்து விட்டு வருவது. யுத்தம் உச்சத்தில் நின்ற காலம்.இரானுவ நெருக்குவாரங்களும்,புலிகளின் பழிவாங்கள்களும் குறைவில்லாமல் மக்களுக்கு கிடைத்துக்கொண்டிருந்தன. 

அந்தக்கிராமங்களில் பெரும்பாலும் அறையில் தூங்குவதும் ,பேக்கரியில் வேகுவதும் ஒன்றுதான்.நான் அறையில் படுப்பது கிடையாது.இருக்கவே இருந்தது மிகப்பெரிய பள்ளி ஹோல்.முஅத்தினார்,வழிப்போக்கர்கள், என  ஒரு பட்டாளமே பள்ளியில் தங்க தினமும் ஆட்கள் கிடைத்தார்கள்.நானும் அன்று அப்படித்தான் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தேன்.பள்ளிவாயிலில் மிம்பருக்கு எதிரே உள்ள தலைவாயிலில் யாரும் உள்ளே நுழைந்து விடாதவாறு குறுக்காக மரமொன்றை தரித்து வீழ்த்தியதைப்போல் நான் படுத்துக்கிடந்தேன்.வெற்றுடம்பு ஈரமான காற்றுடன் மின்விசிறியின் காற்றும் ஒருசேர தாலாட்டுப்பாடியிருக்க வேண்டும்.நல்ல தூக்கம்.

 நள்ளிரவு 1மணி தாண்டியிருக்கும் என நினைக்கின்றேன்.வலிய இரு கரங்கள் எனது கால்களைப் பிடித்து மேல் நோக்கியவாறு சுழற்றி எடுத்ததை உணர்ந்தேன் .என்ன நடக்குதென்று நிதானிக்க முடியவில்லை அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இரு கால்களும் அசைக்கவே முடியாத அளவிற்கு இரும்புப்பிடி. என்னை அந்தரத்தில் ஒரு பம்பரம் போல் சுற்றிக்கொண்டிருப்பது யார் ?.கனவா என்று யோசித்துப்பார்த்தேன்.பலம் கொண்ட மட்டும் கத்திப் பார்;தேன் இடுப்பிலிருந்த சாரம் நழுவி விடுமாற்போல் இருந்தது. கனவல்ல என்று உணர்ந்தபின் முழுப்பலத்தையும் குவித்து கத்தினேன்.

நான் படுத்த இடத்திலிருந்து சற்று அப்பால் நான் வீசப்பட்டுக்கிடப்பதை உணர்ந்தேன். பள்ளிவாயலுக்குள் படுத்த முஅத்தின்சாப்தான் முதலில் என் காட்டுக்கத்தலைக்கேட்டு ஓடி வந்தார். என்னைப்பார்;த்ததும் அவர் பயத்தில் உறைந்து போய் பின் நிதானித்து அருகில் வந்து அள்ளி எடுத்து குடிக்க தண்ணீர் தந்தார். நடந்ததை சொல்வதற்கு எனக்கு அவகாசம் தேவைப்பட்டது. திக்பிரமை பிடித்தவன் போல் தூங்கிய இடத்தைப் பார்த்தேன் .போர்வையும் தலையணையும் அப்படியே கிடந்தது. அது ஜின்னின் வேலையாக இருக்கும்.ஒதி ஊதிக்கிட்டு படுங்க என்றார். 

பள்ளிவாயலின் தலைவாயலில் படுக்கப்படாது.ஜின் வருகின்ற நேரம் வழியில் படுத்தால் இப்படித்தான் செய்யும்.வருகின்ற ஜின்னுக்கு எவ்வளவோ வாசல் இருக்க என்னை பம்பரமாய் சுற்றி வேடிக்கை காட்டிய மர்மம் என்ன ?மற்றது நான் தூங்கும் போது சொல்லாமல் ஜின்னிடம் என்னை மாட்டிவிட முஅத்தின்சாப் திட்டம் போட்டாரா? எந்த ஜின்னிடம் கேட்கலாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

எங்கள் தேசம் - 223                                                       ஊஞ்சல் இன்னும் ஆடும்.......

Sunday, 8 July 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்


தொடர்- 18

நான் சாச்சாவுடன் வனத்திற்குள் வந்த கதைக்கு மீண்டும் வருகின்றேன். இடைவழியில் சந்திப்பதற்கு இப்படி நிறைய சமாச்சாரங்கள் வரும்
சாச்சா கடையைப்பரத்தி சாமான்களை அடுக்கினார். இன்னும் பலர் எங்களுக்கு முன் வந்து கடை பரத்தியிருந்தனர். சர்பத் கடை. தும்பு மிட்டாய், கலர் விசிறி,காகிதக் கண்ணாடி, உப்பிப்பெருத்த பலூண்கள்,பலூன்களில் பல ரகங்களையும் ஊதி ஊதி சாச்சா கடைப்பந்தலில் கட்டித்தொங்கவிட்டார்.

காப்பு,தலைப்பூ,கண்ணாடி வளையல்கள் பிளாஸ்ரிக் அய்ட்டங்கள்,கலர் கலரான மாலைகள்,முத்துக்களால் கோர்க்கப்பட்ட வளையல்கள். என கண் கவர் சாமான்கள் எங்கள் கடையில் மின்னின. கூட்டம் நிறைந்தது. முதல் நாள் எதையும் வாங்கவில்லை தொட்டுப் பார்த்துவிட்டு கலைந்து போனார்கள்.

இன்றைய திருவிழாக்களில் நடப்பது போல் காதை சல்லடையாக்கும் இசை கச்சேரிகள்,தொட்டுப்பார்க்க விதம்விதமாக சுந்தரிகள் அவர்களை தொடுவதில் நானா நீயா என்ற போட்டிகள், அதனால் வரும் குண்டு வெடிப்பு, கத்திக்குத்து ,கோஷ்டி மோதல். எதுவும் இல்லை.

அன்றை திருவிழாக்கள் தற்போது போல் அரிதாரம் இல்லாமல் யதார்த்தமாக நடைபெற்றதை பார்த்திருக்கின்றேன்.புதிய பாத்திரங்களில் சமையல் நடக்கும்.கடவுளுக்கு கிடாய் வெட்டுவதுண்டு. ஸ்பீக்கர் இல்லை. சௌந்தரராஜன்,சீர்காழி கோவிந்தராஜன்களின் பக்திப்பாடல்கள் இல்லை மேளதாளம் இல்லை.

ஈற்றில் பிரமாண்டமான இன்னிசைக் கச்சேரியும் திண்டுக்கள் ஐ லியோனி முழுமத்தின் பட்டிமன்ற வகையறாக்கள் எதுவுமில்லை.தென்னிந்திய நடனசிரோன்மணிகளின் நாட்டியமும் இல்லை. எனினும் திருவிழாக்கள் களைகட்டி இருக்கும். 

மூன்று நாட்களும் அந்தக்காட்டில்தான் சோறும் தூக்கமும்.முஸ்லிம்களின் மார்க்கமும் பெரும்பாலும் அவர்களுடையப் போன்றுதான் இருந்தன. தொழுகை இல்லை.காட்டில் இருந்தாலும் படைத்தவனை வணங்க வேண்டும் என்ற உணர்வில்லை. உழைப்பும்,தொழிலும்தான் பாடு என்றிருந்தனர்.

காட்டில் உறங்குவதும்,ஆற்றில் குளிப்பதும் திருவிழாவில் தரும் உணவை உண்பதுமாக நாட்கள் கடந்துவிடும்.வெறும் பைகளை மட்டும் காவிக்கொண்டு ஊருக்குத் திரும்புவோம்.

இன்று வியாபாரத்திற்குச்சென்று திரும்பினால் செக் தாள்கள்தான் மிஞ்சி நிற்கும்.அதிலும் செல்லுபடியற்ற செக்குகளின் மௌனத்தூக்கம் வியாபாரியை அச்சுறுத்தியபடி சதா அவன் பைக்குள் கிடந்து உறுமிக்கொண்டிருக்கும்.

எனக்கு காடு இன்னுமொரு அனுபத்தையும் தந்தது. அது கள்ளராசாவின் காலம்.

1982 களில் கள்ள ராசாவினதும் அவனின் தோழர்களினதும் அட்டகாசங்கள் தலைவிரித்தாடின. சன நெரிசலற்ற வீடுகளில் வந்து கொள்ளை அடிப்பதும் கொலை செய்வதும் அவர்களின் தொழிலாக இருந்தது. 

பொத்தானை,கள்ளிச்சை,காரமுனை மினுமினுத்தவெளி போன்ற இடங்களில் அவன் தன் கை வரிசையைக்காட்டிக் கொண்டிருந்தான்.தனியாக இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து பெண்களை வல்லுறவு செய்வதால் பெண்கள் நடுங்கிப்போய்க் கிடந்தார்கள்.

அப்போது மின்சாரம் பரவலாக இல்லாத காலம்.குப்பிலாம்பின் மங்கிய வெளிச்சத்தில் படித்தவர்கள்தான் அதிகம்.நானும் அப்படித்தான் படித்தேன். எங்கள் வீட்டில் குப்பிலாம்பு என்பது சிம்மினியோ, லாந்தரோ இல்லை. வெற்றுக்குப்பியில் திரியைப்போட்டு மேலே ஒரு சோடா மூடியால் அடைத்து லாம்பாக பயன்படுத்துவார்கள்.

 நான் விடுதியில் இருந்த காலம் இரவில் லைட்டை அணைத்து விடுவார்கள் கண்விழித்து கொஞ்சம் படிக்க குண்டு பல்புக்குள் எண்னெய் ஊற்றி திரியை நுழைத்து லாம்பாக பயன்படுத்தியிருக்கின்றேன். 

ஸ்கிறீன்,புரஜக்டர்கள் இல்லாத காலம்.டிவி கேம்,மொபைல் எஸ்.எம்.எஸ்கள் எதுவும் தெரியாது.இப்படித்தான் பெரும்பாலானவர்களின் கல்வித்தாகம் தீர்ந்தது.

 நாங்கள் முள்ளிவெட்டவானில் வாழ்ந்த காலத்தில் இந்தக்கள்ளராசாவின் அராஜரகம் குறித்து அதிகம் பேசப்பட்டது.

அவன் எங்கே எப்போது வருவான் என்று சொல்ல முடியாது.பொலிஸ் ஆமி கெடுபிடிகள் எல்லாம் பெரிதாக இல்லை.இயக்கமும் இங்கு காலூன்றவில்லை.கள்ளராசா தண்டயல் ஆனதற்கு இதுவும் காரணம்.ராசாவின் பெயரைச்சொல்லி சும்மா கிடந்த கள்ளர்களும் கோழி ஆடுகளைத் திருடினாலும் அது ராசாவுக்கு பெரிய அவமானமாக தெரியவில்லை.ஏனெனில் ராசா களவையும்,பிறர் மனை துய்ப்பதையும் தெய்வமென நினைத்து வாழ்ந்தவன்.

மாலையானதும் கடையை மூடிவிட்டு அன்றைய வியாபார சில்லரைகளையும் அள்ளிக்கொண்டு அயலில் இருக்கும் காட்டுக்குள் சென்று விடுவோம்.விடியவிடிய காடும் இருளும் அத்வைதமாகிப்போகும். இரவில் காடுகளுக்குள் வசிப்பது என்பது ஒரு திகில் அனுபவம்.

அது தமிழ் மக்களுக்கு போராட்ட காலத்தில் வலாயப்பட்டுப்போனது.நுளம்புகள் சகட்டுமேனிக்கு கடித்துக்குதறும் .காட்டு நுளம்புகள் ஒரு பறவையைப்போல் வட்டமிட்டு ரீங்காரமிடும். நச்சுப்பாம்புகளுக்கும், பிற விஷ ஜந்துகளுக்கும் பயப்படவேண்டும்.வெளிச்சம் காட்ட முடியாது.இருமல் தும்மல் போன்ற உபாதைகளை அடக்குவது பெரும் அவஸ்தை.

கைக்குழந்தை இருந்தால் அதைவிட அவஸ்தை இல்லவே இல்லை. குழந்தைக்கே உரிய குறும்புத்தனங்களை மறக்கச்செய்யவேண்டும். காட்டுக்குள் அது விடியவிடிய தாயின் மடியில் தூங்க வைக்க இருக்கவே இருந்தது அக்காலத்தில் குதிரைப்யிலுவான் லேகியம். உம்மா எனது தம்பிக்கு அதை கொஞ்சம் வாயில் கிள்ளிப்போட்டு தூங்க வைப்பா.உம்மாவை நிகர்த்த பல உம்மாக்களின் தூக்க மாத்திரை இதுவாகத்தாதன் இருந்தது.விசமம் புரியும் குழந்தைகளின் சிம்மசொப்பனமாமக குதிரை லேகியம் பிரபல்யம் பெற்றது இப்படித்தான்.

காடுகள் பிற்காலத்தில் வசீகரமானதற்கு கள்ளராசாவின் பிரசன்னம் காரணியாக அமைந்தது என்னவோ உண்மைதான்.காடுகள் எங்களின் உயிர்களையும் மானத்தையும் காப்பற்றியுள்ளது. காடுகள் வாழ்க்கையின் குறிக்கோள்களை கற்றுத் தந்தது. காடுகளின் அரவணைப்பில் பல இரவுகள், பகல்கள் தூங்கியிருப்போம்.

காடுகளின் அன்பும் அரவணைப்பும் எங்களை பகலிலும் தாலாட்டியுள்ளது.இந்திய ஆமிக்கும்,இலங்கை ஆமிக்கும் பயந்து காடுகளில் பதுங்கியிருக்கின்றோம்.அப்படி பதுங்கியிருக்கும் சிலர் சும்மா இருக்காமல் கஞ்சா செடி வளர்த்து செல்வந்தராகியதும் உண்டு.காடுகளுக்குள் குடும்பம் நடத்தி பிள்ளைபெற்றவர்களும் உண்டு.நீண்ட வரலாற்றுக்குறிப்புகளை காடுகளில் இருந்து நான் கற்றுக்கொண்டிருக்கின்றேன்.தன்னந்தனியாக அடர்ந்த வனங்களில் திசைகெட்டு அலைந்திருக்கின்றேன்.

மூத்தாப்பாவுடன் அடர்ந்த வனங்களில் முயல் வேட்டைக்கும்,மான்வேட்டைக்குமென சுற்றியிருக்கின்றேன்.அவரின் சிவப்பு நிற தோட்டாக்களை காவிக்கொண்டு இருளுடன் இருளாய் காட்டில் அலைவது எத்துனை மகிழ்ச்சி. தீனாவைச்சுற்றி விறகுகளை அடுக்கும்படி கூறிவிட்டு காட்டுக்குள் நுழையும் மூத்தாப்பா வரும் வரை காட்டின் நடுவில் அமர்ந்து கொண்டு மானிரைச்சியை காயவைத்து வாட்டியிருக்கின்றேன்.

ஓ..காடே நீ எவ்வளவு அற்புதமான அனுபவங்களை அள்ளித்தந்தாய் இன்பமும் துன்பமும். துரோகமுமாய்....

எங்கள் தேசம் : 225                                                                          ஊஞ்சல் இன்னும் ஆடும்..