Monday, 16 July 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

       தொடர் -19

ராசாவை சுட்டுக்கொல்ல இன்னுமொரு ராசா வந்தான். அவன்தான் மாணிக்கராசா என்ற பொலிஸ்காரன்.முஸ்லிம்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவன். பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டியவன். 

முதன்முதலில் தமிழ் முஸ்லிம் கலவரங்களைத் தூண்டியதற்கு தூபமிட்ட பெருமையும் இவனையே சேரும்.மாஞ்சோலைக் கிராமத்து எல்லையில் தமிழ் முஸ்லிம் கலவரங்களைத்தூண்டி விட்டு அதில் குளிர்காய்ந்த சரித்திர நாயகன்.

கள்ள ராசாவை சுட்டு சாக்கில் கட்டிக்கொண்டு வந்து போட்டார்கள்.துள்ளித்திரிந்த பல ராசாக்களின் சரித்திரம் இப்படித்தான் குரூரமாக முடித்து வைக்கப்பட்டது என்பது நமது காலத்தின் நிஜக்கதை.

கள்ளராசாவில் ஆரம்பித்த காட்டு வாழ்க்கை, இலங்கை இராணுவத்தின் கெடுபிடி,இந்திய இராணுவத்தின் கெடுபிடி, தமிழ் தேசியபடைகளின் கெடுபிடி,ஏன் புலிகளின் கெடுபிடி என எல்லா கெடுபிடிகளுக்கும் தாக்குப்பிடித்தது.

காடுகள் தனக்குள் அடைக்கலம் தேடுபவர்களை காட்டிக்கொடுப்பதில்லை என்பதற்கு எனது வாழ்க்கை முழு சாட்சி. என்னையும் குடும்பத்தையும் அது பொத்திபொத்தி வைத்து வெளியே விட்டிருக்கின்றது. குரங்குகள் கூட உணர்வுகளைப் புரிந்து கொண்டாற்போல ஆர்ப்பாட்டமின்றி மௌனமாக எங்களைக்கடந்து போகும். அற்புதமான மலர்களும் காட்டுச்செடிகளும் மணம் வீச எத்துனை இரவுகளும் பகல்களும் எங்களைக்கடந்து போயின நாமறிவோம்.

எனது பதினெட்டாவது வயதில் இந்த ரம்யமான காடு என்னை அச்சுறுத்தியது. வனத்தின் வசீகரிப்பில் முதன்முதலாக அச்சமுற்றது அன்றுதான். ஒவ்வொரு காடும் என்னை மரணத்தின் எல்லைவரை விரட்டியது.கொடூரங்களை என்னில் துப்பியது.என்னை தத்தெடுத்த காட்டின் கரங்கள் இரத்தக்கரையுடன் வெளியே வீசியடிக்க உண்மையில் நொறுங்கித்தான் போனேன்
.
அது எனது பெரியம்மாவின் தலைச்சன் பிள்ளை சகோதரன் ஹயாத்து முஹம்மதுவை தேடிய பயணம். புணாணையில் வைத்து அவனை புலிகள் கைது செய்தனர். பொத்ததானை ஏரியாவுக்குப் பொறுப்பான புலிகளின் தலைவனை யாரோ வெட்டிப்போட்டு போய்விட்டார்கள். 

இடாப்பர் கடைச் சந்தியில் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தபோது நான் விடுமுறையில் நின்றேன். எனது பெரிய மாமாவின் வயலில் காக்கா காவலுக்கு நின்றான்.அவரின் ஒரு காலும் புலிகளின் மிதி வெடிக்கு காணிக்கையாகியது வேறு கதை.(செல்போன் கதைத்துக்கொண்டு ட்ரக்டர் ஓட்டிய சாரதியின் கவனயீத்தால் அந்த மாமாவும் இரயிலில் அடிபட்டு அண்மையில்தான் மரணடைந்தார்,அவரின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பானாக)  காக்கா ஒர் அப்பாவி. காக்கிச் சட்டையைக்கண்டால் கூட ஓடி ஒளிந்து விடும் வெகுளி.யாருக்கும் உபத்திரவம் செய்யத்தெரியாத வெள்ளை மனத்தினன்.

புலியை வெட்டியது தெரியாமல் வயலில் இருந்து கடைக்கு வந்திருக்கின்றான்.தெருவில் அதிக சனக்கூட்டம் தென்படவே தூரத்தில் நின்று வேடிக்கைபாhர்த்தபடி நின்றவனை பக்கத்து வயற்காரர் கூப்பிட்டு தம்பி நீ மாமாட வாடிக்கு ஓடிப்போ. இஞ்செ தியாகுவ வெட்டிப்போட்டிருக்காம் அவனுகள் வந்தா பிரச்சின வரும் என்று அவர் வாய் மூடுவதற்குள் புழுதிப் படலத்தை இரைத்துக்கொண்டு வாகனங்கள் வந்து நிற்கவும்,காக்கா ஓடவும் சரியாக இருந்தது.

 ஆறாம் கட்டை முகாமிலிருந்து புலிகளின் படைகள் வந்து சுற்றி வளைத்தன. தூரத்தில் நின்றவர்கள் ஓடித்தப்பினர். இவனும் ஓடிக்கொண்டிருந்தான். யாரோ இவனையும் நிற்கும்படி கூப்பிட்டிருக்கினம். இவன் கால்கள் வரம்புகளில் அடிபட்டு சேற்றில் மிதிபட்டு மாமாவின் வாடிக்குள் விழுந்தன.

விசாரித்திருக்கின்றார்கள். முடிவில் அவனை பிடித்து ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போய்விட்டார்கள். தியாகுவை வெட்டியவன் சிரித்துக்கொண்டிருக்க ஒரு நுளம்பைத்தானும் அடிக்க வக்கில்லாதவனை எக்காளச்சிரிப்புடன் பிடித்துக்கொண்டு போனார்கள்.

 எங்களது கடைக்கு முன்னால் புலிகளின் வாகனங்கள் இரைந்து சென்றதையும் சேர்ட்டை கழற்றி பின்னால் கைகள் கட்டப்பட்டு காக்கா ஜீப்புக்குள் குந்திக்கொண்டு செல்வதையும் கண்டேன். அப்போதும் அவன் முகத்தில் அந்த அப்பாவிச்சிரிப்பும் மிகுந்த நம்பிக்கையும் இருந்தது.என்னை ஒன்டும் செய்யமாட்டார்கள் என்ற ஒளிக்கீற்றை என்னால் காண முடிந்தது.

அவர்களின் முகாமிற்கு வாப்பாவுடன் நான் சைக்கிளில் சென்றேன்.கரியரில் ஏறிக்கொண்டு செல்லும் போது வழியில் சனங்கள் கூடி நின்று விவாதிப்பதைக் கண்டேன்.சில புலிக்குட்டிகள் வீதியில் நின்றபடி புலனாய்வு செய்து கொண்டிருந்தார்கள்.அவர்களின் பிஞ்சு மூளைக்குள் கொலை செய்தவன் சிக்குப்படாமல் போக்குக் காட்டிக்கொண்டிருக்க வேண்டும்.ஆளாளுக்கு துயரத்தை பங்கிட்டபடி நிற்பதைக்கண்டேன்.

நாங்கள் முகாமை அடையவும் பெரியம்மா ஆறாம் கட்டை முகாமிற்கு பிரசன்னமாகவும் சரியாக இருந்தது. கல்குடா தொகுதி முஸ்லிம் பகுதிகளுக்கான குறுநில மன்னர் புஹாரி வாசலில் நின்றிருந்தார். எங்களுக்கு தூரத்துச்சொந்தம் கூட. காக்காவைப்பற்றி நன்கு தெரிந்தவரும் கூட. பெரியம்மா மன்றாடிப்பார்த்தா. அவர் மசியவில்லை. நாங்க விசாரிச்சுப்போட்டு விட்டுப்போடுவம் என்றார். 

வாரங்கள் மாதங்கள் வருடங்கள் கடந்தும் பெரியம்மாவால் அவர் அப்பாவி மகனை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வேறு கதை.

சில நாட்களின் பின் பொத்தானை அணைக்கட்டுப் பக்கம் காக்காவை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வந்ததை கண்டவர்கள் எங்களிடம் சொன்னார்கள்.அன்று காலை சென்று விசாரித்ததில் ஒரு பேருண்மை வெளிப்பட்டது.இரவு முழுக்க அந்தக்காட்டில் ஒரு மனித அவலக்குரல் கேட்டதாம். என்னை அடிக்காதீங்க எனக்கு ஒன்டும் தெரியாது அது நள்ளிரவு வரை கேட்டது தம்பி . விடியச்சாமம் நாங்க ஆற்றுக்கு வலை வீசப்போவக்க அவனுகள்ர ஜீப்ப துரையடியில கண்டம்.கழுவிக்கொண்டு இருந்தானுகள்.அந்தப்பொடியன்ர சேர்ட்டு அவடத்ததான் கிடக்குது்

நானும் நண்பர்களும் துறையடிக்குச்சென்ற போது காக்காவின் இரத்தக் கரைபடிந்த சேர்ட்டைக் கண்டோம். காக்கா இருக்கவில்லை. பெரியம்மா புஹாரியிடம் கெஞ்சிப்பார்த்தா மையத்தயாவது தாங்க தம்பி எண்டு .சு.ப. தமிழ்ச்செல்வன் (புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர்,இலங்கை இராணுவத்தின் குண்டுக்கு இலக்காகியவர்) சொல்வதைப்போல அவரும் கையை விரித்து எங்களுக்கு ஒண்டும் தெரியாது விசாரணை நடக்குது விடுவம் என்றார். கூடவே இனி வந்து கரச்சல்படுத்தப்படாது என்ற எச்சரிக்கைவேறு.

எங்கள் தேசம் : 226                                                                         ஊஞ்சல் இன்னும் ஆடும்..No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.