Saturday, 4 June 2016

சிறுகதை

இரு வீடும், மற்றும் “அன்ரியும்”

கொழும்புக்கு குடித்தனம் வந்து ஒருவருடத்தில் இப்படியொரு பிரிவு வருமென்று நாங்கள் நினைத்திலோம். கொழும்புக்கு வருவதற்கான முன் ஆயத்தங்கள் ஆறுமாதகாலமாக நடந்தேறின. அந்த இந்தாவென அதுதள்ளிப் போய் கொண்டே இருந்தது. 

இடையில் கடும் மழைபிடித்து பிரதான வீதிகளும் காட்டு வெள்ளத்தில் அமிழ்ந்து போயின. ஒரு விடிகாலைப் பொழுது சிலுசிலுத்த மழைத்துளிகளை அலட்சியப்படுத்தி புறப்பட்டு இடையில் பாதைதெரியாத நீர்கோபுரங்களைகண்டு மிரண்டுஇ மறுபடியும் வீடேகி இப்படி ஏராளமான தடைகளைத் தாண்டித்தான் ஈற்றில் கொழும்பு வாசம் வாய்த்தது.

கொழும்புச்சூழலில் ஆர்ப்பாட்டமான ஆடம்பர வாழ்க்கை ஒன்றை சோடித்து வாழும் நகரத்து மக்களிடை ஒரு நடுத்தர கிராமத்துக் குடும்பம் வாழ்வை தொடங்குவதென்பது பெரும் சுமையாக முன் நின்று அச்சுத்தியது.

திருமணம் முடித்த புதிதில் விடுமுறை தினங்களில் ஊருக்கு கிளம்புவதென்பது இன்பமயமாகத்தான் இருந்தது. பயணத்தில் ஒருநாளும் வீட்டில் ஒருநாளுமாய் சிலகாலம். பின் இதுவே அலுப்பாயிற்று. பிரிந்திருக்கவும் சேர்ந்திருக்கவும் முடியாத அவஸ்தை ஒருவருடமாகியும் “என்னஒன்றுமில்லையா” என வயிற்றை உற்றுப்பார்க்கிறார்கள். என அவள் வேறு இருள் படிந்த முகத்துடன் முறையிடுகையில் சூன்யம் வந்து கவ்விக்கொள்ளும். அவளுக்கு சடுதியாக கிராமத்தை விட்டும் கிளம்பி “ஒருமாதிரிப் பார்வை” களிலிருந்து தப்பவேண்டும். இந்த மன அவசங்களுக்கு முற்றுப் புள்ளிதான் கொழும்பு வாசம் என முடிவாயிற்று.

ஊருக்குத் திரும்பும் முதற்கட்டமாக – சாமான்களை மூட்டை கட்டிவேனில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து “அனெக்ஸி”லிருந்து அன்ரியும் வந்திருந்தா. நடுநிசிக்குள் புறப்படவேண்டும் என்ற தீர்மானதத்தின்படி பரபரவென்று வேன் நிறைய சாமான்களை அடையத் தொடங்கினார்கள். 

கீழ் தளத்தில் வீட்டு உரிமையாளர்கள் இருந்தார்கள். மேல் மாடி இரண்டாகப் பிரிக்கப்பட்டுஇ பிரத்யேக வசதிகளுடன் இரு குடும்பங்கள் வசிப்பதற்குத் தோதாக அமைக்கப்பட்டிருந்தது. இரு வீடுகளுக்கும் வெவ்வேறு கதவுகளும் படிகளும்.
இவர்கள் குடியிருந்த அயல்வீட்டில் தென்மாகாண குடும்பமொன்று குடியிருந்தது. வீட்டிற்கு குடிவந்த மறுகணமே மனைவியையும்இ மாமியையும்இ பிடித்து அயல்வீட்டினருடன் அறிமுகம்செய்ய இவன்தான் தள்ளாத குறையாக தள்ளிவிட்டான். அவர்களும் நன்கு அறிமுகமாகி அங்கு வசிப்போரின் மனதில் இடம்பிடித்துவிட்டனர்.

மேல் மாடியில் உசுப்புக் காட்டினால் கீழ்தளத்தில் உள்ளவர்கள் சட்டென உணர்ந்து கொள்ளுமாற்போல் இந்தவீட்டின் அமைப்பு வாய்த்திருந்தது நிலவறை ஒன்றில் தட்டுமுட்டு சாமான்கள் குவிந்துகிடந்தன. 

புதிய முகம்இ புதிய இடம்இ சிக்கலான பாஷை அடிக்கடி துண்டிக்கப்படும் நீர் என எல்லா நெருக்கடிகளுக்கும் இவன் மனைவிதான் மிகக்கடுமையாக ஈடுகொடுக்க வேண்டியதாயிற்று.

திருமணம் முடித்த புதிதில் ஒரு குழந்தைக்கு ஏங்கிய ஏமாற்றத்தின் சமருக்கும் முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. மொழுமொழுவென்று கணத்த வயிற்றுடன் அவளைப் பார்க்கையில் உள்ளூரக்குதிக்கும் உவகை எழுத்தில் மாளாது. தனிக் குடித்தனம் இவனைவிடஇ அவளைத்தான் வாட்டி எடுத்தது.

காலையில் இவன் அலுவலகம் செல்லக்கிளம்புகையில்இ தனிமையின் இருள் கவிழ்ந்து அவள் முகத்தை மூடும். விழிகள் பிதுங்கி மாலை வரும்வரை படிக்கட்டில் தவிக்கும் அவள் மருண்ட விழிகளே இவன் கம்பியூட்டரிலும் தத்தளிக்கும். 

கர்ப்பத்தின் அவஸ்தை தனிமையின் கண்ணுருட்டல் எல்லாவற்றையும் ஏககாலத்தில் துடைத்தெறிய ஊரிலிருந்து யாராவது திடுதிடுப்பென பிரசன்னமாகி விடுவார்கள். சிறிய வீட்டில் மத்தாப்பு வெடிக்கும். சந்தோஷ சாகரத்தில் இவனை விட அவளே அதிகம் திளைப்பாள். ஒரு மாத இடைவெளி விட்டு வருகை தரும் மாமியின் தரிசனம் உவகை தரும். கூடவே உப்பு தேசியும்இ பொறித்த மீனும் கட்டித் தயிரும் மணக்கும். தொப்புள் விழுந்த பூமியிலிருந்து எதுவந்தாலும் அது தித்திப்பான அறுசுவைதான்.

இதமான காற்று இணைந்திருந்து நிலாவை ரசிக்கவும் கவிதை பகரவும் அருகில் அவள் வயிற்றுள் வளரும் உயிரின் அசைவும் எகிறலும் சிலிர்ப்பூட்டும். “இதோ கைய வெச்சிப்பாருங்க என்னமா உதைக்கிது.” அவள் வயிற்றில் கைவைத்து அழுத்தும் போது கிச்சுகிச்சு மூட்டும் குழந்தையின் உதைப்பு உயிரே உறைகிறாற் போல் மனம் உருகி வழியும். யந்திர வாழ்க்கையில் பத்து மாதம் ஒரு தூசாகப் பறந்து போயிற்று.

வழியனுப்ப இரவு 12மணிக்கே வீட்டு உரிமையாளரும்இ அவர் குடும்பமும் மற்றும் அன்ரியும் எழுந்து வந்துவிட்டார்கள். குழந்தை பிறந்த புதிதில் அவர்களின் குடும்பம் வந்து பார்த்துவிட்டு போன போது. “இன்டக்கி அன்ரிட ராத்தா வந்தாஇ “இன்டக்கி கீழ் வீட்டுக்காரர்ர தங்கச்சி வந்தா என தினமும் வரவுகள். இவன் மாலையில் வீடு திரும்புகையில் மகிழ்வூட்டி நின்றன. கண் மூடிதிறப்பதற்குள் ஒருவருடம் கழிந்திற்று. குழந்தையும் பிறந்து 20 நாட்களாகி விட்டது.

ஊரிலிருந்து டெலிபோனுக்கு மேல் டெலிபோன் “பிள்ளையபார்க்க வேண்டும் கூட்டிவாருங்கள்”.

அலுவலகத்திலும் அதிக வேலைப்பளு பணமுடை என நாட்கள் நகர்ந்தது. ஈற்றில் இன்று ஊர் போவதென ஊர்ஜிதமாயிற்று.

குறுகிய கால நட்பில் நெஞ்சம் நெகிழ்கிறது.  “உங்களைப் போல ஒருபெமிலி இனி வாய்ப்பாங்களோ தெரியா”. அன்ரியும் வீட்டுக்காரரும் அங்கலாய்த்தனர். மனைவியையும் மாமியையும் அணைத்தப்படி விசும்பும் ஒலி இவன் நெஞ்சைப் பிசைந்தது.

அவர்களின் பிள்ளைகளும் எழுந்து ஜன்னல் இடுக்கால் தலை நிமிர்த்தி பார்த்துநின்றன. தூக்கம் நிறைந்த அவர்களின் விழிகளிலும் ஏக்கம் தேங்கிக்கிடந்தது.

“நீங்க ஒபீசுக்கு போனாஇகீழ்வீட்டுப் பிள்ளைகள் என்னோடவந்து பேசிக்கிட்டு இருப்பாங்க ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் அவங்கள கூட்டிப்போவாங்க அந்த பிஞ்சுக் குழந்தைகள் பற்றி மனைவி சொன்னது மனதில் தைத்தது.

நாங்கள் குடியிருந்தசூழல் மூவினம் கலந்து வாழ்ந்த ஒரு இறுக்கமான சூழல். அயல் வீட்டினருடன் சுமூகமான உறவு இல்லாலிட்டாலும் பகையுணர்ச்சியும் இடைஞ்சலும் இல்லாத மனிதர்கள். தானுண்டுதான் வேலையுண்டு என ஆலாய் பறக்கும் மனிதர்கள்.

எமக்கு அடுத்த தெருவில் மனைவியின் தோழி தன் கணவருடன் குடியிருந்தாள். இதில் ஆச்சர்யம் நாங்கள் வந்து ஐந்து மாதங்களின் பின்னர்தான் அவள் வீட்டு விலாசம் கிடைத்தது. பின்பு இருவரும் அங்குமிங்கும் நடைபோடத் தொடங்கி விட்டார்கள். பழைய சிநேகிதம் புதிய இடம் நட்பின் அவசியத்தை அதிகம் வலியுறுத்தியது. நேற்றுத் தான் கணவருடன் வந்து குழந்தையையும்இ அவள் தோழியையும் பார்த்து விட்டுப்போனாள்.

மாமியின் நெருக்கமான உரையாடலின் ஊடே மெல்லிய அழுகை ஊடறுத்து இவன் காதை நிறைத்தது. 

பிரசவவலி கண்ட அர்த்தராத்திரியில்இவீட்டு உரிமையாளரின் மனைவிதான் கூட உதவிக்குவந்தா சிங்கள மொழி தெரியாத இவர்களுக்கு அவவின் வருகை ஒரு கடாட்சம் போல் ஆகிவிட்டது. அர்த்த ராத்திரியில் ஆட்டோ பிடித்து மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்த்தது முதல் எல்லாப்பணிகளையும் அவவே கூடநின்று செய்தா. மாமி விம்மலினூடே இவ்வுதவிகளை நினைவுபடுத்திஇ கடைசி வரை உங்கள மறக்க முடியாது என சிணுங்கத்தொடங்கினார்.

பஞ்சுக்குவியலாய் குழந்தை துணியால் சுற்றப்பட்டு மனைவியின் கையிலிருந்தது. அவனை இழுத்து வைத்து இருவீட்டாரும் கொஞ்சிக்கொஞ்சி சிரித்துக்கொண்டிருந்தனர். 

இவனுக்கும் தர்ம சங்கடமாயிற்று. இன்னும் கொஞ்சகாலம் தங்கியிருக்கலாமே என்ற உணர்வின் உந்தல் இந்தப் பாசமழையில் பீறிட்டுக்கிளம்பியது. 

உறவுகள் மனிதநேயம் எல்லைகளையும்இ பிரதேசங்களையும் கடந்து மனங்களில் ஊடுருவிப் பாயும் கடவுளின் அற்புத ஜாலம் குறித்து இவன் ஆச்சர்யத்துடன் பிரமித்து நின்றான். எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து இவர்களைப் பிணைத்து பிரியும் தருணம் ஒரு துளி நீர்க்கசிய வைத்த அற்புதம்தான் களங்கமற்ற உறவின் ஆதாரமாகும்.

அன்ரியின் மருமகன் மாடிப்படி விளக்கு எரியும் ஒளியில் நனைந்தபடி இறங்கிவந்து கை குலுக்கினார். அடிக்கடி டெலிபோன் எடுங்கள் என்றார். அவரைப் பற்றிய பின்னணிக் கனவுகள் ஒரு சினிமாவின் பின்புலக் காட்சியாய் இவன் மனதில் விரியத் தொடங்கின.பழகுவதற்கும் பார்ப்பதற்கும் வசீகரமான மனிதர். அவரின் ஆங்கில மொழித்திறமை எதிரில் நின்று பேசுபவரைக் கூட திணறடிக்கும்.

இவர்களது “அனெக்ஸி”ன் பொதுக் கதவினை ஒட்டினாற் போல்தான் அவர்களின் பிரதான வரவேற்பு மண்டபம் அமைந்திருந்தது. அயலவரின் அமைதிபற்றி அவருக்கு கிஞ்சித்தும் கவலை கிடையாது. ராத்திரி இரண்டரை அல்லது மூன்று மணிக்கு வீடு திரும்புவார். கதவு தட்டும் ஓசையால் நான்கு வீடுகள் தூக்கம் கலைந்து முணுமுணுக்கும். குறிப்பாக எமது நிலையோ சொல்லிமாளாது. இதயத்தில் அடிப்பது போல் படீர்படீரென விடாமல் தட்டிக் கொண்டே இருப்பார். அவர் மனைவியோ அன்ரியோஇ வந்து கதவு திறக்கும் ஓசையைத் தொடர்ந்து அவரின் வசைமாறி காதைஅடைக்கும்.

அருகில் தூங்கும் மனைவி விழிப்புற்று நச்சரிப்பாள். “என்னப்பா இந்த மனுஷன் நேரம் கெட்டு வாரதும் சத்தம் போடுறதும்இ அடுத்தவங்களப் பற்றி கவைலயே இல்லாத ஜன்மம் அவளின் எரிச்சல் அடங்குவதற்குள் அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பமாகிவிடும்.

“பரத்தட்டுவானிஇ காது செவிடாடி பரவேச நான் எவ்வளவு நேரமா தட்டுறன்” அன்ரியைத் திட்டுவார். இப்படி அகால நேரத்தில் அவர் திட்டுவதைக் கேட்க மனசு அலறித் துடிக்கும். மனைவிக்கும் விழிகளில் நீர்துளிக்கும். சற்றைக்கெல்லாம் அவர்மனைவியும் சேர்ந்து அன்ரியை திட்டுவார்கள். காதில் ஒலி வாங்கிவைத்து பேசுவது போல் எம்மை அந்தநாசகாரச் சொற்கள் பிய்த்தெடுக்கும்.

“நாங்க தாரத திண்ணுட்டு மரியாதயா இருடி இல்லாட்டிபோ செத்து தொலை” அவருடன் அன்ரியின் மகளும் சேர்ந்து அவவை அவமானப்படுத்துவதுதான் ஜீரணிக்க முடியாத வேதனையைத் தந்தது.

“என்ன பிரதர் எனிதிங் டெல்மீ” திடீரென அவர் இவன் பின்னணிக் கனவைக் கலைத்தார். “நத்திங்பிரதர்” என்றவன் சிநேகிதமாக சிரித்து வைத்தான். இன்னும் பிரியா விடை விசும்பல்கள் ஓயவில்லை. அன்ரி மனைவியின் முகத்தை தடவியபடி ஏதேதோ கூறிக்கொண்டிருந்தா.

“மறுகா கொழும்புக்கு வந்தா கண்டிப்பா வரனும் பிள்ளய கூட்டிட்டு வாங்க” இன்னும் எதுவெதுவோ ஓர் ஆவல் தவிப்பு எல்லாமே சொற்களாய் விழுந்தன. அவவுக்கு இருந்த ஒரே ஆறுதல் இவன் மனைவிதான். அவளின் பிரிவு அவவை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளியதை இவனால் சட்டென உணரமுடிந்தது.

மருமகனும் மகளும் சேர்ந்து வசைபாடி முடிய பாத்றூமில் அன்ரியின் அழுகைச் சத்தம் நிறைந்திருக்கும். அவர்களின் பாத்றூமுக்கு அருகில்தான் இவர்களின் வீட்டுக்கு வரும்பின் கதவு இருந்தது. தேம்பித் தேம்பி அன்ரி தண்ணீரை முகத்தில் வாரியிறைப்பது தெளிவாக கேட்கும். இவன் மனைவி எழுந்து உட்கார்நது கொள்வாள். தினம் நடக்கும் இந்தச் சம்பவங்கள் அவளை வெகுவாக இம்சைப்படுத்தின.

அன்ரியின் ஓவென்ற கதறல் ஒலி கீழ் வீட்டாரையும் உசுப்பிவிடும். சாமத்தில் எழுந்துவந்து அவவின் மகளை அடக்கமாக ஏசிவிட்டுப் போவார்கள். அயல் வீட்டு சிங்களவர்கள் இதுபற்றி பொலிசில் முறைப்பாடு செய்வதாக கூறிப்பார்த்தார்கள். 

இவன் காலையில் அலுவலகம் கிளம்புகையில் அன்ரி கைநிறைய சாமான் பொதியுடன் வீதியில் எதிர்ப்படுவா. நேற்றிரவுச் சம்பவத்தை நினைவுபடுத்தும் அவவின் கலைந்த தலை முடியும் சிவந்த விழிகளும் பார்க்க பரிதாபமாக இருக்கும். ஒரு இலட்சம் அவமானம் கலந்த சிரிப்பு அதில் வேதனை இழையோடும். எல்லாவற்றையும் புதைத்தபடி “என்னா ஒபிசுக்கா” என்பா. அவவின் விழிகளில் பாசத்திற்கும் ஆதரவிற்கு மான கெஞ்சல் தவித்துக் கொண்டிருக்கும்.

வேனுக்குள் எல்லாச் சாமான்களையும் அடைத்தாயிற்று சில பொருட்கள் அடைய முடியாமல் வீதியில் விரவிக்கிடந்தன. அவை வேனில் மேல் பகுதிக்கென ஒதுக்கப்பட்டதாக வேலையாள் சொன்னான்.

“சரி நேரம்போகுது ஏறுங்கோ என இவன் அவசரப்படுத்தினான். இப்போது அன்ரியின் கையில் குழந்தை இருந்தது.” “மனைவியைப் போல பபா சிவப்பு”  என அடிக்கடி சொல்லிக் கொள்ளும் அன்ரி பவ்யமாக குழந்தையை அணைத்தபடி வெறித்துக் கொண்டிருந்தா.

அன்ரி மூன்று பிள்ளைகளின் தாய். ஒரு ஆண் இரு பெண்கள். அமெரிக்காவில் 15 வருடம் கணவருடன் வாழ்க்கை. ஆடம்பரமாக வாழ்ந்தவர்கள். கணவரின் மரணத்துடன் அமெரிக்காவுக்கு “குட்பை” சொல்லிவிட்டு இலங்கைக்கு திரும்பி விட்டார்கள். அந்திம காலத்தில் ஆண் துணையற்று பிள்ளைகளை வளர்த்து வாழ்க்கையும் அமைத்துக் கொடுத்தபின்பு அந்த பிள்ளைகளே தாயை சுமையாகவும் தொல்லையாகவும் நடாத்தும் அவலம்

யாருக்கும் நேரக்கூடாது இவன்அடிக்கடி மனைவியிடம் இதைக் கூறிக்கொள்வான். 

அன்ரி பற்றிய அனுதாப அலை அந்தப்பேட்டையில் எல்லோர் மனதிலும் கவிழ்ந்திருந்தது. இது அளவுக்கும் தெரியும். இரவுச் சண்டை முடிந்த காலைஇ இவன் மனைவியிடம் வந்துஇ முறையிடுவாஇ “மகள் எனக்கு வெளியில போக முடியல்ல வெக்கமா இருக்கு” இவள் ஆறுதல் படுத்துவாள். ஈற்றில் அன்ரி பிள்ளைகளை விட்டுக் கொடுக்காமல் பரிந்துபேசுவா  “சரி மவள் அவ அப்படித்தான் முன் கோபக்காரி. இரவில எசுவாஇ வெள்ளென சரியாப் போயிரும்” என்பா. அன்ரியின் பிரதி பிம்பங்கள் எப்போதும் அவவை எமக்குள் ஓர் அநாதைபோல வேதனையுடன் நோக்கவைத்தன.

எல்லோரும் வேனுக்குள் ஏறியாயிற்று இவன் இறுதியாக விடை பெற்றான். ஏக குரலில் “அல்லாட காவல்” என்ற ஆசிர்வாதங்கள்இ பனி விசிறும் இரவின் குளிர்மையை தாண்டி மனசில் சில்லிட்டன. அன்ரி குஞ்சை பறிகொடுத்த கோழியாய் மிகுந்த ஆதங்கத்துடன்  வேனை சுற்றியபடி வந்து ஏதோ கூறினா. 

எங்கள் மனங்களின் உக்கிரம் தெரியாமல் வேன் வேகம் பிடித்தது. ஒரு திக்கற்ற பாலைவனத்தில் அன்ரி மட்டும் நின்று தவிப்பதைபோல் இவன் விழிகளில் அவவின் உருவம் மட்டும் ஆரோகணித்துக்கொண்டிருந்தது.

நன்றி- பிரவாகம்