Monday 29 July 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்.

                                                               தொடர்- 44

மலை நாட்டின் பல்கும்புறயில் பணியிலிருந்த போது அயல் கிராமமான கலகெதரயில் உனைஸ் என்ற நண்பர் இருந்தார். ‘கலகெதர உனைஸ்’ என்ற பெயரில் அப்போது எழுதிக் கொண்டிருப்பார்.

ஒரு நாள் மாலையில் போன் பண்ணினார். அவருடன் பேராதனைப்பல்கலைழகத்தில் கருத்தரங்கிற்கு சென்ற நண்பர் இளைய அப்துல்லாஹ்வும் (எம்.என்.அனஸ்) தற்போது இலண்டன் தீபம் தொலைக்காட்சியில் பணி புரிகின்றார். அவரும் போனில் கதைத்தார்.

 எழுத்தாளர்என்று  உன்னுடைய பெயரைச்சொல்லி ஒருவர் அறிமுகமாகி கருத்தரங்கில் கலந்து கொண்டிருக்கின்றார்.கேட்டால் மழுப்புகின்றார்.என்ன செய்ய என்று கேட்டார்கள். ‘விடுங்கப்பா அவர்ர ஆசை அதுவானா சொல்லிட்டுப் போகட்டுமே’ என்றேன். ஆனால் நண்பர்கள் கேட்கவில்லை என்பதை பின்பு தெரிந்து கொண்டேன்.

சில நேரங்களில் நான் எழுதிய கவிதைகளை என்னிடமே தான் எழுதியதாகப் படித்துக் காட்டுவார்கள்.சிரித்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருப்பேன்.

கண்டியில் இருக்கும் போது இப்படியொரு சுவாரஸ்யம் வாய்த்தது.பணி புரிந்த இடத்தில் எனக்குரிய அறையில் தனியாக தூங்குவதில்லை.கூடவே நண்பர்கள் இருவரோ அல்லது அதற்கு மேல் மூவரோ வந்து விடுவார்கள்.குறைந்தது ஒருவராவது வந்துவிடுவர்.

கண்டி குளிருக்கு பிளேன்றீயும், கோப்பியும் குடித்துக் குடித்து கதைத்தபடி இருப்போம்.எத்தனை மணிக்கு தூங்கினாலும் அதான் கேட்டதும் எழும்பி விடுவோம்
.
ஓர் இரவு ஒருவர்தான் தூங்குவதற்கு வந்தார்.நான் கட்டிலை கொடுத்தும் ‘இல்ல நீங்க படுங்க’ என்று விட்டு கட்டிலுக்கு அருகில் தரையில் படுத்துக்கொண்டு கதைத்தபடி இருந்தார்.
‘சேர் நான் ஒரு கவிதை எழுதியிருக்கின்றேன்.அதப்படிக்கிறன் கேளுங்க’ என்றார்.
‘கவிதை எல்லாம் எழுதுவிங்களா ம்; படிங்க’ என்றேன். நான் கவிதை எழுதுபவன் என்றோ கதை எழுதுபவன் என்றோ போகுமிடமெல்லாம் காட்டிக்கொள்வதில்லை.அது என்றைக்கும் எனக்கு உவப்பான  விடயமுமல்ல.

அவர் கவிதை படிக்கப் படிக்க எனக்கு திகைப்பும்,சிரிப்பும்.
சில மாதங்களுக்கு முன் தினமுரசில் நான் எழுதி பிரசுரமான பிரிவின் வலியையும் நட்பின் யாசிப்பையும்  வேண்டி நிற்கும் 
கவிதை.

அந்தக்காலத்தில் தினமுரசில்தான் அதிகமாக எழுதி வந்தேன். வாரம் ஒருமுறை கவிதையோ அல்லது சிறுகதையோ வந்து விடும். தொழில் நிமித்தம் அடிக்கடி ஊர்களை மாற்றிக்கொள்ளவேண்டி ஏற்படும். செல்லும் கிராமங்களிலெல்லாம் கதைக்கான ‘கருக்கட்டி’ விடும்.

நண்பர் பௌசர் போன் பண்ணும்போது கேட்பார். இப்ப நீங்க இந்த ஊருலதானே ?  கத படிச்சன் என்பார்!.

நண்பர் கவிதையை வாசித்து முடித்ததும் ‘எப்படி சேர் கவிதை’ என்றார். ‘ம் நல்லா இருக்கு’ என்றேன்.

‘இத நம்மாளுக்கு எழுதிக்கொடுத்திட்டன் சேர் நாளக்கி ‘வேர்க்அவுட்’; ஆகும்.’ என்றார். அவருடைய தோழியின் நட்பு நமது கவிதையால் தொடரப்போகிறது.அதைப்பிரிப்பானேன் மனசுக்குள் சின்னதாய் ஒரு மின்னல் வெட்டிப்போனது.

‘உங்க ஆளு கவிதையெல்லாம் படிப்பாங்களா? என்றேன். 
‘பேப்பர்லெல்லாம் படிக்கமாட்டா சேர்.புத்தகம் படிப்பா?

‘அப்படியா நீங்க தப்பிட்டிங்க’ என்றேன். ‘என்ன சொல்றீங்க?’ அவர் குரலில் பதற்றம் தொற்றிக்கொண்டது. அதை நீடிக்க நான் விரும்பவில்லை. 

பிறகென்ன இந்தக்கவிதயால உங்க எண்ணம் வேர்க் அவுட் ஆகும் ,தோழரே நிம்மதியா படுங்க’ என்றேன்.

 நெடு நேரமாக ‘பே’ என்று முழித்துக்கொண்டிருந்தார்.எத்தனை மணிக்கு தூங்கினாரோ அறியேன்.

நமது கவிதையை அச்சொட்டாக பாடமிட்டு நம்மிடமே ஒப்புவிக்கும் போது நமக்கு ஏற்படுவது கர்வமா அல்லது மகிழ்ச்சியா என்று புரியவில்லை. ஆனால் நெஞ்சுக்குள் ஒரு புகைமூட்டம் இன்பமாய் பரவத்தொடங்கியது என்னவோ நிஜம்.

பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என்பதற்கான சிலர் எப்படியெல்லாம் திருடி சொந்தச்சரக்கு போல விற்றுவிடுகிறார்கள் என்பதை நினைக்கையில் ஆச்சரியமாக உள்ளது. நிஜவாழ்விலும் திருட்டு,இலக்கியத்திலும் திருட்டு. இப்படி திருடி பிரபல்யம் பெற்ற பல எழுத்தாளர்களை நான் பார்த்துக்கொண்டு வருகின்றேன்.

திருடியது பிடிபட்டவுடன் நான் அதில் எடுக்கவில்லை இதில் எடுத்தேன் என்ற அறிக்கை கூட விடுக்கின்றார்கள். பன்றி இறைச்சியை சாப்பிடும் போதும் நான் ‘பிஸ்மி’தானே சொன்னேன் என்பது போல் இருக்கின்றது அவர்களுடைய வாதங்கள்.

 திருட்டு இலக்கியம் நீண்ட காலத்திற்கு நீடித்து நிற்பதில்லை.சில திருடர்களை இனங்காட்டியிருக்கினறோம். சில திருடர்களை போனால் போகட்டும் போடா என்று விட்டு வைத்திருக்கின்றோம். அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு கிடக்கின்றது என்ற கற்பனையில் பால் குடிக்கும் கள்ளப்பூனைகள்.

சில இலக்கியத்திருடர்களும் கொலைகாரர்களும் இன்றைய தமிழ் இலக்கிய  உலகில் முடி சூடா மன்னர்களாக வலம் வருவது ஆசியாவின் ஆச்சரியங்களில் ஒன்று என்பதை தவிர வேறென்ன சொல்ல முடியும்?

                                                                                                                   ஊஞ்சல் இன்னும் ஆடும்....

Sunday 21 July 2013

நபீலின் ‘காலமில்லாக் காலம்’

னிதனுக்குள்ளிலிருந்து  எழும் அக அழைப்பே கவிதை’என்ற நெரூதாவின் வரிகள் நபீலின் கவிதைகளை படித்து முடித்த  போது தவிர்க்க முடியாமல் நெஞ்சில் கிளர்ந்தது.

கவிதை எழுதுவது என்பது எல்லோருக்கும் வலாயப்பட்ட  கலையல்ல. அதுவும் கவிதையை வசியம் செய்து தான் விரும்பிய வண்ணம் செதுக்குவதும்,அதற்கு அளவான சட்டை போட்டு  அழகு பார்ப்பதும் சாமாண்ய விடயமல்ல.

கவிதை ஒரு சிலருக்குத்தான் இப்படி தொண்டு செய்து காலை நக்கிக்கொண்டு கிடக்கும்.அது நபீலுக்கு வாய்த்திருக்கிறது.

இந்தியாவில் இருந்த போது ரிச்சர்ட் பார்ட்டன் குரங்குகளின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி குரங்குகளின் பின்னால் அலைந்து திரிந்தார். முடிவில் 18 ஒலிக்குறிப்புகளை அவதானித்து பதிவு செய்தார்.அந்த ஒலிகளை அவர் எழுப்பும் போது குரங்குகள் அதற்கு மறு மொழி பகர்ந்ததாக பட்டர்ன் தனது பயணக்குறிப்பில் குறிப்பிடுகின்றார்.

நபீலுக்கும் உயிரினங்களின் மொழி புரிந்திருக்கிறது.அல்லது நபீலின் மொழியை அவைகள் புரிந்து கொண்டு நட்புடன் நெருங்கியிருக்கின்றன என்பதற்கு காலமில்லாக்காலத்தில் பொதிந்திருக்கும் சில கவிதைகள் சாட்சி.
நபீலின் அனேக கவிதைகள் அழகியலை வரமாகப்பெற்ற மொழி நடை கொண்டது.எதிர்பாராத திருப்பத்தில் நிகழக்காத்திருக்கும் ஓர் அதிசயம்போல் வியப்பின் முனைக்கு நம்மை இட்டுச்சென்று அந்தரப்படவைக்கும் இயல்பு கொண்டது.

அவர் கையாளும் மொழியின் மரபும், தொன்மங்களை அவாவி நிற்கும் விந்தையும் அலாதி. முஸ்லிம் தேசத்திற்கே உரிய மொழி நடையும்,கூர்மையும் அவர் கவிதைகளில் ஊடுபாவாக நம்மை இரசிக்க வைக்கின்றன.

இயற்கையின் கண்ணாடியாக நின்று பேசும் நபீலின் கவிதைகள் மடியில் கிடத்தி தலை கோதுகையில் கிறங்கி மூடும் பூனைக்குட்டியின் கண்களைப்போல் ஆசுவாசம் கொள்கிறது.அது நம்மை வேறோர் தளத்திற்கு அழைத்துச்செல்கிறது.

78 கவிதைகளும் அதிகம் பேசுவது தன்னிலையில் நின்றுதான்..
நபீலுடன் எல்லா உயிரினங்களும் பேதமின்றிப்பேசுகின்றன. அரூபங்களும்,உருவங்களும் பேசுகின்றன.அவற்றின் இருப்புக்குறித்து நபீல் நம்மை மிரமிக்க வைக்கின்றார்.
அவர் குருவியோடு இப்படிப்பேசுகின்றார்.

பிடித்துப்பார்க்க ஆசைதான் குருவி உன்
ரோமங்கள் ஒவ்வென்றாய்...
முகமெங்கும் கறுப்படித்து
குதப்புறத்தில் வெள்ளைகுத்தி
பாக்களவு உடல் வளர்த்து
இறக்கை கோதுகிறாய்
உலகத்தோடு உன்னையும் ஒரு வீராங்கணையாக
அர்த்தங்கொள்ளவா பார்க்கிறாய்   பக் : 16

பல்வேறு அர்த்தங்களை தேடிச்செல்லும் தர்க்கம் பொதிந்தது நபீலின் கவிதைகள்.உலகில் உயிரற்ற  எதுமில்லை என்ற உள்ளுணர்வை அவர் இலகுவாக பதித்து விடுகிறார்.

அவர் காற்றை இப்படி கோபித்துக்கொள்கிறார்.
வெளிச்சமணைந்து விடிந்த உலகமாய்
முதுகொடிந்து பொறுக்கிய
என் கடதாசிக்கட்டுகளை
பறவைகளாக மாற்றி விடுகிறாய்
சற்று முன் என் கதவைச்சாத்திய புயலே!  பக் : 30

கூனிப்பெத்தா ஒரு கதை போல் விரியும் சித்திரம்.முதுசொம்களின் மனவோட்டங்களை கவிதைக்குள் நபீல் உயிர்ப்பித்திருப்பது திறமைதான்.
குட்டான் பெட்டி, புழுங்கள் அரிசி போன்ற கவிதைகள் வறுமையின் உயிரற்ற சித்திரங்கள்.

அதிகாரவர்கத்தின் அராஜரகங்களையும்,மன அவசத்தையும் நபீல் இப்படி பாடுகிறார்.

ஊமையாகிக்கத்துகிறோம் ஃசீறி எழுந்த போது கால்கள் பின்னின.
இலை விழுந்து முதுகெலும்பு உடைந்தது.   ‘மண் புடவை ; பக்: 76
 இறந்த பின்னும் வாழ விடாத கொடியவர்களின் அதர்மங்களை நினைத்து நபீல் காட்டமாக விம்மி வெடிக்கிறார்
….சடலமே நீ
மீளவும் முளைப்பாய் என்றா தோண்டி எறியப்பட்டாய் ? பக் : 76

வாழ்வதற்கு ஒரு துண்டு நிலத்தையேனும் விட்டுவைக்காத பாசிசம்,புதைப்பதற்குள்ள உரிமையையும் பறித்தெடுத்து விரட்டியதை மனசாட்சியுள்ளவரால் சகித்துக்கொள்ள முடியாது. நபீலும் நியாயங்களின் மனசாட்சியாய் விம்மிச்சலிக்கின்றார்.

இந்த சமூகத்தின் கையகலாத்தனம் அவர் வார்த்தைகளில் இப்படிக்கொப்பளித்துத்தெறிக்கிறது.

‘…அன்றிரவு விரட்டியதில் மிச்சம் வைக்க முடியவில்லை
அவசரத்திற்கென்று உடுத்திக்கொள்ள
மண் ஃ புடவையாகி மசிந்து கிடக்கிறது’ 

அவர் கவிதைகள் பறவையாகி,கடலாகி,நீராகி,பனியாகி,காற்றாகி, வெயிலாகி, மலர்களாகி, மரங்களாகி, வனமாகி, பூச்சியாகி, பட்டாம்பூச்சியாகி, தும்பியாகி,நம்மை அதனதன் பின்னால் ஓடிஓடி அலையவைக்கின்றன.

கடலின் மேல் அவருக்குள்ள பாந்தமும், பக்தியும், அச்சமும் அவற்றின் இயல்புடன் கவிதைகளில் வீசியடிக்கின்றன. அது வாசகனையும் ஆழிச்சுழியாய் உள்ளிழுத்து சுழற்றிவிடுகிறது.

ஓங்கரிக்கும் கடல்,கடலிறைத்த சொற்கள்,அலையும் பட்டுக்கடல்,கடலில் சுழி ஓடும் நம் சந்திப்பு போன்ற தலைப்புக்களும் சில கவிதைகளில் கடல் பற்றிய புனைவும் கடலின் மீதான காதலை சொல்வன.

‘சிறகு உதிர்ந்த பகலில்’.…
நரி ஊளையிடும் மயானமாகி
பற்றி எரிகிறது கடல்….  பக்: 78


‘தூரிகை வர்ணத்தில்.’.
முற்றுமாய் என்
சிநேகிதங்களைத்தேடுகின்ற
கடற்கரை வெளிச்சம் மறைகிறது. பக்: 79

‘இதற்கு முன் பார்த்ததே இல்லை நானி’ல்

இதோ கிடக்கிறது ஒரு கயிறு
உன் கூந்தலை அள்ளி முடித்துக்கொள் கடலே…. பக்: 98

‘அலையும் பட்டுக்கடலி’ல்
காற்றெழுந்தால் அலையும்  பட்டுக்கடல் ஓசை  செவிகளில் எரிந்து கொண்டு நுழைகிறது.. பக்: 95

 ‘கருமுகிலை விழுங்கிய பறவைகளி’ல்
காற்று விசையில் முகம் உலர்த்தி
பறவைகள் ஃ கருமுகிலை விழுங்கிப்பறக்கின்றன
கரையைக்கடித்துரைக்கிறது கடல்   பக்: 91

‘பித்தத்’தில்
குழம்பித்திரிகின்றன புள்ளினம்
இன்னும் ஒரு கல் விழுந்தால்
தளும்பி விடும் கடல்  பக்: 75

‘வெட்டு முகத்தி’ல்
கடல் மயங்கிய வேளை  கைதான மீன் குஞ்சின்
சலசலப்புக்கேட்கும்.. பக்: 62   

‘வேர்வை’யில்
அரும்பும் வேர்வையில் கிறங்கி
பொங்குகிறது ஒரு மகா கடல் உள்ளே.. பக்: 57

‘மூடிய நிர்வாண’த்தில்…
சோப்புக்கட்டியாகி மாறி
தேய்த்துக்கழுகிறது கடல் .. பக்: 49

‘வானமாகி நானி’ல்…
இன்னும் ஒரு படி குனிந்தது வானம்  கடலைக்குடித்து தாகம் தீர்த்து.. பக்: 43

‘உயிர்ப்புக் கற்களி’ல்…
ததும்பும் கடல் பறவை
அதன் அலகில் துலங்கிற்று   ஈரத்துயர் கசிந்த என் பாடல்  பக்: 40

கடலிறைத்த சொற்களில்…
….பட்டு மேனி கடலிறைத்த சொற்கள்  காற்றடைந்து அந்தரத்தில் மிதக்கின்றேன். பக்: 39

‘தெற்குத்திசை’யில்
…சிற்றலைகளில் புரண்டு விளையாடும்   படலங்களே விரிக 
தென்திசையில் உடல் வளைந்து   பாம்பு போல எழுக… பக்: 34

‘மீன் மாலை’யில்
பருவ முதிர்ச்சியடைந்த கடல் 
 கரைக்கன்னியின் இதழ்கள் கிள்ளும் ஓர் அந்தி மாலை.. பக்: 26

‘ஓங்கரிக்கும் கடலி’ல்
..உன் நிராகரிப்பின் வடுக்கள் செறிக்காமலா
ஓங்கரிக்கிறது கடல்… பக்: 22

‘உச்சத்தி’ல்
தூரத்தை நெருடலுடன் கடந்து  எதிரே விரிந்து
கிடக்கும் அந்த வங்கக்கடல்…  பக்: 19


‘நிலாப்பாலி’ல்
கூந்தலுக்குள்ளே இருட்டி மழை பெய்த
மேகம் கடலோடு புரண்டு படுக்கிறது. பக்: 52

கடல் ஓர் அதிசயம்.அதிசயங்களின் மகா அதிசயம்.விந்தையான பிரபஞ்சத்தின் மர்ம முடிச்சுக்களை தன்னகத்தே வைத்திருந்து மிரமிக்க வைப்பது கடலின் இயல்பு.குமுறுவதும், சீறுவதும் பின் அடங்கிப்போவதும் அதன் பிறவிக்குணம்.

அந்தக்கடலின் ஒவ்வொரு அசைவையும் வொவ்வேறு தருணங்களில் நுணுக்கமாக கையாண்டிருக்கும் நபீல் கடலின் கவிஞன்.

காலச்சுழியில் சில கவிதைகள் அடித்துச் செல்லப்பட்டாலும் பெரும்பாலான கவிதைகள் அலைகளைப்போல் சாசுவதமாய் வாழும் என்பது வாஸ்தவம். இது போதும் நபீலை ஒரு கவிஞனாக வாழ வைக்க.

நபீல் சோலைக்கிளியின் அணைப்பில் வளர்ந்த கவிஞர்.அவரின் தாக்கம் இவர் கவிதைகளையும் தொட்டுப்பார்த்திருக்கின்றது ஒன்றும் மிகையானதும் ஆச்சர்யமானதுமல்ல. நபீலின் கவிதைகள் குறித்து சோலைக்கிளி 

‘…ஒவ்வொரு கவிதையிலும் அரைவாசிப்பாகத்திலாவது கவித்துவம் பொங்கித்தெரிகின்ற நபீலுடைய கவிதைகள் குறைந்தது ஒவ்வொரு மிளகு மாதிரியாவது 'ஆகி’ வந்திருக்கிறது.

வாசித்து முடித்ததும் கடித்தால் உறைப்பும் காரமுமாக இருக்கின்ற மிளகுகளைப்போல வாழுகின்றன. இந்த மிளகுத்தகுதியாவது ஒரு கவிதைக்கு இருந்தாலே போதும்”



25.09.2010







பெண்ணியாவின் 'என் கவிதைக்கு எதிர்த்தல் என்று பெயர் வை '


லஸ்தீன கவி மஹ்மூத் தர்வீசின் கவிதைகளில் மிகைத்து நிற்கும் மூர்க்கம் போல் பெண்ணியாவின் கவிதைத்தொகுதியின் பெயர் அதிர வைக்கின்றது.

1994லிருந்து எழுதத்தொடங்கியவர் பெண்ணியா. சரிநிகரில் அவர் கவிதைகளை படித்த முன் அனுபவம். அதிகம் எழுதாவிட்டாலும் குறித்த காலப்பகுதியில் சில வீச்சான கவிதைகளை எழுதியவர்.

கவிதையின் மொழி ஆளுகை ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே முரண்பட்ட உணர்வுகளால் தனித்து நிற்கிறது. பெண் மொழி என சுயமாய் அடையாளப்படுத்தலுக்கும் இஃதோர் காரணமெனில் மிமையல்ல. 

ஆணின் மொழிக்குள் சிக்குப்படாத பல சூக்கும வலிகளையும், மௌன விசும்பல்களையும் சாசுவதப்படுத்தும் வசீகரம் கொண்டது பெண் மொழி. இரு பாலாருக்குமிடையான பொதுப்பண்புகள் உணர்வுகள் இங்கு விதி விலக்கு.
பெண்ணியாவின் கவிதைகளும் பெண் மனம் சார்ந்த பொதுக்குரலினை பிரதிபலிக்கின்றது.

பெண்களின் உணர்வு மானசீக அந்தரங்க சிக்கல்கள் குறித்து பெண்ணியா அதிக கவிதைகளை எழுதியிருக்கின்றார்.

நேசம் அல்லது நெல்லி மரம்,மாதாராய் பிறந்திட,கல்,வெறுமை,உன் நினைவு,மழை நீர் கண்ணீர்,உதிரும் இலைக்கனவு,ஓர் வானமும் ஓர் அருவமும் போன்ற பல கவிதைகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

பெண்களின் பிரபஞ்சம் தனித்து சஞ்சாரம் செய்யும் சந்தடிகளற்ற மௌனத்துள் புதைந்து போயுள்ள தருணங்களில் கவிதைகள் மூலம் தன் உரிமைகளை நிலை நிறுத்தவும் அதற்கான போராட்டத்தை முன்னனெடுக்குவுமான சமரில் இறங்குவதுண்டு.

பெண்ணியாவும் இவ்வலயமைப்பில் இலகுவாக இணைந்து கொள்கின்றார்.அவர் எதிர் கொண்ட ஆண்களின் முரண்பட்ட முகங்களும்,அடக்குமுறைகளும் பெண்ணியாவின் குரலினிடை வெடித்து வந்திருக்கின்றது.

ஓரு கால கட்டத்தில் சுதந்திரமாக இயங்கும் பெண் கைவிலங்கிடப்பட்டவளாக முடக்கப்படுவதன் மூர்க்கத்தை எதிர்த்து பெண்ணியா ஓர்மத்துடன் குரல் கொடுத்திருக்கின்றார்.

யார் முன்னும்பணிதலின்றி 
 எனது உணர்வுகளோடும் அவாக்களோடும் 
எவ்வகை வாழ்வெனப்புரியாத இது குழப்பமிகு வாழ்வேதாயினும்
வாழ்வேன் ....    வாழ்வேன் ....   வாழ்வேன் .

என்ற சூளுரைத்தலில் பெண்ணியாவின் அஞ்சாமை துலங்கி நிற்கிறது.
பெண்களுக்கெதிரான வன்முறைகள், ஆணாதிக்க அடக்குமுறைகள், கருத்துத்திணிப்புக்கள், அவர்களின் சுயதீனத்திற்கான சவால்கள் அனைத்தும் ஏகத்தில் எல்லை கடந்த மொழி கடந்த இனம் கடந்த அடிப்படை அம்சங்களாகும்.

மிக இலகுவாக ஆனால் ஓர்மத்துடன் இந்த போரட்டத்தில் பெண்ணியாவின் கவிதைகளும்  இணைந்து கொண்டதற்கு மேற்குறித்த காரணிகளே இசைவு எனில் மிகையல்ல.

பெண்ணியா கவிதைகளை வெளியிட ஊடறு பெண்கள் அமைப்பு (சுவிஸ்) பின்புலமாக உதவியிருப்பதுடன் மூன்றாவது மனிதன் பதிப்பகம் அச்சிட்டுள்ளது.சிறந்த வடிவமைப்பு,நேர்த்தியான அச்சு,கண்கவர் கருத்தாழமிக்க அட்டைப்படம் என பார்த்துப்பார்த்து செய்திருக்கின்றார்கள்.

தற்போது எழுத்துக்கு விடுப்பு விட்டிருக்கும் பெண்ணியா இத்தொகுதி மூலம் மீண்டும் முழு வீச்சுடன் கவிதைக்குள் நுழைய வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.

பொத்துவில் பைசாலின் ஆயிரத்தோராவது வேதனையின் காலை

“கவிதை என்றால் என்னவொன்று என்னிடம் கேட்டால் அது என்னவென்று எனக்குத்தெரியாது. கவிதை என்றால் என்ன என்பதை என்னிடம் கேட்காவிட்டால் கவிதை என்ன என்பது எனக்குத்தெரியும் ”
'கால்ட்ரிஜ்'

கவிதை  ஓர் அற்புத அனுப உணர்வு.விழிகளுக்கு வசியப்படாத நுண் உணர்வுகளைக்கண்டடைந்து ஆனந்திக்கும் இயல்பு கவிதைக்கு மட்டுமே வலாயப்பட்டது.தனி மனித வாழ்வில் புதைந்திருக்கும் துயரங்களையும் சமூகத்தின் ஆற்றொனா வலிகளையும் மனதின் அடியாழத்தில் இறாஞ்சி விட்டு துடிக்க வைக்கும் கலை கவிதைக்கே உண்டெனில் மிகையல்ல.

கவிதையை அதன் வேகத்தில் விட்டு விட வேண்டும். மலை முகட்டிலிருந்து விழும் அருவியின் ஆர்ப்பரிப்பை அடக்கினால் பரவசத்திற்கு பதில் அது மரண பயத்தையே தரும்.
கவிதை மன முகட்டிலிருந்து தாண்டவமாடும் தருணங்களில் கவிஞனின் அவஸ்தை சொற்களுக்குள் அடங்கா.அவன் நரம்புகளின் புடைப்பும்,மன அவசமும் கட்டுக்கடங்காமல் திமிறி வெடிக்கின்றது.

முயங்குதலின் உச்சத்தில் கண்களில் பீறிடும் இன்ப அதிர்வின் பரவச ஒளியை மொழிக்குள் இறக்கி வைக்கும் சிறந்த கவிதையில்  கவிஞன் அடைகின்றான்.

அத்தகைய சௌந்தர்ய தருணங்கள் பைசாலுக்கு  இயல்பாகவே வாய்த்திருக்கின்றது.பைசாலின் கவிதைகளின் உச்சமும்,மண்டியும் மனதின் கோடியில் சோகத்தை தூவுகின்றன.துயரம் இழப்பு இன்பத்திலும் ஒரு மின்னலைப்போல் வெட்டிச்செல்லும் வலி என  கவிதை முழுக்க மௌனமான தேம்பல் நம்மை வந்து கவ்விக்கொள்கின்றது.

என் விரிப்பு ஓய்ந்து பூரிக்கிறது
இன்னுமென்ன சொல்ல
வயல் வரம்புக்குள்
கோரி கட்டியிருக்கிறது வாழ்வின் மணி. (ஒரு கோப்பை மண்டி)

என்ற அங்கலாய்ப்பிலும்,

கத்தரித்தோட்ட இலைகளில் காது வைத்து
வாப்பாவின் வியர்வைத்துளிகளின்
ஓசை கேட்கும்.
(முட்டைக்கோதுக்கிராமமும் நான் எனும் கோடையும்)

என்ற ஏக்கத்திலும் பைசாலின் தனித்துவம் கவனம் பெறுகின்றது .வியர்வைத்துளிகளின் ஓசையைக்கேட்கும் அளவிற்கு அவரின் புலன் விழித்திருக்கின்றது.

பாட்டாளி மக்களின் வியர்வைத்துளிகளின் ஓசை திரண்டெழுந்தபோது ஆளும் வர்க்கம் ஒரு புரட்சியை எதிர் கொண்டது.அது சர்வதிகாரத்திற்கும் நிலபிரபுத்துவ அடிமைத்தனத்திற்கும் எதிரான சாவுமணியாக வியர்வைத்துளிகள் சக்தியுள்ளவையாக இருந்தன.

வறுமைமையோடு போராடும் ஒரு தொழிலாழியின் வியர்வையின் இதயத்துடிப்பை கவிஞன் என்ற சக்தியினால் துல்லியமாக உணரவும் பகிரவும் முடிகிறது.

வறுமையைக்கூட அற்;புதமாகவும் எள்ளலாகவும் சொல்லும் வல்லமை பைசாலுக்கு கைகூடியிருக்கின்றது.

என் தேசத்திற்குள் நீ திரி
அங்கு சன்னலுமில்லை கதவுமில்லை.
என்கிறபோது கவிதையின் அதரத்தில் வறுமையாய் ஒரு சிரிப்பு முகிழ்ந்து பின் உதிர்கிறது.

பைசாலின் கவிதைகளின் இன்னுமொரு முக்கிய அம்சம் அவர் பிரயோகிக்கும் மொழி.

மிக அந்தரங்கமானதும் ஆனால் துலாம்பரமானதுமான பயங்கரவாதத்தின் எத்தனங்களை தனக்கேயுரிய இயல்பு மொழியில் பைசால் பதிவு செய்திருக்கின்றார்.

பின்பு
என்னை ஏதும் கேள்
வீட்டில் துப்பாக்கியிருக்கும் இடத்தைச்சொல்கிறேன்.
உன்னைக்கண்டதும் வாலாட்டும்
நாய்க்குட்டியிருக்குமிடத்தை சொல்கிறேன். (நடுக்கம்)

அந்தரங்க நட்புடன் பழகியவர்கள் கையில் துப்பாக்கியுடன் பரிச்சயமானவர்களையே அழித்த வரலாறு நம்முடையது.கரைபடிந்த அவ்வரலாற்றுப்பக்கங்களை நிறைந்த வலியோடு புரட்டிப்பார்த்திருக்கின்றார் பைசால்.

காதலுக்குப்பின் என் அடையாளம்,பற்பசை உறை,உப்பேறிய ஆன்மா,நிறங்களின் சிறகுகள் பறவைகள், பலி,போன்ற கவிதைகளில் வெளிப்படும் அழுத்தமான அரசியல் வெறுமையும் அதன் பின்னணியில் இழையோடும் துரோகமும் ,துயரமும் நம்மை முழுமையாக ஆக்கிரமித்துக்கொள்கின்றன.

மாடு கட்டச்சென்ற
என் ஊர் ஒன்பது சகோதரர்களை
அறுத்து பெரிய பள்ளிவாயலில் குவித்தார்கள்
கத்தியின் காலம் கத்தியின் காலம்!
(உப்பேறிய ஆன்மா)

பைசால் வேதனையுடன் கத்தியின் துப்பாக்கியின் துரோக காலத்தை உருப்போடுகின்றார்.

என் பத்தினியே ! நீயும் எரிந்திருக்கலாமே
சுhம்பல் மேட்டுக்கு
மகனையும் கூட்டிக்கொண்டு வந்திருப்பேன்
உன் சாம்பலில் கால் பட
கொடுப்பனவு இல்லையெங்களுக்கு  ( ஒருத்தி)

என்கிற போது அபகரிக்கப்பட்ட ஓர் அப்பாவித்தாயின் பிரிவின் ஆற்றாமையால் ஓப்பாரி இடுகின்றது பைசாலின் கவிதைகள்.
இத்தொகுதியில் மிகுதமான கவிதைகள் காதலின் திவ்யத்தையும்,அது கைகூடாத தருணங்களுக்கான ஏக்கத்தையும் சுட்டும்  கவிதைகளாகும்.

பைசால் தன் சம காலத்துக்கவிஞர்களை விட மொழியை இயல்பாக பிரயோகிக்க கற்றிருக்கின்றார்.

மருதாணிப்புள்ளிகள்
அமர்ந்திருக்கும் உன் கரங்களில்
ஈச்சம் பழம் ஏந்திவா
சுவைத்து விட்டு
பள்ளிவாசல் சென்று நான் தொழ ( ஈத் முபாறக் மியுசிக்கல் கார்ட்)

அன்றைய தினத்தில்
எந்தன் புது ஆடை மணத்ததில்லை
உன்னை விட,
எந்த மிட்டாயும் இனித்ததில்லை
உன் பார்வைகளை விட

என்கிற போது பாசத்தின் மீதான அபரித வெளிப்பாடு துலங்குகின்றது.

மௌனத்தை ஆவேசமாய் உடைக்கப்பிரயத்தனமெடுக்கின்றார்.பெண்னின் மௌனம் இலேசில் உடைபடும் கண்ணாடியல்ல என்கிறது அவர் கவிதை.


ஏன் உன் வாய்க்குள்
மௌனத்தை சுருட்டி வைத்திருக்கிறாய்

ஒரு பானை மௌனம் குடித்துப்பிறந்தவள்.

சாதாரண மொழிதான். எனினும் சில கவிதைகள்  கிழக்கு மண்ணிற்குறிய நாட்டாரியலை நினைவுபடுத்துகின்றது. கிழக்கு மண்ணிற்குறிய தனித்துவமான சொற்களை கையாளுவதன் மூலமாகவும் பைசால் கவிதையில் புதிய பாய்ச்சலை நிகழ்த்த முனைந்திருக்கின்றார்.

எனினும் ஏக தளத்தில் சில கவிதைகளை சொல்ல வருவதன் மூலமாக வாசிப்பின் சுவையை சில தருணங்களில் அறுபட வைக்கின்றார்.
கவிதைகளுக்கான பின் புலத்தில் கரிசனைகாட்டிய அளவிற்கு கவிதை வெளிப்பாட்டு முறையில் இன்னும் அக்கறை செலுத்த வேண்டும்.

90க்குபின் முகிழ்ந்த கிழக்கின் இளைய தலைமுறையினர் சோலைக்கிளியின் சாயலின்றி கவிதை எழுதுவதென்பது சாத்தியமற்றது என்பதை நிரூபிக்குமாற்போல் பைசாலின் சில கவிதைகளில் சோலைக்கிளியின் தாக்கம் இருக்கின்றது.

எனினும் பிற்காலத்தில் பைசால் எழுதிய கவிதைகளில் அவர் தனித்துவம்  தெரிகிறது.சுய பரிசோதனையாக தனித்துவமிக்கவிதைகளையும்  தந்திருக்கின்றார்.

நள்ளிரவில் சிறுவன் கொக்குகளை உலர்த்துகின்றான்,நடுக்கம்,இனிக்கும் இயற்கை,உப்பேறிய ஆன்மா, போன்ற கவிதைகளை இதற்கு உதாரணமாய் குறிப்பிடலாம்.

“இலக்கு என்பது எப்போதும் தொடுவானம் போல் கைகள் தொட முடியாத தொலைவில் தெரிகின்றது.ஆனால் கண்களுக்கு மிக நெருக்கமாக இருக்கின்றது.பெரும் கவிஞர்கள் இந்த இலக்கை தொட்டு தழுவியிருக்கின்றார்கள்.உச்சம் கண்டு கொண்டாடியிருக்கின்றார்கள்.”

என அனார் தொகுதியின் பிற்குறிப்பில் குறிப்பிடுவதற்கொப்ப ஓர் இலக்கை மையப்படுத்தி பைசாலின் கவிதைகள் முன்னேறுகின்றன. என்பது அவரின் பின் நாட்களிலான கவிதைகளின் கண் விடுத்தல் காட்டுகின்றது.

ஓட்டு மொத்த கவிதைகளிலும் தேங்கி நிற்கும் வலி,வேதனை,துயரத்தில் புதைந்துள்ள விசும்பல்,நம்மை ஒரு கணம் மௌனமாய் அதிர வைக்கின்றது.இதுதான் பைசால் என்ற வளரிளம் கவிஞனின் கவிதைகளின் பலம் எனில் மிகையல்ல.

11.10.06
இரவு 11.48

Wednesday 10 July 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்.

                                                                          43

 முஸ்லிம் குரல் பத்திரிகை பௌசர் அவர்களின் முயச்சியினால் வந்து கொண்டிருந்தது.

அப்போது இலங்கை அரசிற்கும் புலிகளுக்கு மிடையே சமாதான ஒப்பந்தம் நிகழ்ந்தது. இலங்கை அரசுடன் பேசிக் கோண்டே விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் மீதான மோசமான அடக்குமுறையை பிரயோகித்து வந்த காலம். 

முஸ்லிம் காங்கிரஸ் நோர்வேயுடன் சேர்ந்து கொண்டு விடுதலைப் புலிகளின் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையை மௌனத்துடன் பார்த்து கொண்டிருந்தது.

 முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் அடக்குமுறையை எதிர்து முஸ்லிம் காங்கிரஸால் பேச முடியவில்லை. அந்த காலகட்டதில் முஸ்லிம்களின் குரலாக முஸ்லிம் குரல் பத்திரிகை துணிச்சலுடன் பேசியது.

வாழைச்சேனை பிரதேசத்தில் சமாதான ஒப்பந்த காலகட்டத்தில் முஸ்லிம்களை கடத்தி எரித்து கொள்ளுமளவிற்கு நிலைமை இருந்தது.

இது குறித்து சென்ற பகுதிகளில் விரிவாக எழுதியிருக்கின்றேன். முஸ்லிம் குரல் இந்த அடக்குமுறையை எதிர்த்து துணிச்சலாக குரல் கொடுத்தது. ரஷ்மி. அப்துல் போன்றவர்களுடன் நானும் பத்திரிகைக்கு பங்களித்து வந்திருக்கிறேன்.

கொழும்பில் பத்திரிகைக் காரியாலயம் ஆறு பேருக்கு மேல் முழு நேர பணியாளர்கள், வாடகை, மாதந்த கொடுப்பனவு, அச்சக செலவு என மோசமான நெருக்கடிகளை சந்தித்து பத்திரிகை வந்து கொண்டிருந்தது.

 இரு தடவை என நினைக்கிறேன். பத்திரிகை அச்சிட்ட அச்சகத்திற்கு பணம் கொடுக்க நானும் எனது காரியாலய பணத்தினை கடனாக கொடுத்து உதவி இருக்கிறேன்

முஸ்லிம் குரலை நடத்த முடியாத நிதி நெருக்கடியால் அப்பத்திரிகை நின்று போனது.வார இதழாக வந்து  இரு வார இதழாக வந்து .. இறுதியில் வராமலே போனது.

 இலங்கை முஸ்லிம்களின் பத்திரிகை வரலாற்றில் அப்பத்திரிகைக்கு மறுக்க முடியாத முக்கியத்துவம் உண்டு.

இக்காலகட்டத்தில்தால் அரசிற்கும் புலிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் இடம் மறுக்கப்பட்டது முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லை என கருத்துக்கள் எழுந்தன.

முஸ்லிம்ககளுக்கான தனித்தரப்பை வலியுறுத்தியும் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்கிற அடிப்படையை முன்வைத்தும் கோட்பாட்டு ரிதியாக முஸ்லிம்களுக்குள் இருந்து ஒரு பத்திரிகை வருவது முக்கியம் எனக் கருதியதால் சுயம் பத்திரிகை வந்தது. இப்பத்திரிகையில் நான் அப்துல்,பௌசர், முஹ்சீன்,சிராஜ்.ஆத்மா, பாரிஸ்,ரஷ்மி ஆகியோர் இருந்தோம்.
பொரல்லையில் தமிழ் பத்திரிகை மட்டும்தான் கிடைக்கும்.நூல்கள் கிடைக்காது. 103 பஸ் எடுத்தால் மருதானைக்கு வந்து வாசிகசாலையை தேடலாம் என்ற உதிப்பில் ஒரு சனிக்கிழமை மாலை மருதானைக்கு வந்தேன். 

கொடகே புத்தக நிலையம் என்ற பெயர் பலகையைக்கண்டு மலைத்து உள்ளே சென்றேன்.அனைத்தும் சிங்கள மொழி மூல நூல்கள்.இன்று கொடகே புக் எம்போரியம் சிறந்த தமிழ் நூல்களை தெரிவு செய்து வருடாந்தம் விருது வழங்குவதுடன்,தமிழ் மொழியிலான நூல்களின் தொகுதியையும் விற்பனைக்கு வைத்துள்ளது.

இந்த விருது தெரிவிலும் இலக்கியப்பெருச்சாளிகளின் கை வரிசை நிகழ்வதாக குற்றச்சாட்டும் இருக்கின்றது.

நேரே பொலிஸ் நிலையப் பக்கமாக நடந்து வந்தபோது சிலர் தீவிரமாகவே வாசிப்பில் இருப்பதைக்கண்டு அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.ஆர்வ மேலீட்டால் உள்ளே நுழைந்தேன்.

சுற்றும் முற்றும் பார்க்கவில்லை.யாரும் புத்தகம் படிப்பதைக்கண்டால் போதும் வாசிப்பவனின் மனம் பரபரக்க ஆரம்பித்து விடும்.எதிரே இருக்கும் முகம் தெரியாத சின்னக்குழந்தையுடன் அதன் அம்மாவுக்குத்தெரியாமல் கண்களால்,கைகளால் ஜாடைகாட்டி சிரிப்பதைப்போல் மனம் இறக்கை கட்ட ஆரம்பித்துவிடும்.
அவ்வாறான மன நிலைதான் அந்த பத்திரிகை விரித்துப்பார்க்கும் இடத்தைக்கண்டதும் ஏற்பட்டது.

பத்திரிகைகள் அதை வாசிக்கும் மனிதர்கள் இவர்களை நோட்டமிட்டுக்கொண்டே புத்தக அலுமாரிகள் உள்ளனவா என்று ஆராய்;ந்தேன்.ஒன்றுமில்லை. எல்லோரும் தீவிரமாக வாசிப்பதில் இருந்தார்கள் அதுவும் ஆங்கிலப்பத்திரிகை. என்னை வியப்புடனும் ஆச்சரியத்துடனும் சில விழிகள் பார்த்து விட்டு வாசிப்பதில் ஆர்வமாய் இருந்தன.

முஸ்லிம்கள் செறிந்து வாழும் மருதானை வாசிகசாலையில் தமிழ் பத்திரிகைக்கு தடையா? பத்திரிகைக்கு செய்தி கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் புலனாய்வு செய்யும் பணியில் இறங்கினேன். ஒருவரை அனுகி இங்க  தமிழ் பத்திரிகை இல்லையா? என்றேன். என்னவோ பியர்,பன்றி இறைச்சியைக்கேட்டு விட்ட மகா குற்றவாளியைப்பார்ப்பதைப்போல் என்னை உச்சி முதல் உள்ளங்கால் வரை அதிசயமாகப்பார்த்தார்.அவர் இதழோரம் எள்ளல் துளி எட்டி நின்று வேடிக்கைகாட்டியது.

என்னை நோக்கி காத்திரமாக ஆனால் மிக இரகசியமாக கத்தினார். மொழி முக்கியமல்ல ‘குதிரையின்ர பெயரை சொல்லுங்க கட்டிடுவோம்’ என்றார்.அப்போதுதான் மேலே திரையில் குதிரைகள் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

பந்தயக்குதிரை நிலையத்திற்கு நுழைந்திருக்கின்றேன்  என்பதை நினைக்கையில் மிகுந்த அவமானமாய் இருந்தது. அவர்கள் வாசிக்கவில்லை தேடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதும் புரிந்தது.நானே என் நிலையை எண்ணி சிரித்துக்கொண்டேன்.

பிற்காலங்களில் குதிரைப்பந்தய கசினோக்களை கடந்து செல்கையில் இதழோரம் முகிழும் புன்னகையை கட்டுப்படுத்த முடிவதில்லை. 2000ம்ஆண்டுக்குப்பின் கொழும்பில் நல்ல புத்தகங்களை படித்துப்பயன் பெற்றேன்.என்பது வேறு விடயம்.

நான் எழுதத்தொடங்கி கொஞ்சம் பெயர் அடிபடத்தொடங்கிய காலம்.சொந்தக்கிராமத்தில் அறிமுகம் இல்லை.படித்ததும் வெளியூரில்.படிப்பு முடிந்து வேலையும் வெளியூரில். பெயர் மட்டும்தான் சனங்களுக்குப் பரிச்சயம். அனேகருக்கு ஆளைத்தெரியாது.

இதனை சாதகமாகப் பயன்படுத்தியவர்களும் உண்டு. வில்லங்கமான எழுத்துக்கள் பிரசுரமாகும் போது மட்டும். 

அவர்கள் கழன்றுவிடுவார்கள்.புலிகள் உச்சத்தில் கோலோச்சிய காலத்தில் புலிகளுக்கெதிரான பதிவுகளை புனைப்பெயரில் அன்றி சொந்தப் பெயரிலேயே எழுதியதால் என் எழுத்துக்கு சொந்தம் கொண்டாடிய பலர் ‘கழுவுற நீருல நழுவுற மீனா’கிப்போனார்கள்.


தொடரும்......


Saturday 6 July 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

                                                                   தொடர் - 42

 திஹாரியில் வசித்து வந்த திருகோணமலை நண்பர் பாரிஸ் பொருளாதார உதவியை  பத்திரிகைக்காக செய்து வந்தார்.நான் சில நேரங்களில் பத்திரிகை  வேலைகள் அதிகம் இருந்தால் 'மிலேணியம்' புத்தக நிலையத்தின் ஒரு மூளையில் சுருண்டு படுத்துக்கொள்வேன்.

 அதிகாலை மீண்டும் பம்பலப்பிட்டியிலிருந்து பொரல்லைக்கு வந்து அலுவலகப்பணிகளில் மூழ்கிவிடுவேன். ஒரு சோற்றுப்பார்சலை இரண்டுபேர் அல்லது மூன்று பேரும் சாப்பிட்டு விட்டு வேலைகளை கவனித்திருக்கின்றோம்.

ஒரு கப் டீ குடிக்க வேண்டும் போல் தோன்றும் அவ்வளவு அயர்ச்சி.நள்ளிரவில் பம்பலப்பிட்டியில் டீ வாங்க கடைகள் இருக்காது. இருந்தாலும் கிழக்கு மாகாண முகத்துடன் வீதியில் சுற்றித்திரிய ஓர்மம் வேண்டுமே!.    டீ போட்டுக்குடிக்கவும் நேரம் இருக்காது.

வெறும் தண்ணீரை மட்டும் அருந்திக்கொண்டு நள்ளிரவு வரை முஸ்லிம் குரலின் வளர்ச்சிக்கு உழைத்தவர்களிடம் சமூக உணர்வு தவிர வேறொன்று இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.

'சுயம்' பத்தரிகை எதிர்பார்த்த எழுச்சி அலையை மக்களிடையே தோற்றுவித்தது.வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகள் தோறும் விற்பனை செய்வதென்ற கொள்கைக்கு ஏற்ப அனைவரும் உழைத்தோம்.

 கட்டுரைகளில் உள்ள ஒரு வார்த்தை அல்லது வசனத்தைக்கூட பல கோணங்களில் விவாதித்து சேர்ப்பதா நீக்குவதா என்பதில் கூட அவதானமாக செயற்பட்டோம்.ஒரு வசனத்தின் சரியான புரிதலுக்காக ஒரு மணி நேரம் கூட விவாதித்திருக்கின்றோம்.

 உதாரணமாக வடகிழக்கு என்று இணைத்து எழுதுவதைக்கூட நண்பர் பவ்சர் விரும்பமாட்டர்.வடக்கு கிழக்கு என்று பிரித்தே எழுதி வருவார்.முஸ்லிம் தனித்துவ அரசியல், கலை, கலாச்சார சொற்களை கையாள்வதில் மற்றவர்களுக்கு பிடி கொடுக்காமல் பதிவு செய்வதில் நாங்கள் மிகக்கவனமாக செயற்பட்டோம்.

 சில சமூக ஆர்வலர்கள் பத்திரிகை விற்ற பணத்தை திருப்பிச்செலுத்தாமலேயே காலத்தை தள்ளி சுயத்தின் கழுத்தினை நெரித்து கொன்று விட்டனர்.

பஸ் பிடித்துக்கொண்டு ஊர் ஊராய் போய்  கடன் வசூல் பண்ண வேண்டிய நிலை. ஒரு பத்திரிகை நடாத்துவதன் சிரமத்தையும்,எதிர்கொள்ளும் சவாலையும்  'சுயம்'  விடயத்தில் அனுபவ ரீதியாகப்புரிந்து கொண்டேன். புலிகளின் அச்சுறுத்தல்கள் தலை நகரில் உச்சத்தில் இருந்த காலத்தில்தான் முஸ்லிம் குரலை தைர்யமாக வெளியிட்டு வந்தோம். அக்காலத்தில் பத்திரிகையின் தொடர்புகளுக்கு ஒரு தொலைபேசி இலக்கம் தேவைப்பட்டது.மற்றவர்கள் தயங்கிய தருணத்தில் என்னுடைய குரல் ஓர்மமாக ஒலித்தது. ஈற்றில் என்னுடைய தொலைபேசி இலக்கத்தைத்தான் பத்திரிகையில் போட்டோம்.

பத்திரிகை நின்ற பின்னும் மிரட்டல்கள் ஓயவில்லை. சில காலம் அந்த தொலைபேசியை துண்டித்துவிட்டு ஒரு வருடத்திற்குப்பின் இணைப்பில் வந்தேன். ஒரு வருடத்திற்குப்பின் நண்பர் பவ்சரின் புத்தக நிலையத்தை மூடிவிட பத்திரிகை காரியாலயம் மருதானை ஆனந்தக்கல்லூரிக்குப் பின்னாலுள்ள மாளிகாகந்தை வீதிக்கு மாற்றப்பட்டது.

ஆனந்தக்கல்லூரியின் வெளி விளையாட்டு மைதானம் அலுவலகத்திற்கு முன் காணப்பட்டது. 

பிற்காலத்தில் பாழடைந்த பத்திரிகை காரியாலத்தை ஏக்கத்துடன் பார்த்தபடி அந்த மைதானத்தில் ஒரு வருடமாக தினமும் வாக்கிங் போவேன். தற்போது அல்குத்ஸ் சர்வதேசப் பாடசாலை இயங்கும் கட்டடம். 

இவை மிக முக்கியமான பதிவுகள் என்பதால் சொல்ல வேண்டிய தேவை உள்ளது.

முஸ்லிம்களின் தனித்துவ ஊடகத்தின் முக்கியத்துவம் பற்றிப்பேசப்படும் இத்தருணத்தில் அதனை வளரவிடாமல் முளையிலேயே கிள்ளி எறிந்த பெருமைக்குரியவர்கள் சில பத்திரிகை ஏஜென்டுகள் என்பது கசப்பான யதார்த்தமாகும்.

இஸ்லாம், சமூகப்பணி என்று தத்துவம் பேசும் இப்படியானவர்களை நிற்பாட்டி வைத்து கன்னத்தில் அறைந்தாலும் அடிக்கின்ற நமது கைகள்தான் 'தீட்டுப்படும்'.இத்தகைய சமூகத்துரோகிகள் இன்றும் வாயைப்பிளந்து கொண்டு சமூகத்தைப்பற்றி அக்கரையுடன் பேசிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

உண்மையில் இயக்கம் அல்லது கொள்கை சார் பத்திரிகைகளின் படுகொலைக்கு பின்புலமாக இருப்பவர்கள் அந்த இயக்கத்தின் பற்றுதிகொண்டவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் நபர்கள்தான்.இவர்கள்தான் இயக்கத்தின் அல்லது கொள்கையின் வளர்ச்சிக்கு தடையாக நிற்கும் அல்லது தோல்விக்கு துணைபோகும் நம்பிக்கை துரோகிகள்.

நண்பர் பவ்சர் பிற்காலத்தில் ஊர் ஊராக பத்திரிகை ஏஜென்டுகளைத்தேடி அலைந்திருக்கின்றார். அவரின் பெரும்பாலான பொருளாதாரத்தையும், நேரத்தையும் இந்த முஸ்லிம் குரல் விழுங்கியிருக்கின்றது.அவரைப்போல பலரின் கனவுகளையும் இந்த ஏஜென்டுகளும் கொள்கைவாதிகளும் ஏப்பமிட்டுள்ளார்கள்.அவர்களின் வயிறுகளில் முஸ்லிம் சமூகத்தின் தீ சப்பதமில்லாமல் எரிந்து கொண்டிருக்கின்றது.

ஒரு சமூகத்தின் ஊடகத்தின் இறப்புக்கு காரணமான இவர்கள் நிம்மதியாக வாழ்தல் என்பது சாத்தியமற்ற செயல்.நிச்சயம் அவர்களின் மன சாட்சி அவர்களை குதறிக்குதறிக்கொல்லும். கொல்ல வேண்டும்.  

எங்கள் தேசம் -248                                                                                                           ஊஞ்சல் இன்னும் ஆடும்.......







  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...