Monday, 11 July 2011

பின் தொடரும் பிரபலங்களின் நிழல்.

விதை மழை பெருக்கெடுத்து ஓடுவதை கண்டு என்னை அச்சம் வந்து கவ்வுகிறது.
இடறி விழுகிற போது ஒரு கவிஞன் காலடியில் கிடந்து துடிக்கின்ற அளவிற்கு கவிஞர்களின் அட்டகாசம் இலங்கையை ஆட்டிப்படைக்கின்றது.
இளம் கவிஞர்களில் சிலர் விமர்சனங்களை கண்டு அச்சப்படுகின்றதை பார்க்கின்ற போது எதிரே வரும் மரணத்தைக்கண்டு விட்ட அச்சம் அவர்களின் முகத்தில் தெரிகிறது.
அதனால்தான் என்னவோ ஆளாளுக்கு தற்போது முதுகு சொரியும் விமர்சனப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
புதிதாக எழுத வருகின்றவர்களின் வாசிப்பறிவை அளவீடு செய்தல் மிகச்சிரமமாகவுள்ளது.கொழும்பில் நான் வேலைப்பார்த்த காலங்களில் ஒரு கவிதாயினி (இப்படித்தான் தன்னை சொல்லிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவர்.) அவர் எழுதிய கவிதைகளுடன் என்னை சந்திக்க வருவார். அதை புத்தகமாக போட, படாத பாடுபட்டார். என்னிடம் அதற்கு ஒரு உரையும் எழுதும் படி நடையாய் நடந்தார்.
பிரபலத்தின் கையெழுத்து எனும் முத்திரை பெரிய காரியம் அல்லவா?

அவர் கவிதைகளைப்படித்து விட்டு எனக்கு அவர் மேல் பரிதாபமே ஏற்பட்டது. இதற்கு எப்படி நான் உரை எழுதுவது. முதலில் அவர் எழுதியவைகளில் கவிதை எது ? துணுக்குகள் எது? என்பதில் ஆரம்பித்தது வில்லங்கம்.
நான் அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். நீங்கள் ஈழத்தில் அல்லது ஈழத்திற்கு அப்பால் யாருடைய கவிதைகளை அதிகம் விரும்பி வாசிப்பீர்கள் என்றேன்.
அவர் 'பே' என்று விழித்தபடி என்னை பரிதாபமாக பார்த்தார். நான் இன்னும் சரியாக யாரையும் படிக்கவில்லை சேர் என்றா. தினகரன்,மித்திரனில் வரும் கவிதைகளை படிக்கின்றேன் என்றா. அவவின் மேல் கழிவிரக்கம் சுரந்தது.
முருகையன்,சு.வில்வரத்தினம்,சேரன்,ஜெயபாலன், நுஃமான்,சன்முகம், சிவலிங்கம்,போன்ற தலைமுறையினரையும் கேட்டுப்பார்த்தேன். சோலைக்கிளி ,ரஷ்மி,நளீம்,முல்லை முஸ்ரிபா, அம்ரிதா,நபீல், சலனி, அனார். பஹீமா,அம்பை,ஆழியாள்,சிவரமணி இன்னும் எத்தனையோ பெயர்களை கேட்டுப் பார்த்தேன்.


பாழாய் போன என்னிடம் கவிதைகளை காவிக்கொண்டு வந்திருக்கின்ற அசடே குறைந்தது எனது கவிதைகளையாவது படித்தாயா என்றேன்.
முள்ளிவாய்க்காலில் பிரபாகரனின் உயிரற்ற உடலைப்பார்த்து மிரண்டு நின்ற கருணா அம்மான் போல் கவிதாயினியின் முகம் அச்சத்தில் உறையக்கண்டேன். அந்தப்பெயர்களை தான் முதன் முதலில் கேள்விப்படுவதாக வேறு வாக்கு மூலம் தந்தார்.
இலக்கியப் பத்தி எழுத்துக்களில் , மேடைகளில் இப்படி பட்டியல் போட்டு பேய்க்காட்டுவது ஒன்றும் புதிதல்லவே.
அப்படியென்றால் அம்மணீ நீங்கள் நல்ல கவிதைகளை எழுதும் திறனை இழப்பதற்கு இது ஒன்றே போதும் என்றேன்.
கையிலிருந்த கவிதை கட்டுக்களைக்காட்டி இது நல்ல கவிதைகள் இல்லையா சேர்? என்றா. விம்மி வெடிக்கும் போல் இருந்தது அவர் வட்ட விழிகள்.
இதிலே நல்ல கவிதைகள் இருக்கலாம். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.
ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகளாவது தேடிப்படிக்கக்கூடாதா? வெள்ளவத்தையில் இயங்கும் தமிழ் சங்கத்தில் நிறைய புத்தகங்கள் இருக்கும் படியுங்கள் என்றேன்.
( ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு செய்யும் திட்டத்தின் கீழ், கொள்வனவு செய்யப்பட்ட எனது நூல்களும்,என்னைப்போன்ற ஏமாளிகளின் நூல்களும் 10 வருடங்கள் கடந்தும் தமிழ் சங்கத்தில் கடன் சுமையுடன் இருக்கும் தானே?)
என்னை விட்டபாடில்லை. மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டுமாம்.
கவிதாயினியின் கவிதைகளைப்படித்து அவவின் தலைக்கு வலிக்காமல் குட்டியாகி விட்டது.
வாங்கிக்கொண்டு போனவர்தான் . என் அலுவலகப் பக்கமே தலை நீட்டவில்லை.
சில வருடங்களின் பின் கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற புத்தக விழாவில் அம்மணியின் புத்தகமும் வெளியிடப்பட்டது. ஆனால் என்னிடம் அவர் தவமிருந்து பெற்ற குட்டு இல்லாமல்.
அதை உலகக்கவிதைகளின் தரத்திற்கு பதவியுயர்வு கொடுத்து உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்து ஒரு பிரபலம் எழுதிய முன்னுரையுடன் அம்மணியின் புத்தகக்கனவு நனவாகிவிட்டது.
இனி அவர் ஈழத்தில் தவிர்க்க முடியாத கவிதை அரசியாக,இலக்கிய மேடைகளில் கொலுவிருக்கும் மரியாதைக்குரிய இராணியாக முடிசூடிக்கொள்ள முடியும்.
இப்படித்தான் பேச்சு வாக்கில் சகோதரி பாயிசா அலி சொன்னார்.
ஒரு இளம் கவிதாயினி தனது புத்தகத்தை அவவுக்கு அனுப்பிவிட்டு அதைப்பற்றி
நன்றாக எழுதுமாறு நயமாக வேண்டிக் கொண்டாராம்.
நல்லதை மட்டும் சொல்ல வேண்டும் என்று புதிதாக எழுத வரும் சிலர் நினைக்கிறார்கள். அதனால் அவர்களின் இலக்கிய வளர்ச்சி பாதிப்படைவது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போகிறது. ஆற்றுப்படுத்த வேண்டிய மூத்த எழுத்தாளர் சிலர் சகட்டு மேனிக்கு அவர்களை உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்து சூடம் ஏற்றி கொண்டாடுவதால் புதியவர்களும் தங்களை விட்டால் இலக்கியம் வளர்ப்பது யாரென்று மார் தட்டும் அளவிற்கு மாயைகளில் மயங்கிக்கிடக்கின்றனர்.
புத்தகங்களுக்கு முகஸ்துதிக்காக வழங்கப்படும் முன்னுரைகள்,மதிப்புரைகள் ஒர் இளம் எழுத்தாளின் வளர்ச்சிக்கு வெட்டும் பாரிய புதை குழி.
நாஞ்சில் நாடன் இது பற்றி ஆழமான, சுவாரஸ்யமான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கின்றார்.

...........முன்னுரைகளின் நம்பகத்தன்மைகளை விவாதப் பொருளாக்கும் முயற்ச்சி இந்த கட்டுரை. அணிந்துரை, வாழ்த்துரை, நூன்முகம், பின்னுரைகளையும் ஒரு விரிந்த தளத்தில் முன்னுரை என்றே கொள்ளலாம். நண்பர், சீடர், கைத்தடி, எடுபிடி, முகவர், தக்கார், போஷகர் என்ற வரையறைகளுக்கு உட்பட்டு எழுதப்பெறும் முன்னுரை பலவற்றில், முன்னுரையில் மேற்க்கோளாகக் காட்டப்பட்டவை தாண்டி, புத்தகத்தில் எதுவும் இருப்பதில்லை. கவிஞர், விமர்சகர் க.மோகனரங்கன் முன்னுரை எழுதுவது முறைவாசல் தெளிப்பது போன்று ஆகிவிட்டது என்றார் ஒருமுறை.
புகழ்பெற்ற சினிமா பிரமுகர் ஒருவர் முன்னுரைக்கு பதினைந்தாயிரம் வாங்குகிறார் என்றும், அதை முன்பணமாக கொடுத்துவிட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் முன்னுரையை அவர்தான் எழுதுவார் என்பது உத்திரவாதம் இல்லை. அவரது அலுவலகம் அதைச் செய்துவிடும். வேறு பலருக்கு அவர்தம் பெயர்தாங்கி வரும் படைப்புகளையே அலுவலகங்கள் தாம் எழுதுகின்றன என்கிறார்கள். இதில் தெரியவருவது என்னவெனில் அவருக்கு இணையாக எழுத வல்லவர் கனபேர் இருக்கின்றார்கள் என்பதுதான். என்றாலும் பிரபலத்தின் கையெழுத்து எனும் முத்திரை பெரிய காரியம் அல்லவா
தொடர்ந்து படிக்க அவர் இணையத்திற்குள் நுழைந்து பாருங்கள்.

http://nanjilnadan.wordpress.com/