Friday, 14 December 2012

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்29

நடுக்காட்டில் திடீரென ஒரு ட்ரக்டர் சேற்றில் புதையுண்டது.இறங்கித் தள்ளிப் பார்த்தோம். முடியவில்லை. பெட்டியின் இரு ரயரும் ட்ரக்டரின் முன் ரயரும் முழுமையாக சேற்றினுள் அமிழ்ந்திருந்தன.அச்சம் தொற்றிக்கொண்டது. யானைகள் வந்து போன கால் தடங்கள் சேற்றில் புதையுண்டிருந்தன. 

இராட்சத இலைகளாக அதன் காலடிகள் பூமியில் அச்சடித்து காய வைத்தது போல் எங்கும் நிறைந்திருந்தது. திரும்பிச்செல்லவும் இயலாத தூரத்திற்கு வேறு வந்து விட்டிருந்தோம்.ரைவர் மிகவும் சாமர்;த்தியமானவர்.புதையுண்ட ரயரை வெளியே எடுக்க மிகுந்த பிரயத்தனமெடுத்தார். குழுப்பணி செய்யப் பயிற்றுவிக்கப்பட்ட நாம் காடுகளில் அலைந்து நாறும் கம்புகளும் வெட்டி வந்து மெசின் ரயரை மேலெழுப்பி பயணத்தைத்தொடர்ந்தோம்

.வில்பத்துக்காட்டின் தொடர்ச்சி என்றார்கள் புத்தள நண்பர்கள்.புத்தளத்தில் ஆற்றுக்குப்போவதற்கு ஒரு நாளை ஒதுக்கிவிடுவார்களாம்.உடுத்திருக்கும் ஒரு சாரம் மட்டும்தான். காலையிலிருந்து மாலை வரை நீருக்குள்ளேயே நேரம் கழியும்.சாப்பிடுவதும் நீருக்குள் அமர்ந்தபடி. ஈரச்சாரனுடன் கரையில் வந்து தொழுது விட்டு மறுபடியும் நீர்க்காகம் போல் தண்ணீரில் குதித்து விடுவார்கள்.ஆற்றைக்கண்டவுடன் எங்களுக்கும் அப்படித்தான் தோன்றியது.

காடு பெருகியபடிச்சென்றது.அதன் போக்கில் நாங்களும் அள்ளுண்டு சென்றோம். ஈற்றில் அழகான ஆற்றோரம் இறக்கி விட்டு காடு அவ்விடத்திலேயே அமர்ந்து கொண்டது.

மாலை வெய்யிலில் ஆற்றின் முதுகில் சிற்றலைகள் ஆரோகணித்துச்செல்லும் அழகே தனி அழகு.ஆற்றின் மறுகரையிலும் அடர்ந்த வனாந்திரம் விரிந்து கிடந்தது.இரு மருங்கிலும் இராட்சத மரங்கள். கூடாரங்களை அடித்து பொருட்களை இறக்கி வைத்தோம்.

 மாலைக்குள் ஒரு குளியல் போட்டு ஆளுக்கொரு வேலையாக இழுத்துப்போட்டு சமையல் வேலைகளில் ஈடுபட்டோம். விறகு பொறுக்க சிலர் சென்றனர்.விறகுக்கா பஞ்சம். நெருங்கி வரும் இரவை சமாளிக்கவும் அது கொண்டு வரும் குளிரை எதிர்க்கவும் விறகு தேவை.குவியலாக கொண்டு வந்து குவித்தார்கள்.பனி மழை பொழியத்தொடங்கியவுடன் தீ கங்குகள் மேலெந்து அதை உலர வைத்தன. கூடாரத்தைச்சூழவும் நடுக்காட்டில் அமர்ந்தபடி நள்ளிரவு வரை கதையளந்தோம்.

ஆற்றில் நீண்ட நேரம் விளையாடியதால் களைப்பு மேலிட்டது.அடிக்கடி ஒரு பிளேன்றீ தேவைப்பட்டது.இந்தக்கால சுற்றுலாக்களில் மதுவும்,இசையும் வாஜிபு என்பது போல் நம்மவர்கள் மாற்றிவிட்டார்கள்.

ஆடம்பரமில்லாமல் இறைவனின் அற்புதங்களை அனுபவிக்கவும் இரசிக்கவும் இயலாத நவநாகரீக மோகத்தினுள் நாம் விழுந்து இறங்கிக்கொண்டிருக்கின்றோம்.பார்ப்பதற்கும் அனுபவிப்பதற்கும் இந்தப்பூமியில் இயற்கை கொட்டிக்கிடக்கின்றது. 

வீதிகளில் கும்மாளமிட்டு ஆடிப்பாடி தெருக்களில் குடித்து மிருகங்களைப்போல் அலைவதைத்தான் பெஷன் என்கிறார்கள்.சுற்றுலா என்கிறார்hகள்.காலிமுகத்திடல் குடைக்காட்சிகளும்,காலி வீதியின் கடற்கரை காட்சிகளும், ஹம்பாந்தோட்டை வரையிலான இறுசல் காடுகளின் நிழல்காடுகளில் அரங்கேறும் அசிங்கங்களும் படைத்தவனை மறந்த சுற்றுலாக்களாக மாறிவிட்டதை நமக்குக்காட்டுகின்றன.

தூங்கிய சற்றைக்கெல்லாம் காவலுக்கு நின்றவர்கள். அலறியபடி வந்தார்கள்.நெருப்புக்கங்குகள் ஓவொன்று எழுந்து நின்றன.என்னவென்று எழுந்து வந்தோம். ஆற்றின் மறுகரையில் யானையின் பிளிறல். செவிட்டில் அறைந்தாற்போல் விழுந்தது.மங்கிய நிலவொளில் கருப்பனின் அசைவு தெரிந்தது.

 அமைதியான அதன் வாழிடத்தை குலைக்க வந்த குளவிக்கூட்டமாய் எங்களை அது பார்த்திருக்க வேண்டும். நாங்கள் என்ன  சும்மாவா இருந்தோம்? பதினைந்து இள இரத்தங்களின் கொண்டாட்டக்கூச்சலில் அமைதியின் இப்பிடமான  வனத்தின் அவஸ்தை யானையின் உருவில் வந்து நின்றது.  காடே அதிரும்படி பிளிறியது. மரங்களை சகட்டு மேனிக்கு உரசியபடி சன்னதம் ஆடும்  அதன் மூர்க்கம் எங்களை கிலி கொள்ளச்செய்தது.

 எரியும் நெருப்புக்கட்டைகளை தூக்கி காட்டி போவென்று ஒருவர் சைக்கினை செய்தார்.யானைக்கு தீ என்றால் பயம். புத்தளம் நண்பரிடம் ஒரு துவக்கும் இருந்தது.ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். என்றார்.வனவிலங்கு திணைக்களத்தின் பாதுகாவலர் அவர்.யானைக்கும்  எமக்குமிடையே தடையாக இருப்பது ஆறு மட்டும் தான் அது தன்பாட்டில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்து.

கூடாரத்திற்குள் சிலர் நடுங்கியபடி ஒடுங்கிக்கிடந்தனர்.தொடை நடுக்கம் என்பார்களே அதை அன்றுதான் அனுபவித்துப் பார்;த்தோம். கூடாரத்தை சுற்றிலும் நெருப்பு அரணாக பச்சை விறகுகள் எரிந்து கொண்டிருந்தன. யானையின் கோபம் தனி வதாக இல்லை. அவ்வவ்போது அதன் எதிர்ப்பை மறு முனையில் நின்றபடி வெளிப்படுத்தியது.அடர்ந்த வனத்தின் கிளைகள் மூர்க்கமாக ஆடியதை நிலவொளியில் பார்த்தபடி நின்றிருந்தோம்.

 மனதை விட்டும் அகலாத ரம்யமாக காட்சி அது. அமைதியாக ஓடும் பிரமாண்டமான ஆறு.அதன் மறுகரையில் சன்னதம் ஆடும் யானைக்கூட்டம்.குளிர்ச்சியான நிலாக்கீற்றின் மினுக்கம் ஆற்றின் முதுகில் ஜிகினா காட்டியபடி…மிக இளமையான காற்று. 

அச்சத்திலும் மலைக்க வைத்த இறைவனின் விந்தையான படைப்பின் இரகசியம் என்னை மெய் மறக்கச்செய்த தருணங்களில் இதுவும் ஒன்று. மறுநாள் பொழுது புலரும் வரை தூங்கவில்லை.அறுப்பதற்கு கொண்டு வந்த ஆடு மட்டும்  எந்தக்கவலையுமின்றி ஆற்றோரம் அசைபோட்டபடி நின்றிருந்தது.

எங்கள் தேசம் : 235                                                                 ஊஞ்சல் இன்னும் ஆடும்……..