Monday 30 September 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

தொடர் - 48

அதன் தொடர்ச்சியாக பிறகு தஃலீம் தொகுப்பு குர்ஆனுக்கு எதிரானதா? எழுதினே;.இதுவும் பல பதிப்புக்கள் கண்டது. அனேகரின் வேண்டுகோளுக்கினங்க தப்லீக் அன்றும் இன்றும், தஃலீம் தொகுப்பு குர்ஆனுக்கு எதிரானதா ? இரண்டையும் ஒருங்கே சேர்த்து பிற்காலத்தில் ஒரு தொகுப்பு போட்டேன்.

கவிதை சிறுகதை இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்திக்கொண்டு இலக்கியப்பயணம் செய்வதை விடுத்து ஒரு துறையை மட்டும் தேர்ந்தெடுப்பது என்ற முடிவில் கவிதைக்கு முழுக்குப்போட்டேன். 

இடறி விழுந்தால் ஒரு கவிஞரில்தான் விழ வேண்டும் என்ற நிலையிலுள்ள இலக்கிய வீதியில் நாம் கவிதை எழுதாமல் விடுவதனால் ஈழத்து இலக்கிய உலகு அப்படி ஒன்றும் பெரிய இழப்பை சந்திக்கப்போவதில்லை. எரி நெருப்பிலிருந்து தொகுதிக்குப்பின் எழுதிய கவிதைகளை ஒன்று திரட்டி வேட்டைக்குப்பின்.. கொண்டு வந்தேன். அதற்கு முதல் ‘நினைந்தழுதல்" என்னும் சிறுகதைத்தொகுதி வெளிவந்தது.

 மு.பொன்னம்பலத்தின் முன்னீட்டுடன் வந்த அந்த தொகுதிக்கும்  நல்ல வரவேற்பிருந்தது. ‘தமிழ் நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் விருதும், இலங்கையில் ‘விபவி இலக்கிய விருதும் ‘ இந்த நூலுக்கு கிடைத்தது.

விபவி விருது கிடைத்தது ஒரு சுவாரஸ்யமான கதை. எனது கொழும்பு அலுவலகத்தில் கடமையிலிருந்த ஒரு காலைப்பொழுது அஸ்ரப் சிஹாப்தீன் தொலைபேசியில் வந்தார். ‘அறபாத் உங்களின்ற தொகுதியும் விருதுக்கு தெரிவாகியிருக்கு, இன்டைக்கு விழா ஏன் வரவில்லை எனக்கேட்டார்.எனக்கு தெரியாதே என்றேன். அப்படியானால் உடனே புறப்பட்டு வாருங்கள் என்றார். 

ஜேன் டி சில்வா அரங்கில் அந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. மறைந்த கவிஞர் நண்பர் ஏ.ஜி.எம் ஸதகாவும் அவருடைய கவிதை தொகுதியான போர்க்கால கவிதைகள் தொகுதிக்கு விருதைப்பெற வந்திருந்தார்.சில விருதுகள் இப்படியும் கிடைத்திருக்கின்றன.சில விருதுகள் சிபாரிசு செய்யப்பட்டதின் பின்பும்  வழங்கப்படாமலும் போயிருக்கின்றன.

விபவி மற்றும் சுதந்திர இலக்கிய விழா விருதுகள் பெற்ற ‘நினைந்தழுதல் ‘ சிறுகதைத்தொகுதி இனப்பிரச்சினையின் மையங்கள் குறித்தும் சிறுபான்மையினரின் வாழ்வுரிமை ஸ்த்திரமின்மை குறித்தும் உக்கிரமாக பேசியது

நான் சொல்ல வந்தது வேட்டைக்குப்பின் தொகுதி தொடர்பான அனுபவத்தை. தொகுதியை யாருக்கு சமர்ப்பிக்கலாம் என்று யோசித்துக்கொண்டு சில மாதங்கள் கடத்தியிருக்கின்றேன். புலி எதிர்ப்புக்கவிதைகள் அதில் அதிகம் காணப்படுகின்றன.

புலிகளின் பச்சோந்தித்தனத்தை தோலுரித்துக்காட்டும் இந்த தொகுதியை அவர்களையும் அவர்கள் போராட்டத்தையும் நம்பி மோசம் போன முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்களுக்கு இதனை அர்ப்பணம் செய்வது என்று தீர்மானித்தேன்.

 புலிகளால் கொல்லப்பட்ட புலிகளுக்கு, அல்லது முஸ்லிம்களுக்கு, இளைஞர்களுக்கு  என்றெல்லாம் வாக்கியங்களை மாற்றி மாற்றி போட்டுப்பார்த்தேன். திருப்பதியளிக்கவில்லை. அப்படியே கிடப்பில் போட்டு விட்டு சுற்றித்திரிந்தேன். மனசுக்குள் பொறுத்தமான வாக்கியங்கள் பொறியாக ஓடிக்கொண்டு சிக்கமாட்டேன் என்று விடுப்புக்காட்டியது.

ஒரு மாலையில் நண்பர் நழீமை சந்திக்க அவர் அறைக்குசென்றேன். புத்தக வேலைகள் முடிந்துவிட்டதா என்று அக்கரையுடன் விசாரித்தார். எனது அவஸ்தையை சொல்லி  இப்படியெல்லாம் எழுதியிருக்கின்றேன் ஒன்றும் பொருத்தமானதாக தெரியவில்லை என்றேன். ‘புலிகளால் சஹீதாக்கப்பட்ட புலிகளுக்கு.. என்று யோசித்துப்பாருங்கள் என்றார். 

மூடிக்கிடந்த பனிகூட்டம் கரையத்தொடங்கியது. பலமுறை எழுதியும் வாய்விட்டு வாசித்தும் பார்த்தேன். மிகமிகப் பொருத்தமாய் இருந்தது. அடுத்த வாரம் புத்தகம் வந்துவிடும் என்றேன் சந்தோசத்தில்.

நண்பர் சினாஸ் முஹம்மத்தின் கை வண்ணத்தில் நழீமின் ஓவியங்களுடன் புத்தகம் வெளிவந்தது. மிகுந்த அவதானமும், சிரத்தையும் எடுத்து இந்தத்தொகுதியை வெளிக்கொணர்ந்தேன்.

 எரி நெருப்பிலிருந்து கவிதைத்தொகுதி வெளிவந்த போது பாராட்டி தட்டிக்கொடுத்தவர்கள் வேட்டைக்குப்பின் கண்டதும் என்னை பிய்த்துக்குதறி எடுத்தனர்.


ஊஞ்சல் இன்னும் ஆடும்.......

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...