Sunday 26 May 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

                                                                       தொடர்- 40

நன்பர் பவ்சர்,என் ஆத்மா,பொத்துவில் மஜீத்,அக்கரைப்பற்று ஏ.எம்.தாஜ்,ஏ.எம்.ரஷ'மி,கருங்கொடியூர் கவிராயர் என்ற பெரும் கவிஞர் பட்டாளம் தினகரனில் எழுதிக்கொண்டிருந்தோம். ஒரு வருடத்திற்குள் எல்லா முன்ணனிப் பத்திரிகையிலும்,உள்நாட்டு வெளிநாட்டு சஞ்சிகையிலும் எனது கவிதைகள் வெளிவரத்தொடங்கின.

விடாமுயற்சியும் வாசிப்பும் என் எழுத்தின் தீவிரத்திற்கு தீனி போட்டுள்ளது என்பதை இப்போது நினைத்துப்பார்க்கின்றேன். இப்போது எழுதிக்கொண்டிருக்கும் புதியவர்கள் வாசிப்பது அரிதாகத்தான் உள்ளது. அதை அவர்களின் எழுத்தில் பார்க்கலாம்.உப்புச் சப்பற்ற எழுத்துகளுக்கு தாங்களே தன் கழுத்தில் மாலை போட்டுக்கொள்ளும் அசிங்கம் இங்குதான் உண்டு.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதை விட நூல்கள் இல்லாத ஊரில் குடியிருப்பதுதான் என்னைப்பொறுத்தவரை மிகுந்த அவஸ்தை என்பேன்.இப்போதும் படிக்கத்தொடங்கிவிட்டால் எழுதத்தொடங்கி விட்டால் என்னை அசைக்கவே முடியாது என்பது என் துணைவியின் குற்றச்சாட்டுக்களில் ஒன்று. எழுத்தும் வாசிப்பும் மனமொன்றி இருந்தால் அது மற்றவர்களின் மனதில் சாசுவதமாய் தங்கி வாழும்.

நான் வேலைப்பார்த்த இடங்களில் பெரும்பாலும் வாசிப்பதற்கு பத்திரிகைகளை தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை.மலைநாட்டில் உள்ளவர்களுக்கும், வடமத்திய மாகாணத்திலுள்ளவர்களுக்கும் சரிநிகரை அறிமுகப்படுத்தியிருக்கின்றேன். இன்றைய காலம் போல் இணையத்தில் பத்திரிகைகளை வாசிக்க முடியாத காலம்  அது.சிறு சஞ்சிகைகள் அக்காலத்தில் வந்து கொண்டிருந்தது.

மட்டக்களப்பிலிருந்து ‘படி’ மூன்றாவது மனிதன்,நந்தலாலா,மற்றும் புலம் பெயர் நாடுகளிலிருந்து அம்மா, எக்சில்,உயிர் நிழல்,போன்ற சஞ்சிகைகள் வந்தன. மறு சஞ்சிகைகள் வரும் வரை திரும்பத்திரும்ப பாராயணம்தான்.

கடைசியாக கொழும்புக்கு 1996 இல் காலடி எடுத்து வைத்த போது வாசிப்பும் எழுத்தும் உச்சத்தில் இருந்தது.நான் வேலை பாhத்த அலுவலகம்   பொரல்லையில் அமைந்திருந்தது.வாசிப்பதற்கும்,எழுதுவதற்கும் அமைதியான இடம். தூரிகைக் கவிஞர் நண்பர் எஸ்.நழீமிடமிருந்தும்.கவிஞர் அனாரிடமிருந்தும் காத்திரமான புத்தகங்களை இரவல் பெற்று வாசித்திருக்கின்றேன்.

சம்பள நாளில் செட்டியார் தெருவில் இருக்கும் பூபாலசிங்கம் புத்தக நிலையத்திற்கு சென்று விடுவேன்.இந்திய மற்றும் ஈழத்து சஞ்சிகைகள்,புத்தகங்கள் என அள்ளிக்கொண்டு வந்து அடுத்த மாத சம்பளம் வருவதற்கு முன் வாசித்து விடுவேன். திருமண பந்தத்தில் இணையாத பொற் காலம் என்பதால் நிறைய வாசிக்கவும் எழுதவும் அக்காலங்கள் உதவின. அதிகம் என்னை வாசிக்கவைத்தவர் எஸ்.எல்.எம். ஹனீபா.

முதிசம்களின் இலக்கியப்பொக்கிசங்களை எஸ்.எல்.எம். மூலம்தான் படித்து முடித்தேன்.ஜெயமோகன்,ஜெயகாந்தன்,சுந்தரராமசாமி,பிரமிள்,நகுலன்,ராஜகோபாலன்,அசோகமித்திரன்,ஜானகி ராமன்,என பெரும் படைப்பிலக்கிய ஜாம்பவான்களை படித்தது அவரிடமிருந்துதான்.தோப்பில் முஹம்மது மீரான்,தகழி, வைக்கம் முஹம்மது பசீர் என்று மலையாளிகளை அறிமுகப்படுத்தியவரும் அவரே.பொற்றேகார்ட்டின் பல நாவல்களை படித்து பரவசமுற்றதும் இக்காலத்தில்தான்.

வாசிப்பும் தொடர்ச்சியான எழுத்துப்பயிற்சியும் இல்லை என்றால் ஓர் எழுத்தாளனால் சோபிக்கமுடியாது.என்பது என் அனுபவம் என்ன எழுதுகிறோம் என்பதை விட அதை எப்படி வெளிப்படுத்துகின்றோம் என்பதுதான் படைப்பிலக்கியத்தில் அதி உச்சம் என்பேன். ஒரு புனைவின் நம்பகத்தன்மையும் வாழ்வின் உன்னதங்களை கோடிட்டுக்காட்டும் மெய்யுமே இலக்கியத்தில் நிலையானவை என்பது இன்று நம்மில் பலருக்கு தெரியாமலேயே போய்விடுகின்றது.

எழுத்துக்கு மட்டுமல்ல அரசியல் போராட்டம், அல்லது இயக்கம் சார்ந்த செயற்பாடுகள் எல்லாவற்றிருக்கும் இது பொருந்தும்.காலத்தால் நின்று சில புனைவுகள் பேசப்படுவதற்கு காரணம் அவர்கள் மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் முறைதான் என்பது எவ்வளவு சத்தியமாக உள்ளது.

com

திருமண பந்தத்தில் இணையாத பொற் காலம் என்பதால் நிறைய வாசிக்கவும் எழுதவும் அக்காலங்கள் உதவின./ தங்கள் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள்
S.Naleem


 எங்கள் தேசம்- 245                                                                                    ஊஞ்சல் இன்னும் ஆடும்......                                          
   

Friday 24 May 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

                                             தொடர்-   39

தீவிரமான வாசிப்பின் எதிரொலி.படிக்கின்ற காலப்பகுதியில் எழுத ஆரம்பித்து விட்டேன் விடுதியில் யாருக்கும் தெரியாமல் எழுத்துப்பணிகள் தொடர்ந்தன.விடுதியில் இருக்கும் வாசிகசாலை அல்லது கடற்கரையில் உட்கார்ந்தபடி பெரும்பாலும் எழுதுவேன்.அல்லது ஆசிரியர் வராத வகுப்பறை.

பெரும்பாலும் எழுதியதை திரும்பவும் மீள் திருத்தி எழுதுவதற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொள்வேன்.இப்போது கதை ஒன்றை எழுத மூன்று அல்லது நான்கு மாதங்கள் எடுத்துக்கொள்கின்றேன். எழுதுவது இரண்டு நாட்கள் என்றால் செவ்விதாக்கம் செய்ய பல மாதங்கள் தேவைப்படுகிறது.சில நேரம் செவ்விதாக்கம் செய்த படைப்பையும் திருப்தி இல்லையென்றால் கிழித்துப்போட்டிருக்கின்றேன்.

இன்று எழுதக்கூடிய பலர்  ‘பொய்லர்’ குஞ்சுகளைப்போல் அவசரமாகப்பொறித்து அவசரமாக உயர நினைக்கிறார்கள்.குறித்த நாளில் குறித்த பத்திரிகையில் பெயர் வந்தால் சரி.எழுத்து எப்படிப்போனாலும் பரவாயில்லை என்ற மனோபாவம் வந்துவிட்டது.வாசிப்பும் இல்லை.எழுத்தில் நிதானமும் இல்லை இவர்களைத்தான் மேடைகளில் முகஸ்துதி செய்து உச்சியில் ஏற்றி வைத்திருன்றது இலக்கிய உலகம். பாவம் தமிழ் இலக்கியம் திணறித்துடிக்கின்றது.

 கவிதைதான் எழுதிப்பழகினேன்.எல்லாக்கவிஞர்களையும் போல் காதல் கவிதைகள் அக்காலத்தில் எழுதுவதற்கு இலகுவாகவும் இதமாகவும் இருந்தன.எழுதியதை பத்திரிகைகளுக்கு அனுப்பி விட்டு ஒவ்வொரு வாரமும் பெயர் வந்திருக்கின்றதா என்று பார்த்துவருவேன்.

ஒரு வருடமாக இப்படி கவிதைகள் அனுப்புவதும் பெயரை தேடுவதுமாக இருந்தேன்.ஒற்றை ரூபாவை மணலில் தொலைத்து விட்டு தேடுபவனைப்போல் என் பெயர் தேடல் அவ்வளவு தீவிரமாக இருக்கும். சொந்தப்பெயரை பயன்படுத்துவதற்கும் அச்சம்.புனைப்பெயரில்தான் எழுதினேன்.

திடீரென ஒரு ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையில் என் பெயரும் கவிதையும் வந்தே விட்டது. அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அதை எத்தனை முறை படித்தேன் என்பதும் கைகளினால் அந்தப்பெயரை தடவித்தடவி இன்பமுற்றேன் என்பதும் நினைவிலில்லை.

நினைத்துப்பார்;க்கையில் பரவசமாய் புத்துணர்வாய் நெஞ்சில் நிற்கிறது.தலையில் கர்வமாய் இரண்டு கொம்புகள் முளைக்க நெஞ்சில் ஒரு இறுமாப்பு.திருமணப்பத்திரிகையில் தன் பெயருக்குப்பக்கத்தில் மணமகனின் பெயரை குறும்புடன் பார்த்துப்பரவசமுறும் மணப்பெண்னின் நெஞ்சுக்குள் துள்ளியாடும் மான் குட்டிகளாய் மனதில் படபடப்பும், பெருமிதமும்.

எனது பொலநறுவை வகுப்புத்தோழன் கிண்டலடிப்பான் ‘உன்ட கவிதையாவது பத்திரிகையில் வாரதாவது’ ஒரு வருடமாக ஓயாமல் சொன்ன அவன் முன் கொண்டு போய் எனது கவிதை வந்த பத்திரிகையை விரித்து ஆட்டினேன்.தற்போது அவர் தம்பாளையில் ஆசிரியராக உள்ளார்.

என் கையொழுத்து அக்காலத்தில் அழகாக இல்லை என்பதற்காக பிரசுரம் ஆகாமல் இருக்குமோ என்ற அச்சத்தில் அட்டாளைச்சேனை நண்பர் மன்சூரின் கையெழுத்தில் எழுதி அனுப்புவேன். நான் எத்தனை முறை கேட்டாலும் நேரம் ஒதுக்கி என்னுடைய கவிதைகளை முத்தான  எழுத்துக்களில் எழுதித்தருவார். தற்பொழுது  கல்முனையில் ஒரு பாடசாலையின் அதிபராக இருக்கின்றார். என்பதில் எனக்கும் பெருமை.

திகனரன் கவிதா சாளரத்தில் கவிதைகள் வருவதை மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரமாக எண்ணியிருந்த காலம்.  சாளரத்தை குறி வைத்த மாதம் ஒரு கவிதை எழுதுவோம். 2008க்குப்பின் நானே மடிக்கணிணியில் தட்டச்சு  செய்து கொள்கின்றேன். பேனாவை எடுத்து எழுதுவதை விட ஒரே தடவையில் கணினியில் எழுதுவது திருத்துவதற்கும் இலகு,பாதுகாப்பதற்கும் இலகு.

ஊஞ்சல் இன்னும் ஆடும் .......


Saturday 4 May 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

                                                   38

முன்பு வேலைப்பார்த்த இடங்களில் வாசிப்பதற்கு வாசிகசாலை இல்லை என்றால் பெரும் திண்டாட்டம் எனக்கு. நண்பர்களிடம் இரவல் வாங்கிக்கொண்டு வருவேன்.தினசரிப் பத்திரிகைகளைப் பார்ப்பதும் அன்றாடம் வலாயப்பட்டுப் போனது.

அட்டாளைச்சேனை விடுதியில் தங்கிப்படிக்கும் போது அட்டாளைச்சேனை பொது வாசிகசாலையை மாலை நேரங்களில் அதிகம் பயன்படுத்தியிருக்கின்றேன்.

விடுதிக்கட்டணம் அக்காலம் நூற்றி ஐம்பது ரூபா.ஊரிலிருந்து மணி ஓடர் இரு நூறு ரூபாய் வரும். மீதி ஐம்பதில் ஒரு புத்தகத்தை வாங்கிவிட்டுத்தான் மற்றதை கைச்செலவுக்கு எடுப்பேன்.அப்படி சேகரித்த நூல்கள் ஆயிரம் தொடும் இப்போது.இன்னும் விரித்துப்படிக்காத பல நூல்கள் அலுமாரியில் இருக்கின்றது. ஒரு நூல் கிடைத்ததும் அதை விட இது முக்கியமாகப்படும் வாசித்துவிடுவேன். 

இப்படி கைபடாத பல நூல்கள் காத்துக்கிடக்கின்றன. வாசிக்க வேண்டும். அல்லது வாசிக்கப்படாமலேயே அவை இருந்துவிடலாம்.அல்லது எனது நூலகத்தைப்பயன்படுத்தும் யாருக்கேனும் அவை பயன்படலாம்.

சாண்டில்யனின் கடல் புறா,ராஜ யோகம்,கல்கியின் ‘பார்த்திபன் கனவு’ ஆகிய புத்தகங்களை நான்;காம் வருட இறுதிப்பரீட்சையின்போது படித்து முடித்திருக்கின்றேன்.

பரீட்சைக்கு பாடம் மீட்டுவது போல் குறிப்புப்புத்தகத்தினுள் கடல் புறாவை அமுக்கி வைத்துக்கொண்டு தீவிரமாகப் படித்திருக்கின்றேன்.

 ஆனால் வகுப்பிலும் கோட்டை விடாதபடிக்கு எப்படிப் படித்தேன் என்று எனக்குத்தெரியாது.சோலைக்கிளியின் எட்டாவது நரகம்,நானுமொரு பூனை,பாம்பு நரம்பு மனிதன் தொகுதிகளையும்,வைரமுத்து,மு.மேத்தா, இன்குலாப்,போன்றவர்களின் பெரும்பாலான புத்தகங்களையும் இந்த வாசிகசாலையில்தான் படித்தேன்.

92ம்ஆண்டு முழுக்க ஒலுவில் சின்னப்பாலமுனையில் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தேன்.சோலைக்கிளியும் என்னன்டையில் அவ்விடத்தில்தான் இருந்துள்ளார். தினம் அவர் வேலை பார்த்த அலுவலகத்தை கடந்துதான் கடற்கரைக்கும்,மைதானத்திற்கும் செல்வேன்.  படிப்பு முடிந்து ஊருக்கு திரும்பிய பிறகுதான் சோலைக்கிளி எனக்குப்பக்கத்தில் என்ற விடயமே தெரிய வந்தது.

அப்துல் ரஹீமின் வாழ்வது ஒரு கலை என்னால் வாசிக்கப்பட்ட ஆகர்சன நூல்.ஒரு ஐந்து தடவைக்கு மேல் அதனைப் படித்திருப்பேன். அப்துல்ரகுமானின் முட்டை வாசிகள்,அவளுக்கு நிலா என்று பெயர்,போன்ற தொகுதிகளையும் அட்டாளைச்சேனை வாசிகசாலை எனக்குத்தந்தது.

இதைத்தான் படிக்க வேண்டும் என்ற தேர்வுகளும் இல்லை.தெளிவும் இல்லை.கையில் அகப்படும் நூல்களை படிப்பதுடன் குறிப்பும் எடுத்துக்கொள்ளும் பழக்கமும் என்னிடமிருந்தது.இறுக்கமாக விடுதிச்சூழலில் சொற்ப நேரம் கிடைக்கும் மாலை நேர ஓய்வை இந்தவாசிகசாலைக்கு வருவதில் கழித்திருக்கின்றேன் என்பதை இப்போது நினைத்துப் பார்;க்கின்றேன்.

தூக்கு மேடை பார்த்து வந்த மௌலானா மௌதூதி,இதுதான் இஸ்லாம். போன்ற நூல்கள் முதன் முதலில் படித்த மௌதூதி அவர்களின் அறிமுக நூல்களாகும். ஏழு வருடங்களில் ஏறக்குறைய ஆறு வருடங்கள் அந்த வாசிகசாலையின் புத்தகங்கள் எனது அறிவுப்பசிக்கு தீனி போட்டன. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் பத்து பாகங்களையும் படித்திருக்கின்றேன்.

கலை இலக்கியப்புத்தகங்களை வாசிப்பதற்கு தடைசெய்யப்பட்ட எனது விடுதிக்குள் வாய் வழியே அபின் கடத்துவது போல் புத்தகங்களை கொண்டு வந்து மறைத்து மறைத்துப்படித்து குறிப்பெடுத்திருக்கின்றேன். வழிகாட்டும் வான் மறை இன்பத்தமிழுக்கு அமுதூட்டிய நூல். அதன் மொழி நடை என்னை வாய் விட்டுப்படிக்கத்தூண்டும்.

வான் சுடர் சஞ்சிகை அப்துல் ரகுமான் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த இஸ்லாமிய முற்போக்கு சிந்தனை இதழ். இந்த சஞ்சிகையை தொடராக வாசித்திருக்கின்றேன்.

87 காலப்பகுதயில் அக்கரைப்பற்று நண்பர் பவ்சரின் நட்புக்கிடைத்தது.அவர் மூலம் கிடைக்கப்பெற்ற நூல்கள் முக்கிய திருப்பு முனையாக அமைந்தன.அப்போது அவர் ‘தடம்’ இலக்கிய சஞ்சிகையை ஆரம்பித்து நடாத்தி வந்தார். அவ்வப்போது அட்டாளைச்சேனைக்கு வந்து என்னை சந்திப்பார். அந்தச்சந்திப்பு கொழும்பில் இருக்கும் வரை தொடர்ந்தபடிதான் இருந்தது.

 எங்கள் தேசம்- 244                                                                                       ஊஞ்சல் இன்னும் ஆடும்....

  முக நூல் இலக்கியம் ஓட்டமாவடி அறபாத்.     2003 ல் Google நிறுவனம் Blog என்ற வலைப்பூவை தொடங்கியது . Blog என்கிற வலைப்பூவும் ...