Friday, 24 May 2013

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

                                             தொடர்-   39

தீவிரமான வாசிப்பின் எதிரொலி.படிக்கின்ற காலப்பகுதியில் எழுத ஆரம்பித்து விட்டேன் விடுதியில் யாருக்கும் தெரியாமல் எழுத்துப்பணிகள் தொடர்ந்தன.விடுதியில் இருக்கும் வாசிகசாலை அல்லது கடற்கரையில் உட்கார்ந்தபடி பெரும்பாலும் எழுதுவேன்.அல்லது ஆசிரியர் வராத வகுப்பறை.

பெரும்பாலும் எழுதியதை திரும்பவும் மீள் திருத்தி எழுதுவதற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொள்வேன்.இப்போது கதை ஒன்றை எழுத மூன்று அல்லது நான்கு மாதங்கள் எடுத்துக்கொள்கின்றேன். எழுதுவது இரண்டு நாட்கள் என்றால் செவ்விதாக்கம் செய்ய பல மாதங்கள் தேவைப்படுகிறது.சில நேரம் செவ்விதாக்கம் செய்த படைப்பையும் திருப்தி இல்லையென்றால் கிழித்துப்போட்டிருக்கின்றேன்.

இன்று எழுதக்கூடிய பலர்  ‘பொய்லர்’ குஞ்சுகளைப்போல் அவசரமாகப்பொறித்து அவசரமாக உயர நினைக்கிறார்கள்.குறித்த நாளில் குறித்த பத்திரிகையில் பெயர் வந்தால் சரி.எழுத்து எப்படிப்போனாலும் பரவாயில்லை என்ற மனோபாவம் வந்துவிட்டது.வாசிப்பும் இல்லை.எழுத்தில் நிதானமும் இல்லை இவர்களைத்தான் மேடைகளில் முகஸ்துதி செய்து உச்சியில் ஏற்றி வைத்திருன்றது இலக்கிய உலகம். பாவம் தமிழ் இலக்கியம் திணறித்துடிக்கின்றது.

 கவிதைதான் எழுதிப்பழகினேன்.எல்லாக்கவிஞர்களையும் போல் காதல் கவிதைகள் அக்காலத்தில் எழுதுவதற்கு இலகுவாகவும் இதமாகவும் இருந்தன.எழுதியதை பத்திரிகைகளுக்கு அனுப்பி விட்டு ஒவ்வொரு வாரமும் பெயர் வந்திருக்கின்றதா என்று பார்த்துவருவேன்.

ஒரு வருடமாக இப்படி கவிதைகள் அனுப்புவதும் பெயரை தேடுவதுமாக இருந்தேன்.ஒற்றை ரூபாவை மணலில் தொலைத்து விட்டு தேடுபவனைப்போல் என் பெயர் தேடல் அவ்வளவு தீவிரமாக இருக்கும். சொந்தப்பெயரை பயன்படுத்துவதற்கும் அச்சம்.புனைப்பெயரில்தான் எழுதினேன்.

திடீரென ஒரு ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையில் என் பெயரும் கவிதையும் வந்தே விட்டது. அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அதை எத்தனை முறை படித்தேன் என்பதும் கைகளினால் அந்தப்பெயரை தடவித்தடவி இன்பமுற்றேன் என்பதும் நினைவிலில்லை.

நினைத்துப்பார்;க்கையில் பரவசமாய் புத்துணர்வாய் நெஞ்சில் நிற்கிறது.தலையில் கர்வமாய் இரண்டு கொம்புகள் முளைக்க நெஞ்சில் ஒரு இறுமாப்பு.திருமணப்பத்திரிகையில் தன் பெயருக்குப்பக்கத்தில் மணமகனின் பெயரை குறும்புடன் பார்த்துப்பரவசமுறும் மணப்பெண்னின் நெஞ்சுக்குள் துள்ளியாடும் மான் குட்டிகளாய் மனதில் படபடப்பும், பெருமிதமும்.

எனது பொலநறுவை வகுப்புத்தோழன் கிண்டலடிப்பான் ‘உன்ட கவிதையாவது பத்திரிகையில் வாரதாவது’ ஒரு வருடமாக ஓயாமல் சொன்ன அவன் முன் கொண்டு போய் எனது கவிதை வந்த பத்திரிகையை விரித்து ஆட்டினேன்.தற்போது அவர் தம்பாளையில் ஆசிரியராக உள்ளார்.

என் கையொழுத்து அக்காலத்தில் அழகாக இல்லை என்பதற்காக பிரசுரம் ஆகாமல் இருக்குமோ என்ற அச்சத்தில் அட்டாளைச்சேனை நண்பர் மன்சூரின் கையெழுத்தில் எழுதி அனுப்புவேன். நான் எத்தனை முறை கேட்டாலும் நேரம் ஒதுக்கி என்னுடைய கவிதைகளை முத்தான  எழுத்துக்களில் எழுதித்தருவார். தற்பொழுது  கல்முனையில் ஒரு பாடசாலையின் அதிபராக இருக்கின்றார். என்பதில் எனக்கும் பெருமை.

திகனரன் கவிதா சாளரத்தில் கவிதைகள் வருவதை மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரமாக எண்ணியிருந்த காலம்.  சாளரத்தை குறி வைத்த மாதம் ஒரு கவிதை எழுதுவோம். 2008க்குப்பின் நானே மடிக்கணிணியில் தட்டச்சு  செய்து கொள்கின்றேன். பேனாவை எடுத்து எழுதுவதை விட ஒரே தடவையில் கணினியில் எழுதுவது திருத்துவதற்கும் இலகு,பாதுகாப்பதற்கும் இலகு.

ஊஞ்சல் இன்னும் ஆடும் .......


1 comment:

உங்கள் வருகைக்கு நன்றி.
கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.